சமரசமற்ற ஒரு போராளியின் கதை
எஸ்.வி.வி
வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த அந்த தலித் பெண் தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். கேள்விப்பட்ட மாத்திரத்தில் அங்கே போய் நின்றார் ஒரு வழக்கறிஞர். ‘உன்னைக் கொடுமைப்படுத்திய உனது எஜமானர்களை சும்மா விடமாட்டேன்' என்றதோடு அவர் விடவில்லை. அவளது சிகிச்சை, உணவு, ஹார்லிக்ஸ் முதற்கொண்டு தமது பொறுப்பாக எடுத்துக் கொண்டார்.
சித்திரவதையில் சம்பந்தப்பட்டவர்களோ அவருக்கு வேண்டியவர்கள். யார், யார் மூலமோ சொல்லிப் பார்த்தார்கள். ஒரு கிரவுண்ட் நிலம் 5,000/- ரூபாய் விற்ற அந்த சிறு நகரத்தில் ரூ. 50,000/- தருவதாகச் சொன்னார்கள். பிறகு மிரட்டல். அசரவில்லை அந்த மனிதர். பணம், மிரட்டல் எதனாலும் விலைக்கு வாங்கிவிட முடியாத தமது துவக்க காலக் கொள்கை மிடுக்கைக் கடைசி வரை கைவிடாது போராடிய அந்த மனிதர், தோழர் பி.வி. பக்தவச்சலம், செப்டம்பர் 2 அன்று மறைந்துவிட்டார்.
செப்டம்பர் 23 அன்று சென்னை கேரள சமாஜத்தில் நடந்த அஞ்சலிக் கூட்ட மேடையில் வெவ்வேறு கருத்து, கொள்கை, அணுகுமுறை கொண்டோரின் அரிய சங்கமம், பி.வி.பி. அவர்களது ஆளுமையை உணர்த்துவதாக இருந்தது. ‘நக்சலைட் வக்கீல்' என்றுதான் திருப்பத்தூரில் (வடாற்காடு மாவட்டம்) அவர் அடையாளம் காட்டப்பட்டிருந்தார். அவரது ‘விசிட்டிங் கார்டை' எடுத்துப் போய்க்காட்டி, அடக்கு முறைகளிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்டவர்கள் அனேகம் பேர் .
அவரது இறுதி ஊர்வலத்தில் ஒரு பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்தப் பள்ளிக்கூடம் ஏதோ வரி பாக்கி வைத்திருந்ததற்காக ‘ஜப்தி' செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, ஆசிரியர்கள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யவும் உத்தரவு இருந்ததாம். பி.வி.பி., ஒரு பதில் ‘நோட்டீஸ்' அனுப்பி உதவினார் - அவ்வளவுதான், ஒரு பள்ளியின் கௌரவம் காப்பாற்றப்பட்டதன் நெகிழ்ச்சிக் கண்ணீரை அவர்கள் விசும்புதலில் புரிந்து கொள்ள முடிந்தது என்கிறார்அவரது இளைய சகோதரர் மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன்.
ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக ஓயாது குரல் கொடுப்பவர்களை அதிகார வர்க்கம் சும்மா விடுமா? ஒன்று மாற்றி ஒன்று வழக்கு ஜோடிப்பதும், தாக்குவதும், கொலை முயற்சிக்கு இறங்குவதும் உள்பட எல்லாவற்றையும் எதிர்கொண்ட பி.வி.பி., எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்த காலங்கள் அவை. அவர் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலைக் கண்டித்து உணர்ச்சி மேலிட ஒரு ஊர்வலத்திற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. ஆனால் பி.வி.பி. இதில் தெளிவாக இருந்தார். அந்த நிகழ்ச்சியிலும் காவல்துறை ஆத்திரமூட்டலில் இறங்கி, வன்முறையைத் தூண்டும், பலி வாங்கும், பழியைத் திருப்பும் என்று எச்சரிக்கை கொண்டார். எனவே, கடுமையாக முன்னெச்சரிக்கை உத்தரவுகளை ஊர்வல பங்கேற்பாளர்களுக்கு அறிவிக்கச் செய்தார்.
கல்லெறி, துப்பாக்கிச் சூடு என்ன நடந்தாலும் யாரும் கலையக் கூடாது - உட்காரவோ, நிக்கவோ கூடாது, அப்படியே படுத்துரணும், பயம் இருக்கிறவங்க வரவேண்டாம்... என்பது உள்பட சொல்லி நடந்த ஊர்வலம். வழிநெடுக பாதுகாப்புக்கு இருபக்கமும் தோழர்கள், ஏராளம் பார்வையாளர்கள் என்பதால் அதிகார வர்க்கத்தால் எந்த வன்முறையையும் தூண்ட முடியவில்லை.
ஆனால் இந்த மீசைக்காரர் சாதாரண மக்களிடம் வாஞ்சையும், பாசமும் பொங்கப் பழகியவர். நாட்கணக்கில் வழக்கு நடக்கும் தருணங்களில், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களாகவே தங்கி சாப்பிட்டுப் போகும் அன்னசாலையாக இருந்திருக்கிறது அவரது இல்லம். நிச்சயமற்ற வாழ்க்கையின் விளிம்பில் உற்ற தோழராக மனைவி சுனந்தா கைப்பிடித்து நடந்திருக்கிறார் என்பது அவரது கம்பீரத்தின் இன்னொரு சாட்சியம்.
அதிகார எதிர்ப்பு (Anti-Establishment) நிலையில் கடைசிவரை உறுதியோடு இருந்த அவரது பெயர், சதாம் உசைன் சார்பில் வழக்காட உலக அளவில் தயாரிக்கப்பட்ட வழக்கறிஞர் பட்டியலில் இருந்ததில் வியப்பேதுமில்லை என்கிறார் வெங்கட்ராமன்.
பி.வி.பக்தவச்சலம் - வாழ்வும், பணியும் என்ற சிறுநூல் 23.09.07 அஞ்சலி கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினராக இருந்ததிலிருந்து, பின்னர் மார்க்சீய - லெனினிஸ்டு கொள்கையால் ஈர்க்கப்பட்டவராக - ஆனால், தனிநபர் அழிப்புக் கொள்கையை நிராகரித்தவராக, பிறகு மக்கள் உரிமைக் கழகம் ஸ்தாபித்து அதன் தலைவராக... என அவரது ஓயாத பணிகளின் குறும்பதிவாக - நெடிய வரலாற்றுக் குறிப்புகளுக்கான தாகத்தைத் தூண்டுவதாக வந்துள்ள அந்த நூல் (செம்பண்ணை பதிப்பகம், 35, லேக் ஏரியா, முதல் பிரதான சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 034. விலை : ரூ.5/-) சமரசமற்ற போராளியின் எளிய வாழ்க்கையை தரிசிக்க வைக்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|