Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006
சிறுகதை

தீராக்குறை
சு. வேணுகோபால்

அட. யாரோ நிக்கிறாங்கனில்ல நெனச்சேன். வாடா ராசா இப்பிடி உக்காரு. நிழலாட்டமா தெரிஞ்சது. இப்ப ஆள் அடையாளம் முன்ன மாதிரி தெரியமாட்டேங்குது.

நல்லா உக்காரு மகனே.

சின்னத்தாயி! எந்தங்கச்சி பையன் சின்னத்தாயி. பெரியம்மாள பாக்கணும்னு இந்த வேணாதி வெய்யில்ல வந்திருக்கு. போனவருஷம் நான் ஆபரேசன் பண்ணுவதை கேள்விபட்டதும் இவந்தான மொத ஆளா ஓடிவந்தான்.

இப்பிப்பா இந்த மேங்காலும் ஊதிக்கிடுது.

ஏ யப்பா மகனே. ஒரு வாயி சாப்புடுறயாடா கண்ணு? எங்க சாப்பிட்ட?

கடையில சாப்பிட்டா கொள்ள ரூவா ஆயிருக்குமேப்பா! இப்பிடி துரும்பா மெலிஞ்சு போயிருக்க. வயிறு நெறையா சாப்புடப்பா.

ஏம்பா மில்லுல ஆளையெல்லாம் வெளியேத்துறாங்கன்னு சொல்றாங்களே; நெசமாவா?

நீ இருக்கிற மில்லுல வெளியேத்தலையா? மகராசனா இரு. சண்ட சச்சரவன்னு போயிடாதடா.

அப்பிடியே மொதலாளிய ஒட்டி நல்ல பிள்ளன்னு பேரெடுத்திடுப்பா. அப்பிடியே கைத்தாங்கலா ஏந்தி விட்டுருவாங்க.

ஆமா அப்பிடித்தான் இருக்கணும். பின்ன? இந்த காலத்தில யாரு வேலை கொடுப்பா?

ஆமா நீ சொல்றதும் நாயந்தானே. எட்டேர் ஒழவு மாடுகள வச்சு ஓட்டுனவந்தான் ஒங்கப்பன். அப்பிடி வந்து நின்னான்னா ஆளு அம்புக அப்பிடியே ராமருக்கு சேனையா வந்த குரங்கு கூட்டமா நிக்கும். அந்த காலத்த நெனச்சா ஆகுமாடா . இந்தா இந்த வழியாத்தான் நாலு வண்டி பாரம் கேப்பை எறங்கும். மூட்டைய அடிக்கி வச்சிருக்கிற அழகப்பாத்து நோட்டம் விட்டிட்டுப் போவானுக, யேவாரிக. காளியம்மன் கோவிலுக்குத் தார்சு போட்டுவிட்டவன் ஒங்கப்பன்தான். அந்த மருவாதையெல்லாம் இப்ப இல்லடா.

வீட்டுக்குச் சொந்தபந்தமன்னு வந்தா கை நெனைக்காம போகவிடமாட்டா ஒங்கம்மா. அவளுக்கு வந்த நேரத்தப் பாரு.

ஒங்க தாத்தா காமராசு நாடாருகிட்ட அவ்வளவு பேரும் புகழுமா இருந்தாரு. அப்போ பிடியரிசி வாங்கி அனுப்புவாரு.

பிடியரிசியன்னாவா? ஏஞ் சின்னத்தாயி ஒனக்குத் தெரியுமில்ல. . .

பின்ன ஒனக்குக் கல்யாணம் பண்ற வயசில்ல அப்போ. அதான பாத்தேன். காமராசு நாடாரு பள்ளிக்கூடத்துப் பிள்ளைக்கி மதியஞ்சோறு போடலாமன்னு சொன்னவரு ஒரு யோசன சொன்னாரு. வீடு வீடுக்கு ஒரு குலுக்கைய தனியா வச்சிர்றது.

குலுக்கையன்னா பெரிய குலுக்கை இல்ல. இந்தா இம்மாந்தண்டி மண் கலயம். அதில பச்சை-மஞ்சள்-நீலமன்னு கலர் பூசியிருப்பாங்க. அத காங்கிரசுகாரங்க சர்வோதயப் பாத்திரமன்னு சொல்லுவாங்க. ராட்ட உருவத்த மஞ்சள் பகுதியில் வரஞ்சிருப்பாங்க. நம்ம அன்னாடு சமைக்கிறப்போ ஒரு கைப்பிடி அரிசிய குலுக்கையில போட்டிரணும். மாசாமாசம் அத சேத்து கலக்டர் ஆபிசுக்கு அனுப்புவாங்க. ஒங்க தாத்தா வடகோடி வரைக்கும் தோட்டம் வச்சிருந்தவர்தான். வெக்கப்படாம வீட்டு வீட்டுக்கு சாக்குப்பைய வச்சு பிடியரிசிய வாங்குவாரு. இவ்வளவு இவ்வளவு சேர்திருக்கன்னு அளந்து நோட்டில குறிப்பாரு. கணக்குக் காட்டணுமில்ல.. ஒரு தப்பு இல்லாம ஒப்படைப்பாரு. சிலபேரு தினம் தினம் பிடியரிசிய குலுக்கையில போடமாட்டாங்க. அப்படி செய்யாம மறந்திட்டோமன்னு சொல்லி முப்பது கைப்பிடி அரிசிய தாத்தா நின்னதும்அள்ளிப்போட்டுத் தருவாங்க. நீ காமராசரு சொன்னது மாதிரி தினவழிய கைப்பிடியரிசி போடாம நா வந்தததும் மொத்தமா போடுறயல்ல அத வாங்கமாட்டேன்னு எங்கப்பாரு சொல்லிடுவாரு. மறு மாத்தைக்கி வழிமுறையா பிடியரிசி போட்டு வர வைப்பாரு.

உங்க அம்மாக்காரி இப்பப் பொலம்புறா. தியாகி பெஞ்சன் வாங்கியிருந்தா சாகுறப்போ ஏழாயிரம் ரூவா மாசம் வந்திருக்கும். ஒங்க தாத்தா நா பத்துப் பேருக்கு தினத்துக்குச் சாப்பாடு போடுறேன். எனக்கெதுக்கு பெஞ்சன்னு காங்கிரசு கட்சிக்கே சேத்து விட்டுட்டாரு. உப்பு வரி சரத்த எரிக்கப் போயித்தான பெங்களூரில குண்டடி பட்டாரு. எடது தோளுல இம்மாம் பெரிய தழும்புப்பா.

நாங்க நூல் நூத்திருக்கோம். அப்போ யூனியன் ஆபிசில இருந்து அப்பாரு பஞ்சு வாங்கிட்டு வந்தா நானு ரெண்டு சிட்டா தெனம் நூத்திடுவேன். தாத்தா ராட்டையத் தொட்டு ரெண்டு சுத்து சுத்துனப் பின்னாடிதான் மத்தக் காரியத்தவே பாப்பாரு.

ஏம்பா இப்பிடி பூமியெல்லாம் வெளையாமப் போகுமன்னு கனவா கண்டாரு?

ஆமாப்பா அப்பிடி வெளையும். வைரவன் கம்மா பரவில எல்லாம் மொறம் போட்டு மொறம் அள்ளலாம். அப்பிடி நெல்லு வெளஞ்சு சாஞ்சிருக்கும்.

ஆமாப்பா. அப்பிடி வெளஞ்ச நெலங்கதான். என்ன செய்ய? மாட்டுக்குத் தீவனத்துக்குக்கூட வெளையமாட்டேங்குது. மழை வரவர ரொம்ப ஏற வாங்கிடுச்சுப்பா. இப்பிடி ஏற வாங்குனா சம்சாரிக மண்ணள்ளித்தான் சாப்பிடணும்.

அடேயப்பா! அப்பல்லாம் ஒவ்வொருத்தனும் களத்தில இருந்து மூட்டைகளை ஏத்தி வர்றப்ப அப்பிடியே என்னப் பாரு ஒன்னப் பாருன்னு பாரத்த ஜோடிச்சு கொண்டு வருவான். ஊரே தெரண்டு நின்னு வேடிக்கை பாக்கும். ஆள் கூட்டத்தப் பாத்தா மாடுக அதுக்கொரு அலங்காரம் பண்ணி நடக்கும். எல்லாம் போச்சுடா.

ஏண்டாதங்கம், சின்னப்பிள்ள வயசுக்கு வந்திட்டாளா?

எப்போ?

யாத்தீ. . . நான் வந்து பாக்க முடியலையேடா நாம் பெத்த மவள. இத்தன கூட்டமிருந்து என்ன செய்ய! தாயீ. . . ஒனக்கொரு நல்லது பண்ணாம வச்சிருக்குதிகளே. ஏ. . . சௌடம்மா! எம் பிள்ள பின்னாலேயே நீ நின்னு காவலிருக்கணும் சொல்லிப்புட்டேன்.

ஏம்பா. . . அம்மாவ பாத்தியா? மொதல்ல அவளப் பாருப்பா. ஊரான் தோட்டத்துக்கு வேலைக்குப் போறாளாம். அவ வாழ்ந்த வனப்பென்ன! இருக்கிற நெலமயென்ன! இதயும் பாக்க வச்சிருச்சேடா சாமி.

அப்பறம் ஒரு வருசம் படிச்சா வாத்திச்சியா போயிருப்பா. அப்பாரு பொம்பளப் பிள்ளைய தூரமா ஒத்தையில எப்பிடி அனுப்புறதுன்னு நிப்பாட்டிட்டாரு.

ஆமாமா. போன வாரம் பெரிய கூத்துப்பண்ணி வச்சிட்டாடா. வந்தது வந்திட்ட, அவளயும் ஒரு எட்டுப் பாத்திட்டுப் போ மகனே. ரொம்ப நாளா எடது கண்ணு திவுக் திவுக்கண்ணு வலிக்குதன்னு சொல்லிட்டு இருந்தா. வலி பொறுக்க முடியாம சின்னவன்கிட்ட கண்ணு சாலேஸரம் பண்ணனும், கூட்டிட்டுப் போடான்னு சொல்லியிருக்கு. சாகுற காலத்தில ஒனக்கெதுக்கு சாலேஸரமன்னு சொல்லிப்புட்டான். ஏந் தங்கம் அப்பிடி அழுதத நாம் பாத்ததில்லடா. அவளுக்கு என்ன வலியோ! எலேய் லட்சுமணா, அவ எப்பிடி வளந்தவ தெரியுமா? எங்கப்பாரோட இந்த தோளுலயும் அந்த தோளுலயும் நின்னே வளந்தவடா. நெலத்தில கால் படாம வளத்தோம். இப்பிடி பேசிப்போட்டான். சின்னவன். பெரியவன்கிட்ட என்ன ஐவசு இருக்கு சொல்லு? அவன் அந்த தொத்த மாடுகள வச்சுக்கிட்டு கூப்பிடுற ஆளுக்கு ஒழவுக்குப் போயிட்டிருக்கான். அவனுக்குக் கல்யாண வயசில நிக்கிதில்ல மூத்தது.

இந்த அரவிந்து கண்ணாஸ்பத்திரிக்காரங்க இலவசமா ஆப்பிரேசன் பண்ணுறதா வெளம்பரம் பண்ணி வந்திருக்காங்க. இவ எங்கிருந்து கேட்டாளோ! மறுநா இவ பாட்டுக்கு போடிக்குப் போயிருக்கா. அங்க இருந்து ஆஸ்பத்திரிக்காரங்க வேணுல தேனிக்கிக் கூட்டிட்டுப் போயிருக்காங்க. அவ போனது யாருக்கும் தெரியாது. சாயந்திரம் உழுதுட்டு வந்த மூத்தவன் கதிர்வேலு எங்க எங்கம்மான்னு கேட்டிருக்கான். எங்காவது போயி ஒக்காந்து பொறணி பேசிக்கிட்டிருக்குமன்னு அவன் சம்சாரம் சமச்சுக்கிட்டே சொன்னாளாம். சரி அதுவும் பொழுத கழிக்க பெரிய பாட்டா வீட்டில டிவி கீவி பாத்துக்கிட்டிருக்குமன்னு விட்டிட்டான். எட்டு மணி வரைக்கும் வரலையன்னா மனசு சும்மா இருக்குமா? எங்க போயிருச்சுன்னு பெரிய பாட்டா வீட்டுக்குப் போயிருக்கான். எங்கிட்ட வந்தான். காலையில இருந்து பாக்கலையேடான்னு சொன்னேன். டேய், மூத்தவன என்னமோ சொன்னோமில்ல. அப்பிடியில்லடா அவன் மருமவ ஒரு வாயி கஞ்சி ஊத்தலையன்னா அவன் என்னடா செய்வான்? அவன் அசிங்கத்துக்கு அஞ்சி அடிச்சுத்தான் பாக்குறான். இவ கிறுசுகெட்ட புத்திய காட்டிட்டு கம்பிய நீட்டிர்றா. அப்படீன்னு ஒரு தட்டுத்தட்டுனா இதுதான் சாக்கு ஏம் பிள்ளச் சாக்குன்னு பிள்ளைகளக் கூட்டிட்டு அப்பன் வீட்டுக்கு ஓடிர்றா. பகலெல்லாம் ஒழைக்கிறவனுக்கு சமைக்காம இப்பிடி விழுந்து விழுந்து ஓடிட்டா அவன் எத்தனை நாளைக்குத்தான் ரெண்டு கயித்தயும் இழுப்பான். இல்லையன்னா பெத்த தாய்க்கி கஞ்சி ஊத்தாம இருப்பானா? இந்தம்மா நீயா கஞ்சி காச்சுக்கோன்னு பத்து நூறு கொடுக்குறதுக்கும் அவனுக்கு தெறமில்ல. எந் தங்கச்சிக்காரி குடும்பச் சூழ்நிலைய தெரிஞ்சுதான் இப்பிடி சொல்லாமக் கொள்ளாம போனாளோ?

எலேய் லட்சுமணா, மகன் தவதாயப் படுறான்டா. இடுகாட்டுக்கு ஓடுறான். பேட்ரிய எடுத்துக்கிட்டு புளியந்தோப்பு பூராம் அலசுறான். சின்னச்சாமி மொட்டு கெணத்தப் போயி எட்டிப்பாக்குறான். மறுபடி எங்கிட்ட ஓடிவர்றான். ஒங்க அம்மாகிட்ட ஓடுறான். எலேய் கண்ணிலயே காங்க முடியலடா. லட்சுமணா, எங் கைய பிடிச்சுக்கிட்டு அவன் நின்ன கோலமிருக்கே. அத வாத்தையால சொல்ல முடியாதுடா. கிடுகிடுன்னு நடுங்குறான். பையன் பேதலுச்சுப் போயிட்டான். பெரியம்மா! எங்க ஆத்தா உசுரோட இருக்குங்கிற தெம்புலதான் நான் இருக்கேன். கண்ணுல பாத்துக் கிட்டிருக்குறதுக்கும் பங்கம் வந்துடுமோன்னு அச்சமா இருக்கு பெரியம்மான்னு அந்தா அந்த கம்ப பிடிச்சுக்சுகிட்டு குலுங்கிட்டான் மனுசன். எங்காவது கெணத்தில கிணத்தில குதிச்சிருக்குமோன்னு நெஞ்சு பதறுதன்னு சீமைக்கருவேலங்குதுவலுக்கு ஓடுறான். நானும் ஒங்க அம்மாவும் தேடாத எடமில்ல. இவ்வளவு நடக்குதே. சின்னவன் எட்டிப் பாத்தாங்கிறயா? பெரிய கல்லூளிமங்கன்டா அவன். எதுவுமே தெரியாதது கணக்கா லைட்ட அமத்தி கதவ சாத்திக்கிட்டான்.

அந்த கிருஷ்ணவேணி இருக்காளில்ல. . . அவதாண்டா செட்டிய இழுத்துக்கிட்டு ஓடுனவ. நம்ம கொலத்தில அப்பிடியொண்ணு பொறந்திருக்கே! அவ போடியில இவளப் பாத்திருக்கா. இவ கண்ணாஸ்பத்திரிக்குப் போறதா சொல்லியிருக்கா. மகன் அங்கிக்கிக்கும் இங்கக்கிம் ஓடிட்டு வண்ணாத்தித் தெரு வழியா நடு ஜாமத்துக்கு வேக வேகமா வந்திருக்கான். அவ வண்ணாத்தித் தெருவிலதான குடியிருக்கா. கரண்டு வரவும் ராத்திரி நடவுக்கு கௌம்பிக்கிட்டிருந்தவ பாத்திட்டு அண்ணா என்ன இந்தப் பக்கம் இந்நேரத்துக்கு ஓடுறீங்கன்னு கேட்டுருக்கா. அவ சொல்லலையன்னா மகன் கதறியிருப்பான்டா கதறி. . .

அப்புறம் அந்த அழுக்குச் சட்டையோட மகன் விடியக்காலையில ஆஸ்பத்திரிக்கி ஓடியிருக்கான். கேட்டுக்குள்ள விட மாட்டேன்னுட்டாங்களாம். இருபத்தி நாலு மணி நேரம் யாரும் பாக்க முடியாதன்னு கேட்டவே தெறக்கலையாம். அங்கயும் பார்ரா லட்சுமணா! இவன் போன அன்னிக்கும் ஆபரேசனுக்கு ஒரு கூட்டத்தக் கொண்டு வந்து வராந்தாவில ஒக்கார வச்சிருக்காங்களாம். ஒருத்தன் அம்மாவ நீ சாலேஸரம் பண்ணாதன்னு கையப்பிடிச்சுஇழுக்குறானாம். மகனாம் சின்னத்தாயி! அவ எனக்கு எதுக்க யாரு வந்தாலும் சுத்தமா தெரியமாட்டேங்குது, சாலேஸரம் பண்ணுவேன்னு ஆஸ்பத்திரிக்குள்ள இழுக்குறாளாம் அம்மாக்காரி. நீ சாலேஸரம் பண்ணுனா எம் பொண்டாட்டி சமைச்சுப் போடமாட்டேன்னு சொல்லிட்டா. யாரு நாப்பது நாளைக்கி ஒனக்குச் சமைச்சு வப்பா? பொகையடி படாம இருக்கணுமன்னா ஒம் மக வீட்டுக்குப் போன்னு இழுத்துக்கிட்டே போயிட்டானாம். இந்தக் கொடும உண்டுமா?

மகன் காலையில போனவன் சாயந்திரம் வரைக்கும் கேட்டிலேயே ஒக்காந்திருக்கான். ஒருத்தியும் உள்ள போயி சொல்லலயாம். வெய்யில் தாழ அஞ்சு மணிக்கு பத்திருபது பேரு சாலேஸரம் பண்ணுனவங்க வந்திருக்காங்க. மகன் கேட்டுக்கு வெளியே நின்னு பாத்திட்டிருந்திருக்கான். எந் தங்கச்சிக்கி அவன அடையாளம் தெரியல. கிழிஞ்ச கைலிவேட்டிய அவுத்துவிட்டு பிச்சக்காரனாட்டாம் நின்னா யாரு அடையாளம் காம்பா? ‘யம்மா’ன்னுருக்கான். எந் தங்கச்சிக்கி வாயே வரலையாம். பச்சத்துணி மறச்ச கன்னத்தில இருந்து கண்ணீரு வழிஞ்சிருக்கு. மகன் காலையில இருந்த பச்சத்தண்ணிய கூட வாயில ஊத்தாம அந்த கேட்டுக்கு முன்னாலேயே கெடையா கெடந்திருக்கான். அப்பறம் அங்ஙனயே கருப்பு கண்ணாடி வித்திருக்கு. வாங்கிக் கொடுத்திருக்கான்.

ஏம்பா லட்சுமணா! அம்மாவுக்குக் கைச் செலவுக்கு ஏதாவது கொடுத்தயா?

ஆமாப்பா. நீயாச்சும் வர்றப்ப போறப்ப அம்மாவ பாத்துக்கிடணும். சாலேஸரத்த பிள்ளைகளுக்குத்தான் மொதல்ல செய்யணும் போல இருக்கு. பெத்த தாயோட கோலத்த கண் தெறந்து பாத்துட்டுப் போங்கடான்னு சொல்ல.

பாருடா ராசா, கொளத்துக்குக் கீழ ஒரு கையகல நெலமிருக்கட்டுமன்னு வாங்குனேன். அத வாங்குறப்ப எத்தன போட்டி பொறாம. நூறு ரூவாயிக்கி பேசுன நெலத்த சரி எதிரிக்கு கள்ளப்பத்திரம் பண்ணப் பாத்தான். நான் பொம்பள. எலேய் பேசுனபடி பணத்த வாங்கிக்க. ஒரு சம்சாரிக்கு இது அழகாடான்னு கேட்டேன். அவன் தக்குபுக்கன்னு நலுப்புனான். கூட்டத்தக் கூட்டுவேன்னு சொல்லி மெரட்டுனேன்.

அப்பேர்பட்ட நெலத்த வித்துப்புட்டான் சின்னவன். பெத்த தாயிகிட்ட ஒரு வாத்த கேக்கலடா! நான் பிள்ளைய பெத்த பெருமையப் பாருடா! நான் என்ன பாடுபட்டு சம்பாதுச்சிருப்பேன். இந்தா பின்னாடி ஒரு வீடு எடுத்திருக்கான். இன்னைய நாள் வரைக்கும் வாம்மான்னு கூப்புட்டு காட்டலப்பா. நான் அப்பிடி என்ன ஈனப்பொழப்பு பொழச்சிட்டேன். எம் மவன் கட்டுன வீட்டப் பாக்கணுமன்னு எனக்கும் ஆசையிருக்காதாப்பா? இவன டிகிரி படிக்க வச்சேன். தெறமையா வேலைக்குப் போகணுமில்ல. ரெண்டு பிக்காரிகளோட சேந்து ஊர சுத்துனான். அரசியல் வேணாமன்னு சொன்னா கேட்டாத்தான? இப்ப என்னாச்சு? ஒன்னொன்னா வித்துத் திங்கறான்.

உங்க ஆத்தா உள்ள வந்தா அசிங்கப்படுத்தி வச்சிடுவா. யாரு கழுவுறது? புது வீட்டுக்கெல்லாம் வரக்கூடாதன்னு சின்ன மருமக சொல்லியிருக்கா. வயசானதுகளுக்கு இனி இந்த பூமியில எடமில்லப்பா. சார உறிஞ்சிட்டு சக்கையத் தூக்கி எறியிற கதைதான்.

இவன் இப்பிடியன்னா, பெரியவன் என்னா கூத்துக்கட்டுறான்! அவனாலதானடா இப்பிடியானேன். ஆஸ்பத்திரியில் படுத்து கிட்டான். மலங்க மலங்க முழிக்கிறான். அப்பிடியென்னடா அந்த சாராயத்தில ருசி இருக்கு? நம்ம பரம்பரையில் பொறந்தவன் எவனும் இந்த குடி குடிக்கலடான்னு மண்டையில அடிச்சுக்கிட்டேன். கேட்டானா? குடம்குடமா குடிச்சுக்கிட்டு மல்லாக்க விழுந்து கெடந்தானே! கடைசியில யாருடா வந்தா? இவன் கூடப் பொறந்தவன் கொடுக்கிறேன்னு வந்தானா? இல்ல இவன் பெத்தெடுத்த மகன் அப்பனுக்குக் கிட்னி போச்சு நாந்தர்றேன்னு நின்னானா? பொண்டாட்டி நான் தர்றேன்னு வந்தாளா? பொண்ணு கொடுத்தவன் வந்தானா?

எலேய் லட்சுமணா, ஒரு பய நிக்கலடா ஆஸ்பத்திரியில. எல்லானும் ஓடிப் போயிட்டானுக. ஆசுபத்திரியில யம்மா. . . எங் கதை முடிஞ்சிருச்சுன்னுமான்னு அவஞ் சொன்னப்ப, என் நெஞ்சாங்கூடே வெடுச்சிருச்சுடா ராசா! அப்ப நெனச்சேன். நான் ஆண்டு அனுபவிச்சாச்சு. இனி என்ன ஆகப்போகுது? மண்ணு திங்கிற கழுதய வாழவேண்டிய எம் பிள்ளைக்குத் தர்றேன்னு நின்னேன். டாக்கிட்டருகிட்ட ஐயா, எம் பையனுக்கு என் உடம்பில இருந்து என்னென்ன வேணுமோ அத்தனையும் அறுத்து எடுத்துக்கங்கையா, அவன் முன்னமாதிரி எழுந்து ஓடணுமன்னு சொன்னேன்.

கிட்னி கொடுத்தவள எப்படி வச்சிருக்கணும்? டேய் லட்சுமணா, ஆறுமாசம் தாண்டா கஞ்சி ஊத்துனா. எளையவங்கிட்ட போயி சாப்பிடுன்னு பத்திவிட்டுட்டா. இங்கக்கும் அங்கக்கும் பந்தாடிட்டாங்கடா. யப்பா. . . என்ன பொழப்பு? என்னயக் கண்டாலே எளையவன் கரிச்சுக் கொட்டுறான். நீயெல்லாம் இருந்து எந்த கோட்டையப் பிடிக்கப் போறன்னு கேக்குறாண்டா. மூத்தவன் கிட்னிய அறுத்தெடுக்குறவரைக்கும் கையப் பிடிச்சான். இப்போ காலுல எட்டி ஒதைக்கிறான்.

இன்சூரன்சு பணம் வந்திருச்சு. அதை பன்னெண்டு வருசம் நான் பாடுபட்டு கட்டுனேன். அந்தப் பணத்த எங் கண்ணுல கூட காட்டல. அம்மா இன்சூரன்சு முடிஞ்சு வந்திருச்சும்மான்னு ஒரு வாத்த சொல்லியிருப்பானா. பொண்டாட்டி கிட்ட கொடுத்து மூணாம் பேருக்குத் தெரியாம அமுக்கிட்டான். எனக்குப் பணம் வேணாம்டா. ஆனா அத எங்கிட்ட சொல்ல வேண்டாமா?

லட்சுமணா. . . நம்ம குடும்ப கவுரவத்தை மத்தவங்களுக்குத் தெரிய வேணாமன்னு பொத்திப் பொத்தி வச்சிருக்கேன். எத்தனை நாளைக்கிடா இந்த அவமானம்?

இந்த ஒரு மாசமா பள்ளிக்கூடத்தில போடுற மதிய கஞ்சிய வாங்கி முந்தானைய மறச்சு வச்சு கொண்டு வந்து திங்கிறன்டா. எனக்கு இப்ப மூத்திரம் வேற ஒழுங்கா சரியமாட்டெங்கிது. அப்பப்ப வயிறு ஊதிக்கிடுது. அடிவயிறு ரொம்ப வலிக்க ஆரம்பிச்சுடுது ராசா!

மூணு அக்கா தங்கச்சிக பிள்ளைகளப் பெத்த கொடுமையப் பாத்தியாடா!

நேரமாச்சாப்பா?

ராசா ஒக்காரு. வண்டி வந்திருமா?

எம் மவன் வீட்டுக்குப் போயிட்டுப் போறாயா? ஏம்பா போறயா?

எம் மவனப் பாத்துச் சொல்லுப்பா. ஒனக்கொரு புண்ணியமாகட்டும். மாசத்துக்கு ஆளுக்கு ஒரு நூறு ரூவா தரச் சொல்லுப்பா. இல்லையன்னா ஒரு வாயி கஞ்சி ஊத்தச் சொல்லுப்பா. அந்தா அந்தத் திண்ணையோரமா நின்னு வாங்கிட்டுப் போயிடுறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com