Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

மயாகோவ்ஸ்கியின் ‘நான்’

எஸ். வி. ராஜதுரை

1917 நவம்பரில் நடந்த, உலகைக் குலுக்கிய மாபெரும் ரஷியப் புரட்சியின் பண்பாட்டுப் போர்வீரர்களின் முன்னணி வரிசையில் இருந்தவர் விளாடிமிர் மாயகோவ்ஸ்கி. அந்தப் புரட்சி, எப்படி அதுகாறும் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த உழைக்கும் மக்களின் படைப்பு ஆற்றலையும் புரட்சியைப் பாதுகாக்கும் அதனுடைய போராட்டாத்திறனையும் வெளிக்கொணர்ந்து, பாட்டாளிவர்க்கப் புரட்சிகர ஆட்சிக்கான புதுப்புது வடிவங்களைத் தோற்றுவித்ததோ, அதே போல, பண்பாட்டுத் துறையில் எண்ணற்ற புதுமைகளைச் சாத்தியமாக்கியது. சோவியத் கலை - இலக்கியம் என்றாலே ‘சோசலிச யதார்த்தவாதம்” என்பது மட்டுமே நமக்கு நினைவுக்கு வரும்படி செய்யப்பட்டிருந்தது.

ஆனால், புரட்சியின் பண்பாட்டுத் தூதுவர்களாக அந்த நாடு முழுவதிலும் மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் தங்கள் கலைப் படைப்புகளை அனுப்பி வைத்தவர்கள், ஃப்யூச்சரிசம், கன்ஸ்ட்ரக்டிவிசம், சிம்பொலிசம், உருவவாதம், புரொலிட்கல்ட் என்னும் பல்வேறு கலை இலக்கியப் போக்குகளையும் பாணிகளையும் உருவாக்கியிருந்தனர். “பாட்டாளிவர்க்கப் புரட்சி தனது கவித்துவ ஆற்றலை எதிர்காலத்திலிருந்துதான் பெற வேண்டும்” எனக் கார்ல் மார்க்ஸ் ‘லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்’ என்னும் நூலில் கூறியதற்கு இணங்கவோ என்னவோ, மயாகோவ்ஸ்கி தனது கலை இலக்கியப் போக்கிற்கு “ஃப்யூச்சரிசம்” எனப் பெயரிட்டிருந்தார்.

“ஃப்யூச்சரிசம்” என்னும் கலை இலக்கியப் போக்கு புரட்சிக்கு முந்திய ரஷியாவிலும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தது. இத்தாலியில் இருந்த ஃப்யூச்சரிஸ்டுகள் முஸ்ஸோலினியின் பாசிச ஆதரவாளர்களாகவும் இருந்தனர். நவீன இயந்திரங்களும் தொழில்நுட்பங்களும் வளர்ந்த தொழில்மயமான சமுதாயத்திற்குப் பொருத்தமான வகையில் கலையும் இலக்கியமும் முற்றிலும் நவீனத்தன்மை வாய்ந்த வடிவங்களையும் உத்திகளையும் பெற்றிருக்க வேண்டும் என்பதும் மரபு வழிவந்த கலைகளும் அவற்றின் வடிவங்களும் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதும் ஃப்யூச்சரிஸ்டுகள் அனைவரும் பகிர்ந்து கொண்டிருந்த பொதுவான கருத்து எனக் கூறலாம்.

ஆனால், ‘நான் நானேதான்’ (I Myself) என்னும் சுயசரிதைக் குறிப்புகளில், மயாகோவ்ஸ்கி 1911இல் ‘ரஷிய ஃப்யூச்சரிசம் பிறந்தது’ என்று குறிப்பிடுவது, ரஷியாவில் ஏற்கனவே இருந்த ஃப்யூச்சரிசத்தை அல்ல. தான் ஏற்றுக்கொண்ட கலை இலக்கிய பாணியின் பெயர் ‘கியூபா - ஃப்யூச்சரிசம்’ என்று கூறினார்.

ஓவிய, சிற்ப, கட்டடக் கலைப் பள்ளியில் பயின்றபோது, டேவிட் புர்லியாக் போன்ற கலைஞர்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பின் விளைவாக உருவானதே இக்கலை இலக்கியப் பாணி. ஃப்யூச்சரிச இயக்கத்தில் சேர்வதற்கு முன்பே, மயாகோவ்ஸ்கி சோசலிசக் கருத்துகளின்பால் ஈர்க்கப்பட்டுத் தனது பதினைந்தாம் வயதிலேயே போல்ஷ்விக் கட்சியின் உறுப்பினராகியிருந்தார். ஏற்கனவே மும்முறை ஜார் அரசாங்கக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனைகளையும் அனுபவித்திருந்தார். மிக இளம் பருவத்திலேயே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த அவர், தான் ஒரு சோசலிசக் கலையை உருவாக்கப் போவதாகத் தன் கட்சித் தோழரொருவரிடம் கூறியபோது, அத்தோழர் வாய்விட்டுச் சிரித்ததாகவும், தனது திறமையை அவர் குறைந்து மதிப்பிட்டதாகவும் மயாகோவ்ஸ்கி தனது சுயசரிதைக் குறிப்புகளில் எழுதுகிறார்.

பழைய கலை இலக்கியப் பாணிகளை நிராகரிக்க விரும்பிய மயாகோவ்ஸ்கி போன்ற ஃப்யூச்சரிஸ்டுகள், தங்கள் கொள்கைப் பிரகடனமாக 1913இல் வெளியிட்ட அறிக்கையின் தலைப்பு ‘பொதுமக்களின் இரசனை என்னும் கன்னத்தில் ஒரு அறை’!

‘ஃப்யூச்சரிச’ மயாகோவ்ஸ்கி எழுதிய ‘முகில் போன்ற மனிதன்’ (Cloud in Trousers) என்னும் கவிதையில் இருந்த மனித நேயமும் பரிவுணர்வும் மாக்ஸிம் கார்க்கியின் மனத்தை நெகிழச் செய்தன. அவர் அதைப் படித்துவிட்டு, மயாகோவ்ஸ்கியின் நெஞ்சில் தலையைச் சாய்த்து விம்மி விம்மி அழுதிருக்கிறார். ஆனால், நவம்பர் புரட்சி நிகழ்கையில் கார்க்கி வெளிநாட்டில் இருந்தார். அந்தப் புரட்சியை அவர் முதலில் வரவேற்கவில்லை. அது மட்டுமல்ல, அது நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் என்றும்கூடக் கருதினார்.

ஆனால், “எனக்கும் மற்ற மாஸ்கோ ஃப்யூச்சரிஸ்டுகளுக்கும் இப்படி ஒரு பிரச்சனையே எழவில்லை, அது எனது புரட்சி” என மயாகோவ்ஸ்கி கூறினார். உண்மையில், அந்தப் புரட்சியை அவர் 1916ஆம் ஆண்டிலேயே எதிர்பார்த்தார்:

நீண்ட, உதறியெறியப்பட்ட சந்தமாய்
சமகாலக் கவிஞர் கூட்டத்தால்
எள்ளி நகையாடப்படும் நான்
காலமெனும் மலைகளைத் தாண்டி வருகின்ற ஒன்றை
யாரும் காணாததைக் காண்கின்றேன்
பட்டினிப் பட்டாளத்தால் மனிதனின் பார்வை
குறுக்கப்படும் அவ்விடத்தில்
புரட்சியின் முட்கிரீடம் தரித்த
1916 அய்ப் பார்க்கிறேன்.

1922இல் ‘மாஸ்கோ ஃப்யூச்சரிஸ்ட் சங்கப் பதிப்பகத்தை’யும், 1923இல் ‘இடதுசாரிக் கலை முன்னணி’யையும் (LEF) தோற்றுவித்த அவர், அதில் ‘கன்ஸ்ட்ரக்டவிசம்’, ‘உருவவாதம்’ போன்ற கலை இலக்கியப் போக்குகளைக் கடைப்பிடித்துவந்த பன்னிரண்டு குழுவினரை ஒன்றிணைத்தார். இவர்களில் நாடகமேதை மெயர்ஹோல்ட், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள் வெர்தோவ், ஜஸன்ஸ்டின் ஆகியோரும் அடங்குவர். 1923 ஏப்ரலில் ‘ஃப்யூச்சரிசம் இன்று’ என்னும் தலைப்பில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மயாகோவ்ஸ்கி, ரஷிய ஃப்யூச்சரிசத்திற்கும் இத்தாலிய ஃப்யூச்சரிசத்துக்குமுள்ள வேறுபாட்டை விளக்கிக் கூறினார். ரஷிய ஃப்யூச்சரிசத்தை அதனுடைய சூழலில் வைத்தே புரிந்துகொள்ள வேண்டும் என்றும், நவீன இலக்கியத்தில் அதைப் போன்ற முக்கியத்துவமுடைய வேறு போக்கு எதும் இல்லை என்றும் வாதாடிய அவர், இப்போக்கின் முக்கிய பணி பட்டாளிவர்க்கப் புரட்சி, அதனுடைய அரசு, அதன் பணிகள் ஆகியன பற்றிய பிரச்சாரமே என்றார்:

நாங்கள் ‘ஃப்யூச்சரிசம் என்னும் சொல்லைத் தக்கவைத்துக் கொள்ளக் காரணம், அது பலரை ஒன்றுதிரட்டக்கூடிய பதாகையாக இருப்பதுதான் (வேறு பலரை அச்சுறுத்துகிற சோளக்கொல்லை பொம்மையாகவும் இது இருக்கக்கூடும்.) எங்களது ஓர்மை, வெகுமக்களுடைய ஓர்மையாகவும் ஆகிவிடும்போது, இந்தச் சொல்லை நாங்கள் கைவிட்டுவிடுவோம். ஃப்யூச்சரிசம் என்பது ஒரு பொதுப்படையான பெயர் என்பதும் இங்கு குறிப்பிடப்பட்டாக வேண்டும். எங்களுடைய தனிப்பட்ட பெயர் கம்ஃயூட்டி (கம்யூனிஸ்ட் ஃப்யூச்சரிஸ்ட்டுகள்) கருத்துநிலை (Ideology) அடிப்படையில் எங்களுக்கும் இத்தாலிய ஃப்யூச்சரிஸ்ட்டுகளுக்கும் பொதுவானது ஏதும் இல்லை.

பாட்டாளிவர்க்க சர்வதிகாரம், சோசலிச மாற்றம், பொருளாதாரத் திட்டம், மூன்றாவது சர்வதேசத் தொழிலாளர் சங்கம் (Third International), மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்பட வேண்டிய மாற்றம் ஆகியவற்றுக்கான பிரச்சாரமே கலையின் நோக்கம் எனக் கருதிய மயாகோவ்ஸ்கிக்கும் இடதுசாரிக் கலை முன்னணியில் (LEF) இருந்த வேறு சிலருக்கும் கருத்து வேறுபாடுகளும் பிணக்குகளும் தோன்றி, கடைசியில் அந்த அமைப்பு உடைந்து போயிற்று. புதிய குழுவொன்றை அமைத்துச் செயல்படத் தொடங்கினார் மயாகோவ்ஸ்கி. ஆயினும் அப்போதும்கூட அவர் ஃப்யூச்சரிசத்தைக் கைவிடவில்லை. அதைப் பின்பற்றி வந்த கலைஞர்களுடனான அவரது தொடர்வு அறுந்து போகவில்லை.

“நீங்கள் எழுதுவது, தொழிலாளர்களுக்கும் உழவர்களுக்கும் புரிவதில்லை” எனச் சிலர் மயாகோவ்ஸ்கியை விமர்சித்தனர். அதற்குப் பதிலளித்து 1928இல் அவர் எழுதினார்: “ஃப்யூச்சரிஸ்ட்டுகள் எனக்குப் புரிவதில்லை” என்னும் கூச்சலை மட்டும் வைத்துக்கொண்டு சிலர் பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்; நிதி திரட்டியுள்ளனர்; இலக்கியப் போக்குகள் சிலவற்றுக்குத் தலைமை தாங்கியுள்ளனர்.”

அவர் ஆற்றிய உரையொன்றில், பழைய, மரபான இலக்கியபடைப்புகள் பற்றிய தனது கருத்துக்களைக் கூறிய அவர், தனது கருத்துக்களை விமர்சன ரீதியாக மட்டுமே படிக்க வேண்டும் என்றார். “அவற்றின் (பழைய மரபான இலக்கியப்படைப்புகளின்) பிரம்மாண்டமான வெண்கல முதுகுகள் இன்று முன்னேறிச் சென்றுகொண்டிருக்கும் இளங் கவிஞர்களின் பாதையை அடைத்துக்கொண்டு நின்றிருக்க அனுமதிக்கக் கூடாது” என்றும் கூறினார்.

ஃப்யூச்சரிசம் என்னும் கொடியின் கீழ் திரண்ட கலைஞர்கள், முதலாளியக் கடந்த காலத்தோடு இருந்த தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக்கொண்டு, புதிய தொழில்மயமான சமுதாயத்தை, இயக்கவிசை கொண்ட சமுதாயத்தைத் தோற்றுவிப்பதற்கான அடித்தளங்களை நவம்பர் புரட்சி உருவாக்கியிருக்கிறது என்னும் பேருவகை கொண்டிருந்தார் அவர். எதிர்காலக் கலை, பாட்டாளி வர்க்கத்தன்மை வாய்ந்ததாகும் எனப் பிரகடனம் செய்த மயாகோவ்ஸ்கியும் பிற ஃப்யூச்சரிஸ்ட்டுகளும், “பூர்ஷ்வாக் கலை என்னும் பாழடந்த கோட்டையைத் தகர்த்தெறிந்து விட்டு, மனித ஆன்மா என்னும் உயிர்த்துடிப்புமிக்க தொழிற்சாலையைக் கட்டுமாறு” அனைத்துக் கலைஞர் களுக்கும் அறைகூவல் விடுத்தனர். செவ்வியல் கலைகள் (Classical Arts) மேட்டுக்குடியினரதும் நடுத்தர வர்க்கத்தினரதும் விழுமியங்களைச் சுமந்து கொண்டிருக்கின்றன என்றும், முதலாளியப் பண்பாடு, முதலாளியக் கருத்துநிலை உள்ளிட்ட கடந்தகாலப் பண்பாடு முழுவதையும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்றனர்.

நவம்பர் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்த ஃப்யூச்சரிஸ்ட்டுகளில், நவீன பாணிக் கலையின் (Modern art) முன்னோடிகள் எனக் கருதப்படும் வாஸ்ஸிலி காண்டின்ஸ்கி (Vassily Kandinsky), காஸிமிர் மாலெவிச் (Casimir Malevich), அலெக்ஸாண்டர் ரோட்செங்கோ (Alexander Rodchenko), கட்டடக் கலைஞர் விளாடிமிர் டாட்லின் (Viladimir Tattin), நாடக மேதை விஸெவெலோட் மெயர் ஹோல்ட் (Vservolod Meyerhold) ஆகியோரும் அடங்குவர். அவர்கள் நடத்திவந்த ‘ஃப்யூச்சரிச ஏடு’ என்னும் பத்திரிகையில் அவர்கள் வெளியிட்ட அறிக்கை கூறியது:

1. ஜார் ஆட்சி ஒழிக்கப்பட்ட இந்த நாள் முதல், மானுட மேதைமையின் அந்தரங்கக் அறைகளும் கொட்டகைகளுமான மாளிகைகள், கலைக்கூடங்கள், ஓவியக்கூடங்கள், நடக அரங்குகள் ஆகியன கலையின் உறைவிடங்களாக இருக்கும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுகிறது.

2. அனைவருக்கும் சமத்துவம் என்பதை நோக்கிய மாபெரும் பயணத்தின் பெயரால், பண்பாட்டைப் பொருத்தவரை, சுவர்களின் மூலைகள், தடுப்புகள், கூரைகள், நமது நகர, கிராமத் தெருக்கள், மோட்டர் வாகனங்களின் பின்புறங்கள், வண்டிகள், பேருந்துகள், அனைத்துக் குடிமக்களின் உடைகள் ஆகியவற்றில் படைப்பாளியின் சுதந்திர உலகம் தனது படைப்புகளைப் பதிக்கும்.

3. வண்ணமிகு வான வில்கள் போல (வண்ணங்கள்) ஓவியங்கள், தெருக்களிலும் சதுக்கங்களிலும் ஒவ்வொரு வீட்டின் மீதும் தெளிக்கப்படட்டும். வழிப்போக்கர்களின் கண்களுக்கு அவை களிப்பூட்டட்டும்.

4. கலைஞர்களும் எழுத்தாளர்களும் தமது வண்ணக் கலயங்களை ஏந்தி, தமது திறமை மிக்க தூரிகைகளைக் கொண்டு நகரங்கள், ரயில் நிலையங்கள், எப்போதும் பாய்ந்து செல்லும் மந்தைகளைப் போன்ற ரயில் பெட்டிகள் ஆகியவற்றின் எல்லாப் பகுதிகளையும் நெற்றிகளையும் மார்புகளையும் ஒளிரச் செய்வதும் அவற்றுக்கு வண்ணம் தீட்டுவதும் உடனடிக் கடமைகளாகக் கருதி அவற்றை நிறைவேற்ற வேண்டும். இன்றுமுதல், தெருக்களின் நடந்துசெல்லும் குடிமகன், அவனுடைய மாபெரும் சகமனிதர்களின் சிந்தனையின் ஆழங்களை அனுபவித்து மகிழட்டும். . . ஒவ்வொரு இடத்திலும் அவன் அருமையான இசையமைப்பாளர் களின் இசையை, இன்னிசையை, கர்ச்சனையை, ரீங்காரத்தைக் கேட்கட்டும். தெருக்களெல்லாம் மக்கள் அனைவருக்குமான கலை விருந்தாகட்டும்... கலைகள் அனைத்தும் மக்கள் அனைவருக்குமே.

இந்த அறிக்கையை அடுத்து, மயாகோவ்ஸ்கியும் அவரது தோழர்களும் தம் கலைகளைத் தெருக்களுக்குக் கொண்டு வந்தனர். அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய இடம் ஒவ்வொன்றிலும் அழகிய வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டன. அழகான வண்ணங்கள் தீட்டப்பட்ட பெட்டிகளடங்கிய ரயில் வண்டிகளில் கலைஞர்களும் நாடகாசிரியர்களும் எழுத்தாளர்களும் ஊர் ஊராகப் பயணம் சென்று புரட்சியின் பொருள், அதற்குள்ள முக்கியத்துவம், காலத்தின் தேவை ஆகியனவற்றை மக்களுக்கு விளக்கிக் கூறினர். கல்வி புகட்டும் நோக்கத்துடன் புரட்சிகர உள்ளடக்கமும் வடிவமும் கொண்ட சுவரொட்டிகள் ஆயிரக்கணக்கில் தயாரிக்கப்பட்டன. மயாகோவ்ஸ்கி மட்டும் பிரச்சாரக் கவிதைகளடங்கிய நாலாயிரம் சுவரொட்டிகளை இந்தக் காலகட்டத்தில் தயாரித்து வழங்கினார்.

கலைகள் அனைத்தையும் வெகுமக்களுக்குரியதாக்குதல், எல்லாக் கலைகளும் பயன்பாட்டு நோக்கத்திற்கே, சமூக ஆணைகளின் கீழ் படைப்புத் தொழிலை மேற்கொள்ளுதல் என்னும் முழக்கங்களின் கீழ் இடதுசாரிக் கலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் சில சமயம் அதி தீவிர எல்லைகளுக்கும் சென்றுவிட்டனர். மரபான கலைகள் பற்றிய அவர்களது முற்றிலும் எதிர்மறையான அணுகுமுறைகள், சில பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தின.

எந்த ஒரு விஷயத்திலும் தலையிடுவதற்கும் அதைப் பற்றிப் பேசுவதற்கும் தங்களுக்கு மட்டுமே தனி உரிமைகள் இருப்பதாகக் கருதியதும் முற்றிலும் எதிர்மறையான சில விளைவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பது அவர்களது நடவடிக்கைகள் சில தரும் படிப்பினையாகும்.
ஆனால், அவர்களது நடவடிக்கைகளை, சமுதாய - பண்பாட்டுத் துறையில் புரட்சிகரமாகத் தலையிட வேண்டிய ஒன்றே கலை என்னும் அவர்களது தத்துவச் சிந்தனையின் பின்னணியிலேயே புரிந்துகொள்ள வேண்டும். புரட்சிக்காகத் தங்களை முற்றிலுமாக அர்ப்பணிக்க முன் வந்தவர்கள் என்னும் அடிப்படையிலேயே புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் பின்னணியில்தான் 1920களில் சோவியத் யூனியனில் உருவான முக்கிய இலக்கியக் கோட்பாட்டினையும் புரிந்துகொள்ள வேண்டும். ‘கவிதைகள் பிறப்பது எவ்வாறு’ என்னும் தலைப்பில் மயாகோவ்ஸ்கி எழுதி வெளியிட்ட சிறு வெளியீட்டில் இக்கோட்பாடு விளக்கப்பட்டது. இதில் தனது குழுவினர் கூறும் ‘சமூக ஆணை’ (Social Command) என்னும் கருத்தை விளக்குகிறார். கவிதை எழுதுவதைப் பற்றித் தொழிலாளர்களுக்கும் உழவர்களுக்கும் கற்றுக்கொடுப்பதற்காகப் பல்வேறு இலக்கிய போதகர்களால் எழுதப்பட்ட பாட நூல்களைக் கடுமையாகச் சாடும் இந்தச் சிறுவெளியீடு உணர்ச்சிகரமான கருத்துப் போராட்டத் தொனியில் எழுதப்பட்டுள்ளது. ‘சமூக ஆணை’ பற்றிய விளக்கம் தருகிறார் மயாகோவ்ஸ்கி:

ஒரு விஷயத்தைச் சொல்வதற்குக் கவிதையைத் தவிர வெறெந்த வழிகளும் இல்லாமலிருக்கும்போது மட்டுமே உங்கள் பேனாவைத் தொடுங்கள். ஒரு தெளிவான சமூக ஆணையை நீங்கள் உணரும்போதுதான், நீங்கள் தயாரித்து வைத்துள்ள விஷயங்களை உங்களால் கலைப்படைப்பாக மாற்ற முடியும்.

சமூக ஆணையைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள, கவிஞன் விஷயங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் நடுவில் இருக்க வேண்டும். பொருளாதாரக் கோட்பாடு பற்றிய அறிவு, வரலாறு பற்றிய அறிவியல் ஆய்வில் மூழ்குதல் ஆகியன கவிஞனின் படைப்புக்கு மிகவும் அடிப்படையானவை.

சமூக ஆணையைக் கூடுமானவரை நன்கு நிறைவேற்ற நீங்கள் உங்கள் வர்க்கத்தின் முன்னணிப்படையாக இருக்க வேண்டும். உங்கள் வர்க்கத்தோடு சேர்ந்து எல்லா முனைகளிலும் போராட்டத்தை நடத்தவேண்டும். அரசியல் இல்லாத கலை என்னும் கட்டுக்கதையை நீங்கள் தூள்தூளாக்க வேண்டும். இந்தப் பழைய கட்டுக் கதை, ‘பரந்த வீச்சுடைய காவியத்தன்மை வாய்ந்த ஓவியச் சீலைகள்’ (முதலில் காவியத்தன்மை, பிறகு மெய்யார்ந்த தன்மை, கடைசியில் அரசியல் பற்றுறுதியற்ற தன்மை) அல்லது ‘மிக நேர்த்தியான பாணி’ (முதலில் நேர்த்தியான பாணி, பிறகு உன்னதமான பாணி, கடைசியில் தெய்விக அழகு வாய்ந்த பாணி) இன்ன பிறவற்றைப் பற்றிய பிதற்றலில் கீழ் புதிய வடிவங்களில் மீண்டும் தோன்றிக் கொண்டிருக்கிறது.

சமூக ஆணை என்பது சமூக யதார்த்தத்தில் கலைஞனின் தலையீடு ஆகும். அரசியலில் அறிவியல் சோசலிசம் எப்படியோ அது போலக் கலையில் சமூக ஆணை.
‘சமூக ஆணை’யும் மென்மையான மானுட உணர்ச்சிகளும் எதிரும் புதிருமாக இருக்க வேண்டியதில்லை என்பதற்கு மயாகோவ்ஸ்கியின் வாழ்க்கையும் கவிதைகளுமே சாட்சி, ‘போரும் அமைதியும்’ என்னும் அவரது கவிதையில் வெளிப்படுகிறது ஆழமான மனித நேயம் மென்னுணர்வு:

எனது பெரும் விழிகள்
எல்லோருக்கும் திறந்துவிடப்பட்ட கோவில் கதவுகள்
மக்கள்-
நேசிக்கப்பட்டோர்
நேசிக்கப்படாதோர்
தெரிந்தவர்
தெரியாதவர்
எல்லோரும்
எனது ஆன்மாவில் புகுகின்றனர்
முடிவில்லாத ஊர்வலமாய்

வெறும் பிரச்சாரக் கவிதைகளை எழுதுவது மட்டுமே அவருக்கு உவகை தந்ததாகக் கொள்ள முடியாது. ஆனால், எதற்கு எந்தச் சமயத்தில் முன்னுரிமை தர வேண்டும் என்பதைத்தான் அவர் வலியுறுத்தினார்:

எனக்குமே
பிரச்சாரக் கவிதைகள்
குமட்டல் ஏற்படுத்துகின்றன
காதல் கவிதைகள் எழுதுவது
அதைவிட உகந்ததாய் இருக்கும் -
வயிற்றுக்காகவும் பணத்துக்காகவும்
ஆயினும் நான் -
எனது கவிதையின் கழுத்தை மிதித்து
என்னை நான் அடக்கிக் கொள்வேன்.

ஆனால், இதே மயாகோவ்ஸ்கிதான் அற்புதமான காதல் கவிதைகளையும் எழுதியிருக்கிறார். 1928ல் எழுதப்பட்ட, ‘காதலின் சாரம், அதன் பொருள் ஆகியன பற்றி தோழர் கோஸ்ட்ரோவுக்கு பாரிஸிலிருந்து ஒரு கடிதம்’ என்னும் கவிதையின் வரிகள் இவை:

ஏன், இந்த மன நிலையில்
கரடிகூடச் சிறகு முளைத்துப் பறக்கும்
பிறகு, மூன்றாந்தர மது விடுதியில்
சிறிது நேரம் புழுங்கிக் கொண்டிருக்கும் ஒரு சொல்
விர்ரென்று விண்ணோக்கிப் பறந்து
தூமகேதுவாய் ஒளிரும்
அதன் வால் வான் பரப்பில் நீண்டு
அதன் தோகை வானத்து ஒளிவிளக்காய்த் திகழ
அதன் கீழ்
காதலர் அமர்ந்து
அதைத் தம் கண்ணுக்கு விருந்தாக்குவர்
தம் வானத்து லைலாக் மலர்களை முகர்ந்தபடி.
கட்டுரைக்கான தரவுகள்:

1. Vladimir Mayakovsky, selected works in three volumes, Reduga Publishers, Moscow, 1987

2. Herbert Marshal (complied), Myakovsky and his poetry, Pilot press, London, 1945.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com