Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
ஒரு தலைமுறை வரலாறு
பட்டுக்கோட்டை சி.வ.தங்கையன்

ஆகம விதி தெரிந்த பெரியப் பெரிய ஆண்மீகப் பெரியார்களை அழைத்து வந்து, அவர்கள் தந்த ஆலோசனைகளை அப்படியேப் பின்பற்றி, கொஞ்சங்கூடப் பிசகாமல் கட்டி முடிக்கப் பட்டது எங்களூர்க் கோயில். கோயிலைக் கட்ட வீடுகள் தவறாமல் வரி போடப்பட்டது. வரி எங்களூரில் வாழ்பவர்களின் வசதிக்கு வசதிப்படாததாய் இருந்தாலும் மறுப்புச் சொல்லாமல், மல்லுக் கட்டி ஊரிலுள்ள எல்லாக் குடும்பத்தினரும் கொடுத்து முடித்தார்கள். வசூலிக்கப் பட்ட தொகை கோயில் கட்ட போதுமானதாக இல்லாததால் வெளியூரில் வேலை பார்க்கும் எங்களூர்க்காரர்களை பட்டியல் போட்டு, அவர்கள் வேலை பார்க்கும் இடங்களுக்குச் சென்று நன்கொடை திரட்டினார்கள். அந்த அடிப்படையில் என்னிடமும் வந்து ஒரு பெரிய தொகையைச் சொல்லி வசூலித்துச் சென்றார்கள்.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் எங்கள் சுற்று வட்டார ஆட்களுக்கு அவர்களுக்கு ஏற்றவர்களை ஏற்பாடு செய்து நல்ல தொகையைச் சேர்த்தார்கள். வியாபாரிகளும், பெரும் பணக்காரர்களும், பைனான்ஸ் நடத்திக் கொண்டிருப்பவர்களும் தாங்களாகவே முன்வந்து நிறையத் தொகையை நன்கொடையாகக் கொடுத்து புண்ணியத்தைக் குறுக்கு வழியில் பெற்றுக் கொண்டதாய் மகிழ்ந்து கொண்டார்கள்.

கோயில் கட்டுமாணப் பணியைத் தொடங்கி இரண்டாண்டுகளுக்குள்ளேயே முடியும் தருவாய்க்கு வந்தது. ஊரிலுள்ள பெரிய மனிதர்கள் மற்றும் முன்னே நின்று வேலைகளைச் செய்பவர்களெல்லாம் ஒன்று கூடி குடமுழுக்குச் செய்வதற்கு ஏற்பாடு செய்தார்கள். நன்கொடையாளர்களூக்கு குடமுழுக்குக்காக அடிக்கப் பட்ட அழைப்பிதழ் அனுப்பப் பட்டது. எனக்கும் ஒன்று வந்து சேர்ந்தது. ஊரிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் அவரவர்களின் உறவினர்களுக்கு தனிப் பட்டமுறையில் அழைப்பு விடுத்து குடமுழுக்குக்கு அழைத்திருந்தனர். மைக்செட் வைத்து சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்துக்கும் இது பற்றி விளம்பரம் செய்யப்பட்டது.

கோயிலுக்கருகில் யாகசாலை அமைத்து சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. பல நாட்களாக வேத மந்திரங்கள் தொடர்ந்து ஓதப்பட்டு, சுற்று வட்டாரக் கிராமங்களுக்கெல்லாம் கேட்கும் அளவுக்கு ஒலிபரப்பப் பட்டது.

எங்களூர்ப் பகுதியில் இப்படி ஓர் கூட்டத்தைப் பார்த்ததே இல்லை என்று ஊரிலுள்ள வயதானவர்கள் பேசிக்கொண்டார்கள். அந்த அளவிற்கு கும்பாபிக்ஷேக நாளில் கூட்டம் கூடி இருந்தது. ஜன சமுத்திரத்தில் ஊரே மூழ்கிப் போனது. என்னுடைய மனைவியின் ஆசையைப் பூர்த்திச் செய்வதற்காக, என் மனைவியுடன் நாத்திகனான நானும் இதில் ஒரு துளியாகச் சங்கமித்தேன். பிருமாண்டமாய் எழுந்து நிற்கும் ஆலயத்தையும் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தையும் பார்க்கிறபோது எனக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன அப்பாவின் ஞாபகம் வந்தது.

அப்பா பூசாரி. நான் நாத்திகன். ஆச்சரியமாக இருக்குமே! உலகத்தில் மிகவும் புகழ் பெற்ற நாத்திகர்கள் எல்லாம் பூசாரிகளின் பிள்ளைகள்தான். கடவுளைப் போதிப்பவர்களின் உண்மை நடவடிக்கைகளை கண்முன்னேக் காணும் அல்லது அருகில் இருந்து உணரும் வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் கிட்டி விடுவதின் காரணமாக, நாத்திகத்தில் நாட்டம் ஏற்பட்டு விடுகிறதோ!

என்னுடைய பள்ளி நாட்களில் அப்பாத்தான் இந்த கோயிலின் பூசாரி. அப்போதெல்லாம் அந்த இடத்தில் கோயிலென்று ஒன்று இல்லை. ஒரு இரும்பு சூலாயுதம் வடக்கு நோக்கி நடப்பட்டிருக்கும். அருகில் சற்று தூரத்தில் முனியாண்டவர் சிலை வடக்கு முகமாக கட்டப்பட்டிருக்கும். இதுதான் எங்களூர்க்காரர்களின் வழிபாட்டுத் தலமாக இருந்தது.

ஊரில் யாருக்கும் தலைவலி காய்ச்சலென்றால் ஊர் மக்கள் அப்பாவை நாடுவார்கள். அப்பாவும் எங்கள் அம்மாவிடம் கொஞ்சம் விபூதியை வீட்டிலுள்ள சிறிய தாம்பலத்தில் எடுத்துவரச் சொல்லுவார். தாம்பலத்தை இரண்டு கைகளாலும் ஏந்திப் பிடித்துக் கொள்வார். வீட்டிலிருந்தபடியே, கோயிலின் திசைப் பக்கம் திரும்பி நின்றுகொண்டு வீட்டின் மேட்டுவளையை கண்களை உருட்டிப் பார்த்தபடியே கொஞ்சநேரம் இருப்பார். சில சமயம் திடுக்கென்று தூக்கிப் போடும் அளவிற்கு வினோத ஒலி எழுப்பிய பின்னர் கொஞ்சம் விபூதியை அள்ளி ஆகாயத்தை நோக்கி வீசிவிட்டு, கொஞ்சம் விபூதியை உடம்புக்குச் சரியில்லை என்று வந்தவரின் தலையில் தூவிவிட்டு தனது பெரு விரலால் பாதிப்புக்குள்ளானவர் நெற்றியின் குறுக்கு வாக்கில் பூசிவிடுவார். பின்னர் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி அனுப்புவார்.

அப்பா பல சமயங்களில் சாமியாடி அருள்வாக்குச் சொல்வதுண்டு. அப்பாவின் வாலிப வயசில் நிறைய தலைமுடி வைத்திருந்ததாயும் அதை அழகாகக் குடுமி போட்டு வைத்திருப்பார் என்றும் அம்மா சொல்லி இருக்கிறார்கள். அப்பாவின் நீண்ட குடுமி பறந்து விரிந்து அலை அலையாய்க் காற்றில் ஆட சாமி ஆட்டம் நடை பெறுவதைப் பார்த்தால் அசல் முனீஸ்வரனே நேரில் வந்ததைப்போல் இருக்கும் என்றும் அம்மா சொல்லியதுண்டு. எங்கள் மூத்த அண்ணனுக்கு பதினாறு வயது நடந்துக் கொண்டிருந்தபோது முடியைக் கத்தரித்து கிராப்பு வெட்டிக் கொண்டதாக பிற்காலத்தில் அப்பாவே என்னிடம் சொல்லி இருக்கிறார். நான் எட்டாவதாகப் பிறந்திருந்த காரணத்தால் அப்பாவின் குடுமித் தலையைப் பார்த்திருக்கும் வாய்ப்பு எனக்கு வாய்க்காமல் போனது.

நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை எனக்கு நல்ல காய்ச்சல் வந்திருந்தது. காய்ச்சல் வந்ததற்கான காரணம் நான் அறிந்திருந்தேன். ஜலதோஷம் பிடித்திருந்த வேளையில், நீளம் தாண்டும் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக நான் கடும் பயிற்சியில் ஈடுபட்டதுடன் குளிர்ந்த தண்ணீரில் குளித்ததால் காய்ச்சல் தீவிரமடைந்திருந்தது.

அப்பா எனக்கு விபூதி போட்டார். அவர் சாமியாடி விபூதி போட்டபோது நான் பயந்திருப்பதாகச் சொன்னார். அதாவது நான் பள்ளிக்கூடம் போய் வரும் சாலையில் ஒரு இடத்தில் புங்க மரம் ஒன்று இருப்பதாயும், அந்த இடத்தில் நான் வரும்போது நாயைப்போல ஒன்று குறுக்காக ஒடியதாகவும் அதைப் பார்த்துப் பயந்ததால் காய்ச்சல் ஏற்பட்டதாகவும் சொன்னார். அம்மா பயபக்தியோடு அப்பாவிடம் விபூதியை வாங்கி எனக்குப் பூசிவிட்டார்கள்.

பள்ளிக்கூடத்திலிருந்து வரும் வழியில் புங்க மரம் இருப்பது உண்மைதான் அந்த இடத்தை நான் கடந்தபோது, எந்தக் காலத்திலும் எதுவும் குறுக்கிட்டதைப் போன்று எனக்கு ஞாபகம் இல்லவே இல்லை. அம்மாவிடம் இதை சொன்னேன். அப்படியெல்லாம் சொல்லக் கூடாது என்றும், நான் சரியாகக் கவனித்திருக்க மாட்டேனென்றும் சொன்னார்கள். இருந்தாலும் அப்பாச் சொன்னதுபோல் நடந்திருக்கவில்லை என்பது மட்டும் நெஞ்சில் ஆழமாய் பதிந்து போனது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அப்பா யாருக்குச் சாமியாடி அருள் வாக்குச் சொன்னாலும் அது அப்பா வாய்க்கு வந்தபடி சொல்லுவதாகவே நினைத்துக் கொள்வேன்.

அப்பாவுக்கு வயது ஆக ஆக சாமியாடி அருள்வாக்குச் சொல்வது குறைந்து கொண்டே வந்தது. அவருடைய கடைசி காலங்களில் அருள்வாக்குப் பற்றிக் கேட்கும்போது சொல்வார், “சாமி ஆடும்போது ஒடம்பெல்லாம் ஒருமாதிரி சிலுத்துகிடும். அந்த நேரத்தில் என்ன தோனுதோ அதைச் சொல்லி புடுறது. அவ்வளவுதான். அது சரியோ தப்போ அப்படியே நம்ம ஆளுக ஏத்துக்கிடுவாங்க.” என்பார்.

ஒவ்வொரு கோயிலுக்கும் தலபுராணம் இருப்பதைப் போலவே எங்களூர்க் கோயிலுக்கும் தலபுராணம் இல்லாமலில்லை. இதனை எனக்கும் என்னுடன் பிறந்தவர்களுக்கும் அப்பாவேச் சொல்லி இருக்கிறார்.

தற்சமயம் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் நெடுஞ்சாலை அந்தக் காலத்தில் ஒரு சிறிய மாட்டு வண்டிப் பாதையாய் இருந்ததாம். பாசனத்திற்காக உள்ள கால்வாய்களும் அப்பா சிறிய பையனாக இருந்தபோது வெட்டப் படவில்லையாம். இன்று நெல்வயல்களாய்க் காட்சிதரும் நிலங்களெல்லாம் அந்தக் காலத்தில் மானாவாரிப் பயிரிடப் படும் புஞ்சை நிலங்களாம். பிற்காலத்தில் பாசனக் கால்வாய் அமைத்தப் பின்னர் அவைகள் நெல்வயல்களாய் மாற்றமடைந்ததாம்.

ஊரிலுள்ள சின்னஞ் சிறியவர்களுக்கு அப்பொழுது ஆடு மாடு மேய்பதுதான் பிரதான வேலையாம். நான்கைந்து சிறியவர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து, ஆடு மாடுகளை மந்தையாய் சேர்த்துக்கொண்டு, காலையில் கிளம்பினால் மாலையில் பொழுது மறைந்தபின்தான் ஊருக்குள் திரும்பி வருவார்களாம். அதில் அப்பாவும் ஒருவராம். மதியச் சாப்பாட்டுக்கு ஒன்றிரண்டு பையன்களை கால்நடைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ஊருக்குள் மற்றவர்கள் வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வதுண்டாம். பல நாட்களுக்கு மதிய உணவை பொருட் படுத்த மாட்டார்களாம். காரணம் மதியம் பசி வந்தால் கொல்லைக் காட்டில் பயிரிடப் பட்டிருக்கும் சோளம், கம்பு, கடலை, துவரை போன்றவைகளை அதன் சொந்தக்காரருக்குத் தெரியாமல் திருடி வந்து தின்பதுண்டாம். சில சமயங்களில் அவற்றை தீமூட்டி அவித்துத் தின்பதும் உண்டாம்.

இப்படித் திருடிக்கொண்டு வந்தவைகளை முந்திக்கொண்டவர்கள் தின்று தீர்த்து விடாமல் இருப்பதற்கு ஒரு உபாயத்தைக் கையாள்வார்களாம். அதாவது தின்பதற்காக திரட்டிக் கொண்டு வந்தவைகளை ஒரு மரத்தடியில் சேர்த்து வைத்து, அல்லது அவற்றைத் தீ மூட்டி அவித்து வைத்து உடன் வந்த அனைவரும் ஒன்று சேர்ந்து சாமிக் கும்பிட்டபின் சாப்பிட ஆரம்பிப்பார்களாம். முதலில் சாதாரணமாய் கும்பிட்டவர்கள் போகப் போக சாம்பிராணி போன்றவற்றை வீட்டிலிருந்து கொண்டு வந்துக் காண்பித்து சாமி கும்பிட்டபின் திருடியவைகளை தின்ன ஆரம்பித்தார்களாம்.. கொஞ்ச காலத்திற்குப் பின்னர் அவர்கள் தின்பதற்காக திரட்டி வைத்திருக்கும் இடத்தில் அங்கிருந்த ஆலமரத்தோடு இரண்டு செங்கலைச் சாற்றி ஆதில் விபூதிப் பட்டை போட்டு கும்பிட்டு தங்கள் செயல்களைத் தொடர்ந்ததாக அப்பா சொல்வார். பிறகு சில காலங் கழித்து செங்கல் இருந்த இடத்தில் இரும்பாலான சூலாயுதம் ஒன்றை நட்டு, அம்மன் பெயர் சூட்டப்பட்டு, ஊர் மக்கள் அனைவரும் வழிபாடு நடத்த ஆரம்பித்து விட்டார்களாம். அந்த நேரத்தில்தான் முனீஸ்வரன் சிலை அமைக்கப் பட்டதாம். இதுதான் தலைமுறை தாண்டிய பின்னர் இன்று கோயிலாக எழுந்துள்ளது.

தலபுராணம் அப்பாவின் மூலமாக தெரிந்து கொண்ட நான் அப்பா பூசாரியான கதையையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அப்பாவுக்கு திருமணம் ஆன புதிது. அந்தக் காலத்தில் தங்களுக்குத் தேவையான சமையல் எண்ணையை, தாங்களே வேர்க்கடலைப் பருப்பை கொண்டுபோய் மரச்செக்கில் ஆட்டிக்கொண்டு வருவார்களாம். எல்லாக் கிராமத்திலும் செக்கு இல்லாததால் செக்கு இருக்கும் கிராமத்துக்கு எண்ணை ஆட்டச் செல்வார்களாம். செக்கில் ஆட்டிய எண்ணையை இதற்காக பழக்கி வைக்கப்பட்ட மண்குடத்தில் நிரப்பி தலையில் சுமந்து, செக்கு இருக்கும் வெளியூரிலிருந்து வீட்டுக்குக் கொண்டு வருவது வழக்கமாம். இப்படி எண்ணையைக் கொண்டு வருகையில் பேய் பிசாசு சீண்டிவிடும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாம். இதைப் போன்ற சந்தர்ப்பம் வருகையில் அவரவர்கள் அவரவர்களின் குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு எண்ணைக் குடத்தை எடுத்து வந்தால் துர்த்தேவதைகளின் சீண்டுதலிலிருந்து தப்பித்து விடலாம் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டாம்.

இந்தக் கால கட்டத்தில் ஒருதடவை அப்பா எண்ணையைச் சுமந்துகொண்டு நான்கு மைலுக்கு அப்பாலுள்ள கிராமத்திலிருந்து எங்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தாராம். வரும் வழியில் இரண்டு பக்கங்களிலும் இலுப்பை மரங்கள் இருந்தனவாம். அதில் ஒரு மரத்தில் சில மாதங்களுக்கு முன்னர் யாரோ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி அப்பாவுக்குத் தெரியுமாம். அந்த மரத்தடியில் எண்ணைக் குடத்தோடு அப்பா வந்த போது, தூக்கிட்டுக் கொண்டது பற்றிய நினைப்பு வந்ததாம். அந்தச் சமயத்தில் மரத்தில் மடக்கென்று ஏதோ கிளை ஒடிவதைப் போல் சத்தம் கேட்டதாம். அப்பாவுக்குத் திடுக்கென்று தூக்கிப் போட்டதுடன் ஒரு மாதிரி ஆகிவிட்டாலும் பல்லைக் கடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து எண்ணைக் குடத்தை இறக்கி வைத்ததுதான் தாமதம், உடனே திண்ணையில் வந்து விழுந்து கீச்சுக் குரலில் கத்த ஆரம்பித்து விட்டாராம். ஊர் கூடி அமர்க்களமாகி விட்டதால் ஊரிலுள்ள சாமியாடியை அழைத்து வந்து காட்டினார்களாம். அவரும் வந்துப் பார்த்துவிட்டு கொலைப் பிசாசின் வேலைதான் அது என்று சொன்னதுடன் நம்முடைய குலதெய்வம் அப்பாவின் மேல் இறங்கி காப்பாற்றி இருப்பதாகவும் சொல்லிச் சென்றாராம்.

இதற்குப் பிற்பாடு ஊர் ஜனங்களெல்லாம் அப்பாவிடம் வந்து விபூதி கேட்டு வாங்குவதும், அப்பாவும் சாமியாடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாகவும், அவரே சொல்லி இருக்கிறார்.

கும்பாபிக்ஷேகம் முடிந்ததும் ஊரிலுள்ள எங்கள் உறவினர் வீட்டுக்கு என் மனைவியுடன் சென்றேன். எங்கள் மற்ற உறவினர்களும் வந்திருந்தார்கள். அங்கு எல்லோருக்கும் சாப்பாடு ஏற்பாடு ஆகி இருந்தது. சாப்பிடும்போதே 'புதிதாகக் கட்டி இருக்கும் கோயில் மிகவும் சிறப்பாக இருப்பதாயும், சுயம்பாய் எழுந்த அம்பாள் வேண்டுதலை விரைந்து நிறைவேற்றும் சக்தி கொண்டவள்' என்றும் எல்லோரும் ஆர்வமாகப்பேசிக் கொண்டார்கள்.

"சுயம்புவாய் எழுந்த அம்பாளா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் என் மனைவி.

"ஆமா, எங்க தாத்தா என்னுகிட்டே சொல்லி இருக்கிறார்.” உறவினர் ஒருத்தர் பதில் சொன்னார். ஆசிரியராகப் பணியாற்றும் ஒருவரும் அதை ஆமோதித்தார்.

அப்போ அப்பா சொன்னவைகள்?!....

அப்பாச் சொன்னவைகளைச் சொன்னால் யாரும் ஆமோதிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த நான் மெளனமாக இருந்தேன்.

நாளைக்கு இன்னும் வேறு மாதிரியான தலபுராணக் கதைகள் கூட வரலாம். மக்கள் அதனை ஆராய்ந்து பார்க்கவாப் போகிறார்கள்! அறிவியலுக்கு அப்பாற்பட்ட, கற்பனைக் கதைகளோடு எத்தனை ஆலயங்கள் இன்று பிரசித்தி பெற்று மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது!

சில வேளைகளில் உண்மையல்லாதவைகளை மக்கள் எந்தவித நோக்கமும் தயக்கமுமின்றி ஆர்வத்தோடு உண்மையைப்போல் ஏற்றுக் கொள்வதைப் பார்த்தால் உண்மைகள் கூட அசந்துப் போகத்தான் செய்கிறது!

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com