Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

இந்தியாவின் வரலாறு - தமிழக வரலாறு
(பேரா.சிவத்தம்பியின் ஆய்வுப் பயணம் )
- வீ.அரசு

பேராசிரியர் கா. சிவத்தம்பி பவளவிழா கொண்டாட்டம் என்பது அவர் தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த பங்களிப்பிற்கு நன்றி பாராட்டும் விழா. “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு” என்பதைப் போல அவருக்கு நன்றி பாராட்டுவதாக நாம் சொல்லிக்கொண்டாலும் நமது மொழி, இலக்கியம், சமூகம் தொடர்பான நமக்குள் நாம் பேசிக்கொள்ளும் விழாவாகவும் இதனை நாம் கட்டமைத்துக்கொள்கிறோம். கடல் கடந்து, திணை கடந்து, புதுத்திணையில் வாழும்போது இப்படியான விழாக்களின் முக்கியத்துவம் கூடிவிடுவதாகவே கருதவேண்டும்.

பேரா. சிவத்தம்பி கடந்த ஐம்பது ஆண்டுகளில், தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த பங்களிப்பை, நாம் புரிந்துகொள்ளப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு, கட்டமைப்பு தொடர்பான அவரது பங்களிப்புகள்

தமிழ்ச் சமூகத்தில் செயல்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள், பாசுரங்கள், சாத்திரங்கள் வழி சமயங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய முறைமைகள்.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகத்தை விளக்கிக்கொள்வதற்கு அவர் புலப்படுத்திய நெறிமுறைகள்.

கடந்த மூவாயிரம் ஆண்டு காலத் தமிழ்ச் சமூகத்தின் இயங்கு நெறிகளை, அச்சமூகத்தின் ஊடாக வெளிப்பட்ட பிரதிகளை அடிப்படையாகக் கொண்டு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் பேராசிரியர் செயல்பட்ட போக்கைப் புரிந்துகொள்ளவே மேற்கண்ட பாகுபாடு. இதில் முதல் நிலையில் கூறப்பட்ட பண்டைத் தமிழ்ச் சமூகம் குறித்த பேராசிரியரின் ஆய்வுகளை உங்கள் முன் பகிர்ந்து கொள்வதற்கு இவ்வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். வேறு இருநிலைப்பட்ட போக்குகள் தொடர்பாக வேறு சந்தர்ப்பங்களில் பேசிக்கொள்ளலாம்.

பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய பேச்சு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உருவான புதிய சூழலை அடிப்படையாகக் கொண்டு நிகழத் தொடங்கியது. காலனியம், இந்தியா, இலங்கை போன்ற நிலப்பகுதிகளை ‘நாடாக’க் கட்டமைத்தபோது, அந்நிலப்பகுதிகளில் வாழ்ந்த/வாழும் மக்கள் கூட்டத்தின் மொழி தொடர்பான உரையாடல்கள் தொடங்கின. ஐரோப்பிய நாடுகளில் 14 ஆம் நூற்றாண்டு முதல் உருவான, தொழிற்புரட்சி அது சார்ந்த சமூக மாற்றங்கள், மறுமலர்ச்சிகள், உலகப் போர்கள் ஆகிய அனைத்தும் அந்தந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கூட்டத்தினையே அவர்களது அடையாளங்கள் அல்லது இருத்தல் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியபோது, அவர்களது மொழி தொடர்பான உரையாடல்களுக்குச் சென்றனர்.

இதனைப் புரிந்துகொள்ளுவதற்கு, உலகத்தின் / சூரியன் மறையாத பிரதேசமாகக் கட்டமைக்கப்பட்ட விக்டோரியா மகாராணியாரின் இலண்டன் மாநகரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான பல்வேறு ஆய்வு அமைப்புகளே சாட்சியங்களாக அமைகின்றன. (Aboriginess Protecton Society-1987, The Ethnological Society of London-1843, The Anthropological Society London-1863, The Royal Anthropological Institute-1871) இவ்வகையான அமைப்புகள், உருவாக்கத்தின் மூலம் உலகத்தின் பழம் நாகரிகங்கள் மற்றும் மொழிகள் கண்டறியப்படுகின்றன. அவை குறித்துப் பதிவுகள் உருவாக்கப்படுகின்றன. அருங்காட்சியகங்கள் கட்டப்படுகின்றன. அருங்காட்சியகங்கள் மூலம் கட்டமைக்கப்படும் சமூக வரலாறு தொடர்பான ‘அரசியல்’ பல் பரிமாணங்கள் கொண்டவை.

இந்தப் பின்புலத்தில், ஆசிய நாடுகளில்/இந்தியா/ இலங்கை நிலப்பகுதிகளில் வாழும் மக்களின் மொழி பற்றிய உரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வுரையாடலில் ஒற்றைப் பரிமாணமாக இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம் கட்டமைக்கப்படுகின்றது. அதில் பெரும்பங்கை மாக்ஸ்முல்லர் வகிக்கிறார். ஆசிய நாடுகளுக்கு ஒருமுறைகூட பயணம் செய்யாது லண்டனின் இருந்து செயல்பட்ட அவர், இந்தியா/இலங்கை நிலப்பகுதிகளைப் புனித தேயமாகக் கட்டமைத்து, அப்பகுதிகளில் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம் சார்ந்த மொழியே இருப்பதாகக் கட்டமைக்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முதல்மொழிப் பேராசிரியராக அவர் நியமிக்கப்படுகிறார். 1868இல், ஒப்புமொழி நூல் (Comparative Philogy) பேராசிரியர் பதவி வழங்கப்படுகிறது.

இந்தப் பின்புலத்தில் இந்திய/இலங்கை நிலப் பகுதிகளில் இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தைச் சாராத திராவிட மொழிக் குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பு நிகழ்கிறது. இந்தோ ஆரிய மொழியான சமசுகிருதம் மட்டும் இந்திய/நிலப்பகுதியின் மொழி என்பது எல்லீஸ் மற்றும் கால்டுவெல் ஆய்வுகளாலும் பின்னர் எமனோவின் ஆய்வுகளாலும் மறுதலிக்கப்படுகின்றது.

இந்தத் தருணத்தில் தமிழ்ச் சமூகத்தில் நமது பழம் பிரதிகள் அச்சுக்கு வரும்போது, மூன்றாம் முறையாகப் பழம் தமிழ்ப் பிரதிகள் அறியப்படுகின்றன. இந்நிகழ்வால், தமிழ்ச் சமூகம் குறித்த வரலாறு எழுதுநெறிகள் புதிய பரிமாணத்தில் செயல்படத் தொடங்கின. பிரதிகள் கண்டுபிடிப்புகள் மட்டுமின்றித் தொல்பொருள் ஆய்வுகளும் உடன் நிகழ்கின்றன. 1784இல் இந்தியத் தொல் பொருள் ஆய்வுத்துறை பிரித்தானியர்களால் உருவாக்கப்படுகின்றது. 1863 இராபர் புரூஸ் புட் என்பவர் ‘சென்னைக் கோடரி’ என்று அழைக்கப்படும் மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடரிகளைச் செங்கற்பட்டு அருகில் கண்டெடுக்கிறார்.

1838இல் ஜேம்ஸ் பிரின்ஸ்செப் கல்கத்தா அருங்காட்சியத்தில் உள்ள அசோகன் காசுகளில் ஒரு பக்கம் இலத்தீன் மொழி எழுத்துக்களும் இன்னொரு புறம் வேறு மொழி எழுத்துக்களும் இருப்பதைக் கண்டறிந்து, இலத்தீன் மொழியை வாசிப்பதின் மூலம் இன்னொரு பக்கம் இருந்த பிராமி எழுத்துகளை வாசிக்கத் தொடங்கினார். இதன் மூலம் இந்திய நிலப்பகுதியில் புழக்கத்தில் இருந்த எழுத்து வடிவமுறை ஒன்று கண்டறியப்பட்டது. இதனைக் காசுவியல் ஆய்வாளரான அலெக்சாண்டர் கன்னிகாம், 1902ஆம் ஆண்டில் காசுகளில் இவ்வகையான எழுத்து வடிவங்களைக் கண்டறிந்தார். இவ்வடிவங்கள் பற்றிய ஆய்வானது தமிழ்ச்சூழலில் 1930களில் தி. நா. சுப்பிரமணிய அய்யரால் மேற்கொள்ளப்பட்டது. தென்னிந்தியக் கல்வெட்டு தொகுதி 1890 இல் உல்ஸ் (Woltze) மூலம் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தருணத்தில்தான் சங்க இலக்கியப் பிரதிகள் அச்சு வாகனம் ஏறின. 1851-1940 என்ற கால இடைவெளியில் பல பரிமாணங்கள் சார்ந்து தமிழின் பழம் பிரதிகள் பதிவு செய்யப்பட்டன. அப்பிரதிகளையும் காசுகளையும் (1901இல் நிகழ்த்தப்பட்ட ஆதிச்ச நல்லூர் மற்றும் 1942இல் அரிக்கமேடு ஆய்வுகள் மற்றும் 1924 சிந்து சமவெளி அகழ்வாய்வுகள்) அடிப்படையாகக் கொண்டும் புதிதாகக் கண்டறியப்பட்ட திராவிட மொழிகளைக் கொண்டும் வரலாறு எழுதுநெறி புதிய முறையில் உருப்பெற்றது. இவ்விதம் உருவான வரலாறு எழுது நெறியில், ஈராஸ் பாதிரியார் தி.பி. சீனிவாச அய்யங்கார், வி. சி. இராமசந்திர தீட்சதர் ஆகிய பிறர் தமிழின் தொன்மை குறித்த ஆய்வுகளை நிகழ்த்தினர். இவர்களது ஆய்வுகளை அடிப்படையாகக்கொண்டு, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, மறைமலையடிகள், கா. சுப்பிரமணியப் பிள்ளை ஆகிய பிறர் பிற்காலங்களில் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதத் தொடங்கினார். இன்னொரு புறம் கனகசபைப் பிள்ளை ‘1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற ஆய்வு நூலைக் கொண்டுவந்தார். பின்னர் சிவராஜப்பிள்ளை ‘The Chronology of Early Tamils’ என்ற ஆய்வு நூலை எழுதினார்.

இவ்வாய்வு மரபுகளைப் பற்றிய விமரிசனம் என்பது இவை இலக்கியப் பிரதிகள் சார்ந்தவை, அகச் சான்றுகள் இல்லாதவை என்று பல நிலையில் பேசப்பட்டன. ஆனால் 1940களில் இரண்டாம் உலகப்போர் சார்ந்து உருவான மானிடவியல் ஆய்வுகளும் அது சார்ந்த மொழியியல் ஆய்வுகளும் உலகம் முழுவதும் மொழி ஒப்பாய்வு எனும் ஆய்வுத் தளத்திலிருந்து மொழியை மொழியியல் என்னும் மொழி சார்ந்த தர்க்கப்பூர்வமான ஆய்வுக்கு எடுத்துச் சென்றது. இச்சூழல் தமிழ்ச் சமூகத்திலும் நல்ல விளைவுகள் உருப்பெற வாய்ப்பாக அமைந்தது. பேராசிரியர் எமனோ, பர்ரோ, கமில்சுவலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர்கள் சங்க இலக்கியப் பிரதிகள், தமிழகத் தொல் பழங்குடிகள், தமிழ்மொழி ஆகியவை தொடர்பான ‘வரலாற்று மொழியியல்’ (Historical Linguistics) மற்றும் மானிடவியல் சார்ந்த ஆய்வுப் புலங்களுக்கு வழிகண்டனர். (இவர்களால் உருவாக்கப்பட்ட IATR அமைப்பு Tamil Culture என்ற இதழும் அதில் முக்கியமான பங்களிப்பை செய்ய தொடங்கியது)

தமிழகத்தில் பேரா.வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீ ஆகிய பிறர் மொழி இலக்கிய ஆய்வுகள், இத்தருணத்தில் சங்க இலக்கியப் பிரதிகளை வேறு கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பை வழங்கியது. பேரா. தனிநாயகம் அடிகள் அணுகுமுறை மற்றும் அவரது மாணவரான சிங்காரவேலு அவர்களின் மானிடவியல் நோக்கில் சங்க இலக்கியம் குறித்த அணுகுமுறை ஆகியவை, தமிழ்ச் சமூக வரலாற்றை, சங்க இலக்கியப் பிரதிகளைக்கொண்டு வேறு பரிமாணத்தில் கட்டமைக்க வழிகண்டது.

மேல் விவரித்தப் பின்புலத்திலிருந்து முற்றிலும் புதிதான பண்டைத் தமிழ்ச் சமூகம் குறித்து வரலாற்று ஆய்வை பேராசிரியர் கா. சிவத்தம்பி 1960-களில் தமது கலாநிதி பட்டத்தின் மூலம் மேற்கொண்டார். இவ்வாய்வு இதற்கு முன் தமிழ்ச் சமூகம் குறித்த வரலாற்று ஆய்வுகளை அடியொற்றியதாக அமையாது நவீன வரலாற்று வரைவியல் சார்ந்து அமைந்ததாகக் கருத முடிகிறது. அதனைப் பின்வருமாறு விவாதிக்க முடியும். அரச பரம்பரைகளின் அரசியல் தொடர்பான தகவல் எழுதுதல் எனும் வரலாறு எழுதுநெறி என்பதற்கு மாற்றாக, புவியியல் (Geopolitics) சார்ந்த அரசியல் வரலாறு எழுது முறையை அவர் நமக்குத் தருகிறார்.

நிலம் அதில் வாழும் மக்கள், அத்தன்மை சார்ந்து உருப்பெறும் பண்புகள், அதனைத் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் கட்டமைத்த முறை, இதிலிருந்த வரலாறு எழுது முறைமை நாம் எவ்விதம் கட்டமைப்பது என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் பேராசிரியர் ஆய்வுகள் அமைகின்றன. இதனைச் சுருக்கமாக ‘திணை மரபு’ சார்ந்த ஆய்வு என்று சொல்லமுடியும். இதனைப் புரிந்துகொள்ள அவரது கலாநிதி பட்ட ஆய்வின் ஒரு பகுதியை இங்கு மேற்கோளாகக் கொண்டு விவாதிக்க முடியும்.

பெரும்பாண் :46-62 வரிகளை அடிப்படையாகக் கொண்டு காட்டுப் பகுதி :

பள்ளத்தாக்கு, நீர்ப்பாசனப் பகுதிகள், மீன்பிடிப்பு பகுதிகள், கடற்கரைப் பட்டினங்கள் ஆகியவை குறித்த விரிவான ஆய்வை மேற்கொள்கிறார். இதன் மூலம், குலக்குழுக்களின் வாழ்முறை பற்றிய புரிதல் நமக்கு ஏற்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறார். அது பின்வரும் வகையில் அமைகிறது. “திணைக்கோட்பாடு’ என்பது தமிழரிடையே காணப்பட்ட அகவுறவுகளினதும் அசத்துவ சமூக அரசியல் ஒழுங்கமைப்பினதும் புதை வடிவம் ஆன செய்யுள் மரபு” (2005) இத்தன்மையை ஆற்றுப்படை நூல்களின் மூலம் விரிவாக ஆய்வு செய்கிறார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் எழுதிய ‘திணைக் கோட்பாடு’ என்ற கட்டுரை, இந்திய வரலாற்று ஆய்வாளர்களான ரொமீலா தாப்பார் ஆகிய பிறருக்குப் பண்டைத் தமிழ்ச் சமூக இயங்குமுறை குறித்தப் புதிய ஒளியைப் பெறுவதற்கு உதவியாகக் கூறுகிறார்கள். இப்பின்புலத்தில் பேராசிரியர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளான ‘அரசமைப்பு உருவாக்கம்’, ‘உயர்குடி மேட்டிமை வளர்ச்சி’, ‘முல்லைத் திணை ஒழுக்கம்’ ஆகிய ஆய்வுகள் முக்கியமானவை. கலாநிதி பட்ட ஆய்வில் பாண், பொருநர், புலவர், கோடியர், வயிரியர், கண்ணுளர், விறலியர் ஆகியோர் குறித்த ஆய்வுகளும் வெறியாட்டு, தை நீராடல், வாடா வள்ளி ஆகிய சடங்குகள் தொடர்பான ஆய்வுகளும் இந்திரவிழா, பங்குனி விழா, ஓண விழா, உள்ளி விழா, சுடர் விழா, நீர் விழா, பூந்தொடை விழா ஆகிய விழாக்கள் தொடர்பான ஆய்வுகளும் கூத்தர், பாணர், பொருநர், விறலியர் மற்றும் குறத்தியர், வேட்டுவர், ஆயர் தொடர்பான ஆய்வுகளும் தமிழ்ச் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள உதவும் ஆய்வுகளாக அமைகின்றன. துணங்கைக் கூத்து, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, சாக்கைக்கூத்து ஆகியவைத் தொடர்பான ஆய்வுகள், பண்டைத் தமிழ்ச் சமூக அரங்க வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.

சடங்கு, விழா, கூத்து சார்ந்து வெளிப்படும் நமது அகத்திணை மரபு சார்ந்து பேராசிரியர் செய்துள்ள பதிவு முக்கியமானது. “திணை உருவாக்கத்தின் புவி இயல் அடிப்படைகளும் அப்புவிஇயல் அடிப்படையின் சமூக நிர்ணயிப்புகளும் ஆண் - பெண் உறவை பாதிக்கின்ற முறைமையை நாம் அகத்திணை மரபு” என்கிறோம் (2005) என்கிறார்.

தமிழ்ச் சமூகத்தின் பிற்கால சமூக அமைப்பு குறித்துப் பேட்டன் ஸ்ரைன், நொபுறு கரோஷியா, சுப்பராயலு ஆகிய பலர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், சங்க காலம் எனக் கருதப்படும் பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை சமசீரற்ற சமூக அமைப்பு என்று கண்டறிந்து அதன் பல்பரிமாணங்களையும் தமது தொடக்கக் கால ஆய்வாக (1960-80) பேராசிரியர் நிகழ்த்தி இருக்கிறார். இவை இவ்வளவு காலம் ஆங்கில மொழியில் தான் இருந்தது. இப்போதுதான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அரசமைப்பு உருவாக்கம் குறித்து:

“நெகிழ்ச்சியான குடிமுறையிலிருந்து விடுபட்டு வளர்ச்சியடைந்த ஆற்றுப்படுகைகளில் அமைந்த நிலவுடைமை வேளாண்மை மற்றும் இதற்கென உருவான தலைவன் அரசனாக வடிவமைக்கப்பட்ட தன்மையைப் புலவர்களின் பாடல்கள் பேசுகின்றன.” என்கிறார்.

உயர்குடி மேட்டிமை வளர்ச்சி குறித்து:

“சமயங்கள், சாதிகள் இவற்றை நிலைநிறுத்தும் அமைப்புகளான மடங்கள் போன்றவை மூலம், மேட்டிமை வளர்ச்சி உருப்பெறுகின்றன.” பேராசிரியரின் இவ்வகையான வரலாற்று ஆய்வுகள் எப்பின்புலத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பது குறித்து விவாதிப்பது அவசியம். மாக்ஸ்முல்லர், ஜான் ஸ்டீவென்சன், மோனியர் வில்லியம்ஸ், எச்.எச். வில்சன் ஆகிய பலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்கத்தாவில் உருவாக்கப்பட்ட ‘ராயல் ஏசியாட்டிக் சொஸைட்டி’ (Royal Asiatic Society) மூலம் இந்திய வரலாற்றை எழுதினார். இவர்கள் 1846இல் மொழிபெயர்க்கப்பட்ட ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக வரலாற்றைக் கட்டமைத்தனர்.

அதுவே உலகம் முழுவதும் அறியப்பட்ட வரலாறாக இருந்தது. இதற்கு முற்றும் மாறாக, சங்க இலக்கியம், சிந்துவெளி, தொல் பொருள் ஆய்வுகள் வழியாகக் கட்டப்பட்ட பிறிதொரு வரலாற்றின் தர்க்கப் பூர்வமான கட்டமைப்பை பேராசிரியர் ஆய்வுகள் முன்னெடுக்கின்றன. அரசப் பரம்பரை ஆய்வுகளின் போதாமை, அதன் தர்க்கப் பூர்வ ஏற்பு முறைமை ஆகியவை ரிக்வேதம் தொடர்பான ஆய்வுகளோடு ஒப்பிடும்போது தென்னிந்திய சமூக ஆய்வுகளின் தர்க்கப் போதாமை இருந்தது. இத்தன்மை பேராசிரியர் ஆய்வுகள் மூலம் நிறைவு செய்யப்படுவதைக் காண்கிறோம். வடமொழி எனப்படும் சமசுகிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளின் பின்புலத்தில் உருவான வேதங்கள்/ ரிக்வேதம், பிராமணங்கள், உபநிடதங்கள், வியாகரணங்கள், புராணங்கள், காவியங்கள் ஆகிய மரபின் ஒப்பீடு சார்ந்து ஐரோப்பியர்கள் கட்டமைத்த ஆய்வுகள் இந்தியச் சமூக வரலாறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சூழலில், தென்னிந்திய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டவை, மேற்கூறப்பட்ட முறைகளுக்கு மாற்றான வேறொரு சமூக அமைப்பைக் காட்டுகின்றன என்ற ஆய்வை மார்க்சிய வரலாறு எழுதுமுறை சார்ந்து உருவாக்கியதில் பேராசிரியருக்குத் தனித்த இடமுண்டு.

இந்திய வரலாறு எழுதியலில் ராகுல் சாங்கிருத்தியாயன், கோசாம்பி பின்னர் ரொமீலா, ஹபீப் எனும் ஆய்வாளர்கள் / வடஇந்தியச் சமூகம் தொடர்பான விரிவான ஆய்வை மேற்கொண்டார்கள். இவர்களது ஆய்வுகள் மார்க்சிய வரலாற்று நெறிமுறை சார்ந்த ஆய்வுகள். குறிப்பாக ராகுல்ஜியின் ரிக்வேதம் சார்ந்த ஆய்வுகள் அவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. இந்திய இனக்குழுக்கள் தொடர்பான கோசாம்பி ஆய்வுகளும் அவ்வகையில் முக்கியமானவை. இந்தப் பின்புலத்தில் தென்னிந்திய சமூகம் பற்றிய ந. சுப்பிரமணியம், நீலகண்ட சாஸ்திரி ஆகிய பிறர் ஆய்வுகள், மானிடவியல், புவிஇயல் மரபு சார்ந்தவையாக அமையவில்லை. பேராசிரியர் ஆய்வுகளே அவ்வகையில் அமைந்துள்ளன. இதனை வரலாற்று அறிஞர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர். இவ்வகையில், காலனியம் கண்டெடுத்த இந்திய நிலப்பரப்பின் இருமொழி, இரு பண்பாடு என்பதன் அடிப்படையாக இன்னொரு வரலாறு பேராசிரியரால் விரிவாக உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டிருகின்றது. இது இவருடைய மிக முக்கியப் பங்களிப்பு எனக் கூறமுடியும்.

மேலும் ஆய்வுகள் என்பவை நிகழ்த்தப்பட்ட காலத்திலிருந்து, சம காலத்திற்கு வரும்போது, அவை புதிய ஆதாரங்களால் வலுவிழந்து போகும் வாய்ப்பு மிகுதி. பேராசிரியரின் ஆய்வுகள் அவ்விதம் நிகழவில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஐராவதம் மகாதேவனின் பிராமி எழுத்துத் தொடர்பான ஆய்வுகளும் இவரது ஆய்வுகளும் சந்திக்கும் புள்ளிகளில் முரண் பாடுகளைக் காணமுடியவில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com