‘நேர்மையாளர்’, ‘நடுநிலையாளர்’ என்ற வேடத்துக்குள் பதுங்கிக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனியத்தைப் பரப்பி வருபவர்

‘துக்ளக்’ சோ. மோடியைப் பிரதமராக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகாலமாக வலியுறுத்தி வருவதோடு, பாரதிய ஜனதா கட்சிக்குள்ளும் மோடிக்காக ஆதரவு திரட்டினார். தீவிர அத்வானி ஆதரவாளராக இருந்து அதற்கு நன்றிக் கடனாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றவர்தான் ‘சோ’. தனது ‘துக்ளக்’ ஆண்டு விழாவுக்கு மோடி, அத்வானி இருவரையும் அழைத்து ஒரே மேடையில் ஏற்றி ‘சமரச’ தூதுவராக, தன்னை அடையாளம் காட்டிவர். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கும் நெருக்கமான ஆலோசகராக உள்ளார். மோடியின் முதல்வர் பதவி ஏற்பு விழாக்களில் தவறாது பங்கேற்பவர், ஜெயலலிதா. ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்பு விழாவிலும் பங்கேற்றார் மோடி. இந்த நெருக்கத்தின் இணைப்புப் பாலமாய் நிற்பவர், ‘துக்ளக்’ சோ, மோடி பிரதமராக வேண்டும்; அவருக்கு வாய்ப்பு இல்லையேல் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று தனது பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வருகிறார். இப்போது வெளிப்படையாக பா.ஜ.க. கூட்டணி அமைத்த பிறகும், பா.ஜ.க. வேட்பாளர்களுக்கும், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பா.ஜ.க. கூட்டணி கட்சிகள், ‘துக்ளக்’ சோவின் இந்த பச்சைப் பார்ப்பன அறிவிப்பைக் கண்டு திகைத்துப் போய் நிற்கின்றன. கடந்த வாரம் சென்னை வந்த மோடியை, நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தவரும் இதே ‘துக்ளக்’ சோ தான்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான பிரபல வழக்கிறஞர் பிரசாத் பூஷண், சென்னையில் ஏப்.14 ஆம் தேதி அளித்த பேட்டியில், ‘துக்ளக்’ சோ ஜெயலலிதாவின் ‘பினாமி’யாக செயல்படும் செய்தியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு ஊடகங்கள், சோவின் முகத்திரையைக் கிழிக்கும் இந்த செய்தியை கட்டுப்பாடாக இருட்டடிப்பு செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை செய்தியாளர்களிடம் கூறிய பிரசாத் பூஷன், அவர் ‘சோ’ ராமசாமி அல்ல; ‘சோர்’ (தமிழில் திருடன்) ராமசாமி என்று கூறினார். பிரசாத் பூஷன் வெளியிட்ட செய்தி என்ன?

ஜெயலலிதாவின், ‘உடன்பிறவா’ சகோதரி சசிகலாவுடன், ஜெயலலிதாவுக்கு கருத்து மாறுபாடு ஏற்பட்டு, போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றியது அனைவருக்கும் தெரியும். ‘சசிகலாவுக்கும் தனக்கும்’ எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். அத்துடன் சசிகலா இயக்குனராக இருந்த ‘மிடாஸ்’ (மதுபான தயாரிப்பு நிறுவனம்) உள்ளிட்ட, பல நிறுவனங்களிலிருந்து இயக்குனர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார். அப்போது அந்தப் பதவிகளில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் ‘துக்ளக்’ சோ. மீண்டும் சசிகலா, போயஸ் கார்டனுக்கு திரும்பியபோது, ‘துக்ளக்’ சோ, தனது பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டு, சசிகலாவிடம் ஒப்படைத்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இத்தகவலை பிரசாந்த் பூஷன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இது தவிர, ‘துக்ளக்’ சோவுக்கு வேறு பின்னணிகளும் உண்டு. ‘துக்ளக்’ சோவின் தந்தை ஆத்தூர் சீனிவாச அய்யர். இவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ‘சாராய வியாபாரியாக’ கொழுத்த இராமசாமி உடையார் நடத்திய ‘ஓரியன் கெமிக்கல்ஸ்’ என்ற நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருந்தவர் இராமசாமி உடையார். ‘கோல்டன் ஈகில்’ என்ற பெயரில், (ஜி.ஈ.டி.) தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றையும் தொடங்கினார். அந்தத் தொலைக்காட்சி நிலையம், எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டுடியோ வளாகத்திலே செயல்பட்டது. அந்த தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் ‘துக்ளக்’ சோ. இந்த தொலைக்காட்சியில் எஸ்.வி.சேகர், கங்கை அமரன் போன்றோர் பங்காற்றினர். பின்னர், இந்த அலைவரிசையை விஜய் தொலைகாட்சி நடத்தி வந்த கருநாடக ‘சாராய அதிபர்’ மல்லையா வாங்கினார். இப்போது மல்லையாவிடமிருந்து ஸ்டார் நிறுவனம் அதை வாங்கியுள்ளது. ‘துக்ளக்’ சோவின் தந்தை ஆத்தூர் சீனிவாசன் இறந்தபோது வெளிவந்த மரண விளம்பரத்தில் உடையார் நிறுவனத் தலைவராக அவர் இருந்ததும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜெயலலிதாவை தனது ஏட்டில் தொடர் கட்டுரைகளை எழுத வைத்து, அவரை கட்டுரையாளராக அறிமுகப்படுத்தியவர் ‘துக்ளக்’ சோ. அதற்குப் பிறகுதான் அவர் அ.இ.அ.தி.மு.க. அரசியலுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.