Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
வாரத் தேவை
சூர்யா

25 வயதிற்கு பின் வாழ்வின் அத்தியாவசிய தேவைகளுள் பாலுணர்வும் ஒன்றாகிவிடுகிறது. உலகில் கணவன் மனைவிக்கு இடையில் நடக்காத சண்டைகளா? ஆனாலும் சேர்ந்து வாழத்தான் செய்கிறார்கள். பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறார்கள். முதன் முதலில் ஒரு குழந்தையானது பயத்தை கற்றுக் கொள்வது பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொள்ளும்போதுதான். வெறித்து பார்த்தபடி அமர்ந்திருக்கும் அந்த குழந்தைக்குள் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருக்கும். பெற்றவர்களைப் பொருத்தவரை குழந்தைகள் வீட்டை அலங்கரிக்கும் பொருள்களில் ஒன்றாகும்.

Couple தேவராஜன் தேவிஸ்ரீ பெயர்ப் பொருத்தம் நன்றாக அமைந்துவிட அவர்கள் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்திருந்தது. யாருக்கும் கிடைக்காத பேறு தனக்கு கிடைத்து விட்டதாக நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்திருந்தான் தேவா. ஆனால் சலிப்பு என்ற ஒன்று இருக்கின்றதே.,எவ்வளவு தான் திருநெல்வேலி அல்வாவை வாய் கொள்ளும் மட்டும் தின்றாலும் திகட்டுதல் என்பது ஏற்படத்தானே செய்யும். அதற்கு ஒரு கால நிர்ணயம் கூட நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மூன்று மாதம். அதாவது மோகம் முப்பது நாள் காமம் அறுபதுநாள். ஆக மொத்தம் 90 நாள், அதன் பிறகு அது ஒரு வாரத் தேவையாகிவிடுகிறது. மற்ற நாட்களில் வேறு என்னதான் செய்வது, சண்டையிடுவதைத் தவிர.

பெண்களைப் பொருத்தவரை அதிக சக்தியுடன் தயாராக இருக்கிறார்கள். ஆண்கள் தான் வாரத்தின் ஆறு நாட்களும் தோற்றுப் போகிறார்கள். அலுவல் சோர்வில் அவர்கள் மனைவியிடம் அடங்கிப் போவது என்பது இயல்பாகிவிடுகிறது. இத்தனைக்கும் நடுவில் அவளின் சகிக்க முடியாத தாக்குதல் மற்ற பெண்களுடன் அவனை ஒப்பிட்டு பேசும் குரூரமான போக்கு, திருமணமாகி 2 வருடங்கள் கடந்தாகிவிட்டது. இது தேவி கண்டுபிடித்திருக்கும் புது வித பிரம்மாஸ்திரம். அவனை ஒரே வார்த்தையில் அடக்க வேண்டுமானால் இந்த யுக்தி நன்றாக வேலை செய்கிறது. குறை கூறுவதில் அவளைத் தேர்ச்சி செய்து கொள்வதற்கு தினசரி பயிற்சியை அக்கம் பக்கத்து வீட்டுக்கார பெண்மணிகள் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார்கள்.

வெகுநாள் பனிப்போருக்கு இடையில் பிறந்த பெண் குழந்தைதான் சத்தியப்பிரியா. தினசரி அவர்களுக்கிடையில் நடக்கும் சண்டை நடுவர் போல் அமர்ந்து கொண்டிருக்கும் பயந்து போன பிரியாவின் முன்னிலையில் தான்.

சென்ற வாரம் 25 ஆம் தேதி அலுவலக வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்தான். ஒரு நாளில் வேலை முடிந்திருந்தாலும் மேலும் இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்து ஆட்டம் போட்டான். காரணம் பார்வதி. அவள் அங்கேதான் அறிமுகமாகியிருந்தாள். அவளது முதல் பார்வையே மயக்குவதைபோல் இருந்தது. வார இறுதியில் அதாவது சனிக்கிழமை இரவுகளில் தேவியின் பார்வை இப்படித்தான் இருக்கும். அந்த பார்வையைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும்.

வேலையை இரண்டு நாட்கள் நீடித்தான். தேவா தங்கியிருந்த அறைக்குப் பக்கத்து அறையில் அவள் தங்கியிருந்தாள். ஒரு நாளில் ஐந்து முறையாவது அவளது பார்வைக்கு இரையாக வேண்டியிருந்தது. அவளைப் பார்த்தால் பிராஸ்டியூட் என்று சொல்லத் தோன்றவில்லை. அப்படி ஒரு குடும்பப் பாங்கான தோற்றம். அவளது பார்வையில் ஏதோ ஒரு வித கெஞ்சுதல் தன்மை இருந்தது. தன்னைக் காப்பாற்றி வாழ்வளிக்கக் கேட்கும் பார்வை. கவனிக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. ஒரு பெண் ஒரு ஆணை வெற்றி கொள்ளும் இடம் வெறும் பாலுணர்வு மட்டும் அல்ல. அவளது அடைக்கலம் தேடும் பண்பும் அவனை அடிமையாக்கிவிடுகிறது. எந்த ஒரு சூழ்நிலையில் அடைக்கலம் கேட்கப்பட்டாலும் கர்ணனைப் போல் மறுக்காது கொடுத்துவிடும் தன்மை கருணையா? அல்லது தன்னலத்துடன் கூடிய பாலுணர்வு ஆக்கிரமிப்பா? ஏனெனில் இவர்கள் ஒரு ஆண் இவ்வாறு கெஞ்சும் பார்வையில் கேட்கும்போது கண்டிப்பாக மறுத்துவிடுவார்கள். அது எப்படியானாலும் அவன் கண்ணியில் சிக்கிய புலியா இல்லை மானை வீழ்த்திய புலியா என்பது அவரவர் கண்ணோட்டத்திற்குரியது.

இரண்டு நாட்களில் 75 போன் தேவியிடமிருந்து. தேவிக்கு நிலைகொள்ளவில்லை, கற்பனைக் குதிரை நாலுகால் பாய்ச்சலில் ஈரேழு உலகங்களையும் சுற்றி வந்தது. தேவா 2 நாட்களில் வந்து விடுவதாக சமாதானம் கூறிக் கொண்டே இருந்தான். அன்று இரவு ஹோட்டல் லாபியில் இருந்த தேனீர் விடுதியில் தனக்கென ஒரு இடத்தை நிர்ணயித்துக் கொண்டு அமர்ந்து கொண்டான். அவள் நிச்சயமாக பார்வையில் படுமாறு எதிர்த்தாற் போல்தான் வந்தமர்வாள்.

கடந்த இரண்டு நாட்களும் அப்படித்தான் நடந்தது. ஒரு வேளை இன்றும் அப்படி நடந்தால் அவளிடம் அடுத்த கட்ட வடவடிக்கையை தொடங்க வேண்டியதுதான். இல்லையென்றால் மூட்டையைக் கட்டிக் கொண்டு ஊரைப் பார்த்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான். நினைத்தது போலவே அவள் தன் ஓரக்கண்ணால் பார்த்தபடியே அவனுக்கெதிர்த்தாற் போல் வந்தமர்ந்தாள். இவனுக்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. ஏதோ புது மாப்பிள்ளை போல் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளருகே செல்லலாம் என்று நினைத்து எழுந்தான். அப்பொழுதுதான் கவனித்தான் அவள் தனது கர்ச்சீப்பால் தனது கன்னங்களில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அவள் உதவி எதிர்பார்த்து தன்னை எதிர்நோக்கியிருக்கிறாள் என்று மட்டும் நன்றாகப் புரிந்துவிட்டது.

இனி பேசுவதற்குப் பயமில்லை. அவளிடம் கருணையுடன் பேசுவதற்கு ஒரு டாபிக் கிடைத்துவிட்டது. அவளருகே எந்தவிதமான மனப்பதற்றமும் இல்லாமல் தைரியமாக சென்றான். அருகிலிருந்த குஷன் சேரை இழுத்துப் போட்டு விட்டுக்கொண்டு அவளது கண்களை ஆழமாக உற்றுப் பார்த்தான். அதில் மிரட்சி தெரிந்தது. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. திணறினான்.

“ம்ம்ம்ம்.. உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“பார்வதி”

“நைஸ், நைஸ் நேம்”

“உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா”

“இல்லை”

பொங்கி வந்த மகிழ்ச்சி சிரிப்பை முயற்சி செய்து அடக்கிக் கொண்டான்.

“என் பேர் என்னன்னு தெரியுமா? உங்களுக்கு”

“தெரியும்”

“தெரியுமா ? எப்படி?”

“கீழே ரிஜிஸ்டர்ல கேட்டு தெரிஞ்சுகிட்டேன்”

“ஓ! நான் உங்களை ரெண்டு நாளா வாட்ச் பண்ணிகிட்டுத்தான் இருக்கேன். நீங்க என்ன பாக்குறதும். சிரிக்கிறதும்”

“பாத்தேன் ஆனா சிரிக்கலேயே”

“ம் மே பி. ஆனா இப்போ அழுகிறீங்க. என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?”

அவளது பார்வை நிலைகுத்தியது. கண்களில் கண்ணீர் கட்டுக்கடங்காமல் வலிய ஆரம்பித்தது. அவன் பதறிப்போனான். சமாதானப்படுத்த முயற்சி செய்தான். ஆனால் முடியவில்லை. யாரும் தப்பாக நினைப்பதற்குள் இங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்று நினைத்து எழுந்தான். அவள் அவனது கைகளை பிடித்துக் கொண்டாள். தனது கன்னங்களோடு சேர்த்து பிடித்து அழுத்திக் கொண்டாள். பிறகு நாகரிகம் கருதி சுற்றிப் பார்த்தபடி தனது அழுகையை அடக்கிக் கொண்டாள். அவனது கைகளில் தனது விசிட்டிங்கார்டை திணித்தாள். அதில் அவளது சொந்த ஊர், அட்ரஸ், செல்நம்பர் எல்லாம் இருந்தது.

“நீங்க என் வீட்டுக்கு கண்டிப்பா வரணும். நான் எதிர்பார்த்து கொண்டிருப்பேன்”

அழுது கொண்டே ஓடிவிட்டாள். அவனால் நிலை கொள்ள முடியவில்லை. தன்னை ஒரு பெண் அழைத்திருக்கிறாள் என்றால் தன்னிடம் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது என்று நினைத்துக் கொண்டான்.

வீட்டில் தேவியின் கவனிப்பு பலமாக இருந்தது. சி,பி,ஐ தோற்றது. அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் மூளை வறண்டு விட்டது. ஒரு மாதிரியாக சமாதான முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டான். அவளை சந்திக்கப் போகும் அந்த நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். ஒரு வார வேலைக்குப் பிறகு அன்று தொடர்ந்தாற் போன்று இரண்டு நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொண்டான். ஏதோ வெளியூரில் நண்பனை சந்திக்கப் போவதாக சொல்லிவிட்டு கிளம்பினான்.

தேவிக்கு இந்த பொய்யெல்லாம் போதாதென்று நன்றாக தெரிந்திருந்தும் லூசுத்தனமாக இப்படி ஒரு பொய்யை கூறிவிட்டு சென்றான்.

ஊர் மதுரை. திருநகர். ஐந்தாவது நிறுத்தம். லக்ஷ்மி காலனி. நம்பர் 43. தேடிக் கண்டுபிடித்து சென்றான். வீட்டின் முகப்பில் நாகராஜ் பவனம் என்றிருந்தது. யார் இந்த நாகராஜ் ஒரு வேளை தந்தையாக இருக்குமோ? தனக்குள் நினைத்துக் கொண்டான். இன்று வருவதாக ஏற்கனவே போன் செய்து கூறியிருந்தான். அவன் உள்ளே நுழைந்ததுமே நன்றாக தெரிந்தது. அவனுக்கான ஏற்பாடுகள் பலமாக நடந்திருப்பது. அடுக்களையிலிருந்து ஓடி வந்தாள் சிரித்த முகத்துடன். அவனது கைகளை பற்றிக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றாள். உட்கார வைத்தாள். ஆசுவாசப்படுத்தினாள். குடிப்பதற்கு குளிர் பானங்களை கொடுத்தாள். உணவு பரிமாறினாள். அவனுடைய எதிர்பார்ப்பெல்லாம் வேறாக இருந்தது. இருப்பினும் உடனே ஆரம்பிக்க வேண்டாம். சற்று பொறுப்போம் என்று நினைத்துக் கொண்டான்.

அவன் நினைத்தது போலவே வீட்டில் வேறு யாருமே இல்லை. எதற்கும் கேட்டு வைப்போமே என்று கேட்டான். அவள் எதுவும் பேசவில்லை. நேராக எழுந்து சென்றாள் பீரோவை நோக்கி. அதற்குள்ளிருந்து பெரியதாக ஒரு ஆல்பத்தை எடுத்தாள். அதில் அவர்களது குடும்பத்தினருடைய அனைத்து போட்டோக்களும் இருந்தது. ஆல்பத்தை விரித்து வைத்தப்படி ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தாள். இவள் நேரம் ஆக்குவதைப் பார்த்துவிட்டு நினைத்துக் கொண்டான் இவள் தேவியை விட அதிகமாகப் பேசுகிறாள் என்று.

வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக தலையில் இடி விழுவதைப் பற்றிய அனுபவம் சில பேருக்குத்தான் உண்டு. அவள் ஆல்பத்தின் 7 ஆம் பக்கத்தை திருப்பினாள். அதில் தேவராஜின் போட்டோ இருந்தது. ஆனால் சற்று இளம் வயதில் எடுத்தது போல் இருந்தது. இது எப்படி இவளுக்கு கிடைத்தது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கையில் அவள் கூறினாள்.

“இது தேவக்குமார்”

“இல்லை தேவராஜ். அது தான் என்னோட பேர்”

“இல்லை இது என்னோட அண்ணா தேவகுமார். அசப்பில பாக்குறதுக்கு உங்கள போலவே இருப்பார். மிலிட்ரில வேலை பார்த்தார். ஸ்ரீநகர்ல தீவிரவாதிகளோட நடந்த சண்டைல இறந்துட்டாரு”

இடி நடு மண்டையில் சென்டராக இறங்கியது. அவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனது மடியில் ஆல்பத்தை வைத்தபடி உரிமையோடு அவனது அருகே நெருங்கி உட்கார்ந்தபடி அந்த கடைசி வரிகளை சொல்லும்போது அவனுக்குள் கிளர்ந்தெழுந்த உணர்ச்சிகள் எல்லாம் செத்து விழுந்தன. அடுத்த இரண்டு மணிநேரம் கண்ணீரை விட்டுவிடாமல் கண்ணுக்குள்ளேயே அழுதான். அவளிடம் அன்பாகப் பேசினான். தான் தன் காதலிக்கு வாங்கி வந்திருந்த பரிசை (தங்க மோதிரம்) தன் தங்கைக்கு அணிவித்தான். அன்போடு விடைபெற்று சென்றான்.

இரண்டு நாட்களாகும் என்று சொல்லிவிட்டுச் சென்றவன் அடுத்த நாளே வந்தது குறித்து அதிர்ச்சியடைந்தாள் தேவி. அன்று வாரத் தேவைக்கான நாள். சனி இரவு. எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக இருக்கும் நாள். அவனிடம் அனுசரணையாகப் பேசினாள். இரவு அவனுக்குப் பிடித்தாற் போல் எப்படி எப்படி எல்லாமோ வளைந்து குழைந்தாள். அவனது செத்துப் போன உணர்ச்சி உயிர் பிடிக்கவேயில்லை. பாலுணர்வு குறித்த பக்குவத்தின் முதல்படியில் மனைவியை ஏமாற்றாமல் அவளை அணைத்துக் கொண்டு அப்படியே படுத்துக் கொண்டான்.

என்ன அதிசயம் நடந்ததோ தெரியவில்லை அடுத்து வந்த சில நாட்களில். தேவியின் குறை கூறும் தாக்குதலும் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது. பாலுணர்வு குறித்த பக்குவம் மனைவியுடன் கூடிய உறவை சரியான அணுகுமுறையோடு நடத்தி செல்கிறது என்பது எவ்வளவு நிதர்சனமாக இருக்கிறது என்று உணர்ந்து கொண்டான். அவள் தன் உள்ளக் கிளர்ச்சியையும் அறிந்து கொள்கிறாள். உள்ளத்தின் கிளர்ச்சியற்ற தன்மையையும் அறிந்து கொள்கிறாள். உண்மையில் உள்ளத்தில் ஏற்படும் மாற்றம் வாழ்க்கையில் தான் எத்தனை விதமான ஜாலங்களை நிகழ்த்துகிறது.

அன்று இரவு சத்யப்பிரியா அமைதியாக கண்களை மூடியபடி. வாயை மெதுவாக திறந்து வைத்துக் கொண்டு தூங்கி கொண்டிருந்தாள். மணி இரவு 8:30. நிலவொளி தென்றலோடு கலந்து வீசியது,

- சூர்யா([email protected])


இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com