Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2006

எழுத்தாளர்களின் தேர்தல் பிரவேசம்
பா.செயப்பிரகாசம்

1975 நெருக்கடி நிலையின் போது அரசுப்பணி பறிக்கப்பட்டு நான் அலைவுற்றுக் கொண்டிருந்த காலம். அவசர நிலை (Emergency) என்ற எல்லையற்ற வெளியை உருவாக்கி வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டார்கள். முழுசாய் ஒரு துறையையே ஒழித்து எங்களை மொத்தமாக வீட்டுக்கு அனுப்பினார்கள். நீதி மன்றத் தீர்ப்பின்படி 1978ல் மறுபடி பணியமர்த்தப் பட்டோம். அதே கால கட்டத்தில் தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட, வெளியேறிய எம்.ஜி.ஆர். (வெளியேற்றப்பட்டதும், வெளியேறுதலும் இரண்டும் இணைவாய் அவரவர் சுயநலன் கருதி நடந்தன) ‘ஜெகஜோதியாய்’ மேலே வந்து கொண்டிருந்தார். வேலை பறிக்கப்பட்டு அல்லாடியபோது 1977ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வில் நிற்க அதில் இல்லாத நான் மனுச் செய்தேன். ‘சீட்’ கிடைக்காமல் போனது ஒரு தற்செயல் நிகழ்வு. திராவிட பாரம்பரிய கட்சிகளில் இருக்கிற- இருந்த இரண்டாம் நிலைத் தலைவர்கள் பலர் எனக்கு நெருங்கிய நண்பர்கள். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்ட களத்தில் என்னோடு உருவாகி வந்தவர்கள். ஒரு வேளை ‘சீட்’ கிடைத்திருந்தால் (அப்போது வெற்றி என்பது உறுதி) அந்த என் நண்பர்களைப் போல் சீரழிவாகி, மக்களுக்குப் பயன்படாத காரியங்களுக்கு காரணமாகி நாசக்காடு பண்ணியிருப்பேன். சீரழிவு என்பதை கலாச்சார குணங்களின் சீரழிவாக மட்டுமே சுட்டவில்லை. மக்களுக்கு கிஞ்சித்தும் பயன் தராத ஒரு இடம் என்ற அர்த்தம் அது.

சொந்த அனுபவம் என்பது ஒரு படிப்பினை. ஒவ்வொன்றையும் சொந்த அனுபவத்திலிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற விதி இல்லை. சொந்த அனுபவம் என்பதையே எல்லா நடைமுறைகளுக்கும் முன்னுதாரணமாகக் கொள்ள முடியாது. பொது அனுபவங்களை தொகுத்து, அதிலிருந்து சாரத்தை எடுத்து நமக்குள் இறக்கி கற்றுக் கொள்ளல் என்பதே வரலாற்றுப் படிப்பினை. அனுபவ வாதத்தை ஒதுக்கிய பொது அனுபவத் தொகுப்பு ஒன்றுதான் வரலாற்றை முன்னடத்திச் செல்லும் வழியாகும்.

இன்றைக்கு இலக்கியவாதிகள் சிலர் அரசியல்வாதிகளாக அடையாளம் கொண்டிருக் கிறார்கள். இலக்கியம் என்ற சிந்தனைத் துறை இதற்கு ஆதார மையமாக இருக்கிறது. தரமான இலக்கிய எழுத்தாளர்கள் என்ற முத்திரை, திரைப்படத்துறைக்கு வணிகப் பத்திரிகைக் களத்துக்கு நுழைய ஏதுவானதாக இருப்பது போல, அரசியலில், குறிப்பாக தேர்தல் அரசியலில் பிரவேசிப்பதற்கும் அச்சாரமாக ஆகிறது.

ஜெயகாந்தன் வெளிப்படையாக ஆதரித்து, காங்கிரஸ் கட்சி மேடைகளில் பேசியிருக்கிறார். கவிஞர் பாரதிதாசன் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். சமகால எழுத்தாளர்களில் சிலர் எல்லோரும் அறிய அரசியல் கட்சிகளின் ஆதரவு முகங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். ஒரு கலைஞன் அரசியல் சார்பு கொண்டவனாக இயங்கக் கூடாது என்பதல்ல; இயங்க வேண்டும். இன்னார் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளாமல், இலக்கியத்தை உணவாக்கி இலக்கியத்தை சுவாசித்து இலக்கியச் சுயம்புவாக வாழ்ந்து முடித்தவர்கள் எவரும் இல்லை. அவ்வாறு வாழ்தலுக்கும் ஓர் அதிசயம் இருக்கிறது. அந்த வாழ்வும் ஓர் அரசியல்தான்.

இலக்கியவாதி, கடந்த காலத்தின் ஞானி போன்றவன். ஞானி வாழ்வின் மர்மங்களைக் கண்டறியும் தொடர் முனைப்புக் கொண்டவன். மனித குல நேயம் மிகக்கொண்டு, தொடர்ந்து உள்ளொளி பாய்ச்சுகிறவனாக இருந்தான். ஒரு ஞானியின் தீர்க்க தரிசனத்தோடும் மனிதகுல கரிசனத்தோடும் இயங்க சமகால இலக்கியவாதி கடமைப்பட்டிருக்கிறான்.

மக்களின் விடுதலைக்கான பாதயை முன்னறிந்து சொல்வதில், கட்டமைப்பதில் எழுத்தாளர்களது விடுதலையும் அடங்கியிருக்கிறது. அது ஏற்கனவே எல்லோரும் செல்கிற எல்லாக் கால்களும் நடந்து பழக்கமாகி விட்ட தடமாக இருக்காது மாற்றுப் பாதையாக இருக்கும்.

சமகால எழுத்தாளர்களில் இருவர் மக்களுக்கான காரியமாற்றும் போராட்ட வழி முறையாக தேர்தலில் நுழைந்திருக்கிறார்கள். விலகி இருக்கவோ, விலக்கி வைக்கவோ வேண்டியதல்ல தேர்தல் என எதிர்காலத்தில் இது பலராகவும் ஆகக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

தேர்தல் பாதை சென்றடையும் அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு மக்களுக்கான எதையும் சாதித்து விட முடியும் என்று எல்லோரும் போலவே இவர்களும் கருதுகிறார்கள். அவ்வாறு நினைப்பதில் தப்பில்லை என்றே வைத்துக் கொண்டு ஆய்வைத் தொடரலாம். சமகால அரசியல் நிகழ்வுகள், கட்சிகள், தலைமைகளின் அலங்கோலங்கள் என இவையெல்லாம் நினைவின் முன் வருகின்றன. இவையெல்லாம் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான ஒன்றேயாயினும், இப்போது நடைமுறையிலிருக்கிற சனநாயக ஆட்சிமுறையை ஆராய்வதுதான் அடிப்படையானது.

இப்போது நமக்கு வாழங்கப்பட்டிருக்கும் சனநாயக ஆட்சிமுறை இரு அலகுகள் கொண்டது. ஒன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற மக்கள் பிரதிநிதித்துவ சபைகள் (நகராட்சி மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்ற அமைப்புகள்)

இரண்டாவது மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத அரசு அதிகார உறுப்பு, சனநாயாக ஆட்சிமுறை தோன்றிய காலத்தில் தோன்றிய நியமன உறுப்பு இது. இதில் செயலாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், விதிகள், நடைமுறைகள் மக்களால் உண்டாக்கப் பட்டதில்லை. மக்களுக்குத் தொடர்பில்லாத நியமன முறை மூலம் உண்டான நிர்வாக அமைப்பு இது. ஒரு கட்சி பிடிக்கவில்லையென்றால் அடுத்த தேர்தலில் இன்னொரு கட்சியை மாற்றி விடலாம். இந்தியா விடுதலையடைந்ததாகச் சொல்லப்படும் நாளிலிருந்து இதுநடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்களின் கசப்போ, வெறுப்போ எதுவாயிருந்த போதும் அதிகார வர்க்கத்தை அரசு உறுப்புக்களை மாற்ற முடியாது. ஏனெனில் மக்கள் பார்த்து நியமிக்கப்பட்டவர் அல்ல அதிகார வர்க்கத்தினர்.

மக்கள் தங்களுக்கானதை செய்து கொள்ளும் அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகளில் இல்லை. அவை தீர்மானத்தை நிறைவேற்றும் சபைகள் மட்டுமே. செயலாற்றும் அதிகாரம் அரசு இயந்திரம் என்னும் உறுப்பில் தங்கியுள்ளது. அது மக்களால் தேர்தல் முறை மூலம் உருவாக்கப்பட்டது அல்ல.

அதிகார வர்க்கம் விரும்பினால் அரசியல்வாதிகளாக ஆக முடியும். அரசியல்வாதி விரும்பினாலும் செயலாற்றும் அமைப்பாக இருக்கிற அதிகார வர்க்கமாக ஆக முடியாது என்ற அர்த்தத்தில் அந்த வாசகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக அரசில் பணியாற்றிய சில இ.ஆ.ப.க்கள் (ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்) நாடாளு மன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ஆகியிருப்பதை இதற்கான சான்றாய்க் காண முடியும். அரசுப் பணியாளர்கள் பலர் சட்ட மன்ற உறுப்பினர்களாகியுள்ளார்கள்.

மன்னர்களின் பேரரசுகளும், நிலப் பிரபுத்துவமும் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மக்கள் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றிய நிகழ்ச்சி, பிரெஞசுப் புரட்சியில் தோற்றம் கொண்டது. புதிதாய் உருக்கொண்டு வளம்பெற்ற முதலாளிகளின் தொழிற்சாலைகளையும் மக்கள் எடுத்துக் கொண்டனர். மக்கள், தங்கள் கைகளில் நேரடியாக அதிகாரத்தை எடுத்துக் கொண்ட காரியம் முதலாளிகளுக்கு கொஞ்சம் உடன் பாடில்லை. முன்னர் நிலப்பிரபுத்துவத்துக்கு நடந்தது பின்னர் முதலாளியத்துக்கு நடக்கும் என குலை நடுங்கினர். அப்போது அவர்கள் முன்னெடுத்த தீர்க்க தரிசனச் செயல்பாடு, எந்நாளும் அவர்களுக்குப் பாதுகாப்பாய் மாறியது.

மக்களுக்கான சுதந்திரம், மக்களுக்கு சமத்துவம் இவைகளை நிலை நிறுத்த மக்களுக்கான சனநாயகம் என்ற உள்ளடக்க அடிப்படை யிலேயே சுதந்திரம், சமத்துவம், சனநாயகம் என்ற முழக்கங்கள் முன் வைக்கப் பட்டன. இதில் சுதந்திரம், சமத்துவத்தை, தமக்கானதாகவும், சனநாயகம் என்ற வார்த்தையை மக்களுக் குரியதாகவும் மாற்றி எழுதும் தந்திரோ பயத்தை மேற்கொண்டனர் முதலாளிகள். இப்படி சனநாயகம், மக்களுக்கானதாக காட்டுவதன் மூலம் அதுவும் தம் வசப்படும் என்பதை அவர்கள் அறிவர்.

மக்கள் தேர்ந்தெடுக்கும் சனநாயக சபைகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத செயலாற்றும் அதிகாரம் படைத்த நிர்வாக அமைப்புகளும் என தனித் தனிப் பிரிவுகளாக உருவாக்கினர். முன்னது மக்களுக்கு பின்னது தங்களுக்கு என தந்திரப் பிரிப்பு செய்து கொண்டனர்.

செயல்படுத்தும் உறுப்பாக (Executive body or Burearatic structure) உருவெடுத்த அரசு இயந்திரம் யாருடைய நலன்களுக்காக பிறப்பெடுத்ததோ அதை எழுத்துப் பிசகாமல் நிறைவேற்றி வருகிறது. இன்றுவரை அதுவே ஆட்சி அதிகாரம் கொண்டதாக தொடர்கிறது. மேலும் மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு, வலிமையான இரும்புச் சுவராக, எவராலும் அசைக்க முடியாததாக உருக்கொண்டு விட்டது. தங்களுக்காக செயல் படாத அரசு நிர்வாகம் பற்றி மக்களும் கேள்வி எழுப்ப முடியாது. மாநிலம் தழுவிய தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டத்தில் ஜெயலலிதா ஆட்சி கொடிய அடக்குமுறைகளை வீசிய போது மக்கள் அரசுப் பணியளார்களுக்குத் துணையாக வரவில்லை என்பதை நிதர்சனமாக இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு கைகொடுக்காத, காரியமாற்றாத, தங்கள் மீதே அடக்குமுறை செலுத்துகிறவர்களை மக்களும் கைவிட்டார்கள்.

செயலதிகாரம் மக்கள் பிரதிநிதிகளிடம் உள்ளதாகக் காட்டுவதும், முழங்குவதும் ஒரு ஜோடிப்புத்தான். எந்த வர்க்கத்தின் நலன்களை செயல்படுத்துவதற்காக அதிகார அமைப்பு உண்டு பண்ணப்பட்டு இயங்குகிறதோ அந்த நலன்களுக்கு முரண்படாமல் இணைந்து செல்கிறபோது இணைந்து போகிற மக்கள் பிரதிநிதிகளை அது தன்னோடு இணைத்துக் கொள்ளும். ஊழல், அடக்குமுறை, மக்கள் சார்பின்மை என்ப தெல்லாம் அது கற்றுக் கொடுத்து மக்கள் பிரதிநிதிகள் பிடித்துக் கொண்ட வித்தைகள்.

தமிழ் ஆட்சி மொழியாக்கப்படுதல் பற்றி காமராசரின் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை எத்தனையோ தீர்மானங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. தனி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. (தமிழின் பெயரைச் சொல்லாமல் இங்கு எவரும் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது என்ற உண்மைதான்) ஆனால் தமிழ் ஆட்சி மொழியாகச் செயல்படுவது பற்றி அதிகார கூட்டம் கிஞ்சித்தும் கவலைப் படவில்லை. ஆட்சி அமைப்பில் நிர்வாகத்தில் நீதிமன்றத்தில், கல்வி நிலையங்களில் ஆலயங்களில் தமிழை முதன்மையாக்குவதில் அதன் நலன் களுக்கு என்ன வகையில் ஆதாயம் என்பதுதான் அதன் கவலை, அக்கறை.

மத்தியப் பிரதேசத்தில் நர்மதை நதியில் கட்டப்பட்டு வரும் சரோவர் அணைத் திட்டம் என்னும் பிரமாண்டத்தை அதிகார வர்க்கம் செயல்படுத்துகிறது. இந்தப் பிரமாண்டம், அந்தப் பகுதியில் வாழ்ந்த மூன்று லட்சம் பழங்குடியினர், மலைவாழ் மக்கள், தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வை குடிபெயர்த்து சிதைத்தது. மேதா பட்கர் என்ற சமூகப் போராளி, சிதைக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீண்டும் அமைத்துத் தாருங்கள் எனப் போராடி வருகிறார்கள். அணை எழுப்புவதன் மூலம் நிறைய அள்ளிக் குடித்த அதிகார கூட்டம், அணையை உருவாக்குவதில் காட்டிய அக்கறையில் நூறில் ஒரு பங்கைக்கூட, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்டமைப்பதில் செலுத்தவில்லை. பாதிக்கப்பட்ட சிலருக்கு மட்டும் இழப்புத் தொகையும் வசிப்புக்கு மாற்று இடமும் தரப்பட்டன. அந்தச் சிலரும் இழப்புத் தொகைi ரொக்கமாகவே பெறக் கட்டாயப் படுத்தப் பட்டனர். இழப்புத் தொகை வழங்கியபோது ஒவ்வொருவரிடமிருந்தும் ரூபாய் இருபதாயிரம் அதிகாரிகள் லஞ்சம் பெற்றிருக்கிறார்கள். லஞ்சம் கைமாறுவதற்கான வழியாகவே பணமாக வாழங்குதல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

எனவே தேர்தல் பங்கேற்பு என்பது ஒரு போராட்ட வழிமுறையாக குறிப்பாக மக்கள் நலன்களைக் காப்பதற்கான வழிமுறையாகக் கொள்ள முடியுமா என்ற கேள்வி நியாயமானது.

காமராசர், அண்ணா போன்றவர்களை இந்த சனநாயகத்தின் முன்னுதாரணமாகக் காட்டு கிறார்கள். காமராசர் எளிமையானவர், தனக்கென எதுவுமில்லாது வாழ்ந்தவர். அண்ணா கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றெல்லாம் இந்த சனநாயக ஆட்சி முறையாலும் அசுத்தமாகாத வர்கள் என்று பேசப்படுகிறது. இவ்வாறு பேசப்படுகிற அளவில் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள். இந்த போலியான சனநாயக ஆட்சிமுறை நீடிப்பதற்கு இத்தகைய கதா பாத்திரங்கள் தேவைப்படுகிறார்கள் என்பதுதான் இதிலுள்ள அவலமுரண். இவர்கள் மக்களுக்காக முன்வைத்த கொள்கைகள் எவை? எந்தக் கொள்கைகளின் அடிப்படையில் அரசின் திட்டங்களை வகுத்தார்கள். அவை எந்த வர்க்கத்தினரின் நலனுக்கானவை என்ற கேள்விகளைப் புறந்ததள்ளி விட முடியாது. அத்தனையையும் செயற்படுத்தும் அதிகாரத்துவ நிர்வாக அமைப்பு முறைக்கு மாற்றாக என்ன முறையை முன் வைத்தார்கள்?

தற்சமயம் தற்காலிகமாக நான் அமெரிக்கா வந்துள்ளேன். அமெரிக்காவின் நடப்புகள், அதன் உள்முகத்தை நேரடி சாட்சியமாய் பதிவு செய்ய எனக்கு வாய்ப்பாக அமைந்தது. அமெரிக்காவில் குடியிருக்கும் புலம் பெயர்ந்தோரை (ஐஅஅபைசயவேள) இவர்கள் பெரும்பாலும் கூலிகள் - லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த இவர்களை கடுமையாக தண்டித்து மறுபடி சொந்த பூமிக்கு அனுப்புவதற்கான ஐஅஅபைசயவேள க்ஷடைட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட இருக்கிறது. கொடிய சட்டத்தை எதிர்த்து அமெரிக்காவின் பல நகரங்களில் மனித உரிமை அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து பேரணி, ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

மார்ச் -7 அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில் 40 ஆயிரம் பேர் பேரணி.

மார்ச் -10 சிகாகோ நகரில் 3 லட்சம் மக்கள் திரண்ட ஆர்ப்பாட்டம்.

மார்ச் -25 சான்பிரான்சிஸ்கோ 50 ஆயிரம் பேர் பேரணி

மார்ச் -10 சியாட்டல் நகரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பேரணி

நியூயார்க், நியூஜெர்ஸி இப்படி பல அமெரிக்க நகரங்களில் எழுச்சிப் பேரணிகள் நடைபெற்றன. சியாட்டல் நகரில் (இது வாசிங்டன் மாநிலம் எனப்படுகிறது) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்றபோது, வித்தியாசமான முழக்கங்களும், வேறான புதிய பார்வைகளும் வந்து விழுந்ததைக் கண்டேன்.

பிரிட்டன், பிரான்சு போன்ற கூட்டுக் கொள்ளையர்களின் துணையோடு அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்து பெட்ரோல் யுத்தம் நடக்கிறது. ஒரு புஷ் அல்ல, அமெரிக்க அதிபராக வருகிற ஒவ்வொரு புஷ்ஷும் உலகின் ஏதாவது ஒரு நாட்டின் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு அமெரிக்கன், தனது தலை முறையில் சராசரி நான்கைந்து யுத்தங்களுக்கு சாட்சியாகியிருக்கிறான். இன்றைய அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு ஆட்சிக்காலம் இன்னம் மூன்றாண்டுகள் இருக்கின்றது.

“உலகம் காத்திருக்க முடியாது
புஷ்ஷை விரட்டுங்கள்”
என அமெரிக்க மக்கள் அந்த ஊர்வலத்தில் முழங்கியதைக் கேட்டேன்.

புஷ்ஷை அகற்றிவிட்டு அந்த இடத்தில் சனநாயகக் கட்சியினரை உட்கார வைக்கிற எண்ணம் மக்களுக்கு இல்லை. ஆனால் தேர்தல் என்று நடந்தால் மக்களுக்கு வேறு வழி இல்லை. இன்னொரு கட்சியே ஆட்சிக்கு வந்தாலும் இதே உலக ஏகாதிபத்தியம் பேரரசைத் தொடரத்தான் போகிறது. எனவே மாற்று முறையை உருவாக்குவது பற்றிய பார்வை மக்களிடம் உதித்துள்ள சரியான தருணத்தில்தான் அமெரிக்காவுக்குள் வந்திருக்கிறேன் என நினைத்துக்கொண்டேன். ஊர்வலத்தில் விநியோகிக்கப் பட்ட ஒருதுண்டுப் பிரசுரம் பேசியது.

“கோடி கோடி மக்கள் அமெரிக்காவிலும் உலகிலும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். ஊலக பேரரசு என்ற முத்திரையைத் தக்க வைக்க முயலும் அமெரிக்க வர்க்க குழுக்களின் வெறியாட்டத்தை ஒடுக்க மக்கள் ஒரு சாதனத்தை தேடுகிறார்கள். இன்றைய சவாலை எதிர்கொள்ள இந்த அரசியல் போதுமானதாக இல்லை என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள்” - அதற்கான மாயத் திறவுகோல் ஒன்று தன்னாலே வரப் போவதில்லை. நிச்சயமாக அது ஒரு புஷ் போய் இன்னொரு புஷ் வருவதாக இருக்காது. ஒரு புஷ்ஷிடமிருந்து இன்னொரு புஷ்ஷிக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கும் முறையை எப்படி மாற்றுவது? இந்த யோசிப்புக்கு அவர்கள் வந்துள்ளார்கள்.

“நம் நாட்டிலும் உலக முழுவதிலும் மாற்றத்தைக் கொண்டு வருவது பற்றிச் சிந்திக்கிறோம். அமெரிக்காவுக்குள் கொண்டு வரும் மாற்றமானது, உலகத்துக்கான மாற்றமாக அமையப்போகிறது. புஷ்ஷின் வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்துவது முதற்தேவையாக இருக்கிற போதே ஒட்டு மொத்த மாற்றத்துக்கான பாதையில் உதயமாக அமைய வேண்டும்”

சியாட்டல் நகரில் உள்ள வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் மே-17ல் ஒரு கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது. மக்கள் உண்டாக்கிய “புஷ் விசாரணைக்குழு” உறுப்பினர்களும், பல்துறை அறிஞர்களும் புஷ் இழைத்த உலகக் கொடுமை களைப் பட்டியலிட்டு பேச உள்ளார்கள். எனக்கு ஆச்சரியமும் திகைப்பும் இதுவல்ல. நமது பல்கலைக் கழகங்களில் இவ்வாறானதொரு விவாத அரங்குக்கு இடம் உண்டா? கருத்துச் சுதந்திரத்தின் காற்று புக முடியாத சன்னலும், கதவும் மூடப்பட்ட அறைகள் நமது பல்கலைக் கழகங்கள் எல்லாவற்றிலும் உண்டு.

முதலாளியக் கட்டமைப்புக்குள் வாழுகிற அமெரிக்க மக்களில் ஒரு பகுதியினர். சிந்தனையாளர்கள் முதலாளிய (போலி) சனநாயக முறைக்குப் பதிலாக ஒரு மாற்றை உருவாக்க நினைக்கும் இந்தக் கூட்டத்தில் எழுத்தாளர் களாகிய நாம் தேர்தலுக்குள் மக்களுக்கான காரியமாற்றும் வழிமுறையாக எண்ணி நுழைகிறோம்.

மாற்று ஆட்களைக் கொண்டு வருவது பற்றியல்ல நமது யோசிப்பை வளர்ப்பது, மாற்று அரசியல் முறைமையை உண்டாக்குதல் பற்றி, மக்களுக்கு உண்மையான சனநாயகத்தை உருவாக்குதல் பற்றி சிந்திப்பு அளவில் முதலில் ஒரு சிறுபொறியை ஏற்றி வைப்பது.

‘தீம்தரிகிட’ ஆசிரியர் 49ஓ போடுவோம் என்றொரு கருத்தை முன் வைக்கிறார். இப்போதுள்ள தேர்தல் முறைக்கு மாற்றாக விகிதாச்சார தேர்தல் முறைக்கு மாறுவது பற்றிய அவர் யோசிப்பு. தேர்தல் முறை மாறினாலும் மக்களுக்குப் பயன்படாத மக்களுக்கு எதிரான சனநாயக ஆட்சியமைப்பு முறை அப்படியே தான் நின்று தொடரும். தனித்தனி அலகுகளாய் நிற்கும் மக்கள் பிரதிநிதித்துவ சபைகளையும், நிர்வாக அமைப்பையும் ஒன்றாக்குவது மக்கள் பிரதிநிதித்துவ சபையையே செயல்படுத்தும் உறுப்பாகவும் மாற்றுவது என்ற மாற்று சனநாயக முறைமை பற்றி நாம் யோசிக்க வேண்டும். பெயரளவிலான சனநாயகமாய் இல்லாமல் உண்மையான சனநாயகத்துக்கான முன்னறிப்பாக 49ஒவைப் பயன்படுத்தலாம்.

மக்களாட்சி தத்துவம் இன்றும் முழுமை அடையவில்லை. மக்களுக்கு நேரடிப் பயன்தரும் முழுமையான அமைப்பு வடிவத்தை அது கொள்ளவில்லை. முதலாளியத்தின் வஞ்சக தந்திரத்தால் பாதியிலேயே கருக்கலைப்பு செய்யப்பட்டு பிண்டமாக பிறந்ததுதான் இன்றைய சனநாயக ஆட்சி முறைமை, வர்க்க, அதிகாரம், சாதி, மதம், பால் பேதம், கட்சி என பல தன்னிலைகள் அடிப்படையில் இந்த முறைமை செயல்படுகிறது. இவைகளை இந்த சனநாயக கட்டுக் கோப்புக்குள்ளேதான் எதிர்த்து விமர்சிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த சனநாயகக் கட்டுக்கோப்புகளைத் தாண்டியும் விமர்சனம் செய்ய வேண்டிய கட்டாயம் வருகிறபோது கட்சி என்ற சுவர் தடுக்க கடமை தவறியவர்களாக ஆகி விடுவோம்.

எழுத்தாளர்கள் சிந்தனையால் வாழ்பவர்கள் சிந்தனைப் பொறியை ஏற்றிக் கொண்டிருப்பதை தொடர் கடமையாகக் கொண்டவர்கள். சிந்தனைப் பொறியை ஏற்றியபடி சுடர் தருவது, சுடர் தருகிற போதே சுடர் பெறுவது அவர்களின் வாழ்நாள் பணி. நமது வாழ்நாளுக்குப் பின்னும் வாழப் போகிற மக்கள் சமுதாயத்தை முன்னகர்த்தும் காரியத்தை தோள்மேல் போட்டுக் கொண்டு செல்ல வேண்டியவர்கள் நாம். அதற்கான கருத்துச் சுடரை ஏற்றுவதும், சுடர் பெறுவதுமாய் ஆவதற்குப் பதிலாய், சரிகிற சுவருக்கு முட்டுக் கொடுப்பது போல் எதற்குத் தலைகொடுக்க இப்போது தேர்தலுக்குள் காலடி வைக்கிறோம்?



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com