Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
ஏப்ரல் 2009
நூல் மதிப்புரை: வி.பி.சிங் 100
குணா

அது 1928ம் ஆண்டு! நீதிக்கட்சி ஆதரவில் அன்றைய சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த சுப்பராயன் அமைச்சரவையில் மூன்று அமைச்சர்களில் ஒருவர் முத்தையா முதலியார். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முதன்முதலில் அமலுக்குக் கொண்டுவர அவர் ஆணையிட்டபோது, வகுப்புரிமைக்காக காங்கிரஸில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருந்தால் முத்தையா என்று பெயர் சூட்டுங்கள், பெண்ணாக இருந்தால் முத்தம்மாள் என்று பெயரிட்டு முத்தையா முதலியாருக்கு நன்றி பாராட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்குவதில் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் முத்தையாவின் ஆணை படிப்படியாக நீட்சி பெற்று 69% ஒதுக்கீடாக பரிணமித்து நிற்கிறது.

V.P.Singh ஏறத்தாழ, முத்தையாவின் முதல் ஆணைக்கு நிகரானது, பத்தாண்டுகளுக்குமேல் கிடப்பில் இருந்த மண்டல் குழுப் பரிந்துரைகளை நிறைவேற்றி, மத்திய அரசின் வேலைவாய்ப்பில் 27% ஒதுக்கீடு வழங்கி வி.பி.சிங் பிறப்பித்த ஆணை. இதனால் தனது ஆட்சியே பறிபோகும் என்பதை உணர்ந்திருந்தபோதிலும் தயக்கம் சிறிதுமின்றி மண்டல் பரிந்துரையை அமல்படுத்தி ஏறத்தாழ 19 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமுதாய இளைஞர்களுக்கு பல்லாண்டுகள் மூடிக்கிடந்த கதவுகளைத் திறந்து வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சியது அந்த ஆணை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த எண்ணற்ற இளைஞர்கள் அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். அதிகாரிகளாகவும் இன்னபிற உயர் அதிகாரிகளாகவும் பரிணமிக்கும் வாய்ப்புகள் மடைதிறந்த வெள¢ளமாகப் பாய்ந்தது.

தில்லியில் வி.பி.சிங் ஏற்றிவைத்த சமூகநீதி ஒளிவிளக்கு இந்தியாவின் அரசியல் போக்கிலேயே திருப்பத்தை ஏற்படுத்தியது எனலாம். வேலைவாய்ப்புகளில் மட்டுமன்றி, அரசியல் களத்திலுங்கூட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பலர் தலைவர்களாக உயர வி.பி.சிங் ஏணியாக இருந்தார்.

தமிழனாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரஜையாக மதச்சார்பின்மையிலும் வகுப்புவாத மோதலற்ற சமுதாயத்தைக் காணத் துடிக்கும் மானுடநேயனாக பல தளங்களில் வி.பி.சிங் மீது அன்பும் நன்றியும் கொள்ள நமக்குப் பல காரணங்கள் உண்டு. 90களில் மாணவப் பருவத்தில் அவர் மீது ஏற்பட்ட அபிமானமும் மதிப்பும் அவர் மறையும் தருவாய் வரை கிஞ்சிற்றும் எனக்குக் குறையவில்லை.

தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்குவோம் என்ற உறுதிமொழியோடு அரியணை ஏறிய காங்கிரஸ் கூட்டணி அரசில் சமூகநீதிக்கு ஏற்பட்ட குழிபறிப்புகளையும் தடைகளையும் கணக்கில் கொண்டு பார்த்தால் வி.பி.சிங் அவர்களின் அளப்பறிய பங்களிப்பு புலப்படும்.

அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 9 சதவீதம் என தவணை முறையில் படிப்படியாக 27 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற சட்டத்தை மனிதவளத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கொண்டுவந்த போது, நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பில் அத்துமீறி உச்ச நீதிமன்றம் குறுக்கிட்டால், பிற்படுத்தப்பட்டோருக்கு காலந்தாழ்ந்து கிடைத்த நீதி மேலும் இரண்டாண்டுகளுக்குத் தள்ளிப் போனது.

வி.பி.சிங்கின் அரசாணையும் காங்கிரஸ் அரசின் சமரச சட்டமும் அடிப்படையில் வேறானவை. முதலாவதோ, நூற்றில் 27 சதவீத பங்கை இதர பிற்பட்டோருக்குத் தருவது. மற்றொன்றோ ஆதிக்க சாதியரின் வாய்ப்புக்கு எந்த பங்கமும் நேராமல் கூடுதலாக இடங்களை உருவாக¢கி பிற்படுத்தப்பட்டோருக்குத் தருவது. உண்மையில் இதில் உயர் ஜாதியினருக்கும் பெரும் பலன் உண்டு.

ஆனால் அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளிலும், ஊடகங்களிலும் உயர்சாதி மாணவர்களும் ஜோடித்த போராட்டங்களும் இன்னும் நாம் செல்ல வேண்டிய பாதையைச் சுட்டி நிற்கின்றன.

வி.பி.சிங் தொடங்கி வைத்த பெருமைமிகு அத்தியாயம், மேலும் அடுத்தடுத்த பல கட்டங்களுக்கு முன்னேறிச் சென்றிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு. ஒர் அங்குல முன்னேற்றத்துக்கே ஆயிரமாயிரம் எதிர்ப்புகள் இன்னமும்.

கடந்த இருபதாண்டுகளில் அய்க்கிய முன்னணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி பல அரசுகள் ஆட்சிக்கு வந்தபோதும் அடுத்தடுத்து வந்த ஆளுங்கட்சிகள் பாஜக உள்பட இடஒதுக்கீடுக்கு ஆதரவான கருத்தைப் பேசிய போதிலும் எந்த உருப்படியான முன்னேற்றமும் ஏற்பட்டுவிடவில்லை.

சமூக நீதியை மூச்சாகக் கொண்ட கட்சிகள் மத்தியில் குறிப்பிடத்தகுந்த அளவு செல்வாக்கு செலுத்தியும்கூட, எந்தவித பலாபலனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவில்லை என்ற எதார்த்தம் மண்டையில் உரைக்கிறபோது, வி.பி.சிங் என்ற மனிதரின் பங்களிப்பு எவ்வளவு மகத்தானது என்பதை அறியலாம்.

அவர் மறையும் வரையிலும் பார்ப்பன ஊடகங்கள் இடைவிடாது பொழிந்த வசைகளையும், அவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர் மீது கொண்டிருந்த சினத்தையும், அவர் மறைந்த போதிலும்கூட அவருக்குரிய நியாயமான அஞ்சலியைத் தர மறுத்த அநீதியும் வி.பி. சிங் ஆளுமையை மேலும் ஆழமாக நமக்கு உணர்த்தி நிற்கின்றன.

தனியார் துறை இட ஒதுக்கீடு, நீதித்துறையில் ஒதுக்கீடு, கிரீமிலேயர் முறைக்கு முடிவு, பதவி உயர்வில் ஒதுக்கீடு என அடுத்தடுத்த களங்கள் நம் முன்னே காத்திருக்கின்றன. எட்டாக்கனிகளாக உள்ள அவற்றை, பதவியே பறிபோனாலும் பறித்துத் தருவேன் என்று சொல்ல எத்தனை வி.பி.சிங்குகள் இப்போது இருக்கிறார்கள்?

வி.பி. சிங்குக்கு உரிய நீதியை உயர்சாதி ஊடகங்கள் மறுத்தபோதிலும், ‘சமூக நீதியின் ஒளிவிளக்கு வி.பி. சிங் 100’ என்ற நல்லதொரு வெளியிட்டின் மூலம் நக்கீரன் பதிப்பகம் தமிழ்கூறும் நல்லுலகம் காலத்தே காணிக்கை செலுத்தி இருக்கிறது.

வி.பி. சிங் அவர்களின் வாழ்வில் நடந்த குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளைத் தொகுத்து, தமிழ் சமூகத்தின் சார்பில் பொருத்தமான அஞ்சலியை காணிக்கையாக்கி இருக்கிறார் நூலாசிரியர் கோவி. லெனின். தமிழகத்தோடு அவருக்கிருந்த ஆழமான பிணைப்பையும், இந்திய அரசியலில் மதச்சார்பின்மை நெறியிலும் சமூக நீதித் தளத்திலும் அவரது அரிய தொண்டினையும் சுருக்கமாக வழங்கியுள்ளார். ஒரே அமர்வில் படித்து முடிக்கக்கூடிய எளிய நூலை கருத்துச் செறிவோடு தொகுத்துத் தந்துள்ளார். மேலும் பொலிவான அட்டையையும் உள்பக்கப் படங்களையும் நேர்த்தியாக அளித்திருந்திருக்கலாம். எழுத்துப் பிழைகளைத் தவிர்ப்பதிலும் சற்றே கவனம் செலுத்தி இருக்கலாம்.

காவிரி நடுவர் மன்றம், அமைதிப் படையைத் திரும்ப அழைத்தது, அம்பேத்கர் பிறந்த நூற்றாண்டு அரசு விழாவாகக் கொண்டாட்டம், பவுத்தம் தழுவிய தலித்துகளுக்கும் இடஒதுக்கீடு உரிமை என ஒடுக்கப்பட்டோர் நன்றியோடு நினைவுகூற வேண்டிய பலப்பல நிகழ்வுகளை விரிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் கோவி. லெனின். வி.பி. சிங்கின் தூரிகையையும் அழகுற விவரிக்கிறது நூல்.

தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது எத்தனை நெஞ்சுறுதியோடு அதை வி.பி. சிங் எதிர்கொண்டார் என்பதை அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ தலைமையிலான அதிமுக அவருக்கு எதிராக வாக்களித்ததையும், பகுஜன் சமாஜ் கட்சி வெளிநடப்பு செய்த துரோகத்தையும் பதிவு செய்துள்ளார் லெனின்.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டியது அவசியம். காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி, எதிர்க்கட்சித் தலைவராகப் பத்து மணி நேரம் நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு எதிராக முழங்கினார். ஆனால் காங்கிரஸ் வரிசையில் இருந்து ஒரே ஒரு வாக்கு மாறி விழுந்து அவையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அன்று பச்சைப் பொத்தானை அழுத்தியவர் மறைந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் சமது. “சமூக நீதிக்காகவும், மதச்சார்பின்மைக்காகவும் தனது ஆட்சியையே துறக்கத் தயாரான வி.பி. சிங்குக்கு எதிராக வாக்களிக்க எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை” என்று பல முறை பதிவு செய்தவர் மறைந்த சமது.

அதிகார அரசியலில் இருந்து விலகி ஓவியத்திலும், கவிதையிலும் தனக்கான மன அமைதியை வி.பி. சிங் தேடியதை விரிவாகவே விவரிக்கிறது இந்நூல்.

துணுக்குச் செய்திகளாக மட்டுமல்லாது, விரிவாகவே பதிவு செய்யப்பட வேண்டியது அவரது வரலாறு. ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தி, அம்பானிகளின் வாழ்க்கை வரலாறு கூட ஆவணப்படுத்தப்படும் வேளையில், வி.பி. சிங் போன்ற மாமனிதரின் அகமும் புறமும் அகிலமறிய செய்ய எந்தவொரு பதிப்பகமோ, எழுத்தாளர்களோ முன்வராதது தற்செயலான நிகழ்வாகத் தோன்றவில்லை. வி.பி. சிங் ஆற்றிய ஆழமான உரைகளோடு அவை வெளிவர வேண்டியது அவசியமான ஒன்று.

உச்சரிக்கவே தீட்டாக ஆதிக்க சாதியரால் கருதப்பட்ட பெரியாரின் பெயரை நாடாளுமன்றத்தில் பலமுறை பெருமிதத்தோடு உச்சரித்தவர் வி.பி.சிங்.

குறிப்பாக, பெரியாரியலாளர்களுக்கு தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு விந்திய மலைகளைக் கடந்து தில்லியில் எவர் மீதும் உயர்ந்த மதிப்போ, உள்ளார்ந்த அன்போ இருந்தது இல்லை. அண்ணல் அம்பேத்கருக்குப் பிறகு வி.பி. சிங் மட்டுமே அதற்கு விதிவிலக்கு. அதிகார அரசியலில் அவரால் உருவாக்கப்பட்டவர்களும் அவரது பேரன்பைப் பெற்றவர்களும் தங்கள் அடிப்படைக் கொள்கைகளை மறந்து சனாதனிகளோடு சமரசம் செய்து கொண்டபோதும் வி.பி. சிங் தனது கொள்கையை எந்த நிலையிலும் தளர்த்திக் கொண்டதில்லை.

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த போதிலும், அவர் இயற்கையான நண்பர்களான இடதுசாரிகளோடும், விளிம்புநிலை மக்களோடுமே அவர் கரம் கோர்த்திருந்தார்.

“அடடா, என்ன இப்படிப்பட்ட கருத்தைச் சொல்லிவிட்டாரே, இப்படியரு நிலையை எடுத்து விட்டாரே” என்று தனது அபிமானிகள் வருந்துமளவுக்கு நடந்துகொள்ளாத சிறப்பும் வி.பி. சிங்குக்கு உண்டு. தேர்தல் அரசியலில் கரைந்து போகாத சிறந்த மனிதர் அவர்.
வி.பி. சிங் அவர்களின் கவிதையை இங்கு பதிவு செய்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

புன்னகை மாறாமல்
எப்போதும் நோக்கினும்
எனைப் பார்த்துச்
சிரிப்பில் இருப்பது
என் படம்.

பல்வேறு நிலைகளில்...
வெவ்வேறு முகபாவங்களில்...
படம் பிடித்த நிழற்படங்கள்
தன் பதிவுகளில்
என் அடையாளத்தைக் காட்டுகிறது.

இறுதியான ஒரு நாள்
என்னை இது படம் பிடிக்கும்.
அதுவே எனது
கடைசி படமாக இருக்கும்.
அதையும் பார்த்து
பழைய படங்கள் சிரிக்கும்.

காரணம்...
இல்லாமல் போவது
நான் மட்டும்தான்!
என் படங்கள் இருக்கும்
புன்னகை மாறாமல்...

- வி.பி. சிங்

ஆம் வி.பி. சிங் இல்லையென்றாலும் அவர் ஆற்றிய பணிகள் சமூகம் என்றென்றும் நினைவு கூறத்தக்க ஒன்று.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com