Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
பாண்டியக் கண்ணனின் 'சலவான்' (நாவல்)

மேலாண்மை பொன்னுச்சாமி

தமிழ் நாவல் பெருவரலாற்றில் ஒரு தனிச் சிறப்பான, தலித்தியக் குரலின் தகிப்புடன் கூடிய நாவலாக வந்திருக்கிறது பாண்டியக் கண்ணனின் 'சலவான்'.

ஆண் பன்றியை குறிக்கிற வழக்குச் சொல்லே, 'சலவான்'. மனித மலத்தை மூழ்கியெழுந்து அள்ளியெடுத்து, வாளிவாளியாகச் சுமந்து உடம்பெல்லாம் வழிகிற வியர்வையுடனும், மலக்கழிவுடனும் டீ யடித்து, பீடி புகைக்கிற துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வியல் பண்பாட்டு அரசியல் அனுபவங்கள், காயங்களின் சீழாக, ரணத் துடிப்பாக வெளிப்பட்டிருக்கிறது நாவலில்.

நாவல், பாலன் பாத்திரத்தின் விவரிப்பாக நகர்கிறது. பாலனின் தந்தையின் கூற்றாகவும், காலப் பழமையான ரணங்கள் கசிவெடுக்கிறது.

திருமங்கலத்து கிழவனின் மரணம், அது சார்ந்த சடங்குகள்... சண்டை சத்தங்கள்... இழவு குறித்த நுணுக்கமான பண்பாட்டுக்கூறுகள் பிரமிப்பூட்டுகின்றன. சாராயமும், கவுச்சியும் சண்டை வெடிப்பும் இழவு வீட்டின் சுவாசமாக வெளிப்படுகிறது.

பாலனின் தங்கை கல்யாணம்.... அதுகுறித்த பழக்கவழக்க பண்பாட்டுத் தகவல்கள். சீதனமாக இருபது உருப்படிகள் (பன்றிகள்) தரப்படுவதும், தாய் மாமன் விட்டுக் கொடுத்து வழங்குகிற சம்மதத்துக்குப் பின்பே... 'பரிசம்' துவங்குவதும், கள்ளே பிரதான பழக்க பானமாக இருப்பதுவும், வாழ்வியலின் ரத்தச் சதையின் உயிர்த் துடிப்பாகத் தோன்றுகின்றன.

சாதீயம் கடந்த நட்பும், சாதீய ஆதிக்க வெறியும் ஏக காலத்து நிகழ்வுகளாக இருக்கிற முரண்மிக்க சமுதாய யதார்த்தம் இந்த நாவலில் வெடித்தெழுகிறது. காவல்துறையின் மூர்க்கமான கும்பலின் பாலியல் வன்புணர்ச்சியும், சாதீய ஆதிக்க வாதிகள் குறக்குடிசைகளில் புகுந்து எல்லா வயதுப் பெண்களையும் சீரழிக்கிற நாசக்காடுகளும் வாசிக்கிற மனசில் வலியை ஏற்படுத்துகின்றன.

கல்யாணப் பந்திகளை கல்யாண வீட்டுக்காரர்களின் கண்ணோட்டத்திலும், 'மொய்' செய்வோரின் கண்களாலும் பார்த்துப் பழகிப் போன வாசகப் பொது உணர்வு, எச்சில் இலைகள் அள்ளி, கக்கூஸ் கழுவி, சோற்றக்காக சட்டிகளுடன் காத்துக் கிடக்கிற தோட்டிகளின் மனப்பார்வையில் விவரிக்கப்படுகிற கல்யாணப் பந்தியை வாசிக்கிற போது மனசு அதிர்ந்து குலுங்கி விடுகிறது.

பாலனின் தந்தை ஒரு கம்பீரமான மனிதர். வாழ்வின் நிஜப்பிம்பமான ஒரு மகாபுருஷர். தாட்டியமான பீமனின் திரேகம்போல உயர்ந்தெழுகிற அந்தப் பாத்திரம்.

பன்றிக் குட்டிகளின் உறுமலும், சினைப் பன்றிகளின் தாக்குதல்களும், பன்றிக் கறியின் கவுச்சி மணமும் நம்மை அந்தச் சூழலுக்கே இழுத்துச் செல்கின்றன. பாண்டியக் கண்ணன் ஒரு அழகியல் பொருந்திய கலாப்பூர்வமான தலித்திய நாவலை படைத்தளித்திருக்கிறார். மிகச் சிறந்த நாவல். பாத்திரங்களின் மக்கள் மொழியே படைப்புமொழியாகியிருக்கிறது. அதுவே நம்மை விரல்பிடித்து அந்த வாழ்வுக்குள் இழுத்துச் செல்கிறது.

ஒரு வரலாற்றுக்குரிய பெயர், நிகழ்வுகள், மனிதர்கள், அவர்தம் குணங்கள் பற்றிய துல்லியமான குறிப்பிடல்களைத் தவிர்த்திருக்கலாம். ஒரு நாவலுக்குரிய பொதுத்தன்மையும், தலித்தியச் சூழலுக்குரிய தனித்துவமொழியின் துல்லியமும் வெளிப்பட்டிருந்தால் இன்னும் கூடுதல் பொருத்தமாக இருந்திருக்கும்.

பிழையற்று, கச்சிதமாக கலைத்தன்மையுடன் வெளியிடுகிற பாரதி புத்தகாலயம், இந்த நாவலில் மட்டும் ஏற்றுக் கொள்ள இயலாத கவனக் குறைவைத் தவிர்த்திருக்கலாம்.

சலவான் காயடிக்கப்படுகிற காட்சியைப் போல, சினைப் பன்றியின் பிரசவத்தைப் போல இந்த நாவலே தமிழுக்கு மிகவும் புதிய, தனிச் சிறப்பான தலித்திய இலக்கிய வரவு.

வெளியீடு: பாரதி புத்தாலயம்,

421, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018.
விலை ரூ.120


செ.கவுதமனின் "அங்கூ... அங்கூ..."

வத்திராயிருப்பு தெ.சுந்தரமகாலிங்கம் என்ற மிகச் சிறந்த இலக்கிய அரசியல் விமர்சகரின் மகன் கவுதமன், ஒரு கவிஞர் என்பது ஆச்சரியமான விஷயமாக இருக்காது. கவிதைகளை வாசித்தால், அதன் முதிர்ச்சியும் சமுதாய அரசியல் சாய்மானமும் ஆச்சரியமாக இருக்கிறது.

கவித்துவச் செறிவிலும் கட்டுமான அழகியலிலும் முதலிடம் பெறுகிற கவிதை, 'முத்தம்' பற்றியது. முத்தம் என்பது இத்தனை கவித்துவ நாகரிகத்துடன் இதுவரை எவராலும் பேசப்பட்டதில்லை.

"மனதை ஒருநிலைப்படுத்துவது
தியானம்
இருவர் மனதை ஒருநிலைப்படுத்துவதே
முத்தம்"
என்று அவற்றில் ஒரு வைரத் தெறிப்பு.
இராக் மீது அமெரிக்கா தொடுத்த அத்துமீறலான போர் எனும் வரலாற்று அநாகரீகத்தை காறி உமிழ்கிற கவிதை. சபரிமலை அய்யப்பன் சுவாமி கோவிலுக்குள் நுழைந்து விட்ட ஜெயமாலா என்ற நடிகைக்கெதிராக எழுந்த காட்டுக் கூப்பாடுகளைக் கடிந்து சீறுகிற கவிதை.

பெண்
நுழைவதே பாவமென்பது யார்?
பூமியிலிருந்து
முளைத்து வந்த மரமா?
பெண்ணென்ற அடிமை
பெற்றெடுத்த மனிதனா?
காரமான சீற்றம். சரியான சமுதாய நோக்கு. 'நறுக்' கவிதைகளைத் தவிர்த்திருக்கலாம்.

செருப்பு தைக்கும் தொழிலாளி பற்றிய ஒரு கவிதை தவிர, மற்றவையாவும் செயற்கையற்ற மனவெளியின் இயல்பு முகங்களாக புன்னகைக்கின்றன. முதல் கவிதைத் தொகுப்பிலேயே முதிர்ச்சி தென்படுகிறது.


வெளியீடு : பாரதி புத்தகாலயம்
421, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை
சென்னை - 18.
விலை ரூ.30


புதிய ஜீவாவின் நான்காயிரம் கைகளும் ஒரே முகமும்

புதிய ஜீவாவின் மூன்று குறு நாவல்கள் ஒரு தொகுப்பாக "நான்காயிரம் கைகளும் ஒரே முகமும்" என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞன் சென்னையில் ஓர் ஆலையில் தொழிலாளியாகப் பணியாற்றுகிறான். தொழிற்சாலை என்ற களத்தில் பாத்திரங்களாக உலவுகிற தொழிலாளர்களின் அகம் -புறம் சார்ந்த முழுமை மனநிலை இயக்கம் பதிவு செய்யப்பட்டிருப்பதை உணர்கிறோம்.

மோகன் வழியாகப் பயணப்படுகிற நாவலில், ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு அசலான மனிதர்கள் தோன்றி உலவுகிறார்கள்.

ஆலைத் தொழிலாளி பற்றிய நாவல்களை வாசித்து பல வருஷ காலமாகிவிட்டது. இப்போது ஆலைத் தொழிலாளியைப் பற்றிய படைப்புகளே இல்லாமற் போன நிலையில்... புதிய ஜீவாவின் இந்த நாவல் நவீன மொழியில் எழுதப்பட்ட பாட்டாளி வர்க்கப் படைப்பாகத் திகழ்கிறது. கம்யூனிஸ்ட் தொழிற்சங்கப் பண்பின் தனித்துவம் உரிய நம்பகத்தன்மைமிக்க மொழியில் உணர்த்தப்படுகிறது.

உற்பத்தி செய்து குவிக்கிற தொழிலாளர்களின் உடலும் வாழ்வும் நைந்து வருவதைத் துல்லியமான புரிதலுக்கு முன்வைக்கிறது இந்நாவல். நெஞ்சு பதைத்து அதிர்க்கிறது. செம்மலரில் தொடராக வெளிவந்தது. இந்த நாவல்.

'பனி மூட்டம்' ஆலைத் தொழிலாளியை பற்றியதுதான். ஆனால், அலுவலக ஊழியராக இருக்கிற ஒருவனின் தொலைநிலைக் கல்வியில் எம்.ஏ., எம்.ஏ., இதழியல் கற்கிற அனுபவம் சார்ந்தது. அவனது குடும்பம், குழந்தைகள், மனைவியின் மனநிலையும், தொலைநிலைக் கல்வி செமினார்களுக்கும் தேர்வுகளுக்கும் வருகிற பலதரப்பட்ட மனிதர்களின் நட்பு, போலித்தனம், காதல், பிரிவு என்று நீண்டுவிரிகிறது. ஆயினும், ஆலையின் ஊழியர்களிடையே நிகழ்கிற உணர்வுச் சிக்கல்கள், லீவ் பிரச்சனைகள் என்று இந்த உலகமும் விரிகிறது.

நிலா சாட்சியும், ஆலைத் தொழிலாளர் பற்றியதுதான். ஆலை நிர்வாகத்துக்கு ஆட்காட்டியாக இருக்கிற போலித்தனமான தொழிற்சங்கத் தலைவரின் துரோகச் செயல்களின் இழிவும் அவல முடிவும் ஒரு மர்ம நாவலுக்குரிய உத்திகளுடன் புதுமையான விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

பெண்களின் அவல நிலையும் இழிவு நிலையும் நெஞ்சை நெகிழ்த்துகிற விதத்தில் உணர்த்தப்பட்டிருக்கிறது. புதிய ஜீவாவின் மார்க்ஸிய மன முதிர்ச்சிகாரணமாக சரளமான மொழிநடையிலும் உணர்வின் ஆழத்தையும் அடர்த்தியையும் அனுபவிக்க முடிகிறது.

நல்ல வாசிப்பனுபவத்தை வழங்குகிறது என்பது மட்டுமல்ல, வாசிப்பவரின் மனசாட்சியை உலுக்கவும் செய்கிறது. மனித மனசை மேம்படுத்தி, செயலுக்குத் தூண்டுகிற சிறந்த படைப்பு.

பாரதி புத்தகாலயம் இந்நூலை துல்லியமான அச்சும், அழகான வடிவமைப்பும் கொண்ட கலாபூர்வ கச்சிதத்துடன் வெளியிட்டிருப்பதை தனியாகப் பாராட்டலாம்.


வெளியீடு: பாரதி புத்தகாலயம்

421, அண்ணாசாலை
தேனாம்பேட்டை
சென்னை - 18.
விலை ரூ.110


அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்

எழுதியவர் : இராபர்ட் பேனே

தமிழில் : மு.சுப்ரமணி

ராபர்ட் பேனே என்பவர் நியூயார்க் நகரில் வசித்து வந்தவர். சீனாவிலும்,பேராசிரியராகப் பணிபுரிந்தவர். லெனின்,ஸ்டாலின், மகாத்மாகாந்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியவர். உலகத்தின் மிகக்கொடிய சர்வாதிகாரிகளில் ஒருவரான அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றையும் நூலாக எழுதியிருக்கிறார்.

இந்த ஆங்கில நூலை நெய்வேலி தொழிலாளரும், தமுஎகச படைப்பாளருமான மு.சுப்ரமணி தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

இந்த மொழி பெயர்ப்பு நூலக்கு 2008ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இலக்கிய விருது கிடைத்திருக்கிறது.

உலகத்தின் ரட்சகர்களின் வாழ்க்கை வரலாறும், அவர்களது மனப்பண்பும், போர்க்குணமும், லட்சியப் பற்றுறுதியும், தலைமைப் பண்பும் எவ்வாறெல்லாம் சமூகத்தின் நிகழ்வுகளால் கட்டமைக்கப்படுகின்றன என்ற வளர்நிலை இயங்கு தன்மை குறித்த கல்வியும் அவசியம். அதே அளவுக்கு உலக மகா வில்லன்களின் வரலாறும், அவர்களது மனச் சிறுமையும், நரிக்குணமும், சந்தர்ப்பவாதமும், ஈவிரக்கமற்ற கொலைகாரத் துரோகச் சிந்தனைகளும் ஒட்டுமொத்த உலக சமுதாய நிகழ்வுகளால் கட்டமைக்கப்படுகின்றன என்ற வளர்நிலை இயங்கு தன்மை குறித்த கல்வியும் அவசியம்.

அந்தக் கல்வியை இந்த நூல் தருகிறது. ஹிட்லர் என்பவன் தனித்துவ பயங்கரவாதியாக வளர்ந்த விதமும், சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி வாய் வார்த்தைப் பந்தல்கள் போடும் விதமும், இனப் பற்று என்கிற உணர்வைப் பயன்படுத்தி வெறியூட்டி, உலக சர்வாதிகாரியாக மாறிய விதம் குறித்து மட்டுமல்ல, அவனது பிற்காலத்துப் பேரழிவுகள், சீரழிவுகள், அவமானகரமான தோல்விகள், இழிவான புதிர்ச்சாவு என்ற வீழ்ச்சிப்படலமும் இந்நூலில் விவரிக்கப்படுகின்றன.

இதன் மொழிநடை,ஒரு செறிவான நாவலுக்குரிய அழகோடும், செறிவோடும் அமைந்திருக்கிறது. மு.சுப்ரமணியின் உழைப்பும், மொழிப் புலமையும் மொழி பெயர்ப்பின் அழகில் துல்லியமாகின்றன.

வெளியீடு: சீதை பதிப்பகம்
10/14, தோப்பு வெங்கடாசலம் தெரு,
திருவல்லிக்கேனி,
சென்னை - 600 005
விலை ரூ.130