Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2008
நூல் அகம்


காகிதப்பூவில் தேன்துளிகள்
நந்தவனம் சந்திரசேகரன் ரூ.45/-

மறைந்த முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் அணிந்துரையோடு இந்தக் காகிதப்பூ மலர்ந்திருக்கிறது. மலர்ந்து கிடக்கும் காகிதப்பூவில் தென்படும் சமூக அக்கறையே அப்பூவின் தேன்துளி என முகவுரை சொல்கிறது. மூடத்தனத்தில் இன்னும் கூட முடங்கிக் கிடக்கும் சமூகத்தைத் திருத்துவதற்கு பெரியாரைக் கூவி அழைக்கும் கவிதை ஒன்று. மண்ணுக்குச் சொந்தமாகப் போகிறவன் தன் பெயரில் மண்ணைச் சொந்தமாக்குவதுதான் எத்தனை முரண். பெண்ணையும், மண்ணையும் பொருளாக்கி ஆண் சொந்தம் கொண்டாடிய போதே முளைவிட்ட முரண் இது. கவிஞர் சந்திரசேகரனுக்கு இலக்கியத்தை அறிமுகப்படுத்திய ஈழ நண்பன் ராமஜெயம் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் போனதற்கான காரணத்தை எவரும் எளிதில் அறிந்து கொள்வர். ஆனால் தனது தாயகமாம் ஈழம் பற்றி எந்த ஒரு கவிதையும் தொகுப்பில் இல்லாததற்கு காரணம் என்ன என்பதைக் கவிஞர்தான் சொல்ல வேண்டும்.

இனிய நந்தவனம், 5, புதுத்தெரு, உறையூர்,
திருச்சி-3. பேசி : 94432-84823


கணவன் காதலன் தோழன்
பாரதி கிருஷ்ணன் ரூ.40/-

பலவிதமான தடைகள், எத்தனையோ வலிகளைக் கடந்து தாமதமாகி வந்தது இக்கவிதைத் தொகுப்பு என்கிறார் கவிஞர் பாரதி கிருஷ்ணன். கணவன், காதலன், தோழன் என்னும் அக உணர்வுகளைச் சித்தரிக்கும் கவிதைகள் என்பதால் வலிகளுக்குப் பஞ்சமிருக்காது. தடைகள் உடைபடத் தாமதம் ஆனதற்கு புறச்சூழல் பற்றிய உணர்வுகள் படைப்பாகாமல் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அவ்வப்போது நூலகங்களில் தென்படும் கவிஞர் எப்போதும் நூலகத்தில் எனும்போது வீறு கொண்ட புறச்சூழல் கவிதைகள் பீறிட்டெழும். அப்போது வலிகளும், தடைகளும் ஓடி ஒளிந்துவிடக்கூடும்.

கலைநிலா பதிப்பகம், 46, ஆசாத் நகர், கருணாநிதி நகர்,
திருச்சி-21. பேசி : 98424-46044


சில தேன்துளிகளும் எறும்புகளும்
பாரதி கிருஷ்ணன் ரூ.50/-

கவிஞரின் முந்தைய நூலுக்கும் இந்நூலுக்கும் இடையே பெரியதான வேறுபாடு. இதில் படைப்பின் நோக்கத்தினைக் கண்டறியும் முயற்சி, துல்லியமாகத் தெரிகிறது. மன உணர்வுகளேதான் இதிலும் கவிதைகள். எனினும் படைப் பாக்கத்தில் மெருகேற்றி இருக்கிறது. "அடிக்கடி விழுந்து விடுகிறேன்; ஆனால் உடைந்து விடுவதில்லை' என்கிற சுயசோதனையின் வெளிச்சத்தில் கவிஞரின் பாதை எது என்பது தெரிகிறது. "மழை தானே பொழிவது போல கவிதையும் தானே உருவாவது' என்ற கருத்தை பாரதி மறுஆய்வுக்குட்படுத்துவது நல்லது. மழை பொழிவதற்கு சில "தட்பவெப்ப நிலைகள்' காரணமாவதுபோல கவிதைப் பொழிவிற்கும் சில "அகபுற நிலைகள்' காரணமாக இருக்க வேண்டும். மழை விழுகின்ற இடத்திற்கு ஏற்ப நிறமும், குணமும் பெறுகிறது. கவிதையோ எவ்விடத்திலிருந்து எழுகின்றதோ அதற்கேற்ப சுவையும், வீச்சும் பெறுகிறது. அந்த இடம் எது என்பதைத் தீர்மானிப்பதற்கு இளம் கவிஞர் பாரதிக்கு இத்தொகுப்பு உதவிடக்கூடும்.

78-பி, காளியம்மன் கோவில் தெரு, எடமலைப்பட்டிபுதூர்,
திருச்சி-12. பேசி : 99422-31031


உன்னையே நீ அறிவாய்
கவிஞர் செவ்வியன்

இளைஞர்களின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு அது பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு "திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம்' இவ்வெளியீட்டினைக் கொண்டு வந்துள்ளது. சமூகத்தின் வருங்காலத் தூண்களான மாணவர் சமுதாயம் இந்நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதற்காக 2008-09ஆம் கல்வி ஆண்டில் இந்நூலினை ஒரு லட்சம் மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவது என்றும் இம்மன்றம் முடிவு செய்திருக்கிறது. மனித உடலின் உறுப்புகள் பற்றிய விளக்கங்களும், புகைத்தல், மதுகுடித்தல் போதைப்பொருள் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகளும் விளக்கமாக வெளியிடப் பட்டிருக்கிறது.
திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம், 311, 5வது
தெற்குக் குறுக்குத்தெரு, கபாலீசுவரர் நகர், நீலாங்கரை,
சென்னை-41. பேசி : 99624-61632


லாடம்
ம.அருணாதேவி ரூ.50/-

இலாடம் என்பது ஒரு கருவி. மனித குலத்தில் பெண்ணுக்குத் தாலி என்பதுபோல கால்நடையில் காளைக்கு இலாடம். மனிதரின் நலனுக்கென காளைக்கு லாடம் எனில் ஆண்களின் நலனுக்கென பெண்ணுக்குத் தாலி. இலாடத்தைப் பாதத்தில் மாட்டுவதற்கு காளையின் பாதத்தில் அடிக்கப்படும் ஆணிகள் போன்றே பெண்களின் வாழ்க்கை முழுதும் ஆண்களால் அடிக்கப்படும் ஆணிகள் ஏராளம். கவிஞர். ம.அருணாதேவி அந்த ஆணிகளைக் கழற்ற கவிதைகளைப் படைப்பது பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் கவிஞர் "தன்னுரையில்' அவரது லாடம் தேன்லாடமாகி வாசகர்க்கு அறுசுவையினையும், நவரசங்களையும் அள்ளிக்கொடுக்கும் என்று கூறுவதுதான் நெருடலாக இருக்கிறது.
கந்தகப்பூக்கள் பதிப்பகம்,

219, பத்திரகாளியம்மன் கோவில் சாலை, சிவகாசி-626 123.

தமிழ்மொழிக் கொள்கை ஆவணம்
கட்டுரைத் தொகுப்பு ரூ.20/-

தமிழ்க் காப்புக் களத்திற்கு வருவோர் மொழிக்கொள்கையில் தெளிவு பெறுதல் அவசியம் என்ற நோக்கில் தலைநகர்த் தமிழ்ச்சங்கம் இந்த மொழிக்கொள்கை ஆவணத்தை வெளியிட்டுள்ளது. தமிழ் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் எழுதிய ஒரு மொழிக்கொள்கை விளக்கம் தொடங்கி மேலும் பதின்மூன்று தமிழறிஞர்களின் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமிழைக் காக்கத் தமிழர்கள் செய்ய வேண்டுவது என்ன, தமிழ்வழிக் கல்வி சட்டமாக இயற்றப்பட வேண்டியதன் அவசியம், ஆங்கில மோகம் தமிழை எங்ஙனம் அழிக்கிறது போன்றவற்றிற்கான அனைத்து விளக்கங்களும் இத்தொகுப்பில் உள்ளது.

தலைநகர்த் தமிழ்ச்சங்கம், 6, 6ம் தெரு, க.க.நகர், நங்கைநல்லூர்,
சென்னை-114.
கிடைக்குமிடம் : தமிழம்மா பதிப்பகம், சென்னை-106.
போன் : 2475 3373


பறவைகள் புறக்கணித்த நகரம்
சக்தி அருளானந்தம் ரூ.40/-

பெண்விடுதலைக் கவிஞராகவும் அறியப்படும் கவிஞர் சக்தி அருளானந்தம் "பறவைகள் புறக்கணிக்கும் நகரம்' என்கிற பொதுத்தலைப்பில் இத்தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். நூலின் தலைப்பைக் கொண்ட அக்கவிதையில் பறவையினம் நகரங்களைப் புறக்கணித்ததற்கான காரணத்தை கருவாக்கி யிருந்தால் கவிஞரின் சமூக அக்கறை இன்னும் கூடுதலாக அழுத்தம் பெற்றிருக்கும். பெண் நோக்கில் வெளிப்பட்ட "மரமாகி' கவிதை சிறப்பானது. அக்கவிதையின் சொல்முறை சொல்ல வேண்டியதை ஆணித்தரமாக வெளிப்படுத்தி இருக்கிறது. "குழந்தைமை தொலைத்த இளஞ்சிறார்க்கு' என்று அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கவிதைத் தொகுப்பில் குழந்தைத் தொழிலாளர்க்கெனவும் ஒரு கவிதையினைப் பதிவு செய்திருக்கலாம்.
இருவாட்சி பதிப்பகம்

41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-600 011.


தொடர்வண்டித் தூது
பேரா.அரங்க முருகையன் ரூ.50/-

இலண்டன் வாழ் தமிழ்ப் பேராசிரியரான அரங்க. முருகையன் தமிழ்மண்ணை விட்டு 55 ஆண்டுகளுக்கும் வெளிநாட்டில் வசித்து வருபவர். ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகம் என்ற படைப்புத் தளத்தில் அயராது இயங்கி வருபவரின் புது முயற்சியே இந்தப் புதினம். தமிழின் சிற்றிலக்கிய மரபாக விளங்கும் "தூது இலக்கியத்தை' தனது புதினத்தின் கருப்பொருள் ஆக்கியது இவரது மொழிப்பற்றிற்கு ஒரு சான்று. கதையினூடாகத் தனது கருத்துரைகளையும் ஆங்காங்கே அள்ளித் தெளித்திருக்கிறார். அயலகத்தில் இருக்கும் இவரின் தமிழ்ப்பணி தொடரட்டும்.

மணிவண்ணன் வெளியீட்டகம், 20/39, பேட்டய் க.வி.
வடக்கு வீதி, கும்பகோணம்-612 001. பேசி : 94429-32699


சுடும் நிலவு
சிறுகதைத் தொகுப்பு ரூ.70/-

கோவை ஞானி அவர்கள் வெளியிட்டிருக்கும் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பே இந்நூல். 1998ல் தொடங்கி 2008 வரை எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் இம்முயற்சியில் தமிழ்ப் பெண்களின் பெண்ணுரிமைக் கருத்துக்களின் பல்வேறு படிநிலைகளும் இடையறாது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. போட்டிக்கெனக் குவிந்த நூற்றுக்கணக்கான கதைகள் அனைத்துமே பெண்களின் சோகம், அதனை எதிர்கொண்ட விதம் என்ற நோக்கிலேயே படைக்கப்பட்டிருக்கும். இந்த ஆண்டின் தொகுப்பு "சுடும் நிலவு' என்ற தலைப்பில் வந்திருக்கிறது. பெண்ணைக் கவிஞர்கள் நிலவென்று அழைப்பதால் அதனைச் சுடும் நிலவாக மாற்றி விடுவது பெண்ணுரிமைக் கருத்துக்கு ஏற்புடையதுதானா என்ற சிறு ஆய்வினை இத்தலைப்பு மேற்கொள்ள வைத்தது. இயற்கைக்கு எதிராக மனிதகுலம் இயங்குவதாலேயே பூமியும், அதில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஏராளமான இடையூறுகளைச் சந்தித்து அழிவுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்பது உலகறிந்த செய்தி. கதிரவன் சூட்டையும், நிலவு குளிர்ச்சிûயும் தரும் என்பதும் இயற்கையின் படைப்பு. அதனை மீறுவதாக பெண்ணியச் சிந்தனையைக் கட்டமைப்பது பெண்விடுதலை வளர்ச்சிப் போக்கில் பெரிதான தேக்கத்தையே உண்டுபண்ணும் என்றே தோன்றுகிறது. நிலவு நிலவாகவே இருக்கும் போதுதான் அதன் பயன்பாடு முழுமையுறும். பெண், பெண்ணாகவே இருந்துதான் போராடி விடுதலையைப் பெறமுடியுமே தவிர ஆண் வேடமிட்டாலே விடுதலைதான் என்கிற அறியாமையினை நோக்கி பெண்ணுரிமைச் செயல்பாடு இருக்க முடியாது.
பெண் எழுத்தாளர்களின் படைப்பு முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை எண்ணும்போது வேதனை அடைவதாக ஞானி அவர்கள் கூறியிருப்பது நம்முள்ளும் சோகத்தைத் தூண்டுகிறது. எனினும் நல்ல முயற்சிகளுக்கு காலமும் துணைநிற்கும் என்றே ஆறுதல் கொள்ள வேண்டி இருக்கிறது.

தமிழ்நேயம், 24, வி.ஆர்.வி.நகர், ஞானாம்பிகை ஆலை (அஞ்சல்), கோயம்புத்தூர்-641 029. பேசி : 0422-2648119


மக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும்-போக்கும்
முனைவர். உலோ. செந்தமிழ்க்கோதை ரூ.70/-

அறிவியல் சார்ந்த மனப்பான்மையை மக்களிடம் வளர்ப்ப தொன்றே சமூக மாற்றம் அல்லது சமூகத்தில் புரட்சி ஏற்படுவதற்கான முதன்மையான வழி என்பதில் தெளிந்திருக்கும் நூலாசிரியர், இதற்கென மாபெரும் மக்கள் இயக்கங்களைக் கட்டியமைப்பதன் இன்றியமையாமையினையும் தெளிவாக விளக்குகிறார். ""மனிதச் செயல்பாடுகளிலும், சமூக செயல்பாடுகளிலும் அறிவியல் முறைப் பகுப்பாய்வை நிகழ்த்தினால் மட்டுமே கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் புரிந்துகொள்ள வழி பிறக்கும். அவ்வாறான ஒருங்கிணைந்த வரலாற்றுப் புரிதலே மகிழ்ச்சியும் முன்னேற்றமும் நிறைந்த எதிர்காலத்தைப் படைக்க உதவும்'' என்கிற பிரித்தானிய நாட்டு அறிவியலாளரான ஜே.டி.பெர்னாலின் ஆழமான கருத்தினையும் நம்முன் வைக்கிறார். அறிவியலின் வளர்ச்சியும் போக்கும் நிகழ் காலத்தை மட்டுமின்றி வருங்காலச் சந்ததியினர் அனைவருக்கும் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் இணைந்த, நீலநிற வான விடியலைக் காணச் செய்வதற்கான குறிக்கோளினைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு மக்கள் அறிவியல் இயக்கம் வழிகாண வேண்டும் என்ற ஆவலும் நூலில் வெளிப்படுகிறது. இந்நாள் வரையிலும் அறிவியல் கருத்துக்கள் மக்களுக்கும், சமூகத்திற்கும் எவ்வாறெல்லாம் பயன்பட்டு வந்தது என்பதை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், வழக்கிலுள்ள பொதுத்தொடர்பு மொழியில் வெளியிடுவதும் மக்கள் அறிவியல் இலக்கியத்தின் தலையாய பணி என்கிறார் முனைவர் செந்தமிழ்க் கோதை. அறிவியல் துறை கண்ட வளர்ச்சி, எதிர்கால போக்கு என்பவற்றோடு மின்பொறியியல், மரபுப் பேற்றின் பண்பணுக் கோட்பாடு, வானிலை முன்கணிப்பு என்பது போன்ற பல செய்திகள் விரிவாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட். 142, ஜானிஜான் கான் சாலை,
இராயப்பேட்டை, சென்னை-14. போன் : 2448 2441.

தமிழீழம் : வரலாற்றுத்தேவை, வாழ்க்கையின் கட்டளை
தியாகு ரூ.40/-
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் இதழான "சமூகநீதித் தமிழ்த்தேசத்தின்' ஆசிரியர் தோழர்.தியாகு வெவ்வேறு இதழ்களில் எழுதி வெளியான ஈழம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தமிழீழத்தின் தந்தை செல்வா 1976ல் தனி ஈழக் கோரிக்கையினைத் தீர்மானமாக வெளிப்படுத்தியதற்கு முந்தைய நிகழ்வுகளும், அதன்பின்னர் நடந்த அனைத்துச் சம்பவங்களும் கோர்வையாக்கித் தரப்பட்டிருக்கிறது. 2006 துவக்கத்தில் அமெரிக்கா வழங்கிய நவீனப் போர்க்கருவிகள் விடுதலைப்புலிகளை வேரறுத்துச் சாய்த்துவிடும் என்ற வல்லாதிக்கங்களின் நினைப்பிற்கு மாறாக சிங்களப்படை புறமுதுக்கிட்டதும், அந்நவீனக் கருவிகள் அனைத்தும் விடுதலைப் புலிகள் வசம் வந்தடைந்ததும் புலிகளின் ஆற்றலுக்கு ஓர் அண்மைக்காலச் சான்றாக அமைகிறது. 2001-ம் ஆண்டு இரு தரப்பினராலும் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையைத் தன்னிச்சையாக 2007ம் ஆண்டு விலக்கிக்கொண்ட சிங்கள அரசைக் கண்டித்து உலகநாடுகள் பரவலாகக் குரல் கொடுத்தபோதும் இந்திய அரசு அமைதி காத்தது முதற்கொண்டு, சமாதானப்பேச்சில் ஈடுபட்டு வந்த சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டது வரையிலான விரிவான கட்டுரைகள் அனைத்துமே தமிழீழம் தோன்ற வேண்டிய தேவையினை வலியுறுத்தி நிற்கின்றன.
"தமிழீழமே தமிழினத்தின் தேவை, இது தாயகத் தமிழரின் கட்டளை' என்ற நிலை உருவாகும்போது ஈழத்தின் விடிவெள்ளியை இலங்கை மட்டுமல்ல, உலகமே கண்டு வியக்கும் என்பது திண்ணம். உறங்கும் தமிழகம் விழித்தெழுவதற்கு உண்மைத் தமிழர்கள்தான் உதவ வேண்டும்.

தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், 1434 (36/22),
இராணி அண்ணா நகர், சென்னை-78. பேசி : 92832-22988


அன்பின் சுவடுகள்
சீர்வரிசை சண்முகராசன் ரூ.90/-
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மும்பையில் வாழ்ந்து வரும் நூலாசிரியர் சண்முகராசன் அவர்கள் தந்தை பெரியாரை ஆசானாக ஏற்றுக் கொண்டவர். தன் வாழ்க்கையில் கடந்துவந்த பாதையின் சுவடுகளை மகளுக்குக் கடிதங்கள் என்கிற வகையில் நூலாக்கித் தந்திருக்கிறார். 43 கடிதங்களின் தொகுப்பே இந்த நூல். தானறிந்த பெரியாரியக் கருத்துக்களை அங்கங்கே அழுத்தமாகச் சொல்லிச் செல்கிறார். இயற்கையின் வாழ்க்கை நியதி என்ற தலைப்பின்கீழ் "வாழ்வில் நல்லறங்கள் நிலைக்க வேண்டுமானால், வாழ்க்கையின் அசைவுகள் மாறாதிருக்க வேண்டும். இதுதான் வரலாறு; வாழ்வின் வழிகாட்டி என்று மகளிடம் கூறுகிறார். பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தை கார்ல் மார்க்சின் "மாறாதது என்று உலகில் எதுவுமே இல்லை - மாற்றம் ஒன்றைத் தவிர' என்கிற சமூக அறிவியலுக்கு ஆசிரியரின் கூற்று எதிராக இருக்கிறது. நூலாசிரியர் பெரியாரியத்தோடு பொதுவுடைமைத் தத்துவத்தையும் உள்வாங்கும்போது இன்னமும் செழுமையான நூல்கள் அவரிடமிருந்து நமக்குக் கிடைக்கும்.

இலெமூரியா நூல் வெளியீட்டகம், 1301, கோரஸ் டவர்ஸ் (நேகா) 13ம் தளம், வர்தக் நகர், தானே (மேற்கு),
மும்பை-400 606. போன் : 022-2588 6630

தனியறை
புதிய மாதவி ரூ.50/-
மிகவும் வித்தியாசமானதொரு முயற்சியாக தனியறை என்ற ஒற்றைத் தலைப்பிலேயே இருபத்தைந்து சிறுகதைகளைப் படைத்துத் தந்திருக்கிறார் மும்பையில் வசிக்கும் கவிஞர் புதிய மாதவி. காதல் பாசம் அதிகாரம் ஆளுமையினை மட்டுமல்ல - பண்பாட்டு மாற்றத்தினைக் கூட தனியறைக் கதவுகள் தீர்மானிக்கின்றன என்ற சிந்தனை கவிஞரை பிரமிக்க வைப்பதாய்க் கூறுகிறார். மனிதகுலத்தின் முதலும் முடிவும் அதாவது பிறப்பும் இறப்பும் நான்கு சுவருக்குள் என்றான பின்பு எல்லாமே அதற்குள்தானே என்ற கேள்வி இங்கு இயல்பாகவே எழுகிறது.

கதைக் களங்கள் அனைத்துமே மும்பை மாநகரம் என்பதால் இந்தியும், ஆங்கிலமும் தூக்கலாகத் தெரிகிறது. (உ.ம். தனியறை-11, 17) ஒரு பெண்ணை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கும் இளைஞனைக் கூட "ர்' விகுதியிட்டு அழைப்பது போன்ற பல பதிவுகள் கதாசிரியர் கூட "ஆணாதிக்கத் தாக்கத்திற்கு' தப்பவில்லை என்பதைக் காட்டுகிறது. நூலாசிரியர் ஒரு பெண்ணியவாதியும் கூட என்கிற முறையில் அவரது கதைகளில் நமது எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாகவே இருக்கிறது.

மருதா, 6, (32), அண்ணா சாலை, குலசேகரபுரம், சின்மயா நகர்,
சென்னை-600 092. பேசி:93821-16466


புதிய ஆரம்பங்கள்
புதிய மாதவி ரூ.80/-

சிற்றிதழ், இணைய இதழ், சிறப்பிதழ் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வரும் கவிஞரின் மற்றுமொரு சிறுகதைத் தொகுப்பே இந்நூல். பலதரப்பட்ட கதைகளின் தொகுப்பு எனினும் அனைத்து கதைகளிலும் மிதமானதொரு நிலைப்பாடு. முதல் கதை "ஒரு பெரியாரிஸ்டின் தீபாவளி.' தீபாவளி சிறப்பிதழில் தனது கவிதை வரக்கூடாது என்பதில் தீவிரம் காட்டும் பெரியாரியப் பெண் படைப்பாளி வேறொரு நாளிதழில் அரைப்பக்கத்திற்கு தீபாவளி வாழ்த்துக்களைச் சொல்லுகிறார். இது பற்றி கேள்விக்கணை தொடுக்கப்படும் போது வாயடைத்து நிற்கிறார். பின்னட்டையில் "அம்மாவின் நிழல்' என்ற கதையிலிருந்து எடுத்துப் போடப்பட்ட சிறு பகுதி "கண்ணாடிக் கண்கள்' என்று வேறொரு தலைப்பில் தவறுதலாக அச்சேறியிருக்கிறது. இந்தக் கதையின் நாயகி கண்ணாடி அணிந்த அல்லது அணியாத கணவனின் கண்களிலிருந்து கருணையையும், கனிவையும் எதிர்பார்த்து ஏளங்கும் அபலைப்பெண். தான் வேலைக்குச் செல்வது எதற்காக என்பதில் எவ்விதத் தெளிவும் இல்லாத பெண். "அம்மாவின் நிழல்' நாயகனோ காலம் ஓடியபின்னரும் இறந்துபோன அன்னையின் அவல வாழ்வுக்கு எது காரணம் என்பதைத் தீர்மானிக்க இயலாதவன் அல்லது தெரிந்துகொள்ள முயலுவதே முட்டாள்தனம் என்றெண்ணும் அறியாமைக்குச் சொந்தக்காரன்.

"புதிய ஆரம்பங்கள்' என்னும் நூலின் தலைப்பிற்கான கதையில் படுபத்தாம்பசலித்தனமான ஒரு கிராமத்திற்கு, ஆண்டாண்டு காலமாக பாஞ்சாலிக் கதையே நடைமுறையாக இருந்துவரும் ஒரு சிற்றூருக்கு ஒரு விவரமான அரசு பெண் அதிகாரி மாற்றலாகிச் செல்கிறார். அங்கு நடைபெறும் "பாஞ்சாலி சபத' நாடகத்தை மாற்ற வேண்டும் என்று ஒற்றை வரியில் ஆலோசனை கூறி அணுவளவும் களப்பணியினைச் செய்யாது இருக்கிறார். ஆனால் ஆறே மாதத்தில் ஆயிரம் காலத்துக் கதை தலைகீழ் மாற்றமடைகிறது. "புதியதோர் ஆரம்பம்' இத்தனை எளிதிலா? என்ற கேள்வி பெரிதாக உருவெடுக்கிறது. என்றாலும் ஆழமான தேடலுடன் அழுத்தமான படைப்புகளை மும்பைவாழ் கவிஞர் நிச்சயம் தருவார் என்ற பதிலும் கிடைக்கிறது.

மருதா, 6, (32), அண்ணா சாலை, குலசேகரபுரம், சின்மயா நகர்,
சென்னை-600 092. பேசி : 93821-16466


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP