Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூலை 2009
முதல் பிரசுரம்
ஒவ்வொரு வெளியீடும் முதல் பிரசுரம்
கண்மணி குணசேகரன்


Kanmani Guansekaran படையை ஆட்சி செய்த பெருஞ்சமூகம் என தெருக்கூத்து பாடல்களில் பிளந்து கட்டினாலும், முட்டிவரை நீண்டு தொங்கும் அவரின் ஒட்டுக்கோவணம் போலவே நெட்டெழுத்துக்களால் ஆனது, அப்பாவின் கையெழுத்து. கையை ஊன்றி கரணம் போடும் எங்களது குடும்பத்தில் நானும் என் அண்ணனும் மட்டுமே முதல் தலைமுறை படிப்பாளிகள். எழுத்து, இலக்கியம் என்கிற வகையில் பங்காளி, ஒறம்பரை, தாய்மாமன் என எட்டின வரைக்குமான எங்களின் நெடிய வகையறாக்களில் நான் மட்டும் முதல் படைப்பாளி. செம்மண்ணில் கால் பாய்ச்சி, கிளை நீட்டி விரிந்திருக்கும் இந்த முந்திரிக்காட்டு இலக்கியத்தில் தங்கர்பச்சானை அடுத்து வந்தவனும் நான்தான்.

அது 87ஆம் ஆண்டு. சாலையோர நொச்சிச் செடியை பார்த்து நான் எழுதிய கவிதை போன்ற ஒன்றை உளுந்தூர்பேட்டை ஐடிஐ சக பயிற்சியாளர்களால் ‘இதாண்டா கவிதை’ என பாராட்டிய போதே எனக்கு பெரும் கவிஞனாய் ஆகிவிட்ட பூரிப்பு. (ஆனால் அது எந்த இதழிலும் பிரசுரம் ஆகவில்லை). பிறகு கடலூரில் இருந்து வந்த “காகிதம்’’ என்ற சிற்றிதழில் எனது கவிதை முதன்முதலாய் அச்சில் வந்தது. ஆனால் கவிதைக்கும் கீழேயும், மேலேயும் என்பெயர் வரவில்லை. விட்டுவிட்டார்கள். ‘கண்மணிகுணசேகரன்’ என்கிற என் பெயரை கட்டாயம் அச்சில் பார்த்து விட வேண்டும் என்கிற அவலாசையை பூர்த்தி செய்தது ஒரு வார இதழில் வெளிவந்த அதிரடி கவிதைதான். ஆனால் அதை படித்த எனக்கு பெரும்பரபரப்போ, பெருமையோ ஏற்படவில்லை. எனக்குத் தெரிந்த இலக்கியர்கள் யாரும் அந்த இதழை படிக்கவில்லை. மீறி படித்திருந்தாலும் என் கவிதையை கடந்துதான் செல்ல வேண்டும் என்கிற தெரிந்த இலக்கியர்கள் யாரும் அந்த இதழை படிக்கவில்லை. மீறி படித்திருந்தாலும் என் கவிதையை கடந்துதான் செல்ல வேண்டும் என்கிற மாதிரி பெரிய கவிதையில்லை. சிட்டு முட்டை இட்ட மாதிரி துணுக்கு துணுக்கான சின்ன வரிகள். கண்ணில் தென்படாமல்கூட போய்விடும்.

அய்யா பழமலய் அவர்களின் தொடர்பால், தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டிருந்த கவிதைகளை கேட்டு, கவிதைகளை வாங்கி அவரின் சிறு அறிமுகத்துடன் ‘அரங்கேற்றம்’ என்னும் இதழில் போட வைத்தார். பழமலய் அவர்களின் கரிசனத்தோடு கூடிய கவிதை என்பதால் கவனம் பெற்று, பலரும் பார்த்ததாய் சொன்னார்கள். முதன்முதலில் எனது கவிதை மற்றவர்களின் பார்வையில் பட்டு பிரசுரம் என்கிற தகுதியை பெற்றது, அரங்கேற்றம் இதழில்தான். அதிலும் ஒரு சிக்கல். பலரும் பார்த்ததாய் சொன்னார்களே தவிர அந்த இதழ் வெகுகாலம் வரை என் கண்ணில் கிடைக்காமல் போய், நிறைய கவிதைகள் எழுதியபின் பிற்காலத்தில் பார்க்கக் கிடைத்தது. கவிதையில் கொஞ்சம் கூடுதலாய் பழமலய் கை வைத்திருந்தார். ஆனாலும் தொடர்ச்சியான என் கவிதைகள் அவரின் மூலமாகவே (என் வேண்டுதலுக்கிணங்க) கவிதாசரண், நிகழ் போன்ற இதழ்களில் வெளியாயின. “இன்னும் என்னா கண்மணிகுணசேகரன் கவித பழமலய் உறையிலேயே வருது. நேரடியா அனுப்பலாமே’’ என உள்ளூர் இலக்கியவாதியிடம் கவிதாசரண் சொன்னதான சேதி அறிந்தேன்.

எனது தலைமுறைக் கோபம் கவிதை தொகுப்பிற்கு பிறகு கதைகள் மேல் நாட்டம் ஓடியது எனக்கு. மண் சார்ந்த வாழ்வியலை மண்ணின் மொழியிலேயே எழுத வேண்டும் என்கிற பேராவல். உட்கார்ந்து சரசரவென ‘சருகு’ என்கிற ஒரு கதையை எழுதினேன். எங்கள் மணக்கொல்லையில் வாழ்கிற கலியன் என்பவர், வெற்றிலை சருகிற்காக படும் அவலத்தை சொல்கிற கதை அது.

அழகாக கார்பன் வைத்து எழுதி படியை இறுத்திக் கொண்டு தெளிவான கையெழுத்துப் பிரதியை, கோவை புலமைப் பண்ணை வெளியிடும் தாராமதி இதழுக்கு அனுப்பி வைத்தேன். சிற்றதழில் ஆறேழு பக்கம் கொண்ட கதையை வெளியிடுவார்களா என்கிற பயத்தோடுதான் அனுப்பினேன். எனக்கு ஒரே ஆச்சரியம். அடுத்த இதழிலேயே கதை வந்திருந்தது. குட்டி குட்டி கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவனுக்கு, தொடர்ச்சியான ஐந்தாறு பக்க என் படைப்பைப் பார்த்த எனக்கு கைகால் புரியவில்லை. ஆனால் ஊனாடி படித்து பார்த்த நான் சப்பிட்டுப் போய்விட்டேன். எனது முந்திரிக் காட்டு வட்டார வழக்கில் இருந்த பல சொற்களை, தொடர்களை அப்படியே கோவை வட்டார சொல் வழக்காக அய்யா குன்றம் அவர்கள் மாற்றியிருந்தார். (என்னா நமக்கு தெரியாத பெரிய இந்த எழுத்த எழுதறானுவோ போடு கத்திய). இப்படித்தான் என் முதல் கதை பிரசுரமும் நிகழ்ந்தது.

ஒரு படைப்பாளிக்கு ஒவ்வொரு படைப்பும் ஒரு பிரசவம் மாதிரியென்பார்கள். இதை வெறும் சொல்லாக கொள்ளாமல் கவிதை, கதை, நாவல் மற்றும் நடுநாட்டுச் சொல்லகராதியென இந்த பதினைந்து ஆண்டுகால படைப்பு பாணியில், ஒவ்வொரு வெளியீட்டின் போதும், ஒரு முதல் பிரசுரம் போலவே கண்டு பேருவுவகை கொள்கிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com