பகுதி 1: ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன?

பகுதி 2: ஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்!

பகுதி 3: முக்கிய பிரச்சினையின்போது புறக்கணிக்கப்பட்ட இந்திய நலன்

பகுதி 4: ஆசிய நாடுகளின் வளர்ச்சி (சீனா - இந்தியா ஓர் ஒப்பீடு)

பகுதி 5: கடன் பொருளாதாரம் எனும் புதிய கண்டுபிடிப்பு

பாகம் - 6 

பூகோள அரசியலில் ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவம்

2001 அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல் உலகமே எதிர்பாக்காத ஒன்று மட்டுமல்ல, அது விழுந்த விதம் இதுவரை உலகம் கண்டிராதது. வேண்டாத கட்டடங்களை வெடிவைத்து தகர்த்து விழ வைப்பதுபோல, விமானம் மோதி விழுவதைப் பார்ப்பது அதுவே முதல்முறை. அது எப்படி ஒரு விமானம் மோதி, அவ்வளவு பெரிய கட்டடம் தரைமட்டமானது என்பது இதுவரை புரியாத புதிராக உள்ள நிலையில், இந்தக் கட்டடங்களில் இருந்த முக்கிய ஆவணங்கள், சொத்துக்கள் காணாமல் போய் விட்டதாக செய்திகள் வெளியானது.

ancient silk road1997-1999 ஆசிய - தென்அமெரிக்க நாடுகளில் பரவிய பொருளாதார நெருக்கடி, அதில் பெரும்பாலும் ஈடுபட்ட அமெரிக்க நிதி நிறுவனங்களின் பங்கு, அவற்றை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்தான விவாதங்களைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்திருப்பதால், அது தொடர்பான ஆவணங்களை அழிக்கவோ அல்லது அதிர்ச்சியை உருவாக்கி, அதன்மூலம் அமெரிக்க மக்களின் ஆதரவை உருவாக்குவதும், தங்களின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிச் செல்லும் நேட்டோ நாடுகளை இந்த நிகழ்வுக்குப் பிறகு உலகின் பல நாடுகளின் மீது தொடுக்கப் போகிற போரின் மூலம் உள்ளிழுத்து மீண்டும் கட்டுப்பாட்டு வளையத்தில் பிணைக்கவும் செய்திருக்கலாம். ஏனெனில் ஒரு நேட்டோ நாட்டின் மீது தாக்குதல் தொடக்கப்பட்டால் மற்ற உறுப்பு நாடுகள் அதனைக் காக்க களம் இறங்க வேண்டும் என்பது ஒப்பந்தம். குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மிக சமீபத்தில்தான் தங்களுக்கான நாணயத்தை உருவாக்கினார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வியட்நாம் போருக்குப் பிறகு, எண்ணெய் வளமுள்ள மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா கவனம் குவிந்திருந்த நிலையில், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் மீது புதிதாகக் குறி வைத்தது சற்று பரிசீலிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. அதுவும், கடந்த 19 வருடங்களாக ட்ரில்லியன் கணக்கில் பணத்தை செலவு செய்து, அத்தனை உயிர் இழப்புகளையும் தாங்கிக் கொண்டு, அங்கிருந்து வெளியேறாமல் போரை நடத்த வேண்டிய அவசியம் என்ன? அல்கொய்தாவை அழிப்பதுதான் நோக்கம் என்றால், இதன் பிறகும் அல்கொய்தா மேலும் மேலும் பரவி வந்திருக்கிறதே தவிர, ஒழியவில்லையே! அதுவும் அமெரிக்க 'சர்வாதிகாரத்தை' வீழ்த்தவும், 'ஜனநாயகத்தை' ஏற்படுத்தவும், 'மனித உரிமைகளைக் காக்கவும்' போரிடும் எல்லா நாடுகளுக்கும் தவறாமல் இந்த அல்கொய்தாவும் பரவுகிறதே! சரி, இந்தத் தீவிரவாத ஒழிப்புக் கதையை புறம்தள்ளி, ஆப்கானிஸ்தானுக்கு அப்படி என்னதான் முக்கியத்துவம் இருக்கிறது என்று பார்ப்போம்.

வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ஆசியாவில் உற்பத்தியான பொருட்களை ஐரோப்பா கண்டத்திற்கு கொண்டு செல்லும் பட்டுச்சாலை (silk road) எனப்படும் நிலவழிப் பாதை ஆப்கானிஸ்தான் வழியாகவே சென்றிருக்கிறது. தற்போது (2001) சீனா பெரும் உற்பத்தி மையமாக உருவாகி, வேகமாக வளர்ந்து வருகிறது. அது மேலும் வளருமானால் அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்க எத்தனிக்காத வகையில் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அது இப்போதே ரசியாவுடன் சேர்ந்து ஐரோப்பிய - ஆசியக் கூட்டணியை (shanghai cooperation organisation) ஏற்படுத்தி இருக்கிறது. அது மேலும் வலுப்பெறும் போது, எண்ணெய் எரிவாயு நிரம்பிய பக்கத்து நாடான ரசியாவிடமிருந்து, சீனா நிலவழியாக இறக்குமதி செய்யும் வாய்ப்பு அதிகம். அது மிகப் பெரும் எண்ணெய் சந்தையான சீனாவை அமெரிக்க நிறுவனங்கள் இழப்பதோடு மட்டுமல்லாமல், அதன் உற்பத்தி மீதான கட்டுப்பாட்டையும் அமெரிக்கா இழக்கும்.

இப்போதே ஈரான், சீனாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும், வளரும் இந்திய சந்தையைக் குறிவைத்து, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்வழியைத் தவிர்த்து, ஆப்கானிஸ்தான் வழியாக குழாய் மூலம் எரிபொருள் ஏற்றுமதி செய்ய எத்தனித்து விட்டது. அதே ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள சீனாவிற்கு, ஈரான் ஏற்றுமதி செய்ய எத்தனிக்க எவ்வளவு நாளாகும்? உற்பத்திப் பெருக்கம் அதிகரித்து, சீனா இதே ஆப்கானிஸ்தான் வழியாக, முன்பு வரலாற்றில் செய்ததைப் போல, மீண்டும் ஐரோப்பாவிற்கு பொருட்களை நிலவழியாக ஏற்றுமதி செய்ய முனைந்தால்? இந்த எல்லா வர்த்தகமும் டாலரைத் தவிர்க்க எத்தனித்தால்? பிறகு என்ன அமெரிக்க மேலாதிக்கம் அதோ கதிதான்.

அதுமட்டுமல்ல, தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து இன்று நம் கைகளில் கைபேசியும், மடிக்கணினியும் வரக் காரணம் லித்தியத்தால் இயங்கும் சேமக்கலங்கள் (Lithium ion batteries). இனி வரும் காலத்தில் மின்சார வாகனங்கள் இயங்கவும் இப்பொருள் மிக முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. இந்தப் பொருட்களின் தேவை அதிகரிக்க, அதிகரிக்க இந்த லித்தியத்தின் தேவையும், மற்ற கனிமங்களான மாங்கனீசு, கோபால்ட், நிக்கல் ஆகியவற்றின் தேவையும் பல மடங்கு அதிகரிக்கும். ஆப்கானிஸ்தானில், இந்த லித்தியம் மற்றும் மற்ற கனிமங்களின் இருப்பு கிட்டத்தட்ட 3 ட்ரில்லியன் டாலர்கள் என மதிப்பிடப் பட்டிருக்கிறது. இதனை வெட்டி எடுத்து சந்தைக்குக் கொண்டு வர ஆரம்பித்தால், ஆப்கானிஸ்தான் அடுத்த சவுதி ஆகும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிகாரி கூறுகிறார். அதோடு ஆப்கானிஸ்தான், அமெரிக்காவின் கட்டுக்குள் அடங்காத ஈரானுடனும், கட்டுப்படுத்த விரும்பும் சீனாவுடனும் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த நாட்டை பிடியில் கொண்டு வந்தால், இங்கிருந்து ஈரானிய 'கொடுங்கோல்' ஆட்சிக்கு எதிராக, சீனாவின் 'சர்வாதிகாரத்திற்கு' எதிராக, ஆப்கன் எல்லையில் உள்ள ஈரானின் குர்திய மக்களின் 'போராட்டத்திற்கும்', சீனாவின் உய்குர் பகுதி இஸ்லாமிய மக்களின் 'விடுதலைக்கும்' ஆதரவு தெரிவிக்கலாம், தேவைப்பட்டால் இங்கிருந்து 'ஆதரவாளர்களை' ஆப்கன் எல்லை வழியாக அனுப்பலாம், அதுவும் போதவில்லை என்றால் ஆயுதம் கொடுத்து ஆயுதப் போராட்டம் செய்யச் சொல்லலாம். இதன்மூலம், அவர்களை முடிந்தால் வீழ்த்தி, தமது ஆதரவு அதிபர்களையோ, ஆட்சியாளர்களையோ நியமிக்கலாம். அந்த மக்களுக்கு விடுதலை கிடைக்கிறதோ இல்லையோ, குறைந்த அளவிற்காவது அந்த நாடுகளை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வரலாம்.

ஈரான் வீழ்த்தப்பட்டால், அதன் அருகில் உள்ள முரண்டு பிடிக்கும் ஈராக்கின் சதாமை வீழ்த்துவது எளிது. ஈராக் வீழ்த்தப்பட்டால், அதன் அருகில் உள்ள ஈரானிய ஆதரவு சிரியாவை வீழ்த்துவது எளிது. இந்நான்கு நாடுகளும் அமெரிக்க கட்டுப்பாட்டில் வந்து விட்டால், எண்ணெய் வளமிக்க ஈரானில் இருந்து இந்திய-சீன சந்தைக்கு அமெரிக்க நிறுவனங்கள் குழாய் அமைக்கும். அதோடு ஈரான், கத்தாருடன் உலகிலேயே மிகப்பெரிய எரிவாயு வயலைப் பகிர்ந்து கொள்கிறது. அதனை ஈராக்-சிரியா வழியாக நேட்டோ அணி நாடான துருக்கிக்கும், அங்கிருந்து கிரீசுக்கும், பல்கேரியாவிற்க்கும், இத்தாலிக்கும் நிலவழியாக கொண்டு செல்லலாம். அங்கிருந்து மொத்த ஐரோப்பாவிற்கும் கொண்டு செல்லலாம். ஐரோப்பிய எரிபொருள் சந்தையை கட்டுக்குள் வைத்திருக்கும் ரசியாவை வீழ்த்தி, ஐரோப்பிய சந்தையையும், அந்நாடுகளையும் கட்டுப்படுத்தலாம்.

என்னாங்க, லாம்,லாம்னு அடுக்கிக் கிட்டே போறீங்க. 2001ல் சீனாவோ - இந்தியாவோ அவ்ளோ பெருசா வளரலையே, அதுக்குள்ளே எப்படி இப்படி எல்லாம் யோசிச்சி போர் தொடுக்க முடியும் என்று கேட்கலாம். நாளை வேலைக்கு அல்லது உணவுக்கு என்ன செய்யலாம் என்பதாக சிந்திக்கும் நமக்கு இப்படித் தோன்றுவது இயல்பு. ஆனால், அவர்கள் இன்னும் 50 வருடத்திற்குள்ளாக என்னவெல்லாம் நடக்கும் எனத் திட்டம் தீட்டி செயல்படுபவர்கள். அப்படி இல்லையென்றால் இவ்வளவு பெரிய உலக சாம்ராச்சியத்தைக் கட்டி எழுப்பி, அடக்கி ஆள முடியுமா என்ன? சரி! இத்தனை ஊகத்திற்கும் என்ன அடிப்படை அல்லது ஆதாரம் என நியாயமாகவும், அறிவுப்பூர்வமாகவும் வினவினால், அதற்கான பதில் இந்தப் போர் தொடங்கிய பிறகு நடைபெற்ற அரசியல் - பொருளாதார - ராணுவ நிகழ்வுகள்தான் ஆதாரம். அதனை இனிவரும் தொடர்களில் பார்க்க இருக்கிறோம். ஆக, ஆப்கானிஸ்தான் என்றதும் தீவிரவாதம், அடிப்படைவாதம் பேசும் தாலிபான்கள் என நம் மனதில் தோன்ற வைக்கப்பட்டிருக்கும் சித்திரத்தைத் தாண்டி, வரலாற்று ரீதியாக, வர்த்தக ரீதியாக, பூகோள அரசியல் ரீதியாக அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது.

பூகோள அரசியலில் (geopolitics) இந்தியாவின் முக்கியத்துவம்

என்ன ஆப்கானிஸ்தானுக்கு இப்படி ஒரு முக்கியத்துவமா? என வாய் பிளப்போமானால், நாம் பூகோள அரசியலில் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை என்றே பொருள். பூகோள அரசியலில், நாடுகளின் முக்கியத்துவம் என்பது அது அளவில் சிறிதா? பெரிதா? என்பதைவிட, அந்த நாடு பொருட்களை உற்பத்தி செய்ய என்ன வளத்தை (மனித வளம், எண்ணெய் வளம், கனிம வளம்) வைத்திருக்கிறது, அந்தப் பொருட்களை எடுத்துச் செல்லும் வழியில் இருக்கிறதா, அப்பொருட்களை வாங்கும் வசதி உள்ள மக்களைக் (சந்தை) கொண்டிருக்கிறதா? என்பதைப் பொருத்தது.

மாபெரும் நிலப்பரப்பில் நவீன பொருட்களை உற்பத்தி செய்யும் அளவு திறமையான தொழிலாளர்கள், மிகப் பெரிய அளவில் கனிமங்கள், இந்தப் பொருட்களை வாங்கும் திறனுள்ள மக்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாலேயே சீனா உலக அரங்கில் பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. நவீன பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள், அதை செய்யத் தேவையான நிதி மூலதனம், எண்ணெய் பரிவர்த்தனை, அது எடுத்துச் செல்லும் பாதைகளை கட்டுப்படுத்துதல், நவீன பொருட்களை வாங்கும் திறனுள்ள மக்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாலேயே அமெரிக்கா உலகின் வலிமை பொருந்தியதாக இருக்கிறது.

மிகச் சிறிய நாடான கத்தாரில் உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் இருப்பதாலேயே மிகப் பெரிய பணக்கார நாடாகத் திகழ்கிறது. மத்திய கிழக்கு முழுக்க நிரம்பி இருக்கும் எண்ணெய் வளம்தான் அந்நாடுகளின் செல்வச் செழிப்பின் ஆதாரம். எண்ணெய் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லும் குறுகலான சந்திப்பில் இருப்பதாலேயே இலங்கை, யேமன், ட்ஜிபௌட்டி (djibouti), எகிப்து, ஈரான், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அமெரிக்கா போல நவீன பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களை கைக்கொண்ட, இதற்கு முன்பு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்ட, புதிய கடல்வழிப் பாதைகளைக் கண்ட, அதன் மூலம் புதிய சந்தைகளையும், மூலப் பொருட்களையும் காலனியாதிக்கத்தின் மூலம் கைக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் செல்வமீட்டி தமது வளர்ச்சியை, முக்கியத்துவத்தை உலகில் நிலைநாட்டிக் கொண்டன. இப்படி எல்லா நாடுகளுக்கும் முக்கியத்துவம் இருக்கும்போது இந்தியாவிற்கு என்று எதுவும் இல்லையா? என்று யோசிக்காமல் இருப்போமா... இல்லை இவ்வளவு பெரிய நிலப்பரப்பும், மக்களையும் கொண்ட இந்தியாவுக்கு இல்லாமல் தான் போகுமா..?

sea transportமேலே உள்ள படத்தைப் பார்த்தால், ஈரானுக்கு அருகில் உள்ள ஹெர்மூஸ் நீரிணைக்கு அடுத்தபடியாக இந்தியா - இலங்கைக்கு அருகில் உள்ள கடல்பகுதி வழியாகத்தான் எண்ணெய் வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த எண்ணையின் பெரும்பகுதி சீனாவிற்கே செல்கிறது. இந்த வழியாக நடைபெறும் சரக்கு மற்றும் எண்ணெய்ப் போக்குவரத்தை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் இந்திய - இலங்கை நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. (விடுதலைப் புலிகளை இந்தியா உருவாக்கியது, அதன் தேவை முடிந்தவுடன் கைகழுவியது, இலங்கைப் போர், விடுதலைப் புலிகளை அழிக்க உலக நாடுகள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்து தோற்கடித்தது ஆகியவற்றை இந்தப் பின்னணியில் பார்த்தால் சற்று தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்)

இந்தியா, சீனாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ராணுவ ரீதியாக இது முக்கியமானது. அதோடு இந்தியா மிகப் பெரிய ராணுவத்தை வைத்திருக்கிறது. சீனாவின் மீதான கட்டுப்பாடு கைமீறிப் போகும்போது, பொருளாதார ரீதியாக இந்தியாவை ஆதரித்து, அதனை ராணுவ ரீதியாக சீனாவிற்கு எதிராக நிறுத்தலாம். அந்த ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களையும், போர்த் தளவாடப் பொருட்களையும் மிகப் பெரிய அளவில் இறக்குமதி செய்வதால், ஆயுத ஏற்றுமதி செய்யும் அமெரிக்க-ரசிய நாடுகளுக்கு, இந்தியா தவிர்க்க முடியாத சந்தை. அதோடு சீனாவிற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. ஆதலால் எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு இந்தியா மிக முக்கிய சந்தை. அதேபோல, 1.3 பில்லியன் மக்களைக் கொண்டிருப்பதால், மற்ற பொருட்களை வாங்கும் மக்கள் அதிகம். அந்த வகையில் மிகை உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கும் இந்திய சந்தை இன்றியமையாத இடத்தை வைத்திருக்கிறது.

அப்படி என்றால் நாமும் உலக அரங்கில் சீனாவைப் போன்று ஓர் இன்றியமையாத இடத்தை வகிக்கிறோம் தானே? இது உண்மையா என அடுத்த வாரம் புள்ளிவிபரங்களுடன் பார்ப்போம்.

- சூறாவளி