Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
சினிமாப் பக்கம்

தமிழ்ச் சினிமா இசை: கே.வி, மகாதேவனை முன்வைத்து - சில குறிப்புகள்
குருசாமி மயில்வாகனன்

1918ல் பிறந்து 1942ல் ‘மனோன்மணி’ என்கிற படம் துவங்கி 1990ல் ‘முருகனே துணை’ என்கிற தனது 218வது தமிழ் படத்துடன் முடித்துக் கொண்டு (பிறமொழி தனி) 2001ல் ஜுலையில் இறந்த ‘திரை இசைத் திலகம்’ எனும் பட்டம் கொண்ட கிருஷ்ணன் கோவில் வெங்கடாச்சலம் மகாதேவனாகிய கே.வி. மகாதேவனைப் பற்றி 2005ன் தமிழ்ச் சினிமா இசை ரசிகர்களுக்குச் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது?

கே.வி.எம்.மின் பாணி என்று எதையாவது கூறி (அப்படி கூறுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தாலும்) தமிழ்ச் சினிமா இசை உலகில் (தெலுங்கிலும் கூட) தடம் பதித்தவர் என நிரூபிக்க வேண்டி எழுதப்படுகிற கட்டுரையல்ல இது.

விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்படுகின்ற தொழில் நுட்ப மாற்றங்கள், அதனால் உண்டாக்கக் கூடிய விளைவுகள் (எபெக்ட்) இவைகளை அறியாத கலைஞர்கள், தங்களின் கடும் உழைப்பாலான காலகட்டங்களுக்குப் பிறகு தங்களது ஓய்வுக் காலங்களில் விஞ்ஞான விளைவுகளைக் கேட்கும் போது என்ன எண்ணுவார்கள்? என்று எழுந்த கேள்வியானது, நவீன விஞ்ஞான விளைவுகளைப் பற்றி தங்களின் உச்சகட்ட வேலை நாட்களில் ஏதேனும் பரிசீலித்திருப்பார்களா? என்ற கேள்விகளாக மாறிய போது, கே.வி. மகாதேவனின் இசையமைப்பில் இருந்த ஒரு நுட்பம் அவரது பாடல்கள் குறித்த கவனத்தை இழுத்தது. அதுவே இக்கட்டுரைக்கான காரணமாகவும் இருக்கிறது.

கர்நாடக இசைப் புலமையைக் காட்டுபவர்கள் மட்டுமே இசைத் துறை விற்பன்னர்களாக பெருமை பெற்றுக் கொண்டிருந்த காலங்களோடு தான் தமிழ்ச் சினிமா இசையின் காலமும் துவங்குகிறது. 1950களின் இறுதியில் புதிதாக உருவாகி வந்த மத்திய தர வர்க்கமானது பெருகிய போது சினிமாவும் அதற்கான கலையாக மாறியது. இந்த மாற்றமானது சினிமாத் துறைக்குள் சில மாற்றங்களை நிர்ப்பந்தமாகத் திணித்தது. சமூகப் படங்கள் வெளிவர ஆரம்பத்தன. பாடல்களின் எண்ணிக்கை குறைந்து பாடல் பாடப்படுவதற்கான காரணங்கள் மாறுபட ஆரம்பித்தன.

கணவன், மனைவி அல்லது காதலன் காதலிகளுக்கிடையிலான பாடல்கள், குரு-சிஷ்யை அல்லது கடவுள்-பக்தை எனும் உறவிலிருந்து மாறி உணர்ச்சிகளைப் பரிமாறும் இடங்களாக ஆரம்பித்தன. இது மட்டுமல்லாமல் பல்வேறு விதமான பாடல் பின்னணிகளும் தங்களது தளங்களை, பின்புலங்களை மாற்றியமைத்துக் கொண்டன.

1942ல் கே.வி.எம் அறிமுகமாகி, 10ஆண்டுகள் கழித்து 1952ல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி வருகிறார்கள். வழக்கமாக தமிழ்ச் சினிமா இசை வரலாற்றைக் குறிப்பவர்கள் குறிப்பிடும் 1961ம் ஆண்டும் அப்போது வெளிவந்த படங்களான ‘பாலும் பழமும்’, ‘பாவமன்னிப்பு’, தவிர அந்த ஆண்டில் வந்த கே.வி.எம். மின் ‘குமுதத்’தையும் சேர்த்தே குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது. ஏராளமான மிகப்பெரிய ‘ஹிட்’களை விஸ்வநாதன்-ராமமூர்த்தி தான் கொடுத்தார்கள் என்றாலும் கூட கே.வி.எம். மின் இசையமைப்பானது அவர்களுக்கு நிகராகவும் சில குறிப்பிட்ட நுட்பங்களில், துறைகளில் அவர்களை விடக் கூடுதலாகவும் இருப்பது வெளியில் தெரியாதது.

ஒரு பாடலை, பாடலுக்கான இசையை உருவாக்கும் இசையமைப்பாளர் அவ்வாறு உருவாக்குவதற்காக அவர் வைத்திருக்கும் திட்டம் அல்லது கண்ணோட்டம் என்ன என்பதுதான் அந்த இசையமைப்பாளன் ஒரு கலைஞன் என்கிற தகுதியைப் பெறுவதற்கான அடிப்படை விசயம்.

திரைப்பட இசை என்பது வணிகம் சார்ந்த சினிமாவின் துணைச் சாதனமாக இருப்பதுமல்லாமல் தன்னளவிலும் வணிகம் சார்ந்த அல்லது வணிகப் பொருளாகவே இருப்பதால், சினிமாப் பாடல் சீரழிப்பு அல்லது பெருமை ஆகியவற்றில் இசையமைப்பாளருக்கும் முக்கியப் பங்கு உண்டு. வரவேற்பிற்குரிய பண்டமாக பாடல்கள் ஆக்கப்படும் போதுதான் அதன் விற்பனையானது உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்கும். இந்த ‘வரவேற்புக்குரியதாக ஆக்கும்’ வேலையைச் செய்வதுதான் ‘திறமை’ என்று சினிமா உலகில் சொல்லப்படுகிறது. இதே நிலைமை அக்காலத்திலும் இருந்திருக்கிறது. கே.வி.மகாவைப் பொறுத்தவரை திரை இசையமைப்புப் பணியை ‘செய்தொழில்’ என்கிற அடிப்படையில் புனிதமானதாக நினைத்திருந்தாலும் திரை இசைத் தொழிலே புனிதமானது என்ற எண்ணம் அவருக்கிருந்ததாகத் தெரியவில்லை. பின்னாளில் இசைஞானிகளெல்லாம் வரப்போவதை அவர் அறியவில்லை. “எதையும் கொடுக்கிறபடி கொடுத்தால் நிச்சயம் வரவேற்பு இருக்கும்” என்பதுதான் அவரது அணுகுமுறை.

மேற்சொன்ன அவரது வாக்கியத்தில், ‘கொடுக்கிறபடி’ என்பதும், ‘நிச்சயம்’ என்பதும் ‘வரவேற்பு’ என்பதும் முக்கியமான சொற்கள். ‘கொடுக்கிறபடி’- என்பது கேட்போரின் ரசனைத் தேவை குறித்து மதிப்பீடு வைத்திருக்கும் உறுதியும், ‘நிச்சயம்’ என்பது என்னால் அதை ஈடு செய்ய முடியும் என்கிற நம்பிக்கையும், ‘வரவேற்பு” என்பது தொழில் ரீதியான வெற்றியாக மாற்றப்படும் தன்மையும் குறிப்பிடுகிறது. இது அவ்வளவு முக்கியமா? எனக் கேள்வி எழலாம். “எனக்குள் இருந்து இறைவன் இசையமைக்கிறான்” எனச் சொல்லி இருப்பதோடு ஒப்பிட்டால் இதன் முக்கியத்துவம் உணரலாம்.

ஆக நேர்த்தியான ஒரு தொழில் முறைக் கலைஞனாக மட்டுமே தன்னை நம்பிக் கொண்ட கே.வி. மகாதேவன் அந்தப் பாதையிலே சென்றிருக்கிறார். அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

குறைவான இசைக் கருவிகளைக் கொண்டு சிறப்பான பாடல்களை கே.வி.எம். தந்திருக்கிறார் என்பது எல்லோரும் பாராட்டும் அபிப்பிராயமாகும். ஆனால் இதைக் கே.வி.எம். மட்டும் தான் செய்திருக்கிறாரா? என்றால் “இல்லை” என்பதே உண்மை. இந்த குறைவான இசைக்குருவி என்கிற அம்சத்தில் புகழ்பெற்ற பாடலான ‘தாழையாம் பூ முடிச்சு’ (பாகப்பிரிவினை) பாடல் கூட எம்.எஸ்.வி-ராமமூர்த்தி இசையமைப்பில் வந்ததுதான்.

எம்.எஸ்.வி, ராமமூர்த்தி, கே.வி.எம் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் கே.வி.எம்.மின் சிறப்பம்சமாக, இந்தக் கட்டுரை எழுதத் தூண்டுதலாக இருக்கும் விசயம் என்ன? அது ஒரு சின்னத் தொழில் நுட்பம் தான். 1950களின் துவக்கமும் 1960களின் ஊடாக பாடல்களில் ‘பேஸ்’ எனப்படும் அதிர்வை மிகக் கூடுதலான அளவில் கொண்டு வர முதலில் முயன்றது கே.வி.எம். என்றே நான் நினைக்கிறேன். தன்னுடைய முதல் வெற்றிப்படம் என மகாதேவனே பெருமிதம் கொள்ளும் படமான ‘டவுன்பஸ்’ படத்தில் (1955) வருகிற, “பொன்னான வாழ்வே’ எனும் பாடலில் அந்த முயற்சி தெரிகிறது. கூடுதலான ‘பேஸ்’ அதிர்வு தேவைப்படும் இடங்களில் அதற்கு முன்னதாக இந்த அதிர்வைக் ‘குறைத்து வைத்து’ ஒலிப்பதிவு செய்வது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. பின்னாளில் இளையராஜா இசையமைத்த ‘காயத்ரி’ (1975) படத்தில் “வாழ்வே. . மாயமா.?” எனும் பாடலில் கூட இதே நிலைதான்.

இதற்குக் காரணம், டவுன்பஸ்ஸும் (1955) சரி, காயத்ரியும் (1975) சரி, இரண்டுமே ‘மோனோ’ முறையில் அதாவது ஒரு வழிப்பாதை வழியைத்தான் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அழுத்தமான அதிர்வை உண்டாக்க, ஒலிப்பெருக்கிகள் பிரம்மாண்டமானதாகச் செய்யப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் டூரிங் தியேட்டர்களில் திரைக்குப் பின்னால் ஒரு பெரிய வெளிநாட்டு ஸ்பீக்கர் பெட்டியும், அதன் மேல் ஒரு முழுக் குழாயும் வைக்கப்பட்டிருக்கும். மிகப்பெரும் அதிர்வுகளை அவைகள் கொடுத்தன என்பதும் உண்மைதான். ஆனால் “டங்” எனும் அதிர்வையே அவைகள் பெருமளவில் வெளியிட்டன. “டம்” எனும் அதிர்வை வெளியிட அவைகள் சிரமப்பட்டன. விஞ்ஞானம் வளர வேண்டிய தேவை இருந்தது. இன்று டி.டி.எஸ், சர்ரவுண்ட், ஹோம் தியேட்டர் வந்த பிறகு அதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.

ஒரு புதிய தொழில் நுட்பத்திற்கான ஏக்கம் தமிழ்த்திரை இசையமைப்பாளர்களிடையே நிச்சயம் இருந்திருக்க வேண்டும். ஆனால் இசை உலகில் மன்னராகத் திரிந்த எம்.எஸ். விஸ்வநாதன் கூட இதற்கான முயற்சிகளை எடுத்ததாகத் தெரியவில்லை. அவர் நினைத்திருந்தால் ‘உலகம் சுற்றும் வாலிபனையே’ (1973) ‘ஸ்டீரியோ’வில் கொண்டு வந்திருக்க முடியும். தரப்படுத்தப்பட்ட ‘மோனோ’ விலேயே அவரது ஆசைகள் பூர்த்தியாகி விட்டன. பின்னர் இளையராஜா தான் ‘பிரியா’ (1978) வில் ‘ஸ்டீரியோ’ யைக் கொண்டு வருகிறார் ஏகப்பட்ட சிரமங்களுக்கிடையில்.

கே.வி.மகாதேவனுக்கு அநேகமாக “ஏணிப்படிகள்” படம் தான் (1979) முதல் ‘ஸ்டீரியோ’ வாக இருக்க வேண்டும். ஒருவேளை 1963களிலேயே ‘ஸ்டீரியோ’ வந்திருந்தால் கே.வி.எம்மின் எல்லை இன்னும் விரிந்து பிரம்மாண்டமாகும் வாய்ப்புகள் கிடைத்திருக்கும்.

1963ல் வந்த காட்டுரோஜா, வானம்பாடி முதல் நவராத்திரி மற்றும் வேட்டைக்காரன் (1964), 65ல் இதயக்கமலம், திருவிளையாடல், மகாகவி காளிதாஸ், 66ல் சரஸ்வதி சபதம், தனிப்பிறவி, 67ல் அரசகட்டளை, கந்தன் கருணை, திருவருட்செல்வர், 68ல் தில்லானா மோகனாம்பாள், 69ல் அடிமைப்பெண், 70ல் வியட்நாம் வீடு, 71ல் ஆதிபராசக்தி, 72ல் அன்னமிட்டகை, வசந்தமாளிகை, 73ல் பட்டிக்காட்டுப் பொன்னையா, எங்கள் தங்கராஜா, 74ல் வாணிராணி, 75ல் பல்லாண்டு வாழ்க, 76ல் உத்தமன், 77ல் தாலியா சலங்கையா? வரை அவரின் இசைப்பதிவு பிரம்மாண்ட அல்லது ஆழ்ந்த அழுத்தமான அதிர்வைத் தேடிப் பொங்கிக் கொண்டிருந்தது.


தொடர்ச்சி அடுத்த இதழில். . .