இது ஒரு விளையாட்டுப் படமல்ல
பாலன்
மிர் ரஞ்சன் நேகி - இந்திய அணியின் நட்சத்திரக் கோல்கீப்பராகத் திகழ்ந்தவர். 1982 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதியபோது. இந்தியா 1:7 என்ற கோல் கணக்கில் தோற்றது. கோல்கீப்பர் "நோகி" தான் காரணம் என்று பழி சுமத்தப்பட்டது. விளையாட்டுத் துறையினரும், பொதுமக்களும் கடுமையாகச் சாடினார். துரோகி என்று தூற்றப்பட்டார். குடியிருந்த வீட்டில் தொடர முடியவில்லை. பல வகைகளிலும் ஒதுக்கப்பட்டார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இருக்குமிடம் தெரியாமல் இருந்து விட்டு, தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வெளி உலகில் தலை காட்டினார். பெண்கள் ஹாக்கி அணிக்கு - கடும் முயற்சிக்குப் பின் - பயிற்சியாளர் பொறுப்பேற்றார். 2002 ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் (மான்செஸ்டர்) இந்திய ஹாக்கி தங்கம் வெல்ல முக்கிய காரணமானார்.
இந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் "சக்தே இண்டியா" (விழித்தெழு இந்தியா). நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் ஹாக்கி பற்றி செய்தியொன்றை படித்த `ஜெயதீப் சஹானி' அதிலிருந்து ஹாக்கி மீது தொடர்ந்து கவனம் செலுத்தி உருவாக்கிய திரைக்கதை இது. உகாண்டாவில் பிறந்த `ஷிமித் அமின்' இயக்கிய இரண்டாவது இந்திப் படம் இது. ‘தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' உட்பட பல படங்களைத் தயாரித்த யாஷ் ராஜ் பிலிம்ஸ் தந்துள்ள படங்களில் குறைந்த பட்ஜெட் படம் இது.
`பெனல்டி ஸ்ட்ரோக்' அடிக்கும் போது குறி தவறியதால் - இறுதி ஆட்டத்தில் இந்தியா தோற்கக் காரணமாகும் கபீர் கான் (ஷாருக்கான்) கத்தார் (துரோகி) என்று முத்திரை குத்தப்பட்டு, வெறுக்கப்படுகிறார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தன்னுடைய நாட்டுப்பற்றையும் மன உறுதியையும், துணையாகக் கொண்டு பெண்கள் ஹாக்கி அணிக்குப பயிற்சியாளராகி, பயிற்சியாளர் (Coach) என்பவர் ஒரு ஆசிரியர், வழிகாட்டி, முன்மாதிரி, கிரியா ஊக்கி என்பதை நிலைநாட்டுகிறார். வீராங்கனைகள் மத்தியில் அர்ப்பணிப்பு உணர்வை ஏற்படுத்துவது ஒற்றுமையை உருவாக்குவது, சாதிக்க வைப்பது - தனிப்பட்டவரின் திறமையை அணியின் வல்லமைக்குக் கொண்டு செலுத்துவது என்று அவரது செயல்பாடுகள் அனைத்தும் ரசிக்கும்படியாகவும், பாராட்டும் படியாகவும் காட்சி ரூபமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
திரைத்துறைக்கு இதுவரை எந்தவித சம்பந்தமும் இல்லாத, முற்றிலும் புதுமுகங்களான 16 பெண்கள், அணி உறுப்பினர்களாக நடித்துள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுமார் 800 பெண்களை நேர்முகத் தேர்வில் மிகுந்த கவனத்தோடும் அக்கறையோடும் அணுகியதின் விளைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பதினாறு பெண்களும், இயல்பாகவும், அற்புதமாகவும் வெளிப்பட்டுள்ளனர். இன்றைய காலகட்டத்தின் ஹாக்கி நட்சத்திரம் தனராஜ் பிள்ளை உட்பட பலர் இவர்களுக்கு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் பயிற்சியளித்துள்ளனர். இவர்கள் 16 பேரும் ‘கிளாம'ருக்காகச் சேர்க்கப்படவில்லை. உண்மையான ஒரு ஹாக்கி அணியை நம் கண்முன்னே நிறுத்துவதற்காகவே இணைக்கப்பட்டுள்ளனர்.
வலுவும் முன்கோபமும் கொண்ட பஞ்சாபி, ஹிந்தியோ, ஆங்கிலமோ தெரியாத பீஹாரி, எல்லாவற்றையும் புதுமையாகக் காணும் மணிப்பூரி, அலட்சியமும் அழகும் கலந்த மும்பயி, துறுதுறுப்புள்ள டேராடூன் சின்னப்பெண் என்று அனைவரும் முறையாகப் பங்களிப்பு செய்துள்ளனர். மேல்நிலைப் பள்ளியிலோ, கல்லூரியிலோ படிக்கின்ற இந்த குழந்தைகள் அனைவரும் தங்களுடைய வளர் இளம் பருவத் (Adolescence) தன்மையை இயல்பாக முன்வைத்துள்ளனர்.
சீனியர் உறுப்பினர்களின் ஈகோ, ஜூனியர் உறுப்பினர்கள் தயக்கம், அணியினரின் பிராந்திய உணர்வு, உட்தகராறு, முன்முடிவு, கலாச்சார வேறுபாடு என்று பல உணர்வுகளும், மிகுந்த சுவையோடு சித்தரிக்கப்பட்டுள்ளன. அவர்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும் ஈடுபாடு மனதை ஒன்றச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அணியில் வாட்டசாட்டமான கலவையில் அதே சமயத்தில் நளினமாக இருக்கின்ற ஏதோ ஒரு பெண்ணோடு (அல்லது அந்தப் பெண்ணின் கனவில்) ஷாருக்கான், ஆஸ்திரேலியாவின் அகண்ட வீதிகளிலோ, ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகளிலோ, பிலிப்பைன்ஸின் நீர்வீழ்ச்சிகளுக்குக் கீழோ, பிரான்ஸின் நினைவுச் சின்னங்களுக்கு மேலோ டூயட் பாடி ஆடுவார் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்தான்.
பாடல்கள் உண்டு: ஆனால் கதை மாந்தர்கள் பாடுவதாக அல்லாமல் ‘பேக் டிராக்' என்று சொல்லக்கூடிய பின்னணியில் ஒலிக்கின்றன. நகைச்சுவை உண்டு. ஆனால் அபத்தக் காமெடியாக அல்ல. கோப தாபங்கள் உண்டு. ஆனால் வன்மமும் வக்கிரமும் கிடையாது.
பயிற்சி முகாமில் பதிவு செய்யும் பொழுதான அறிமுக அளவலாவல்கள் சுவாரசியமிக்கவை. இந்திய ஆண்கள் அணி, பயிற்சி ஆட்டத்தில் பெண்கள் அணியை 3:2 கோல்கள் விகிதத்தில் தோற்கடித்தாலும், பெண்கள் அணியின் திறமை பாராட்டும் விதமாகத் தங்களுடைய மட்டைகளை கிடைக்கோடாக (Horiwontal) உயர்த்துவதும், பெண்கள் அணியினர் தயங்கித் தயங்கி தங்கள் ஸ்டிக்குகளை அதேபோல் உயர்த்தி, பாராட்டுகளை ஏற்றுக் கொள்வதும் அருமையான காட்சி.
1988ல் பாங்காக்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தென் கொரியாவை இந்தியா ‘டை-பிரேக்'கரில் தோற்கடித்தது. அந்த ஆட்டத்தை "மறு உருவாக்கம்" செய்தது போல அமைந்துள்ள இறுதி விளையாட்டு இனிமை தருகிறது.
சுவரில் எழுதப்பட்ட அவதூறான வாக்கியத்தை சிறுவன் அழிப்பது எதிர்பார்க்கப்பட்டதுதான் எனினும் இதமளிக்கிறது.
‘ஓட்டல்' காட்சியொன்றில் அணிப்பெண்களிடம் இளைஞர்கள் சிலர் மோசமாக நடந்து கொள்கின்றனர். ஷாருக்கான் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் போய் அவர்களை அடித்து நொறுக்காமல் அமைதியாய் இருக்கிறார். அணிப்பெண்கள் ஒன்றிணைந்து அவர்களை துவைத்தெடுக்கிறார்கள். ‘ஹிரோயிஸ'த்தைக் காட்டாமல் `ஒற்றுமை' யைக் காட்டுவது வரவேற்புக்குரியது.
ஒரு சில காட்சிகளைத் தவிர மற்றவற்றை ‘ஹிந்தி' தெரியாதவர்களும் நன்கு புரிந்து ரசிக்கலாம்.
Women’s Empowerment எனப்படும் பெண்களின் ஆற்றல் மேம்பாடுகளை எடுத்துக்காட்டும் தரமான ரசிக்கத் தகுந்த படம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|