Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatruveli
Maatruveli logo
நவம்பர் 2008
கால்டுவெல் என்னும் சிக்கல்
எம். வேதசகாய குமார்


கால்டுவெல்லின் எழுத்துகள் தமிழ்ச்சூழலில் தொடர்ந்து விவாதத்திற்கிடமானவைகளாகவே இருந்து வந்துள்ளன. கால்டுவெல் இறந்த பின்னரும் அவரைக் குறித்து தொடர் விவாதங்கள் நிகழ இவை காரணமாக அமைகின்றன.

1849இல் ‘திருநெல்வேலி சாணார்கள் ஒரு சித்திரம்’1 என்னும் அவருடைய முதல்நூல் ஆங்கிலத்தில் வெளியானது. இந்நூல் சாணார்கள் என்னும் தமிழ்ச்சாதியைக் குறித்ததாக அமைகிறது. இந்நூல் வெளியான காலகட்டத்தில், ஆங்கிலமொழி படித்தவர்கள் சாணார்களுள் பெரும்பாலும் இருந்திருக்கவில்லை. 20 வருடங்களில் ஆங்கில மொழி அறிவு பெற்ற முதல் தலைமுறை அச்சாதியில் எழுந்தபோது, உரத்த குரலில் நூலிற்கு எதிர்ப்பு எழுந்தது. நூலினை அரசே தடை செய்தது என்றும், கால்டுவெல்லே புழக்கத்திலிருந்து திரும்பப்பெற்றுக் கொண்டார் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன. நூலின் தெளிவற்ற ஒளிப்பட நகல் மட்டுமே இன்று வாசிப்பிற்குக் கிடைக்கின்றது. இந்நூலுக்கெதிராக ‘கால்டுவெல் ஐயருக்குச் செருப்படி’ என்னும் நூலும் அக்காலகட்டத்தில் எழுந்தது. அண்மைக் காலம் வரை வாசிப்பிற்கு இந்நூல் கிடைத்துள்ளது. சமகாலத்தில் வாசிப்பிற்கு இந்நூல் கிடைப்பதில்லை. கால்டுவெல் நூலுக்கெதிராக முன்வைக்கப்பட்ட கருத்துகளை அறிந்துகொள்ள இயலவில்லை. திருநெல்வேலி நாடார் சமூகம் இன்று கால்டுவெல் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளது.

கால்டுவெல் தன் நினைவுக்குறிப்புகளில்2 இந்நூலை எழுதியதற்கான காரணங்களையும் சுட்டியுள்ளார். இம்மக்களின் அக்கால வாழ்க்கை நிலையை விளக்கி, வெளிநாட்டிலிருந்து உதவிகளைப் பெறும் பொருட்டே எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். “இனப்பெருமையைப் போல் சாதி உணர்வினையும் விவாதங்களுக்கு உட்படுத்தக்கூடாது’’3 என்ற தன் தெளிவையும் பதிவு செய்துள்ளார். சமகால வாசிப்பில் அன்று எழுந்த ஆரவாரத்திற்கான காரணங்களை இன்று இந்நூலில் இனங் காண இயலவில்லை. சாணார் சாதியினரின் சமயம், இனப் பண்புகளைக் குறித்ததான 77 பக்கங்களைக் கொண்ட சிறுநூல் இது. சாணார்களின் அன்றைய தாழ்நிலைக்குக் காரணம் அவர்களுடைய சமய நம்பிக்கை என்கிறார். அச்சம் கொண்டவர்கள் ஒருபோதும் முன்னேற இயலாது. சாணார்கள் கைகால்களை மட்டுமே பயன்படுத்தினர். மூளையைப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவிற்கும் வந்துள்ளார். அன்றைய ஐரோப்பியர்களின் அளவுகோலின்படி மொழியைச் சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்கள் புத்தி கூர்மையற்றவர்கள். பின்னாளில் தன் முடிவுகளை மாற்றிக் கொண்டதையும் நினைவுக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். சாணார்கள் மிகுந்த உயர்நிலையை அடைந்து விட்டதையும், அனைத்துச் சமூக நிறுவனங்களிலும் அவர்கள் பங்கு வகிப்பதனையும் தவறாது குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.

கிறிஸ்தவ சமயப்பணியாளர்கள் சமூக முன்னேற்றம் என்னும் ஒரே கண்ணோட்டத்துடன் எதனையும் கண்டனர். தங்களுடைய அர்ப்பண உணர்வை இந்திய போதகர்களிடமும் எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளித்தபோது, கடுமையாக நடந்தும் கொண்டனர். கால்டுவெல் நூலிற்கான எதிர்வினையில் இதனையும் கணக்கில் கொண்டாகவேண்டும். ஜி.யு.போப்பும் இத்தகைய எதிர்வினைகளை எதிர்கொள்ளும் படியானது.

1856இல் கால்டுவெல்லின் ‘திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்’ வெளியானது. ‘A Comparative Grammar of Dravidian or South Indian Languages’ என்னும் இந்நூலினை ஒப்பிலக்கணத் துறையைச் சார்ந்த முன்னோடி நூல்களுள் ஒன்றாகக் குறிப்பிட வேண்டும். முதல் பதிப்பினை இன்று காண்பது அரிதாக உள்ளது.4 1875இல் இதன் திருந்திய இரண்டாவது பதிப்பு5 வெளியானது. முதற்பதிப்பு வெளியானபின் வெளிவந்த தென்இந்திய மொழிகளின் இலக்கணம் குறித்ததான ஆய்வுகள் இரண்டாம் பதிப்பில் முதல் பதிப்பினைத் திருத்துவதற்குரிய கட்டாயத்தினைத் தோற்றுவித்தன.

‘திராவிட மொழிகள்’ என்னும் சொல் கால்டுவெல்லின் கண்டு பிடிப்பு அல்ல. அதற்கான உரிமையை அவர் கோரவுமில்லை. திராவிட மொழிக்குடும்பம் குறித்ததான சிந்தனையும் அவருக்கு முன்னமே இருந்துள்ளது. ஆனால் திராவிட மொழிகள் என்னும் கருதுகோள் அவருடையது. அதை நிறுவ அவர் முயன்றுள்ளார். இதன் பதிவே அவருடைய நூல். குறிப்பிட்ட இந்த இரண்டாவது பதிப்பு காணக்கிடைக்காதது போன்ற மாயைகள் இன்று எழுப்பப்பட்டாலும், பன்னிரண்டு பிரதிகள் வரை வெவ்வேறு நூலகங்களில் உள்ளன. பல ஆய்வாளர்கள் இந்த இரண்டாம் பதிப்பினைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. வையாபுரிப்பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, வெ. சுப்பிரமைணிய முதலியார் ஆகியோர் இரண்டாம் பதிப்பினைப் பயன்பைடுத்தியுள்ளனர். அகஸ்தியலிங்கம் பிள்ளை, கணபதி ஆகியோரும் சமகாலத்தில் இரண்டாம் பதிப்பினைப் பயன்படுத்தியுள்ளனர். சிக்கல் இரண்டாம் பதிப்பு ‘காணக்கிடைக்காதது’ என்பதில் அல்ல, அதுகுறித்து பேச மறுப்பது என்பதில்தான் நிலைகொண்டுள்ளது.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளியான கால கட்டத்தில், அன்றைய தமிழ்மொழி அறிந்த ஐரோப்பிய அறிஞர்கள், இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலிருந்து திராவிட மொழிகளை வேறுபடுத்துவதின் காரணமாகத் திராவிடர்களுக்கும் அவர்களின் அன்றைய எஜமானர்களான இந்தோ ஐரோப்பிய குடும்ப உறுப்பினர்களான ஆங்கிலேயர் களுக்குமிடையில் கால்டுவெல் பிளவைத் தோற்றுவிக்கிறார் எனக் குற்றம் சாட்டினர். இந்திய விடுதலைக்குப்பின், இந்திய மக்களை ஆரியர் என்றும், திராவிடர் என்றும் துண்டாட காலனி ஆதிக்கம் செய்த சதியின் விளைவாக இனங்காணப்பட்டு கால்டுவெல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். ஆக விடுதலைக்கு முன் காலனி ஆதிக்க எதிர்ப்பாளராகவும், விடுதலைக்குப் பின் காலனி ஆதிக்க சார்பாளராகவும் குற்றச்சாட்டுகளுக்குள் ளான பெருமை கால்டுவெல்லுக்கு மட்டுமே உண்டு.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பல பதிப்புச் சிக்கல் களுக்குள்ளான நூல். இந்நூல் திட்டமிட்டு சிதைக்கப்பட்டது. இந்நூலின் குறிப்பிட்ட பகுதிகள் வரலாற்றிலிருந்தே அழிக்கப் பட்டன. “1856இல் மொழி ஒப்பாய்வு குறித்துக் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இருபதாம் நூற்றாண்டுக்குரிய ஆய்வு நெறியில் புதிய பரிமாணத்தைத் தோற்றுவித்தது. கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் அவர்தம் கடுமையான உழைப்பின் பலனாகவும், அத்துறையில் முன் னோடி நூலாகவும் விளங்குகின்றது. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் ஆகியன அவருக்குக் கிடைக்கவில்லை. மலையாள மொழி அறிஞரான குண்டர்ட், தமிழ் அறிஞரான போப், கன்னட அறிஞரான கிட்டெல் ஆகியோர் சில திருத்தங்களைக் கூறினர். கால்டுவெல் அதனை ஏற்றுக்கொண்டு திருத்திப் பதிப் பித்தார். சென்னைப்பல்கலைக்கழகம் அதனை வெளியிட்டது.’’6 தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான சுந்தர மூர்த்தியின் சொற்கள் இவை. துணைவேந்தர் என்பதனால் இச்சொற்கள் அப்பதவிக்கேற்ற அழுத்தத்தைப் பெறுகின்றன. தீர்மானமான முடிவுகளை முன்வைத்துள்ளார். ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட உண்மை வடிவிலான பொய் இது. இவ்வாறு உண்மை வடிவில் கட்டமைக்கப்பட்ட பொய்கள் தமிழில் இன்னும் பல உண்டு. இவை ஒருபோதும் கேள்விகளுக்குள்ளாக்கப்படுவதில்லை.

சுந்தரமூர்த்தி தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் கால்டு வெல்லுக்குக் கிடைக்கவில்லை என்கிறார். கால்டுவெல்லுக்குத் தொல்காப்பியத்தின் முழுமை கிடைக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் தொல்காப்பியத்தில் பெரும்பகுதியைப் படித்திருந்ததை அவரே பதிவும் செய்துள்ளார். சங்கப் பாடல் களைக் குறித்து அவர் குறிப்பிடவில்லை. ஆனால் உரைநூல் களில் மேற்கோளாகச் சுட்டப்படும் சங்கப்பாடல்களைச் சுட்டி, தமிழ்க் கவிதையின் துவக்கம் இதுவென அடையாளம் காட்டு கிறார். கால்டுவெல் ஒரு திருந்திய பதிப்பினை வெளிக் கொணர்ந்தார் என்பது உண்மையே. மலையாள அறிஞரான குண்டர்ட் ஆய்வு முடிவுகளைத் திருந்திய பதிப்பிற்குப் பயன் படுத்திக் கொண்டுள்ளார். அதே சமயம் சைவர்களுக்கு மிக நெருக்கமானவரான ஜி.யு.போப்பின் சிந்தனைகளோடு உடன் பாடான கருத்துகளை ஒருபோதும், அவர் கொண்டிருக்கவில்லை.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் மீதான கோவரின் சிந்தனைகளுக்குப் பதிலளிக்கும் போது, கால்டுவெல் போப்பின் சிந்தனையாகவே அதனை இனங்காட்டுகிறார்.7 சென்னைப் பல்கலைக்கழகமும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தைப் பதிப்பித்தது. ஆனால் இப்பதிப்பு 1875இல் வெளியான கால்டுவெல்லின் திருந்திய இரண்டாவது பதிப்போடு எவ்வகையிலும் தொடர்புடையதல்ல. கால்டுவெல் முதல்பதிப் பில் அவர் கொண்டிருந்த கருதுகோள்களில் எதனையும் துறக்கவுமில்லை. அவற்றிற்கு வலுசேர்க்க புதிய ஆதாரங்களை இணைத்துக் கொண்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகம் இரண்டாவது பதிப்பின் மறுபதிப்பை வெளியிடவில்லை. சுந்தரமூர்த்தி இரண்டாவது பதிப்பின் மறுபதிப்பினைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது என்கிறார். தன் அறியாமைகளின் காரணமாக கால்டுவெல் இழைத்தத் தவறுகளை அறிஞர்களின் ஆலோசனைகளின்படி இரண்டாவது பதிப்பில் கால்டுவெல் திருத்திக் கொண்டார். சென்னைப் பல்கலைக்கழகம் இதனை வெளியிட்டது என்கிறார். வரும் தலைமுறையினர் இப்பதிப்பைக் கால்டுவெல்லின் மூலப்பதிப்பு களுள் ஒன்றாகக் கொள்ள வேண்டுமென சிபாரிசு செய்கிறார். உயர் தொழில்நுட்பத்தில் பொய் உண்மையாகக் கட்ட மைக்கப்படுகிறது.

கால்டுவெல்லின் மரணத்திற்குப்பின் இரு பதிப்பாசிரியர் களைக் கொண்டு திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் மீண்டும் திருத்தப்பட்டது. பல பகுதிகள் இரண்டாவது பதிப்பிலிருந்து நீக்கப்பட்டன; புதுப்பகுதிகள் இணைக்கவும் பட்டன. யாரும் அறிந்திராத உண்மைகள் இவை எனக் குறிப்பிடவும் இயலாது. ஒரு தலைமுறை தமிழ்ப்பேராசிரியர்கள் அனைவரும் அறிந்த உண்மை இது.8

மூன்றாம் பதிப்பின் பதிப்பாசிரியர்கள் கால்டுவெல் வெளிக்கொணர்ந்த இரண்டாம் பதிப்பில் சில மாற்றங்களை நிகழ்த்தியுள்ளனர். தாங்கள் மேற்கொண்ட முடிவுகளுக்கான காரணங்களையும் சுட்டியுள்ளனர். கடைசியாக நிகழ்ந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கூடுதலாகச் சில புள்ளி விவரங்களையும், இதரக் குறிப்புகளையும் இப்பதிப்பில் புதிதாக இணைத்துள்ளதாகச் சுட்டியுள்ளனர். கூடவே கிரேக்கமொழி அறியாதவர்கள் நன்மைக்காக எல்லா கிரேக்கமொழிச் சொற்களையும் மொழிபெயர்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள் ளனர். இவை இரண்டாம் பதிப்பில் இல்லாதனவும் மூன்றாம் பதிப்பில் புதிதாகச் சேர்க்கப்பட்டனவாகவும் அமைகின்றன.

இரண்டாம் பதிப்பில் இடம்பெற்று, மூன்றாம் பதிப்பில் நீக்கப்பட்ட பகுதிகளைக் குறித்தும், நீக்கப்படுதலுக்கான காரணங்களையும் இப்பதிப்பில் முன்வைத்துள்ளனர். “திராவிட மொழி இலக்கியம் தொடர்பான செய்திகளை உள்ளடக்கிய பிஷப் கால்டுவெல்லின் முன்னுரையின் பெரும்பகுதியை நீக்கிவிட்டோம். இரு அடிப்படைகளின் வழிகாட்டுதலில் இம்முடிவினை மேற்கொண்டோம். திராவிட இலக்கியம் தொடர்பான செய்திகள் நூலின் முதன்மை நோக்கத்திற்கு இன்றியைமையாதன அல்ல. கால்டுவெல்லே இதனோடு உடன்பட்டுள்ளார். பழந்தமிழ் நூல்களின் காலம் குறித்த கால்டுவெல்லின் முடிவுகள் இந்திய சுதேசி ஆய்வாளர்களின் ஆய்வின்படியும், தொல்பொருள் துறையின் ஆய்வின்படியும் இன்று செல்லாதன ஆக்கப்பட்டுள்ளன.’’9 இரண்டாம் பதிப்பின் பின்னிணைப்பின் பெரும்பகுதியை நீக்கியதற்கான காரணங் களையும் முன்வைத்துள்ளனர். “இன்று மறக்கப்பட்டுவிட்ட அல்லது முக்கியத்துவைத்தை இழந்துவிட்ட ஆசிரியர்களின் பார்வையோடு முரண்பைட்டு கால்டுவெல் எழுதிய விவாதத்திற்கிடமான பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன.’’10

பதிப்பாசிரியர்கள் முன்வைக்கும் இக்காரணங்களை ஏற்பதில் சில சிக்கல்கள் எழுகின்றன. கூடவே கால்டுவெல் தந்த அடிக்குறிப்புகளை நீக்கியதற்கான காரணங்களை இவர்கள் சுட்டவில்லை. ஆனால் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை வேதனையோடு இதனைக் குறித்து குறிப்பிட்டுள்ளார்.11 பின்னாளில் ஒப்பிலக்கணத்தின் சில பகுதிகள் கிரியர்ஸன் மொழி ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் பதிப்பிக்கப்பெற்றன. கிரியர்ஸன் கால்டுவெல்லோடு முழுமையான உடன்பாடு கொண்டவரல்ல; இந்நிலையில் அடிக்குறிப்புகளில் நிகழ்த்தப்பட்ட மாற்றம் ஐயத்திற்கிடமானதாக அமைகிறது. இரண்டாம் பதிப்பில் கால்டுவெல் எழுதிய முன்னுரை மூன்றாம் பதிப்பில் சேர்க்கப்பைட்டுள்ளது. ஆனால் இரண்டாம் பதிப்பின் பின்னிணைப்புகைளின் விபரங்களைக் குறிப்பிடும் முன்னுரையின் கடைசி பாரா மிகக்கவனமாக நீக்கப்பட்டுள்ளது. பதிப்பாசிரியர்களின் நோக்கங்கள் குறித்த ஐயங்களுக்கு இதுவும் காரணமாக அமைகிறது.

கால்டுவெல் தன் நினைவுக்குறிப்பில் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் குறித்த சில செய்திகளைப் பதிவு செய்துள்ளார். “இந்நூலின் முதல் பதிப்பு 1856இல் வெளியானது. இரண்டாவது பதிப்பு 1875இல் டர்பனர் அண்டு கோவால் வெளியிடப்பட்டது. கவனமாகச் சொல்லப்போனால் கூடுதலாகப் பதிப்பிக்கப்பட்டதால் இதன்விலை சுதேசிகளின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாகிவிட்டது. முன்னுரை உட்பட 608 பக்கங்களைக் கொண்டதாக அமைந்துவிட்டது. முன்னுரை 184 பக்கங்களையும், பின்னிணைப்புகள் 96 பக்கங்களைக் கொண்டதாகவும் அமைந்தது.’’12 முன்னுரையில் பெரும்பகுதியான தமிழ் இலக்கியம் குறித்ததான செய்திகளைத் தனியாக வெளியிடலாம் என்னும் சிந்தனையையும் முன்வைத்துள்ளார். சுதேசி மாணவர்களின் வாங்கும் சக்தி மீதான கால்டுவெல்லின் அக்கறையே இவ்வாறு அவரைச் சிந்திக்கும்படித் தூண்டியுள்ளது. கூடவே இலக்கியம் குறித்ததான அறிவு மாணவர்களுக்குத் தேவையானது என்ற உணர்வையும் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் பதிப்பாசிரியர்கைளின் சிந்தனைக்கு இணையான சிந்தனையைக் கால்டுவெல் கொண்டிருந்தார் என முடிவு செய்ய இயலாது.

மூன்றாம் பதிப்பின் முன்னுரை 118 பக்கங்களைக் கொண்டதாக அமைகிறது. ஆக 66 பக்கங்களைத்தான் சேமிக்கவும் முடிந்துள்ளது. எனவே பதிப்பாசிரியர்களின் நோக்கம் பக்க அளவைக் குறைப்பது தொடர்பானதல்ல. இப்பக்கங்களில் வெளிப்பட்டுள்ள உள்ளடக்கைத்தைக் காலத்தின் பார்வையிலிருந்து அப்புறப்படுத்துவதே அவர்கள் நோக்கம். கால்டுவெல் புராண அடிப்படையிலான காலகணிப்புடன் முரண்பாடு கொண்டிருந்தார். கல்வெட்டு, பிறநாட்டு யாத்திரிகர் குறிப்பு இவற்றின் அடிப்படையில் காலத்தைக் கணிக்கும் கருதுகோளை முன்வைத்தார். அவர்கால கல்வெட்டு வாசிப்பு மிகுந்த குறைபாடுகளை உடையது. சுதேசிகளே சரியான வாசிப்பினை நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும் அவருக்கிருந்தது. என்றாலும் சில இலக்கியப் படைப்புகளின் காலத்தைக் குறித்து தவறான முடிவுகளுக்கு அவர் வரும்படியானது. கால்டுவெல் சுட்டிய வழிமுறைகளைக் கொண்டே பின்னாளில் திருத்தவும் பட்டது. கால்டுவெல்லால் வழிநடத்தப்பட்ட ஐரோப்பிய அறிஞர்கள் திருக்குறளின் காலத்தை பின்தள்ளினர் என்ற வருத்தம் ரா. பி. சேதுப்பிள்ளைக்கும் இருந்தது.13

காலகணிப்பு எவ்வாறு இருப்பினும், தமிழ் இலக்கிய வரலாற்றின் சட்டகத்தைக் கால்டுவெல்தான் முதன்முதலில் உருவாக்கினார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலில்தான் அது வெளியானது. தொல்காப்பியத்திலிருந்து சமகாலத் தமிழிலக்கியம் வரை அவர் பார்வை விரிந்திருந்தது. இலக்கிய வரலாற்றின் காலத்தைக் கால்டுவெல் நேர்கோடாகக் கணிக்கவுமில்லை. தனித்தனி வட்டங்களாகக் கற்பனை செய்தார். இச்சட்டகத்தின் முக்கியத்துவமே இவ்வட்டக் கோட்பாட்டில்தான் அமைந்துள்ளது.

சமணவட்டம், தமிழ் இராமாயண வட்டம், புதுப்பிக்கப்பட்ட சைவ வட்டம், வைணவ வட்டம், புதுப்பிக்கப்பட்ட இலக்கிய வட்டம், எதிர்பார்ப்பனிய வட்டம், சமகால படைப்பாளிகள் என ஏழு வட்டங்களாகத் தமிழ் இலக்கியப் பரப்பினை இனங்கண்டார். தமிழ் இலக்கியம் அதன் சிகரத்தை குறள், சிந்தாமணியின் மூலம் அடைந்தது என மதிப்பிடும் கால்டுவெல், இவற்றைச் சமண வட்டத்தில் இனங்காண் கின்றார். தமிழ் இராமாயணம் ஒப்பற்ற இலக்கியம் எனக் கணிக்கும் கால்டுவெல், சிந்தாமணியை மட்டுமே இதனோடு ஒப்பிட முடியும் என்கிறார். சைவ வைணவக் கவிஞர்கள் சம காலத்திலோ அல்லது தொட்டடுத்த காலத்திலோ வாழ்ந்திருந்தாலும், பொதுமையான கூறுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை, தனித்தனி வட்டங்களில் சுழன்று கொண்டிருந்தனர் எனப் பதிவு செய்கிறார். புதுப்பிக்கப்பைட்ட இலக்கிய வட்டத்தில் சிற்றிலக்கியங்களை எதிர்கொள்கிறார். எதிர்பார்ப்பனிய வட்டத்தில் சித்தர் பாடல்களை மக்கள் இலக்கியமாக இனங்காண்கின்றார். தற்காலத்தில் தமிழை வங்காள மொழியோடு ஒப்பிட்டு எண்ணிக்கையில் தமிழும், தரத்தில் வங்காளமும் உயர்ந்து நிற்கின்றன என்கிறார். ஒருவகையில் முன்னுரையின் இப்பகுதி, ஒப்பிலக்கணத்தின் வேறு எந்தப் பகுதியையும்விட முக்கியமானதாகவே அமைகிறது.

மூன்றாம் பதிப்பின் பதிப்பாசிரியர்கள் 96 பக்கங்கள் கொண்ட இரண்டாம் பதிப்பின் பின்னிணைப்பை 12 பக்கங்கைளுக்குச் சுருக்கி விட்டுள்ளனர். இரண்டாம் பதிப்பின் பின்னிணைப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்பகுதி ஒப்பிலக்கணம் தொடர்பானது. தோடா முதலிய மொழிகளைத் திராவிட மொழிகளாகக் கருதும்படியான சான்றுகளைத் தொகுத்தளிக்கின்றது. மூன்றாம் பதிப்பிலும் நீடிக்கின்றது. ஆனால் பின்னிணைப்பின் இரண்டாவது பகுதி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம் பெற்ற கால்டுவெல் கோவருக்கெழுதிய பதில், சுந்தரபாண்டியன், பறையர்கள் திராவிடர்கள்தானா, நீலகிரி தோடர்கள் திராவிடர்கள்தானா, திராவிடர்கள் உடல் அமைப்பு, திராவிடர்களின் பழமையான சமயம் ஆகியன மூன்றாம் பதிப்பில் பதிப்பாசிரியர்களால் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்படுதலுக்கான காரணங்களையும் தெளிவுபடுத்தவுமில்லை. இவை எவ்விதத் தடயமுமின்றி வரலாற்றிலிருந்தே அழிக்கப்பட்டுள்ளன.

கால்டுவெல் கோவருக்கெழுதிய பதிலைக் கடந்தகாலத்தில் எழுந்த பொருட்படுத்தலுக்குத் தகுதியற்ற எதிர்வினையாக மதிப்பிட்டு நீக்கியதாக பதிப்பாசிரியர்கள் சுட்டுகின்றனர். “கலாச்சார முன்னேற்றம் இனத்தை மட்டுமே பொறுத்ததல்ல, அதைவிட மேலாகப் பருவநிலை மற்றும் புறச்சூழலை பொறுத் தமைவது’’14 கால்டுவெல்லின் இச்சிந்தனையை எவ்வாறு புறக்கணிக்கக்கூடும். பதிப்பாசிரியர்கள் இதனோடு முரண்படக் கூடும். ஆனால் சமகாலப் பார்வையில் மிகமிக முக்கியமானதும் கூட.

கால்டுவெல்லின் காலத்தில் தமிழன் என்னும் சொல் மொழி பேசும் மக்களைக் குறிக்கவில்லை. உயர்சாதியினரை மட்டுமே குறித்தது. கால்டுவெல்லுக்குப் பிற்பட்டவரான அயோத்திதாசரும் இதனைப் பதிவு செய்துள்ளார்.15 கால்டுவெல் இது குறித்ததான சமகாலச் சிந்தனைகளைத் தொகுத்து, சிதறடித்து, தன் கருதுகோளை உறுதிபடுத்துகின்றார். திராவிட மொழிபேசும் மக்கள் ஓரினத்தவரே என்கிறார். ஆண்டான் அடிமை என்பது ஓரினத்தவருள்ளும் இருக்கக்கூடும் என விளக்குகிறார். பறையர்களைப் பழமையான திராவிடர் எனக் கூறுகிறார். 1890 கால அளவில்தான் ஆதிதிராவிடர் என்னும் சொல் வழக்கில் வந்தது. ஒருவகையில் இது கால்டுவெல்லின் தாக்கமே.

திராவிடர்களின் உடலமைப்பு என்னும் கட்டுரையில் கருமைநிறம் அடிமைகளின் நிறம் அல்ல. மாறாகச் சூரியனுக்குக் கீழ் திறந்த வெளியில் வேலை செய்பவர்களின் நிறம் என்கிறார். ‘சுந்தரபாண்டியன்’ கட்டுரையில் ஞானசம்பந்தரின் காலத்தைக் கணித்து சைவம் காலத்தால் பிற்பட்டது என்கிறார். திராவிடர் களின் பழமையான சமயம் கட்டுரையில் வெறியாடுதலையே திராவிடர்களின் சமய அடையாளமாக மதிப்பிடுகிறார். இப்பின்னிணைப்புகள் அனைத்தும் ஒரே இலக்கையே கொண்டுள்ளன. திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் அனைவரும் ஓரினத்தவரே என்பதுவே அது. சாதி வேறுபாடுகள் செயற்கையானவை. ஒரே மொழிக்குடும்பம் என்பதனோடு உடன்பட்டவர்கைளால் ஓரினம் என்பதோடு உடன்பாடு காண இயலவில்லை. பின்னிணைப்புகள் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டமைக்கான காரணம் இதுவே.
கால்டுவெல்லின் மூன்றாவது நூலான திருநெல்வேலி சரித்திரம்16 சென்னை அரசின் பணஉதவியுடன் 1881இல் வெளியானது. இந்நூலை எழுதியதற்காக ஆயிரம் ரூபாய் மதிப்பூதியமாகக் கால்டுவெல்லுக்குத் தரப்பட்டது. இந்நூலின் கொள்ளைப் பதிப்பு 1982இல் வெளியானது.

ந. சஞ்சீவி, கிருட்டிணா சஞ்சீவி ஆகியோரின் தமிழாக்கம் 2004இல் காவ்யா வெளியீடாக வெளிவந்தது. குறிப்பிட்ட இந்நூல் குறித்தும் விவாதங்கள் எழுந்தன. கால்டுவெல் தென்தமிழ் நாட்டின் பாளையக்காரர்கள் வரலாற்றை விரிவாக ஆராய்ந்துள்ளார். ஆனால், காலனி ஆதிக்க சார்புநிலை கொண்ட வரலாறாக இது கணிக்கப்படுகிறது. கால்டுவெல் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு நன்மை செய்வதே அரசு என்னும் கருதுகோளை முன்வைத்து வரலாற்றினை எதிர்கொண்டுள்ளார். ஆங்கில காலனி அரசு கூட அடித்தட்டு மக்களுக்கு நன்மை செய்கிறவரைதான் நீடித்திருக்கும்17 என்கிறார். ஓராட்சியின் செயல்பாட்டினைப் போர்க்களங்களில் அல்ல, மக்கள் நலத்திட்டங்களில்தான் இனங்காண முடியும் என வலியுறுத்துகிறார். பாளையக்காரர்கள் ஆட்சியில் இதனை இனங்காண முடியாதது கால்டுவெல்லை எதிரிடையான மதிப்பீடுகளுக்கு வரத்தூண்டுகிறது. கால்டுவெல்லின் மொழி படைப்பு மொழி; நுட்பமும் செறிவும் கொண்ட மொழி; உள்ளார்ந்து நகையாடும் மொழியும் கூட. தமிழாக்கம் செய்தவர்களோ சிரிக்கத் தெரியாதவர்கள். தவறான புரிதல்களுக்கு அவர்களை இட்டுச் சென்றுள்ளது.

பாளையக்காரர்களை மிகுந்த சிரமத்தின் பேரில் முறியடித்த கம்பனி அரசு, ஆதிக்கத்தை நிலை நாட்டிய விதத்தை எழுத கால்டுவெல்லுக்கு உதவி செய்தது. அவ்வுதவியைப் பயன்படுத்திக் கொண்டு வரலாறு மீதான தன்மதிப்பீட்டை கால்டுவெல் எவ்வாறு முன்வைத்துள்ளார் என்பதே கேள்வி. விடுதலை பெற்ற இந்தியாவில் பேராசிரியர்கள், குறிப்பாகத் தமிழ்ப் பேராசிரியர்கைள் மாநில ஆட்சிப்பீடத்தின் தலைவர்களைப் புகழும் பொருட்டு எவ்வாறு துதிபாடுகிறார்கள் என்பதனோடு ஒப்பிடும்போது கால்டுவெல் மீது மிகுந்த மரியாதை கொள்ளமுடிகிறது.

1881இல் ‘திருநெல்வேலி மிஷன் ஆவணங்கள்’18 என்னும் கால்டுவெல்லின் நான்காவது நூலும் ஹிக்கிம்பாதம் வெளி யீடாக வெளிவந்துள்ளது. கால்டுவெல் திருநெல்வேலி மிஷன் வரலாற்றை எழுத முற்படவில்லை. இவ்வரலாற்றை சுதேசிதான் எழுதவேண்டும் என்கிறார். எதிர்காலத்தில் இவ்வரலாற்றினை எழுத இருக்கின்ற சுதேசிக்கு உதவும் பொருட்டு ஆவணங்களை ஒழுங்குபடுத்திப் பதிப்பிப்பதே தன் நோக்கம்எனக் குறிப்பிட் டுள்ளார். மறவர்களைச் சமயமாற்றம் செய்ய ஐரோப்பிய காலனி அரசு தடை செய்ததையும் கவனமாகப் பதிவு செய்துள்ளார். அதுபோல் சமயப்பணியாளர்கள் வரிவசூலில் இடையூறு செய்வதை ஆட்சியாளர்கள் விரும்பாததையும் குறிப்பிட்டுள் ளார். காலனி ஆதிக்க அரசின் அதிகாரிகளுக்கும், சமயப் பணி யாளர்களுக்குமிடையிலிருந்த இடைவெளி சமகாலப் பார்வை யில் முக்கியமானது. ஆனால், இந்நூல் ஆழ்ந்த வாசிப்பினை இன்னமும் பெறவில்லை.

கால்டுவெல் மரணத்திற்குப்பின் 1894இல் அவருடைய ஐந்தாவது நூல் ‘பிஷப் கால்டுவெல் நினைவுக்குறிப்புகள்’19 வெளியானது. பதிப்பாசிரியராக அவருடைய மருமகன் யாட் பெயர் குறிப்பிடப்பட்டாலும் நூலின் பெரும்பகுதி கால்டுவெல் லால்தான் எழுதப்பட்டுள்ளது. மரணத்திற்குப்பின் அவருடைய மருமகன் மரணச் செய்தியைத் தந்து நிறைவு செய்துள்ளார். கூடவே கால்டுவெல் எழுதிய கடிதங்களும் ஆங்காங்கே இணைக்கப்பட்டுள்ளன. ஒருவகையில் தன் வாழ்வு குறித்ததான கால்டுவெல்லின் சுயமதிப்பீடு இது. தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட நூலும்கூட. ஆனால் இம்மொழி பெயர்ப்பு இடையான் குடி கிராமம் கால்டுவெல்லை நினைவு கொண்டதன் தடமாக அக்கிராமத்திற்குள்ளேயே முடங்கிவிட்டுள்ளது.

1893இல் மரணத்திற்குப்பின் ‘பரதகண்ட புராதனம்’20 என்னும் சிறுவெளியீடும் அவர் பெயரில் SPGK வெளியீடாக வெளி வந்துள்ளது. ‘Indian Antiquitin – Reprint from the friendly Instructor’ என்னும் ஆங்கிலத் தொடரும் நூலில் இடம்பெற்றுள்ளது. நற்போதகம் 1849 முதல் தொடர்ச்சியாக வெளிவந்த திருநெல்வேலி மாவட்ட சமய இதழ். 1860க்குப்பின் The friendly Instructor என்னும் ஆங்கிலப் பெயரும் இணைக்கப்பட்டது21 இவ்விதழில் வெளியானது மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. எதிர்கால ஆய்வுதான் மேலதிகத் தகவல்களைத்தர வேண்டும். இதன் உள்ளடக்கமும் விவாதங்களை எழுப்பும் தன்மை கொண்டது. ஆனால், சமகாலப் பார்வைக்குக் கிடைக்காதது விவாதங்கள் தோன்றாததற்குக் காரணமாக அமைகிறது.
வேதங்கள் ஒலிவடிவில்தான் முதலில் எழுந்தது என்னும் மரபான நிலைபாட்டிற்கெதிராக எழுத்துவடிவில்தான் முதலில் தோற்றம் கொண்டது என்கிறார். பசுமாமிசம் உண்பது வேதத் தில் ஏற்கப்பட்ட ஒன்றுதான் என நிறுவுகிறார்.

“ஆவுரித்துத் தின்னும் புலையரேனும்’’ என சாதியில் இழிவு பசுமாமிசம் உண்பதில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். ‘வாமன’ அவதாரம் சொற்பிழை யால் உருவான கதை எனவிளக்கும் கால்டுவெல், ருத்திரன் சிவன் அல்ல எனவும் விளக்குகிறார். தற்கால இந்து சமயத்திற்கு ஆதாரமே புராணக்கதைகள்தான் எனவும் நிறுவுகிறார். தமிழகச் சூழலில் இராமாயணத்தின் மீதான ஆரியர் திராவிடர் வாசிப்பினைத் துவக்கி வைத்ததும் கால்டுவெல்தான். இராமாயணப் போரை ஆரியர் திராவிடர் மீது நிகழ்த்திய போராக இனங்காணும் கால்டுவெல், சீதையை ஆரியர்களின் நன்செய் நிலத்திற்குக் குறியீடாகச் சித்திரிக்கின்றார். ஆரியர்களின் தென் இந்திய விவசாய நிலங்களைக் கையடக்கிய திராவிடர்களிடமிருந்து விவசாய நிலங்களை மீட்க ஆரியர்கள் நிகழ்த்திய போரே இராமாயணப்போர் என்கிறார். இந்த வாசிப்பு அரை நூற்றாண்டளவிற்குத் தொடர்ந்துள்ளது; அரசியல் இயக்கங்கைளை வழிநடத்தியுள்ளது.
நூல்களோடு கால்டுவெல்லின் உரைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளையும் இங்குக் குறிப்பிட வேண்டும். 1879இல் சென்னைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா உரை, 1869இல் திருநெல்வேலி ‘மிஷன்’ குறித்ததான உரை போன்றவை குறிப்பிடத்தக்கன. அக்கால இதழ்களில் வெளியான அவருடைய ஆய்வுக்கட்டுரைகள் இன்னமும் தற்கால வாசிப்பினைப் பெறவில்லை. விவாதங்களை எழுப்புவதே கால்டுவெல் எழுத்துகைளின் பொதுகுணமாக அமைகிறது.

2

கால்டுவெல் குறித்ததான ஆய்வின் குறிப்பிடத்தகுந்த இடை வெளி பிரச்சினைக்குரிய திராவிடமொழி ஒப்பிலக்கணத்தின் மூன்றாம் பதிப்பு எப்போது, யாரால், எத்தகைய சூழலில் வெளியிடப்பட்டது என்பதுவே. தற்காலத்தில் AES கொள்ளைப் பதிப்பு, சென்னைப்பல்கலைக்கழகப்பதிப்பு என்னும் இருபதிப்பு களே பார்வைக்குக் கிடைக்கின்றன. இவ்விரண்டுமே மூன்றாம் பதிப்பின் மறுபதிப்புகளே. இவ்விரு பதிப்புகளிலுமே மூன்றாம் பதிப்பின் பதிப்பாளர்களைக் குறித்த விவரங்கள் தரப்படவில்லை. சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பு (1956) பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் தீர்மானத்தை பதிப்பிற்கு ஆதாரமாகச் சுட்டுகிறது.22 குறிப்பிட்ட இத்தீர்மானத்தின்படி சென்னைப் பல்கலைக்கழகம் இதனை மறுவெளியீடு செய்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் தன் முதல் பதிப்பினை எப்பொழுது வெளிக்கொணர்ந்தது என்னும் கேள்வி எழுகிறது.

மூன்றாம் பதிப்பின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரான ராம கிருஷ்ணபிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் பாடத் திட்டக் குழுவின் தலைவராக இருந்தமையால் இம்மூன்றாம் பதிப்பு சென்னைப் பல்கலைக்கழகத்தால் 1913இல் வெளியிடப் பட்டது என்னும் கருத்து உருக்கொண்டது. சக்தி இதழில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை இத்திருத்தப்பட்ட பதிப்பு 1915இல் வெளியானது எனக்குறிப்பிட்டுள்ளார். அச்சுப்பிழை யாகவும் இருத்தல் கூடும். என்றாலும், வையாபுரிப்பிள்ளையின் ஒவ்வொரு கூற்றும் மிகக்கவனமாகப் பரிசீலிக்கப்படவேண்டும். திராவிட மொழியியல் கழகத்தின் திராவிடக்கலைக் களஞ்சியம் மூன்றாம் பதிப்பின் பதிப்பாசிரியர்களின் கல்வித்தகுதியை மிகக்கவனமாகச் சுட்டியுள்ளது. இதை சமகாலத்தின் கவனத் திற்குக் கொண்டு வந்துள்ளது என்பதே பொருத்தமானது. மூன்றாம் பதிப்பு ‘கொஞ்சம் மாறுதல்களுடன் வெளிவந்தது’23 என்று மட்டுமே சுட்டுகிறது. ஆனால், மாறுதல்கள் குறித்தான விவரங்களை முன்வைக்கவில்லை. மாறுதல்களை நிகழ்த்திய பதிப்பாசிரியர்களின் கல்வித்தகுதியை முன்னிட்டு, மாறுதல் களை ஏற்றுக் கொள்ளலாம் என மறைமுகமாக உணர்த்துகிறது. துணைவேந்தர் சுந்தரமூர்த்தியின் பாதையில்தான் பயணம் செய்கிறது. பேராசிரியர் சுந்தரமூர்த்தி தமிழ் வாசகர்களை மட் டுமே எதிர்கொள்ளும்போது, கலைக்களஞ்சியம் ஆங்கில மொழி மூலம் உலக வாசகர்களை எதிர்கொள்ளுகிறது. எனவே இலக்கை அடைவதற்கான தொழில்நுட்பம் மேலானதாக அமைகிறது.

பேராசிரியர் அகஸ்தியலிங்கம் பிள்ளை திராவிட மொழிகள் குறித்தான தன் நூலில்24 முதல் இரண்டு பதிப்புகளுக்கிடை யிலான வேறுபாட்டை விரிவாகச் சுட்டியுள்ளார். ஆனால் இரண்டாம் மூன்றாம் பதிப்புகளுக்கிடையிலான வேறுபாட் டினைக் குறித்து கவலை கொள்ளவில்லை. IJDL இதழ் வெளியிட்ட கால்டுவெல் குறித்தான கட்டுரையிலும் மூன்றாம் பதிப்பு குறித்த விவரங்கள் தரப்படவில்லை.

மூன்றாம் பதிப்பின் பதிப்பாசிரியர்களுள் கால்டுவெல்லின் மருமகன் வயட்டும் (WYATT) ஒருவர். மூன்றாம் பதிப்பு வெளி யாகும் போது வயட் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். கிழக்கிந்திய கம்பனி சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதேசி மொழிகளின் வளர்ச்சிக்காகக் கல்லூரி ஒன்றைத் தோற்றுவித்தது. எல்லீஸ், டுரூ, ஆண்டர்ஸன் போன்ற ஐரோப்பியர்களும், சிவக்கொழுந்து தேசிகர், தாண்டவராய முதலியார் போன்ற தமிழறிஞர்களும் ஆசிரியர்களாகத் திகழ்ந்தனர். சமயப் பணியாளர்கள் இந்நிறுவ னத்தில் முறையாகத் தமிழை மேனாட்டுக் கல்விமுறையில் கற்றனர். தாயகம் திரும்பிய பின்னர் இக்கல்வித் தகுதியை முன்வைத்து கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொண்டன. போப் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும், வயட் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தி லும் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றனர்.

வயட் கால்டுவெல் லின் இறுதி நாட்களில் அவரோடிருந்தார். அவர் எண்ணங்களையும் அறிந்திருக்கக்கூடும். எனவே மூன்றாம் பதிப்பை மிகக்கவனமாக பரிசீலிக்கவேண்டிய கட்டாயம் எழுகிறது. இரண்டாம் பதிப்பினை வெளியிட்ட டர்பனர் அண்டுகோ தான் திருத்தப்பட்ட மூன்றாம் பதிப்பினையும் லண்டனில் 1913இல் வெளியிட்டது என்ற உண்மை தெரியவந்தபோது கால்டுவெல் குறித்ததான ஆய்வின் இடைவெளி இன்னும் அதிகமானது. திராவிடமொழி ஒப்பிலக்கணத்தின் பதிப்புரிமை அக்காலச்சட்டப்படி இப்பதிப்பகத்தினையேச் சாரும். திருத்தங்களை அக்காலச் சூழலில் தகுதியானவர்களைக் கொண்டே நிகழ்த்தியுள்ளனர். நீக்கப்பட்ட பகுதிகள் தனியாக நூல்வடிவம் பெற்றிருக்கவும் வாய்ப்புண்டு.

சிக்கல் சில பக்கங்கள் நீக்கப்பட்ட விதத்தில் அல்ல. அப்பக்கங்கள் வரலாற்றிலிருந்து திட்டமிட்டு அழிக்கப்பட்ட விதத்தில்தான் உள்ளது. அழிக்கப்பட்ட இப்பக்கங்களின் உள்ளடக் கம் சமகாலத்தில் யாருக்கும் தெரியாது என்பதல்ல. பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியம், அகஸ்தியலிங்கம் பிள்ளை போன்ற முதிய தலைமுறை பேராசிரியர்கள் இத்திருத்தங்களைக் குறித்து அறிந் திருக்க வேண்டும். விவாதிக்க மட்டுமே இவர்கள் விரும்பவில்லை.

இந்நிலையில் திருத்தப்பட்ட மூன்றாம் பதிப்பு வெளியான காலச்சூழலில்தான் சில கேள்விகளுக்கு விடைதேடவேண்டும். 1875இல் வெளியான ஒப்பிலக்கணத்தின் இரண்டாம் பதிப்பின் மீதான எதிர்வினைகளைப் பதிவு செய்தபோது, பண்டித சவரி ராயன், மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை ஆகியோரின் எதிர் வினைகள் கவனத்தை ஈர்க்கின்றன. கால்டுவெல் அவர்காலத்தில் எழுந்த எதிர்வினைகளைப் பதிவு செய்துள்ளார்.

பண்டித சவரிராயன் வெளிப்படையாக எவ்வித உள்நோக்க முமின்றி கால்டுவெல் சிந்தனை மீதான தன் எதிர்வினைகளைப் பதிவு செய்துள்ளார்.25 சவரிராயன் ஓர் இனத்தின் கலாச்சார உயர்வு தாழ்வு பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர். போப்பும் கோவ ருமே இவருக்கு வழிகாட்டிகள். கோவரைப் போலவே சித்தியர் களை மனிதஇனத்தில் தாழ்ந்தவர்களாக மதிப்பிடுகிறார். கோவரை மேற்கோளாகவும் காட்டுகிறார். கால்டுவெல்லைப் போல் திராவிடர்களை மத்திய ஆசியாவோடு தொடர்புபடுத்தும்போது, வடஇந்தியா வழியாக அல்லாமல், கடல் வழியாக மேற்குத் தொடர்ச்சி மலையில் குடியேறினர் என்கிறார். சவரிராயனுக்கு மனு, பரதன் எல்லோரும் திராவிடர்களே, சமஸ்கிருத நாகரீகமாகக் கருதப்படுவது உண்மையில் திராவிட நாகரீகமே. வேதத்தில் குறிப்பிடப்படும் தாஸர்கள் தென்இந்திய மலைவாசிகளுக்கு முன்னோர்கள். கருமை நிறமும், தட்டையான மூக்கும் அடிமைகளின் அடையாளங்கள். சமகாலத்தில் அவர் திராவிடர்களாக இனங்காணும் மக்களிடம் இந்த உடல் அடையாளங்கள் இல்லை.

இராமாயணக் கதையும் திராவிடர்களுடையதே. வான்மீகி ஆரியர்களை உயர்வுபடுத்த அதைப் பயன்படுத்திக் கொண்டுள் ளார். சவரிராயனின் சிந்தனைகளை இன்று பொருட்படுத்தியாக வேண்டுமென்பதில்லை. மொழியியல் துறையில் நிகழ்ந்துள்ள ஆய்வுகள் கால்டுவெல்லையே உறுதிப்படுத்துகின்றன. என்றாலும் சவரிராயனின் நேர்மையைக் குறிப்பிட்டாக வேண்டும். மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் எதிர்வினைகள் இத்தகையன அல்ல.

சுந்தரம்பிள்ளையின் திருஞான சம்பந்தர்26 கால ஆராய்ச்சி, பத்துப்பாட்டு ஆராய்ச்சி27 ஆகியன கால்டுவெல்லுக்கு அவர் நிகழ்த்திய எதிர்வினைகளே. திருஞான சம்பந்தர், நக்கீரர் ஆகியோரின் காலங்களைக் கால்டுவெல் கல்வெட்டு வாசிப்பின் மூலம் நிறுவமுயன்றுள்ளார். கல்வெட்டு வாசிப்பில், சுந்தரம் பிள்ளை கால்டுவெல்லுக்குப் பின் தோற்றம் கொண்ட வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். சுந்தரம்பிள்ளையின் காலக்கைணிப்பே உண்மைக்கு நெருக்கமாக உள்ளது.- கால்டுவெல், சுந்தரம்பிள்ளை இருவருடைய நோக்கங்களும் முற்றிலுமாகக் காலகணிப்பு தொடர்பானதுதான் எனக் கூறிவிட முடியாது. கால்டுவெல்லின நோக்கம் சைவசித்தாந்தம் மற்றும் சைவ சமயத்தைத் திராவிடர்களின் அடையாளமாகக் கொள்ள முடியாது. அவை காலத்தால் பிற்பட்டன என நிறுவுவதே. சுந்தரம்பிள்ளையின் நோக்கம் அவை காலத்தால் முற்பட்டன, திராவிடர்களின் அடையாளங்களாக ஏற்கத்தக்கன என்பதுவே. ஆனால், கால்டுவெல் குறிப்பிடும் திராவிடர்களின் சமய அடையாளமான வெறியாடுதல் காலத்தால் மிகப்பழமையானது. அவர்களுடைய மத்திய ஆசியா வாழ்க்கையோடு தொடர்பான தும்கூட. தமிழ்ப் பேராசிரியர்கள் சுந்தரம்பிள்ளையின் ஆய்வைக் கால ஆராய்ச்சி என்னும் ஒரே கோணத்தில் தான் எதிர்கொண்டுள்ளனர்.

சுந்தரம்பிள்ளையின் வாழ்க்கைச் சூழலையும் இங்கு எதிர் கொண்டாக வேண்டும். அவர் திருநெல்வேலி சைவவெள்ளா ளர் வகுப்பினைச் சார்ந்தவர். அவர் முன்னோர்கள் திருவிதாங் கூரில் குடியேறினர். சுந்தரம்பிள்ளை திருவிதாங்கூர் மன்னரின் நண்பர் அல்லது அடியாள்களுள் ஒருவர். 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி திருவிதாங்கூர் வரலாற்றில் மிகமுக்கியமான காலப்பைகுதி. வேலுத்தம்பி தளவாய் மரணத்திற்குப்பின் அதிகாரம் பெருமளவு கிழக்கிந்திய கம்பனியின் பிரதிநிதிக்குக் கைமாறியது. திருவிதாங்கூரில் அடிமை வணிக முறை நிலவியிருந்தது. நன்செய் நில விவசாயிகளான வெள்ளாளர்கள் பறையர்களை அடிமைகளாக வாங்கவும் விற்கவும் செய்தனர். திருவிதாங்கூரில் மாட்டுச்சந்தை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, வெள்ளாளர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். மாடுகளைவிட அடிமை களுக்குத் தீனி குறைவாகப் போதும் என்றனர். ‘லண்டன் மிஷனரி’ சமயப் பணியாளர்கள் அடிமைகளின் விடுதலைக்காகப் போராடினர். அடிமை வணிகம் தடை செய்யப்பட்டபோது, அது வெள்ளாளர்களின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது.28

சாணார்கள் சமூக, பொருளாதார விடுதலையின் பொருட்டு தோள்சீலை கலகங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். சார்லஸ் மெட், சார்லஸ் மால்ட் என்னும் இரு சமயப்பணியாளர்கள் இதை வழிநடத்திக் கொண்டிருந்தனர். சாணார்கள் நூற்றாண்டின் இறுதிக்குள் சமூக, பொருளாதார விடுதலையை உறுதிப்பைடுத்திக் கொண்டனர். கால்டுவெல்லின் இடையான்குடி திருவிதாங்கூருக்கு மிக அருகில் உள்ளது.

19ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் திருநெல்வேலியிலும் சாணார்களின் கை ஓங்கியது. கல்வியில் முன்னேறிய இச்சாதி யினர் சமூகத்தின் உயர்நிலையிலிருந்த வெள்ளாளர்களைப் பின்தங்கச் செய்தனர். பாளையங்கோட்டை வெள்ளாளர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. சாணார்கள் தங்களை நாடார்கள் என அழைக்கும்படி சட்டம் இயற்றச் செய்தனர்.

வருண அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டபோது, சாணார்கள் சத்திரியர்கள் என உயர் வர்ணத்தைக் கோரினர். வெள்ளாளர்கள் உயர்வருணமாக வைசியவர்ணத்தைத் தான் கோரமுடியும். வைசிய வர்ணம் சத்திரிய வர்ணத்திற்குக் கீழானது. புதிதாகக் கல்வியறிவு பெற்ற நாடார்கள் வெள்ளாளர்களை ‘அஞ்ஞானிகள்’ என்றனர். சுந்தரம்பிள்ளை வேதனையோடு இதைக்குறிப்பிட்டுள்ளார்.

“திராவிட இனத்தின் மலர்களான வெள்ளாளர்கள் தங்கள் தேசீயத்தை இன்று மறந்துவிட்டுள்ளனர். சூத்திரர்கள் என்றோ அதைவிட முட்டாள்தனமாக வைசியர்கள் என்றோ தங்களை அழைத்துக் கொள்கின்றனர். நீதி மன்றங்களில் ‘வேதக்காரர்’ ஆகிய கிறிஸ்தவர்கள் முன் தங்களை அஞ்ஞானிகள் என இனங்காட்டிக் கொள்கின்றனர். “சாணார்களும் ஈழவர்களும் ஆயிரம் கேட்டால் நூறாவது கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் சத்திரியைர்கள் எனத் தங்களை அழைக்க உரிமை கோருகின்றைனர்.’’29 சுந்தரம்பிள்ளை நீதிபதி நல்லசாமிக்கு எழுதிய இக்கடிதைவரிகள் அவர் உள்ளத்தைத் தெளிவாகவே உணர்த்திவிடுகின்றன.

கால்டுவெல் பறையர்களைத் திராவிடர்கள் என்றபோது, அடிமைகளான பறையர்களும் அவர்கள் எஜமானர்களான வெள்ளாளர்களும் ஓரினத்தவர்களாகின்றனர். இது சுந்தரம் பிள்ளையைக் கொந்தளித்து எழச்செய்தது. அரசியல் அடிப்பைடையில் வெள்ளாளர்களை ஒருங்கிணைக்க முயன்றார். இம்முயற்சி கைகூடும் நிலையில் மரணம் அவரை அரவணைத்துக் கொண்டது. சுந்தரம்பிள்ளையின் வாய்மொழிச் சொற்களுக்கு வெ. சுப்பிரமணிய முதலியார் நூல் வடிவம் தந்தார். முன்னுரையில் நல்லசாமி இதனை உறுதிபடுத்தவும் செய்கிறார்.

இராமாயணக் கதையை முன்னிறுத்தி தென் இந்திய சாதிக் கட்டமைப்பை சுந்தரம்பிள்ளை விளக்க முயன்றார். பார்ப்ப னர்களின் வருண அடிப்படையிலான சாதி அமைப்பிலிருந்து திராவிடர்களின் தொழில் அடிப்படையிலான சாதி அமைப்பு வேறானது. மரபான இச்சாதி அமைப்பில் செயற்கையாக மாறுதைல்களைத் தோற்றுவிக்கக் கூடாது. காலப்போக்கில் இயல்பாக எழும் மாறுதல்களையே ஏற்க இயலும் என்றார். வெள்ளாளர்கைளைச் சுப்பிரமணிய முதலியாரின் நூல் அரச மரபினர் என்கிறது. “தென் இந்தியாவையாண்ட சேர சோழ பாண்டியர் முதலிய அரசர்கள் பெரும்பாலும் வேளாளராக இருந்தனரென்று பழைய கல்வெட்டு, தாம்பிர சாஸனங்கள் முதலியவற்றால் விளங்குகின்றது.’’3-0 என உறுதிப்படுத்தும். இந்நூல், இடையர் மறவர்களை இவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்கிறது. ஆக சாணார்கள் இவர்களுக்கும் கீழ்ப்பட்டவர்கள் என்றாகிறது.

“ஒவ்வொரு பிரதேசத்திலும், வேசியர்களின் மக்களும் சரியான சம்பந்தமில்லாத சம்பந்தத்தாற் பிறந்த பிள்ளைகளும் அவ்வப்பிரதேசத்தில் பெருமிதமாயுள்ள சாதி களோடு இரண்டு மூன்று தலைமுறைகளில் கலந்துவிடுவது வழக்கமாயிருக்கின்றது. உத்தம குலசாரந் தவறாத சாணார்கள் இவ்வாறு கலப்பவர்களிலும் எவ்வளவோ மேற்பட்டவர்களென்பைது சொல்லாமலே விளங்கும்.’’31 என சாணார்களை இழிவுபைடுத்தவும் தவறவில்லை. சுப்பிரமணிய முதலியாரின் நூல் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் சிந்தனைகளுக்கு நூல்வைடிவம் தந்துள்ளது; நூல் முன்னுரையின் வெளிப்படுத்தைலை ஏற்றுக் கொள்வோமானால், சுந்தரம்பிள்ளை கொண்டிருந்த வெறுப்புணர்வை உணர்ந்து கொள்ள இயலும். இச்சாதி அமைப்பில் ஏவலரும் வேலையாட்களும் உண்டு எனக் கூறி அவர்களைத் தனிமைப்படுத்துகின்றது. பறையர்கள் என்னும் பெயரை ஓரிரு இடங்களில்தான் குறிப்பிடுகிறது. “தென் தேசத்து மகமதியர் தொகை குறைந்தோராதலால் மாட்டிறைச்சி தின்னும் பறையர் முதலியோரோடு தம்மையும் சேர்த்து பிறசாதியார் நீசரென்று இகழ்வார்களென்ற பயத்தாலும் அப்பயங்காரணமாக ஏற்பட்டுவிட்ட வழக்கத்தாலும் மாட்டு மாமிசத்தைத் தொடாதிருக்கின்றனர்.’’32 பறையர் நீசர் என்பதை உறுதிபடக் கூறிவிடுகின்றனர்.

இச்சாதி அமைப்பினை இராமாயணக் காலத்திற்குக் கொண்டு செல்கிறார். ஆரியனான இராமன் திராவிடனான இராவணன் மீது படையெடுத்த கதைதான் இராமாயணம். வாலிசுக்ரீவர்கள் தமிழகத்திற்கு வடபாலுள்ள திராவிடர்கள். தோற்றோடிய அரசனின் மனைவியைக் கைப்பற்றும் அரசநீதி யின் படி இராவணன் சீதையைச் சிறைவைத்தான். சீதையை மீட்க இராமன் அநீதியான போரினைச் செய்தான். இராவணனே திராவிட அரசமரபினரான வெள்ளாளர்களின் முன்னோன். அவனுக்காகப் போர் செய்த திராவிட வீரர்களுள் மறவர்களும் இடையர்களும் இருந்திருக்கக்கூடும். சாணார்களும் இவ்வடுக் கில் ஏதோ ஓர் இடத்தில் இடம்பெறக்கூடும். அடிமைகளான பறையர்களுக்குச் சற்றும் இடமில்லை.

சுந்தரம்பிள்ளையின் இராமாயண வாசிப்பு வெள்ளாளர் களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. ஆரிய இராமன் தொடர்ந்து இழிவு படுத்தப்பட்டான். என் இறைவனை எவ்வாறு இழிவுபடுத்தலாம் என இராகவையங்கார் கதறுமளவிற்கு இது தொடர்ந்தது. ஈ.வெ.ரா. பெரியாரின் இராமாயண வாசிப்பு வெள்ளாளர்களின் உத்தியை மட்டும் கைக்கொண்டது இதன் தொடர்ச்சி அல்ல.

பறையர்கள் பழமையான திராவிடர்கள்; விவசாய அடிமைகளான பறையர்களுக்கு அடிமையாகாத பழமை ஒன்றிருந்திருக்கக் கூடும்; சைவம் காலத்தாற் பிற்பட்டது _ அது திராவிடர்களின் சமயமல்ல; கருமை அடிமைகளின் நிறமல்ல, வெறியாடுதலே திராவிட சமயம் என்னும் சிந்தனைகளை முன்வைக்கும், நடைமுறைவாழ்வில் சாணார்களின் சமூக முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த கால்டு வெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தின் பின்னி ணைப்புகள் நீக்கப்பட்டதற்கான அல்லது வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டதற்கான சூழலை இங்கு இனங்காணமுடிகிறது. திராவிட மொழிகள் ஒரு மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை. அம்மொழிகளைப் பேசும் மக்கள் ஓரினத்தவர் என்னும் கால்டுவெல்லின் இரு கருதுகோள்களில் இரண்டாவதைக் காலத்தின் பார்வையிலிருந்து அழிக்க சுந்தரம்பிள்ளையின் வாரிசுகளால் முடிந்துள்ளது. தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த வரையில் கால்டுவெல்லைப்போல் தூய அழகியல் பார்வை கொண்டவர்கள் யாராக இருந்தாலும் கால்டுவெல்லின் முடிவிற்கே வரமுடியும். கால்டுவெல் மறுக்கப்பட்டிருக்கலாம்; மறைக்கப்பட்டிருக்கக் கூடாது.

தமிழ்ச்சூழலில் கால்டுவெல் எதிரிடையாக எதிர்கொள்ளப்பட்டமைக்கு அவர் ஆளுமையும் ஒருவகையில் காரணமாக அமைந்தது. ஜி.யு.போப்பும் கால்டுவெல்லைப்போல் ஒரு சமயப்பணியாளர்தான். திருக்குறளையும் நாலடியாரையும் மொழிபெயர்த்த போப் திருவாசகத்தைக் கற்று உருகினார். சைவ சித்தாந்தத்தைத் திராவிட கலாச்சாரத்தின் மலர் என்றார். சைவர்கள் அவரை முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். போப் தன் கல்லறையில் தமிழ் மாணவன் என அடையாளப்படுத்தச் சொன்னதாகச் சொல்லி உள்ளம் நெகிழ்ந்தனர். நல்ல மாணவனாக சைவர்களிடம் பாடம் கேட்ட போப் தமிழ் இலக்கியப் படைப்புகள் குறித்தான மதிப்பீடுகளை முன்வைக்க வுமில்லை. போப்பின் நூல்கள் மீண்டும் மீண்டும் சைவர்களால் பதிப்பிக்கப்பட்டன.

கால்டுவெல்லோ தமிழ் இலக்கிய வரலாற்றின் சட்டகத்தை உருவாக்குமளவிற்குத் திறன் கொண்டிருந்தார். 15 வருட தமிழ்க் கல்வியில் பெரும்பான்மையான தமிழ் இலக்கியப் படைப்புகள் குறித்த தன்னுடையதான மதிப்பீட்டினை முன்வைக்கவும் அவரால் முடிந்துள்ளது. அவர் முன்வைத்த மதிப்பீடுகள்தான் சைவர்களை அவரை வெறுக்கும்படித் தூண்டியது.

கால்டுவெல்லைக் குறித்து பொருட்படுத்தும் படியான கட்டுரைகள் மூன்றே வெளியாகி உள்ளன. கரந்தை தமிழ்ச்சங்க இதழான தமிழ்ப்பொழிலில் வெளியான நீ.கந்தசாமிப் பிள்ளையின் கட்டுரை, திராவிட மொழியியல் கழகத்தின் IJDL இதழில் வெளியான பெயர் அறியப்படாத ஆசிரியரின் கட்டுரை, ரா.பி. சேதுப்பிள்ளையின் கால்டுவெல் ஐயர் சரிதம் என்னும் மூன்றுமே அவை. இக்கட்டுரைகள் அனைத்தும் கால்டுவெல்லின் நினைவுக் குறிப்புகளையே சார்ந்துள்ளன. இருப்பினும் பிழையான தகவல்களை முன்வைத்தும் உள்ளன. எடுத்துக்காட்டாக IJDL இதழ்க்கட்டுரை சார்லஸ் மெட் ஐயரின் மகளின் எலிசாவைக் கால்டுவெல் மணந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறது. நினைவுக்குறிப்பில் சார்லஸ் மால்ட் ஐயரின் மகளை மணந்து கொண்டதாகக் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். இதில் கால்டுவெல்லை மறுக்க முடியாது. எனவே, அவர் ஆளுமையை அறிந்துகொள்ள நினைவுக்குறிப்புகளைத்தான் வாசிப்பிற்குள்ளாக்க வேண்டும்.

நினைவுக்குறிப்பில் கால்டுவெல் தன்னை ஓர் இலக்கிய வாசகனாகவே முதன்மைபடுத்துகின்றார். பல்கலைக்கழகத்தில் சேரும் முன்பே ‘ஆங்கில இலக்கியத்தை விமர்சிக்கும் தகுதி’ தனக்கிருந்ததாக நினைவு கூறுகின்றார். இக்காலத்திலேயே ஸ்காட்ச் மீ பொருண்மை இலக்கிய வடிவங்களையும், ஆங்கில இலக்கியத்தையும் வாசித்திருந்ததாகச் சுட்டுகிறார். வாசிப்பின் அவசியத்தையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. “வாசிப்புப் பழக்கம் இல்லாமல் மாணவன் உயர்மதிப்பெண்களைப் பெற்று விட முடியும்; ஆனால் எதனையும் விரிவாக அறியாது தன் பாடத்திட்டத்தில் மட்டும் திருப்தி கொண்டுவிடுவான்.’’33 கால்டுவெல் தொடர்ந்து மாணவனாகவே திகழ்ந்தார். வாசிப்புப் பழக்கம் கொண்ட மாணவனாக, சமயப் பணியாளர்கள் தங்கள் பணியின் பொருட்டு தமிழைக் கற்கும் படியானது. ஆனால் கால்டுவெல் இதில் திருப்தி கொள்ளவில்லை. இலக்கியத்தின் மீதான உள்ளார்ந்த ஆர்வம் 15 வருடங்களில் தமிழ் இலக்கியப் பரப்பினை நீந்திக் கடக்கும்படி அவரைத் தூண்டியுள்ளது. அவருக்குள்ளிருந்த விமர்சகன் மதிப்பீடுகளைத் தொடர்ந்து முன்வைக்கும்படி அவரைத் தூண்டியுள்ளான். அக்காலச் சூழலில் இத்தகைய விமர்சன மதிப்பீடு தமிழிற்கு அந்நியமானது. ஒரு வகையில் கால்டுவெல்லே தமிழின் முதல் விமர்சகன்.

சமயப் பணியினைத் தேர்ந்து கொள்வதின் முன் சிற்பக்கலையும் பயின்றார். தமிழ் மண்ணின் மிகப்பெரும் கோவில்களைச் சென்று கண்டுள்ளார். தஞ்சை பெரிய கோவிலின் அழகை அவரால் அனுபவிக்க முடிந்துள்ளது. ஸ்ரீரங்கம் விரிந்த பரப்பில் அமைந் துள்ளது; ஆனால் மிகச்சிறப்பான கோவிலல்ல அது. இங்கும் கலை விமர்சகனின் மனமே அவரை ஆட்டுவித்துள்ளது.

சமயப் பணியாளர்கள் சென்னையில் தமிழ்க்கல்வி பெறுவ தோடு சமயப்பணியிலும் பயிற்சி பெற்றாக வேண்டும். அவர்கைளுக்கு முன்னுள்ள இரு வழிகளில் ஒன்றைத் தேர்ந்து கொண்டாக வேண்டும். ஆங்கிலக் கல்வியைக் கற்பிப்பதன் மூலம் உயர்சாதியினர் மத்தியில் சமயப்பணியாற்றலாம். பெரும் பான்மையோர் தேர்ந்து கொண்ட வழி இது. கால்டுவெல்லோ படிப்பறிவில்லாத வீட்டு வேலையாட்கள், குறிப்பாக பறையர் கள் மத்தியில் பணியாற்ற முடிவு செய்தார். வீட்டு வேலையாட் கள் மத்தியிலான ஊழியம் எளிமையானதாக அன்று கருதப் பட்டது. ஆனால், கால்டுவெல் இதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பறையர்கள் மீதான இந்த ஈடுபாட்டினைத் தான் ஒப்பிலக்கணத்தின் பின்னிணைப்புகள் உணர்த்துகின்றன. பின்னாளில் அன்று தாழ்ந்த நிலையிலிருந்த சாணார்கள் மத்தியில் ஊழியம் செய்ய விரும்பினார். அவர்கள் எளிமையும் கபடமற்ற தன்மையும் அவரைக் கவர்ந்துகொண்டன. அவர்கைளுக்குக் கற்பிக்க முடியும் என்ற நம்பிக்கை முதல்சந்திப்பிலேயே அவருள் தோற்றம் கொண்டது.

அவருடைய பணிக்களத்தின் அருகில் போப் கல்லூரி ஒன்றைத் தோற்றுவிக்க முயன்ற போது, கால்டுவெல் கூறினார். “காலத்தின் தேவை உயர்தர ஆரம்பப் பள்ளிக் கூடங்களே _ பல்கலைக்கழகமல்ல.’’34 கால்டுவெல்லின் இப்புரிதல் குறிப்பிடத் தக்கது. பல்கலைக்கழகம் ஏற்கெனவே கல்வி அறிவு பெற்றிருந்த வெள்ளாளர்களுக்கே உதவும். போப்பின் நோக்கமும் அதுவே. கால்டுவெல்லுக்கோ அதுவரை மூளையைப் பயன்படுத்த அனு மதிக்கப்படாத எளிய மக்களிடம் அறிவைக் கொண்டு சேர்ப்பதே நோக்கம். இதற்குத் தேவை ஆரம்பப் பள்ளிக்கூடங்களே. காலம் கால்டுவெல்லின் கணிப்பே உண்மை என்றது. நினைவுக் குறிப்புகள் கால்டுவெல் தமிழ்மண்ணில் நிகழ்த்திய பயணங்களைக் குறித்து விரிவான தகவல்களை முன்வைத்துள்ளது.

சகோதரிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கடப்பா காட்டுப்பகுதியில் தான் பயணம் செய்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்பயணத்தைக் குறித்த மேலதிக விவரங் களை அவர் முன் வைக்கவில்லை. ஆனால், தன் பணிக்களத்திற்குச் செல்லுமுன் கால்நைடையாகத் தமிழ் மண்ணில் வலம் வந்ததைக் குறித்து விரிவாகவே எழுதியுள்ளார். இப்பயணத்தின் நோக்கம் சிந்தனைக்குரியது. அவ்வப்போது வண்டிகளைப் பயன்படுத்திக் கொண்டிருந் தாலும், மிகப்பெரும்பான்மையான தூரத்தைக் கால்நடையாகவே பயணம் செய்து கடந்துள்ளார்.

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வழியாகத் தரங்கம்பாடியை நோக்கி கடற்கரை வழியாக நடந்தார். தரங்கம்பாடி சீர்திருத்த கிறிஸ்தவம் தமிழ்மண்ணை முதலில் வந்தடைந்த பகுதி. அப்போதும் அங்கு ‘லுத்தரன் மிஷன்’ இயங்கிக் கொண்டிருந்தது. தரங்கம்பாடியிலிருந்து கால்நடையாகத் தஞ்சையை வந்தடைந் தார். சோழநாட்டு பெருங்கோவில்கள் அவரைக் கவர்ந்துள்ளன. தஞ்சை பெரியகோவிலின் அழகை அனுபவித்ததோடு, விரிவாகக் குறிப்பிடவும் செய்துள்ளார். தஞ்சை அரசர் தர்பாரிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. எல்லாவைற்றையும்விட மேலாக வேதநாயகம் சாஸ்திரியார் என்ற தஞ்சை கவிஞனைச் சந்தித்ததைத்தான் முக்கியமான நிகழ்வாகக் கருதுகிறார். ஐரோப்பிய சமயப் பணியாளர்கள் வேதநாயகம் சாஸ்திரியாரைக் குறித்து உயர்ந்த எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. கவிஞனின் தனிப்பட்ட குணம் அவர்களை வெறுக்கச் செய்திருந்தது. ஆனால் கால்டுவெல் குறிப்பிடுகிறார் “அவர் தனிப்பட்ட குணங்கள் அவரோடு இறந்துவிடும். ஆனால் அவர் இலக்கியப் படைப்புகள் காலத்தை வென்றுநிற்கும்.’’35 கால்டுவெல்லின் ஆளுமையை அடையாளப்படுத்தும் பகுதி. தன் பணிக்களத்தில் விழாக்காலங்களில் மக்கள் வேதநாயகம் சாஸ்திரியார் பாடல்கைளை விரும்பிப் பாடுவதையும் பதிவு செய்துள்ளார். கால்டுவெல் படைப்புமனம் கொண்டவர். அவருடைய சமயப்பணி இப்பைடைப்பு மனதின் இயக்கத்தில் குறுக்கீடுகளை நிகழ்த்தவில்லை.

கால்நடை பயணம் திருச்சி, ஸ்ரீரங்கம் வழியாகக் கோவை வரை நீண்டு சென்றுள்ளது. தஞ்சை பெரிய கோவிலைப்போல் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில் அவர் மனதைக் கவரவில்லை. பாலங்கள் இல்லாத நிலையில் கூடைப்படகில் ஆறுகளைக் கடந்துள்ளார். அதுவும் இல்லாத நிலையில் மனிதர்கள் தோள் மீதிருந்து ஆறுகளைக் கடந்துள்ளார். திருச்சியிலிருந்து கோவைக்குச் சென்ற வழித்தடம் குறித்த குறிப்புகள் நினைவுக் குறிப்பில் இல்லை. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டியை வந்தடைந்தார். ஊட்டியில் சென்னை பிஷப்பிடமிருந்து சமயப் பணியாளராக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டார். ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் வரை குதிரை பயன் படுத்தியுள்ளார். குதிரை கீழே விழுந்து கால் ஊனமுற்றதால் மீண்டும் நடை பயணத்தை மேற்கொண்டார். ஆனால், குதிரையின் சேணத்தைக் கடைசிவரை சுமந்து திரிந்தார்.

கால்டுவெல்லின் வழிநடை அனுபவங்கள் வினோதமானவை. ஆங்காங்கு அவரைப்போன்ற சமயப்பணியாளர்களுடன் தங்கி இளைப்பாறிக்கொண்டார். கால்டுவெல்லின் எளிய தோற்றத்தைக் கண்ட தமிழ்மக்கள் ஓர் ஐரோப்பியனின் ஏழ்மை நிலைக்காக வருத்தமுற்றனர். சத்திரங்களில் அவர் தங்க அனுமதிக்கப் படவில்லை. சத்திரங்கள் உயர்சாதியினருக்கானவை. பார்ப்பனர் களுக்கானவை. நோயுள்ள ஏழை ஐரோப்பியர், பறையர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட இடங்களில்தான் தங்கியாக வேண்டும். சுத்தமும், மழை சாரலிலிருந்து பாதுகாப்பும் இல்லாத இடங்கள் அவை. கால்டுவெல் பூட்டிக்கிடந்த ஐரோப்பிய அதிகாரி வீட்டின் வெளித்திண்ணையில் தங்கிக் கொண்டார். தாழ்த்தப்படுதலை அனுபவமாக உள்வாங்கிக் கொள்ள அவரால் முடிந்துள்ளது. இதன் தாக்கத்தை ஒப்பிலக்கணத்தின் பின்னிணைப்பில் இனங்காண முடிகிறது.

மதுரையிலிருந்து திருநெல்வேலி நோக்கிய பயணத்தின் போது பயணம் துவங்கிய நாள்முதல் அதுவரையிலான ஆசையைத் தீர்த்துக் கொண்டார். தமிழர்களைப் போல் காலணி அற்ற பாதங்களால் நடக்க முயன்று, கால்கள் புண்பட்டு அவ்வப்போது வருத்தமுற்றார். கோவில் பட்டி கரிசல்மண் மழை ஈரத்தில் காலணியின்றி நடக்க அவரை அனுமதித்தது. வழிநடைப் பயணத்தில் சூரியக்கதிரின் வெப்பத் தாக்குதலுக்கு அவர் உள்ளாகவில்லை. ஆனால் மூன்றாவது முறை ஓய்விற்காகத் தன் குளிர் நாட்டிற்குச் சென்றிருந்தபோது, சூரியக்கதிரின் வெப்பத் தாக்குதலுக்கு உள்ளாகி மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டார்.

சமயப் பணியாளர்கள் ஓய்விற்குப் பின் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் இணைப்பேராசிரியர்களாக அமைதியான வாழ்வை மேற்கொண்டனர். கால்டுவெல் செம் மணல் பூமியில் இறப்பதையே விரும்பினார். இடையன்குடி அவருக்குள் நிறைந்திருந்தது. தமிழ்மண்ணின் வாழ்வு எழுத்து கள் மூலமாக அன்றி நேரடியாக அவருக்குள் கசிந்து ஊறிவிட் டிருந்தது. கால்நடைப் பயணம் அவரைத் தமிழனாக்கியது. கால்டுவெல் ஸ்காட்லாந்து பெற்றோருக்கு அயர்லாந்தில் 1814 மே 7ஆம் நாள் பிறந்தார். ஸ்காட்லாந்தும் அயர்லாந்தும் விடுதலைக்காகப் போராடி குருதியில் நனைந்த பூமிகள். சமூக நீதிக்காகப் போராடிய சார்லஸ் மால்ட் என்ற போராளியின் மகளான எலிஸா என்ற போராளியை மணந்து கொண்டார். 53 வருடங்கள் ஏழைச் சாணார் மக்களுக்காக வாழ்ந்தார். நவீனமயமாதலில் அவர்களைப் பங்குபெறச் செய்தார். 1891 ஆகஸ்ட் 28ஆவது நாள் கொடைக்கானலில் வாழ்வின் இறுதியை முத்தமிட்டார். அவர் விரும்பியபடி அவர் உடல் இடையன்குடி செம்மண்ணிற்குத் தரப்பட்டது.

எல்லா ஐரோப்பியர்களையும் வெள்ளைக்காரர்களாக இனங்காண்பது போல், சமயப்பணியாளர்களையும் காலனி ஆதிக்கத்தைத் தோற்றுவிக்க வந்த கூலிகளாக இனங்காண முடியும். சமயப்பணியை காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்த பயன்படுத்தப்பட்ட உ.த்தியாகவும் கொள்ளலாம். பார்ப்பனர், உயர்சாதி வெள்ளாளர் கண்ணோட்டத்தில் இது முற்றிலும் சரியானதே. ஆனால், சமயப் பணியாளர்கள் முயற்சியால் கல்வியைறிவை, தூய்மையான குடிநீரை, காற்றோட்டமான வசிப்பிடத்தை, சுயமரியாதை கொண்ட வாழ்வைத் தேடிக் கொண்ட மக்களை இம்முடிவை ஏற்கும்படி வற்புறுத்துவது மிகக்கீழான வன்முறை.

கால்டுவெல் ஒரு சிக்கல்தான். காலம் எதிர்கொண்டாக வேண்டிய சிக்கல். இளம் ஆய்வாளர்களுக்குக் கால்டுவெல் வளமான ஆய்வுக்களம். அவர் எழுத்துகள் இன்னமும் திரட்டப் பட வேண்டும். திரட்டப்படும் போது புதிய வெளிச்சத்தில் கால்டுவெல்லைக் காண வேண்டிய கட்டாயம் எழும்.

அடிக்குறிப்புகள்

1. CALDWELL.R., The Tinneveli Shannars: A Sketch, The Christian Knowledge Society, Chennai. 1849.
2. WYATT.J.L.(Ed.), Reminiscences of Bishop Caldwell,Addison & Co., Chennai. 1894.
3. மேலது, ப. 85.
4. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர் ஒருவரிடம் முதல் பதிப்பு உள்ளதாக அறிய முடிகிறது.
5. A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN OR SOUTH INDIAN LAN- GUAGES, Trubner & co, London, 1875.
6. சுந்தரமூர்த்தி. இ., அணிந்துரை: சங்க இலக்கியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2004.
7. “In a letter to the Athenaeum, he adduces, in confirmation of his theory, the high authority ofDr. Popername; but pending the publication by Dr. Pope of the Materials Mr. Gover says he has prepared, we must be forgiven for dealing exclusively at present with what Mr.Gover himself has written.”
- Remarks on the Philological Partion of DravidianLanguages or South Indian Languages, (1875), P.523.
8. 1975 கால அளவில் என்னுடைய பேராசிரியரான ஜேசுதாசன் அவர்கள் வழிகாட்டுதலில் தான் நானும் இரண்டாவது பதிப்பை வாசிக்க நேர்ந்தது. பேராசிரியர் வேறு பேராசிரியர்களுடன் இது குறித்து நிகழ்த்திய உரையாடல்களையும் நான் கேட்டிருக்கிறேன்.
9. Wyatt J.L. and Ramakrishnapillai T. Editors Preface to the Third Edision,A Comparative Grammar of the Dravidian or South Indian Languages, Trubner & Co., London, 1913,P.V.
10. மேலது, ப. 6.
11. தமிழ் இலக்கியத்தின் தொன்மை, வையாபுரிப்பிள்ளை, சக்தி, மே 1945, பக்.60_65.
12. Wyatt (E.d) Reminiscences of Bishop Caldwell,Addison & Co.,Chennai 1894, P:
13. சேதுப்பிள்ளை ரா.பி. கால்டுவெல் ஐயர் சரிதம், நான்காம் பதிப்பு, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2004.
14. கால்டுவெல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், இரண்டாம் பதிப்பு, 1875, லண்டன், ப. 534.
15. அலாய்சியஸ். ஞான, அயோத்திதாசர் சிந்தனைகள்-மிமிமி, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுமையம், பாளையங்கோட்டை, 2003, ப. 8.
16. Caldwell.R,A Political and General History of the District of Tinnelvelly from the earliest period to its carrion to the English government in A.D.1801 , Cheenai, 1881.
17. மேலது
18. Caldweel, Rcords of the early History of the Tinnevelly Mission, Higgin botham and co, Chennai, 1881.
19. Wyatt J.l. (Ed.) Reminiscences of Bishop Caldwell, Addison & Co., Cheenai, 1894.
20. கால்டுவெல், பரதகண்ட புராதனம், SPKG சென்னை 1893.
21. அ.ம. சாமி, 19ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்.
22. சென்னைப் பல்கலைக்கழகம் பதிப்பித்த திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பதிப்பில் ஆட்சிக்குழு தீர்மானம் தரப்பட்டுள்ளது.
23. Dravidan Encyclopaldia, The International School of Dravidian Linguistics, Thiruvannanthapuram, 1997, P.99.
24. அகஸ்தியலிங்கம் பிள்ளை, திராவிட மொழிகள், மணிவாசகர் பதிப்பகம்.
25. Savararoyan.M., The Bharata Land or Dravidian India, The Tamilian Aniqucry, Ta.A.Society, Cheenai, 1907.
26. Sundaram Pillai. Some Mile Stones in the History of Tamil Literature or The Age of Janansambandha, The Tamilian Antiquiry Vol.I. 27. Sundaram Pillai, The ten Tamil Idyler, Tamilian Antiquary Vol I, T.A. Society Chennai, 1907.
28. பெருமாள் அ.கா. தென்குமரியின் கதை, தமிழினி, சென்னை.
29. Nalla swamy, Introduction , A Critical Review of the Story of Ramayana and An account of South Indian Ester, T.a. Society,
Cheenai, 1908,P-2.
30. சுப்பிரமணிய முதலியார் வெ.ப., இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய ஜாதிவரலாறும், தமிழ் தொன்மை ஆராய்ச்சிக்கழகம், சென்னை 1908, ப. 39.
31. மேலது, ப. 33.
32. மேலது.
33. Wyatt (Ed.) Remini Scences of Caldwell,Addission & Co, Chennai 1894,P.7.
34. மேலது, ப. 34
35. மேலது.


இடைவிடாது உள்ளத்தானும், உடலாலும், உழைக்கும் கால்டுவெலுக்கு, கடுங்கோடையில், இடையன்குடியின் வெம்மை தாங்க முடியாதாயிற்று; இவருடைய உள்ளமோ, உழைப்பின்றி, வெயிலுக்கு அஞ்சி அயர்ந்திருக்க இடந்தரவில்லை. அருகே, உவரிக்கரையில், தண்ணிய இடமாக அமைந்திருந்த இளஞ்சுனை என்னும் இடத்தில், தன் மாணவர்களுடன் சென்று தங்கி காலத்தை வீண் போக்காது வேலைசெய்துவந்தார். கோடையைக் கழிக்கப் பல இடங்களைக் கருதினார்; இவர் பார்த்த இடங்களிற் சில நச்சுக் காற்றும் நீரும் உடையனவாகத் தோன்றினமையில், கொடைக்கானலைக் குடியிருப்பாகக் கொள்ளும் காலம்வரையில் வெம்மையினின்று விடுதி பெறவியவில்லை. சாரற் காலங்களில் குற்றாலம் இவரைக் குளிர்வித்தது.

மொழி நூல் முதல்வர்களுள் ஒருவரும், மற்றொரு முதல்வராகிய, ஜர்மானியப் பேரறிஞர் கிரிம் (Jacob Grimm 1785 - 1863) என்பவருடன் கூடிப் பல ஆராய்ச்சிகள் செய்தவரும், பழஞ்சுவடிகளைத் தேடி 1819ஆம் ஆண்டிலிருந்து 1822ஆம் ஆண்டு வரை, பம்பாய் முதல் கொழும்புவரை சுற்றிக்கொண்டிருந்தவருமான இராஸ்க் (Rasmus Kristian Rask 1787 - 1832) என்னும் மொழிநூல் முதல்வர். ‘திராவிட மொழிகள், இங்தேயீரோப்பிய மொழிகளோடு சேர்க்கப்படக் கூடியவனல்ல, சிதேய மொழிக் கூட்டத்தில், அதிலும் பின்னிஸ் அல்லது அக்ரீயன் (Finnish or Ugrian) தொகுப்புக்கு நெருக்கமாகச் சேர்க்கப் பெற வேண்டியன’ எனக் குறிப்பிட்டிருந்தார். இவர் தேடித் தொகுத்த சுவடிகளெல்லாம் கோப்பன் ஹேகன் நூல் நிலையங்களிலிருக்கின்றன.

நீ. கந்தசாமிப் பிள்ளை
தமிழ்ப்பொழில், ஆகஸ்ட் 1958


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com