 |
ஞாநி
கவலைகள் ஓய்வதில்லை!
கவலை 1: புத்தகம்
தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த முரசொலிமாறன், ஒரு புத்தகப் பிரியர் என்பது இப்போது பரவலாக எல்லாருக்கும் தெரிய வந்திருக்கிறது. திறமையான கதை வசனகர்த்தாவாக (எம்.ஜி.ஆரின் வெற்றிப் படங்களில் ஒன்றான ‘எங்கள் தங்கம்’ படத்துக்கு அவர்தான் வசனம்) அவர் இருந்தபோதிலும், கதை, கற்பனைகளை விட அவருக்கு நான்.ஃபிக்ஷன் எனப்படும் கதை யல்லாத துறைப் புத்தகங்களை வாசிப்பதில்தான் அதிக விருப்பம்.
அவருடன் முரசொலியில் பணியாற்றிய காலத்தில், அவருடைய வாசிப்புப் பழக்கத்தையும் ஆர்வத்தையும் நேரில் பார்த்திருக்கிறேன். எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி போன்ற கனமான சஞ்சிகைகளை விடாமல் வாசித்துப் பக்க அடையாளக் குறிப்புகள் எல்லாம் எடுத்துவைத்திருப்பார்.
அவர் சேர்த்து வைத்திருந்த 10,000.க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் மனைவி அண்மையில் லயோலா கல்லூரி நூலகத்துக்கு நன் கொடையாக அளித்திருக்கிறார். பல நல்ல புத்தகங்களை நிறைய இளம் கல்லூரி மாணவர்கள் படிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்ற பார்வையில் இது மகிழ்ச்சியான செய்திதான். நானும் அத்தகைய நம்பிக்கையில்தான் அண்மையில் என் வீட்டை விற்றபோது, சுமார் 2,000 புத்தகங்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகத்துக்கு அளித் தேன். என் தங்கையின் கணவர் இறந்த பின்பு, அவருடைய நூல் சேகரிப்பும் அதே நூலகத்துக்குச் சென்றது.
இன்னொரு பார்வையில், இவை யெல்லாம் கவலைக்குரிய நிகழ்ச்சி களாகவும் தோன்றுகின்றன. முரசொலி மாறன் வீட்டில் உயர் படிப்பு படித்த வாரிசுகள் மூவர் இருக்கிறார்கள். இந்த 10,000 புத்தகங்களையும் அவர்கள் முழுமையாகப் படித்து முடித்த பிறகுதான் அளிக்க முன் வந்தார்களா? என் வீட்டிலும் எழுத்தறிவும் படிப்பறிவும் உடைய ஒரு வாரிசு உண்டு. 2,000 நூல்களில் 20 நூல்களைக் கூட அவன் பயன்படுத்தியது இல்லை. என் தங்கையின் வாரிசும் அவள் அப்பாவின் சேகரிப்பில் பத்து சதவிகிதம் கூடப் படித்திருக்க வாய்ப்பில்லை.
என் வயது நண்பர்கள் பலர் ஏராள மான நூல்களைச் சேர்த்துவைத்தவர்கள். அநேகர் தங்களுக்குப் பின் தங்கள் வீட்டில் இந்தப் புத்தகங்களைப் பயன் படுத்த ஆளில்லை என்ற கவலையைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். தங்களுக்குப் பின் தங்கள் வீட்டையோ நிலத்தையோ பயன்படுத்த வாரிசுகள் தயாராக இல்லை என்ற நிலை யாருக்கும் இல்லை. புத்தகங்களுக்கு மட்டுமே இந்தக் கதி!
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, வாசிப்பின் ருசியை நம் வீட்டுக் குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலிருந்தே ஏற்படுத்தத் தவறுவது. இன்னொன்று, அவர்களுடைய பள்ளிக் கல்வி முறை. புத்தக வாசிப்பிலிருந்து எவ்வளவு சீக்கிரம் விடுதலை அடைய முடியுமோ என்று தப்பி ஓடும் ஏக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத் தியிருக்கிறது. அதற்கு மேலும் வசதியாக, புதிய மீடியா தொழில்நுட்பங்களின் வருகை அவர்களுக்கு உதவுகிறது.
அதுதான் இதிலிருந்து எழும் இன்னொரு கவலை. கல்லூரி நூலகங்கள் உட் பட பல நூலகங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. அதில் நூலகர்கள், நிர்வாகிகளின் Ôபங்குÕ ஒரு புறம் இருக்க, அறிவு தாகம் கொண்ட இளைஞர்களில் பலரும் கூட ஒரு விஷயத்தை ஒரு நூலகத்தின் அலமாரிகளில் தேடிக் கண்டு பிடிப்பதைவிட, இன்டர்நெட்டில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.
இதன் விளைவுகள் என்ன என்பதைக் கவலையோடு நாம் யோசிக்க வேண்டும். அச்சிட்ட புத்தகம்/பத்திரிகை வாசிப்பு என்பது வேறு. கணினிப் புத்தகம்/பத்திரிகை வாசிப்பு என்பது வேறு. இரண்டும் வெவ்வேறான அனுபவங்களை, பயன்களைத் தருபவை. ஒன்று மற்றொன்றுக்கு மாற்று அல்ல.
இன்று நம் சமூகம் வேறு எப்போதையும்விட அதிகமான வர்களை, அதிக வேகத்தில் எழுத்தறிவு பெற்றவர்களாக ஆக்கிவருகிறது. எண்ணிக்கைக் கணக்கில் பார்க்கும்போது லட்சக் கணக்கில் தமிழ்ப் பத்திரிகைகளும், ஆயிரக்கணக்கில் நூல்களும் விற்பது ஆரோக்கியமானதாகவே இருந்தாலும், மக்கள் தொகையின் பெருக்கத்துடன் ஒப்பிடும்போது படிப்பவர் சதவிகித அளவு கவலை தருகிறது.
புத்தக வாசிப்பு என்பது அந்தரங்க மான சுகங்களில் ஒன்று. அதைப் பின்னர் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது இன்னொரு சுகம். இரண் டையும் எழுத்தறிவு உடைய எல்லாரும் பெற முடியும். இந்தச் சுகங்களை அடுத்த தலைமுறைக்கு முழுமையாக அறிமுகம் செய்யாத வரையில், எத்தனை ஆயிரம் அரிய நூல்கள் நூலகங்களில் இருந்தாலும் என்ன பயன் என்பதே கவலை.
கவலை 2: சாதி
அம்பேத்கரின் புத்தகத்தைப் படித்து விட்டு, அவரைவிட அதிக தூரத்தை அரசியலில் எட்டியவர் தலித் தலைவர் கன்ஷிராம். அம்பேத்கரால் தலித்துகள் உள்ளிட்ட பலவீனமான பிரிவினருக்கான பாதுகாப்புகளைத் தரக்கூடிய அரசியல் சட்டத்தை வடிவமைக்க முடிந்ததே தவிர, அவர் வாழ்நாளில் தலித்துகள் அரசியல் அதிகாரத்தில் பங்குபெறும் சூழலை ஏற்படுத்த முடியவில்லை. அதைச் சாதித்தவர் கன்ஷிராம்.
தலித்துகளை அதிகம் கொடுமைக் குள்ளாக்குவது உயர் சாதியினரா அல்லது சாதி அடுக்கில் உடனடியாக தலித்துகளுக்கு மேல் இருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினரா என்பது பற்றிய பட்டிமன்ற விவாதத்துக்குள் போய்ச் சிக்க விரும்பாதவர் கன்ஷிராம். ‘எல்லாரும்தான் கொடுமைப் படுத்துகிறார்கள். அதில் யாரேனும் ஒருவரோடு மாறி மாறிக் கூட்டு சேர்ந்துதான் ஆக வேண்டும். அப்படிக் கூட்டணி அமைத்து, அதிகாரத்தில் தலித்துகள் பங்குபெறுவதை அதிகரித் துக்கொண்டே போக வேண்டும். இதர சமூகச் சீர்திருத்தங்களை எல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ என்பதே கன்ஷிராமின் அணுகுமுறை. சந்தர்ப்பவாதம் என்று மீடியா பழித் தாலும், இந்த உத்திதான் உ.பி. முதல மைச்சர் பதவிக்கு தலித் கட்சியின் சார்பில் ஒரு தலித் அமரும் வாய்ப்பைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது.
அரசியல் அதிகாரத்தில் தலித்துகள் இல்லாதவரைக்கும் என்ன நடக்கும் என்பதற்கு கன்ஷிராமின் மரணத்துக்கு (அக்டோபர் 9) சில தினங்கள் முன்பு (செப்டம்பர் 29) மகாராஷ்டிரத்தில் நடந்த படுகொலைகள் சாட்சி.
நாகபுரி அருகே கெர்லாஞ்சி கிராமம். அம்பேத்கரின் அதே மஹர் சாதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்திடமிருந்த ஐந்து ஏக்கரில் இரண்டு ஏக்கரை உயர் சாதியினர் நிலத்துக்கான சாலைக்காக முன்பே எடுத்துக்கொண்டார்கள். அடுத்து, மீதி நிலமும் தங்களுக்குப் பாசனக் கால்வாய்க்கு வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள். இதற்கு உடன்படாத குடும்பத்தினருக்கு ஆதரவாக இருந்தவர் சித்தார்த் என்ற உறவினர். அவருக்கும் குடும்பத் தலைவி சுரேகாவுக்கும் கள்ளத் தொடர்பு என்று சொல்லி, உயர் சாதியினர் அவரை அடித்தார்கள். அவர் போலீஸில் புகார் செய்ததில் 28 பேர் கைதானார்கள். அத்தனை பேரும் ஜாமீனில் வெளியே வந்த உடனே, ஊரையே திரட்டி, சுரேகா (45), மகள் பிரியங்கா (17) , மகன்கள் ரோஷன் (23), சுதிர் (21) நால்வரையும் மேல் சாதியினர் சுமார் 150 பேர் கூடிக் கொலை செய் தார்கள். இரண்டு பெண்களும் நிர்வாண ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டு, பலராலும் பாலியல் வன்முறை செய்யப்பட்டார்கள். அனைவருக்கும் பிறப்பு உறுப்புகளில் வெட்டு, சிதைப்பு. கொல்லப்பட்ட உடல்கள் ஊருக்கு வெளியே பல மூலைகளில் தூக்கி எறியப்பட்டன. இத்தனையையும் ஒளிந்துகொண்டு பார்த்த குடும்பத் தலைவர் பய்யிலால், போலீஸுக்கு போன் செய்தும் யாரும் வரவில்லை.
மறு நாள்தான் போலீஸ் புகாரைப் பதிவு செய்தது. மருத்துவப் பரிசோதனையில் பாலியல் வன்முறை இல்லை என்று சொன்னதை, தலித் அமைப்புகள் கடுமையாக விமர்சித்ததால், மறு சோதனை நடக்கிறது.
கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட தலித் பெண் பிரியங்கா, ப்ளஸ் டூ.வில் முதல் இட மாணவி. என்.சி.சி. சிப்பாய். சுதிர், பட்டதாரி. ரோஷன், பார்வையற்றவர் என்றாலும், ஓரளவு படித்தவர்.
கல்வியை நம்பி மேலே நகர்ந்து கொண்டு இருந்த ஒரு தலித் குடும்பம், அரசியல் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்திருந்த ஊர் மேல் சாதியினரால் நசுக்கப்பட்டது 21.ம் நூற்றாண்டில்! கன்ஷிராமின் அணுகுமுறை தலித்துகளுக்குத் தேவைப்படுவதையே இது காட்டுகிறது.
கவலைகளுக்கு வாராவாரம் பஞ்சமே இல்லை. தீர்வுகளுக்குத்தான்!
இந்த வாரக் குட்டு!
முதலமைச்சர் கருணாநிதியைக் குஷிப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அரசு பஸ்களில் இருந்த திருக்குறள் பலகைகளில் குறளை அகற்றிவிட்டு, மஞ்சள் பெயின்ட்டில் கறுப்பு எழுத்தில் ‘நான் என்றால் உதடுகள் ஒட்டாது. நாம் என்றால் உதடுகள் ஒட்டும்’ என்ற கருணாநிதியின் வசனப் ‘பொன்மொழி’யை எழுத உத்தரவிட்ட அரசு அதிகாரிக்கு. இவற்றுக்குப் பதிலாக, திருக்குறளுக்கு கருணாநிதி எழுதிய உரைகளை பொறிக்கச் செய்யலாம் என்று ஏன் அந்த அதிகாரிக்குத் தோன்றவில்லை?
இந்த வாரப் பூச்செண்டு!
கோலா கம்பெனிகளின் விளம்பர மாடலாக இருக்கும் தன் ஒப்பந்தம் மே 2007.ல் முடிந்ததும் அதைப் புதுப்பிக்கப் போவ தில்லை என்று அறிவித்திருக்கும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு இ.வா.பூச்செண்டு! கோலாக்களில் பூச்சி மருந்து கலந்திருப்பது பற்றிய சர்ச்சை வந்த பின், தான் கோலா மாடலாக நீடிப்பது தன் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால், இந்த முடி வெடுத்ததாக சிரஞ்சீவி சொல்கிறார்.
இந்த வாரப் பொன்மொழி!
‘‘ஊழல்வாதிகளைக் கட்சியில் நான் சேர்ப்பதை விமர்சிக்கிறார்கள். ஒருவர் எப்போதுமே ஊழல்வாதியாகத்தான் இருக்க வேண்டுமா? திருந்தக் கூடாதா? அவர்க¬ளைச் சேர்ப்பதால் நமது கட்சியின் தனித்தன்மை மாறிவிடாது. எத்தனைவிதமான நதிகள் கலந்தாலும், தன் உப்புத்தன்மையை இழக்காமல் இருக்கும் கடல் போன்றது நம் கட்சி!’’ . தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
இந்த வாரப் புதிர்!
வயிற்றுப்போக்கால் இந்தியாவில் ஆண்டு தோறும் 4 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் இறக்கிறார்கள். இந்த இறப்புகளில் சுமார் 60 சதவிகிதத்தைத் தடுக்க என்ன வழி ?
1. உணவுக் கலப்படத்தைத் தடுத்தல்
2. பால் பவுடர் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருத்தல்.
3. வீட்டில் கழிப்பறை கட்டுதல்.
ஐ.நா. வெளியிட்டுள்ள 2006.க்கான மனித வளர்ச்சி ஆய்வறிக்கையின்படி பெருவாரியான குழந்தை மரணங்களுக்குக் காரணம், வீட்டில் உள்ள சுகாதாரக் குறைவும், அதனால் ஏற்படும் தொற்றும்தான். வீட்டில் ஒரு கழிப்பறை கட்டுவதன் மூலம் தொற்றையும், குழந்தை மரணத்தையும் குறைக்கலாம். இந்தியாவில் சுமார் 70 கோடி பேர் வசிக்கும் 12 கோடி வீடுகளில் கழிப்பறை இல்லை.
ஆனந்த விகடன் 22.11.2006
|