Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
நவம்பர் 2008
சாதி அதிகாரமும் அரசு அதிகாரமும்
சு.வெங்கடேசன்

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வின் மூலம் தமிழ்ச்சமூகத்தின் முன் கவனப்படுத்தப்பட்ட விஷயம் உத்தப்புரம் தீண்டாமைச்சுவர். இப்படி ஒரு சுவரே இல்லையென்றும், பின் அது தீண்டாமைச்சுவர் இல்லையென்றும், சட்டத்தின் துணையோடு கட்டப்பட்ட சுவர் என்றும், வெவ்வேறு விதமாக வாதாடிப் பார்த்த அரசு நிர்வாகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான முயற்சி காரணமாகவும், அதன்பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ்காரத் வருகை தந்ததையொட்டியும் மே மாதம் 6ம் தேதி சுவற்றின் ஒரு பகுதியை இடித்து தலித் மக்களுக்கான பாதை அமைத்துக் கொடுத்தது. பாதை அமைக்கப்பட்டு ஆறு மாத காலமாகிவிட்டது. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை பாதையின் பயன்பாட்டை சுமூகமாக்க அரசு அக்கறையான தலையீடு எதையும் செய்யவில்லை.

15 அடி பாதை அமைக்கப்பட்டதே தலித் மக்களுக்கு செய்யப்பட்ட மிகத் தாராள சலுகை போலவும் இதனால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட மனக்காயத்தை ஆற்றுவதுதான் தங்களின் உடனடியான அடிப்படை பணி எனவும் நினைத்து செயல்பட்டு வருகிறது. திறக்கப்பட்ட பாதையை தலித்மக்கள் பயன்படுத்துவதை தடுக்க தொடர்ந்து ஆதிக்க சக்திகளால் பிரச்சனை எழுப்பப்பட்டே வந்தது. அவ்வாறு பிரச்சனை செய்கிறவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை எந்த அக்கறையும் காட்டவில்லை. நான்கு முறை கொடுக்கப்பட்ட புகார்களில் இரண்டின் மீது தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட வழக்கின் மீதும் எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சுவற்றின் மீதிப் பகுதியை இடிப்பது, சாக்கடையை திசைதிருப்பி விடுவது, அரசமர பயன்பாட்டு உரிமையை பொதுவாக்கி நிழற்குடை அமைத்துத் தருவது உள்ளிட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அமைத்த சமாதானக்குழுவை அதன் பிறகு ஒரு முறை கூட அரசு கூட்டவில்லை. இக்குழு தொடர்ந்து கூட்டப்பட வேண்டும். அசமத்துவம் களையப்பட்டு சுமூக நிலை உருவாக்கப்படவேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக போராட்டத்தின் மூலம் வலியுறுத்தி வந்தது. ஆனால் இதற்கு செவிசாய்க்க அரசு தயாராக இல்லை. தலித் அல்லாத சாதியினரை பகைத்துக்கொள்ளக்கூடாது என்ற மைய அச்சைப் பற்றியே அரசின் மொத்த செயல்பாடும் இருந்தது. இந்நிலையில் செப்.17ம் தேதி தந்தை பெரியார் பிறந்த தினத்தில் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் செல்லும் சாக்கடைக்கு மூடி போட்டு திசை திருப்பிவிடும் போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து அறிவித்தது. அதன் பலனாக போராட்டத்திற்கு ஒரு நாள் முன் செப்.15ம் தேதி அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒரு மாத காலத்தில் இக் கோரிக்கையை செய்துதருவதாக எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் போட்டது.

தலித் மக்களின் கோரிக்கையை செய்துதருவதாக அரசு ஒப்பந்தம் போட்டுவிட்டது என்று எரிச்சலுற்ற ஆதிக்க சக்தியினர் ஒப்பந்தம் போட்ட அன்று மாலையே, திறந்துவிடப்பட்ட பாதையின் வழியே தலித்மக்கள் விசேஷ சீர்வரிசை கொண்டுசென்ற போது கல்வீசி தாக்குதல் தொடுத்தனர். போலீசாரின் முன்னிலையில் நடந்த தாக்குதல் இது. இதில் தாக்குதல் தொடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இரு தரப்பின் மீது வழக்கை பதிவு செய்தது.

பிரச்சனைக்குரிய அரசமரத்தைச் சுற்றி சுவர் எழுப்பி அது உள்ளிட்ட முத்தாலம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் மே 10ம் தேதி நடத்தப்போவதாக ஆதிக்க சாதியினர் அறிவித்து அதற்கான வேலைகளை செய்துவந்தனர். தலித் மக்களின் பயன்பாட்டு உரிமையில் இருந்த ஒரு இடத்தை, பொது நிழற்குடை அமைக்கப்படவேண்டிய ஒரு இடத்தையும் உள்ளடக்கி ஒரு குறிப்பிட்ட சாதியினர் தங்களுக்கு சொந்தமாக விழா எடுப்பதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அரசு தரப்பில் எவ்வித தலையீடும் செய்யப்படாமல் விழாவை வேடிக்கை பார்க்கும் வேலையை மட்டுமே செய்தது. இதன் தொடர்ச்சியாக அந்த சுவற்றுக்கு ஆதிக்க சாதியினர் வர்ணம் பூச முற்பட்ட போது அது கூடாது என எதிர்ப்பு கிளம்ப அக்.1ம் தேதி விரும்பத்தகாத சில சம்பவங்கள் நடந்தேறின.

இதனைப் பயன்படுத்தி காவல்துறையும், அரசும் தனது வெறிகொண்ட பணியை செய்யத் துவங்கியது. அக்.1,2ம் தேதிகளில் 80 பெண்கள் உள்ளிட்ட 520 பேர் மீது பிணையில் வர முடியாத கடும் பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்தது. 144 தடையுத்தரவை பிறப்பித்து வேட்டையாடுதலை துவக்கியது. ஊருக்குள் ஆண்கள் யாரும் இல்லாத நிலையில் பெண்களில் 80 பேர் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் இருந்தபோது தலித் மக்களின் குடியிருப்பு பகுதி முழுவதும் சூறையாடப்பட்டது. வீடுகள், கதவுகள், ஜன்னல்கள், தொலைக்காட்சிப்பெட்டிகள், கட்டில்கள், மின்விசிறிகள், பம்ப் செட்கள் என அடித்து நொறுக்கப்பட்டு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டது.

வெளியேறிப்போன தலித்மக்களை கைதுசெய்ய வெவ்வேறு கிராமங்களில் காவல்துறை தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தியது. இந்நிலையில் தலித் பகுதியில் பெரியசாமி-பசுபதி தம்பதியினரின் மகள் சித்ரா (22) அக்.8 அன்று காலை உடல்நலக் குறைவால் இறந்துபோனார். இந்த இறப்பு நிகழ்ச்சிக்குக் கூட காவல்துறை யாரையும் அனுமதிக்கவில்லை. இறுதி நிகழ்ச்சி முழுவதையும் பெண்களே செய்து முடித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து ஆண்கள் மட்டுமே அந்நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர்.

144 தடையுத்தரவு இருப்பதால் யாரையும் உள்ளே அனுமதிக்கமாட்டோம் என காவல்துறை பிடிவாதமாக இருந்தது. இந்நிலையில் அக்.13ம் தேதி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி.சம்பத், பொ.மோகன் எம்.பி., வெ.சுந்தரம் ஆகியோர் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சி குழு உத்தப்புரம் சென்று தலித் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் முழுவதையும் கண்டறிந்து ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தியது. மறுநாள் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு உத்தப்புரம் சென்றது. அக்.15ம் தேதி மாநிலச்செயலாளர் என்.வரதராஜன், பி.சம்பத், கே.பாலபாரதி ஆகியோர் முதலமைச்சரைச் சந்தித்து உத்தப்புரம் பிரச்சனை சம்பந்தமாக நேரில் வலியுறுத்தினர். முதலமைச்சரும் உரிய தலையீடு செய்வதாக கூறியுள்ளார்.

மதுரை மாவட்ட நிர்வாகம் இதை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக்கி குளிர்காயப் பார்க்கிறதே தவிர சட்டப்படியான உரிமையை நிலை நிறுத்துவதில் தங்களுக்குள்ள பொறுப்பைப் பற்றி கிஞ்சித்தும் யோசிக்கத் தயாரில்லை. இங்கு நிலவும் சாதீயப் பாகுபாடுகளை களைவதுதான் அமைதியை ஏற்படுத்துவதற்கான முதல் திறவுகோல். அரசமரத்தை பொதுப் பயன்பாட்டிற்குரியதாக மாற்றி பொது நிழற்குடை அமைத்து அனைவருக்கும் பொதுவான இடமாக அதனை மாற்றுவதொன்றுதான் பிரச்சனைக்கான தீர்வு. இதனை செய்ய திறனற்ற நிர்வாகமாக மதுரை மாவட்ட நிர்வாகம் இருக்கிறது. கிடப்பில் போட்டால் அதுவாகவே ஆறிப்போகும் என்ற முதுகெலும்பற்றவனின் செயல்முறை தந்திரத்தையே அது பின்பற்றுகிறது.

தங்களின் உரிமைக்காக அரசை நிர்பந்திக்க திரளும் தலித் மக்களை சிலர் திசை திருப்ப முயல்வதும் அதற்கு இரையாகி நடைபெறும் சிறு சம்பவங்களை தங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக பயன்படுத்தி மொத்த ஊரையும் அடித்து நொறுக்கி வழக்குகளை வளைத்துப்போட்டு ஊரையே மயானமாக்கி நிம்மதி பெருமூச்சுவிடுவதே காவல்துறையின் வேலையாக இருக்கிறது.

பிரச்சனையை தீர்க்க மாதக்கணக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் பரஸ்பரம் பகையும் வெறுப்பும்தான் அதிகமாகும். பேச்சுவார்த்தை மூலமும், சட்டத்தின் மூலமும் நிர்பந்தத்தை ஏற்படுத்தி பாகுபாடுகளைக் களைவதில் ஒரு எட்டுக்கூட முன்னுக்குச் செல்ல முடியாத நிர்வாகமாக மதுரை மாவட்ட நிர்வாகம் இருக்கிறது. உத்தப்புரத்தை உத்தமபுரமாக மாற்றப்போவதாக அறிவித்த முதலமைச்சர் இந்த மாவட்ட நிர்வாகத்தை வைத்துக்கொண்டு பிரச்சனையை பெரிதாக்க முடியுமே தவிர சிறிதும் தீர்க்க முடியாது என்பதை உணர்ந்து உரிய தலையீடு செய்ய வேண்டும்.

தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டவுடன் ஆதிக்க சாதியினர் ஊரைக் காலி செய்து அங்கிருந்த தலித் மக்களின் தோட்டங்களை நாசம் செய்தனர். அந்த தோட்டக்காரர் மொட்டையாண்டி கொடுத்த புகாரின் பேரில் 200 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் வழக்கு பதிவாகி 6 மாதமாகியும் அதில் ஒருவர் கூட கைது செய்யப் படவில்லை. காவல்துறை யாரையும் விரட்டிப்பிடிக்கவில்லை. சகஜ நிலை குறையாமல்தான் ஊரும், ஊரின் வடக்குத் தெருவும் இருந்தது.

ஆனால் அக்.1ம் தேதி நடந்த சம்பவத்தையடுத்து 200க்கும் மேற்பட்ட தலித்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. வழக்கு பதிவு செய்யப்பட்ட அந்தக் கணத்திலிருந்து மொத்த ஊரும் சூறையாடப்பட்டது. சேதப்படுத்தப்படாத வீடுகளே இல்லையென்றானது. ஒரு ஆண் கூட 10 நாளாக ஊருக்குள் நுழைய முடியவில்லை.

தலித்துகள் தாக்குதலுக்குள்ளாகும் போது அதற்கெதிராக ஆறு மாதமானாலும் சட்டம் இம்மியளவும் நகர மறுக்கிறது. ஆனால் அதே சட்டம் தலித்களுக்கு எதிராக பாய வாய்ப்பு கிடைத்தால் கண நேரத்தில் கடித்துக் குதறி ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறது. சாதீயத்தால் கெட்டிப்படுத்தப்பட்ட சமூக அதிகாரத்தையும், அதற்கு துணை நிற்கும் அரசு அதிகாரத்தையும் எதிர்த்த பரந்த உறுதிமிக்க போராட்டத்தை வலுப்படுத்துவது ஒன்றே உத்தப்புரம் விடுக்கும் அவசர அரசியல் செய்தி.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com