 |
பாஸ்கர் சக்தி
நிலமென்னும் நல்லாள்
விபரம் வந்தபின்பு ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தை நான் உணரவில்லை. அது எண்பத்தி எட்டாம் வருடம். நண்பன் ஒருவனின் அகால மரணத்தினால் ஏற்பட்ட துயரத்தில் நண்பர்களனைவரும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் பூமி ஆடி இருக்கிறது. அடுத்த நாள் பேப்பரைப் பார்த்த போதுதான் விபரம் தெரிந்தது. எவ்வித முக்கியத்துவமும் அற்ற ஒரு சாதாரணச் செய்தி அது. ஊர் டீக்கடையில் வயசாளிகளுடன் சேர்ந்து அதனைப் பேப்பரில் படித்தேன். கம்பம் அருகே டூ வீலரில் பயணம் செய்த ஒருவர் ‘பேலன்ஸ்' இழந்து ரோட்டின் ஓரத்துக்குப் போய்விட்டு... ‘அடடா... தலை சுற்றல்!' என்று வருந்தினாராம். மற்றொரு வீட்டில் தம்ளர் ஒன்று கீழே விழுந்ததாம். அவ்வளவுதான் சமாச்சாரம். பேப்பரைப் பார்த்த வயசாளி ஒருத்தர்... பூமி ஆடிய வினாடி தான் எங்கிருந்தோம் என்று யோசித்துப் பார்த்து விட்டு... சற்று சிரித்தார். “ஆமப்பா... இந்த டயத்துக்கு என் வீட்ல தகரத்து மேல மடமடன்னு சத்தம்... இந்த காக்காக்களுதைக(!) சும்மா இருக்குதா அப்படின்னு சத்தம் போட்டேன்... ஒரு வேளை இதாயிருக்குமோ!'' என்றார்.
மற்றொரு வயசாளி வெகு அலட்சியமாக ‘நில அதிர்ச்சி' பற்றி விளக்கினார்... “அது வேற ஒண்ணுமில்லப்பா... பூமித்தாய் அம்புட்டு சனத்தையும் பொறுமையா காலம் பூராவும் சுமக்குறா... எப்பயாவது வலிக்குமில்லை. அப்ப... கையை மாத்துவா... அந்த மாத்துற ஒரு நிமிசந்தான் இப்படி ஆடுது...'' என்றார்.
என்ன ஒரு வியாக்கியானம்!... எனக்கு தோளில் பூமி தாங்கும் ஹெர்குலிஸ் நினைவு வந்தது. (சைக்கிள்களின் புண்ணியத்தில் அந்த கிரேக்கக் கடவுளை யாவரும் பார்த்திருக்கிறோம்).
வயசாளிகள் இவ்வாறு சொல்லி விட்டு அடுத்த நொடியிலேயே பேப்பரைப் புரட்டி அடுத்த செய்திக்குப் போய்விட்டனர்.
ஒரு துளியும்... மனக்கிலேசமோ, சஞ்சலமோ... ஒருவருக்கும் ஏற்படவில்லை.
அதன்பின்பு செய்தித்தாள்களில் எப்போதாவது அங்கங்கே... பூமாதேவி கைமாற்றிக் கொள்கிற செய்திகள் தென்படுவதுண்டு. அவள் கைமாற்றுகிற வேகத்தில் சேதங்கள் நிகழ்வதையும் செய்தித்தாள்கள் தெரிவித்தன... லாட்டூர் சம்பவத்தின் போது சில புகைப்படங்களும் வெளியாயின. ஆனாலும்... அவை எதுவும் மனதின் பத்திர உணர்வை நெருடியது இல்லை. பொதுவாகவே நினைவு தெரிந்த, கடந்த காலங்களில்... தனி நபருக்கு ஏற்படுகிற சாதாரண பயங்களையும், அச்சத்தையும் தவிர்த்து... வேறு எவ்விதமான அச்சத்தையும் எதிர்கொள்ள நேர்ந்ததில்லை.
குஜராத்தில் நடந்த அந்தப் பேரழிவின் சமயத்தில் சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் நின்றிருந்தேன். சென்னை சகஜமாகவே இருந்தது. வீட்டுக்கு வந்தபோது மதியம் டிவியில் எழுத்துக்கள் ஓடின. 500 பேர் பலி என்றது செய்தி. அடுத்தடுத்து ஓடிய செய்திகளில் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போய்... உச்சத்தைத் தொட்டு நின்றது. டி.வியை கனத்த இதயத்துடன் தமிழகமே பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். மாலை வெளியே சென்றபோது சென்னை வரை அந்த அதிர்வுகள் எட்டிய சேதியை வடபழனி பஸ் ஸ்டாண்டில் டிரைவர்களும் கண்டக்டர்களும் மாலை செய்தித்தாளுடன் விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் குரலில் ஒருவித அச்சத்தை உணர்ந்தேன். அடுத்தடுத்த டி.வி. செய்திகளில் விரிந்த அந்தப் பேரழிவு ஜனங்களின் மனதில் அச்சத்தின் சலனங்களை முழுமையாக நிரப்பியது என்று தோன்றுகிறது. அந்த அதிர்வுகள் தமது முழு உக்கிரத்துடன் ஒருநாள் வெளிப்பட்டதைப் பார்த்த போதுதான் ஒட்டுமொத்த ‘சமூக பீதி' என்றால் என்னவென்று உணர்ந்தேன்.
அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் தன்னந்தனியே அமர்ந்திருந்தபோது நானிருந்த நாற்காலி ஒரு வினாடி ஆடியது. அதனுடைய கால் சரியில்லை என எண்ணி விட்டு சட்டை பண்ணாமலிருந்தேன். எனது கால்களும் கூட சேரின் மீதுதான் இருந்தன. மிகச்சிறிய இடைவெளிக்குப் பின் மறுபடியும் சேர் ஆட ‘இது என்னமோ வேற' என்று தோன்றியது. வெளியே கூச்சல் கேட்டது. ‘சட்’டென்று எழுந்து கதவைத் திறந்தேன். மேல் மாடியில் இருக்கும் அனைவரும் பதட்டமாக கீழிறங்கி ஓடினர். குழந்தைகள் குதூகலத்துடன் சிரித்தபடியே ஓட பெண்கள் “ஆடுது... பூமி ஆடுது'' என்று சொல்லியபடியே பயந்து ஓட, நானும் கதவை பதட்டத்துடன் அப்படியே சாத்தி விட்டு கீழே விரைந்தேன். அனைவரும் வீட்டை ஒட்டிய மைதானத்தில் நின்றோம். அப்போது எதற்கென்று தெரியாமல் நாங்கள் அனைவரும் அபத்தமாக வானத்தை அண்ணாந்து பார்த்தோம். இன்றுவரை அது ஏனென்று விளங்கவில்லை.
அதில் ஏதோ மனித மன விசித்திரம் இருப்பதாகத் தோன்றுகிறது. எல்லையற்ற பிரபஞ்சப் பெருவெளியில் கலக்கப் போகிறோம் என்கிற எண்ணம் அடிமனதில் தோன்றியதோ என்னவோ? ஒரே குழப்பம். ஆளாளுக்கு ஏதேதோ பேசினார்கள். எல்லோர் முகத்திலும் பயம். அவரவர்கள் தங்களது கருத்துகளை நா உலர அடுத்தவர்களிடம் சொல்லி பீதியை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒருவர் போலிஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணலாம் என்று சொன்னார்... ஆனால் ‘பைக்'கில் அப்போதுதான் வந்து சேர்ந்த மற்றொருவர்... தி.நகர், கோடம்பாக்கம் கடைகளில் உள்ளோரெல்லாம் தெருவில் வந்து நிற்பதாகவும், தெருவெங்கும் மக்கள் வெள்ளம் என்றும், போலிஸ்காரர்களும் நம்மைப் போலவே பயந்து போய் சாலையில் நின்று கொண்டுதான் இருக்கின்றனர் என்றும் சொன்னார்... எனக்கு அடுத்த நடவடிக்கை பற்றி குழுப்பமாக இருந்தது. சற்றே தைரியத்துடன் மாடிக்கு ஏறி முதல் தளத்தில் இருக்கும் எனது வீட்டை அடைந்தேன். விளக்குகளை அணைத்துவிட்டு பூட்டைப் பூட்டி விட்டு மறுபடியும் கீழே வந்து ஜனங்களுடன் வந்து நின்று கொண்டேன்.
ஜனத்திரளின் பீதி குறையவில்லை... எதற்கெடுத்தாலும் செய்தித்தாள்களை நம்புகிற ஒரு நபர் என்னிடம் பத்திரிகை ஆபிஸுக்கு போன் போட்டு ‘மறுபடியும் இது வருமா?' என்று விசாரிக்கச் சொன்னார். எனக்கு அந்த பதட்டத்திலும் சிரிப்புதான் வந்தது... குழப்பத்திலேயே பொழுது நகர்ந்து கொண்டிருக்க எனது பொறுமை குறைந்து கொண்டே வந்தது. கூடி நிற்கும் அனைவரும் குறைந்தது இன்னும் பத்து நாட்களாவது இதைப் பற்றிப் பேசித் தீராத, பயங்கலந்த ஆர்வத்துடன், அனைவரும் அறிந்த தகவல்களையே புதிதாகப் பேசுகிற மாதிரியான பாவனையுடன் பேசிக் கொண்டே இருந்தனர். பீதியை ஊதிப் பெருக்குகிற விதமாகவே அங்கிருந்தோரின் பேச்சு இருந்தது. எனக்கு மேற்கொண்டும் இங்கேயே இருந்தால், இவர்கள் காட்டும் பூச்சாண்டி இருக்கின்ற மன உறுதியையும் குலைத்து விடும் என்று தோன்ற அங்கிருந்து எங்காவது தப்பித்துச் சென்றுவிட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தேன்... வீட்டுக்குப் போய் கைலி, டூத் பிரஷ் எடுத்துக் கொண்டு நண்பர் ஒருவரின் வீட்டுக்குக் கிளம்பினேன்.
வெளியில் தெருக்களில் நிலைமை இன்னும் தீவிரமாய் இருந்தது... சென்னை ஏதோ ஒரு கலவர பூமி போல் பதட்டம் சூழ்ந்த மனிதர்களால் நிறைந்திருந்தது. தெருவில் எங்கு பார்த்தாலும் ஜனங்கள் விரைந்து கொண்டிருந்தனர். பலர் குடும்பம், குடும்பமாக ஆட்டோவில் ஏறி சொந்த ஊருக்குத் தப்பிச் செல்கிற உத்தேசத்துடன் விரைவதைப் பார்க்க முடிந்தது. ஆட்டோக்காரர்கள் வெகு பரபரப்புடன் இருந்தனர். நான் ஒரு ஆட்டோவை அணுகியதும், “எங்க சார் எக்மோரா? ஏர்போர்ட்டா?'' என்று கேட்டார். அவர் முகத்தில் கேலி இல்லை... ‘இல்லை வடபழனி' என்றதும் சற்றே வியப்புடன் “ஊருக்குப் போகலியா?'' என்று கேட்டுவிட்டு கொண்டு போய் விட்டார். பத்து ரூபாய் அதிகம் கேட்டார்.
“என்னங்க பத்து ரூபாய் ஜாஸ்தியா கேக்கறீங்க?''
“என்ன சார்... எவ்வளவு ‘ரிஸ்க்'குல(!) வண்டி ஓட்டினுகீறோம்... குடு சார்!''
“அதெப்படிங்க!''
“ஸார்... பூகம்பம் சார்... நாளைக்கு இருப்பமோ இல்லியோ... கணக்குப் பாக்கிறியே.'' பிரளயமே வந்தாலும் ஆட்டோ டிரைவர்களை ஒன்றும் ஆட்ட முடியாது என்று தோன்றியது. நண்பர் வீட்டுக்கு நடந்தேன். இதனிடையே டி.வியில் ‘சென்னையில் திடீர் நிலநடுக்கம்' என்று செய்தி ஓட... ஊரில் இருக்கும் எனது அம்மாவின் கற்பனை வளங்கள் குறித்து அறிந்தவனாதலால்... அருகிலிருந்த எஸ்.டி.டி பூத்துக்கு ஓடினேன், நான் முழுசாக இருக்கும் விபரத்தை தெரிவிக்க வேண்டி. டெலிபோன் பூத்தில் வரலாறு காணாத கூட்டம்... ஆனால் எந்த ஊருக்கும் லைன் கிடைக்கவில்லை. டெலிபோன் லைன்களை லட்சக்கணக்கான பேர்கள் ஏக காலத்தில் முற்றுகை இட்டதில் அவை நெருக்கடியில் சிக்கித் தவித்தன. “எல்லாம் ஜாம் ஆயிட்சுங்க'' என்றார் பூத்காரர். அவர் கண்ணில் இத்தனை வாடிக்கையாளர்கள் திரண்டும் லைன் கிடைக்காததால் பைசா வசூலாகாத கவலை.
சற்று நேர போராட்டத்துக்குப் பின் அதிர்ஷ்டவசமாக லைன் கிடைத்து ஊருக்குப் பேசிவிட்டு... நண்பன் அறைக்குப் போனேன். அங்கு ஒரே ஜாலி. உல்லாசமான மனநிலை கொண்ட நண்பர்களின் கூட்டணியில் அச்சம் குறைந்து இயல்பு நிலை திரும்ப... சிரித்துப் பேசியபடியே டி.வி. பார்த்தோம். சென்னை மக்களின் பீதியை பேட்டை வாரியாகக் காண்பித்தனர். ஏற்பட்ட நிலநடுக்கம் சுமாரான அளவிலானது என்று நிபுணர்கள் விளக்கினர். சென்னையில் நிலப்பகுதி பாதுகாப்பானது கவலைப்படாமல் நிம்மதியாகத் தூங்கலாம் என்று உத்தரவாதம் தந்தனர். ஒரு வழியாக நாங்கள் அரட்டையடித்து ஓய்ந்து ராத்தி இரண்டு மணி வாக்கில்தான் தூங்கினோம்.
காலையில் எனது வீடு திரும்பி வழக்கமாக உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். மதிய வேளை... மீண்டும் வெளியே பரபரப்புச் சத்தங்கள் இறங்கி வந்தேன்... லேசாக மழை தூறி அப்போதுதான் முடிந்திருந்தது. வானத்தில் மேக மூட்டம். பக்கத்து ப்ளாக்கில் சில பெண்கள் பரபரப்புடன் இருப்பதைப் பார்க்க முடிந்தது.
“என்னங்க விஷயம்?''
“மறுபடியும் ஒரு மணிக்கு பூகம்பம் வரப்போகுதாம். அதான்'' என்று சொல்லிய அந்தப் பெண் தனது வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து பாதுகாப்புடன் வைத்த பொருள் எது தெரியுமா? டி.வி!
அதனை பாய் விரித்து கிரவுண்ட்டில் வைத்து... மேலே பாலிதீன் பேப்பரால் மூடி... அதற்கு மேல் போர்வை கொண்டு கவனமாகப் போர்த்தினார்கள் அந்த அம்மா... “என்னென்னமோ நடக்குதே கடவுளே'' அவர்கள் முகத்தில் பீதியின் குழப்பம்.
“யார்மா சொன்னது ஒரு மணிக்கு நிலநடுக்கம் வரப் போகுதுன்னு?''
“எல்லாரும் பேசிக்கிறாங்க! டி.வியில வேற சொன்னானாம்... ஒரு மணிக்கு வருமாம்!''
(டி.வியில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய... சிறிய அதிர்வுகள். அவை ஒருவேளை ஏற்படக்கூடும்... ஆனால் அவை ஆபத்து விளைவிக்க இயலாத அளவில் சிறியதாக இருக்கும். சொல்லப் போனால் நாம் அதை உணரக் கூட முடியாது... அவ்வித அதிர்வுகள்... அடுத்த சில தினங்களிலோ... அல்லது மாதங்களிலோ, வருடங்களிலோ ஏற்படலாம்... அது குறித்து பயப்படத் தேவையில்லை என்று ஒரு நிபுணர் சொல்லப் போக அந்தத் தகவல் வெகு மோசமான விதத்தில் திரிந்து அச்சுறுத்தும் வதந்தியாகப் பரவி விட்டது)
“அப்படியெல்லாம் வராதுங்க... நிலநடுக்கம் முன் கூட்டி இத்தனை மணிக்கு வரும்னு எல்லாம் சொல்ல முடியாதுன்னு தெளிவா டி.வி.யில சொன்னாங்களே.''
“இல்லீங்க... வருமாம்'' என்றார் அந்தப் பெண் உறுதியாக. பின்பு பெருமூச்சுடன் தனது டி.வியைப் பார்த்தபடி பிரார்த்தனையாக சொன்னார். “கடவுளே... மழை வராம இருக்கணும்'' நான் மனதுக்குள் ஆச்சர்யப்பட்டேன். இதென்ன வினோதமான பிரார்த்தனை!... நியாயமாக இந்தம்மா, நிலநடுக்கம் வரக்கூடாது என்று தானே கடவுளிடம் கேட்க வேண்டும்!!
குழந்தையைப் பார்ப்பது போன்றதொரு ஆதுரத்துடன் டி.வியைப் பார்த்த அந்தம்மாவைப் பார்க்கையில் எனக்கு எங்கள் ஊர் வயசாளிகள் நினைவுக்கு வந்தனர்.
எவ்வளவு எளிய சமாதானம் அவர்களுடையது. அனாவசிய பீதியை ஊட்டுகிற அரைகுறை தகவல் அறிவுகளால் நிரப்பப்படாத பாக்கியவான்கள் அவர்கள். அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருப்பதாக கற்றோர்கள் சொல்லலாம் தான். ஆனால் படித்த புத்திசாலிகள் அன்று ஆட்டோவிலும், பஸ்ஸிலும் ஏறி ஓடிய ஓட்டத்தை விட அது பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
அந்தப் பெண் அன்று மாலை வரை டி.விக்குப் பாதுகாப்பாக மைதானத்திலேயே இருப்பதைப் பார்க்க முடிந்தது. போர்த்தப்பட்டுக் கிடந்த டி.வி... அச்சுறுத்தும் ஒரு அசுரக்குழந்தை என்று எனக்குத் தோன்றியது.
- பாஸ்கர் சக்தி ([email protected])
|