Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatruveli
Maatruveli logo
நவம்பர் 2008
கால்டுவெல்லின் திராவிடம் - ஒரு வாசிப்பு
வ. கீதா


என்னுடைய இந்தக் கட்டுரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமே. இது மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில், இதுவரையில் வெளிவந்துள்ள கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கைணத்தின் பதிப்புகளில் நீக்கப்பட்டு, இந்த திருத்தி யமைக்கப்பட்ட பதிப்பில் இடம்பெற்றுள்ள பகுதிகளைப் பற்றிச் சில கருத்துகளைக் கூறவிருக்கிறேன். அந்தப் பகுதிகளை நாம் எப்படி புரிந்து கொள்ளலாம், குறிப்பாக, அப் பகுதிகள் விடப்பைட்டதற்கான காரணங்களை நாம் எவ்வாறு அறியலாம் என்பதைப் பற்றிய எனது உரத்த சிந்தனையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டாம் பகுதியில், புதிய பதிப்பில் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளை வைத்துக்கொண்டு கால்டு வெல்லின் சாதி, சமயம், இனம் பற்றிய பார்வையை மதிப்பிடுவ தன் தேவையை நான் வாதிட விரும்புகிறேன். மூன்றாவதாக, இன்றைய சமூகப்பண்பாட்டுச் சூழலில், கால்டுவெல்லின் கருத்துப் பொருத்தப்பாட்டை ஆராய்வேன்.

நீக்கப்பட்ட பகுதிகள் - ஒரு ஆய்வு

இதற்கு முன்னால் வெளிவந்துள்ள பல்கலைக்கழகப் பதிப்பு களில் விடப்பட்ட செய்திகளைத் தொகுத்துக் கூறுவது பொருத் தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. புதிய பதிப்பையும் பழைய பதிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் நமக்கு உடனடியாகத் தெரிய வருவது இதுதான். பழைய பதிப்பில், ‘திராவிடர்கள்’ என்று அடையாளப்படுத்தப்பட்டவைர்களுக்கும் ‘சூத்திரர்கள்’ என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கும் உள்ள உறவு, அச்சொற்கள் குறிக்கும் பொருளில் உள்ள வேறுபாடுகள் குறித்து கால்டுவெல் மொழிந்துள்ள கருத்துகளில் கணிசமான பகுதி நீக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. எதை எதையெல்லாம் பதிப்பாளர்கள் நீக்கியுள்ளனர் என்பதை ஆராய்ந்து பார்க்கையில் கீழ்க்கண்ட விஷயங்கள் தெளிவாகின்றன.

திராவிடர்கள் சூத்திரர்களா இல்லையா என்ற கேள்வியை எழுப்பும் கால்டுவெல், தனது கேள்விக்கு உரம் சேர்க்கும் வகையில் மேலும் சில கேள்விகளை எழுப்புகிறார். சூத்திரர்கள் என்போர் யார்? அவர்கள் ஆரியர்களின் வருகைக்கு முன்னாலேயே தென்னிந்தியப் பகுதிகளில் வாழ்ந்தவர்களா? ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டு அவர்களால் ஆளப்பட்டவர்களா? அல்லது ஆரிய சமுதாயத்தின் ஒரு பிரிவினராக இருந்து, அவர்களில் வல்லமை பொருந்தியவர்களாக விளங்கியவர்களால் அடிமைப்படுத்தப்பட்ட ஒரு வர்க்கத்தினரா?

இக் கேள்விகளை எழுப்பி தொடர்ந்து சில பதில்களையும் வழங்குகிறார். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை, சூத்திரர் என்ற சொல் இழிச் சொல்லாகப் பாவிக்கப்படவில்லை என்று குறிப்பிடுகிறார். இன்னும் சொல்லப் போனால், தென்னிந்தியப் பகுதியைச் சேர்ந்த மன்னர்களைப் பற்றிப் பேசும் போது, அதாவது, சேர சோழ பாண்டியர்களைப் பற்றிப் பேசும்போது வடஇந்திய நூல்கள் அவர்களைச் சத்திரியர்கள் என்றே குறிப்பிடுகின்றன. எனவே சூத்திரர் என்ற சொல் இழிச்சொல்லா இல்லையா என்பது பிரச்சனையல்ல. அது எதைக் குறிக்கிறது என்பதை ஆராய்வது முக்கியம். ஆதாரங்களைக் கொண்டு பார்க்கையில், ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் உள்ளவர்கள், மேலாண்மை செலுத்தக்கூடிய நிலையில் உள்ளவர்கள் அவர்களுடைய ஆணவம், அதிகாரம் காரணமாக இந்தச் சொல்லைக் கையாண் டிருப்பது தெளிவு. தாம் அடக்கி ஆள நினைத்தவர்களை, தமக்குக் கீழ்ப்பட்டவர்களாகக் கருதியவர்களைச் சிறுமைப் படுத்தவே இதை அவர்கள் செய்தனர். எனவே சூத்திரர் என்ற சொல், அதிகாரத்தின்பாற்பட்டுப் பயன்படுத்தப்பட்ட சொல்லே அல்லாமல், இழிவைக் குறிக்கும் சொல் அல்ல.

இந்த விளக்கத்தைத் தொடர்ந்து அவர் கூறும் செய்திகள் தான் பழைய பதிப்புகளில் நீக்கப்பட்டுள்ளன. அவையாவன - தென்னிந்தியாவில் சூத்திரர்கள் என்று சொல்லப்படக்கூடியவர் கள், குறிப்பாக உயர் சாதிநிலையில் இருக்கக்கூடியவர்கள், பொதுவாக ‘திராவிடர்கள்’ என்று அடையாளப் படுத்தப்படு பவர்கள், திராவிட அடையாளத்தைத் தங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு அடையாளமாக வரித்துக்கொண்டு, அந்த அடையாளத்தை திராவிடர்கள் அல்லாதவர்கள் என அவர்கள் கருதிய ‘ஈன’ சாதியினருக்கு மறுத்தனர். ஆரியர்கள் அவர்களைச் சூத்திரர் என்று குறிப்பிட்டது போல, இவர்கள், தமக்குக் கீழ்நிலையிலுள்ளவர்களை இழிவானவராகக் கருதி இதைச் செய்தனர். திராவிடர், திராவிடம் ஆகிய சொற்களுக்குரிய பொருள் குறித்து கால்டுவெல்லின் இந்த மதிப்பீடு தணிக்கை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து விடப்பட்டுள்ள பகுதியாவது Antiquity of Tamil என்ற தலைப்பிட்ட ஒரு பெரும் பகுதி. திராவிட இலக்கியங்களின், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழி இலக்கியங்களின் தொன்மை, வரலாறு, பழம்பெருமை முதலியவற்றைப் பற்றிப் பேசும் பகுதியாக இது அமைந்துள்ளது. இது முழுமையாகவே நீக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தமிழ் மொழியிலக்கியம் பற்றிக் கால்டுவெல் முன்வைத்த சர்ச்சைக் குரிய கருத்துகளும் அடங்கும்.
அக்கருத்துகளாவன

- தமிழுக்கு ஓசை நயம் உண்டு. தமிழ்க் கவிதைகள் அற்புத மானவை. தமிழ் இலக்கியங்களில் துலங்கும் அழகியல் ருசிகர மானது. என்றாலும், தமிழ் இலக்கிய வெளிப்பாடுகள் மனத்தை மயக்கவல்லவையாகவே உள்ளன. உண்மையை அறுதியிட்டுக் கூறக்கூடிய ஆற்றலோ, வலிமையோ, திண்மையோ தமிழ்மொழிக்கு இல்லை என்றுகூடச் சொல்லலாம்.

- தமிழ் மொழி, ஏன் எல்லா திராவிட மொழிகளுமே பெண்மைத்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. இவற்றை ரசிக்கலாம், படிக்கலாம்; ஆனால் இவை வீரியம் குறைந்த மொழிகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

- ஆனால் இந்நிலைமை மாறுவதற்கான சாத்தியப்பாடுகள் இன்று உருவாகியுள்ளன. மேற்கத்தியக் கல்வியின் விரிவாக்கம், கிறிஸ்தவத்தின் பரவலாக்கம் ஆகியவற்றின் விளைவாகச் சமுதாயத்தளத்தில் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பார்ப்பனரல்லாத வகுப்பர் பலர் ஆங்கிலக் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் இலக்கியம் படைக்க வரும் போது, தாம் பெற்றுள்ள புதிய கல்வி, அக்கல்வியும் கிறிஸ்தவ சமயமும் தந்துள்ள அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தமிழ் இலக்கியம் இதுநாள் வரைக்கும் கண்டிராத உண்மைத்தன்மையுடன், வலிமையுடன், வீரியத்துடன் இலக்கியம் படைக்க வருவார்கள். தமிழ் மொழியில் உறைந்துகிடக்கும் பலங்களை அவர்களின் எழுத்து உலகுக்கு அறிவிக்கும்.
-
கோவர் என்பவரோடு கால்டுவெல் நடத்திய விவாதமும் பழைய பதிப்புகளில் விடப்பட்டுள்ளது. திராவிட மொழி வகை என்று எதுவும் கிடையாது. அத்திணைக்குள் அடக்கப்படும் மொழிகளெல்லாம் கூட ஏதோ ஒரு வகையில் இந்தோ-ஆரிய மொழிக் குழுமத்தைச் சேர்ந்தவைதான் என்பது கோவரின் கருத் தாக இருந்தது. கோவரை மறுத்து கால்டுவெல் முன்வைத்தக் கருத்துகளைப் பழைய பதிப்புகளில் நீக்கியுள்ளனர்.

அடுத்து, நூலில் பிற்சேர்க்கைகளாக இணைக்கப்பட்ட- ‘பறையர்கள் திராவிடர்களா?’ ‘நீலகிரித் தோடர்கள் திராவிடர் களா?’ என்று தலைப்பிடப்பட்ட இரு கட்டுரைகளும் - நீக்கப் பட்டுள்ளன. பார்ப்பனர் அல்லாத மேல்சாதியினர் மட்டும்தான் திராவிடர்கள், பறையர்களை அவ்வாறு கருதமுடியாது என்ற கருத்து அன்று பரவலாகப் பேசப்பட்ட சூழலில் முதல் கட்டுரை எழுதப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம். ஆனால் இக்கருத்து யாரால், எக்காரணங்களை முன்னிட்டு வாதிடப்பட்டது என்பது குறித்து கால்டுவெல் எதையும் சொல்வதில்லை. அறிவு வட்டாரங்களில் வெகுவாகப் பேசப்பட்ட ஒரு கருத்தாகக் கொண்டு அதைப் பற்றி அவர் அதிகம் சொல்லாமல் இருந்திருக் கலாம். இக்கருத்துக்கு வலுவான ஆதாரங்கள் உள்ள போதிலும் அவற்றைப் போதுமான ஆதாரங்களாகக் கொள்ள முடியாது என்ற ரீதியில் அவர் வாதிடுகிறார். பழைய பதிப்புகளில் விடப் பட்ட வேறு பகுதிகளாவன - திராவிட மக்களின் உடலமைப்புப் பற்றிய ஒரு கட்டுரையும், ‘திராவிட மக்களின் சமயம்’ என்ற கட்டுரையும் பல்கலைக்கழகப் பதிப்பில் இல்லை.

பல்கலைக்கழகப் பதிப்பில் நீக்கப்பட்ட பகுதிகளைத் தொகுத்துப் பார்க்கையில், சில விஷயங்கள் தொழிற்படுகின்றன. ஒப்பிலக்கணத்தைப் பதிப்பித்தோர் ‘திராவிட’ அடையாளம் என்பதைக் குறிப்பிட்ட வகையில் விளக்க முற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் அதாவது 1900ங்களிலிருந்து 1930வரையிலான காலக்கட்டத்தில் அவர்கள் இதைச் செய்துள்ளனர். அவர்கள் அவ்வாறு செய்ததற் கானக் கருத்தியல் அல்லது அரசியல்ரீதியான காரணங்களை நம்மால் அடையாளங்காண முடியுமா? என்பதுதான் கேள்வி. நீக்கப்பட்டப் பகுதிகளைக் கொண்டு பார்க்கையில் ‘திராவிட’ அடையாளத்தைக் ‘களங்கப்படுத்து’வதாக அமைந்துள்ள வாதங்களை, கருத்துகளை அவர்கள் ஒதுக்கியுள்ளனர் என்று சொல்லலாம். (ஒப்பிலக்கணத்துக்குத் தொடர்பில்லாத விஷயங் களை மட்டுமே தாம் தவிர்த்துள்ளதாகப் பதிப்பாசிரியர்கள் கூறியுள்ள போதிலும் அவர்களது வாதங்களை நாம் வேறு கோணத்திலிருந்தும் அலசி ஆராய வேண்டியுள்ளது.)

திராவிடர்கள் சூத்திரர்களா? என்ற பிரச்சனைக்குரிய ஒரு கேள்வியைக் கால்டுவெல் எழுப்பினாலும், திராவிடர்கள் சத்திரியர்கள்தான், பழம்பெரும் சமுதாயம்தான் என்றே பதில் வழங்குகிறார். என்றாலும் இந்த வாதத்தையட்டி அவர் முன்வைக்கும் சில கருத்துகள், திராவிட அடையாளத்தைப் பத்திரப்படுத்தி வைக்க விரும்பியவர்களுக்கு உவப்பளித்திருக் காது என்றே தோன்றுகிறது. இதனால்தானோ என்னவோ, திராவிடப் பெருமை வாய்த்திருந்த ‘உயர்’ வகுப்பினர், அவர்கள் ‘ஈன’ சாதியினராகக் கருதியவர்களுக்கு இவ்வடையாளத்தை மறுத்தனர் என்ற கால்டுவெல்லின் கருத்தின் சாராம்சத்தை வாதிட விரும்பாமல், அதனைத் தணிக்கை செய்துள்ளனர். அது போலவே, திராவிட சமயம், பண்பாடு குறித்த செய்திகளையும் அவர்கள் தணிக்கை செய்துள்ளனர்.

குறிப்பாக, திராவிடப் பண்பாடு என்பது பொருண்மையுலகை சார்ந்ததே அல்லாமல், கருத்துலகைச் சார்ந்து இயங்கும் ஒன்றல்ல. குறிப்பிட்ட நெறிமை களை வகுக்கவோ, அறிவார்ந்த வகையில் சிந்திக்கவோ இயலாத பண்பாடு அது என்பன போன்ற கருத்துகள் பதிப்பாசிரியர்கள் பாவித்த திராவிட அடையாளத்தைச் சலனப்படுத்தியிருக்கக் கூடும். மேலும் ஆரிய மரபுகளை உள்வாங்கிக்கொண்டதாலேயே அறிவார்ந்த, கருத்துருவாக்க செயல்பாடுகளைத் திராவிடர்கள் மேற்கொண்டனர் என்ற கருத்தை அவர்கள் கண்டிப்பாக ஏற்றிருக்க மாட்டார்கள். இத்தனைக்கும் ஆரியம் மூலம் பெற்ற வரவுகளைக் காட்டிலும் அது புகுத்திய கெடுதிகள் தான் அதிகம் என்று கால்டுவெல் குறிப்பிடுகிறார். ஆனாலுங் கூட ஆரியம்-திராவிடம் குறித்தான இந்த சர்ச்சைக்கு முகங் கொடுக்கப் பதிப்பாசிரியர்கள் விரும்பவில்லை! தமிழ்மொழி குறித்துக் கால்டுவெல் கூறியுள்ளவற்றை, குறிப்பாக அம் மொழியைப் பெண்தன்மை வாய்ந்ததாக அவர் மதிப்பிட்டதை ஆராயவும், கால்டுவெல்லுக்குத் தக்க பதிலளிக்கவும் அவர்கள் முனைய வில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

திராவிடர்களின் உடல்கூறுகள் குறித்துக் கால்டுவெல் முன்வைக்கும் விளக்கங்கள், திராவிடச் சமயங்களை அவர் விவரிக்கும் விதம் ஆகியன, திராவிடப் பெருமையைச் சுற்றி கட்டியமைக்கப்பட்டிருந்த ஒளிவட்டத்தை மங்கச் செய்து விடுமோ என்ற அச்சமும் பதிப்பாசிரியர்களுக்கு இருந்திருக்கக் கூடும்.
அடுத்து பறையர் அடையாளம் தொடர்பாகக் கால்டுவெல் கூறும் கருத்துகள் நீக்கப்பட்டதற்கான காரணங்களை ஆராய் வோம். பறையர்கள் குறித்துக் கால்டுவெல்லின் கருத்துகளாவன:

- பறையர்களின் தற்கால அடிமைநிலையைக் கொண்டுப் பார்க்கையில், அதுவும் திராவிடர்களால் அவர்கள் அடிமைப் படுத்தப்படுவதை ஆராய்கையில், அவர்கள்தான் இம்மண்ணின் பூர்வகுடிகள், வேறு எங்கிருந்தோ வந்து குடியேறிய திராவிடர்கள் அவர்களை அடக்கியாள வந்தனர் என்று எண்ணத் தோன்றும்.

- மேலும் பறையர்களிடம் வழங்கும் கதைகள், அவர்களது கூட்டு நினைவில் எஞ்சியிருக்கும் மனப்பதிவுகள் ஆகியவற்றை வைத்துக்கொண்டுப் பார்த்தால், அவர்களுமே ஆண்ட பரம்பரை யினராக இருந்துள்ளனர் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டி யிருக்கும். இவ்வகையில் பறையர்கள் பூர்வகுடிகள் தாம் என்றும் எண்ணத் தோன்றும்.

- என்றாலும் இக்காரணங்களைக் கொண்டு மட்டும் பறையர் களின் பூர்வ அடையாளத்தைப் பற்றி ஒரு முடிந்த முடிவுக்கு நாம் வரமுடியும் என்று தோன்றவில்லை. காரணம், பறையர் களின் கூட்டுநினைவு சுட்டும் பழைய வாழ்க்கையானது அவர்கள் ஒரு காலத்தில் அனுபவித்த சுதந்திரத்தைக் குறிப்பதாகக் கொள் ளலாமே அல்லாமல், அவர்கள் தனி இனத்தவர் என்பதைக் கொள்ள முடியாது. ஆரியர்கள் மத்தியில் ஏற்பட்ட பிரிவினை கள் இனம் தொடர்பாக ஏற்படவில்லை, மாறாக, உரிமை, உழைப்பு முதலியனவையே அவற்றுக்கு ஆதாரமாக அமைந்து வருணப் பிரிவினைகளைச் சாத்தியப்படுத்தின. காலப்போக்கில், இவை இனப்பிரிவினைகளாகக் கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் ஆதியில் அவை அவ்வாறு இருக்கவில்லை என்பது திண்ணம். அது போலதான், பறையர்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட தும், பறையர்கள் திராவிடர்களில் ஒரு பகுதியனராக இருந்தவர் கள்தான். அவர்களுடைய உழைப்பு அன்று ஆள்வோருக்குத் தேவைப்பட்டது. அவ்வுழைப்பை அபகரித்து, அவர்களை அடிமைப்படுத்தி, ஒதுக்கியும் வைத்தனர்.
-
பறையர்களும் திராவிடர்கள்தான் என்ற கருத்தும், அவர்கள் திராவிடர்களின் ஒரு பகுதியினரால் ஒடுக்கப்பட்டனர் என்ற விளக்கமும் திராவிடப் பெருமையை நிலைநிறுத்த விரும்பியவர் களுக்குக் கசப்பான செய்திகளாக இருந்திருக்கக்கூடும். சாதிப் பெருமையும் இனப்பெருமையும் ஒன்றுக்கு மற்றொன்று துணை நின்று, பறையர்கள் பற்றிய குறிப்புகள் தணிக்கை செய்யப்பட காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதி, இனம், சமயம் பற்றி கால்டுவெல்

ஒப்பிலக்கணத்தின் நீக்கப்பட்ட பகுதிகள், நீக்கப்படாத பகுதிகள் என்று அனைத்தையும் இணைத்துப் பார்க்கையில், சாதி, இனம், சமயம் தொடர்பாகக் கால்டுவெல் முன்வைத்தக் கருத்துகளை ஒருங்கே பெறமுடிகிறது. கால்டுவெல் திராவிட நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மையை அங்கீகரிப் பவராகவே தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆரியப் பண்பாடு, சமுதாயம் ஆகியவற்றோடு திராவிடம் தொடர்பான வற்றை ஒப்பிடுகிறார். ஆரியச் சமுதாயத்தில் உள்ளது போல சூதும் வாதும் நிறைந்த பார்ப்பனர் வகுப்பு என்ற ஒன்று இங்கு ஆதியில் இல்லாததைப் பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்கிறார். திராவிடர்களின் சமயச் சடங்குகள் மாயம், மந்திரம் சார்ந் தவையாக உள்ளன என்றாலும், திராவிட மக்களைப் பொருத்த வரை அவர்கள் பொய் கூறுபவர்களாக இல்லாமல், நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக, விசுவாசமானவர்களாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

ஆரிய, திராவிட சமுதா யங்களில் சாதியமைப்பு நிலவுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் சாதியமைப்புக்கு அப்பாற்பட்டு வாழ நிர்பந்திக் கப்பட்ட சாதியினரை ஆரிய சமுதாயம் சாதி கெட்டவர்களாக கண்டது என்றும், அவர்களை இழிசனங்களாகவே அடை யாளப்படுத்தியது என்றும் கூறுகிறார். திராவிடச் சமுதாயத்தில் இவ்வாறு சாதியமைப்புக்கு வெளியே வாழும் சாதிகளை நாம் சாதி கெட்டவர்களாகக் கொள்ள வேண்டியதில்லை என்கிறார். மாறாக, இம்மக்கள், தனிப்பெரும் சாதிகளாக வாழ்ந்தவர்கள், அடிமைகளாக்கப்பட்டதனால் பழைய வாழ்க்கையை இழந்தனர், ஆரியநூல்கள் கூறுவது போல ‘பொருந்தா மண’ உறவுகளிலிருந்து பிறந்தவர்களாக இவர்களை நாம் கொள்ள வேண்டியதில்லை என்கிறார்.

பறையர்களின் வாழ்க்கை குறித்து ஏராளமான விவரங்களைத் திரட்டி வழங்குகிறார். அவர்கள்பால் அவருக்கு ஒரு பொதுவான இரக்கம், அனுதாபம் இருந்ததாகக் கொள்ளலாம். என்றாலும், சமத்துவம், சமநீதி என்பதன் அடிப்படையில் அல்லாமல், ஆன்மீகம் பாவிக்கும் சகோதரத்துவத்தின் அடிப்படையிலேயே அவர்களைப் பற்றிய அவரது சிந்தனை விரிந்தது. அவரது எழுத்துகள் காட்டும் மனநிலையைத்தான் நாம் இவ்வாறு குறிப்பிடுகிறோம். கிறிஸ்தவ சபையின் ஊழியராக அவர் பணிபுரிந்த பகுதிகளில், அவரது செயல்பாடுகளினூடாக வேறொரு கால்டுவெல்லை நம்மால் இனங்காண முடியும் என்றே தோன்றுகிறது. மக்களின் நலத்தில், சுயமரியாதையில் ஆழ்ந்த அக்கறையுடைய மனிதரை ஊழியப்பணி வெளிபடுத் தியது என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.

திராவிடம், சாதி பற்றிய கால்டுவெல்லின் சிந்தனையை அவரையும் அவரைப் போன்றோரையும் பாதித்த அறிவு மரபின் பின்னணியில் வைத்துப் புரிந்து கொள்வதென்பது அவசியமா கிறது. சாதியைப் பற்றி முதன் முதலில் விரிவாக எழுதிய ஐரோப்பியர்களில் முதன்மையானவர், முக்கியமானவர் அபே துபுவா தான். ஏசு சபையைச் சேர்ந்த இந்த பிரெஞ்சு நாட்டவர், ஏடுகளின் வாயிலாகவும் கீழைதேயங்கள் பற்றி ஐரோப்பியர்கள் ஏற்கனவே யூகித்து வைத்திருந்த பட்டறிவின் அடிப்படையிலும் தாம் இந்தியாவில் வாழ்ந்தபோது நேரில் கண்டவற்றைக் கொண்டும் சாதி பற்றிய தனது பார்வையைக் கட்டியமைத்திருந்தார். அவரது எழுத்துகள் மொழிபெயர்க்கப்பட்டு இங்கு ஆட்சி புரிந்த கிழக்கிந்திய கம்பெனியாரால் தமது ஆட்சிக்குப் பயன்படக்கூடிய கையேடாகப் பயன்படுத்தப்பட்டது.

அபே துபுவா தனது எழுத்துகளில் பார்ப்பனர்களின் மேலாண்மையையும் இந்து மதத்தை அவர்கள் தங்களது நலத்தை முன்னிட்டு செயல்படுத்தியதையும் கடுமையாகச் சாடினார். பார்ப்பனியம் என்ற ஒன்றை அடையாளப்படுத்தி அதன்பால் வசவுகளைப் பொழிந்தார். இந்து மதத்தில் பாராட்டத்தக்க விஷயங்கள் இருந்தாலும் அது பார்ப்பனர்களின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டிருந்ததால் தரங்கெட்டுப் போயிருந்ததாகக் கூறினார். சாதியைப் பற்றிக் குறிப்பிடுகையில், அதனை ஒரு கட்டுக்கோப்பான சமுதாய அமைப்பாகவே விளக்கினார். இந்துக்கள் நாகரிகமற்றவர்களாக, காட்டு மிராண்டிகளாக வாழ நேர்ந்தாலும், அவர்கள் தடம் புரளாமல் இருந்துவருவதற்குக் காரணம் அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்து, அவர்களை வழிநடத்தும் சாதிய நெறிமைகள்தான் என்கிறார். இந்தக் கீழைத்தேய மக்களுக்குச் சாதி என்றதொரு அமைப்புச் சட்டகம் இருப்பதனால் தான் ஏதோ ஒரு ஒழுங்கும் அறமும் இங்கு பேணப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சாதியை மிக முக்கியமான குடிமைச் சமுதாயக் கூறாக அவர் அடையாளப்படுத்தினார். அதே சமயம் அவ் வமைப்பு இந்து மத நெறிகளால்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். எது எப்படி இருந்தாலும், சாதி என்பது இந்துக்களின் வாழ்வியலை நிர்ணயிக்கும் முக்கியமான அமைப்பு என்றும், மதமாற்றம் செய்ய விரும்புவோர் சாதியமைப்பின் முக்கியத்து வத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் எச்சரித்தார்.

இங்கு ஊழியம் செய்ய வந்த எல்லா மிஷினரிகளுமே சாதியமைப்பு குறித்து நிறைய யோசித்தனர். ஒரு சிலர், அதற்கும் இந்து மதத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை, அது ஒரு சமுதாய அமைப்பு மட்டுமே என்றனர். மதமாற்றம் செய்ய விரும்புவோர், அவ்வமைப்பைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் வாதிட்டனர். தமது இறைப்பணிக்கு பார்ப்பனர்களும் இந்து மதமும்தான் முட்டுக்கட்டைகளாக உள்ளனர் என்றும் அவர்கள் விளக்கினர். எனவே, கிறிஸ்தவத் திற்கு ஒருவர் மாறிவிட்டார் என்றால், அவர் மனம் மாறுவதையே அவர்கள் முக்கியமானதாகக் கொண்டார்கள், அவ்வாறு மாறியவர் தமது சமூக அடையாளத்தை துறந்துவிட்டு வர வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அவ்வாறு வற்புறுத்தியவர் களும் கூட அந்த பழைய உலகம், மதம் மாறியவரின் மனத்தைக் கலைத்து விடும், எனவே அவர் அந்த உலகத்தை விட்டு நீங்கி, கிறிஸ்தவ பேருலகைத் தழுவ வேண்டும் என்றனர். அதாவது, சாதியமைப்பை நேரடியாகவும் கருத்தியல்ரீதியாகவும் எதிர்த்தவர்கள் மிகச் சிலர்தான். அதன் உள்ளார்ந்த அநீதியைப் புரிந்து கொண்டு எதிர்த்தவர்கள் அரியவர்களிலும் அரியவர் களாய் இருந்தனர். தமது மதமாற்ற நடவடிக்கைகளுக்குச் சாதி அமைப்பு தடையாக உள்ளதைத்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினர்.

1840களிலும் 50களிலும் Madras Mission Society போன்ற அமைப்புகள் சாதி என்பதை ஒழித்தாலன்றி மதமாற்றத்தைச் சாதிக்க முடியாது என்றன. சாதி என்பது கிறிஸ்தவம் போற்றும் அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானது என்றும் தீர்மானித்தன. என்றாலும், சாதியை ஒழிப்பதென்பது, மிஷனரிகளில் பெரும்பாலோனர்களைப் பொருத்தவரையில், அதற்கு ஆதாரமாக அவர்கள் கண்ட இந்துமதக் கருத்தியலை எதிர்ப்பது என்ற நிலையில்தான் செயல்பட்டது. அதே சமயம் மிஷனரிகளின் கல்விச் செயல்பாடுகளும், அவர்களது தருமச் செயல்களும் ஏழை, எளிய சாதிகளை அவர்கள் பால் ஈர்த்தன. ‘கஞ்கி’க்காக மதம் மாறியவர்களாக இவர்களைப் பலர் பகடி செய்தாலும் வறுமையும் ஒடுக்குமுறையும்தான் பலரைக் கிறிஸ்தவத்திடம் இட்டுச் சென்றன என்பதை மிஷனரிகளால் மறுக்க முடியவில்லை. இந்து மதத்தின் தத்துவங்களையும் சடங்குகளையும் எதிர்கொண்டு, அவற்றின் உள்ளார்ந்தத் தீமைகளைச் சுட்டிக் காட்டி, கிறிஸ்தவத்தின் மேன்மையை நிலைநிறுத்த வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் முழுமை யாக நிறைவேறவில்லை. இந்து மதத்தின் அதிபர்களான பார்ப்பனர்களை அவர்களால் வென்றெடுக்க முடியவில்லை. அதே சமயம் ‘கீழ்’ மக்களாகப் பாவிக்கப்பட்ட அப்பாவி மக்கள்தான் தம்மை நாடி வந்தனர் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

தமது செயல்பாடுகளுக்கு சாதியமைப்பு தடையாக உள்ளதை மிஷனரிகள் இனங்கண்டிருந்த போதிலும், அவ்வமைப்பின் நுணுக்கங்களை தாம் அறிந்தாலொழிய அதனை எதிர்கொள்ள முடியாது என்றும் நினைத்தனர். எனவே சாதிகளைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள முற்பட்டனர். அதே சமயம் இந்துமதம், சமுதாயம், பண்பாடு தொடர்பான விஷயங்களிலும் அக்கறை செலுத்தத் தொடங்கினர். உலக மொழிகளை ஓப்பியல் ஆய்வுக்கு உட்படுத்தும் போக்கு மலிந்திருந்த ஐரோப்பிய அறிவுச் சூழலில் அவர்களுமே இம்முறைமையைக் கையாண்டு இனம், மொழி, இவற்றுக்கு இடையிலான தொடர்புகள் ஆகியவற்றை ஆராயத் தொடங்கினர்.
1838இல் கால்டுவெல் இங்கு வந்தபோது இத்தகைய சூழல்தான் இருந்தது. அவர் முதன்முதலில் திருநெல்வேலி பகுதியில்தான் ஊழியம் புரிந்தார். அவர் ஊழியம் புரிந்த காலக்கட்டத்தில் சாணார் மக்கள் கிறிஸ்தவத்துக்கு அதிக எண்ணிக்கையில் மாறியிருந்தனர். அவர்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கால்டுவெல் அவர்களது வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவனித்து அவர்களைப் பற்றிய நூல் ஒன்றை எழுதினார். ஒப்பிலக்கணத்தில் அவர் பதிவு செய்துள்ள இனம், சாதி தொடர்பான கருத்துகளின் சாயலை இந்த நூலிலேயே காணலாம். சாணார் மக்கள் ஆரியர்கள் அல்ல என்றார்.

இன ரீதியாக, மொழிரீதியாக, அவர்கள் பின்பற்றிய சமய, சடங்கு களைக் கொண்டு பார்க்கையில் இந்துக்களிடமிருந்து, குறிப்பாகப் பார்ப்பனியமயமாக்கப்பட்ட இந்துக்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். சாணார்களில் சிலர், கல்வி எய்தி, வாழ்க்கையில் முன்னேறி, செல்வம் ஈட்டியிருந் ததால் தம்மை மேம்படுத்திக் கொள்ளும் முகமாகச் சில பார்ப்பனியப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றக்கூடும் என்றாலும், சாணார் பொதுமக்கள் இவ்வாறு இல்லாமல் தமக்கு ஆதிகாலம் முதல் வாய்த்திருந்த மாய, மந்திரச்சடங்குகளைச் செய்தும், பேய், பிசாசுகளை வணங்கியுமே வாழ்ந்து வந்தனர் என்றார். பார்ப்பனர்கள் இப்படிப்பட்ட சிறு தெய்வங்களையும், உள்ளூர் கடவுளரையும் தமது அணி வரிசையில் சேர்த்துக் கொண்டாலும் கூட, எளிய சாதியினர் ஒரு போதும் சாதி சமுதாயத்தில் மனிதர்களாக பாவிக்கப்பட மாட்டார்கள் என்றும் வாதிட்டார். எனவே, சாணார் பெருமக்கள் மதம் மாறியதில் ஆச்சரியம் ஏதுமிருக்க முடியாது என்றார். அவர்கள் கஞ்சிக்காக மதம் மாறினர் என்று கொண்டாலும் அவர்கள் மோசமான ஒடுக்கு முறையிலிருந்து நீங்கி, தமக்குப் புதுவாழ்வு வழங்கத் தயாராக இருந்த புதிய மார்க்கத்தில் இணைந்ததை யார்தான் குறை கூற முடியும் என்றும் வினவினார். மேலும், சாணார்கள் இயல்பில் எளியவர்கள், நேர்மையானவர்கள், சூதும்வாதும் அறியாதவர்கள், அவர்களை இயக்கும் பூசாரிகள் என்று எவரும் இல்லை. அவர்களிடையே எந்தவித மனக்காழ்ப்பும் இல்லை, அவர்கள் பழம்பெருமை பேசி, வரலாற்றைக் காரணங்காட்டி கிறிஸ்தவத்தின் மேன்மையை விமர்சிக்கக்கூடியவர்கள் அல்லர் என்றார்.

கால்டுவெல் சாணார்களை விமர்சிக்கவும் செய்தார், சாடி னார். ஆனாலும்கூட அவர் பார்ப்பனர்களைதான் அதிகம் விமர்சித்தார். அதே சமயம், பார்ப்பன இளைஞர்கள் மேற்கத்திய கல்வி கற்று பகுத்தறிவோடு சிந்திக்கத் தொடங்கினால், தாமே கிறிஸ்துவைத் தேடி வருவர் என்றும் அவர் எதிர்பார்த்தார். கஞ்சிக்காக மட்டுமே இந்துக்களில் சிலர் மதம் மாறினரே அல்லாமல், இறையியல் காரணங்களை முன்னிட்டு அல்ல என்ற விமர்சனத்தை அவர் இவ்வாறே எதிர்கொண்டார்.
சாணார் சமுதாயத்தைப் பற்றிக் கால்டுவெல் முன்வைத்தக் கருத்துகளை அச்சமுதாயத்தைச் சேர்ந்த பெரிய மனிதர்களில் சிலர் ஆத்திரத்துடன் எதிர்கொண்டனர். தாம் காட்டுமிராண்டி கள் அல்ல என்றும், கால்டுவெல் நினைப்பது போல தாம் பிரா மணீயத்திலிருந்து விலகியவர்களும் அல்ல, தமது பண்பாட்டுக் கும் ஆரியத்துக்கும் தொடர்பு உண்டு என்றும் வாதம் செய்தனர். அது மட்டுமில்லாமல் சிற்சில இடங்களில் கலகச் செயல்களிலும் ஈடுபட்டனர். கால்டுவெல் தமது நூலைப் பிரசுரிக்காமல் பின்வாங்க வேண்டியிருந்தது.

என்றாலும், கால்டுவெல் தனது கருத்துநிலையிலிருந்து பின்வாங்கவில்லை. தமிழ்ப் பகுதிகளில் அவர் கண்ட ஆரியம் அல்லாத பண்பாட்டைப் பற்றியும், மொழியைப் பற்றியும் தொடர்ந்து அவர் ஆய்வுகள் நடத்தி வந்தார். சாணார்கள் பற்றிய அவரது கருத்துகளை விரிவுப்படுத்தி திராவிட இனம் முழுவதுக்கும் பொருந்தக்கூடிய வாதம் ஒன்றைத் தனது ஒப்பிலக்கணத்தில் முன்வைத்தார். இதை அவர் ஏன் இத்தகைய தொரு நூலின் வாயிலாகச் செய்தார்? திராவிட மக்களின் பண்பாடு குறித்து நேரடியாக எழுதாமல், ஒரு இலக்கணப் பிரதி யின் மூலமாகத் தனது கருத்துகளை வெளிபடுத்தத் துணிந்தார்?

18ஆம் நூற்றாண்டு முதற்கொண்டே ஐரோப்பிய அறிவு வட்டாரங்களில் மொழி பற்றிப் பல்வேறுவிதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஐரோப்பியர்கள் உலகின் பல பகுதிகளுக்குப் பயணம் போகையில், தாம் சென்ற இடங்களில் பேசப்பட்ட மொழிகளைப் பற்றியக் குறிப்புகளைச் சேகரித்தனர். வேறு, வேறு மொழிகளுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமைகளைக் குறித்து ஐரோப்பிய அறிவாளிகள் பேச, விவாதிக்க இத்தகைய தகவல்கள் உதவின. இவ்வாறு உருவான அறிவு மரபில் பயின்ற, இந்தியாவுக்கு வந்த வில்லியம் ஜோன்ஸ் போன்றோர், நாளடைவில், இந்தியப் பண்பாட்டின் உன்ன தத்தைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கினபோது, அப்பண்பாட்டின் மேன்மையைச் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட இலக்கிய, இலக்கணங்களில் கண்டனர். கிரேக்கம், லத்தீன் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடைய சமஸ்கிருதம், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் மிக முக்கியமான ஒரு கூறு என்று வாதிட்டனர். ஆதிகாலத்து இந்தியர்கள், குறிப்பாக வேதகாலச் சமுதாயத்தைச் சேர்ந்த ஆரிய வம்சத்தினர் நாகரிகத்தின் உச்சத்தை எட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு மொழி குறித்த ஆய்வானது, பண்பாடு, நாகரிகங் கள் குறித்த ஆய்வாக உருமாறியது. மொழிக்குரிய பண்புநலன் கள் அம்மொழியைப் பேசிய இனத்தவருக்கு உரியவையாக அடையாளப்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட இனத்தினர் பேசிய மொழியானது அவ்வினத்தின் சின்னமாக, அதன் தனித்தன்மைக் கான ஆதாரமாக ஆகிப்போனது. இத்தகைய சூழலில்தான் கால்டுவெல் திராவிட மொழிகளைப் பற்றிய தனது ஆய்வினை மேற்கொள்ளத் தொடங்கினார். அவருக்கு முன்னமே, சென்னையில் கிழக்கிந்திய கம்பெனி யின் ஆட்சியாளராகப் பணிபுரிந்த எப். டபுள்யூ. எல்லிஸ் என்பாரும் அவரது இந்திய சகாக்களும் திராவிட மொழிகள், ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்த மொழிகளினின்று வேறுபட்டிருந்ததை, தெலுங்கு மொழிக் குறித்த ஆய்வுகளின் மூலம் உறுதிப் படுத்தியிருந்தனர். கால்டுவெல்லுக்கு இது தெரிந்திருந்தது, ஆனால் அவர் செய்ய நினைத்தது வெறும் மொழியியல் ஆராய்ச்சி அல்ல. திராவிட மொழிகளின் தனித்தன்மையை ஆதாரமாகக் கொண்டு திராவிட மக்களின் தனித்தன்மையை, தனிச்சிறப்பான பண்பாட்டுக்கு அவர்கள் அதிபதிகளாக இருந்ததை அவர் நிரூபிக்க நினைத்தார். ஆரியம், திராவிடம் என்ற வழக்கில் இருந்த சொல்லாடல்களை அவர் நூதனமான வகையில் கையாள வந்தார்.

திராவிட நாகரிகம், பண்பாடு ஆகியன ஆரியத்திலிருந்து வேறுபட்டவை என்று மட்டும் அவர் கூறவில்லை. தானும் தன்னைப் போன்ற பிறரும் மேற்கொண்டிருந்த மதமாற்ற நடவடிக்கைகளுக்குத் திராவிடம் கைகொடுக்கும் என்றும் வாதிட்டார். ஆரியத்தால் வீழ்த்தப்பட்டு ஈனசாதியினராக ஆக்கப்பட்ட திராவிடர்கள் கிறிஸ்தவ நற்செய்தியை அக்கறை யுடன் கேட்பர், அவர்கள்தான் கிறிஸ்தவத்துக்கு உகந்தவர்களும் கூட என்பதே அவரது வாதமாக இருந்தது. அவர் இவ்வாறு வாதிடக் காரணங்கள் இல்லாமல் இல்லை. நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளது போல, அடித்தட்டு மக்கள்தான் அதிக எண்ணிக்கையில் மதம் மாறியிருந்தனர். அவர்களைக் கஞ்சிக்காக மட்டும் மதம் மாறியவர்களாகப் பலர் கருதினர். இவ்வாறு மாறுவதில் எந்தவிதத் தவறும் இல்லை என்று கூறியதுடன், இவ்வாறான மதமாற்றம்தான் இந்தியாவில் கிறிஸ்தவத்தை வளர்க்கும் என்று கால்டுவெல் வாதிட்டார்.

சாணார்களின் சமுதாய உளவியலைக் காட்டி அவர்கள் கிறிஸ்தவத்துக்கு மாறியிருந்ததைக் கொண்டாடிய கால்டுவெல், அத்தகைய உளவியலை ஒரு இனம் முழுவதுக்குமே பொதுவான தாக அடையாளப்படுத்த வந்தார். அதே சமயம், இந்த உளவியல் ஏற்கனவே கண்டிருந்த பரிணாம வளர்ச்சி நிலையையும் சுட்டிக்காட்டினார். திராவிட மொழி இலக்கியங்களின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டார். திராவிடர்களிடையே உள்ள வேறுபாடுகள் ஆரியர்களிடையே நிலவிய சாதிசார்ந்த, பிறப்பு சார்ந்த வேறுபாடுகள் அல்ல. எனவே பறையர்கள் போன் றோரைச் ‘சாதி கெட்டவர்’களாகக் கருத வேண்டியதில்லை, அவர்கள் தனியரு சமுதாயமாக இருந்தவர்கள், அவர்களது உழைப்பை அபகரிக்க வேண்டியே உயர் நிலையில் இருந்த திராவிடர்கள், அவர்களை அடிமைப்படுத்தினரே அல்லாமல் அவர்களது பிறப்பின் அடிப்படையில் அல்ல என்றார். பிறப்பைச் சார்ந்த அடையாளங்களை முன்நிறுத்தும் வருண-சாதியமைப்பி லிருந்து திராவிடர்களை விடுவித்து, பல்வேறு சமுதாயத்தினரை யும் இணைக்கும் ‘இனம்’ என்ற முழுமைக்குள் அவர்களை அடக்கினார். திராவிட இனம் என்ற வகையில் அவர்கள் கிறிஸ்தவத்துக்கு அணுக்கமானவர்கள் என்று வாதிட்டார்.

இங்கு மற்றொரு விஷயத்தையும் நாம் பதிவு செய்தாக வேண்டும். கோவர் என்பாரோடு கால்டுவெல் நடத்திய வாதத்தில் திராவிடத்தின் தனித்தன்மையை மட்டும் அவர் உயர்த்திப் பிடிக்கவில்லை. திராவிட அடையாளம் என்பது எவ்வகையில் மதமாற்றத்தைச் சாத்தியப்படுத்தும் என்றும் விளக்கினார். திராவிடம் என்று தனித்துப் பேசினால், திராவிடர் கள் தாங்கள் ஆரியத்திலிருந்து வேறுபட்டிருப்பதாக நினைத்து, ஆரிய வம்சத்தினரான ஆங்கிலேயரிடம் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள், கிறிஸ்தவத்தை அந்நியர்களின் மதம் என்று கொள்வார்களே அல்லாமல் தமக்கு உரிய சமயமாக ஏற்க மாட்டார்கள் என்பது கோவரின் வாதமாக இருந்தது. இவ்வாதத்தை மறுத்து, திராவிடர்களாக இருப்பதால்தான், இவர்கள் கிறிஸ்தவத்தை மறுக்கமாட்டார்கள் என்ற தனது நிலைப்பாட்டை கால்டுவெல் முன்வைத்தார்.

நமது காலத்தில் கால்டுவெல்

தற்காலச் சூழலின் பின்னணியில் கால்டுவெல்லின் கருத்து களை, குறிப்பாக, நீக்கப்பட்டு புதிய பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளை மதிப்பீடு செய்ய வேண்டியது தேவையாகிறது. திராவிட அடையாளம் என்பதன் சாதிய உட்கூறுகளைப் பகுப்பாய்ந்து, திராவிடச் சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை இனங்கண்டு அவற்றைத் ‘திராவிட நாகரிகம்’ என்ற சொல்லாடலுக்குள் கொண்டுவந்து சமத்காரம் செய்த பிறகே, அவர் அவ்வடையாளத்தை உயர்த்திப் பிடிக்கிறார். பழைய பல்கலைக்கழகப் பதிப்பாளர்களோ கால்டுவெல்லின் இந்த முயற்சியை அங்கீகரிக்காமல், அவர் எழுப்பிய கேள்விகளை மறுதலிக்கும் வகையில் அவற்றை நீக்கி, சாதிக்கும் இனத்துக்கும் இடையே அவர் கற்பித்த சமன்பாட்டைப் புறக்கணித்து, வரம்புக்குட்பட்ட திராவிட அடையாளத்தையே முன்வைத்தனர். இன்றைய அரசியல், பண்பாட்டுச் சூழலில் கால்டுவெல் முன்வைத்த திராவிட அடையாளத்தையும், அதன்பொருட்டு அவர் கையாண்ட வாதங்களையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறோம் என்பதுதான் கேள்வி.

19ஆம் நூற்றாண்டில் பரவலாகக் கையாளப்பட்ட மொழியியல் ஆய்வுமுறையின்படி, வழக்கிலுள்ள ஒரு குறிப் பிட்ட சொல்லுக்கான வேர்ச்சொல்லை இனங்காண்பதன் மூலமே அச்சொல்லுக்குரிய அடையாளம், அதாவது, அது எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது தீர்மானிக்கப்பட்டது. குறிப்பிட்ட மொழிக்குரிய வேர்ச்சொற்களஞ்சியத்திலிருந்து அல்லாமல் வேற்று மொழியிலிருந்து வந்து சேர்ந்த சொற்களைப் பிரித்துப் பார்க்க இந்த அணுகுமுறை உதவியது. குறிப்பிட்ட மொழியின் தனித்தன்மையை நிறுவவும் இந்த அணுகுமுறை உதவியது. தனக்குரிய வேர்ச்சொற்களிலிருந்து அதிக சொற் களைப் பெற்றிருந்த மொழியானது தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. அதே சமயம் குறிப்பிட்ட மொழியின் ‘அசல’£ன அடையாளத்தை இனங்காணவும் இந்த அணுகுமுறை பயன் பட்டது. தமிழைப் பொருத்தவரை, வடமொழிச் சொற்களை அதிகமான எண்ணிக்கையில் பெற்றிராத காரணத்தால், அது திராவிட மொழிகளில் மூத்ததானதாக, அசல் திராவிட மொழியாகக் கொள்ளப்பட்டது. என்றாலும் கால்டுவெல் போன்றோர் ‘மொழித்தூய்மை’ என்பதைக் கொண்டு மட்டும் திராவிட அடையாளத்தை வரையறுக்கவில்லை. பறையர்களும் திராவிடர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ள விதத்திலிருந்தே நமக்கு இது தெரிகிறது. இவர்கள் கொச்சைத் தமிழ் பேசினாலும், பிற ‘திராவிட’ர்கள் இலக்கியத் தமிழைக் கையாண்டாலும் இவர்கள் அனைவரும் ஒரு இனத்தவரே என்று அவர் அறுதியிட்டுக் கூறுவதைப் பார்த்தோம், அதற்கான சமூக, கருத்தியல் பின்னணியும் கண்டோம்.

இன்றைய சமூகச் சூழலிலோ எல்லாத் தமிழர்களும் ஒரு இனம்தான் என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியாது. தலித் எழுத்தாளர்களும் இயக்கங்களும் தமிழ் அடை யாளம் என்பது வழக்கத்தில் எவ்வாறு உள்ளது, அவ்வடை யாளம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களின் பண்பாட்டை உள் ளடக்கியதா என்பன போன்ற கேள்விகளைத் தொடுத்துள்ள ஒரு சூழலில் கால்டுவெல் முன்வைக்கும் இன அடையாள வாதத்தை நாம் வேறு நிலையிலிருந்து புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முதல்பகுதியிலும் கால்டுவெல்லின் கருத்துகள் படித்தவர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டு, தமிழ்த் தேசிய அடையாளம் வளர, உருபெற காரணமாக இருந்தன என்பதை நாம் அறிவோம். இதே காலத்தில் வாழ்ந்த அயோத்திதாசர் தமிழ் அடையாளத்தை வேறு நிலையிலிருந்து புரிந்து கொண்டார். சாதிக்கும் இனத்துக்கும் இடையிலான உறவை அவர் புரிந்துகொண்ட விதத்தைக் கால்டுவெல்லின் சிந்தனையின் ஒரு வித நீட்சியாகக் கொள்ளலாம்.

அயோத்திதாசர் ஆசிரியராக இருந்து பதிப்பித்த ‘தமிழன்’ இதழில் ஒரு வாசகம் தொடர்ந்து இடம்பெற்று வருவதைக் காணலாம். கட்டங்கட்டி அது வெளியிடப்பட்டிருக்கும். ‘The Non Caste Dravidian Federation’ என்பதுதான் அந்த வாசகம். ‘சாதிகளற்ற திராவிடர்களின் கூட்டமைப்பு’ என்பதே அதன் பொருள். திராவிடம் என்ற பொதுவான இன அடையாளத்தை முன்நிறுத்தினாலும், அவ்வின அடையாளமானது சமூகத் தளத்தில் வென்றெடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை தாசர் வலியுறுத்துகிறார். சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் களைய அவர் பௌத்தத்தை நாடியதையும் பௌத்தராக வாழ்ந்ததையும் நாம் அறிவோம். அவர் உயர்த்திப் பிடித்த பௌத்தம் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. தமிழ் இலக்கிய வரிசையில் உள்ள நீதி நூல்கள், சமண, பௌத்த காப்பியங்கள், நிகண்டுகள் ஆகியவற்றை அவர் தனிச்சிறப்பானதொரு வாசிப்புக்கு உட்படுத்தினார். அந்த வாசிப்பின் வழியே தமிழ் பௌத்தம் என்பதனை வரையறுத்தார். திராவிட மக்களின், குறிப்பாக, தமிழர்களின் ஆதிசமயம் பௌத்தம்தான் என்றும் அவர் வாதிட்டார்.

ஆரிய-இந்து மதத்துக்குக் கட்டுப்பட்டு, ஆரியர்களால் வெல்லப்பட்டு, பௌத்தத்தைத் தொலைத்தவர்கள் ‘சூத்திரர்கள்’ என்றும், அவ்வாறு ஆரியத்துக்கு இணங்க மறுத்ததால் ‘தீண்டத்தகாத வர்களாக’ ஆக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்கள் தான் பறையர்கள் என்றும், அவர்கள்தான் ‘பூர்வ தமிழர்கள்’ என்றும் அவர் கொண்டார். இந்தப் பூர்வ தமிழர்களும் பிறரும், அதாவது, ‘சூத்திரர்’களும் இணைந்த ‘சாதிகளற்ற திராவிடக் கூட்டமைப்பை’ உருவாக்க வேண்டிய தேவையை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.

கால்டுவெல்லின் வாதங்களுக்கும் தாசர் முன்வைத்த கருத்து களுக்கும் ஒற்றுமைகள் இருக்கவே செய்தன. பறையர்களை உள்ளடக்கிய திராவிட அடையாளத்தைதான் இருவரும் முன்நிறுத்தினர். பறையர்களை ஆதிகுடிகளாக இருவருமே கொண்டனர். அவர்களது ஆதி நிலையை, தற்காலத்தில் அவர் களது கூட்டு நினைவில் மட்டும் உயிர் வாழும் சுயாதீன வாழ்க்கை பற்றிய மனப்பதிவுகளிலிருந்து அறியலாம் என்பதை இருவருமே ஒப்புக் கொண்டனர். கால்டுவெல் அவர்களது உழைப்பு அபகரிக்கப்பட்டதைப் பற்றி எழுதினார், தாசரோ அவர்களது அடையாளம் அழிக்கப்பட்டதைக் குறித்து விளக்குகிறார். பறையர்கள், சாணார்கள் போன்றவர்களின் உள்ளார்ந்த ‘உண்மை’த்தன்மையைச் சுட்டிக்காட்டி, இம்மக்கள்தான் கிறிஸ்தவத்துக்கு உகந்தவர்கள், கிறிஸ்தவ நற்செய்தியைக் கேட்டு, மனமும் மதமும் மாறக்கூடியவர்கள், ‘உயர்’குடிகளான ஆரிய பார்ப்பனர்கள் அல்ல. மேற்கத்தியக் கல்வியும் கிறிஸ்தவமும் இணைந்து பறையர், சாணார் போன்ற அப்பாவி மக்களை நன்னெறிப்படுத்தம், நாகரிகமடையச் செய்யும், அவர்களை இலக்கிய கர்த்தாக்களாக ஆக்கும் என்றெல்லாம் கால்டுவெல் வாதிட்டார்.

தாசர், கிறிஸ்தவம் ஒருவரைப் பண்படையச் செய்யும் என்பதை ஏற்றுக் கொண்டார். அதே சமயம், இத்தகைய பண்படுத்தலைச் சமணமும், பௌத்தமும் தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்கனவே சாதித்திருந்தன என்றும், ஆரிய, பார்ப்பன சூழ்ச்சியா லும், வேஷ பார்ப்பனர்களின் செயல்பாட்டின் காரணமாகவும் அம்முயற்சிகள் காலவெளியில் வேரூன்றாமல் போய்விட்டன என்றும் குறிப்பிட்டார். ஆனால் தற்காலத்தில் இது சாத்தியப் படும், அத்தகைய பண்படுத்துதல் என்பது பௌத்தம் காட்டும் அறவழியினூடாக வெளிப்படும் என்றும் கூறினார்.

அயோத்திதாசரைப் பொருத்தவரை இனம் என்ற திணைக்குள் சாதியப் பாகுபாடுகளை கொண்டு வருவதால் மட்டுமே அவற்றைக் கடந்துவிட்டதாகக் கொள்ள முடியாது என்பதில் தெளிவாக இருந்தார். சமத்துவம், பகுத்தறிவு, ஜீவகாருண்யம் ஆகியவற்றை அன்றாட வாழ்க்கைக்குரிய விழுமியங்களாக ஏற்று, நாம் ஒவ்வொருவரும் சாதியுணர்வைக் கடந்து அன்பு வழியில் ஒழுகினாலொழிய திராவிட இன அடையாளத்துக்குப் பொருள் இருக்க முடியாது என்பதைப் பலஇடங்களில் குறிப்பால் உணர்த்துகிறார், நேரடியாகவும் வாதிடுகிறார். கால்டுவெல்லின் திராவிடத்துக்கு அவர் ஆற்றிய ஊழியப்பணி பொருள் வழங்கியது, எளிய சாதியினர்பால் அவரது அக்கறையும் கவனிப்பும் திரும்பக் காரணமாக அமைந்தது. ஆனால், கிறிஸ்தவத்தின் மேன்மையை ஆங்கில நாகரிக வளர்ச்சி என்பதன் அடிப்படையிலேயே அவர் மதிப்பிட்டார். இதனால் பறையர்கள், சாணார்கள் போன்றோரைப் பண்பாட்டு வளர்ச்சிக் குன்றியவராகவே அவர் பாவித்தார். அவரது செயல்பாடுகளில் அன்பும் அவர்கள் பால் மதிப்பும் வெளிப்பட்டிருக்கக்கூடும் என்றாலும், அவரது வாதங்களில் வெள்ளை இனவாதம் தலைப்படுவதை மறுக்க முடியாது.

அயோத்திதாசரின் திராவிடமோ சாதிபாகுபாடுகளை முற்றிலும் துறக்க நினைத்த ஒன்றாகவும், எந்தக் குறிப்பிட்ட சாதியின், இனத்தின் மேன்மையையும் நிலைநிறுத்த முற்படாத தாகவும் இருந்தது. அவர் சிலசமயங்களில் பறையர் பெருமை பேசுவார், ஏனைய தாழ்த்தப்பட்ட சாதியினரை, குறிப்பாக, ‘தோட்’டிகள் என்று அவரால் அழைக்கப்பட்டவர்களை இழி மக்களாக அடையாளப்படுத்துவார். ஆண்களுக்கு, குறிப்பாக கணவன்மார்களுக்குப் பணிவிடை செய்வதில்தான் பெண்ணுக் குரிய அறம் அடங்கியிருப்பதாக வாதிடுவார். ஆனால் இத்தகைய கருத்துகளுக்குக் கருத்தியல் ஆதாரங்களை அவர் வழங்குவதில்லை. அதாவது, கால்டுவெல்லின் சிந்தனையை ஊடறுத்து செயல் பட்ட இனச்செருக்குக் கொள்கை போன்ற எதுவும் தாசரின் மனக்காழ்ப்புகளுக்கு அரண்அமைத்து அவற்றுக்கான நியாயங் களை வழங்கவில்லை. சாதி சமுதாய உளவியலையும் ஆணாதிக்க மனநிலையையும் துறப்பதென்பது அத்தனை எளிதல்ல என்பதைதான் இவை சுட்டிக்காட்டுகின்றன.

அயோத்திதாசரின் சிந்தனைவழி கால்டுவெல்லின் கருத்து களை அணுகும்போது, கீழ்க்கண்டவை முக்கியத்துவம் பெறு கின்றன. இவையே கால்டுவெல்லின் கருத்துகளின் இன்றைய பொருத்தப்பாட்டை வரையறுக்கக் கூடியவையாகவும் உள்ளன. சாதி தகுதி, இன அடையாளம் ஆகியவற்றுக்கு இடையிலான உறவை முக்கியமானதாக இனங்கண்டு, அவ்வுறவைச் சமன் படுத்த கால்டுவெல் மேற்கொண்ட கருத்தியல்ரீதியான முயற்சி களும், தேவ ஊழியராக இருந்து இந்தச் சமன்பாட்டை அவர் சமூகத்தளத்தில் வேரூன்றச் செய்ய மேற்கொண்ட முயற்சிகளும் தொடர்புடையவை. அவரது இனக் கொள்கையைச் சமுதாயம் பற்றிய அவரது பார்வையிலிருந்து பிய்த்தெடுத்து அவரை திராவிடப் பெருமை பேசியவராக மட்டும் கொள்ள முடியாது.

மதமாற்றம் செய்திருந்த எளிய சாதியினரை அறவாளர்களாக அடையாளப்படுத்தியும், அவர்களது ‘நேர்மை’, அவர்கள் காட்டிய ‘உண்மை’யான விசுவாசம் முதலியவற்றைக் கொண்டும் தான் அவர் திராவிடப் பண்பாட்டின் உன்னதத்தை நிறுவுகிறார் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. திராவிட அடையாளம் என்பதனை மொழி, இனம் சார்ந்ததாக மட்டும் கொள்ளாமல் அறமார்ந்த அடையாளமாக வும் அவர் கட்டியமைக்க நினைத்தார் என்பது கவனத்துக்குரியது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com