Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜூன் 2009

தமிழ் மாநாட்டுத் தழும்புகள்

அறிஞர் அண்ணா தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டு ( 1968 ), தலைநகர் சென்னை தமிழுணர்வால் குலுங்க, இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. ஒரு பக்கம் ஆராய்ச்சி அரங்குகளும், மறுபக்கம் மக்கள் வெள்ளத்தில் மாநாடுகளுமாகப் பத்து நாள்கள் ஊரே பரவசத்தில் ஆழ்ந்திருந்தது. அப்போதுதான், சென்னைக் கடற்கரைச் சாலையில், வள்ளுவர், இளங்கோ, ஔவையார், கண்ணகி முதலான 10 சிலைகள் அமைக்கப்பட்டன. இன்றும் அம்மாநாட்டு நினைவுகள் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளன.

ஆனால் அதே மாநாடு, 1974 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது, சிங்களக் காவல் துறையின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி ஒன்பது தமிழர்கள் பிணங்களாய் விழுந்தனர். பலர் படுகாயமுற்றனர். இன்றும் அம்மாநாட்டு நினைவுகள், ஈழ மக்களின் நெஞ்சங்களில் மாறாத வடுவாக இடம் பெற்றுள்ளன.

1960 களில் ஈழத்ததைச சேர்ந்த அருட்தந்தை தனிநாயகம் அடிகளாரின் பெருமுயற்சியினால் உலகத் தமிழாராயச்சி மன்றம் ஒன்று தொடங்கப்பட்டது. அம்மன்றத்தின் சார்பிலேயே, உலகெங்கும் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பெற்றன.

முதல் மாநாடு, 1996 ஆம் ஆணடு, மலேசிய அரசின் ஆதரவுடன், கோலாலம்பூரில் நடைபெற்றது. அப்போது அது அறிஞர்களின் ஆய்வு மாநாடாக மட்டுமே இருந்தது.

1968 இல், அண்ணா அதனைச் சென்னையில் நடத்தியபோது, அது மக்கள் மாநாடாக மலர்ந்தது.

1971 ஆம் ஆண்டு, பிரான்சு நாட்டின் ஆதரவோடு, மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு, பாரீசில் நடைபெற்றது. அது, முதல் மாநாட்டைப் போல, ஆய்வு மாநாடாக அமைந்தது.

பாரீசில் முடிவெடுத்தபடி, அடுத்த மாநாடு, 1974 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் நடைபெற வேண்டும். தமிழீழம், தமிழர்களின் இன்னொரு தாயகம் என்பதால், மறுபடியும் மக்கள் வெள்ளம் சூழ, எழுச்சிமிகு மாநாடாக நடத்த எல்லா ஏற்பாடுகளும் தொடங்கின.

ஆனால், முதல் மூன்று மாநாடுகளுக்குக் கிடைத்ததைப் போல, அரசின் ஆதரவு தமிழீழ மக்களுக்குக் கிடைக்கவில்லை. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ்ப் பகுதி அமைப்பாளரும், யாழ்ப்பாண நகர மேயரான ஆல்பிரட் துரையப்பா ஒரு தமிழராய் இருந்தும், மாநாட்டை நடத்துவதற்கு எல்லா வகையிலும் தடையாய் இருந்தார். பல்வேறு நாடுகளிலிருந்து அறிஞர்கள் வருவதாலும், ஆல்பிரட் துரையப்பா கொடுத்த தொல்லைகளாலும், கொழும்பிலேயே மாநாட்டை நடத்திவிடலாமா என்று கூடச் சிந்தித்தனர். இறுதியில், யாழ்ப்பாணத்திலேயே நடத்துவதென முடிவெடுத்தனர்.

1974 ஆம் ஆண்டு, சனவரி 3 ஆம் நாள் தொடங்கி, ஏழு நாள்கள் மாநாடு நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. ஊரே விழக் கோலம் பூண்டது. அன்றைய தினம், யாழ் நகரம் எப்படியிருந்த தென்பதை ஒரு தமிழீழத் தமிழரின் வரிகளிலேயே பதிவு செய்து கொள்வோம் :

“ மாநாட்டுக்கு வருகைதரவிருக்கும் கல்விமான்கள், அறிஞர்கள், அயல்நாட்டு மக்களை வரவேற்பதற்காக மாநகரத்தைத் துப்புரவு செய்யத் தொடங்கினர். வீதிகள் தோறும் வாழைகள் நட்டு , தோரணங்கள் கட்டி மகிழ்ந்தனர். சப்பறங்கள், சிகரங்கள் எனச் சந்திக்குச் சந்தி அலங்கரித்துக் கொண்டார்கள். மின்கம்பங்களில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகளில் இருந்து நாதஸ்வர, மேள தாள வாத்தியங்களும், தமிழ் மணக்கும் நல்லிசைப் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருந்தன. ஒட்டுமொத்தத்தில், தமிழ் மக்கள் தங்களின் தாய்மொழி வாழ்வதற்காக தமது உழைப்பின் பெரும் பொழுதை மாநாட்டுக்காகச் செலவழித்தார்கள். நாள்கள் நகர, நகர, நகரமே களைகட்டத் தொடங்கியது. அயல் கிராமங்களிலிருந்து அலையலையாக மக்கள் வந்து குவிந்துகொண்டிருந்தார்கள். அனைவரது முகங்களிலும் மகிழ்வின் பூரிப்பு பொலிந்திருக்க, தமிழாராய்ச்சி மாநாடு தொடங்கியது ”

இவ்வளவு எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் தொடங்கிய மாநாடு, ஒவ்வொரு நாளும் மேலும் எழுச்சி பெற்றது. இறுதி நாள் நிகழ்வுகளில் நாடே திரண்டது போல் பெருங்கூட்டம் கூடியது.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம், வீரங்கொள் கூட்டமாய்க் கூடுவதைச் சிங்களர்களால் பொறுக்க முடியவில்லை. பல ஊர்களிலிருந்தும் யாழ் நோக்கி வந்த மக்கள் தடுக்கப்பட்டனர். ஆனால், பருத்திக்துறை வழியாக யாழ்நோக்கி வந்த இளைஞர்கள், முத்திரைச் சந்தியில் மறிக்கப்பட்டபோது, பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் திரும்பிப் போக மறுத்துச் சாலையில் அமர்ந்தனர். சிங்களரை எதிர்த்தும், அவர்களுக்குத் துணைபோகும் மாநகர மேயர் ஆல்பிரட் துரையப்பாவை எதிர்த்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

வேறு வழியின்றி, சில மணி நேரத்துக்குப் பின்னர், அவர்கள் யாழ் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில், வீர சிங்கம் மண்டபமும், வீதிகளும் நிறைந்து வழிந்தன. அருகிலிருந்த காவல் நிலையயத்திற்குக் காவல் அதிகாரிகள் வந்து செல்ல இயலாமல் திணறினர்.

அது ஒன்றே சிங்களருக்குப்போதுமானதாக இருந்தது. பதையை மறிப்பதாய்ச் சொல்லி, கூட்டத்திறகுள் புகுந்து மக்களை வேட்டையாட முடிவு செய்தனர்.

மாநாட்டு அரங்கில், தமிழகத்திலிருந்து வந்திருந்த பேராசிரியர் நைனா முகம்மது, “ எங்கள வாழ்வும், எங்கள் வளமும்... ”எனத் தொடங்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடலை முழங்கிக் கொண்டிருந்தார். மக்கள் வரவேற்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று பரபரப்பு. யாழ் காவல்துறைத் தலைவர் சந்திரசேகர தலைமையில், கண்ணீர்ப் புகைக் குண்டுகளோடும், துப்பாக்கிக் குண்டுகளோடும் காவல்படை ஒன்று, கூச்சலிட்டபடி உள்ளே புகுந்தது.

என்ன நடக்கிறது என்று உணரும் முனபே, கடுமையான தடியடிகள், கண்ணீர்ப் புகை, வெடிச்சத்தம். மக்கள் கலைந்து ஓடினர். துப்பாக்கி சுட்டதில், மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்தது, அறியாமல் அதில் கால் வைத்தவர்கள் தூக்கியயறியப்பட்டனர். ஒன்பது பேர் பிணமாயினர்.

விழா மேடை, பிண மேடையானது. களிப்பு மறைந்து, கண்ணீர் பெருகியது.

அன்று அங்கு பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்க எந்த விசாரணையும் நடத்தவில்லை. எவரையும் தண்டிக்கவில்லை. வங்காளிகள் மாநாட்டிலோ, பஞ்சாபிகள் மாநாட்டிலோ, இப்படி நடந்திருந்தால் இந்தியா கொதித்து எழுந்திருக்காதா ? அது தமிழர் மாநாடு என்பதால், தட்டிக் கேட்க நாதியில்லாமல் போய்விட்டது.

அப்போது ‘ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ’ என்ற ஒன்றே தோன்றியிருக்கவில்லை. பிரபாகரன் என்னும் பெயரும் அறியப்படாததாகவே இருந்தது.

அடுத்த ஆண்டு, ஆல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்ட பிறகுதான், பிரபாகரன் என்னும் ஒருவரைச் சிங்களக் காவல்துறை தேடச் தொடங்கியது. தமிழீழ மக்களும் அந்த இளைஞனைத் தேடத் தொடங்கினர்.

இரண்டு தேடல்களும், வெவ்வேறு நோக்கம் உடையவை என்பதை உலகம் அறியும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com