Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

கட்டுரை

பேராசிரியர் நா. வானமாமலையின் கட்டபொம்மன் கதைப்பாடல் பதிப்பு
ஆ. சிவசுப்பிரமணியன்

தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு, சமூகவியல் பார்வை வழங்கிய முன்னோடி பேராசிரியர் நா.வா. அவரது பணிகளில் கதைப்பாடல் பதிப்பும், கதைப்பாடல்கள் குறித்த ஆய்வும் முக்கியமானவை. அவரது கதைப்பாடல் பதிப்புகள் காலவரிசைப்படி வருமாறு:

1961 கட்டபொம்மன் கதைப்பாடல், சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
1967 வீணாதி வீணன் கதை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
1971 வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப்பாடல், மதுரை, மதுரைப் பல்கலைக்கழகம்.
1971 முத்துப்பட்டன் கதை, மதுரை; மதுரைப் பல்கலைக்கழகம்.
1971 காத்தவராயன் கதைப்பாடல், மதுரை; மதுரைப் பல்கலைக்கழகம்.
1972 கட்டபொம்மு கூத்து, மதுரை; மதுரைப் பல்கலைக்கழகம்.
1972 கான்சாகிபு சண்டை, மதுரை; மதுரைப் பல்கலைக்கழகம்.
1972 ஐவர் ராசாக்கள் கதை, மதுரை; மதுரைப் பல்கலைக்கழகம்.

இக்கதைப்பாடல்களை பதிப்பித்த நா.வா. அவை ஒவ்வொன்றிற்கும் ஆய்வு முன்னுரை எழுதியுள்ளார். அவரது பதிப்புக்களில் சிறப்பம்சமாக அமைவது அவரது முன்னுரைதான். இவையனைத்தையும் ஒருசேர இக்கட்டுரையில் குறிப்பிடுவது இயலாது என்பதால் அவரது கட்டபொம்மன் கதைப்பாடல் நூலின் முன்னுரை மட்டும் இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

தமிழ்வாணன் என்பவர் கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் என்று தமது ‘கல்கண்டு’ பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதியதுடன் அதை நூலாகவும் வெளியிட்டார். இக்கருத்தை அவர் பரப்புவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே தமிழரசுக்கழகத் தலைவர் ம.பொ.சி. தமிழ்நாட்டின் முதல் விடுதலைப் போராளியாக கட்டபொம்மன் அறிமுகப்படுத்தி பேசியும் எழுதியும் வந்தார். இத்தகைய சூழலில் சராசரித் தமிழ் மக்களுக்கு இவ்விருவரது கூற்றில் எது உண்மையானது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இக்காலகட்டத்தில்தான், சென்னை; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் வாயிலாக ‘கட்டபொம்மன் கதைப்பாடல்’ என்ற நூல் 1961இல் வெளியானது. இந்நூலின் முன்னுரையில் ‘கட்டபொம்மனை தேசபக்தனென்று புகழ்பவர்களுக்கும், கொள்ளைக் காரனென்று இகழ்பவர்களுக்கும் ஒரேவிதமான மூல ஆதாரங்கள் இருக்கின்றன’ என்று குறிப்பிடும் நா.வா.

‘. . .சரித்திர ஆதாரங்கள் என்று காட்டப்படும் விவரங்கள் எல்லாம், குறிப்பிட்ட சரித்திரக் கட்டத்தில் போராடிய இரு பகுதியினருள் ஒரு பகுதியினர் தங்கள் நடவடிக்கைகளை நியாயம் என்று நிலைநாட்டுவதற்காகச் சேகரித்து வைத்த சம்பவச் செய்திகளே ஆகும். போராடிய மற்றொரு பகுதியினர் இச்சம்பவங்களைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பதைக் குறித்து அறிந்துகொள்ள எவ்வகைச் சான்றுகளும் விட்டுவைக்கப்படவில்லை.’ என்று எழுதுகிறார். இவ்வாறு சான்றுகள் இல்லாவிட்டாலும், மக்கள் வரலாற்றுச் சான்றுகளாகக் கதைப்பாடல்களைப் பாதுகாத்து வந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வெள்ளையர்கள் எழுதி வைத்த சான்றுகளைக் கொண்டு நோக்கினால் கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற முடிவிற்கு வர நேரிடும் என்றும் ‘கட்டபொம்மன் நிகரற்ற வீரன், தேசபக்தன் என்று முடிவு செய்துகொண்டு சரித்திரச் சம்பவங்களை நோக்கினால் அவனுடைய குறைபாடுகள் எதுவுமே கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும்.’ என்றும் குறிப்பிட்டுவிட்டு வரலாற்றை அணுகும்முறை குறித்துப் பின்வரும் விளக்கத்தைத் தருகிறார்.

‘சரித்திரம் வீரர்களால் ஆக்கப்படுகிறது என்று சிலர் கருதுகிறார்கள். அவர்கள் தங்கள் கற்பனையில் சரித்திர வீரர்களை சந்தர்ப்பத்துக்கும் சூழ்நிலைக்கும் அப்பாற் பட்டவர்களாக கருதுகிறார்கள். இருவருடைய கற்பனைகள் ஒன்று போலிரா. ஆகவே ஒருவர் யாரை வீரனாகக் கருதுகிறார்களோ அவனே மற்றவருக்குக் கோழையாகத் தோன்றலாம். ஆகவே இருவரும் தங்கள் தங்கள் வீரருக்காகக் கச்சை வரிந்து கட்டிக்கொண்டு சண்டை போடத் தொடங்குகின்றனர். சரித்திரத்தை இம்முறையிலெல்லாம் பார்ப்பது முழு உண்மையைக் காண்பதாகாது.

‘சரித்திரத்தையும், சரித்திர நிகழ்ச்சிகளையும், சரித்திர வீரர்களையும் சரியான முறையில் பார்ப்பதற்குச் சரித்திரக் காலகட்டத்தையும், அப்பொழுது இருந்த சமூக அமைப்பையும் அச்சமூகத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களின் தொடர்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.’

இவ்வாறு வரலாற்றை அணுகும்முறையை விளக்கிவிட்டு விடுதலை வீரனாக ஒருபுறம் காட்சியளிக்கும் கட்டபொம்மன் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொண்டான் என்பதற்கும் சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடுகிறார்.

* நாடார்களுக்கு உரிமையான பனை மரங்களை அவர்களின் அனுமதியின்றி வெட்டியது.
* பள்ளர் சமூகப் பெண்களைக் கரண்டைக் காலில் பிரம்பால் அடித்து வேலை வாங்கியது. ‘சுளகு போல் முதுகிருக்கக் கரண்டைக் காலில் அடித்தானே பாவி’ என அவர்கள் பாடியது (சுளகு-தானியங்கள் புடைக்கப் பயன்படுத்தும் முறம்).
* வரி கொடுக்க முடியாதவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டது.

இக்குறைபாடுகள் ஒருபுறமிருக்க அவனது வெள்ளையர் எதிர்ப்பைப் புறக்கணிக்க முடியாது என்பதையும் விரிவாக எழுதியுள்ளார்.

கட்டபொம்மனுடைய வெள்ளையர் எதிர்ப்புப் போராட்டத்திலிருந்த குறைபாடுகளைச் சுட்டிக் காட்டிவிட்டு அவனது மறைவிற்குப் பின் அவனது தம்பி ஊமைத்துரை நிகழ்த்திய இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் (கி.பி. 1801) இக்குறைபாடுகள் இல்லாமலிருந்ததையும், ஊமைத்துரைக்கு மக்களின் ஆதரவு கிடைத்ததற்கான காரணத்தையும் விளக்கமாக ஆராய்ந்துள்ளார். இறுதியாக ‘கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன்’ என்ற குற்றச்சாட்டிற்கு விடையாக, பின்வரும் விளக்கத்தைக் குறிப்பிடுகிறார்.

“கொள்ளை’ என்பதற்கு என்ன பொருள் கொள்கிறோமோ அதைப் பொறுத்துத்தான் நாம் இக்கேள்விக்கு விடையளிக்க முடியும். தாங்கள் நடத்திய போர்களுக்காக மக்களைக் கசக்கிப் பிழிந்தது கொள்ளையென்றால் இக்கொள்ளையைச் செய்யாத பாளையக்காரன் எவனுமே அக்காலத்தில் இல்லை’

‘எதிரிகள் ஆதிக்கத்திலுள்ள இடங்களில் கொள்ளை யடித்து அங்குள்ள பொருளாதார வாழ்வைச் சீர்குலைப்பது எக்காலத்திலும் போர்க்காலத்தில் வழக்கமாயிருந்து வந்திருக்கிறது. பூலுத்தேவரும், கட்டபொம்முவும், ஊமைத்துரையும், மருது சகோதரர்களும் துணிச்சல் மிக்கவர்கள். மற்ற பாளையக்காரர்கள் தங்களைக் கொள்ளையிட்டு, வெள்ளைக்காரர்கள் சேமித்து வைத்து இருக்கும் பண்டங்களைத் திருப்பிக் கேட்கவே அஞ்சினார்கள். ஆனால் இவ்வீரர்கள் வெள்ளைக்காரர்களது களஞ்சியங்களைக் கொள்ளையிட்டார்கள். அது தவறென்று அக்காலத்தில் மக்கள் நினைக்கவில்லை. வரிவசூல் செய்ய வெள்ளையருக்கு உரிமையில்லை என்று முழங்கிய இவ்வீரர்கள் தாங்கள் வெள்ளையரது உரிமையை நிராகரிக்க, அவர்கள் வரியாக வசூலித்து சேமித்து வைத்திருந்த நெல்லைச் சூறையாடினார்கள். இதன் மூலம் வரி கொடாமலிருக்க, மக்களுக்குச் சிறிதளவு ஊக்கம் பிறக்கவே இவ்வாறு செய்தார்கள். . . .இவை ‘கொள்ளை’ யென்றால் இக்கொள்ளைகளைச் செய்த ‘கொள்ளைக்காரர்’களின் வீரத்திற்கும் துணிவுக்கும் அவர்களைப் பாராட்டவேண்டும்.’

இவ்வாறு கட்டபொம்மன் குறித்த இருவேறுபட்ட கருத்துக்கள், நிலவிய சூழலில் நடுநிலைமையோடு கூடிய மதிப்பேட்டை பேராசிரியர் வழங்கியுள்ளார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com