Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthu Ezhuthu
Puthu EzhuthuPuthu Ezhuthu
ஜனவரி - ஏப்ரல் 2007
அவர்
கல்யாண்ஜி


இப்படித்தான் நிகழ்கிறது.

அன்றைக்குத்தான் அவருக்குக் கடிதம் எழுதி நன்றிசொல்ல நினைத்திருந்தேன். என்னுடைய சமீபத்திய கவிதைத் தொகுப்புக்கு அவர் முன்னுரை எழுதியிருப்பார் என்பது எனக்கே புத்தகம் கிடைத்த பிறகுதான் தெரிந்தது. அதற்காகவே ஒரு பிரதியை அப்பாவுக்கு கொடுத்தேன், அது என் வழக்கமில்லை எனினும்.

அப்பாவுக்கும் அவருக்கும் உள்ள நெருக்கம் அப்படி. அப்பாவின் உலகத்தில் உடனடி இரண்டாவது நபரே அவர்தான். நாங்கள் எல்லாம் அதற்கு அப்புறம்தான். அப்பாவுக்கே அவர் அதிகக் கடிதங்களை எழுதியிருக்கவேண்டும். பெற்றவை ஒருவேளை அதிகமாகவும் இருக்கலாம். சமீப வருடங்களில்தான் அப்பாவுக்கு அவர் எழுதுகிற கடிதங்களை நான் படிப்பதில்லை. வாசிப்பதற்கு ஒரு மனநிலை இருந்ததுபோல வாசிக்காது இருப்பதற்கும் ஒன்று.

இப்படியும் சொல்லலாம். அப்பாவைத் தவிர அவருடைய கடிதங்களை வாசித்த மற்றொருவன் நானாக இருக்கலாம். சந்தேகமில்லை, நானே தான்.

அந்த ட்ரங்குப்பெட்டி எங்கள் வீட்டு மச்சில் இருந்தது. கீழ்வீட்டின் இரண்டாம் கட்டிலிருந்து அந்த அகலமான படிகளுள்ள ஏணிவழியாக ஏறினால், நெல் சாக்குகள் அல்லது நெல் அம்பாரங்கள், அந்துப்பூச்சிகள், புங்க இலைச் சருகுகள் உள்ள அறை. ஊடு கதவைத் திறந்தால் அரிசி மூட்டைகளும் பித்தளைப் பாத்திரங்களும் வெண்கலப் பானை, குத்துவிளக்கு இன்னபிற எல்லாம் தவிர ஜன்னலின் நேர் கீழ் இந்த ட்ரங்குப்பெட்டி, அப்பாவுடையது.

தவிட்டு வாசனையைக் கிளப்பியபடி தவிட்டு வண்டுகள். வெண்கலப் பானைகளை குத்துவிளக்குகளைக் கூட முகர்ந்து பார்த்திருக்கிறேன். அவற்றிற்கு ஒரு வாசனை உண்டு. அரிசி வாசனை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அந்தப் பெட்டியைத் திறக்க இவ்வளவு வாசனைகளும் உதவின என்றே சொல்ல வேண்டும்.

பூட்டு எல்லாம் இல்லை என்பதால் திறப்பது எளிதாகவே இருந்தது. எந்தக் குற்றவுணர்வுகளும் இல்லாத பன்னிரெண்டு பதின்மூன்று வயது. வாய்க்காலில் அல்லிப் பூ, பறிப்பது, மஞ்சாச்சி வீட்டுத் தோட்டத்தில் புளியங்காய் அடிப்பது, சேரகுளம் பண்ணையார் வீட்டு முன்வாசல் நிலையில் இருக்கிற அழைப்புமணியை அழுத்திவிட்டு ஓடுவதுபோல இது இன்னொரு விளையாட்டு. சற்று அந்தரங்கமானது.

அவர் எழுதின கடிதங்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் படிக்கிற தூண்டுதல் அவருடைய அடித்தல் திருத்தல் அற்ற கையெழுத்தே உண்டாக்கியிருக்க வேண்டும். இவ்வளவு மாறுதலற்ற வடிவ நேர்த்தியுடன்தான் மேஜையில் அவர் கடைசியாக இப்போது எழுதிவைத்திருந்ததும் இருந்திருக்கும். இவ்வளவு சீராக அது இருக்க வேண்டுமென என்று கூடச் சிலசமயம் தோன்றியிருக்கிறது.

நான் இன்றைக்குப் பார்க்கிற மனிதர், என் தினத்தின் குறுக்காகப் பிறந்து செல்கிற ஒரு பறவை, உழவற் சந்தை வாசலில் ஆளற்ற சாக்குவிரிப்பில் விற்பனைக்கும் காத்திருக்கிற வாழைப்பூக்களின் வாசனை, ரயில்வே கேட் திறக்கிற ஊழியரின் பையில் துருத்திக்கொண்டு தெரிகிற கல்யாண அழைப்பிதழின் மஞ்சள் மூலை, இப்படி ஏதாவது ஒன்று என் கையெழுத்தைக் குலைக்கவும் துளிர்க்கவும் செய்ய வல்லது. ஆனால் அவருக்கு அப்படியில்லை. இந்த நாற்பத்தைந்து வருடங்களில் நான் வாசிக்கக் கண்ட அவருடைய கையெழுத்துக்கும் அவருடைய மனநிலைக்கும் உள்ள உளவியல் ஒழுங்கு யோசிக்கவைக்கிற ஒன்று.

அவருக்கு நான் முதல்கடிதம் எழுதுவதற்கு முன், அவரைப் போலவே நான் எல்லோருக்கும் கடிதங்கள் எழுத ஆரம்பித்துவிட்டேன். அவருடைய துவக்கம், அவருடைய பத்தி பிரிப்பு, நட்சத்திரக் குறிகள், தாட்களை மடிக்கிற விதம், மேலோட்டமான தகவல் பரிமாற்றம் போல நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் பற்றி எழுதுவது, முக்கியமாக எனக்குப் பிடித்த அந்தந்த பருவநிலைகள் பற்றிய அவருடைய பகிர்தல் (கிழக்குக் கடற்கரைச் சாலை, குல்மொகர் பூக்கள், தச்ச நல்லூர் தாராபுரம் இடையில் ஓடைக்கரையல் நிற்கிற முள்முருங்கை மரத்தின் சிவப்பு மலர்ச்சி, மழைக்கால சென்னைப் போக்குவரத்து இப்படி) எல்லாம் என்னுடைய கடிதங்களிலும் வந்துவிட்டன.

அந்த ட்ரங்குப்பெட்டி திறந்ததற்கு இணையாக இன்னொன்றும் நிகழ்ந்தது. பாகம் பிரிக்கப்படாத நிலையில் அப்பா சேகரித்த புத்தகங்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற அலமாரி பூட்டோ தாத்தா வீட்டு மச்சில் இருந்தது. ஏழு கடல் ஏழுமலை தாண்டிப்போகிற விஷயம் அது. கடைசியில் பார்த்தால் அது திறந்தே இருந்தது அல்லது திறப்பதற்குக் கூடுதல் முயற்சி எதையும் கோரவில்லை. அங்கேதான் இருந்தன அடுக்கடுக்காக கிராம ஊழியன், சந்திரோதயம், சக்தி இதழ்கள். கலைமகளின் பைண்டுசெய்யப்பட்ட ஒரு தொகுதி. புதுமைப்பித்தனின் காஞ்சிக் கதையை அதில் வாசித்திருக்கிறேன். கடவுளும் கந்தசாமிப் பிள்ûயும் கூடு. ரவி என்பவரின் ஓவியம் என்று நினைவு. எஸ். ராஜம் வரைந்திருந்த ஓவியங்கள் சொல்ல முடியாத அழகையும் கிளர்ச்சியையும் உண்டாக்கியதும் அதில்தான்.

கிராம ஊழியன் காலம்தான் அவருடைய வீச்சு நிறைந்த காலம். உயர வசத்தில் வரைபடம் உச்சிக்குப் போயிருந்தது. ஒரு பத்திரிக்கை ஆசிரியன் அல்லது அதவி ஆசிரியர்களுக்கு நேர்கிற நெருக்கடியான உந்துதலில் நையாண்டி பாரதி என்றும் மிவாஸ்கி என்றும் கோரநாதன் என்றும் வனா கனா என்றும் (சொள்ள முத்து என்று கூட) வெவ்வேறு பெயர்களில் எழுதியவைதான் இன்றும் அவரது உச்சமான படைப்புக்காலம் சார்ந்தவை. அதிலிருந்த கதைகள், கட்டுரைகள் தவிர ‘அடியுங்கள் சாவுமணி’, ‘கோவில்களை மூடுங்கள்’, குஞ்சாலோடு என்ற அவருடைய தனிப் பிரசங்கங்கள் எல்லாம் அவை வெளிவந்த காலத்தில் பெரும் சலனங்களை உண்டாக்கியிருக்க வேண்டும்.

அவருடைய மொழிபெயர்ப்புகளைப் படித்தது அதற்குப் பிந்திய கட்டத்தில். கார்க்கி கட்டுரைகள்., நீல விழியாள் இரண்டும் நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டவை. தாத்தாவும் பேரனும் பேர்ள் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டது.

முதலில் நானும் அதற்குப்பின் வண்ணநிலவனும் நானுமாகச் சந்தித்ததெல்லாம் தாமரை, தீபம் காலங்களில் பெரிய மனுஷி, பொன்கொன்றை பூக்கும் போது, மன மூட்டம், ஆண் சிங்கம், அலைபாயும் கடலோரத்தில் ஒரு அப்பாவி மனிதன், இருட்டில் தூங்காமல் இருந்தவன், எங்கும் போகாதவனின் அற்புத யாத்திரைகள், நினைவுச் சரம் என்று சிதறலாக இப்போது ஞாபகம் வருகிற படைப்புக்களின் எந்த வரிநுனியாவது அடையாளம் தெரிகிறமாதிரி அவர் இருந்ததே இல்லை. எழுதுகிற அவர் கதைகள், வெளியாகியிருக்கிற சமீபத்திய பிறர் படைப்புக்கள், நாங்கள் படிக்கத் தகுந்ததான நல்ல நூல்கள் என்று எதைப்பற்றியும் அந்தச் சமயங்களில் பேசியதில்லை. வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருக்கற ஒரு பெரியப்பாவை ஒரு மாமாவைப் பார்த்துப் போகிறமாதிரி அது.

முந்தைய, காலாவதியான ஆண்டுகளின் டைரிகளில் எழுதுகிற அவர் பழக்கம், பின்பு கவிதைகள் எழுதுவதன் வசதிசார்ந்து எனக்கும் வந்து போனது. தவிர, அகல நோட்டுக்களில் எழுதுகிறபோது அந்தந்தப் பக்கங்களில், இப்போது ஒரு லே அவுட் ஓவியன் செய்வதுபோல, அங்கங்கே பழைய (இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஃபில்ம்ஃபேர், ஃபெமினா பத்திரிக்கைகளில் வந்ததாக இருக்கலாம்). பிரதிகளில் இருந்து வெட்டியெடுத்த படங்களை ஒட்டிவைத்திருப்பார். ஒருவகையில் அழகாகவும் இன்னொருவகையில் ஆச்சரியமாகவும் இருக்கும்.

எனக்கு அவருடைய வீடு சார்ந்த பரிமாணங்கள் முக்கியமானவை. இந்த ராஜவல்லிபுரம் நடுத்தெரு வீடு அபாரமானது. ஓலைக்கூரை போட்ட முற்றம், மர பெஞ்சு, இடப்பட்டிருக்கிற தாழ்வாரம். தாழ்வாரத்தின் இடது ஓரத்தையே அநேகமாகத் தேர்ந்தெடுத்து அவருடைய கல்யாணி அண்ணாச்சி புகைபிடித்துக் கொண்டிருக்கிறார். அழுத்தமும் கவலையும், தீவிரமும் நிறைந்த, முகச் சவரத்தில் அதிகம் அக்கறை கொள்ளாத அந்த முகம் நம்மைக் கண்டதும் சிரிப்பது அருமையாக இருக்கும்.

அவருடைய அம்மா தன் அத்தனை வருட ஆயுளின் தொகுப்புக்குள் இருந்து தன்னை உருவியபடி அடுக்களைப்பக்கம் இருந்து நடந்து எங்களைப் பார்த்து விசாரிக்க வருவார். வரிவாளம் வைத்துச் சாணி மெழுக்கிடப்பட்ட பட்டாசலில் வந்து அந்த மனுஷி நிற்கிறபோது வெயிலும் வெள்ளைப்புடவையும் உண்டாக்குகிற கலவையான தோற்றம் மறக்க முடியாதது. அடுத்தசாலை ஒட்டிய வானவெளியில் இருக்கிற பெரிய கிணறு ஒரு தெப்பக்குளம் போல இருந்ததாக இப்போது தோன்றுகிறது. திருவிதாங்கூரிலிருந்தோ கொல்லத்தில் இருந்தோ யாரேனும் வந்து இந்த வீட்டைக் கட்டிக் கொடுத்திருப்பார்களா என்னவோ.

வலது ஒரத்தில் நீளமாக இருக்கிற அறையில்தான் அவர் இருப்பார். தூசுதும்பு இல்லாத துப்புரவான அறை. ஒரே ஒரு சின்ன மேஜை. சில புத்தகங்கள். இன்றுவரை என்னுடைய மேஜைக்கும் அவரது மேஜைக்கும் உள்ள துப்புரவு இடைவெளியைக் குறைக்கவே முடியவில்லை.

இவ்வளவு ஒழுங்காக வைக்க முடியாததால், இவ்வளவு ஒழுங்காக வைக்கவேண்டுமா என்று அவ்வப்போது கேட்டுக்கொள்வேன். ஒரு சின்ன சமாதானம்.

அவர் வேகமாக நடக்கிறவர். சட்டை இருக்காது. மேல்துண்டு மட்டும். ஆற்றுக்குக் குளிக்கப் போகும்போது ஓரிரு முறைகள் நானும் போனது உண்டு. ஒன்றாக நடக்க முடியாது. முந்திப் போய்விடுகிற வீச்சு அவருடையது. முதுகுப் பள்ளம் தெரியும். இடுப்பு வேட்டியும் கௌபீன முடிச்சும் தெரியும். பேச்சு மட்டும் காதில் விழும். எதையும் பார்க்கிறமாதிரி இருக்காது. பக்கவாட்டில் இருக்கிற செப்பறைக் கோவில் தேர்தான் எங்களைப் பார்க்கும். வெள்ளாட்டுக் குட்டி துள்ளிப் போகும். மணல் அள்ளின சக்கடா வண்டியும் மாடும் ஆற்றுக்குள்ளிருந்து எதிரே எறிவந்து தாண்டும். ஆறு ஒன்றுதான் அவருடைய இலக்கு. அவர் போவார். இறங்குவார். குளிப்பார். கரையேறுவார்.

அந்த இசக்கியைப் பற்றி அவர் ஏதாவது எழுதியிருக்கிறாரா தெரியாது. அவருடைய அம்மா மறைந்தபின் அந்தவீட்டில் காத்துக்கிடந்தாள். சீவலப்பேரிக்காரி, தேவமார் பெண்பிள்ளை, எங்களையெல்லாம் பார்த்தால் அவ்வளவு சந்தோஷப்படுவாள். கடுங்காப்பி போட்டுக் கொடுப்பாள். அவருடைய அண்ணாச்சியும் இறந்த பிறகு, வெள்ளாடும் ஆட்டுப் புழுக்கைகளும் கிடக்க, இசக்கிதான் வாசலில் குந்தவைத்து உட்கார்ந்திருப்பாள். இப்போது இருக்கிறாளோ, பாவி போய்ச் சேர்ந்து விட்டாளோ.

இந்தியா சிமெண்ட்ஸ் தூசி, ஆனி ஆடி காற்றுக் காலத்தில் ராஜவல்லிபுரம் ஊர்பூராவும் பரவிக்கிடக்கும் "காடுடைய சுடலைப் பொடி பூசி'. மரங்களில் வீட்டுக் கூரைகளில் படர்வரைக் கொடிப்பந்தலில் கிடக்கிற பீர்க்கு புடல் இலைகளில் மாட்டுத் தொழுக்களில் எல்லாம் சிமெண்ட் புழுதிதான் தெரியும். ஏற்கனவே அவர் எழுதியிருந்த "காளவாய்' சிறுகதையை நாவலாக எழுதும்படி நான் கேட்டுக்கொண்டது உண்டு. எமிலிஜோலாவின் "ஜெர்மினல்' போல, அது எழுதப்பட்டிருந்தால் சிமென்ட் ஆலைக்குப் பக்கத்து கிராமங்களின் நுரையீரலைப் படம் பிடித்திருக்கக்கூடும். சிமென்ட் ஆலை, விவசாயம் சார்ந்த ஜனங்கள், ஆறு, செப்பறைக் கோவில், காலியாகிக் கொண்டிருக்கிற பாலாமடை அக்ரஹாரம், மாறிக் கொண்டிருக்கிற அரசியல் கட்சிகள், கை இறங்கி கை ஏறி கங்கைகொண்டான் சார்பதிவாளர் அலுவலகத்தில் கை மாறுகிற கிரயப் பத்திரங்கள், அதிகரிக்கற இருசக்கரவாகனங்கள் மற்றும் பெரு மீசைகள், ஒயின் ஷாப்புகள் (பார் வசதி உண்டு) என்று எவ்வளவோ வாகாகக் கிடந்த காலம் அது. அந்த ஒரே ஒரு ஒன்பதாம் நம்பர் பஸ்ஸில் ஒரு முழு நாவலின் கதாமனிதர்களும் அல்லவா ஏறிப் போய்க்கொண்டிருந்தார்கள்.

வள்ளலார் குடியிருப்பு இளைய பாரதி வீட்டுக்கு ரொம்பப் பக்கம். நடக்கிற தூரம். இரண்டு பேருமாக அவரைப் போய் பார்ப்போம். மரியாதை நிமித்தமான சந்திப்பு. சமீபத்தில் அவரைப் பார்த்தது ராமச்சந்திரனுடன். உற்சாகமாகத்தான் இருந்தார். விதம்விதமான விருதுச் சட்டங்களும் அடையாளப் பரிசுகளும் அறையில் நிரம்பி இருந்தன முன்பை விடவும். நான் அவருடைய அண்ணன் அசோகனுடைய புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அசோகனின் புன்னகை அப்படி.

நிலைபெற்ற நினைவுகளின் இரண்டாம் பாகம் எழுதிக் கொண்டிருக்கிறீர்களா என்று கேட்டேன். எழுதுவதாகச் சொன்னார். 1941ம் வருடத்திற்கு பிந்திய அவரது பதிவுகள் அவருடைய 21ம் வயதுக்குப் பிந்திய பதிவுகளாகவும் இருக்கும் என்ற வகையில் எனக்கு முக்கியமானதாகத் தோன்றியது. ஒன்றல்ல, மேலும் மூன்று பாகங்கள் எழுதக்கூடிய அளவுக்கு நிகழ்வுகள், இருந்திருக்கும் அல்லவா இடைப்பட்ட அறுபத்தைந்து ஆண்டுகளில்.

இன்னும் வெளிப்படையாகவும் இன்னும் நேரடியாகவும் அவர் எழுதலாம், எழுத வேண்டும் என்றும் சொன்னேன். இதைப்பற்றி நான் ஏற்கனவே சந்தியா பதிப்பகம் நடராஜனிடம் பேசியிருந்தது அவர் காதுக்கு வந்திருந்தது. ஒப்புதல் சொல்கிறது போலவும், சற்றுக் கூச்சப்படுகிறது போலவும் அவர் "செய்யலாம், செய்யலாம்' என்று சிரித்தார். இடது புறங்கைச் சுட்டுவிரலால் இடது கண்ணை நீவிக் கொண்டு மேல் துண்டைப் போர்த்திக்கொண்ட தோற்றம்தான் கடைசி நேரடி ஞாபகம். பின்னிரவில் தான் அப்பாவுக்குச் செய்தி கிடைத்தது. செந்தில்நாதன் தெரிவித்திருக்கிறார். இங்கு எங்கள் வீட்டுத் தொலைபேசி மணி அடிக்கும்போது சற்று அகாலம். எனக்கு பயம். அம்மா ஏற்கனவே படுத்த படுக்கையில் இருக்கிற சமயம்.

ஓவியர் வள்ளி பேசினார். எப்போதும் மெல்லவே பேசுகிறவர். அவர்தான் தகவலைச் சொன்னார். முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அடுத்துப் பேசுகிற வள்ளியின் குரல்தான் காதில் விழுகிறது. சட்டென்று அவருடைய கல்யாணி அண்ணாச்சியின் முகம் ஞாபகம் வருகிறது. அதற்குப்பின் அவருடைய ராஜவல்லிபுர முகம். இதை எழுதுகிற இந்தக் கணம் அவரது வலதுகையின் மேல்புறம் புடைத்துக் தெரிகிற நரம்புகள்.

அப்பா எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டேன். அப்பாவைப் பற்றிதான் எனக்குக் கவலையாக இருந்தது. அப்பா நினைத்தாலும் புறப்பட்டுப் போகமுடியாது. அப்படியே போனாலும் அவர் முகம் பார்க்க வாய்ப்பிருக்காது. கஷ்டம்தான், அப்பா தூங்கவில்லை. அழுதுகொண்டே தானிருந்தார். இன்னும் வருத்தம் குறையவில்லை. அறுபது அறுபத்தைந்து வருடங்கள் அவ்வளவு சீக்கிரம் தீர்ந்துவிடாது. மணல் கடிகை போல உதிர்ந்து கொண்டே இருக்கும்.

சில தினங்களுக்குப் பிறகாவது அந்த ட்ரங்குப்பெட்டியை மீண்டும் திறந்து பார்க்க வேண்டும். அவ்வளவு கடிதங்களையும் இன்னொரு தடவை வாசித்தால் கூட நல்லதுதான்.

ஆனால் ஒன்று. அவர் இருக்கிறபோது வாசித்ததற்கும், இல்லாதபோது வாசிப்பதற்கும் உண்டான வித்தியாசம் தாங்கமுடியாததாக இருக்கும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com