eelam 450பல ஆண்டுகளாக இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் உறவினரையும், உடைமைகளை இழந்தும், இடம் பெயர்ந்தும், புலம் பெயர்ந்தும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப் புலம் பெயர்ந்த மக்கள் பலர் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக 1983 முதல் வந்துள்ளார்கள், 1990 முதல் அகதிகள் வருகை அதிகரித்துள்ளது 2009 போர் முடிவிற்கு வந்த பின்னும் அங்கு வாழ்வதற்குரிய சூழ்நிலை இல்லாததால் மக்களின் புலம்பெயர்வு அதிகரித்துள்ளது.

அப்படி புலம் பெயர்ந்தவர்களில் பலர் முகாம்களிலும் வெளிப்பதிவிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முகாம்களின் எண்ணிக்கை - முன்னர் - சுமார் 132 முகாம்கள் தற்சமயம் 112 + 1 (சிறப்புமுகாம்) 113 - முகாம்கள் தற்சமயம் உள்ள மக்கள் தொகை, 1. முகாம் மக்கள் தொகை 63,425 சுமார் 22,000 குடும்பங்கள், 2. வெளிப்பதிவில் உள்ள தமிழர்கள் - 34,000 சுமார் 12,500 குடும்பங்கள், 3. 1983 முதல் இந்தியாவில் வந்து வாழ்ந்தவர்கள் எல்லாம் சுமார் 2லு-3 லட்சம் மக்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

இப்படி புலம்பெயர்ந்த தமிழர்களில் ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களும் இந்திய வம்சா வழியைச் சார்ந்தவர்களும் அடங்குவார்கள்.

இப்படி 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் புலம்பெயர்ந்து வாழும் எம் மக்கள் இன்றும் அகதி வாழ்விலே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

25 ஆண்டுகள் கடந்து முகாம்களில் உள்ள குடியிருப்புகள் சிதைந்தும் பாழடைந்த நிலையில் உள்ளன. கழிப்பிட வசதிகள் சரிவர இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

1) பட்டதாரிகள் கூட கூலித் தொழில் செய்து பிழைக்கும் நிலையில் தான் உள்ளார்கள்

2) அவர்களின் படிப்பிற்கு ஏற்ற வேலை, சம்பளம் கிடைப்பதில்லை

3) சில தொழிற்சாலைகளில் ஈழத் தமிழர் என்பதனாலே வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

4) அது மட்டுமல்லாமல் அவர்கள் முகாம் பதிவில் இருப்பதால் வெளியில் தங்கி வேலை செய்வது கடினமாக உள்ளது.

5) முகாம் சோதனையின் போதும், மானியம் வழங்கலின் போதும் முகாமில் அவர்கள் இருப்பது அவசியம் (கட்டாயம்). அதனாலும் அவர்கள் தொழில் பாதிக்கப்படுகிறது. இலங்கையில் போர் முடிவிற்கு வந்த போதும் எங்களின் அகதி வாழ்க்கை தொடர்ந்து கொண்டே உள்ளது. வெளிப்பதிவில் வாழும் புலம் பெயர் தமிழர்களின் நிலமை தேவை.

வெளிப்பதிவில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் நிலைமையும் தேவையும்

1) போலீஸ் பதிவு வெளிப்பதிவில் உள்ள தமிழர்கள் ஒவ்வொரு வீடு மாறும் போதும் அவர்களின் முகவரி மாற்றம் செய்ய வேண்டும். அப்படி பதிவதற்கு வீட்டு உரிமையாளரின் விபரம், கடிதம் தேவை. அதனால் எங்களுக்கு வீடு கொடுப்பதற்கே பலர் தயங்குகிறார்கள்.

2)  திருமணப் பதிவு, ஓட்டுநர் உரிமம் பெறவும் முடியாமல் உள்ளது.

3) கடவுச்சீட்டு புதிதாகப் பெறுவதும் புதிப்பிற்கவும் முடியாமல் உள்ளதால் ஒரு அவசரத்திற்குக் கூட எங்கும் செல்ல முடியாமல் உள்ளது. இலங்கை செல் வதற்கு மட்டும் ஒரு வழி கடவுச் சீட்டு வழங்கப்படுகிறது. இச்சூழ்நிலையில் இலங்கை சென்றால் இந்தியாவிற்கு 5 ஆண்டுகள் திரும்பி வர இயலாது.

4) இந்திய இளைக்ஞரையோ, பெண்ணையோ திருமணம் முடித்தவர்கள் கூட குடியுரிமை இன்றி வாழ்கிறார்கள்.

5) ஒரு தொழில் தொடங்கவோ, வங்கிக் கணக்கு, காஸ் போன்றவற்றை பெறுவதற்கு எங்கள் முகவரியை உறுதிப்படுத்த சரி யான ஆவணம் இல்லாமல் உள்ளது. மேல் படிப்பிற்கு அவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. அப்படி படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்பபு மற்றும் சம்பளம் உயர்வு, ஈழத்தமிழர் என்பதால் மறுக்கப்படுகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு, மேற்படிப்பிற்கோ செல்ல முடி யாத சூழ்நிலை உள்ளது.

இப்படி வாழும் மக்களின் கோரிக்கை

தமிழக முகாம்களிலும் வெளிப்பதிவிலும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் அகதி மக்களுக்கு குடியுரிமை கிடைக்காததால் அரசுப் பணி வாய்ப்பு உட்பட தமிழ் நாட்டில் வாழும் சாதாரண குடிமக்களுக்கு கிடைக்கும் எந்த உதவியும் கிடைக்காமல் இன்றும் பல ஆண்டுகளாக அகதி அகதி என்ற அவதி நிலையிலேயே வாழ்கிறார்கள்.

எங்களின் வாழ்விற்கு வழிகாட்டி ஐநா அகதிகள் ஆணையத்திற்குள் அவர்களைப் பதிந்தும் எங்களுக்கு இரட்டையர் குடியுரிமை அல்லது வதிவிட உரிமை, மற்றும் பயண ஆவணம் கொடுத்தும் எங்களின் வாழ்வும் வளமும் சிறக்க மத்திய, மாநில அரசுகளும் தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் முன்வருவார்களா? நாங்கள் அகதி என்ற அல்லலில் இருந்து விடுபட்டு இன்பமாக சுதந்திரமாக வாழ அனுமதிப்பார்களா? உதவிக் கரம் நீட்டுவார்களா?

என்னும் இந்த வேதனைகளோடு எங்கள் சமூகம் வாழ்ந்து மடிய வேண்டுமா?

அன்னிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அனைத்து நலன்களும் பெற்று வாழ்கிறார்கள்.

நாம் இந்தியாவில் இன்றும் அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் (இருப்பினும்)

இங்கு நாம் உண்டு உடுத்து உறங்குகிறோமே ஒழிய நாம் எதுவாகவும் இல்லை. ஆனாலும் எமக்கு எம் மொழி பேசும் மக்களும் சகோதர உணர்வோடு எம்மை ஆதரிப்பவர்களுமே எமக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.

1959 ஆண்டு சட்டப்படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்கலாம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்கும் போது இலங்கையில் வாழும் மக்களில் 85 விழுக்காடு சைவர்கள், (தேவாரம், திருவாசகம்) நால்வர் பற்றியும் அறிந்தவர்கள் தமிழர்கள் உணர்வுகளோடு ஒன்றியவர்கள். மற்றைய நாடுகளில் உள்ளவர்களால் தமிழர்களுக்கு என்ன நன்மை உண்டோ தெரியாது நாங்கள் இந்தியாவை வளமாக்குவதற்கும் மேன்மேலும் சிறப்பதற்கும் உறுதுணையாக இருப்போம் ஏன் என்றால் நாங்கள் உங்கள் உணர்வோடு ஒன்றியவர்கள். சமயமும் -மொழி உணர்வும் எங்களுக்கு இரண்டு கண்களைப் போன்றவை. ஆங்கிலேய ஆட்சியின் போது இலங்கையில் ஏற்பட்ட மதமாற்றத்தை ஒரு ஆறுமுக நாவலர் தடுத்து நிறுத்தினார். நாங்கள் ஒவ்வொருவரும் இதற்காகப் பாடுபடுவோம்.

புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் இலங்கை செல்ல மறுப்பது ஏன்?

1) உறவினரையும், உடமைகளையும் இழந்து வந்தவர்கள் திரும்பிச் செல்ல விரும்பவில்லை (மனவிரக்தி)

2) புலம் பெயர்ந்து, இந்தியா வந்து திரும்பி பல வாக்குறுதியின் அடிப்படையில் இலங்கை சென்று அங்கும் முகாம்களிலே வாழ்ந்து திரும்ப வந்தவர்களும் உள்ளார்கள் அவர்கள் திரும்பச் செல்ல விரும்பவில்லை (அவர்கள் பட்ட துயரம் மீளச் செல்ல மனம் துணியவில்லை)

3) வேலை வாய்ப்பின்மை அங்கு வாழும் 15 ஆயிரம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லாமல் வாழ்கிறார்கள். அப்படி இங்கிருந்து செல்லும் பட்டதாரிகள் (நிலை) அங்கு என்ன செய்வது? வடக்கு மகாணத்தில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை இன்னும் வடக்கு, கிழக்கு இணைக்கப் படவும் இல்லை, அது மட்டுமல்லாமல், விவசாயம், மீன்பிடித் தொழில் இவற்றைத் தொடர்வதும் முடியாது, எனவே அங்கு சென்று எப்படி வாழ்வது

அரசியல், புவியியல், பொருளாதார பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை.

ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களும் இந்திய வம்சா வழியில் அங்கு வாழ்ந்தவர்களும் இலங்கை செல்ல விரும்பலாம், ஆனால் இங்கு பிறந்து வாழ்பவர்களின் நிலை, (பூத்துக் காய்க்கும் மரத்தை வேரோடு பிடுங்கி நடுவது எவ்வளவு சாத்தியம் இல்லையோ இதுவும் அப்படித்தான்)

இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து இந்தியாவில் வாழ்பவர்கள் திரும்ப இங்கிருந்து புலம் பெயர்ந்து இலங்கையில் வாழும் நிலமை தான் நீடிக்கும்.

ஆயுதப் போராட்டம் முடிந்தாலும் இலங்கை யில் தமிழர் பிரச்சனை தீர்க்கப்படாமலே உள்ளது. இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி கூட ஒரு தீர்வும் நிறைவேற்றப்படவில்லை. இப்போது பிரச்சனை இரட்டிப்பாக உள்ளது எப்போதும் இருந்த தேசிய இனங்களின் பிரச்சனை தீர்க்கப்படாமலே உள்ளது. போரி னால் ஏற்பட்ட அழிவும் புலம்பெயர்வும் இன்னும் பல சிக்கல்களும் சேர்ந்துள்ளன. இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்காமல் புலம் பெயர்ந்து அகதிகள் தாயகம் திரும்பச் செல்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை. உலக நாடுகள் ஒரு அரசியல் தீர்விற்கு இலங்கை அரசை வலியுறுத்தியும் இலங்கை அரசு எந்த முயற்சியும் முழுமையாக முன் எடுக்கவில்லை.

இந்திய அரசு இந்திய - இலங்கை (ராஜீவ் -ஜயவர்த்தன) ஒப்பந்தப்படி தீர்வு காண முன்வருமா? அல்லது உலக நாடுகளுடன் இணைந்து புதியதொரு அரசியல் தீர்வை முன் எடுக்க வலியுறுத்துமா?

எதுவுமே முடிவாகத நிலையில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் அகதிகள் தாயகம் திரும்புவது பற்றி எவ்வாறு முடிவு செய்ய முடியும்.

தாயகம் திரும்புமாறு அரசியல் தலைவர்களும் தொண்டு நிறுவனங்களும், அனைத்துலக மக்களும் ஆசை வார்த்தை பேசி இங்கு வாழும் தமிழ் அகதிகளை நாடு கடத்த முயல்வதும் நரகத்தில் தள்ளுவதும் ஒன்றல்லவா?

எனவே எமக்கு இரட்டைக் குடியுரிமை, பயண ஆவணம், ரேசன் அட்டை, போன்றவற்றைப் பெறுவதற்கும் இங்கு நாம் சுதந்திரமாக வாழ்வதற்கும் வழிவகை செய்யுமாறு அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்

குறிப்பு:

மக்களை அகதி என்ற நிலையில் இருந்து குடியுரிமை கொடுத்தாலும் முகாம் வாழ் மக்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் குடியிருப்பு வசதிகளையும் ஐநா சபையும் தொண்டு நிறுவனங்களும் அனைத்துலக மக்களும் செய்து கொடுக்க வேண்டும்.

அவர்களின் இன்னல்களைப் போக்கி நட்டாற்றில் விட முடியாது அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வரை கொடுப்பனவுகள் கொடுக்க வேண்டும்.

இந்திய அரசாங்கத்திடம் இதை வலியுறுத்தல் ஆகாது ஏனெனில் 125 கோடி மக்கள் வாழ்கிறார்கள் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்களும் உள்ளார்கள் ஆகையால் இதனை ஐநா அகதிகள் ஆணையம் முன்நின்று (சுமார் இரண்டரை லட்சம்) புலம் பெயர்ந்து வாழும் மக்களின் துயரினைத் துடைத்து அவர்களின் வாழ்விற்கும் வழிகாட்டவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய அரசு எதிர்நோக்க இருக்கும் ஆபத்தும் அவர்கள் கொடுத்த ஆதரவும்

இலங்கைத் தமிழர் பிரச்சனை இந்திய அரசு நன்கு அறிந்தது. இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை இந்திய அரசு ஆதரித்தது.

விடுதலைப் போரின் போது பூமாலை ஆபரேசன் மூலம் விமானத்தில் உணவுப் பொட்டலங்கள் போட்டு உதவியது. இந்திய - இலங்கை ஒப்பந்தம் இயற்றியது. அமைதிப் படையையும் அனுப்பி வைத்தது எனினும் நடைப்பெற்ற காப்புணர்வுகளால் தமிழர்களின் நிலையை கண் காணமல் உள்ளார்கள்.

இலங்கைத் தமிழர்களின் மீதான ஒடுக்கு முறையை எதிர்த்து, தடுத்து அவர்களின் உரிமையை தமிழ் ஈழத்தைப் (தனிநாடு) பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும்.

தற்போது தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற் றம் நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல் இலங்கையில் பெரும் பரப்பளவு சீனாவிற்கு தாரை வார்த்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது சீனா கொழும்பில் அவர்களுக்கென பெரிய துறைமுகமும் சொகுசு விடுதியும் அமைத்துக் கொண்டு உள்ளார்கள்.

அத்தோடு அம்பாந்தோட்டையில் சீனக் குடியேற்றமும் விமான நிலையமும் அமைக்க உள்ளார்கள்.

மக்கள் தொகை அதிகமாக உள்ள சீனர்கள் இலங்கையில் பல்கிப் பெருகினால் அங்கிருக்கும் தமிழருக்கும் அவல நிலை தான் இந்த நிலை நீடித்தால் அடுத்து அவர்களின் பார்வை திருகோணமலைத் துறைமுகம் மீது திரும்பியுள்ளது. அதைக் கைப்பற்றினால் அவர்களின் பண்முகப் பார்வை ஓங்கும். இந்தியாவின் கடல் பிராந்தியப் பாதுகாப்பு (கேள்விக் குறியாகும்?) பாதிக்கப்படும்

இது போன்ற நிலை ஏற்படாமல் தடுத்து அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு ஆதரவும் முன்னெடுக்க வேண்டும்.

உலக நாடுகளுடன் இணைந்து தமிழர்க ளுக்கு தமிழீழத்தை பெற்றுக் கொடுத்து அவர்களுடைய வாழ்விற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும்.

இதன் மூலம் இத்தகைய பாதுகாப்பு இன்மையைத் தடுத்து என்றும் இந்தியா வல்லரசாகவே வாழ்வதற்கு ஈழத் தமிழர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்பது உறுதி.

இதை இந்திய அரசும், அரசு அதிகாரிகளும் அறிந்திருப்பார்கள் எனினும் மக்களின் விழிப்புணர்ச்சிக்கும் பாதுகாப்பிற்குமாய் தமிழகத்தில் வாழும் புலம் பெயர் தமிழராய் இதைத் தெரிவிக்கின்றோம்.