Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
அக்டோபர் 2007

சேதுசமுத்திரம்: அரசியலும் அறிவியலும்
அசுரன்

இந்திய அரசியல்களம் வினோதமான தன்மைகளை கொண்டது. யார் எந்தக் கொள்கை அடிப்படையில் யாரோடு கூட்டணி சேர்கிறார்கள் என்பதை யாராலும் முன்னதாகவே அறுதியிட்டு சொல்லமுடியாது. மாலை வரை சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்கள் இரவில் சமாதானம் ஆகிப்போவதும் ஒன்றாக உறங்கச் செல்லும் கட்சிகள் காலையில் தனித்தனி அணிகளாக பிரிவதும் 100 கோடி மக்களுக்கும் பரபரப்பு அரசியல் செய்திகளாய் ஆகின்றன.

எந்த கொள்கை அடிப்படையில் அல்லது அறிவியல் ரீதியாக இவர்கள் கூட்டணி வைக்கிறார்கள் என்பதை கண்டறிந்து நமக்கு சொல்வதற்கு புதிய ஆய்வு துறையையே உருவாக்கியாக வேண்டும் என்ற அளவிற்கு நிலைமை மிகவும் சீர்கெட்டு போயுள்ளது. அதற்கு மிக அண்மைக்கால எடுத்துக்காட்டு சேதுசமுத்திரம் திட்டம்.

தமிழர்களின் 150 ஆண்டுகால கனவு என்று சொல்லப்படும் சேதுசமுத்திரம் திட்டம் கடந்த காலங்களில் கடலில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் மன்னர்களைப்போல தாமும் புகழ்பெற வேண்டும் என்று விரும்பும் அரசியல்வாதிகளுக்கும் வசதியான கனவாக ஆகிப்போய்விட்டது. இந்த அடிப்படையில் தான் சேதுசமுத்திரம் திட்டத்தையும் நாம் பார்க்கவேண்டும்.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் சேதுசமுத்திரம் திட்டம் தொடக்கவிழா நடைபெற்றபோது தாங்கள் தான் திட்டத்தை கொண்டுவந்தோம் என்று சுவரொட்டிகள் ஒட்டி விளம்பரப்படுத்திக் கொண்டவர்களே எதிரெதிர் அணிகளாக சண்டையிட்டுக் கொண்டிருப்பது கவுண்டமணியையும் செந்திலையும் மிஞ்சும் நகைச்சுவைக்காட்சியாக உள்ளது.

ஆளும் கட்சியாக இருப்பவர்களுக்கு தம் காலத்தில் மிகப்பெரிய சாதனையை செய்ததாக தம் பெயரை பொறித்து வைத்துக் கொள்ளுவதற்கான ஒரு வாய்ப்பு. எதிர்க்கட்சியாக இருப்பவர்களுக்கோ இத்திட்டத்தினால் தமக்கு எந்த ஆதாயமும் இல்லாமல் போகிறதே என்ற பதைபதைப்பு. இதற்கு வசதியாக அவர்களின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் இராமன்.

அண்மையில் நடந்த பாரதிய ஜனதாவின் தேசியகுழுவில் அயோத்தியா இராமரை ஓரங்கட்டிவிட்டு, இராமன் கட்டியதாக கூறப்படும் பாலத்தை கையிலெடுத்துக் கொண்டது. அண்மையில் வரவிருக்கும் தேர்தல்களும் தனது வாக்கு வங்கியை புதுப்பித்துக்கொள்ளும் நோக்கத்தையும் நிறைவேற்றிக்கொள்ள அவர்களுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பாக இதனை பயன்படுத்துகிறார்கள். பல பத்தாண்டுகளாக அயோத்தி இராமரை சொல்லி சொல்லி அவர்களுக்கே கூட சலித்துப்போயிருக்கலாம். பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு மன்மோகன்சிங்கால் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்ட சேதுசமுத்திரம் திட்டம் இன்று பாரதிய ஜனதாவினாலும் கேள்விக்குள்ளாக்கப்படுவது தான் மிகப்பெரிய வேடிக்கை.

எந்த நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சொன்னதாக சொன்னார்களோ அவர்களே தாம் அவ்வாறு இராமர்பாலம் இருப்பதாக சொல்லவில்லை என்று ஒத்துக்கொண்ட பின்னரும் அறிவியல் ஆயுதத்தை கைவிட்டுவிட்டு மக்கள் உணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று திசைதிருப்புகிறார்கள். அரசியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பார்க்கவேண்டிய ஒரு பிரச்சினையை அவரவர் சுயநலம் சார்ந்து சிந்திப்பதால் நடுநிலைப்பார்வை இழந்துபோகிறது.

அரசியல் ரீதியாக அந்த மணல்திட்டுகளை பாதுகாப்பதற்காக இராமர் பாலம் என்று அணிதிரட்டுபவர்களும் சரி அல்லது அதன்வழி ஒரு கடல்வழியை உருவாக்க முனைபவர்களும் சரி இதனை சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தில் அணுகவில்லை என்பது மட்டும் உண்மை. அரசியல் ரீதியாக இன்று அடித்துக்கொள்பவர்களும் அணைத்துக் கொள்பவர்களும் நாளை எதிரெதிர் முகாம்களுக்கு போகமாட்டார்கள் என்று உறுதியாக சொல்லமுடியாத நிலையில், கடற்கோள் போன்ற ஆழிப்பேரலைகள் நமது தாங்கும் திறனை கேள்விக்குள்ளாக்கும் அளவிற்கு தாக்குதலை தொடுக்கின்ற சூழலில் அறிவுப்பூர்வமாக முன்வைக்கப்படுகின்ற வினாக்களுக்கு விடையளித்து விட்டு அதன் பின்னர் திட்டத்தை மேற்கொள்வது தான் சரியாக செயலாக இருக்கமுடியும்.

கரண்ட் சயின்ஸ் போன்ற அறிவியல் இதழ்களிலும் எக்ணாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி போன்ற பொருளாதார விசயங்களை அலசும் இதழ்களிலும் இதுகுறித்து பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளவரும் இத்திட்ட அறிக்கை தொடர்பாக சுயேட்சையான விமர்சனத்தை முன்வைப்பவருமான பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர்கள் குழுவைச் சேர்ந்த டாக்டர் இரா இரமேஷ் முன்வைக்கும் வினாக்கள் மிகுந்த முக்கியத்துவம் உடையவை.

சேதுக்கடலில் கடல்தரையில் மணல் படிதல் நிகழ்வு என்பது மற்ற இடங்களைக் காட்டிலும் கூடுதலாக நடக்கும் நிகழ்வாகும். இதன்காரணமாக இக்கடலில் உள்ள துறைமுகப்பட்டிணங்களால் சில நூறு நூற்றாண்டுகளுக்கு மேல் சிறப்பாக செயல்பட முடிந்தததில்லை.

எடுத்துக்காட்டாக, கி.பி. 535 ஆம் ஆண்டின் ஆழிப்பேரலை காரணமாக சேதுக்கடலின் தரையில் படிந்த மண் மிகவும் அதிகமாகிப்போனது. இதனால் காரணம் கடல் வாணிபத்தில் கொடிகட்டிப்பறந்த ரத்தினத்தீவின் மாந்தோட்டத்தின் துறைமுகமும், தமிழ் மண்ணின் பெரிய பட்டணம் மற்றும் அழகன்குளத்தின் துறைமுகங்களும் அடியோடு மேடாகிப் போயின. இதனால் பெரிய கப்பல்கள் வந்து செல்வது இயலாத காரியமாக ஆனது.

சேதுக்கடல் குறித்தும், கால்வாய் குறித்தும் நீரி நிறுவனம் அளித்த தொழில்நுட்ப சாத்தியப்பாடு குறித்த அறிக்கையும், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையும் அறிவியல் ரீதியல் குறைபாடு உடையவை என்பதால் அவற்றை மீண்டுமொரு முறை செப்பமாகச் செய்தால்தான் திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தமுடியும் என்பதை முன்வைக்கும் தனிப்பட்ட ஆய்வு நூல்கள் 2004 நவம்பரில் வெளியாகின.

சேதுக்கடலில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கப்பல்களுக்கு அதி முக்கியப் பிரச்சினையாக இருந்து வந்த கடல் தரையில் மணல் படிதல் நிகழ்வினையும், புயல் காற்றுகளையும் நீரி நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை முற்றிலுமாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவ்வாய்வுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்தன. திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன்பு ஆழிப்பேரலை, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளையும் கணக்கில் கொண்டே சேதுக்கால்வாயின் வடிவமைப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் அவை கேட்டுக்கொண்டன.

சேதுக்கடலின் தரை எப்படிப்பட்ட தன்மையைக் கொண்டது - அது கெட்டியான பாறையால் ஆனதா அல்லது இலகுவான பாறைகள் அல்லது களியால் ஆனதா - என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் நீரி-யின் அறிக்கையில் இல்லை என்பதையும் அவை சுட்டிக்காட்டின.

“சேதுக்கடலின் வடகிழக்கு முகவாயான பாக் நீரிணையில் தோண்டப்படவிருக்கும் சேதுக்கால்வாயின் திசையை சற்று மாற்றி அமைப்பது நலம். இல்லையேல் எதிர்காலத்தில் வரும் ஆழிப்பேரலையைத் தெற்குமுகமாகக் கடத்தும் கால்வாயாக சேதுக்கால்வாய் மாறிட வாய்ப்பு நிறையவே உள்ளது” என்ற அவரது கருத்திற்கு பதில் தருமாறு கப்பல்துறை அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டது.

இந்தியாவின் முன்னணி பூகம்பவியலாளரான டாக்டர்.சி.பி. ராஜேந்திரன் அவர்கள் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அந்தக் கட்டுரையில் நீரி நிறுவனத்தின் அறிக்கையை அடிப்படையாக வைத்து இந்தத் திட்டத்தை எப்படி நிறைவேற்ற முடியாது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

2004 டிசம்பர் 26 ஆம் தேதியன்று பேரழிவை உருவாக்கிய ஆழிப்பேரலை சேதுக்கடலிலும் நுழைந்தது. நாகப்பட்டிணத்திற்கு நேர்ந்த நேரடியான பாதிப்புகளை சேதுக்கடலின் துறைகள் சந்திக்கவில்லை என்றாலும் கூட சேதுக்கடலிற்குள் அப்பேரலை பெரும் அளவில் மணலைக் கொண்டுவந்து கொட்டியிருக்கிறது. இதன் காரணம் கடலின் ஆழம் குறைந்துபோய் உள்ளது. ஆழிப்பேரலைக்கு முன்பு செய்த ஆழம் குறித்த மதிப்பீடுகள் இப்புதிய சூழ்நிலையில் உதவ மாட்டா. எனவே கால்வாயைத் தோண்டுவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை கடலின் ஆழத்தை மதிப்பிட வேண்டும். அப்படி மதிப்பிடும்போதுதான் எவ்வளவு மணலை வெளியேற்ற வேண்டிவரும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும். திட்டத்திற்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக எவ்வளவு செலவு செய்யவேண்டிவரும் என்பதை அறிந்தகொள்ள இயலும்.

மேலும் சேதுக்கடலுக்குள் பல்வேறு இடங்களில் மணல்மேடுகள் பெருமளவில் உள்ளன. அவை ஏன் உருவாகின்றன? இப்பகுதியில் வழக்கமாக வரும் பருவக்காற்றுகள், புயல்கள் ஆகியவற்றால் இம்மணல் படியும் நிகழ்வுகள் எவ்வாறு நடைபெறுகின்றன? என்பது குறித்து நீரி நிறுவனம் செய்யத் தவறிய, ஆனால் பல கடலியல் ஆய்வாளர்கள் தனிப்பட்ட முறையில் செய்திட்ட ஆய்வுகளை மேற்கொண்டு செய்த பின்னரே திட்டத்தினை நடைமுறைப்படுத்திட வேண்டும். இந்த ஆய்வு இல்லாமல் ஆண்டுதோறும் கால்வாயில் இருந்து எவ்வளவு மணலை அகற்ற வேண்டி வேண்டும் என்பதனை அறிய முடியாது. எனவே அதற்கான செலவினை முன்கூட்டியே கணக்கிடவும் வாய்ப்பில்லாமல் போகும்.

2005 ஜுன் 17 ஆம் தேதியன்று தூத்துக்குடியில் திட்டத்திற்கான அகழ்வுப் பணியில் ஈடுபட ஆர்வம் தெரிவித்திருந்த சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் சேதுக்கால்வாய் அதிகாரிகளின் ஒப்பந்தம் அளிப்பதற்கு முந்தைய சந்திப்பு நிகழ்ந்தது. அந்த சந்திப்பில் கலந்துகொண்ட நிறுவனங்கள் கேட்ட அறிவியல் பூர்வமான சான்றுகள் சேதுக்கால்வாய் திட்ட அதிகாரிகளிடம் இல்லை. அந்த சான்றுகளையும், தரவுகளையும் அந்நிறுவனங்களுக்கு அளித்திடவும் திட்ட அதிகாரிகள் முன்வரவில்லை. குறிப்பாகக் கேட்ட கேள்விகள் பலவற்றிற்கு திட்ட அதிகாரிகளிடம் இருந்து மழுப்பலான பதிலே வெளிவந்தது.

வேறு வழியின்றி மத்திய அரசு நிறுவனமான இந்திய அகழ்வு நிறுவனத்திடமே அனைத்து அகழ்வுப் பணியையும் ஒப்படைக்கவேண்டி வந்தது என்கிறார் டாக்டர் இரமேஷ்.

அறிவியல் பூர்வமான கண்ணோட்டமின்றி, சுற்றுச்சூழல் பார்வையின்றி இத்திட்டத்தை செயல்படுத்துவது தற்கொலைக்கு சமமாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Kenaiyan
2007-12-03 08:15:00
muzumuttaal@yahoo.co.in

அடெயப்பா! எந்த சார்புமின்றி தைரியமாக கருத்துக்களை எழுதும், அசுரனுக்குப் பாராட்டுக்கள்!
பொதுவாகவே தமிழ் நாட்டில், சுதந்திரமான சிந்தனையாளர்கள் என்பது அரிய விஷயம்! எல்லோரும் ஏதாவது ஒரு இயக்கப் பின்னணியில் வளர்ந்து அந்த இயக்கங்களை ஒட்டியே " சிந்தித்து" வருகின்றனர்! அந்த அடிப்படையில் தமிழ் நாட்டின் '"சிந்தனையாளர்களை" , கருப்புச் சிந்தனையாளர், காவிச் சிந்தனையாளர், சிவப்புச் சிந்தனையாளர் ..... இப்படியாக எளிதில் வகைப் பிரித்து விடலாம்! இது அல்லாமல், அரசியல் வாதிகளுக்கு பரணி பாடி சில பல லட்சங்களைக் கண்ட சான்றோறும் உண்டு! இந்த நேரத்தில் அசுரனின் நடு நிலை ஆச்சரியத்தை உண்டாக்குகிறது! பொருளுக்கு வருவோம்!
தமிழகம், மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான எந்த ஒரு திட்டததையும், நல்ல மனம் படைத்த பண்பாளர்கள் வரவேற்கவே செய்வார்கள்! ஆனால் உண்மையிலேயே இந்த சேது கால்வாயினால் பலன் இருக்கிறதா? இரண்டு பெரிய கடல் பகுதிகள் ஒரு சிறிய நிலப்பரப்பினால் பிரிந்து இருந்தால், கால்வாயினை வெட்டி அவற்றை ஒன்று சேர்த்து, கப்பல் போக்கு வரதுக்கு வழி செய்வது மற்ற இடங்களிலும் நடை பெற்று உள்ளது! உதாரணமாக கி பி 1914 வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து சான் பிரான்ஸ்சிஸ்கொ நகரை அடைய கப்பல்கள் முழு தென் அமெரிக்கா கண்டத்தையும் சுற்றி கேப் ஹோர்ன் முனை வழியாக 22,500 கி. மீ. வரை சுற்றி செல்ல வேண்டியிருந்தது! வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுக்கு நடுவில் பநாமா கால்வாய் வெட்டப் பட்டதால், பயண தூரம் 13,000 கி.மீ. குறைந்தது! இப்போது கப்பல்கள் 9,500 கி.மீ. பயணம் செய்தால் நியூயார்க் நகரில் இருந்து சான் பிரான்ஸ்சிஸ்கொ நகரை அடையலாம்! அதைப் போல, மத்திய தரை கடலையும், செங்கடலையும் இணைக்கும் ஸூயெஸ் கால்வாய் கட்டப் பட்டதால் 20,000 கிலோ மீடர் கால் பயணம் மீட்ச்ம் ஆனது- இல்லையெனில் ஐரோப்பியாவிலிருந்து ஆசியா வர முழு ஆப்ரிக்க கண்டத்தையும் சுற்றி வர வேண்டும்- வாஸ்கொடகாமவைப் போல! இந்த பின்னணியில் நம்முடைய சேது கால்வாய் திட்டத்தின் சாதகங்களை ஆறாய்வோமா? மற்ற கால்வாய்கள் எல்லாம் 13,000 கி.மீ பயண மிச்சம் தரும் போது, சேது கால்வாய் வெறும் 650 கி.மீ. மட்டுமே பயண தூரத்தைக் குறைக்கிறது! மேலும் கால்வாய் வழியே பயணம் செய்வது , பெருங் கடலில் பயணம் செய்வதை விட அதிக ரிஸ்க் ஆனதும், கடினம் ஆனதும் ஆகும்! எனவே மாலுமிகள் வெறும் 650 கி. மீ. மிச்சம் செய்ய,ஆழ்கடலில் பயணம் செய்வதை விடுத்து, குறுகிய சந்து போன்ற கால்வாய் வழியாக செல்ல விரும்புவார்களா? இது சம்பந்தமாக சர்வதேச மாலுமிகளிடம் கருத்து கேட்டுப் பெறப்பட்டதா? வெறுமனே கால்வாயை வெட்டி விட்டு உட்கார்ந்தால் போதுமா? ஒரு நாளில் எத்தனை கப்பல் கள் இந்த கால்வாய் வழியே செல்லப் போகின்றன? 3000 கோடி செலவு என்றால், ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் 360 கோடி வருமானம் ஆவது வர வேண்டாமா? அதாவது ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் வர வேண்டும்! அடற்க் கு ஒரு நாளைக்கு 10க்கும் மேர்ப்பட்ட கப்பல்கள் செல்ல வேண்டும்! ஒரு மாதத்திற்காவது, 10 கப்பல்கள் செல்லுமா? தேசிய சரக்குப் போஅக்குவரதது சாலைகள் மற்றும் இருப்பு பாதைகளை உபயோகப்படுத்துகிறதா
அல்லது கடல் வழி போக்குவரத்தை நம்பி இருக்கிறதா? மும்பை நகரில் இருந்து, சென்னைக்கு சரக்கு அனுப்ப வியாபாரிகள் சாலைகளை உபயோகிப்பார்களா? கப்பலை உபயோகிப்பார்களா? சர்வதேச போக்குவரத்தை ஆராய்ந்தால், இன்றைய தினம் உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து எங்கே நடக்கிறது? உலகின் முன்னணி உற்ப்பத்தி கேந்திரங்கலான, ஷாங்காய், தாய்வான், சிங்கப்போர், மலேசியா, கொரியா இந்த நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மேற்கு திசையில் உள்ள ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், ஆப்ரிக்ா, இவற்றுக்கு செல்ல வேண்டும்! இதற்கான கடல் வழி என்ன?
மத்திய கிழக்கு, மற்றும் ஐரோப்பிய
நாடுகளில் இருந்து வரும் கப்பல்களுக்கு, இந்த சந்து கால்வாய்க்குல், புகுந்துசெல்ல வேண்டிய அளவுக்கு பயண நேரமும், தூரமும் வித்தியாசம் இல்லை! ஷாங்காய், தாய்வான், சிங்கப்போர், மலேசியா, கொரியா நாடுகளில் இருந்து புறப்படும் கப்பல்கள், நிகொபார்
தீவுகளுக்கும், இந்தோணேசியவிற்க்கும் இடையே உள்ள கடல் பகுதி வழியே இந்தியப் பெருங்கடல்
பகுதிக்கு வருகின்றன! அங்கிருந்து அரபி கடல் பகுதி செல்ல, ஸ்ரீலங்கா வின் தென் முனை வழி யாக செல்வது கிட்டத்தட்ட ஒரு கிடை மட்ட நேர்கோடு (Horizontal straight line)வழியாகும்! அதை விட்டு விட்டு, கப்பல் தலைவர்கள், மேல் நோக்கி வங்காள விரிகுடா வந்து, யாழ்ப்பாண தீபகற்பத்தை சுற்றிக் கொண்டு, சேது கால்வாயில் நுழைந்து, இந்திய தீபகற்பத்தின் தென் முனை ஐயும் சுற்றி கொண்டு அரபிக் கடலில் நுழையும் வழியில் (circutous and inconvenient route) வர வேண்டிய
அவசியம் என்ன? இலவசமாக பயணம் செய்ய அனுமதித்தால் கூட சேது கால்வாய் அவர்களுக்குஉபயோகப் படுமா? எனவே மிக முக்கியமாக மாலுமிகளிடம் கருத்து கேட்காமல், பூகோள காரணங்களை நோக்காமல், நமக்கு பெயர் வர வேண்டும் என செயலில் ஈடுபடலாமா? ஏற்கனேவே வாழப்பாடியார் சிரமப் பட்டு, சேலம் நகருக்கு விமான நிலயம் கொன்டு வந்தார்! விமானங்களும் இயக்கப் பட்டன! ஆனால் யாரும் விமானப் பயணம் மேற்கோள்ளவில்லை! ஒரு வருடம் பார்த்தது விட்டு மூடி விட்டனர்! விமான நிலயத்தில் மாடுகள் மேய்கின்றன! அதைப் போல 400 கோடி கொட்டி வெட்டியாக கால்வாய் வெட்ட வேண்டுமா? இதை எடுத்து சொன்னால், "தமிழின எதிரி " என வெய்வார்கள்! "சாதிச் சான்றிதழ்" போல இந்த "தமிழன் " என்பதற்கான "இனச் சான்றிதழ்" எந்த அதிகாரியிடம் வாங்க வேண்டும் என்று யாராவது சொன்னால் நல்லது!



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP