Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
காதலின் சுவடுகள்

உதயகுமார்.ஜி

“சாமியை கும்பிட்டு போடா” என கூறிய தாயை ஏளனமாகப் பார்த்து கொண்டே பூஜை அறைக்குச் சென்றான் மோகன்.

roses “நேரம் ஆச்சு. ரெடியா” அவன் அப்பா சங்கரின் குரலை கேட்டு, “இன்னும் அஞ்சு நிமிஷம்பா” என்றான்.

”முதல் நாள் காலேஜ் போற! சீக்கிரம் கிளம்புடா” என்றார் சங்கர்.

அவர் கண்களில் பெருமிதம். இருக்காதா பின்னே?

இத்தனை வருடங்களில் வயலில் இரவு பகல் பாராமல் உழைத்து தான் மகனை பொறியியல் கல்லூரி வரை கொண்டு வந்து விட்டார். மோகனும் படிப்பில் மிகவும் கெட்டி. நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்குச் செல்ல பணம் இல்லாததால், தானே தேர்வுக்குத் தயார் செய்தான். ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்ணும் பெற்றான். அவன் மதிப்பெண்ணுக்கு இலவசமாக ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தது.

இதுவரை வந்தாயிற்று. எப்படியும் கல்லூரியும் நன்றாக முடித்து விட வேண்டும் என்பதில் வெறி அவனுக்கு.

”அம்மா! நான் வரேன்” என்று விடை கொடுத்து விட்டு கிளம்பினான். செருப்பு இல்லாமல் நடந்து வரும் தந்தையைக் கண்டு மௌனமாக தன்னை நொந்து கொண்டே நடந்து வந்தான். அவனை கல்லூரியில் சேர்த்து ஆயிற்று.

”அப்பா. நீ கிளம்பு. நான் பார்த்துக்குறேன்” என ஆறுதல் கூறிவிட்டு தந்தையை வழி அனுப்பி வைத்தான். அவனைச் சுற்றி அழகாய் பல பெண்கள். ஆண்களின் வாசம் மட்டுமே அறிந்த அவனுக்கு இது புதியதாய் தோன்றியது. ஆயிரம் பட்டாம் பூச்சிகள் அவனுக்குள் அணிவகுத்தன. ஆசை, எதிர்பார்ப்பு, உற்சாகம் எல்லாம் ஒரு கலவையாகி ஒருவித உணர்வை அவன் அனுபவித்து இருந்தான்.

முதல் வகுப்பு. அனைவரும் அவரவரை அறிமுகம் செய்து கொள்ளத் தொடங்கினர். இப்போது மோகனின் தருணம்!

”ஐ ஆம் மோகன். மை ஃபாதர் இஸ் அ ஃபார்மர்” என தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ஒருசிலர் அவனை கேலியாகப் பார்த்தனர். அதைப் பற்றி எல்லாம் அவன் கவலைப்பட்டதாய் தெரியவில்லை. மணிகள் நாட்கள் ஆகின. நாட்கள் மாதங்கள் ஆகின. மோகனுக்கு
பல நண்பர்கள் முளைத்து இருந்தார்கள்.

அதில் காவியாவும் ஒருவள். அவன் படிப்பு, யாரிடமும் பேசாத அவன் தன்மை, அவனுக்குத் தெரிந்தததை மற்றவருக்கு சொல்லிக் கொடுக்கும் பண்பு என எல்லாவற்றிலுமே அவன் அவளைக் கவர்ந்து இருந்தான். முதலில் அவன் அவளிடம் பிடி கொடுத்துப் பேசவில்லை. பிறகு மெல்ல மெல்ல இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

“மோகன். நாளைக்கு என் பர்த்டே பார்ட்டி இருக்கு, மறக்காம வந்துடு” அன்பு கட்டளை இட்டு போனாள் காவ்யா.

”சரி. வரேன். ஆனால் என்னால் ரொம்ப நேரம் இருக்க முடியாது. ஹாஸ்டல் வார்டன் திட்டுவார்” என சொல்லிவிட்டுக் கிளம்பினான் மோகன்.

அவள் வீட்டுக்கு சின்ன பரிசு பொருள் ஒன்றை எடுத்து கொண்டு கிளம்பினான். முதன் முதலாய் அவள் வீட்டுக்குச் செல்கிறான். அவளின் வீடு அவனுக்கு கொஞ்சம் பிரமிப்பையும் கொஞ்சம் பயத்தையும் கூட்டியது. அவளிடம் பரிசைக் கொடுத்து விட்டு வேகமாக திரும்பி விட்டான்.

காலம் அவர்களை இறுதி ஆண்டிற்குள் நிறுத்தி இருந்தது. கல்லூரியே இவர்களை காதலர்களாய் இணைத்துப் பேசி இருந்தது.

”மோகன். நாம் ஏன் எதிர்காலத்தில் ஒருத்தரை ஒருத்தர் திருமணம் செஞ்சுக்க கூடாது?” என இயல்பாக கேட்ட காவ்யாவை ஆவலோடு பார்த்தான் மோகன்.

”என்ன காவ்யா சொல்றே. நீ தொடுவானம். உன்னை என்னால் ரசிக்க முடியும். ஆனால் உரிமை கொண்டாட முடியாது” என சமாதானப்படுத்த முயன்றான்.

அவளோ தீர்க்கமாக சொன்னாள். “நல்லா யோசி. நாம ஒண்ணும் இப்போ மேரேஜ் பண்ணப் போறது இல்லை. இன்னும் 3 டு 4 இயர்ஸ் இருக்கு. நீயும் ஒரு நல்ல நிலமைக்கு வந்துடுவே. உன்னை என்கிட்டே இருந்து எதுவும் வித்தியாசப்படுத்தாது” நடைமுறையை எடுத்துக் கூறினாள். அவனும் சரியென ஒத்துக்கொண்டான். நாட்கள் உருண்டு ஓடின. கடமையோடு அவன் காதலும் வளர்ந்து வந்தது. அவன் கல்லூரி முடித்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டன.

”அம்மா. இன்னைக்கு என் ப்ரெண்ட் ஒருத்தியை நம்ம வீட்டுக்கு கூட்டி வரட்டுமா” என கேட்டுவிட்டு தாயின் பதிலுக்குக் காத்து இருந்தான்.

”ஏண்டா. இதை என்கிட்ட கேட்கிறே. கூட்டிட்டு வர வேண்டியது தானே” என்றாள் அவன் அம்மா.

அன்று புதியதாய் வரப் போகும் விருந்தாளிக்காக அவன் அப்பா, அம்மா, தங்கை என குடும்பமே காத்து இருந்தது. அவள் காரில் அவனுடன் வந்து இறங்கினாள். அவர்கள் வீட்டைப் பார்த்த உடனே முகம் சுழித்தாள். இதை அவர்கள் வீட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை, அவனையும் சேர்த்து. கலைந்த கேசம், அழுக்கு வேட்டி என அவன் தந்தை ஒரு விவசாயியை வார்த்து எடுத்து இருந்தார். அவளுடைய ஒவ்வொரு செய்கையும் வெறுப்பை ஊமிழ்ந்தன. மோகன் நிகழ்வது அறியாமல் திகைத்தான். அவள் அவனை தனியே அழைத்தாள்

”மோகன். உங்க வீடும், உங்க வீட்டில இருக்கறவங்களும் இப்படி இருப்பாங்கணு நான் நினைக்கவே இல்லை. இருந்தாலும் நான் நேசித்தது உங்களை மட்டும் தான். நம்ம மேரேஜ் முடிஞ்சதும் நாம தனியா போயிடலாம். மாசா மாசம் ஒரு தொகையை உங்க வீட்டுக்கு கொடுத்துடுங்க. இவங்க கூட என்னால வாழ முடியாது” என குமுறினாள் காவியா.

கை கழுவ வந்த சங்கர் நிலைமையை ஓரளவுக்கு ஊகித்துக் கொண்டார். தன் மகன் என்ன சொல்லப் போகிறான் என வியப்போடு நின்று கொண்டிருந்தார்.

”இங்கே பார் காவியா. உன்னை எனக்கு ஏழு வருஷமா தான் தெரியும். ஆனா என் குடும்பத்தை 24 வருஷமா தெரியும். என்னை எங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வச்சார்னு தெரியுமா. நான் இஞ்சினியரிங் படிக்கறதுக்காக என் தங்கை +2 வோடு படிப்பை நிறுத்திக்கிட்டா. என் அம்மா தன் தாலியை அடக்கு வச்சு தான் என் ஃபைநல் இயர் எக்ஸாம் பீஸ் கட்டுனாங்க. இன்னைக்கு நான் நல்ல நிலமையில் இருக்கேன் என்பதற்காக நான் அவங்களை கை விட முடியாது. உனக்கு என்னை மாதிரி, ஏன் என்னை விட நல்லா நிறைய மாப்பிள்ளை கிடைப்பாங்க. ஆனா என் அப்பா அம்மாவிற்கு என்னை மாதிரி ஒரு மகன் கிடைக்க மாட்டாங்க. நீ என்னை மறந்துடு. நானும் மறந்துடறேன்” என கண் கலங்கியவாறே கூறி முடித்தான்.

இப்போது சங்கரின் கண்களும் நனைந்து இருந்தன. காவியா ஓடி வந்து மோகனை இறுக்கி கட்டி கொண்டாள்.

“என்னை மன்னிச்சுடுங்க. இது நான் உங்களுக்கு வச்ச சிறுபரீட்சை தான். நீங்க விண் பண்ணீட்டீங்க மோகன். உங்களை கணவனாய் அடைய நான் கொடுத்து வச்சு இருக்கணும். எப்போதுமே மாறாமா இருக்கற உங்க பாசம் போலதான் உங்க காதலும் என்னைக்கும் மாறாது” என கூறிக்கொண்டே அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.

ஒரு நொடியில் எல்லாம் முடிந்து விட்டதாய் எண்ணிய மோகன் அவளை நிமிர்த்தி “அழாதேடி. எல்லா ஜென்மத்திலும் நான் தான் உன் புருஷன்” என சொல்லி மெல்லிய முத்தத்தை அவள் நெற்றியில் பதித்தான்.

அவன் குடும்பமே ஆனந்த களிப்பில் நின்று கொண்டு இருந்தது. அவர்கள் நிற்பதைப் பார்த்த காவ்யா அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றாள்.

அவர்களின் காதலின் சுவடுகள் மெதுவாய் எல்லோர் இதயத்திலும் பதிய தொடங்கி இருந்தன


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com