Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
கைகாட்டி(5)
மு.குருமூர்த்தி


''வணக்கம் ஸார்.............நான் வெண்மணியின் அப்பா.''

நிமிர்ந்து பார்த்தேன்.

ஆறாம் வகுப்பு மாணவி வெண்மணியின் அப்பா.

''உட்காருங்கள்.''

எழுதிக்கொண்டிருந்ததை மூடிவைத்துவிட்டு அவரைப் பார்த்தேன்.

''ஆயிரம் ரூபாய் பணம் தரப்போவதாக என்னோட மகள் சொன்னாள்....''

''ஆமாம்.....ஆறாம் வகுப்பில் படிக்கிற ஆதிதிராவிட மாணவிகளுக்கு மட்டும் அரசாங்கம் கொடுக்கிறபணம்.''

''பணம் வந்துவிட்டதா?''

''நீங்கள் சாதிச் சான்றும் இருப்பிடச் சான்றும் கொடுத்தவுடன் அதிகாரிகளுக்கு அனுப்பி வாங்கித் தருவேன்.''

வெண்மணியின் அப்பா சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.

''இருப்பிடம் என்றால்....''

''நீங்கள் இப்போது குடியிருக்கிற இடம்தான்.....''

அவர் கேட்பது எனக்குப் பிடித்திருந்தது. கேள்வி கேட்காமல் நாம் இழந்தது எத்தனை!

''நம்ம நாட்டிற்கு சுதந்திரம் வந்ததிலிருந்து ஒரே இடத்தில் தான் குடியிருக்கிறேன். இதற்கு யார் சார் சான்று கொடுக்கணும்?''

''தாசில்தார்....''

''தாசில்தார் அவருடைய ஆபீசில் இருக்கிறவர். நான் இன்ன இடத்தில் குடியிருக்கிறேன் என்று அவருக்கு எப்படித் தெரியும்?''

''அவருடைய ஆட்கள் மூலமாக தெரிந்துகொள்வார்.''

''நீங்கள் என்னுடைய முகவரிக்கு ஒரு கார்டு போடுவதாக வைத்துக்கொள்வோம் சார். அது நான் குடியிருக்கும் இடத்திற்குத்தானே வந்து சேரும்?''

''ஆமாம்.''

''அப்படியென்றால் அந்தக் கார்டு என்னுடைய இருப்பிடச் சான்று ஆகாதா?''

நான் மீண்டும் சரிவிலிருந்து நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

''ஆகும்.''

''நான் என்னோட முகவரி எழுதி ஒரு கார்டு வைத்திருக்கிறேன். நீங்கள் தபால் பெட்டியில் போடுங்கள். அது எனக்குவந்து சேர்ந்தபிறகு உங்களிடம் இருப்பிட சான்றாக கொடுக்கிறேன்.''

எனக்கு கோபம் வரவில்லை. அவருடைய பதில் பிடித்திருந்தது.

''இல்லை.......அரசாங்க விதிமுறைகளின்படி தாசில்தார் தான் இருப்பிடச் சான்று கொடுக்க வேண்டும்.''

அவரை மடக்கிவிட்ட பாவனையில் சாய்ந்து உட்கார்ந்தேன்.

''அது போகட்டும். போஸ்ட் மாஸ்டர் அரசாங்க அதிகாரி இல்லை என்றால் தாசில்தார் மட்டும் எப்படி அரசாங்க அதிகாரியாக முடியும்?''

ஒரு தாசில்தாருக்கு உள்ள பந்தா போஸ்ட்மாஸ்டருக்கு இல்லை அல்லவா?

''நீங்கள் சொல்வது சரிதான். போஸ்ட் மாஸ்டர் மாநில அரசாங்க அதிகாரி இல்லையே?''

''சரி போகட்டும். என்னுடைய ரேஷன் கார்டு மாநில அரசாங்கம் கொடுத்தது தானே? அந்த அட்டையில் நான் குடியிருக்கும் வீட்டு முகவரி இருக்கிறதே? அது போதாதா?''

''அப்படியில்லை. பள்ளிக்கூடங்களில் கொடுக்கிற உதவித் தொகைகளுக்கு தாசில்தார்தான் சான்று கொடுக்கிற அதிகாரம் உள்ளவர்.''

''தாசில்தாரைப் போன்ற ஒரு அரசாங்க அதிகாரிதானே ரேஷன் அட்டையையும் கொடுக்கிறார். நீங்கள் சொல்வது பூனை நுழைந்துபோக ஓர் ஓட்டையும் பூனைக்குட்டி நுழைந்துபோக வேறு ஓர் ஓட்டையும் போட்ட கதையாகத் தெரிகிறது.''

எனக்குத் தெரிந்த கதை வேறு.

இப்படியெல்லாம் குழப்படி செய்தால்தான் புதிது புதிதாக அலுவலகங்களை உண்டாக்கலாம். அதில் உட்கார்ந்து அதிகாரம் செய்யும் ஆட்களை நிரப்பலாம். மக்கள் வரிப்பணத்தை சம்பளம் என்ற பெயரில் வலிக்காமல் சுருட்டிக்கொள்ளலாம். மேசைக்குமேசை காசு பார்க்கலாம்.

எனக்கு வியர்த்தது போல தோன்றியது.

வெண்மணியின் அப்பா இவ்வளவு விவரமானவராக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

அவரை மேலும் கிண்டிப் பார்க்க ஆசையாக இருந்தது.

''அது சரி.....வாக்காளர் அடையாள அட்டையை ஏன் மறந்துபோனீர்கள்?''

''அதை கடைசியாக சொல்லலாம் என்று இருந்தேன். அது மாநில அரசாங்கமும் இல்லை. மத்திய அரசாங்கமும் இல்லை. வாக்காளர் அடையாள அட்டையில் நான் குடியிருக்கும் வார்டு விவரம் இருக்கிறதே. நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா?''

பேச்சை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். எனக்கு வேறு வேலை இருந்தது. நான் அரசாங்கத்து கோழிமுட்டை. எந்த அம்மிக்கல்லையும் உடைப்பேன்.

''எனக்கு அதிகாரிகள் கொடுத்த உத்திரவுப்படி நீங்கள் தாசில்தாரிடமிருந்து இருப்பிடச் சான்றும் சாதிச்சான்றும் வாங்கிக் கொடுத்தால்தான் நான் உங்கள் மகள் வெண்மணிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வாங்கிக் கொடுக்க முடியும்.''

''அது சரி..........நான் எதற்காக சாதிச் சான்று கொடுக்க வேண்டும்.''
நாற்காலியின் சரிவிலிருந்து நான் மீண்டும் நிமிர்ந்தேன்.

''நீங்கள் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர் என்று நிரூபிக்க வேண்டுமில்லையா?''

''உங்கள் பள்ளிக்கூட ரிக்கார்டுகளில் வெண்மணி ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவள் என்றுதானே எழுதியிருக்கிறீர்கள்?''

''ஆமாம்.''

''எந்த ஆதாரத்தில் நீங்கள் அந்த முடிவுக்கு வந்தீர்கள்?''

எனக்கு கோபம் வரவில்லை.

''பள்ளிக்கூடத்தில் வெண்மணியை சேர்க்கும்போது நீங்கள் சொன்ன விபரத்தைத்தான் நாங்கள் எழுதிக்கொண்டோம்.''

''நாங்கள் சொன்ன விபரம் சரிதான் என்று நீங்கள் சரிபார்த்தீர்களா?''

''நாங்கள் ஏன் சரிபார்க்கவேண்டும்? நீங்கள் காலனியில்தானே குடியிருக்கிறீர்கள்?''

''காலனியில் குடியிருப்பவர்கள் எல்லாம் ஆதிதிராவிடர்கள் என்பது நிச்சயம்தானே?''

''ஆமாம்.''

''அப்படியானால் என்னுடைய இருப்பிடச்சான்று கொடுத்தால் அதுவே சாதிச்சான்றாகவும் எடுத்துக் கொள்ளலாம் இல்லையா?''

''அப்படித்தான் எனக்குத் தெரிகிறது. இருந்தாலும் சாதிச் சான்று கொடுக்கிற அதிகாரத்தை தாசில்தாருக்குத்தான் கொடுத்திருக்கிறார்கள்.''

''நான்கு சுவர்களுக்குள்ளே உட்கார்ந்திருக்கிற தாசில்தாருக்கு வெண்மணியோட ஜாதி எப்படி சார் தெரியும்?''

''அதொண்ணும் அவருக்கு கஷ்டமில்லை. கிராம நிர்வாக அதிகாரியை கேட்டு தெரிந்து கொள்வார்.''

''கிராமநிர்வாக அதிகாரியை எனக்குத் தெரியும் ஸார். அவர் வெளியூர்காரர். வெண்மணியோட ஜாதி இன்னது என்பது அவருக்கு எப்படித் தெரியும்?''

''அவருக்கு அது ரொம்ப சுலபம். பள்ளிக்கூட ரிக்கார்டுகளில் என்ன இருக்கிறது என்று கேட்டு சரிபார்த்துக் கொள்வார்.''

அவர் போட்ட வளையத்துக்குள் நான் மாட்டிக்கொண்டதாகத் தோன்றியது.

''சார், தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர்களின் எண்ணிக்கை ஒருகோடியே பதினெட்டு லட்சத்து ஐம்பத்தேழாயிரத்து ஐநூற்று நான்கு பேர் என்று புள்ளி விவரம் சொல்வது உங்களுக்குத் தெரியுமில்லையா?''

''எனக்குத் தெரியாது.''

''நீங்கள் அரசாங்க அதிகாரியாக இருப்பதனால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். என்னை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த புள்ளிவிவரம் அரசாங்க பத்திரிக்கையில் வந்தது. நான் படித்திருக்கிறேன். என்னுடைய மகள் வெண்மணியும் இதில் அடக்கம் இல்லையா?''

இந்த புள்ளிவிவரங்கள் எங்கே எப்படி பிறவி எடுக்கின்றன என்பதில் எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடைய ஆங்கிலப் பேராசிரியர் ஜோசப் சின்னப்பா அடிக்கடி சொன்னது எனக்கு நினைவிற்கு வந்தது. Statistics-Anybody can bluff-Nobody can verify. இது எவ்வளவு உண்மை என்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். டிவி பெட்டியில் இடுப்பை குலுக்கிக் கொண்டிருக்கும் பெண்டுகளை கொஞ்சநேரம் அப்பால் போகச் சொல்லிவிட்டு செய்திகளுக்குள் தலையை நுழைத்து அதிகாரி சொல்லுவார்-தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஏற்பட்ட சாலைவிபத்துக்கள் முப்பத்தைந்தாயிரத்து எழுநூற்று அறுபத்தெட்டு என்றும், இது போன ஆட்சிக் காலத்தைவிட இருபத்தெட்டு சதவீதம் குறைவு என்றும் மைக் முன்னால் ஒப்பிப்பார்.

''என்ன சார் யோசனை? நான் சொன்னது சரிதானே?''

''இதோ பாருங்கள் வாக்குவாதம் செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம். எனக்கு வகுப்பு இருக்கிறது.''

என்று சொல்லிவிட்டு எழுந்தேன். அதிகாரிகள் செய்யமுடிந்த காரியம் அதுதானே.

''தாசில்தாரிடமிருந்து ஜாதிச் சான்றும் இருப்பிடச்சான்றும் வாங்கிக்கொண்டு ஒருவாரத்திற்குள் கொடுத்தால்தான் நான் மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி பணம் வாங்கி உங்களுக்கு கொடுக்க முடியும். அதை உடனடியாக செய்யுங்கள். வரும்போது போஸ்ட் ஆபீசில் வெண்மணியின் பெயருக்கு ஒரு சேமிப்புக் கணக்கு தொடங்கி பாஸ் புத்தகத்தையும் கொண்டு வாருங்கள்.''

''பாஸ்புத்தகம் எதற்கு சார்?

''அரசாங்கம் கொடுக்கும் பணத்தை நான் உங்களுக்கு ரொக்கமாக கொடுக்கமாட்டேன். பாஸ்புத்தகத்தில் டெபாசிட் செய்து கொடுத்துவிடுவேன். வெண்மணியின் படிப்புச் செலவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் போஸ்ட் ஆபீசிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.''

''அதுதான் நல்லது........மொத்தமாக செலவு செய்ய வேண்டியிருந்தால் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபணையில்லையே?''

''படிக்கிற பிள்ளைகளுக்கு நோட்டுபுத்தகம், சீருடை என்று ஏதாவது செலவு இருந்துகொண்டே இருக்குமில்லையா? அதற்காக கொடுக்கிற பணம் தான் அது.''

''ஆமாம் நீங்கள் சொல்றதுதான் சரி. பணமில்லை என்பதற்காக எத்தனையோ பேர் படிப்பை பாதியில் விடுகிறார்கள்.''

எனக்கு உண்மையாகவே வகுப்புக்கு போகவேண்டி இருந்தது. அவரை பிடித்துத்தள்ளாத குறையாக வாசல்வரை நடந்து வெளியேற்றி வைத்தேன்.

வெண்மணியின் அப்பாவுக்குப்பிறகு லோகாம்பாளுடைய அம்மா. அப்பன் இல்லாத அந்தப் பெண்ணிற்காக அவள்தான் தாசில்தார் ஆபீசுக்கும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் நடக்க வேண்டியிருந்தது. மூன்றுநாட்கள் வேலைக்குப் போக முடியவில்லையாம்.

அப்புறம் ஒருநாள் தேன்மொழியின் அப்பா. தன்னை ஆபீசில் இருப்பவர்கள் அலையவிட்டதாகவும் ஆளுக்கு ஐம்பது ரூபாய் பிடுங்கிக் கொண்டதாகவும் குறைபட்டுக் கொண்டார். ஆயிரம் ரூபாயை சீக்கிரம் வாங்கித்தருமாறு என்னிடம் கோரிக்கை வேறு.

தேன்மொழிக்கப்புறம்......
பாரதி..
ஆனந்தி...
தங்கமயில்...
இந்திராகாந்தி...
கடைசியாக அன்பழகி. அவளுடைய அப்பாவும் அம்மாவும் திருப்பூருக்கு வேலை தேடிப்போனவர்கள். அன்பழகியின் அண்ணண் ஒரு மீசை முளைக்காத சிறுவன். அங்குமிங்கும் ஓடித்திரிந்து சான்றுகளை வாங்கிக்கொண்டு வந்தான்.

பன்னிரெண்டு பேர்களுடைய விண்ணப்பங்களும் பரிந்துரையுடன் மாவட்ட அலுவலகத்திற்கு நகர்ந்தது. அப்புறம் ஊர்ந்தது... வயலில் நடவுமுடிந்து, மழைக்காலம் கடந்து, கதிர் அறுக்கும் காலத்தில் அந்தக் கடிதம் வந்தது, பன்னிரண்டாயிரம் ரூபாய்க்கான செக்.

உடனே காசாக்கி பன்னிரண்டு குழந்தைகளின் பெயரில் போஸ்ட் ஆபீசில் டெபாசிட் செய்தேன்.

தகவல் பெற்றோருக்கு பிள்ளைகள் மூலமாக......... அடுத்தநாள் காலை......பள்ளி திறப்பதற்கு முன்பாக முன்முற்றத்தில் ஒரு கூட்டம்.....

எல்லாம் பணம் வாங்கிக் கொண்டுபோக வந்தவர்கள். அதற்கென்று உள்ள பதிவேடுகளில் கையெழுத்து வாங்கிக்கொண்டு பாஸ்புத்தகத்தை பெற்றவர்களிடம் ஒப்படைத்த போது எனக்கு மகிழ்ச்சி.

இந்தப்பிள்ளைகளுக்கு இது எப்படியாவது உதவும்.......

பள்ளிக்கூட வாசலுக்கு தற்செயலாக வந்த நான் தூரத்தில் போஸ்ட் ஆபீசுக்கு போகும் பாதையில் கூட்டமாக..... அவர்களுக்கு பின்னால் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போகிறவர்கள்... அட...வெட்டுக்கிளிக்கூட்டம் போல கைகாட்டி காலனித்தெருவை தோல்பையும் கையுமாக சைக்கிளில் சுற்றிச்சுற்றிவரும் வட்டிக்காரர்கள்.....வாரத்தவணைக்கு கடன் கொடுக்கிறவர்கள்...... நான் உற்றுக் கவனித்தேன்.

சற்றுமுன்னால் பாஸ்புத்தகம் வாங்கிக்கொண்டவர்கள் எல்லோரும் அதில் இருந்தார்கள்.

அவர்களுக்கு முன்னால்..... வெண்மணியின் அப்பா.

- மு.குருமூர்த்தி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com