Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatrukaruthu
Maatrukaruthu
மே 2009
மாற்றல்ல ஏமாற்று

பதவிக்காக, பதவி சுகத்தை நுகர்ந்தவர்களால் மீண்டும் பதவிக்கு வருவதை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மூன்றாவது அணி

இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்த கருத்து வேறுபாட்டினை மையமாக வைத்து சி.பி.ஐ(எம்) கட்சி காங்கிரஸ் உடனான அதன் உறவை முறித்துக் கொண்ட வேளையில் அரவம் காட்டிய மூன்றாவது அணிபேச்சு தற்போது மிகப் பொருத்தமான விதத்தில் அதாவது தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பின்பு வடிவம் பெற்றுள்ளது. ஆனால் அப்போது தனது பெரிய வலுவுடன் அந்த ஒப்பந்தத்திற்கு எதிராக சி.பி.ஐ(எம்) கட்சியுடன் அணி சேர்ந்து நின்ற மாயாவதியின் பி.எஸ்.பி கட்சி தற்போது நேரடியாக அந்த மூன்றாவது அணியில் இல்லை. அதற்கு பதிலாக அப்போது பி.ஜே.பி கட்சியுடன் உறவு கொண்டிருந்த-அக்கட்சியின் பரிவார அமைப்புகள் ஒரிஸா-வின் காந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்களை வேட்டையாடி ஒரு கிறிஸ்தவ சகோதரியை மானபங்கம் செய்யுமளவிற்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றமிழைத்த போக்குகளை பலகாலம் தனது ஆட்சியை காப்பாற்றுவதற்காக நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த-நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் இந்த மூன்றாவது அணியில் சேர்ந்துள்ளது.

காங்கிரஸ் பி.ஜே.பிக்கு எதிரான மாற்று என்ற முழக்கம்

காங்கிரஸ் உடனான தனது உறவை முறித்துக்கொண்ட வேளையிலும் அதன் பின்னரும் சி.பி.ஐ(எம்) கட்சி பெரிதாக முழங்கி வந்தது. காங்கிரஸ், பி.ஜே.பி இவ்விரு கட்சிகளுக்கெதிராக ஒரு மாற்றை கொண்டுவர வேண்டும் என்பதே. மாற்று என்றால் அக்கட்சிகளுக்கெதிரான மாற்று என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் வேறொரு கட்சியாக இயங்குவதே அந்த அடிப்படையில் மாற்றுத்தான். அப்படியானால் மாற்று என்று சி.பி.ஐ(எம்) கட்சி முழங்கியதற்கு அரசியல், பொருளாதார ரீதியிலான மாற்றுக் கொள்கைகளைக் கொண்டிருப்பது என்று தான் பொருள் கொள்ள முடியும். அந்த திசை வழியில் தற்போது அவர்கள் அமைத்துள்ள மூன்றாவது அணி இருக்குமா என்று பார்ப்பது அவசியமாகும்.

சி.பி.ஐ(எம்) கட்சி ஒரு மாற்றா?

இந்நிலையில் இக்கட்சிகளுக்கு எதிரான மாற்று என்பது அவை தற்போது கடைப்பிடித்துக் கொண்டுள்ள முதலாளித்துவ ஆதரவு கொள்கைகளுக்கெதிரான மாற்று என்பதை குறிப்பிடுவதாக மட்டுமே இருக்க முடியும். அந்த திசைவழியை நோக்கிய ஒரு மாற்றாக தற்போது மூன்றாவது அணியைச் சேர்ந்த கட்சிகளின் கொள்கைகள் இருக்கின்றனவா என்று பார்ப்பது அவசியமாகும். அதற்கு முன்பாக இந்த மாற்று என்பது குறித்து அடிக்கடி பேசிக்கொண்டுள்ள சி.பி.ஐ(எம்) கட்சி அதன் கொள்கையிலும் நடைமுறையிலும் உண்மையாகவே மாற்றாக உள்ளதா என்பதை அனைத்திற்கும் முன்பாக பார்ப்பது அவசியமாகும்.

காங்கிரஸின் கலப்பு பொருளாதாரமும் ஆவடி சோசலிஸமும்

அடிப்படையில் காங்கிரஸ் கட்சி அதன் ஆரம்ப காலத்தில் முன்வைத்த கலப்புப் பொருளாதார கோசங்களை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது நேரு அவர்கள் ஆவடி காங்கிரஸ்-ல் முன்வைத்த இந்தியபாணி சோசலிசம் என்ற கண்ணோட்டத்தினை எடுத்துக் கொண்டாலும் சரி இவையனைத்துமே இரண்டு உலக யுத்தங்களுக்கு பின்பு தோன்றிய மூன்றாவது உலக முதுலாளித்துவ பொது நெருக்கடி காலகட்டத்தில் இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் முதலாளித்துவத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கான ஒரு வரைபடமே தவிர வேறெவையும்மல்ல.

முதலாளித்துவத்தின் வேகமான வளர்ச்சிக்கு விடுதலை பெற்ற காலத்தில் பல ஆதாரங்கள் தேவைப்பட்டன. அந்த ஆதாரங்களை வலுப்படுத்துவதற்கு பல ஆதார தொழில்களை வளர்க்க வேண்டிய அவசியம் புதிதாகத் தோன்றிய இந்திய முதலாளித்துவ அரசிற்கு இருந்தது. அத்தகைய ஆதாரத் தொழில்களான போக்குவரத்து, தொலைதொடர்பு, மின்சாரம், இரும்பு எஃகு போன்ற தொழில்களை இத்தொழில்களின் உற்பத்தி பொருள்கள் மலிவான விலையில் தொழில் தொடங்க முனையும் அனைத்து முதலாளிகளுக்கும் கிடைக்கும் வகையில் வழங்க வேண்டியது அரசிற்கு அவசியமாக இருந்தது.

அப்படிப்பட்ட வசதிகளை மலிவான விலையில் வழங்கும் விதத்தில் அந்த ஆதாரத் தொழில்களை நடத்த எந்த தனியார் முதலாளிகளும் அக்காலகட்டத்தில் முன்வரவில்லை. மேலும் அத்தொழில்களை உருவாக்கத் தேவைப்படும் மிகப்பெரிய அளவிலான மூலதனம் பலகாலம் அன்னிய ஆட்சியின் கீழ் இருந்த சுதேசி முதலாளிகளிடம் அன்று இல்லை. எனவேதான் அரசு மக்களின் வரிப்பணத்திலும் பிற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் போட்டும் அவற்றிற்கு தேவையான மூலதனத்தை திரட்டி அத்தொழில்களை தொடங்கியது. அதன் விளைவாக தனியார் தொழில்கள் வளர்ந்தன. இவ்வாறு தனியார் மற்றும் பொதுத்துறை தொழில்கள் உருவாகி வளர்ந்ததையே கலப்புப் பொருளாதாரம் என்றும், தேசியமயமாக்கப்பட்ட நிறுவனங்களாக மேலே விவரித்த ஆதாரத்தொழில்கள் விளங்கியதை சோசலிசம் என்றும் காங்கிரஸ் கட்சி கூறியது. ஆனால் உண்மையில் இந்தக் கொள்கைக்கும், சோசலிசத்திற்கும் எவ்வகையான தொடர்பும் இல்லை.

முதலாளித்துவ தேசிய மயம்‡பாசிஸத்தின் அடித்தளம்

ஒரு முதலாளித்துவ அமைப்பில் தொழில்கள் தேசியமயமாக்கப் படுவதற்கும் ஒரு சோசலிச அமைப்பில் தொழில்கள் சமுதாய உடமையாக்கப்படுவதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உண்டு. முதலாளித்துவ அமைப்பில் அரசு தேசியமயமாக்கப்பட்ட தொழில்களின் உடமையாளனாக அதாவது முதலாளியாக விளங்குகிறது. அங்கும் அடிப்படையில் கூடுதலாகவோ குறைவாகவோ இலாபம் ஈட்டுவதை மையமாக வைத்தே தொழில் நடத்தப்படுகிறது. மேலும் அந்நிறுவனங்களில் மேல்மட்ட நிர்வாகங்கள் ஊழலில் ஊறித் திளைப்பதால் விளையும் நஷ்டத்தின் சுமை அங்கு வேலை செய்யும் தொழிலாளர் தலைமேல் சுமத்தப்படுகிறது. இதனால் அத்துறைகளைச் சார்ந்த தொழிலாளர் போராட்டங்கள் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயம் வெடித்துக் கிளம்பவே செய்யும்.

அவ்வாறு தேசியமயமாக்கப்பட்ட தொழில்களில் போராட்டங்கள் உருவெடுக்கும் போது மற்ற தனியார்துறையில் உள்ள தொழில்களில் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பும் போது எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் காட்டிலும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்களில் தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்க காவல்துறை ஈடுபடுத்தப்படும் என்றால் அரசு நிறுவனங்களில் போராட்டங்களை ஒடுக்க காவல்துறையுடன் தேவைப்பட்டால் இராணுவமும் கூட ஈடுபடுத்தப்படுகிறது. எனவேதான் முதலாளித்துவ அமைப்பில் தொழில்களை தேசியமயமாக்குவது என்பது ஒரு பாசிச கரும்பாறை அடித்தளத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று மார்க்சிய அறிஞர்கள் திட்டவட்டமாகக் கூறினார்கள்.

ஜனசங்கம் ஆரம்ப காலத்தில் வளர முடியாமல் போனதன் பின்னணி

இதைவிடுத்து பி.ஜே.பி. கட்சியின் அதன் தாய்க்கட்சியான ஜனசங்கமும் அக்காலத்தில் இந்தியாவின் தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவை குறித்து நேரு கொண்டிருந்ததைப் போன்ற ஒரு பார்வையைக் கொண்டிருக்கவில்லை. அப்பட்டமாக தனியார் துறையினை மையமாக வைத்த அதன் பொருளாதாரக் கொள்கைகள் வேகமான முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவக்கூடியவையாக இல்லாததால் தான் அக்கட்சி பெரிதாக அகில இந்திய அளவில் ஆரம்ப காலங்களில் வளர்ச்சி பெற முடியவில்லை.

அக்கட்சியின் மன்னர்மானிய ஒழிப்புக்கு எதிரான நிலைபாடு, வங்கிகள் தேசியமயத்திற்கு எதிரான நிலைபாடு, இவை எல்லாவற்றிற்கும் மேலாக சமூக வாழ்க்கையில் பொருளியல் ரீதியாக எந்த குறிப்பிடத்தக்க பங்கினையும் ஆற்றமுடியாத மதத்தையும் அதனை அடிப்படையாக கொண்ட ஆட்சியை நிறுவுவதையும் மையமாகக் கொண்டிருந்த அதன் கொள்கை முதலாளித்துவ வளர்ச்சிக்கு அன்றைய நிலையில் முற்றிலும் உதவாததாக இருந்தது. எனவேதான் அது அகில இந்திய அளவில் ஒரு பெரும் சக்தியாக அப்போது வளர முடியவில்லை. ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்திய முதலாளிவர்க்கத்தின் ஆதரவைப் பெற்று இக்கட்சி ஓரளவிற்கு வளர்க்கப்பட்டது. மற்றபடி ஆட்சிக்கு வருமளவிற்கு அக்கட்சிக்கு முதலாளித்துவம் வாய்ப்புத்தர முன்வரவில்லை. முதலாளித்துவத்தின் முழு ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கே இருந்தது.

உலகமயம் உருவாக்கிய வளர்ச்சி

இந்த அடிப்படையில் குறிப்பிடத்தக்க இந்திய மக்களின் வாங்கும் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தி வளர்ச்சியை எட்டியபின் இந்திய முதலாளிவர்க்கமும் ஏகபோகத் தன்மை வாய்ந்ததாகவும், அதற்கு மேல் வளர முடியாததாகவும் ஆகிவிட்டது. அந்த நிலையில் இந்திய பொருளாதாரம் இங்கு கிடைக்கும் மலிவான உழைப்புத்திறனைப் பயன்படுத்தி அதற்கு உதவும் உயர்தொழில் நுட்பத்தை வளர்ச்சியடைந்த நாடுகளிடம் இருந்து பெற்று ஏற்றுமதிப் போக்கினை ஊக்குவித்து ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாறத்தொடங்கியது. அதன்பின் ஒட்டுமொத்த உலக முதலாளித்துவ நலனுக்காக ஒரு புது உத்வேகத்துடன் கொண்டுவரப்பட்ட உலகமயம் உற்பத்தி பொருள்களோடு இந்தியாவின் உழைப்புத் திறனையும் உலகச் சந்தையின் சரக்காக்கியது அது பல இந்திய முதலாளித்துவ நிறுவனங்கள் பெருத்த ஆதாயம் ஈட்டுவதற்கு வழிவகுத்தது.

பி.ஜே.பி-யின் வளர்ச்சியின் காரணம்

அந்த நிலையில் இந்தியாவின் ஏகாதிபத்திய தன்மைவாய்ந்த முழக்கங்களும் அதனை பிரதிபலிக்கும் வெறித்தனமான தேசியவாதமும் இந்திய முதலாளித்துவத்தின் அன்றைய நலனுக்கு உகந்ததாக இருந்தது. அத்தகைய தேசிய வெறித்தனத்தை காங்கிரஸைக் காட்டிலும் மிக அதிகமாக முன்வைத்த கட்சியாக பி.ஜே.பி விளங்கியதால் அதுவரை பி.ஜே.பி மீது இந்திய முதலாளித்துவம் காட்டிவந்த கடைக்கண்பார்வை முழுக்கண் பார்வையாக மாறியது. பி.ஜே.பி. கட்சி தேர்தல் அரசியலில் பெரிதாக வளர்ச்சி அடைந்ததற்கு இதுவே பின்னணியாகும். ஆனால் காங்கிரஸ் கட்சியும் பி.ஜே.பி-யைப் போல் மதவாதக் கலப்புடன் கூடிய தேசிய வெறிவாதத்தைப் பிரதிபலிக்காவிட்டாலும், நடைமுறையில் இந்திய முதலாளித்துவத்தில் தற்போதைய ஏகாதிபத்திய வளர்ச்சிக்குகந்த தேசிய வெறிவாதத்தை நிச்சயமாகப் பிரதிபலிக்கவே செய்கிறது. இந்நிலையில் காங்கிரஸ், பி.ஜே.பி. கட்சிகளிலிருந்தான ஒரு மாற்று நிச்சயம் கொண்டுவரப்பட வேண்டியதாகும்.

கட்சிகள் வெவ்வேறாயினும் அணுகுமுறை ஒன்றே

ஆனால் முதலாளித்துவ உலக மயத்தினால் பயன்பெறும் ஒரு நாடாக இந்தியா இருந்ததால் 1995 முதல் 2007 வரையிலான கால கட்டத்தில் இங்கு மத்தியில் ஆட்சியிலிருந்த கட்சியான காங்கிரஸ், பி.ஜே.பி கட்சிகளும் மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்திலிருந்த சி.பி.ஐ(எம்) உட்பட அனைத்துக் கட்சிகளும் உழைப்புத் திறன் குறைந்த விலைக்கு கிடைப்பதால் இந்தியாவிற்கு வந்த அன்னிய மூலதனத்தை தங்கள் சாதனையால் வந்தது என்று காட்டுவதிலும், மென்மேலும் அதனைக் கொண்டு வருவதிலுமே அக்கறை காட்டின.

சி.பி.ஐ(எம்)ன் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் எத்தனை அன்னிய நாட்டு முதலாளிகள் மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர் என்று பகட்டாகக் கூறிக் கொண்டே அலைந்தார். அனைத்து முதலாளித்துவ கட்சிகளின் பாணியிலேயே அவரும் தொழில் வளர்ச்சி, சிறு கார் தொழிற்சாலை, சங்கிலித் தொடர் இரசாயனத் தொழிற்சாலைகள் என அக்கட்சியும் பிதற்றித் திரிந்தது.

இன்று நிலவும் உலகளாவிய பொருளதார நெருக்கடிச் சூழலிலும் கூட சி.பி.ஐ(எம்) கட்சி எந்த முதலாளித்துவம் இத்தகைய நெருக்கடிக்கான மூல காரணமோ அதற்கு மாற்றினைத் தேடாமல் வேறு முதலாளித்துவ சீர்திருத்த ரீதியிலான மாற்றுகளையே தேடியலைகிறது. இவ்வாறு மாற்று அணிக்குத் தலைமை ஏற்க முனையும் அக்கட்சியே உண்மையான மாற்றின் கருவினைக் கொண்டிராத போது இடதுசாரி ஜனநாயக இயக்கங்களை அறவே நடத்தாமல் முதலாளித்துவத்திற்கு சேவை புரிபவர் வரிசையில் நிற்கும் போது எங்கிருந்து காங்கிரஸ், பி.ஜே.பி கட்சிகளுக்கெதிரான உண்மையான மாற்று அணியினை அது உருவாக்க முடியும்.

உண்மையான மாற்று உருவாகும் விதம்

அத்தகைய மாற்றினை தேர்தல் சமயத்தில் தேர்தல் வெற்றிக்காக உருவாக்கப்படும் கூட்டணிகள் மூலம் மட்டும் நிச்சயம் உருவாக்க முடியாது. மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை மையமாக வைத்து நடத்தப்படும் மக்கள் இயக்கங்களை மக்கள் நலனில் அக்கறையுள்ள கட்சிகள் கூட்டாக நடத்தும் பின்னணியிலேயே அத்தகைய மாற்று சக்தியை உருவாக்க முடியும்.

மாற்றுக் கட்சிகளின் மாறாத கொள்கை

இன்றைய நிலையில் கட்சிகளை பொறுத்தவரையில் மாறாத கொள்கை என்று ஒன்றே ஒன்றைத்தான் அவை கொண்டுள்ளன. அதாவது ஆட்சியதிகாரத்தில் இல்லாத கட்சிகள் ஆட்சியதிகாரத்திற்கு வருவதற்காக தற்போது ஆண்டுகொண்டிருக்கும் பிரதான கட்சிக்கு எதிராக எது எதைஎல்லாம் முன்வைக்க முடியுமோ அவற்றை தங்களது கொள்கைகளாக கூறுகின்றன. ஆட்சியில் உள்ள கட்சிகள் அதனை தக்க வைப்பதற்காக எது எதைஎல்லாம் எதிர்கட்சிகளின் கோளாறுகள், குறைகளாக கூறமுடியுமோ அதைஎல்லாம் அதன் கொள்கைகளாக முன்வைக்கின்றன. இது தவிர நீண்டகால அடிப்படையிலான அவற்றின் வேறுபட்ட கொள்கைகள் என்று எதையும் பார்க்க முடியாது.

உயர் தொழில் நுட்ப முதல்வர்

தற்போது இந்த மூன்றாவது அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் கடந்தகால வரலாறும் அவைகுறித்த நமது அனுபவங்களும் என்ன என்பதை பார்ப்போம். முதலாவதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியைப் பார்ப்போம். அக்கட்சியை உருவாக்கிய தனது மாமனாரான என்.டி.ராமாராவிடம் இருந்து பிரிந்தவர் ஆவார் அவர். என்.டி.ஆர் இறந்தபின் அவரது செல்வாக்கை பெரிதும் தன்பக்கம் வைத்திருந்தவர் அவரது இரண்டாவது மனைவி லெட்சுமி பார்வதி ஆவார். அவரிடம் இருந்து தனது பண பலத்தினாலும் ஊடக வலிமையினாலும் ஸ்தாபனத்தை வென்றெடுத்து ஆந்திர மாநிலத்தின் பிரதேச முதலாளிகளின் நலனை பாதுகாக்கும் நம்பகமான ஏஜெண்ட் என்ற பெயரை எடுத்தவரே அவர். அவ்வாறு அவரை மறு அவதாரம் செய்யவைத்ததே இப்போது அவரது தலைமையில் இயங்கும் தெலுங்கு தேசக் கட்சி. இக்கட்சி ஆட்சிக்கு வருவதற்காக முன்பு இடதுசாரிக் கட்சிகள், அதன் பின்னர் பி.ஜே.பி என்று மாறிமாறி உறவு வைத்துக் கொள்ளும் ஒரு மகத்தான நிலைத் தன்மை கொண்ட கட்சி. தற்போது காங்கிரஸ் தனது பேச்சை கேளாமல் அமுல்படுத்திக் கொண்டிருப்பதாக சி.பி.ஐ(எம்) கட்சி கூறும் உலகமய பொருளாதாரக் கொள்கைகளை அசுரவேகத்தில் அமுல்படுத்தியவரே உயர்தொழில்நுட்ப முதல்மந்திரி என்று அப்போது அழைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு ஆவார்.

பதவி வெறிக்கு புதுப் பரிமாணம் கொடுத்த ஜே.டி.(எஸ்)

அதையடுத்து இப்போது மூன்றாவது அணியில் இடம் பெற்றுள்ள முக்கியக்கட்சி தேவகெளடாவின் மதசார்பற்ற ஜனதாதளமாகும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு கர்நாடகத்தில் கணிசமான எண்ணிக்கையில் சட்டமன்ற இடங்களை பிடித்த இக்கட்சி அதன் தலைவரும் தேவகெளடாவின் புதல்வருமான குமாரசாமியை முதல்வர் ஆக்குவதற்காக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி ஆட்சியை கவிழ்த்தது. அதன் பின்னர் பி.ஜே.பி. கட்சியுடன் ஒரு உன்னதமான ஒப்பந்தத்தை அதாவது மீதமிருக்கும் சட்டமன்ற ஆயுட் காலத்தில் பாதிகாலம் ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக இருப்பார் என்றும் அதன்பின்னர் பி.ஜே.பி.யை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருப்பார் என்றும் ஒப்பந்தம் செய்தது.

அக்கட்சியின் தலைவரது பதவி பித்து பிடித்து அலையும் போக்கை அப்பட்டமாக வெளிப்படுத்திய இந்த ஒப்பந்தத்தையும் அக்கட்சியினர் மதித்து நடக்கவில்லை. பி.ஜே.பி-யிடம் ஆட்சியை ஒப்படைக்க தவறியதால் வாக்குறுதியை காப்பாற்ற தவறியவர்கள் என்ற அவப்பெயருக்கும் அதனை அடிப்படையாகக் கொண்டு பி.ஜே.பி-யின் மேல் ஒரு அனுதாபம் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்து அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் வகுப்புவாத பி.ஜே.பி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு உதவியதே கர்நாடகத்தின் மதசார்பற்ற ஜனதா தளமாகும். இவ்விசயத்தில் அக்கட்சியினர் அகில இந்திய ஜனதா தளத் தலைமையின் வேண்டுகோளையும் கூட செவிமடுக்கவில்லை. பிரகாஷ்கரத் கூறும் தேசிய அளவிலான மாற்று அமைப்பின் ஒரு தூணாக விளங்கும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் கீர்த்திமிக்க சமீபகால வரலாறு இது.

அடுத்து இந்த மூன்றாவது அணி அறிவிப்பு கூட்டத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பியுள்ள கட்சிகள் இரண்டு. அவை ஒன்று அ.இ.அ.தி.மு.க. மற்றொன்று மாயாவதியின் பி.எஸ்.பி. இக்கட்சிகளில் அ.இ.அ.தி.மு.க. கட்சி வகுப்புவாத பி.ஜே.பிக்கு தமிழகத்தின் அதுவரை திறக்கப்படாதிருந்த கதவுகளை திறந்துவிட்ட கட்சியாகும். திராவிட இயக்க பாரம்பரியம் குறித்து பேசினாலும் அதன் தலைவி ஜெயலலிதாவின் மதச்சடங்குகளின் பாலான ஈடுபாடும் பெரும்பான்மை ஹிந்து மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தியதும் ஊரறிந்த விசயம்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தேவை ஏற்படும் போதெல்லாம் பி.ஜே.பி உள்பட வேறுகட்சிகள் அனைத்தோடும் பதவிக்கு வருவதற்காக கூட்டுச்சேரும் போக்குடையது. கர்நாடகாவில் குமாரசாமி செய்து கொண்டது போன்ற ஒரு ஒப்பந்தத்தை பி.ஜே.பி-யுடன் சேர்ந்து அறிமுகப்படுத்தி அதாவது நாடாறு மாதம் காடாறு மாதம் கொள்கையை இந்திய அரசியலில் அறிமுகம் செய்ததே அக்கட்சிதான். அதன் பின்னர் தனது கட்சிக்கென ஒப்புக்கொள்ளப்பட்ட பதவிகாலம் முடிந்தபின் பி.ஜே.பிக்கு ஆட்சியதிகாரத்தை கொடுக்க மறுத்து அக்கட்சியின் உடனான தனது உறவை முறித்துக் கொண்டு குமாரசாமிக்கு 'நல்லதொரு' முன்மாதிரியை ஏற்படுத்தித் தந்தவர் மாயாவதியே ஆவார். அவர் தற்போது இந்த மூன்றாவது அணியில் சேர்ந்திருப்பதற்கான காரணம் அவரது பிரதமர் ஆகும் ஆசையே தவிர வேறெதுவும் இல்லை.

இவ்வாறு அப்பட்டமான சந்தர்ப்பவாதத்திலும் கொள்கை கோட்பாடு எதுவும் இன்றியும் பதவிக்கு வருவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவையுமான இக்கட்சிகளை ஒன்று சேர்த்து மூன்றாவது அணி ஒன்றினை சி.பி.ஐ(எம்) கட்சி தனது முன்முயற்சியின் மூலமாக உருவாக்கியுள்ளது. இது எந்த வகையில் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸிற்கான மாற்றாக ஆக முடியும்? பதவிக்காக, பதவியை நுகர்ந்தவர்களால் மீண்டும் பதவிக்கு வருவதை மட்டுமே இலக்காகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தக் கூட்டணி எந்த வகையான மாற்றுக் கொள்கைகளையும் திட்டங்களையும் முன்வைக்கவோ, அமுலாக்கவோ போவதில்லை.

திசை மாறிய பறவைகளை உருவாக்கப் போகும் தேர்தல் முடிவுகள்

அது மட்டுமல்ல அதிகபட்ச இடங்களையும் பெறும் வெறியில் நிதானமிழந்து அலையும் இங்குள்ள அனைத்து முதலாளித்துவக் கட்சிகளின் தலைவர்களும் தேர்தலுக்குப் பின்பு ஆட்சி அமைக்க ஓரளவு வாய்ப்புள்ள எந்தக் கட்சியுடனும் பதவிகளைப் பெறுவதற்காக கூட்டுச் சேர எள்ளளவும் தயங்கமாட்டார்கள். இது சி.பி.ஐ(எம்) கட்சியினருக்கும் நிச்சயம் தெரியும். அப்படியிருந்தும் அவர்கள் இப்படிஒரு மூன்றாவது அணி ஏற்பாட்டை செய்வதற்குக் காரணம் என்ன?

மூன்றாவது அணி முழக்கத்தை சி.பி.ஐ(எம்) முன்னெடுத்துள்ளதன் பின்னணி

சி.பி.ஐ(எம்) கட்சி அதன் வலிமை மிக்க மாநிலங்களான கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் பெரும் பிரச்னைகளை தற்போது எதிர்கொண்டுள்ளது. கேரளாவில் லவ்லின் என்ற வெளிநாட்டுக் கம்பெனிக்கு இடம் விற்றதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது அக்கட்சியின் கேரள மாநில செயலாளர் பினாரயி விஜயன் சி.பி.ஐ-யின் விசாரணையைச் சந்திக்க உள்ளார். வேண்டுமென்றே மத்திய அரசு இதனை அரசியல் பழிவாங்கும் நோக்கிற்காக கையிலெடுத்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது என்று கூறும் இக்கட்சியினரால் அந்த வெளிநாட்டுக் கம்பெனியிடம் பணம் வாங்கியதை மறுக்க முடியவில்லை.

புற்றுநோய் மருத்துவமனை கட்டுவதற்காக நன்கொடையாக ஒரு தொகை பெறப்பட்டது என்று மழுப்பிக்கூறி, இப்பிரச்னையை எதிர்கொள்வோம் என்று அக்கட்சியினர் சவடால் அடித்தாலும் இதனால் மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கு பெரிதும் சரிந்துள்ளது என்பதே உண்மை. எத்தனை தூரம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று இவர்கள் கூறினாலும் மற்ற வெளிப்படையான முதலாளித்துவ கட்சிகள் எவற்றிற்கும் ஊழலில் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறும் விதத்தில் உள்ள இவர்களது செயல்பாடும் கட்சிக்குள் தலைவிரித்தாடும் முதலாளித்துவக் கட்சிகளின் போக்கான குழுவாதமும் கேரளாவில் சட்டமன்ற தேர்தலில் பெற்றது போன்ற ஒரு சிறப்பான வெற்றியை இந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் மாறி வீசும் காற்று

இதைத்தவிர இவர்கள் ஆட்சி செய்யும் இன்னொரு மாநிலமான மேற்கு வங்கத்தின் நிலையோ இன்னும் மோசமாக உள்ளது. அங்கு அவர்கள் தங்களது சொந்தக் கூட்டுக்கே தீவைப்பது போன்று கம்யூனிசக் கருத்துக்களுக்கு முற்றிலும் விரோதமாக ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களுக்கு விவசாயிகளின் விருப்பம் இன்றி அவர்களது நிலங்களை பறித்துக் கொடுக்கச் செய்த முயற்சியும் அதற்கு எதிராக நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான –டாடா-வையே தன்னுடைய ஆலையை தூக்கிக் கொண்டு அகமதாபாத்திற்கு ஓடச் செய்த-தீரமிக்க போராட்டங்களும் காற்று இவர்களுக்கு எதிராக வீசுகிறது என்பதைக் காட்டுகிறது.

வேறு மாநிலங்களைப் போல் அல்லாமல் இவர்களை சிங்கூர், நந்திகிராம் நிகழ்வுகள் அப்பட்டமாக இவர்கள் தரித்திருக்கும் கம்யூனிச முகமுடியை சுக்கல் சுக்கலாக கிழித்தெறிந்துள்ளன. மிக சமீபத்தில் நந்திகிராம் அமைந்திருக்கக்கூடிய மேதினிப்பூர் மாவட்டத் தொகுதி ஒன்றில் இடது முன்னணி வேட்பாளர் ஒரு கேவலமான தோல்வியைத் தழுவியுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தில் இவர்களின் வெற்றி காலங்காலமாக எதிர்க்கட்சி வாக்குகள் பிளவுபடுவதை அடிப்படையாகக் கொண்டே பெறப்பட்டுள்ளது. இப்போது முன்னெப்போதும் இல்லாத எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அங்கு ஏற்பட்டுள்ளது.

தனிமரமல்ல தோப்பு என நம்பவைக்கும் முயற்சி

இச்சூழ்நிலையில்தான் எங்கே நாம் வெற்றிபெற மாட்டோம் என்று மக்களிடையே தோன்றியுள்ள ஒரு எண்ணத்தை முறியடிப்பதற்காக நடைமுறையில் காங்கிரஸ் கட்சிக்கு நிகரான அல்லது அதைவிட மோசமான மேலே நாம் விவரித்த கடந்த கால செயல்பாடுகளை கொண்டுள்ள கட்சிகளோடு கூட்டு சேர்ந்து தாங்கள் தனிமரமல்ல ஒரு தோப்பு என்று காட்டி தோல்வி மிகப்பெரியதாக இருந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் சமாளிப்பதற்காக இந்த மூன்றாவது அணி என்ற முழக்கத்தை உரத்து உரத்து எழுப்பி ஏற்படவிருக்கும் தோல்வியின் பரிமாணத்தைக் குறைக்க முயல்கிறார்கள்.

எனவே இது ஒரு உண்மையான தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள அல்லது இதற்கு முன்பு நடைபெற்ற ஆட்சிகளை நடத்திய ஆட்சியாளர்கள் கடைபிடித்த கொள்கைகளுக்கு மாற்றான ஒரு கொள்கையை வைத்துள்ள ஒரு கூட்டணி அல்ல. நாடாளுமன்ற வாதம் தோற்றுவித்திருக்கும் சந்தர்ப்பவாத போக்குகளின் அப்பட்டமான ஒரு வெளிப்பாடே இது.

உண்மையான மாற்று அணியின் அவசியம்

இன்று மக்களின் தேவை ஒரு உண்மையான மாற்றுப்பாதையை முன்வைத்து கடைப்பிடிப்பதையே வேண்டுகிறது. உலக முதலாளித்துவ நெருக்கடி முற்றிப்போயுள்ள சூழ்நிலையில் உலக முதலாளித்துவத்தின் பங்கும் பகுதியும் ஆன இந்தியாவிலும் அந்நெருக்கடி வேகமாக பல்கி பரவி சிறிது காலத்திற்கு முன்பு வேலை வாய்ப்பு சந்தையில் நிலவிய பிரகாசத்தை கும்மிருட்டுக்குள் தள்ளியுள்ளது. இந்த வேளையில் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணமான முதலாளித்துவத்தை தூக்கிஎறியும் வழிமுறையை பின்பற்றி அதற்காக மகத்தான மக்கள் இயக்கங்கள் கட்டும் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு மாற்று அணியினைக் கட்டுவது மிகவும் அவசியம்.

ஆனால் இன்று செயல்படும் அனைத்துக் கட்சிகளும் இயக்கப் பாதையைக் கைவிட்டு பதவிப் பித்து பிடித்து அலைவதையே தொழிலாகக் கொண்டுள்ளவையாகிவிட்டன. எனவே முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிஸப் புரட்சிப் பாதையினை முன்வைத்து திட்டவட்டமான இயக்கங்கள் கட்டுவதன் மூலமே அத்தகைய அணிக்கான முன் முயற்சி எடுக்கும் சக்தியே உருவாக வேண்டியுள்ளது.

மாற்றல்ல ஏமாற்று

இந்நிலையில் சி.பி.ஐ(எம்) முன் முயற்சியில் உருவாகியுள்ளதாகக் காட்டிக் கொள்ளும் இந்த மூன்றாவது அணி முழுமையான சந்தர்ப்பவாதத்தைப் பிரதிபலிக்கும் ஒரு தேர்தல் கூட்டணி. தேர்தல் வரை மட்டும் நீடிக்கப் போவதே இந்தக் கூட்டணி. அதன் பின்னர் இதிலுள்ள கட்சிகள் எந்தப் பெரிய கூட்டின் பின்னால் ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள ஓடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com