Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
ஆகஸ்ட் 2005

செங்கல் சூளையில் வேகும் இருளர் வாழ்க்கை

முருகப்பன்


குறைந்து வரும் மக்கள் தொகை, அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தாமல் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்வது, கல்வியில் மிகவும் பின்தங்கிய நூலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பழங்குடி இனங்களில் மிகவும் பின்தங்கிய பழங்குடிகள் என்று சில இனங்களை அண்மையில் மத்திய அரசு வரையறுத்துள்ளது. இப்பட்டியலில் தமிழகத்தில் உள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள இருளர் இனம் அடங்கும். இந்த இருளர்கள் ஊருக்கு ஒன்று, இரண்டு அல்லது மிகச் சிறிய எண்ணிக்கையில் கிராமங்களில் ஏரி, குளக்கரைககளில் குடிசை போட்டு வாழ்ந்து வருகின்றனர்.

பாம்பு, எலி, முயல் பிடிப்பது, தோப்புகளில் காவல் காப்பது, கூலி வேலை செய்வது போன்றவைதான் இவர்களுடைய அன்றாட வாழ்க்கையாக இருக்கிறது. இன்று இந்த வேலைகளுக்கும் நெருக்கடி வந்த நிலைகளில் பெரும் பாலான இருளர்கள் குடும்பத்துடன் சென்னை, திருச்சி, சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு செங்கற்சூளைகளில் செங்கல் அறுக்கின்ற வேலைக்குச் சென்று விடுகிறார்கள். கிராமங்களில் ஒருசில குடும்பங்களே வாழ்வதால், மிகவும் பாதுகாப்பற்ற சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

விழுப்புரம் அருகே உள்ள போரூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இருளரான 40 வயதாகும் முருகன் என்பவர், தன் மனைவி பொன்னி, மகன்கள் மணிகண்டன் (12), மணிவேல் (7), சக்திவேல் (3), சூர்யா (2) மற்றும் 9 மாத கைக்குழந்தையுடன் திருச்சி அருகே அன்பில் கிராமத்திலுள்ள காவேரி செங்கற் சூளையில் குடும்பத்தோடு போய் தங்கியிருந்து செங்கல் அறுத்து வந்தானர். முருகன், அவர் மனைவி, அவருடைய 12 வயது மகன் ­ருவரும் சேர்ந்து ஒன்றரை ஜதை. இரண்டு பேர் சேர்ந்த 1 ஜதை, ஒரு நாளைக்கு ஆயிரம் செங்கல் அறுக்க வேண்டும். முருகன் தன்னுடைய உறவினர்களில் இருந்து 10 ஜதைகளுக்கு முன் பணம் வாங்கிக் கொடுத்து அவர்கள் எல்லாம் சேர்ந்து, கடந்த நவம்பர் மாதம் முதல் அந்த செங்கற்சூளையில் வேலை செய்து வந்தார்கள். இந்த இருளர்கள் இல்லாமல் வேறு 10 ஜதைகளும் அங்கே வேலை செய்து வந்தனர்.

இவர்களுடைய மேஸ்திரி சிவக்குமார் என்பவர், சென்னைக்கு அருகில் வேறுசில செங்கற்சூளைக்கும் மேஸ்திரியாக இருப்பதால், இங்கு எப்போதாவது ஒருமுறைதான் வருவார். இவருடைய மகன் முருகன் என்பவர்தான் இந்த செங்கற் சூளைக்கு வந்து, இவர்களை அவ்வப்போது மேற்பார்வை செய்வார். இவர் இல்லாத நேரத்தில் அதே சூளையில் செங்கல் அறுத்துவரும் கோவிந்தன், சங்கர், கண்ணன் ஆகியோர் மேற்கண்ட இருளர்கள் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து சென்று கண்காணித்து மிரட்டுவார்கள். இவர்கள் ­ருவரும் கவுண்டர் சாதியை சேர்ந்தவர்கள்.

இவர்களை ஊரில் இருந்து அழைத்து வரும்போது, 1000 செங்கல்லுக்கு 200 ரூபாய் சம்பளம் என்று கூறி, இங்கு வந்து 180 ரூபாய் மட்டுமே தந்துள்ளார்கள். அதுவும் தினமும் அறுக்கின்ற 1000 செங்கற்களுக்கு 950 மட்டுமே அறுத்ததாக கணக்கு வைத்துக் கொண்டுள்ளார்கள். மீதி 50 செங்கல்லை அந்த மேஸ்திரிகள் ­ருவரும் தங்கள் கணக்கில் வைத்துக் கொண்டனர். இவர்கள் தினம் அறுக்கின்ற செங்கலை கணக்குக் காட்டுவதில்லை. ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை மாலை சம்பளம் தருவார்கள். அப்போது மேஸ்திரியின் கையாளாக இருக்கின்ற அந்த மூவரும் தருகின்ற சம்பளம்தான் இவர்களுக்கு.

Murugan with his family சம்பளம் வாங்குகின்ற இந்த செவ்வாய் கிழமை மட்டும்தான் இவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியில் சென்று சமையலுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவைகளை வாங்கி வரமுடியும். அப்போதும் அந்த மூவரும் இவர்களைப் பின் தொடர்ந்து செல்வார்கள். அதுவும் சரியாக 2 மணி நேரம் மட்டுமே. உடனே சூளைக்குத் திரும்ப வேண்டும். மற்ற நாட்களில் என்ன தேவை என்றாலும் இவர்களால் செங்கல் சூளையைவிட்டு வெளியே செல்ல முடியாது. மீண்டும் அடுத்த செவ்வாய் கிழமைதான். இப்படித்தான் பெரும்பாலான இருளர்களின் வாழ்க்கை செங்கல் சூளையில் வேகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் ராஜேந்திரன் (ஒன்றரை ஜதை), ஏப்ரல் மாதம் குமார் (இரண்டரை ஜதை) ஆகிய இருவரும் உடல் நிலை சரியில்லாத தங்கள் மனைவிகளை கவனிக்க செங்கல் சூளையைவிட்டுச் சென்றுவிட்டார்கள். செங்கல் சூளைக்கு வந்த மேஸ்திரி சிவக்குமார் முருகனை அழைத்து, ஓடிப்போன ஜதைக்கெல்லாம் நீதான் பொறுப்பு என்று கடுமையாக மிரட்டியுள்ளார். அதற்கு பயந்து, ஒரு வாரத்திற்குள் எல்லோரையும் கூட்டி வருகிறேன் என்று முருகன் கூறியுள்ளார். இதற்கு அடுத்து வந்த செவ்வாய் கிழமை (21.6.2005) மாலை அந்த வார சம்பளம் கொடுக்கப்பட்டது. முருகனின் அண்ணி ரஞ்சிதம் குடும்பத்தினர் (இரண்டு ஜதை) ஆரம்பத்தில் முன்பணம் வாங்கிக் கொண்டு வராமலிருக்கின்ற மணியை அழைத்து வருவதாக கூறிச் சென்றனர். இதனையறிந்த கோவிந்தன், சங்கர், கண்ணன் மூவரும் முருகனை அன்பில் கிராமத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி, கட்டாயப்படுத்தி பிராந்தி குடிக்க வைத்துள்ளனர்.

அவர்களும் குடித்துவிட்டு, “ஏற்கனவே 4 ஜதை போயிடுச்சி; இப்போ உன் அண்ணியும் இரண்டு ஜதையோடு போயிட்டா. எல்லாம் நீதான் திட்டமிட்டு வேறு சேம்பர்ல அனுப்பிட்ட. எங்க இருக்காங்க சொல்லு'' என்று அடித்துள்ளனர். செங்கல் சூளைக்கு இழுத்து வந்தும் அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இதனை தடுத்த முருகனின் மனைவி பொன்னியையும் மேற்படி மூவரும் அடித்துள்ளனர். இதைத் தடுத்த அவர் மனைவி பொன்னியின் சேலையை கண்ணன் உருவியுள்ளார். கத்திய பொன்னியை "ஏண்டி கத்துற' எனக் கூறிக் கொண்டே கோவிந்தன் பெரிய தடியால் அடித்ததில் பொன்னி மயக்கமடைந்திருக்கிறார்.

அதன் பிறகு, மூவரும் மீண்டும் குடித்துவிட்டு கண்ணன், கோவிந்தன் இருவரும் சூளையில் இருந்த நெருப்பில் நன்றாகப் பழுத்திருந்த கம்பியுடன் முருகனை அடைத்து வைத்திருந்த கொட்டகைக்குள் நுழைந்து, முதலில் கோவிந்தன், “ஜதைகளை எந்த சேம்பரில் விட்டுவச்சிருக்க சொல்லுடா'' என்று கூறிக் கொண்டு முருகனின் வலது முழங்களில் நான்கு இடங்களில் சூடு வைத்தார். வலிதாங்க முடியாமல் முருகன் அலறியுள்ளார். அதன்பிறகு கண்ணன், “இப்போதாவது உண்மையைச் சொல்லு'' என்று கூறிக் கொண்டே முருகனின் இடது தொடையில் சூடுவைத்து, முருகனையும் அவரது பிள்ளைகளையும் அதே கொட்டகையில் வைத்துப் பூட்டி உள்ளார். அன்று இரவு 3 மணியளவில் முருகன், மனைவி, பிள்ளைகளுடன் அங்கிருந்து தப்பித்துச் செல்லும்போது மீண்டும் பிடித்துக் கொண்டு வந்துள்ளார்கள். அதன்பிறகு முருகனின் மகன்களான மணிகண்டனை கண்ணனும், மணிவேலை கோவிந்தனும் தங்கள் வீடுகளில் பிடித்து வைத்துக் கொண்டனர்.

இதற்குப் பிறகு, தாங்களாவது உயிரோடு தப்பித்தால் போதும் என வேறு வழியில்லாமல், மறுநாள் 22.6.2005 அன்று முருகன், பொன்னி, மூன்று சின்னக் குழந்தைகளுடன் தப்பித்து, படுகை என்கிற கிராமத்தில் அன்பழகன் வீட்டில் தங்கியுள்ளனர். அவரிடம் தங்களுடைய இரு மகன்களையும் மீட்டுத் தரும்படி கேட்டுள்ளனர். அவரும் விரைவில் மீட்டுத் தருவதாகக் கூறியதை அடுத்து, அங்கேயே தங்கி முருகனின் சூடுபட்ட காயம் கொஞ்சம் ஆறும் வரையிலும், தங்களுடைய மகன்கள் கிடைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனும், பொன்னி அவர் வீட்டில் விவசாய வேலைகள் செய்து வந்தார்.

அதன்பிறகு, விசாரித்ததில் அவர்களுடைய மகன்கள் செங்கல் சூளையில் இல்லை என்பதை அறிந்து, "பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க' ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் பா. கல்யாணியை திண்டிவனத்தில் சந்தித்து நடந்ததை கூறியுள்ளனர். அதன் பிறகு பேராசிரியர் பா. கல்யாணி முன்முயற்சியில், திருச்சி வழக்குரைஞர் அலெக்ஸ் உதவியுடன், திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நேரில் புகார் தரப்பட்டு, குழந்தைகள் இருவரும் மீட்கப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாகவும், சூடுபோடப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும், தன் மனைவி மானபங்கப்படுத்தப்பட்டும், இரு மகன்களின் நிலை என்ன எனத் தெரியாமல் அவர்களைப் பிரிந்தும் ஒரு மாதமாக இந்த இருளர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு இவர்களின் அறியாமை மட்டுமா காரணம்? இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கின்ற இன்றும் (26.7.2005) விழுப்புரம் மாவட்டம் பாப்பனப்பட்டு கிராமம் மாரி என்கிற இருளர், தன் மனைவி, உறவினர்களுடன் செங்கல் சூளையில் பாதிக்கப்பட்டது தொடர்பாக, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தை அணுகியுள்ளார்.

இதுகுறித்து பேராசிரியர் பா. கல்யாணியிடம் கேட்டபோது, "நாங்கள் சங்கம் தொடங்கிய முதல் மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்தே எங்களுக்கு மொத்தம் 17 புகார்கள்தான் வந்தன. ஆனால், 2004 ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 19 புகார்கள் வந்தன. தற்பொழுது 2005 ஆம் ஆண்டு சூலை மாதம் வரை, மொத்தம் 21 புகார்கள் வந்துள்ளன. இதில் 8 வழக்குகள் செங்கற்சூளையில் இருளர்கள் சித்திரவதை செய்யப்பட்ட வழக்குகளாக உள்ளன. சங்கம் தொடங்கிய 10 ஆண்டுகளில், இதுவரை ஒன்று, இரண்டு என வந்தது செங்கற்சூளை வழக்கு; மற்றவை எல்லாம் சாதி இந்துக்களாலும், காவல் துறையினராலும் பாதிக்கப்பட்ட வழக்காகவே இருந்தது'' என்று கூறினார்.

மேலும், "பழங்குடி இருளர்கள் மீது சாதி இந்துக்களின் தாக்குதல்கள், பொய் வழக்குகள், பாலியல் வன்முறைகள், கொலைகள், உழைப்புச் சுரண்டல், அடிப்படை உரிமைகளை மறுத்தல் போன்ற கொடுமைகள் தொடர்கின்றன. இந்த இனத்தின் எழுத்தறிவு வெறும் 12 சதவிகிதம் மட்டும்தான். இவர்களில் ஏறக்குறைய 80 சதவிகிதத்தினர் பழங்குடி சான்று பெறமுடியாமல் உள்ளனர். இதன் காரணமாக, இவர்களின் வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்டு, சலுகைகள் எதுவும் பெறமுடியாமல் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர், அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையினால் எவ்வித நன்மையையும் பெறவில்லை. இவர்கள் கல்வியில் மேம்படவும், பொருளாதார முன்னேற்றம் பெறவும் நிலமே ஆதாரம். இவர்களில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே நிலம் வைத்துள்ளனர். விதி விலக்காக, விழுப்புரம் மாவட்டம் கஸ்பா காரணை மற்றும் வீரமடைப் பகுதியில் வசிக்கும் 50 குடும்பங்களில் சிலர், கடந்த 50 ஆண்டுகளாக சிறிதளவு நிலம் வைத்திருந்த காரணத்தால் அங்கிருந்து 26 பேர் படித்து மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு நில உரிமை அடிப்படை என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால், பெரும்பான்மையோருக்கு இவ்வுரிமை மறுக்கப்பட்டுள்ளது. நில உச்சவரம்புச் சட்டம், பூமிதான இயக்கம் மூலம் பழங்குடிகள் குறிப்பாக இருளர்கள் எவ்விதப் பலனும் அடையவில்லை'' என்று கூறிமுடித்தார்.

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் 27.7.2005 அன்று, கடலூர் வட்டம் தொட்டித் தோப்பு கிராமத்தில் பழங்குடி இருளர்களின் நிலவுரிமை மற்றும் கோரிக்கை கருத்தரங்கம் நடைபெற்றது. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, மீண்டும் "பஞ்சமி நில மீட்பு' கோரிக்கை வலுவடைந்து வருகின்ற இந்த நேரத்தில், நாடோடிகளாகவும், அடிமைகளாகவும் வாழ்ந்து வருகின்ற இருளர் என்கிற பழங்குடி இனத்தைக் காப்பாற்ற அவர்களுக்கான நிலவுரிமை குறித்தும் பேசப்பட வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com