Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
நவம்பர் 2008

நூல் விமர்சனம் : ஒளிச்சிறை ஒரு பார்வை
பொன்.குமார்

இலக்கிய உலகில் வருகை புரிபவர்களுக்கு முதல் தொகுப்பு கவிதையாகவோ, சிறுகதையாகவோ அதிகபட்சம் நாவலாகவோ இருக்கும். "ஐக்கூவில் சமூகமும் உத்திகளும்' என்னும் ஆய்வு நூலோடு இலக்கியப் பிரவேசம் செய்திருப்பவர் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியின் விரிவுரையாளரான இரா.தமிழரசி. இவரின் தற்போதைய கவிதைத் தொகுப்பு "ஒளிச்சிறை".

எனது பிறப்பு முதல்
உனது இறப்பு வரை
என இன்பங்களில் மகிழ்ந்து
துன்பங்களில் துவண்டு தளர்ந்துதான்
கழிந்தன உன் வாழ் நாட்கள்

என 'பாட்டி குறித்து எழுதியதே முதல் கவிதை. தலைப்பு "மறுபடி வருவாயா?" பொதுவாக கவிஞர்கள் தாயைப் பற்றியே கவிதையெழுதித் தொகுப்பில் இணைப்பர். கவிஞரோ பாட்டியின் வேதனைகளைபும் பாட்டியுடனான தன் அனுபவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். "நெஞ்சம் மறப்பதில்லை"யில் நட்பு குறித்து எழுதியுள்ளார். நட்பின் பண்பைக் கூறியுள்ளார். பாட்டியும் நண்பரையும் விட கணவர் குறித்து எழுதியவையே ஏராளம். 'உனக்கான நான்"இல் சமம் கோரியுள்ளார். ஆணாதிக்கம் மேலோங்கியுள்ளதையும் சுட்டுகிறார். "பூக்களாய்..." மூலம் ஆணின் முகமூடியை அகற்றி காட்டியுள்ளார். கவிஞர் தன் கூற்றாக ஒரு பெண்ணின் நிலையை, குடும்பத்தில் எதிர்கொள்வதைக் கூறியவர் 'சுமை'யில்

மாதாந்திர தொல்லைகளோடு
நின்று கொண்டு தொடரும்
பேருந்துப் பயணங்கள்
குடைகிறது கால்கள்

என சுயவலியையும் ஒரு பெண்ணாக முன்வைக்கிறார். "சதுரங்கம்" கவிதையில் காய்கள் பற்றி எழுதியிருந்தாலும் பெண்ணுக்கான குறியீடாகவே உள்ளது. பெண்ணுக்கு ஆதரவாக எழுதி இருந்தாலும் பெண்ணுரிமை பேசி இருந்தாலும் ஆணாதிக்கத்தை எதிர்த்து இருந்தாலும் பெண்வலியைக் கூறியிருந்தாலும் கவிஞர் மென்மையான மொழியையே கையாண்டுள்ளார். ஒரு பெண் படைப்பாளிக்குரிய பெண்ணியக் கோட்பாட்டையே கொண்டுள்ளார் ளன்பது குறிப்பிடத்தக்கது.

"கலைத்தல்" ஒரு குறிப்பிடத்தக்க கவிதை. இருக்குமிடத்தில் இருப்பதே அழகு என்னும் கோட்பாட்டை உடைத்து,

கலைத்தலிலும் கூட
இருக்கத்தான் செய்கிறது
கலைநயம்
என்கிறார். கலைத்தலிலும் அழகுள்ளது என்பது கவிஞரின் தனித்த பார்வைக்கு அடையாளம்.

"ஒப்புதல் வாக்குமூலம்" பல பாவங்களைப் பட்டியலிட்டு இறுதியாக
தண்டனையிலிருந்து
தப்ப உதவும்
உங்களின்
பாவமன்னிப்புகள்
என வினா தொடுத்துச் சிந்திக்கச் செய்கிறார். பாவம் செய்பவர்கள் மன்னிப்புக் கோருவது ஒரு நல்ல குணம் எனில் மன்னிப்பதும் சிறந்ததே. ஆனால் தண்டனையிலிருந்து தப்புவது அரிது என்கிறார்.

சமூகம் என்பது பலதரப்பட்ட மக்களின் கூட்டமைப்பு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பர். ஒருவரின் செயல் மற்றவருக்கு பிடிக்காது.
இருப்பினும் இருக்க நேரிடுகிறது சமூக அமைப்பில் சகிப்புத் தன்மையோடு... என "கிளிப்பிள்ளையாய்" கவிஞர் கூறுகிறார். சகிப்புத் தன்மை இல்லாவிடில் சமூகம் என்னும் அமைப்பு தகர்ந்துவிடும். கவிஞரின் கூற்று அனைவரின் அனுபவமாயுள்ளது.

கவிஞரின் வீட்டில் நூல்கள் இருப்பது வியப்பு அல்ல. ஆனால் நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் வாசித்திருத்தல் என்பது சாத்தியம் அற்றது. "புத்தக அலமாரி"யில் கவிஞர்,

எல்லா நூல்களுக்குமா
கிடைக்கின்றன
வாசிக்கிற வாய்ப்பான
விழிகளும்
ஏற்று ஜீரணிக்கிற
இனிய இதயங்களும்
என வினவியது உண்மையே. எல்லா நூல்களும் வாசிக்கப்படுவதில்லை. இது குறியீடும் என்றும் கொள்ளலாம்.


குழந்தைகளை வளர்ப்பது மட்டுமல்ல சிறப்பான முறையில் வடிவமைப்பதும் உருவாக்குவதும் கூட ஒரு சமூகத்தின் கடமையாகும். குறிப்பாக பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அப்பொறுப்பு அதிகமாகவே உள்ளது. "கை தேர்ந்த குயவனாய்" கவிதையில்,

புத்தகப் பொதியேற்றி
மனசாட்சியின்றி பழகுகிறோம்
மாடுகளாய் மழலைகளை
என பொதுவாக அனைவரையும் சாடியுள்ளார்.

மனிதர்கள் மனிதநேயமிக்கவராக இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துபவராக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனினும் அடுத்தவர் மீது வன்முறையை ஏவாமலிருக்க வேண்டும். "காரத்தன்மை மாறால்" கவிதையில் மனிதர்களுக்கு அறிவுரைத்துள்ளார். இயேசுவாக இருக்க முடியாவிடினும் மனிதனாகவேனும் வாழ்வது அவசியம். அறிவுரைத்திருப்பதால் அறிவுறுத்ததலே உள்ளது. தொடர்ந்து "எது வாழ்க்கை"யிலும் அறிவுரையாகவே,

தொடர்ந்து
இருப்பினும்
இரைப்பை நிரம்புவது மட்டுமா
வாழ்க்கை?

என தொடுத்து வாழ்வதற்கு ஓர் அர்த்தம் வேண்டும் என்கிறார். இக்கவிதையில் வினா தொடுத்தவர் "கேள்விகள்" கவிதையில் நலமா? என தொடங்கி வரிசையாக வினா தொடுத்து இறுதியில்,

இருப்பினும்
தவிர்க்க முடிவதில்லை
கேள்விகளை

என்பது சிந்தனைக்குரியது. வினாவே சிந்தனையின் வெளிப்பாடுதானே? ஒளிச்சிறையிலும் பல வினாக்கள் உள்ளன.
பூமாலையில் சிறைப்பட்டவை

ரோஜாக்கள்தாம்
வாசமல்ல
என்பது நிர்மலாசுரேஷின் ஹைக்கூ. இதை நினைவுகூறியது "எல்லைகள்" கவிதையின்
கட்டுண்டு கிடக்கும்
மலர்கள்
கட்டளை மீறும் மணம்
என்னும் தொடக்கம். எனினும்
எங்குதான் இல்லை மீறல்கள்
மீறல்களுக்கு உண்டு
எல்லைகள்
என்கிறார். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்னும் கூற்றை மெய்ப்பிப்பதாக கவிதை உள்ளது.

புதுக்கவிதைத் தடத்தில் "ஒளிச்சிறை" மூலம் இரா.தமிழரசி தன் இருப்பை பதிவு செய்துள்ளார். பாடு பொருள்கள் பழக்கப்பட்டவையே எனினும் வெளிப்பாட்டிலும் வடிவமைப்பிலும் ஒரு தனித்தன்மை உள்ளது. சொற்களை கையாளும் விதமும் அழகாயுள்ளது. உவமை, உருவகம் ஆகியவற்றை கவிதையின் இடையிடையே பிரயோகித்து கவிதையின் வாசிப்பில் சுவை கூட்டியுள்ளார். ஒரு பெண்ணாக, ஒரு சமூக பற்றாளராக கவிதைகள் கவிஞரை அறியச் செய்கின்றன. கவிதைகள் ஆர்ப்பாட்டம் செய்யாமலும் கலகம் எதுவும் உண்டாக்காமலும் இயல்பாக உள்ளன.

நூல் : ஒளிச்சிறை, ஆசிரியர் : இரா.தமிழரசி,
வெளியீடு : ஆர்த்தி வெளியீடு, 6ஏ - மூவேந்தர் நகர், விழுப்புரம் - 605 602. விலை : ரூ. 40

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com