செவ்வாய்க் கிரகம் 93 லட்சம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. அவ்வளவு தொலைவாக இருக்கிற ஒரு கிரகம், இந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து, பெண்ணின் மாமியாரையும் கண்டுபிடித்து, குறிபார்த்துக் கொன்றுவிடும் என்று சொல்வது அறிவியல் உலகில் எப்படி நம்பத் தகுந்தது.

சின்னக் குழந்தைகளுக்கெல்லாம் "பால்ய விவாகம்' என்னும் பெயரில் திருமணம் செய்து கொண்டிருந்த நம் சமூகம், இன்றைக்கு 30 வயதைக் கடந்த பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாமல் ஏங்கிக் கிடக்கிறது. அன்றைக்குப் பால்ய விவாகம், இன்றைக்கு முதிர் கன்னியர் பிரச்சனை. இன்றைக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என்பதற்கு வரதட்சணை போன்ற காரணங்கள் முதன்மையாக இருக்கின்றன. இவற்றைத் தாண்டி இன்னொரு வேடிக்கையான காரணமும் இருக்கின்றது. பல பெண்களுக்கு ஜாதகத்திலே செவ்வாய் தோஷம் இருக்கின்றது. அதனால்தான் திருமணம் ஆகவில்லை என்று கூறுகிறவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

சமூகத்திலே ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்குமானால், அதே மாதிரி செவ்வாய் தோஷம் உரிய மணமகன் கிடைக்கிற வரையிலே அவள் காத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அவளுக்குத் திருமணம் செய்து விட்டால் அந்தப் பெண்ணுடைய கணவனுக்கோ அல்லது மாமியாருக்கோ உயிர்ச்சேதம் ஏற்பட்டுவிடும் என்கிற ஓர் அச்சம் இருக்கிறது. அதற்கு விஞ்ஞானப் பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனாலும் மக்களிடையே அப்படியொரு ஆழமான நம்பிக்கை இருக்கிறது.

செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று சொன்னால், புதன் தோஷம், வியாழன் தோஷம் எல்லாமும்கூட இருக்க வேண்டும். இன்னமும் சொன்னால் நெப்டியூன் தோஷமும்கூட இருக்க வேண்டும். அவற்றுக்கெல்லாம் தோஷமில்லை. செவ்வாய் கிரகத்துக்கு மட்டும்தான் தோஷம் இருக்கிறது என்று நம்புவதற்கு என்ன காரணம்? செவ்வாய் கிரகத்தின் மீது நம்முடைய தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமன்று, உலகம் முழுதும் இருக்கிற மக்களுக்கும் அச்சம் இருக்கிறது. பல நாடுகள் செவ்வாயைக் கண்டு அஞ்சுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளோ, செவ்வாயை நல்ல நாள் என்று கருதுகின்றன. எனவேதான் அமெரிக்காவிலே பல நேரங்களிலே செவ்வாய்க்கிழமையில் தேர்தலை வைக்கிறார்கள். எப்போதும் தேர்தல் வைக்கிறபோது ஒருவருக்கு அது நல்ல நாளாகவும் அதுவே இன்னொருவருக்குக் கெட்ட நாளாகவும் அமையும். இருவரும் வெல்ல முடியாது. எவ்வாறாயினும், ஒரு நாளைக் கெட்ட நாள் என்று நம்புவதும், அதையே நல்ல நாள் என்று நம்புவதும் எல்லாம் மூடநம்பிக்கைதான்.

இப்படி ஒரு நம்பிக்கை, ஒரு அச்சம் ஏன் வந்தது என்று கேட்டால், மற்ற கிரகங்களைப் போல அல்லாமல் செவ்வாய் கொஞ்சம் சிவப்பாகத் தெரிவதுதான் அதற்கான காரணம். அதனால்தான் பெயரையே செவ்வாய் என்று நாம் வைத்திருக்கிறோம். அந்தக் கிரகத்தைச் சுற்றிக் கூடுதலாகத் தூசுகள் இருக்கிற காரணத்தினாலே, அது சிவப்பாகத் தெரிகிறது என்பதுதான் அறிவியல் தருகிற செய்தி. ஆனால் சிவப்பைப் பார்த்தவுடனேயே ஏதோ ஆபத்து என்பதைப்போல நமக்கு ஒரு அச்சம் இருக்கிறது. அந்த அச்சம் வளர்ந்து செவ்வாய் தோஷம் என்பது வரைக்கும் வந்து நிற்கிறது.

செவ்வாய் தோஷம் என்பதற்கு ஜோதிடர்கள் தருகிற விளக்கம் என்ன என்றால் சிம்மராசியில், லக்கனத்தில், சந்திரனில் இதுபோன்ற வீடுகளில் செவ்வாய்க் கிரகம் இருக்குமானால், அது செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம். அப்படிப் பார்த்தால் 100க்கு 50பேருக்குச் செவ்வாய் தோஷம் இருக்கும். எனவே அதிலிருந்து சில சலுகைகள், சில தளர்ச்சிகள் வழங்கப்படுகின்றன. அப்படி அந்தச் செவ்வாய் இருந்தாலும்கூட, செவ்வாயோடு உடன் சேர்ந்து ராகு அல்லது கேது, குரு, சனி, சூரியன் என்னும் ஐந்து கிரகங்களிலே ஒன்று சேர்ந்திருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்று விலக்கி விடலாம். அப்படி விலக்கி விட்டதற்குப் பிறகும், 100க்கு 8.5 சதவீதம் பேருக்கு, அதாவது ஒரு நாளின் 24 மணி நேரத்தில், குறிப்பிட்ட 2 மணி நேரம் பிறக்கிற குழந்தைகள் எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் இருக்கும் என்பதுதான் ஜோதிடர்கள் தருகிற செய்தி.

அப்படிப் பார்த்தால், இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 30 பிள்ளைகள் பிறக்கிறார்கள். அது இன்றைக்குக் கொஞ்சம் கூடுதலாக ஆகியிருக்கலாம் அல்லது ஒன்று இரண்டு குறைந்திருக்கலாம். ஒரு நிமிடத்திற்கு 30 குழந்தைகள் என்று சொன்னால் ஒரு மணி நேரத்திற்கு 1800 குழந்தைகள் பிறக்கிறார்கள். 2 மணி நேரத்திற்கு 3600 குழந்தைகள் பிறக்கிறார்கள். எனவே ஒவ்வொரு நாளும் 3600 குழந்தைகள் செவ்வாய் தோஷத்தோடு பிறக்கிறார்கள் என்பதாக ஆய்வுகள் விளக்குகின்றன. அவர்களுள் ஏறத்தாழ 1800 குழந்தைகள் பெண்களாக இருக்க வாய்ப்பு உண்டு. அத்தனை குழந்தைகளும் செவ்வாய் தோஷச் சிக்கலினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள்.

செவ்வாய் எங்கே இருக்கிறது? பூமியிலே இருந்து 93 லட்சம் மைல்களுக்கு அப்பாலே இருக்கிறது. அதுதான் இருக்கிற கோள்களிலேயே நமக்குப் பக்கத்திலே இருக்கிற கோள். சூரியனுக்கும் நமக்கும் இடையில் புதன், வெள்ளி என்கிற இரண்டு கோள்கள் இருக்கின்றன. சூரியனுக்கு எதிர்த்திசையில் நமக்கு அடுத்ததாக இருப்பது செவ்வாய்தான். அடுத்த கிரகம் என்றாலும்கூட அது 93 லட்சம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. ஒரு ராக்கெட் 1000 கி.மீ. வேகம் என்று வைத்துக் கொண்டு போனாலும், அந்த இடத்தைப் போய் அடைவதற்கு ஏறத்தாழ 216 நாட்கள் ஆகும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அவ்வளவு தொலைவாக இருக்கிற ஒரு கிரகம், இந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து, பெண்ணின் மாமியாரையும் கண்டுபிடித்து, குறிபார்த்துக் கொன்றுவிடும் என்று சொல்வது அறிவியல் உலகில் எப்படி நம்பத் தகுந்தது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மேலை நாடுகளிலே செவ்வாய் பற்றிய அச்சம் இருந்தாலும்கூட, செவ்வாய் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 1960களிலே இருந்து செவ்வாயைப் பற்றி அறிவதற்கு அறிவியல் உலகம் முயன்று கொண்டிருக்கிறது. அங்குத் தண்ணீர் இருக்கிறதா அல்லது உயிர்கள், மனிதர்கள் வாழ்வதற்கு உரிய சூழல் இருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். 1965 ஆவது ஆண்டுதான் முதல் முதலாக அமெரிக்க அனுப்பிய அந்த ஏவுகணை ஏறத்தாழ செவ்வாய்க்கு அருகிலே போய் 22 படங்களை எடுத்து அனுப்பியது. அதுதான் செவ்வாய் பற்றிய முதல் தகவல்.

22 படங்களை அந்தக் கலம் அனுப்பியது. அதற்குப் பிறகு பலமுறை முயன்று, திரும்பத் திரும்பத் தோல்விகளைக் கண்டதற்குப் பிறகு அதாவது சந்திரனில் கால் வைத்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1976 லே தான் முதன் முதலாக ஏவுகணை அங்கே போய் இறங்கிற்று. அதுவும் ஆளில்லாத ஒன்றுதான். ஆனால் இன்றுவரை மனிதர்கள் அங்கே போய் இறங்கவில்லை. நிலவிலே மட்டும்தான் மனிதன் கால் வைத்திருக்கிறான். செவ்வாயிலே அந்தக் கலம் மட்டும்தான் ஆளில்லாமல் போய் இறங்கியது 1976 இல்.

இரண்டு விண்கலங்கள் இறங்கி ஏறத்தாழ 1 லட்சம் படங்களை எடுத்து அனுப்பியிருக்கின்றன. இப்போது அந்தப் படங்களை இணைய தளங்களிலேகூட பார்க்க முடிகிறது. மிகப்பெரிய பள்ளத்தாக்குகள், குகை போன்ற பள்ளங்கள், இந்தியாவிலே இருக்கிற இமயமலையைக் காட்டிலும் பெரிய மலைகள், இப்படியெல்லாம் இருக்கிற ஒரு கிரகம்தான் அங்கே இருக்கிறது. அந்தக் கிரகத்துக்கும் நம்முடைய திருமணத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்க முடியாது என்கிற தெளிவு நமக்கு வருமானால், இந்த செவ்வாய் தோஷம் போன்றவற்றை எண்ணி நாம் அச்சப்பட வேண்டியதில்லை.

புதிய திருப்பம் என்ன என்றால் நம்முடைய நம்பிக்கைகளுக்கு அறிவியலைக் கொண்டு வந்து சேர்த்து முடிச்சுப் போட்டுச் சொல்வது. நாம் நம்முடைய ரத்தத்தைச் சோதனை செய்கிறபோது கீட.Nஞுஞ்ச்tடிதிஞு, கீட.கணிண்டிtடிதிஞு என்று சொல்வார்கள். ரத்தத்தில் யாருக்கெல்லாம் ஆர்.எச். இல்லையோ அவர்களுக்கு எல்லாம் செவ்வாய் தோஷம் என்கிறார்கள். பொதுவாக அறிவியலிலே ஒரு செய்தி உண்டு. ரத்தத்தில் ஆர்.எச். கணவன்–மனைவி இருவருக்கும் இருக்க வேண்டும். இல்லையென்றால் இருவருக்கும் ஆர்.எச். இருக்கக் கூடாது. அதை இப்போது மாற்றிக்கொள்வதற்காக, ஊசிகள் எல்லாம் வந்து விட்டன என்பதை நாம் அறிவோம்.

அதையும் இதையும் முடிச்சுப் போட்டுச் சொல்வதைக்கூட அண்மையிலே பல ஆராய்ச்சிகள் மூலம் விளக்கி இருக்கிறார்கள். ஏறத்தாழ 100 பேரை ஆராய்ந்து பார்த்தால், அதாவது ஜாதகப்படி செவ்வாய் தோஷம் இருக்கிறவர்கள் ஆர்.எச். நெகட்டிவாக இருக்கிறார்களா என்று பார்த்தால், 98.4 சதவீதம் அப்படி இல்லை. 1.6 சதவீதம் அப்படி இருக்கிறது என்றால் அது தன்னிச்சையாக நடந்திருக்கிறது என்பதுதான் பொருள். ஆகையினாலே இது அறிவியல் சார்ந்த செய்தி இல்லை. செவ்வாய் தோஷம் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை. அப்படிப்பட்ட ஒன்றை வைத்துக் கொண்டு நம்முடைய பெண்களின் வாழ்க்கையை நாம் பாழடித்து விடக்கூடாது.