Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஏப்ரல் 2009
புகைப்படக் காட்சிகளாய் விரியும் உலகம்

அலையும் காலம்,
போடி மாலன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ரூ.60
பக். 104

1970களின் இறுதியிலிருந்து படைப்பிலக்கிய முயற்சியில் ஈடுபட்டு வருபவராக நாம் அறிய வரும் போடி மாலன் அவர்களின் முதல் நாவல் தான் அலையும் காலம்.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்து, மிகுந்த சிரமங்களுக்கிடையில் பட்டப்படிப்பு வரை படித்து, வேலை தேடிக்கொண்டிருக்கும் இளங்கோ, மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி, ஜீவனத்திற்காக ஏலக்காய் வியாபாரம் செய்யும் ஹரிஹரன், கல்வி பயிலும் கனவுகளைப் புதைத்துக் கொண்டு தொடக்கத்தில் ஊர் ஊராகச் சென்று துணி வியாபாரம் செய்தும், பின்னர் ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி முடித்தும் வாழ்ந்து வரும் கண்ணன், துப்புரவு ஆய்வாளராக அரசுப் பணியில் சேரும் குமார், இவர்கள் அனைவருக்கும் தனது சங்கீதா இசையகத்தில் புகலிடம் அளிக்கும் பாண்டி, எம்.எஸ்.சி. வேதியியல் பயின்றும் வேலை கிடைக்காமல் டியூட்டோரியல் கல்லூரியில் பாடம் நடத்தும் கலகலப்புப் பேர்வழியான சுதாகரன் மற்றும் அவர்களது நண்பர்கள் என போடியைச் சொந்த ஊராகக் கொண்ட இளைஞர்களின் உலகமே நாவலின் களம்.

இளங்கோவின் பார்வையில் நகர்கிறது கதை. வேலையற்று, வீட்டில் முடங்கிக் கிடக்க விருப்பமுமற்று தொடர்ந்து நண்பர்களைத் தேடி அலைந்து காலம் கழித்து, வேலை தேடுவதையே வேலையாகக் கொண்டு, அதிலும் பல அனுபவங்களைச் சந்திக்கும் இளங்கோ, தான் காணும் நண்பர்களின் வாழ்க்கை, தான் சந்திக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்த தனது மனப்பதிவுகளைச் சொல்வதாக விரிகிறது நாவல். இந்நாவலில் நாம் காணும் கதாபாத்திரங்கள், போடி என்ற ஊருக்கான தனித்தன்மைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், எந்த ஊரிலும் நம்மால் காணமுடிகிற மனிதர்களே. அந்த வகையில் நாவலின் ஊடாக வந்து செல்லும் பாத்திரங்கள் நமது தமிழ்ச் சமூகத்தின் அனைத்து வர்க்க நிலைகளிலும் வாழ்கின்ற மக்களிலிருந்து வகைமாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. ஆனால் நாம் காலம்காலமாக எதார்த்தவாத இலக்கியம் பற்றி அறிந்து வந்திருக்கின்ற வகைமாதிரியான சூழலில் வகைமாதிரியான பாத்திரப்படைப்பு என்ற சூத்திரத்தின்படி செயற்கையாகக் கதைக்குள் திணிக்கப்பட்டவர்கள் அல்ல. ஒவ்வொரு பாத்திரமும் அதனதன் சூழலுக்கேற்ப எவ்வளவு முக்கியத்தும் உண்டோ, அந்த அளவுக்கு மட்டுமே சித்திரிக்கப்பட்டிருக் கிறார்கள். ஆகவே எதார்த்தவாத அழகியலின்படிதான் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்பது தூக்கலாகத் தெரிவதில்லை. இதனை நாவலின் வடிவ ரீதியான பலம் என்று கொள்ளலாம்.

அன்றாட வாழ்க்கையில் நாம் போகிறபோக்கில் எதிர்கொள்ளும் சின்னச்சின்ன அனுபவங்களின் மூலம் கட்டமைக்கப்படுகிறது நாவலின் கதையமைப்பு. இந்த நாவலின் சம்பவங்கள் நிகழும் சில நாட்கள் நமது வாழ்வின் பிற நாட்களைப் போலவே சாதாரணமான நாட்கள்தாம். எனினும் ஆசிரியரால் விவரிக்கப்படும் ஒவ்வொரு சிறு நிகழ்வும் கூர்மையான சமூக விமர்சனத்தை ஆர்ப்பாட்டமின்றி முன்வைப்பதாகவே உள்ளது. பல இடங்களில் இந்த விமர்சனம் எள்ளல் என்ற நிலையை எட்டுகின்றது. இருப்பினும், அரசியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் முன்வைக்கப்படும் தருணங்களில்கூட நடப்புநிலைமைகளைப் பற்றிய விரக்தி மனப்பான்மை பாத்திரங்களின் மத்தியில் எழுதுவதில்லை. வழக்கமாக எதார்த்தவாத அரசியல் படைப்புகளின் மூலம் வாசகனின் மனத்தில் நிறைவும் ஒருவிதமான கசப்புணர்வு இந்த நாவலின் மூலம் வாசகனுக்கு மிதமிஞ்சி ஊட்டப்படுவது இல்லை.

நாவலின் மொழியும் நடையும் மிகவும் எளிமையானவைகளாகத் தோற்றம் தருகின்றன. ஆசிரியரின் மிகையான கூற்றுக்களுக்கு நாவலின் எந்தப் பகுதியிலும் இடமளிக்கப்படவில்லை. பாத்திரங்களின் உரையாடல்கள் மிகவும் கச்சிதமான பேச்சு மொழியில் அமைந்துள்ளன. கதைசொல்லியான இளங்கோவின் வர்ணிப்புகள் மிகவும் அளவானவையாக, மிகைத்தன்மையற்றவையாக, செறிவானவையாக உள்ளன. நாவலினுள் வரும் சில நிகழ்வுகள் சிறுகதைக்கான தன்மையுடன் இடம் பெற்றிருக்கக் காணலாம்.

இளங்கோவின் வீட்டுத்திண்ணை, அந்தத் தெருவாசிகளுக்கு இரவு நேரங்களில் ஒரு போக்கிடமாக இருப்பதும், திண்ணையையடுத்த அறையே இளங்கோவின் படுக்கையறையாக இருப்பதும், அவனது அனுபவப் பரப்புக்கு அப்பால் நிகழும் எத்தனையோ சம்பவங்களை விவரிப்பதற்கான அற்புதமான உத்தியாக இருக்கிறது. ஆனால், இப்படி ஒரு சுவாரசியத்தை நம்மிடம் தூண்டிவிடும் ஆசிரியர், பின்னர் இந்த உத்தியின் மூலம் நாவலை உயர்ந்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, பாதியிலேயே அந்த உத்தியை விட்டுவிடுகிறார். இது நமக்குச் சற்றே ஏமாற்றமளிக்கிறது. எப்போதும் அலைந்து கொண்டேயிருக்கும் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையில் சந்திக்கும் சிறு சிறு அனுபவங்களையும் மட்டுமே அடித்தளமாகக் கொண்டிருந்தால்தானோ என்னவோ, எந்த ஒரு சமூக நிகழ்வும் பாத்திரங்களின் அனுபவமும் ஆழமான உளவியல் நுட்பங்களுடன் விரிவாக முன்வைக்கப்படுவதில்லை. இதுவே போடி மாலனின் படைப்பாற்றல் வீரியத்துடன் தீவிரமாக வெளிப்படுத்தப்படுவதற்குத் தடையாக இருக்கிறது என்று தோன்றுகிறது. கண்ணன் என்கிற இளைஞன் தொடக்கத்தில் துணி வியாபாரம் செய்கிறான்; அதன் பின்னரே பெற்றோரிடம் சண்டை போட்டு ஐ.டி.ஐ. படிப்பில் சேருகிறான் என்பதை நாவலை மீளவும் வாசிக்கும்போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இவ்வளவு தெளிவாக போடி மாலன், கண்ணனை நாவலில் அறிமுகப்படுத்தவில்லை. இதுபோன்ற குறைகள் நீங்கலாக, நாவல் மிக உயர்ந்த செய்நேர்த்தியுடன் இலங்குகிறது என்பதை மறுக்க இயலாது.

நாவல் நெடுகிலும் நிறைய அச்சுப் பிழைகள் _ சில இடங்களில் பொருளே மாறுபடும் அளவுக்கு. இதை தவிர்த்திருக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கு அறிமுகமாகியிருக்க வேண்டிய ஒரு சிறந்த படைப்பாளியை இவ்வளவு காலத்திற்குப் பின்னரேனும் ஒரு நல்ல நாவலின் மூலமாக தமிழ்கூறு நல்லுலகிற்கு அறிமுகப்படுத்திய பாரதி புத்தகாலயம் பாராட்டுதற்குரியது. போடி மாலன் எதிர்காலத்தில் இன்னும் சிறந்த படைப்புகளை வழங்குவார் என்று நம்பலாம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com