Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
மார்ச்-ஏப்ரல் 2006
பொய் வழக்குகள்

வழக்கறிஞர். அ.அருள்மொழி

பொய் – 1

இது நடந்து ஒரு பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டது. ஆனாலும் இன்னும் பசுமையாக எனக்கு நினைவிருக்கிறது. குடும்பப் பிரச்சனைதான்; கணவனுக்கும் மனைவிக்கும் ஒத்துவரவில்லை. மனைவி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துவிட்டார். கணவர் எப்படியாவது மனைவியை சமாதானம் செய்துவிடலாம் என்று நம்பினார். அதனால் மனைவி கூறிய குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தீவிரமாக பதில் தாக்கல் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டார். இவரது பிடிவாதத்தைப் பார்த்தால் எப்படியாவது வழக்கை சமாதானமாக முடித்துவிடுவார் என்று நீதிபதிக்கே தோன்றியது. கடைசியில் கணவரைத்தான் சமாதானம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டி இருந்தது. மனைவியின் பிடிவாதமே வென்றது. பிரச்சனை இறுதிக்கட்டப் பேச்சு வார்த்தையில்தான் சிக்கலாகியது. மனைவிக்கு இரண்டு லட்ச ரூபாய் வாழ்நாள் ஜீவனாம்சமாகக் கொடுக்க கணவர் ஒப்புக் கொண்டார். பேச்சு வார்த்தை முடிந்தபிறகு மனைவி கேட்டார். என் நகைகளை எப்போது திருப்பிக் கொடுப்பீர்கள்! கணவர் அதிர்ச்சியடைந்தார்.

Ladies எந்த நகைகளைக் கேட்கிறாய்? நீதான் சண்டை போட்டுக் கொண்டு போனபோதே நகைகளை எடுத்துக் கொண்டு போய்விட்டாயே; என்றார். வாதம், எதிர்வாதம், மறுப்பு, குழப்பம். கடைசியாக வெறுப்படைந்த கணவர் நகையின் மதிப்புக்காக மேலும் ஒரு இலட்சம் சேர்த்து மூன்று இலட்சம் ஜீவனாம்சமாக கொடுத்தார். மனமொத்த விவாகரத்து வழங்கப்பட்டது. வழக்கு முடிந்த பிறகு மனைவியின் வழக்கறிஞர் கூறினார். ஆனாலும் அவள் நகைகளை தன்னிடம் வைத்துக் கொண்டே இல்லை என்று அப்படி சாதித்தது. எனக்கே கஷ்டமாக இருந்தது என்று சாதித்தது, அப்போதுதான் கணவரின் வழக்கறிஞருக்கே தன் கட்சிக்காரர்மீது முழு நம்பிக்கையும் அத்துடன் இரக்கமும் ஏற்பட்டது. அந்த இரக்கத்தை சொற்களாய் வெளிப்படுத்தியபோது கணவருக்கு கண்ணீர் வந்துவிட்டது.

மேலே கூறிய நிகழ்ச்சிக்கு மாறாக மனைவியின் நகைகளை விற்றே அவருக்கு எதிராக வழக்கும் நடத்தும் கணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராகப் போராடும் மனைவிகளுக்கு எப்படியாவது உதவிசெய்ய சில சட்டப் பிரிவுகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி அந்தக் கணவர்களை ஒருவழிக்குக் கொண்டுவர முடியும். ஆனால் மேலே கூறிய திட்டமிட்டுப் பொய் பேசும் பெண்ணிடமிருந்து தப்பிக்க ஆண்களுக்கு உதவக்கூடிய சட்டங்கள் எதுவும் இல்லை.

பொய் – 2

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற திருமதி. பத்மினி ஜேசுதுரை அவர்கள் அரசுக்காக கிரிமினல் வழக்குகளை நடத்தும் பப்ளிக் பிராசிகியூட்டராகப் பணியாற்றியவர். பெண்ணுரிமை இயக்கத்தைச் சேர்ந்த டெல்லியில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் சிலர் அவரைச் சந்தித்தார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வெளிவராத பரிமாணங்களைப் பற்றி கருத்து சேகரித்த அப்பெண்கள், பலாத்கார வழக்குகளில் (கற்பழிப்பு) உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். அந்த சந்திப்பு நிகழ்ந்தபோது நீதியரசர் பத்மினி ஜேசுதுரை அவர்கள் உயர்நீதி மன்றப் பதவியில் இரந்து ஓய்வு பெற்று, பத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையின் துணைத் தலைவராக இருந்தார். அப்போது தனது அனுபவங்களில் இருந்து அவர் இரண்டு சிக்கல்களை முன்வைத்தார்.

முதலாவது பலாத்காரம் அல்லது வன்புணர்ச்சி நடைபெற்றால் உடனே அதை காவல் நிலையத்தில் புகார் செய்வதில்லை. பலவித யோசனை, அச்சம், ஆலோசனைகள் இவற்றைக் கடந்தே வழக்குப் பதிவு செய்ய பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வருகிறார்கள். இதற்கிடையில் குளித்து உடலை சுத்தம் செய்வதாலும், துணிகளை துவைத்து விடுவதாலும், காயங்கள், விந்தணுக்கள் உட்பட பல தடயங்கள் மறைந்து விடுகின்றன. புகார் கொடுப்பதில் உள்ள சமூகப்பிரச்சனைகளே இந்தத் தடைகளை உருவாக்குகின்றன.

இரண்டாவது வேறு சில காரணங்களுக்காகவோ, குடும்பங்களுக்கு இடையில் நிலவும் பகை. உணர்ச்சியாலோ, சில நேரங்களில் பெண்ணின் சம்மதத்துடனே உடலுறவு எற்பட்ட பின்போ, கற்பழிப்பு நடந்தவிட்டதாக பொய்ப் புகார்கள் பதிவு செய்யப்படுவதும் உண்டு. அத்தகைய வழக்குகளில் சில தண்டனையில் முடிவடைவதும் உண்டு. குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்படுவதும் உண்டு. ஆனால் அந்த ஆண் அடையும் மன வேதனைக்கு தீர்வு இல்லை.

இந்த இரண்டு பிரச்சனைகளில் பெண்ணுரிமை இயக்கத்தினர் முதலாவது பிரச்சனையை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டார்கள். இரண்டாவது பிரச்சனைக்காக சொல்லப்பட்ட நிகழ்ச்சிகளில் பொய் சொன்ன பெண்களின் சாமர்த்தியத்தைப் பற்றி ஒருவித வியப்பே மேலோங்கி இருந்தது.

பொய் – 3

சில மாதங்களுக்கு முன் செய்தித்தாள்களில் வெளியான ஒரு செய்தி. படித்தவர்களை கலங்கச் செய்தது. சமூகத்தில் மரியாதையுடன் வாழ்ந்த நடுத்தர வயதுடைய பெற்றோருக்கு ஒரே மகன். மகனுக்குத் திருமணம் செய்து வைத்து நிம்மதியாக இருக்க நினைத்து ஒரு பெரிய குடும்பத்துப் பெண்ணை மருமகளாக்கினார்கள். மருமகளுக்கோ மாமனார் மாமியார் உடன் வாழ்வது தனிமைக்குத் தொந்தரவாக இருப்பதாகப் பட்டது. மேலும், வசதியான வீட்டுப் பெண்ணானதால் நான்கு பேருக்கு சமைப்பது பெரிய தொல்லையாக இருந்தது. அதனால் கணவனை தனிக்குடித்தனம் போகலாம் என்று அழைத்தார். கணவனுக்கோ அம்மா அப்பாவை விட்டுச் செல்ல தயக்கம். பிரச்சனை பெரிதானது. மனைவி கோபித்துக் கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அத்துடன் நிற்கவில்லை அவரது கோபம். நான்கு பேரை கலந்து ஆலோசித்தார். ஒரு சிலர் இப்படி அறிவுரை கூறினார்கள். பேசாமல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடு. அவர்கள் உன் மாமனார், மாமியாரை கூப்பிட்டு ஒரு மிரட்டு மிரட்டுவார்கள். அதற்கு பயந்து கொண்டு உன் கணவர் உன்னுடன் தனிக்குடித்தனம் வந்துவிடுவார்.

lady முன்பின் விளைவுகளை யோசிக்காமல் அந்தப் பெண் மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் செய்தார். வழக்கறிஞரின் அறிவுரையோடுதான். தனிக்குடித்தனத்திற்கு வரவில்லை என்பதை புகாராகக் கொடுக்க முடியுமா? அதனால் மாமனாரும் மாமியாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தன்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டதாகத்தானே குற்றம் சொல்ல முடியும். அப்படியே குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. பெண் போலீசாரும் உடனே சுறுசுறுப்பாகி வழக்கு தாக்கல் செய்து விரைந்து சென்றார்கள் கணவர் வீட்டிற்கு. அதற்குள் யாரோ தகவல் கொடுத்து விட, மருமகள் போலீசுடன் தங்களை கைது செய்ய வருகிறாள் என்று கேள்விப்பட்ட மாமனாரும், மாமியாரும், போலீஸ் வீட்டிற்கு வருவதற்குள் தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள்.

மேலும் சில வழக்குகளில் மருமகள்கள் சார்பாக புகார் எழுதும் வழக்கறிஞர்கள் முதலில் கேட்கும் கேள்வி. கணவருக்கு உடன்பிறந்த பெண்கள் அக்காள் - தங்கைகள் இருக்கிறார்களா? அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? என்பதுதான் அப்படித் திருமணமான சகோதரிகள் ராஜஸ்தான் பாலைவனத்தில் வாழ்ந்திருப்பார்கள். அவர்களுக்கும் இந்தப் பெண்ணுக்கும் பேச்சுவார்த்தையே கூட இருந்திருக்காது. அந்த நாத்தனார் தொலைபேசி மூலம் அழைத்து தன்னிடம் வரதட்சணை கேட்டதாகக் குறைகூறி வழக்கு தாக்கல் செய்து, போலீசுடன் சென்று அவர்கள் வீட்டின் முன்னாலேயே ஜீப்பை நிறுத்தி கைது செய்த காட்சிகளும் நடந்திருக்கின்றன. நடந்து கொண்டும் இருக்கின்றன.

அண்மையில் சென்னை உயர்நீதி மன்றம் வரதட்சணை வழக்குகளை பெண்போலீசார் விசாரித்து - கைது செய்வதற்கு தடை ஒன்றை வழங்கியுள்ளது. அந்த வழக்கை தாக்கல் செய்த மாமனார் ஒரு வழக்கறிஞர். தனக்கே இப்படி ஒரு நிலை, ஏற்பட்டுவிட்டதாக அவர் நீதி மன்றத்தில் வாக்குமூலம் ஒன்றை தாக்கல் செய்தார். இந்தக் குறிப்பிட்ட வழக்கில் என்ன நடந்தது? யார் பக்கம் உண்மை இருக்கிறது? என்ற கேள்விகளுக்குள் நாம் இப்போது நுழைய வேண்டாம். ஏனென்றால் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆனால் பொதுவாகவே மகளிர் காவல் நிலையங்களில் பதிவு செய்து கைது வரை கொண்டு செல்லப்படும். வழக்குகள் பெரும்பாலும் பொய் வழக்குகளாகவே இருக்கின்றன என்ற எண்ணம் மிக அழுத்தமாக பலரது உள்ளத்திலும் பதிந்துள்ளது. அப்படியானால் பெண் போலீசார் நடவடிக்கை எடுத்த வழக்குகள் எல்லாம் பொய் வழக்குகளா? என்ற கேள்வி எழுவது இயல்பே. அப்படி பொத்தாம் பொதுவாக. ஒரு குற்றச் சாட்டைக் கூறுவது சரியாக இருக்காது. அதே நேரத்தில் சில வழக்குகளில் பெண் போலீசார் நடந்து கொண்டுள்ள முறையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதைப் போலவே பொய் வழக்குகளின் சாதக பாதக விளைவுகளையும், பொய்வழக்குப் போடும் மனநிலைக்கான சமூகக் காரணங்களையும் பின்னணிகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com