Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

நூல் மதிப்புரை

புதுமைப்பித்தன் வரலாறு

சுப்ரபாரதிமணியன்

இலக்கியப் பத்திரிக்கை நடத்துகிறவனுக்கு, எழுத்தாளனுக்கு மணியார்டர் என்பது பல்வேறு கோணங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைந்து விடுகிறது. பத்திரிக்கைகளில் பணிபுரிந்தபோது மணியார்டரை எதிர்பார்ப்பதும், அதைப் பெற்று செலவு செய்வதும் வினோத இன்பமாகிறது. அதையே பிற்காலத்தில் புதுமைப்பித்தன் சாவை மணியார்டரை எதிர்பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார் என்றக் குறிப்பு பணம், அது வந்து சேரும் சாதனம், குறியீடு குறித்து அதிர்ச்சிகளையும் தருபவை.

Puthumaipithan history புதுமைப்பித்தன் வாழ்க்கையே அதிர்ச்சிகரமான குறுகிய ஆயுள் கொண்டதுதான். புதுமைப்பித்தனின் வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்; உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை என்று நூலின் முன்னுரையை தொ.மு.சி. ரகுநாதன் ஆரம்பிக்கிறார். அவரின் வாழ்க்கை அவஸ்தைகளை ஏகதேசம் நெருக்கமாய் இருந்து கண்டவர் என்ற வகையில் இந்த அபிப்ராயம் உருவாகியிருக்கலாம். ஆனால் அவரின் படைப்புகளை முன் நிறுத்தி அவர் ஒரு பிரம்மராட்சன் என்பதை அவர் படைப்புகள் நிறுவியிருக்கின்றன. புதுமைப்பித்தனுக்கு நூற்றாண்டு கொண்டாடும் இந்த ஆண்டில் அவரின் எச்சரிக்கை பல புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எச்சரிக்கையாகவே இன்றைக்கும் அமைந்து விட்டிருக்கிறது தமிழ்ச்சூழல் கவலைதரக்கூடியது தான்.

‘செல்லும் வழி இருட்டு’ என்பது தெரிந்துதான் எழுத்தை பு.பி. தேர்ந்தெடுத்துக் கொண்டாரே என்றுத் தோன்றும். “எழுத்தாளனுக்கே ஒளி பேரிலேதான் ஆசை போலிருக்கு. நான் போகிற பாதையெல்லாம் வெளிச்சமாக்க விரும்பினேன். இப்போ இருட்டில் நடக்க ஒளியை விரும்புகிறேன்” என்கிறார்.

“பிறந்தவுடனேயே நஞ்சுக் கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு தெரு வழியாகக் கோஷமிட்டுக் கொண்டு வரும் குழந்தையின் அசாதாரணத் தன்மையை இசக்கி முத்து எனும் கதாபாத்திரத்தை ‘அவதாரம்’ என்றக் கதையில் வர்ணிக்கும் புதுமைப்பித்தனுக்கே அவ்வர்ணனை பொருந்தி வருவதை ரகுநாதன் விளக்கும் ஆரம்பப் பக்கங்கள் அவரை தனித்துவம் மிக்கவராகவே காட்டுகிறது. சம்பளமில்லாத மணிக்கொடி சேவகமோ, சம்பளமுடனான ‘ஊழியன்’ பத்திரிக்கை வேலையோ, 1933ம் ஆண்டில் தந்தையிடம் ஏற்பட்ட கசப்பின் காரணமாக பத்திரிக்கைத் தொழிலை லட்சியமாகக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவர், 1944ம் ஆண்டில் அந்த லட்சியத்தைக் கைவிட்டு வெளியே வருகிறார்.

சொ. விருத்தாச்சலம் புதுமைப்பித்தன் என்றப் படைப்பாளியாக விசுவரூபம் எடுத்த அந்த காலக்கட்டத்தை படைப்பினூடே வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை இந்த நூல் அமைக்கவில்லை. ஆனால் அவர் வாழ்க்கை சார்ந்த குறிப்புகளுக்கான களமாகவே அமைந்திருக்கிறார். பெப்பர் மிண்ட் விற்கலாமா, பீடி விற்கலாமா பிழைப்பதற்கு என்று யோசிக்கிற அளவு எழுத்து அவரை சீரழித்திருக்கிறது. அந்த சீரழிவை ரகுநாதன் காட்டும் போக்கில் எழுதி தன் வாழ்க்கையை பொருளாதார ரீதியாக நிலை நிறுத்திக் கொள்ளாத எழுத்தாளர்களின் மாதிரியாக பு.பி. பார்க்க நேர்கிறது.

இதிலிருந்து தப்பிப்பதற்கு உபாயமாக திரைப்படத்துறை வாய்க்கிறது. அங்கும் தனது முத்திரையைப் பதிக்கத் தவறுவதில்லை. ரகுநாதன் குறிப்பிடும் அவ்வை படத்தின் வசனங்களில் அவரின் தனித்தன்மை வெளிப்படுகிறது. ஆனால் வியாபார உலகம் பகல் கனவிற்குத் தீனி போட வேண்டியதாகிறது. அந்தத் தீனியை வாரி வழங்குபவராக பு.பி. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இயலாமை தனித்துவம் மிக்கப் படைப்பாளிக்கு சாதாரணமாக நிகழ்வதுதான். அது இன்னொரு புறத்தில் திரைப்படத் தயாரிப்பிற்கும் அவரைத் தள்ளி விடுகிறது. தெரியாத தொழிலை வைத்துப் பிழைக்க முடியாது என்ற உண்மையைத் திரைப்பட உலகம் நிரூபிக்கிறது.

“என்னுடைய கதைகள்... பிற்கால நல்வாழ்வுக்கு சௌகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடு அல்ல என்பதில் திடமான நம்பிக்கையும் இலக்கிய தீட்சண்யமும் கொண்டிருந்தவருக்கு “எழுத்தாளன் என்றால் முழுப் பட்டினி பத்திரிக்கையாசிரியன் என்றால் அரைப்பட்டினி” என்பதை அனுபவிக்கும் வாய்ப்புகள் வாழ்க்கை முழுவதும் நேர்ந்திருக்கின்றன. சாவதில் துன்பமில்லை என்று உணரவும் வைத்திருக்கிறது. இந்த வகை சாவை எதிர் கொண்ட மனநிலைதான் அவரை அமரத்துவப் படைப்புகளைப் படைக்க வைத்திருக்கிறது. சாவிற்கு முன் அழிவற்றதை உருவாக்கும் திடம் விசுவரூபித்து நின்றிருக்கிறது.

படைப்புகளில் சகமனிதர்களோடு உறவாடுவதில் ஒருவனாக ஆனந்தம் கொண்டிருக்கிறார். ஆனால் சக எழுத்தாளர்கள், குடும்பத்தினர், நண்பர்களுடனான உறவு கசப்பாகவே ஒரு எல்லை வரை நின்றிருக்கிறது. “என் கதை நெருப்பப்பா... நெருப்பு. உன் பத்திரிக்கை சாம்பலாய் போகும்” என்று சக எழுத்தாளர்களை, பத்திரிக்கையாளர்களை விமர்சிக்கும் போக்காகட்டும், உறவுகளிலிருந்து அந்நியமாடும் வினோதமாகட்டும் எல்லாமே படைப்பாளியின் விசித்திரங்கள் தான். ஆனால் படைப்புகளில் சக மனிதர்களுடன் நெருக்கமாக அவர் உரையாடும் தன்மை அவரை வேறொரு கோணத்தில் பார்க்கச் செய்கிறது. எல்லோரையும் நேசிக்கும் மனம் அவருள் இருந்திருக்கிறது. ஆனால் வாழ்க்கையின் கசடுகள் அவரைத் தனிப்பட்ட முறையில் வெறுப்புகளை உள்ளடக்கியவராகவே பல சமயங்களில் காட்டி விட்டிருக்கிறது. உதாரணமாய் குழந்தைகளை அவர் படைப்புகளில் அணுகுமுறையும், பணிமாற்றமும் படைப்புகளில் அவரை குழந்தை மனத்தினராகவே காட்டுகிறது. கதைகளில் தான் குழந்தைகளைச் சீராட்டியவர் என்ற ஒரு குறிப்பும் இந்த நூலில் உண்டு.

புதுமைப்பித்தனை ஆழ்ந்து படித்த தீவிர வாசகர்கள் மற்றும் அவரின் அபிமானிகளுக்கான பார்வையை இந்நூல் கொண்டிருக்கவில்லை. புதுமைப்பித்தனின் வாழ்க்கையை அறிந்து கொள்வதற்காக நுழையும் எந்த சாதாரண வாசகனும் புதுமைப்பித்தன் குறித்த திறந்த வாழ்க்கையை அறிந்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டதாய் இந்த நூலை தொ.மு.சி. ரகுநாதன் அமைந்திருக்கிறார். பின்னிணைப்பான சுந்தரராமசாமியின் பேட்டி புதுமைப்பித்தனின் படைப்புகளூடே பயணம் செய்து நுணுக்கமான ஒரு மாபெரும் படைப்பாளியாக முன் நிறுத்துகிறது. அபூர்வமான புகைப்படங்கள் ரகுநாதனின் எண்ணங்கள் தர இயலாத அபூர்வ கணங்களை உருவாக்குகின்றன. அவரின் கடைசி நாட்களில் அவர் தங்கியிருந்த, தனித்திருந்த இடத்தின் ஒளியும் வெளிச்சமும், திறக்காத மூடின கதவுகளும் சாதாரணமாக சலனப்படுத்துபவை. படைப்பாளியோடு நெருக்கமாகப் பழகியவர் என்ற கோணத்தில் உணர்ச்சிக் குவியல் நிறைந்து விடாமல் சற்று விலகி இருந்து ஒரு எழுத்தாளரை பார்க்கும் பார்வையில் இந்நூலை ரகுநாதன் நிறைந்திருக்கிறார். அவரை உணர்ச்சி மேலிட்டவராக பல படைப்பாளிகள் முன் நிறுத்துவதிலிருந்தும் எல்லாவாக வாசகர்களை ஈர்க்கவுமாக சம்பவங்களைத் தேர்வு செய்திருப்பதில் ரகுநாதனின் எளிமையும் சாதாரண வாசகனையும் சென்றடைய வேண்டிய அக்கறையும் நிறைந்திருக்கிறது.

புதுமைப்பித்தன் வரலாறு,
ஆசிரியர்: தொ.மு.சி. ரகுநாதன்,
பதிப்பாசிரியர்: இளசை மணியன்,
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை.
விலை : ரூ. 95.00.