திரைப்பாடலில் சீரழிக்கப்பட்ட தில்லையாடி வள்ளியம்மை!
கவிஞர் ஜெயபாஸ்கரன்
மொழ மொழன்னு.... யம்மா
மொழ மொழன்னு
தில்லையாடி வள்ளியம்மா
தில்லிருந்தா நில்லடியம்மா
தில்லாலங்கடி ஆடுவமா
திருட்டுத்தனம் பண்ணுவமா
இப்படித்தான் ஆரம்பிக்கிறது அந்தப் பாடல். மகாத்மா காந்தியடிகளுக்கே விடுதலைப் போராட்ட உணர்வைத் தூண்டிய, தனது 16ஆம் வயதிலேயே வெள்ளையர்களின் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்ட, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் தொடக்கமாகக் கருதத்தக்க, வெள்ளையர்களின் சிறைக் கொட்டடிகள் தந்த கொடிய நோய்களால் தனது பதினெட்டாம் வயதுக்குள்ளேயே இறந்து போன, உயிர் மட்டும் இருந்தால் இந்திய விடுதலைப் போருக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் சாகத் தயாராக இருக்கிறேன் என்று சாவதற்கு முன் மகாத்மா காந்தியிடம் உறுதியுடன் சொன்ன, விடுதலைப் போராட்ட உணர்வையே தனது வேட்கையாகவும் லட்சியமாகவும் கொண்ட வீரத் தமிழ்ப்பெண் தில்லையாடி வள்ளியம்மைக்கு நமது கோடம்பாக்கக் கவிஞர் ஒருவர் தந்திருக்கும் பரிசுதான் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அந்தப் பாடல் வரிகள்.
இந்தப் பாடலுக்கு நாடெங்கும் எதிர்ப்பு எழுந்ததன் விளைவாக, (இழிவான முறையில் எழுதப்பட்ட) அந்த வரிகளை பாடலில் இருந்து நீக்கி விடுவதாகவும் அந்தப் பாடல் வரிகள் சிலருக்கு வலி ஏற்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அறிக்கை விட்டிருக்கிறார் அந்தப் பாடலாசிரியர். அவரே இப்படிச் சொல்லியிருப்பதால் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட்டு விட்டதைப் போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது.
இந்த வரிகள் சிலருக்கு வலி ஏற்படுத்தியிருந்தால் என்று சொல்வதன் வாயிலாக இது யாரோ ஒரு சிலரால் ஏற்படுத்தப்படுகிற பிரச்சனை என நிரூபிக்க நினைக்கிறார்கள். ஆயினும் இந்த அவலப்படைப்பு ஏற்படுத்தியிருக்கும் ரணம், பல்வேறு கேள்விகளை நம்முள் எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. ஒரு திரைப்பாடலின் தாளக்கட்டுக்காக யாருடைய பெயரையும் எப்படியும் பயன்படுத்தலாம் என்கிற உரிமையை இது போன்ற பாடலாசிரியர்களுக்கு யார் கொடுத்தது?
சில நேரங்களில் பாடல் மெட்டினைக் கேட்கும் போது சந்தச் சேர்க்கைக்காக சில வரிகள் பொருந்திக் கொள்ளும். அவ்வகையில் அந்தப் பாடலில் இந்த வரிகள் அமைந்து விட்டது என்கிற விளக்கம் ஒரு படைப்பாளி சொல்லக்கூடாத வெட்கக்கேடான விளக்கமல்லவா?
உங்கள் தாளக்கட்டுக்கும், சந்தச் சேர்க்கைக்கும் முன்னால் தில்லையாடி வள்ளியம்மையின் தியாக வாழ்க்கை பொருட்படுத்தக் கூடாத ஒன்று என்றாகி விட்டதா?
இப்படியாகச் சில இழிவான வரிகளை எழுத நினைக்கும் போதே இது இழிவான செயல், நமக்காகவே வாழ்ந்து மடிந்தவர்களுக்கு நாம் செய்யும் பச்சைத் துரோகம், என்றெல்லாம் இவர்களுக்கு யோசிக்கவே தோன்றாதா?
பாடலாசிரியருக்குத் தாளக்கட்டும் சொற்சேர்க்கையும் மட்டுமே முக்கியமாக இருப்பதால் நாமாவது இந்த அவலத்தைச் சுட்டிக்காட்டித் திருத்துவோம் என்று சம்பந்தப்பட்ட இசையமைப்பாளரோ, இயக்குநரோ, தயாரிப்பாளரோ அல்லது இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்த கோடம்பாக்கம் சார்பு அறிஞர்களோ நினைக்க மாட்டார்களா?
தில்லையாடி வள்ளியம்மையைப் பற்றி பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் சொல்லித் தருவதற்கும் அவரைப் பற்றி திரைப்படத்தில் பாட்டுப் பாடுவதற்கும் உள்ள மாபெரும் வேறுபாட்டை நினைத்துத் தற்காலப் பள்ளிப் பிள்ளைகள் குழம்பிப் போவார்களே என்பதைக் குறித்து இந்த மேதாவிகளுக்கு எந்தக் கவலையும் இல்லையா?
தேசிய விருது உள்பட இவர்கள் பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கிற பல்வேறுவகையான விருதுகள் இவர்களை இவ்வாறெல்லாம் கட்டவிழ்த்துவிட்டிருப்பதாகப் புரிந்துகொள்ளலாமா?
நாகரிகமானதொரு திரைப்படத்தில், நல்லதொரு சூழ்நிலையில், உரிய பாத்திரங்களின் வாயிலாக, இனிய இசையின் மீது பாடல் வரிகளால் சவாரி செய்யும்போது மட்டுமே (சுருங்கச் சொன்னால் ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகவே) இதுபோன்ற பாடலாசிரியர்களுக்கு தேசிய விருது தரப்படுகிறது என்பதை இப்போது நாம் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?
தேசிய விருது பெற்ற ஒருவர், தேச விடுதலைக்குப் போராடி உயிர்நீத்த ஒரு மாபெரும் பெண் போராளியை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இழிவுபடுத்தியதை முன்வைத்து அரசு அந்த விருதைத் திரும்பப் பெற முனைவதில் என்ன தவறு இருக்க முடியும்?
அப்படிச் செய்யும் பட்சத்தில் விருது வாங்கிக் கொண்டு சோரம் போகிற, அல்லது விருதுக்குத் துரோகம் செய்து பிழைக்கிற சில படைப்பாளிகளின் போக்கில் சிறு அளவிலேனும் மாறுதல் ஏற்படும் அல்லவா?
தேசிய விருது போன்ற உயரிய விருதுகளைப் பெற்ற பிறகாவது அந்த விருதுகளுக்குரிய மரியாதையோடு சம்பந்தப்பட்ட படைப்பாளிகள் வாழ வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கலாம் தானே?
தாளக்கட்டையும், சந்தச் சேர்க்கையையும் தவிர வேறு எந்த அடிப்படையும் தெரியாத சில படைப்பாளிகள் தேசிய விருதையும் பெற்று விடுவது நமது கலைத்துறையின் வலிமை என்று சொல்ல முடியுமா?
ஒரு படைப்பாளி பிறரைத் திருத்துகிற இடத்தில் இருக்க வேண்டுமே தவிர பிறரால் திருத்தப்படுகிற கூண்டில் நிற்கக்கூடாது என்கிற ஒரு சாதாரண உண்மையைக்கூட இதுபோன்ற படைப்பாளிகள் உணராமல் இருப்பது வேதனைக்குரிய ஒன்றல்லவா?
தில்லையாடி வள்ளியம்மையைப் போன்றவர்களின் தியாகத்தையெல்லாம் பாடல் வரிகளில் எழுதி அதை இந்த நாட்டு மக்களிடையே பரவச் செய்கிற பணியை இவர்களால் செய்ய முடியாமல் போகட்டும். ஆபாசத்தில் குழைத்து அவர்களை கேவலப்படுத்துகிற இழிவைச் செய்யாமல் இருக்க இவர்களால் முடியாதா?
கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துக் கொண்டேயிருக்கின்றன. இதுபோன்ற பண்பாட்டு இழிவுகளுக்கு உரிய தீர்வு கிட்டும்வரை இதற்கான கேள்விகளும் இருந்து கொண்டேயிருக்கும்.
கோடிக்கணக்கான வெகுமக்கள் தங்களது குழந்தைகளோடும், உறவுகளோடும் கேட்கிற, பார்க்கிற நமது தமிழின் காட்சி ஊடகங்கள், மிகவும் குறிப்பாகத் தமிழ்த்திரை ஊடகம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதற்கும், அந்த ஊடகத்தினர் சமூக நலன்கருதி தங்களுக்குள்ளும் ஒருகட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கும் நமது காட்சி ஊடகத்துறையின் படைப்புகளில் பொறுப்பற்ற வகையில் மிகவும் இழிவாக நாகரிக மீறல்கள் மேலோங்கி வருகிறது என்பதற்கும், தில்லாலங்கடி ஆடி திருட்டுத்தனம் பண்ண தில்லையாடி வள்ளியம்மையை அழைத்த இந்த நிகழ்வும் ஒரு சான்றாகும். (இந்தக் குற்றச்சாட்டு தமிழ்த் திரை உலகின் வெகு சில படைப்பாளிகளுக்குப் பொருந்தாது என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம்).
உண்மையான எழுத்து என்பது எழுதுகிறவனையும் மேம்படுத்தும், அதைப் படிக்கிறவனையும் மேம்படுத்தும் என்பதே இலக்கியக் கோட்பாடு. இவர்களைப் போன்ற இலக்கியவாதிகள் தாங்கள் மேம்படாமல் போகட்டும். பிறரை மேம்படுத்தாமலும் போகட்டும். சமூகத்தைப் பாழ்படுத்தாமல் இருந்தால் போதும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
நன்றி : அமுதசுரபி, மே - 2008
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|