Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
அக்டோபர் 2008
வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத் துளிகள்

ஆ. கிருட்டினசாமி

நில உருண்டையின் வடமுனையும், தென் முனையும் புல் பூண்டு கூடக் காணப்பெறாத பனிப் பரப்புகள். தென் முனையில் உள்ள அன்டார்டிகாவிற்குச் சென்று ஒன்றரை ஆண்டுகள் அறிவியல் ஆய்வாளர்களுக்குத் தலைமை தாங்கிப் பல சிறப்புகளைப் பெற்றவர் தமிழர் என்பதும், தமிழர்களின் செல்வம் சங்கமித்ராவின் இளவல் என்பதும் அறிய, சிந்தனையாளன் படிப்பவர்கள் மகிழ்வர். அந்த வீரர் இந்திய இராணுவத்தில் தலைமைப் பொறிஞராகப் பணியாற்றிய கர்னல் கணேசன். அவர் அன்டார்டிகா பயண அனுபவத்தைச் சுவைபடவும், சிறப்பாகவும் தமிழில் வெண்பனிப் பரப்பில் சில வியர்வைத் துளிகள் என்ற நூலில் வடித்தெடுத்திருக்கிறார்.

தலைப்பே உட்கருத்தை விளக்குவதுபோல் உள்ளது. நீர் உறையும்போது வெப்ப தட்ப நிலை டிகிரி. அதற்கும் கீழே -10 டிகிரியிலிருந்து -75டிகிரி வரை தட்ப நிலை உள்ள பனிப் பாலையில் எப்படி வியர்வை வந்தது என்ற வினா எழலாம். நூலில் உட்புகும்போது இதற்கு விடை கிடைக்கும். தூசியில்லா மாசற்ற சுற்றுச் சூழ்நிலை இருந்தாலும் பனிப் பிளவுகள், பனிக் கத்திகள், பனிச் சூறைக் காற்று போன்றவை உயிர் குடிக்கும் இடர்களைத் தரவல்லன. ஆறு மாதங்கள் இரவும், ஆறு மாதங்கள் பகலும் உள்ள இடம். பகலவன் முற்றிலும் தோன்றாத நாள்களும் உண்டு. பகலவன் முற்றிலும் மறையாத நாள்களும் உண்டு. கதிரவன் உச்சியில் தோன்றாமல் பக்கவாட்டில் கீழ்வானில் தோன்றி மறையும் நிலையை நாம் கற்பனைக் கண்கொண்டுதான் பார்க்க முடியும்.

கடந்த இருநூறு ஆண்டுகளாகத் தென்முனையை (தென் துருவத்தை) ஆய்வதில் மேல் நாட்டினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியில் உயிர் இழந்தவர்கள் ஏராளம். இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியில் பல நாடுகள் அன்டார்டிகாவில் ஆய்வுக்கூடங்களை அமைக்கத் தொடங்கின. இந்தியாவும் 1981ஆம் ஆண்டு இம்முயற்சியில் ஈடுபட்டது. நில உருண்டையின் வட பகுதியில் உள்ள நமக்குக் குளிர் காலமாக இருக்கும்போது, தென்முனையில் கோடை காலம். 1981 திசம்பரில் முதல் இந்திய ஆய்வுக்குழு அன்டார்டிகா சென்றது. பத்து நாள்கள் மட்டுமே தங்கியது. 1982 பிப்பிரவரியில் இரண்டாவது ஆய்வுக்குழு அங்கு சென்று நிரந்தர ஆய்வுக்கூடத்தை அமைக்க தொடக்க வேலைகளைச் செய்து திரும்பியது. 24.2.1984இல் தட்சண் சகோதரி என்று அழைக்கப்பட்ட இரண்டு அடுக்குக்கொண்ட ஆய்வுத் தளம் கட்டி முடிக்கப்பட்டது. அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் ஓர் ஆய்வுக்குழு குளிர் காலத்திலும் தங்கி வந்தது.

ஏழாவது ஆய்வுக்குழு (அய்ந்தாவது குளிர் காலக்குழு) 1987இல் சென்றது. அக்குழுவிற்குக் கர்னல் கணேசன் தலைமை ஏற்றார். 28.11.1987 அன்று கோவாவிலிருந்து புறப்பட்டு 26.3.1989 கோவா திரும்பிய வரையில் உள்ள இடைப்பட்ட 16மாத காலத்தில் நிகழ்ந்தவைகளும், அதற்கு முன்னர் செய்த ஆயத்தப் பணிகளும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

அய்ந்தாவது குளிர்காலக் குழுவிற்கு இரு பணிகள் இருந்தன. 1. வழக்மான ஆய்வுப்பணி, 2. புதிய ஆய்வுக்கூடம் கட்டும் பணி. 26.11.1987 அன்று கோவாவில் புறப்பட்ட கப்பல் 20.12.1987 அன்டார்டிகா கடற்கரையை அடைந்தது. இந் நெடும் பயணத்தில் வழி நெடுகிலும் கண்டவைகள் விளக்கப்பட்டுள்ளன. படிப்போர் நம் நில உருண்டையையும், பருவ மாற்றங்களையும் நன்கு விளங்கிக்கொள்ள முடியும். ஆய்வுக் கூடம் கடற்கரையி லிருந்து 15 கி.மீ. தள்ளி இருந்தது. ஆய்வுக் கூடத்திற்கும், கப்பலுக்கும் இடையே போக்குவரத்து உலங்கு ஊர்தி மூலமாகத்தான் நடைபெறும். எடைமிகுந்த பொருள்களைக் கொண்டுவர மட்டும் கனரக ஊர்திகள் பயன்படுத்தப்படும்.

தடயங்கள் ஏதும் இல்லாப் பனிப் பரப்பில் கப்பலிலிருந்து பொருள்களை எடுத்துச் சென்றதே ஒரு வரலாறு. ஒரு மாத காலம் நான்காவது குளிர்காலக் குழுவும் அய்ந்தாவது குளிர்காலக் குழுவும் இணைந்து புதிய ஆய்வுக் கூடத்திற்கான தொடக்கப் பணிகளைச் செய்தன. புதிய குழுவினர் கப்பலிலும் தற்காலிகக் கூடாரத்திலும் தங்கினர். உணவிற்கு மட்டும் பழைய ஆய்வுத் தளத்திற்குச் சென்றனர். நான்காவது குளிர்காலக் குழு சென்றபின் 27.10.1988 அன்று கர்னல் கணேசன் தலைவராக முழுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இயற்கையின் கடுமை மட்டுமின்றி, கவனக் குறைவால் ஏற்படும் இன்னல்களும் ஏராளம். பனிப்புயல் வீசும்போது கப்பல் கரையைவிட்டு விலகிச் செல்வதும் புயல் நின்றபின் கப்பல் கரையை அடைவதும் கையாளப்படும் ஓர் உத்தி. கப்பல் கரையில் இருந்தபோது கனமான பொருள்களை ஏற்றிவர இரு ஊர்திகள் கப்பலை நோக்கிச் சென்றன. பனிப்பரப்பில் தடயங்கள் ஏது? ஓர் ஊர்தி பனிப் பிளவில் மாட்டிக்கொண்டு கவிழ இருந்தது. பள்ளத்தில் விழுந்திருந்தால் ஊர்தியும் ஆள்களும் காணாமல் போய் இருப்பார்கள். நல்வாய்ப்பாகப் பின் சக்கரங்கள் மேலே இருந்ததால் மீட்க முடிந்தது. ஆய்வுத் தளத்திலிருந்து சற்று தள்ளியிருந்த தற்காலிக அலுமினியக் குடியிருப்பறைகள் எண்ணெய்யால் எரியும் கருவியினால் சூடுபடுத்தப்படும்போது ஒருநாள் தீப்பிடித்துக் கொண்டது. இவ்வாறு பல நிகழ்வுகள்.

இக்குளிர்காலக் குழுவில் கர்னல் கணேசனுடன் கனரக ஊர்திகளை இயக்கவும், பராமரிக்கவும் நான்கு பொறியாளர்கள், ஒரு தச்சர், ஒரு மின்சாரப் பராமரிப்பாளர், ஒரு தகவல் தொடர்பு அதிகாரியுடன் இரு உதவியாளர்கள், ஓர் அறுவை மருத்துவர். ஒரு சமையல்காரர், இரு வானிலை ஆய்வாளர்கள், ஒரு நிலகாந்த ஆய்வாளர் உள்பட 14 பேர்கள் இருந்தனர். இந்த 14 பேர்களையும் ஒன்றரை ஆண்டுகள் மனத்தளர்வு இல்லாமல் கடமைகளைச் செய்திட எடுத்த முயற்சிகள் நூல் முழுவதும் விவரிக்கப்பட்டுள்ளன. ஓர் ஆண்டில் ஒரு பாதிக் காலம் இரவாகவும், மீதிக் காலம் பகலாகவும் இருக்கும். இந்நூலைப் படித்து முடிக்கும்போது நாமே அன்டார்டிகாவிற்குப் போய்வந்த உணர்வும் அறிவும் பெறுகிறோம்.

0 டிகிரி தட்பநிலைக்குக் கீழ் உள்ள சுற்றுச் சூழலில் வாழ்வது எவ்வளவு இடர் மிகுந்தது என்பதை எழுத வேண்டியதில்லை. உடலைக் குளிரிலிருந்து காக்கப் பல வசதிகளைச் செய்யமுடியும். அதைவிடக் கடினமானது. தனிமை வாழ்க்கையும், சாவு எந்த நேரமும் நிகழலாம் என்ற அச்சமும் உள்ள நிலையில் வாழும் மனிதர் மனநிலை எவருக்காயினும் மிக்க உளைச்சலுக்கு உள்ளாவது இயற்கையே. இத்தகை மனநிலையில் அனைவரையும் ஒருங்கிணைத்து உற்சாகத்துடன் வைத்திருப்பது எளிதல்ல. ஆய்வுத்தளத்தைப் பராமரிப்பது மாபெரும் பணி. எந்நேரமும் ஆய்வுத்தளத்தைச் சூடாக வைத்திருக்க வேண்டும். மின் உற்பத்தி இயந்திரங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

நீண்ட நாள்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பாதுகாக்கவேண்டும். ஆய்வுத் தளத்திற்கு வெளிப்புறத்தில் படியும் பனியை நீக்கவேண்டும். இப்படிப் பற்பல பணிகளைச் செய்யவேண்டும். அங்கு சென்றதின் நோக்கம் 1. வானிலை ஆய்வும், நிலகாந்த ஆய்வும், 2. புதிய ஆய்வுத்தளக் கட்டட வேலைகளை மேற்கொள்வது. இந்தப் பணிக்கு இருக்கும் ஆள்களைத் தவிர ஆய்வுத் தளத்தைப் பராமரிக்கவும் குழுவினரின் நலன்களைக் காக்கும் மருத்துவரும் சமையல் காரரும் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணிசெய்யவும் தளர்வின்றி மகிழ்ச்சியோடு இருக்கவும் ஏற்ற பத்து வழிகாட்டுதல்களை அனைவரும் ஏற்கச் செய்தார், தலைவர் கணேசன்.

1. அவரவர் பணியில் பெருமிதம் கொள்ளுதல்
2. தனிமையைத் தவிர்த்துக் கூடிப் பழகுதல்
3. ஓய்வு நேரச் சிந்தனை படிப்பு, செய்கை ஆகியவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல்.
4. வாரம் ஒரு முறை பூசை.
5. இரவு உணவு அனைவரும் ஒன்றுகூடி உண்ணுதல்.
6. ஒருவர் பணிக்கு மற்றவர் உதவுதல்.
7. சமையல்காரருக்குத் தொல்லை தராமல் இருத்தல்.
8. பொது இடங்களைத் தூய்மையாகப் பராமரித்தல்.
9. கழிவறையை எப்போதும் தூய்மையாக வைத்திருத்தல்.
10. அவரவர் அவரவர்களது தலைமையகத்துடன் தொடர்பு கொண்டா லும் செய்திகளை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுதல்.

இந்த நெறிமுறைகள் பயனுள்ளதாக இருந்தன. அரசாங்க அலுவலகங்களுக்கு ஒரு மனு அல்லது வேண்டுதல் அளித்தால் அலுவலர்கள் பாராமுகமாக இருப்பது யாவரும் அறிந்ததே. அன்டார்டிகா குழுவின் வேண்டுதல் மட்டும் விதிவிலக்கா? கர்னலின் குழுவிற்குக் கடல்வள மேம்பாட்டுத் துறை அனுப்பிய குளிர்கால உடைகளுள் கையுறைகள் பொருத்தமானதாக இல்லை. அவர்களைத் தொடர்பு கொண்டபோது வரவிருக்கும் இரசிய நாட்டுக் குழுவினரிடம் கொடுத்து அனுப்புவதாகவும், அதனுடன் குழுவின் உறவினர்கள் எழுதிய கடிதங்களையும் கொடுத்து அனுப்புவதாகவும் கூறினர். உறவினர்களிடம் தொடர்புகொண்டு கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இரசியக் குழு வந்தது. கையுறைகளோ, கடிதங்களோ வரவில்லை. போக்குவரத்து இல்லாத அன்டார்டிகாவில் நிலவும் கடும் குளிரின் விளைவகளைப் பற்றி அறியாத அலுவலர்கள் கடல்வள மேம்பாட்டுத் துறையில் இருக்க முடியாது. ஆயினும் பாராமுகம் ஏன்? தனித்துவிடப்பட்ட குழுவினரின் ஏமாற்றமும் சோர்வும் பணியைப் பாதிக்காமல் இருக்க, கர்னல் கணேசன் பல வழிகளில் குழுவினரை ஊக்குவித்தார்.

தமிழகத்திலிருந்து அய்வர். கேரளத்தி லிருந்து மூவர். ஆந்திரம், அசாம், இமாச்சலம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தராஞ்சல், மகராட்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஒவ்வொருவர். என இக்குழுவில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். நீங்கள் உலகிலேயே மிகத் துணிந்தவர்களின் இடையில் இருக்கிறீர்கள். நீங்கள் 85கோடி மக்களின் பிரதிநிதிகள். என்ற வரிகளை ஆறு அங்குல உயரம் உள்ள பெரிய எழுத்துகளில் எழுதி நுழைவாயிலில் வைத்தார்.

பகலவன் முற்றிலும் தோன்றாத ஏப்பிரல் 18இல் துருவ இரவு தொடங்கியது. நாள் முழுவதும் இரவு. நல்வாய்ப்பாக நிலா ஒளி முழுநாளும் இருந்தது. அடுத்த ஆறு மாதங்களில் நடந்த நிகழ்வுகளை விறுவிறு ப்பாக கணேசன் வரைந் துள்ளார். அன்டார்டிகாவின் பெரும் பகுதி கடல் மட்டத்திற்குக் கீழே உள்ளது. மேலே உறைபனி மூடிக் கிடக்கும். குளிர் காலத்தில் பனிக்கட்டியின் மீது ஊர்திகள் செல்லமுடியும். ஆகவே முடிந்தவரை பணிகள் நடைபெற்றன. கதிரவன் முற்றிலும் தோன்றாத இருமாதங்களில் பனியும் குளிரும் மிகக் கடுமையாக இருந்தன. வெளியில் செல்வது இயலவில்லை. செயலற்ற மனம் பேய்களின் தொழிலகம் என்ற பழமொழியை மனத்தில் கொண்டு பல உள்ளிருப்பு நிகழ்ச்சிகளைக் கர்னல் ஏற்பாடு செய்தார்.

மாதாந்திரப் போட்டிகள்:

ஏதாவது ஒரு பொருள்பற்றிப் பேசுதல்
இருப்பிடத்தை மகிழ்விடமாக்க ஆலோசனைகள்
இருட்டில் வழி கண்டுபிடித்தல்
பனிப் பிளவில் விழுந்தால் காப்பாற்றும் பயிற்சி
பிரிந்த கனரக ஊர்திகளின் பாகங்களைப் பொருத்துதல்.
சமையல் போட்டி.
கண்கட்டு விளையாட்டு.
பீஸ் சவால் (20 அறைகூவல்கள்) என்ற விளையாட்டு ஒருவர் மனத்தில் உள்ளதை மற்றவர்கள் 20 கேள்விகளுக்குள் கண்டுபிடிக்கவேண்டும். பிறந்த நாள், திருமண நாள் கொண்டாடுதல், விடுதலை நாள், குடியரசு நாள் போன்ற பல நிகழ்ச்சிகள். இந்தியர்களின் பெருமைகளைக் கூறிய கர்னல் கணேசன் சிறுமைகளையும் கூறத் தயங்கவில்லை.

அடுத்த குழு திசம்பர் 1988இல் அன்டார்டிகா துறைமுகம் வந்தடைந்தது. எட்டாவது ஆய்வுக்குழுத் தலைவருடன் கங்கோத்ரியில் தங்கப்போகும் குளிர்காலக் குழுவின் தலைவரும் புதிய ஆய்வகமான மைத்ரியில் தங்கப் போகும் குளிர்காலக் குழுவின் தலைவரும் 23.12.1988 அன்று உலங்கு ஊர்தியில் கங்கோத்ரி வந்தடைந்தனர். சுற்றுச்சூழ்நிலை மற்றும் தனிமையின் தாக்கத்திலும் பழைய குழுவினர் உற்சாகத்துடன் இருப்பதைக் கண்டு வியந்தனர். இச்செய்தி கப்பலில் உள்ளவர்களுக்கு எட்டியது. கப்பலில் உள்ளவர்கள் பழையவர்களை அழைத்துப் பல விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

புதிய குழுவின் பெரும் பணி மைத்ரி ஆய்வுத் தளத்தைக் கட்டி முடிப்பது. பழைய குழு வந்தபோதே கங்கோத்ரி பெரும்பாலும் தரைமட்டத்திற்குக் கீழே புதைந்து விட்டது. மீதி இடத்தையும் கிட்டத்தட்ட முழுவதுமாகப் பனி மூடிவிட்டது. ஆகவேதான் உயரமான மாற்று இடத்தைத் தேர்ந்து எடுத்து மைத்ரியைக் கட்டத் தொடங்கினார்கள். கர்னல் கணேசன் தலைமையில் இயங்கிய குழு 2.3.1989 அன்று அன்டார்டிகாவி லிருந்து புறப்பட்டு 26.3.1989 அன்று கோவா துறைமுகத்தை வந்தடைந்து. தில்லியில், அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.ஆர். நாராயணன் (பின்னாளில் குடியரசுத் தலைவர்) இக்குழுவிற்குப் பாராட்டு விருந்தளித்தார்.

ஒரு சிற்றூரில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து தொழிற்கல்வி பயின்று தமிழ்நாட்டு அரசு ஊழியராக இருந்தவர் பாவாடை கணேசன். 1962இல் சீனாவிடம் தோல்வி கண்ட இந்தியா, இராணுவத்தை வலுவாக்க முயன்றபோது பாவாடை கணேசனும் இராணுவத்தில் சேர்ந்தார். இவரின் வரலாறு இளைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியாக விளங்கும்.

இந்நூலைப் படித்து முடிக்கும்போது, நாமே அன்டார்டிகா விற்குப் போய்வந்த உணர்வும், அறிவும் பெறுகிறோம். இந்த நில உருண்டையின் அமைப்பு, தட்பவெப்ப நிலை, காலமாற்றம், இயற்கையின் சீற்றங்கள். அறிவியல் ஆய்விற்கு உயிரையும் பணயம் வைக்கும் மனிதர்கள். அவர்கள் உறும் அல்லல்கள், வளரும் அறிவியல் ஆர்வம் ஆகியவற்றை அறிய விரும்புவோர் தவறாமல் படிக்க வேண்டிய நூல், இது.

இந்நூல் வெளியீட்டின்போது, வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் மு. நாகநாதன் அறிவியல் தொழில் நுட்பங்கள், மிகத் துல்லியமான முறையில் கோள்களைப் பற்றியும் அவைகளின் நகர்வுகளைப் பற்றியும் தெளிவுபடுத்திய பின்னும் கடவுள்களைப் பற்றியும், கற்பனைவாதிகளைப் பற்றியும் இந்நூலில் குறிப்பிட்டிருப்பது அறிவியல் உண்மைக்கு முரண்பாடாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அண்டங்களையும், கோள்களையும் ஆய்ந்தறிந்து பட்டங்களைப் பெற்று அறிவியலில் துறைபோகியவர்கள் இராகு காலத்திற்கும், கேதுவுக்கும் அஞ்சி நடுங்கும்போது இக்குழுவிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்? அதை விடுத்து மற்றவை படிப்பவர்களுக்கு அறிவையும், துணிவையும் அள்ளித் தரும். தமிழர் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல்.

ஆசிரியர் : கர்னல் பா. கணேசன்
தொடர்பு : பழநியப்பா பிரதர்ஸ், சென்னை-600 005.
விலை : உருவா 150/-