Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
கைகாட்டி(4)
மு.குருமூர்த்தி


மார்ச் மாதம்.
பள்ளிக்கூடங்களுக்கு பிரசவ மாதம்.

ஒரு பிரசவத்தில் ஏற்படக்கூடிய அதிர்ச்சியும் ஆனந்தமும் பள்ளிக்கூடங்களுக்கு அனுபவப்படும் மாதம் அது. சரவணன்தான் முதல் மதிப்பெண் எடுப்பான் என்று முடிவாக இருப்போம். போதும்பொண்ணு எல்லோருக்கும் முந்தி நிற்பாள்.

ரங்கசாமி கணக்கில் 35 எடுப்பது சந்தேகமே என்ற நிலை மாறி 53 எடுத்து ஆசிரியர்களை ஆச்சரியப் படுத்துவான்.

இதுபோன்ற எத்தனையோ நிகழ்வுகள்.

கைகாட்டி பள்ளிக்கூடம் ஜுன் மாதம் கருத்தரித்தது. ஐந்தாவது மாதத்தில் தலைமை ஆசிரியர் விடை பெற்றுக் கொண்டார். அதாவது...நிர்வாக காரணம் காட்டி அனுப்பிவைக்கப் பட்டார். அவருடைய பொறுப்பு என் தலையில் விழுந்தது.

ஆறாவது மாதத்தில் தமிழாசிரியர் அவருடைய மனைவி வேலைபார்க்கும் பள்ளிக்கே மாறுதல் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். வாங்கிக்கொண்டு சென்றார் என்பதுதான் சரியான சொற்பிரயோகம். மேற்கொண்டு ஆராய்ச்சி வேண்டாம்.

ஏழாவது மாதம் புதிதாக ஓர் அறிவியல் ஆசிரியை வந்து சேர்ந்தார். எப்படியாவது நகரத்துப் பள்ளிக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்று தினசரி ஆசைப்படுபவர்......என்றாலும் மாணவர்களை தேர்விற்கு தயார் செய்வதில் அவர் குறை வைப்பதில்லை.

எட்டாவது மாதத்தில் புதிய தமிழாசிரியர் வந்து சேர்ந்தார். நாற்பத்தெட்டாவது வயதில் பதவி உயர்வு பெற்றது அவரைப் பொறுத்தவரையில் எட்டாவது அதிசயம். தோட்டவேலை ஆசிரியராக வேலைபார்த்து தமிழ் படித்து பதவிஉயர்வு பெற்றவர்.

போனவருடம் தேர்வு முடிவுகள் வந்தபோது ஆசிரியர்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. ஊரில் இருந்த நற்பணிமன்றத்து சிறுவர்களுக்கு அதைவிட மகிழ்ச்சி. பக்கத்து கிராமத்துப் பள்ளியைவிட கைகாட்டி பள்ளிக்கூடம் அதிகமான தேர்ச்சி காட்டியதை உள்ளூர் நிருபர் பரபரப்பாக எழுதிவிட்டார்.

உற்சாகம் பொங்கி உருண்டை வெடிகளை தோரணமாக்கி விளக்குக் கம்பத்தில் கட்டி மறுமுனைக்கு இடம் தேடியபோது தலைமை ஆசிரியர் நாற்காலிக்குப் பின்னால் இருந்த ஜன்னல் கண்ணில் பட்டது. அந்த மகிழ்ச்சி வெடித்தபோது தலைமை ஆசிரியர் அறையில் நான்கைந்து ஒடுகள் பறந்தன. பால்வெளி திறந்து இப்போதும்கூட ஓட்டைக்கூரை சாட்சியாக இருக்கிறது.

ஆசிரியர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இந்த ஆண்டு பிரசவம் கஷ்டமாக இருக்கும் என்று பேசிக்கொண்டோம். ஜுன் மாதத்தில் பத்தாம் வகுப்பிற்குள் வந்து உட்கார்ந்த முப்பதுபேரில் முருகானந்தம் மட்டும் ஓடிப்போய்விட்டான். அவனை ஓட்டியது யாருமில்லை. வெறும் நாற்பத்தேழு ரூபாய். ஒரு வருடத்திற்கான பள்ளிக்கூட பீஸ். தமிழர்கள் பலருக்கு தெரிந்துகொள்ளத் தேவையில்லாத தகவல் அது. நான் அவனிடம் •பீஸ்கேட்கப்போய் அவன் அப்பாவைக் கேட்கப்போய் அவனுடைய அப்பா அவனை திட்டப்போய் முருகானந்தம் ஓடிப் போய்விட்டான்.

போனவாரம் முருகானந்தம் பள்ளிக்கூடத்திற்கு வந்தான். கால்சட்டையும் மேல்சட்டையும் முழுசாகப் போட்டிருந்தான். கையில் வாட்ச் கட்டியிருந்தான். நன்றாக வளர்ந்து அழகாக இருந்தான். மீசை அரும்பத் தொடங்கியிருந்தது. எங்கள் பள்ளிக் கூடத்திலேயே படித்து சத்துணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவனுக்கு இவ்வளவு அழகும் கம்பீரமும் வந்திருக்காது என்பது நிச்சயம். சென்னை மண்ணடியில் ஒரு கார் மெக்கானிக்கிடம் வேலை செய்வதாகவும். அவனுடைய முதலாளி அவனை பிள்ளையைப் போல் பார்த்துக் கொள்வதாகவும் பள்ளிக்கூடத்தில் ஒரு சர்டிபிகேட் கொடுத்தால் டிரைவிங் லைசென்ஸ் எடுத்துக் கொண்டு பிழைத்துக் கொள்ள முடியும் என்றும் சொன்னான் அந்த கெட்டும் பட்டணம் போனவன்.......

நானா மாட்டேன் என்று சொல்வேன்.

நாங்கள் பள்ளிக்கூடம் நடத்துவதே இந்தப் பிள்ளைகளை பிழைக்க வைப்பதற்காகத்தானே!..........முப்பது பேரில் ஒருத்தன் நிச்சயமாக பிழைப்பைத் தேடிக்கொண்டதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். உடனடியாக அவன் கேட்டதைக் கொடுத்து அனுப்பிவைத்தேன். அன்று என் செலவில் ஆசிரியர்களுக்கு டீயும் வடையும் காரணம் சொல்லாமல் வாங்கிக் கொடுத்தேன்.

எங்களிடம் படிக்கிற பிள்ளைகளுக்கு சமுதாயத்தில் எங்கோ ஓர் இடம் காலியாக இருக்கிறது. அவனவன் அந்தந்த இடத்தில் போய் உட்கார்ந்து கொள்வதைப் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. ஒரு கண்டக்டராக, போலீஸ்காரனாக, ஆசிரியராக, கிளார்க்காக, டாக்டராக, பரோட்டா மாஸ்டராக, வக்கீலாக, தன்னுடைய முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனைப் போன்ற விவசாயியாக அவர்களைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கும். கையில் குழந்தையைக் கூட்டிச் செல்லுகிற பெண்மணி எங்களை வழிமறித்து வணக்கம் சொல்லி அவளுடைய குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் போது ஏற்படும் மகிழ்ச்சி இன்னும் வித்தியாசமாக இருக்கும்.

போனவருடம் போராட்டத்தின் போது திருச்சி சிறைச்சாலையில் ஒரு ஜெயிலர் என்னுடைய நண்பரைப் பார்த்துச் சிரித்தார். அவரிடம் படித்ததாகக் கூறி வணக்கம் கூட வைத்தார். நண்பருக்கு பெருமை தாங்கவில்லை. அவர் கூட்டிவந்த ஒரு கிரிமினல் கைதி என்னிடம் படித்ததாக கூறி எனக்கு வணக்கம் சொன்னபோது நண்பர்கள் சிரித்தார்கள். மாணவக்கைதி என்னுடைய சட்டை வேட்டியை துவைத்து பெட்டி போட்டுக் கொடுத்ததும், நண்பரின் மாணவஜெயிலர் அதற்கப்புறம் நண்பரை திரும்பிக்கூட பார்க்கவில்லை என்பதும் கூட ரசமான அனுபவங்கள்.

மாணவர்கள் நல்லமுறையில் தேர்ச்சி பெற வேண்டுமென்பதில் கல்வி இலாகா அதிகாரிகள் காட்டும் அக்கறை கொஞ்சமல்ல நஞ்சமல்ல. மாதம் ஒரு முறை தலைமை ஆசிரியர்களை வரச்சொல்லி கூட்டம்போட்டு பேசுவார்கள். அதுபோன்ற கூட்டத்திற்கு போக வேண்டிய சந்தர்ப்பங்கள் எனக்கும் ஏற்பட்டது உண்டு. முன்பெல்லாம் அரசாங்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களும் மட்டும் நிறைந்த சபையாக இருந்ததாம். காலம் மாறிப்போய் சரிக்கு சரியாய் மெட்ரிக்குலேஷன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்கார்ந்திருப்பதாக எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த பழுத்த தலைமை ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார்.

பத்துமணிக்கு துவங்கும் கூட்டம் மாலை ஐந்தேமுக்கால் வரை நடக்கும். யாராவது ஒன்றிரண்டு தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளி முதலாளிகள் செலவில் டீயும் பிஸ்கட்டும் கிடைக்கும். அவர்கள் வாங்கும் நன்கொடையில் கிள்ளிக் கொடுக்கும் நைவேத்தியம் அது.

அதிகாரி கேட்டிருந்த பத்துப் பன்னிரண்டு அறிக்கைகளைத் தயார்செய்து கூட்டத்திற்கு கொண்டு போகவில்லை யென்றால் நம்பாடு திண்டாட்டம்தான். அதிகாரிகள் மாறும்போது அறிக்கைகளும் நிறம் மாறும். எல்லாம் புளிக்களிம்பு ஏறிய அறிக்கைகள். புளி என்றவுடன் ஒரு அதிகாரியை நினைத்தே ஆகவேண்டும். அவருக்கு புளியமரங்கள் மீது அபார நம்பிக்கை. வீழ்ந்துபோன இந்தியப் பொருளாதாரத்தை புளி விற்ற காசைக் கொண்டு தூக்கி நிறுத்த முடியும் என்பது அவரது நம்பிக்கை. பள்ளிக்கூடத்தில் போனமாதம் நட்ட புளியங்கன்றுகள் எத்தனை? இந்த மாதம் நட்ட புளியங்கன்றுகள் எத்தனை? இதில் பட்டுப்போனவை எத்தனை? என்பது போன்ற விவரங்களை கேட்பார். கூட்டிப் பார்த்தால் தமிழ்நாட்டின் பெயரை புளியங்காடு என்று மாற்ற வேண்டியிருக்கும். புளியங்காய் குழந்தைகளின் உடம்புக்கு எவ்வளவு நல்லது என்பது தாய்மார்களுக்கு தெரியும் என்பது அதிகாரிக்கும் தெரியும்.

கல்வி அலுவலகத்தின் வாசலில் மூன்றோ நான்கோ செத்துப்போன வேன்கள் கருங்கல் மீது முட்டுக்கட்டி ஓய்வெடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். பத்து வருஷமாக அதைச் சுற்றிச்சுற்றி வந்த பழைய இரும்பு வியாபாரிகள் சீச்சீ இது புளிக்கும் என்று போயிருக்க வேண்டும். அவர்களுடைய அலுவலகத்திலேயே விரைந்து முடிவு எடுக்க இயலாத இந்த அதிகாரிகளை நம்பி இன்னும் அதிகாரம் கொடுக்க நம்முடைய அரசியல்வாதிகள் இளிச்சவாயர்களா என்ன?

இப்போதைய அதிகாரி அப்படிப்பட்டவர் இல்லை.

எத்தனைபேர் அரையாண்டுத்தேர்வு எழுதினார்கள்? எத்தனைபேர் பாஸானார்கள்? எத்தனைபேர் தோற்றார்கள்? ஏன் தோற்றார்கள்? தலைமை ஆசிரியர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? என்பது போன்ற நியாயமான கேள்விகளைக் கேட்டு ஆசிரியர்களை தூங்கவிடாமல் செய்பவர்.

நேற்று நடந்த கூட்டத்தில் ஒரு தலைமை ஆசிரியர் எழுந்தார். அவருடைய பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்றும் அதனால் மாணவர்களுடைய தேர்ச்சி குறைந்து போய்விட்டதாகவும் புகார் கூறினார். எனக்கும் அதே பிரச்சினை இருந்தது. நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அதிகாரி உடனடியாக கிளார்க் பக்கம் திரும்பி புகார் சொன்னவரின் பெயரைக் குறித்துக் கொள்ளுமாறு சொன்னவுடன் கூட்டம் கப் சிப். நானும் கப் சிப். வரப்போகும் பத்தாம் வகுப்புத்தேர்வில் எழுபத்தைந்து சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டுமென்றும் அப்படியில்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்ற மிரட்டலோடு கூட்டத்தை முடித்து வைத்தார்.

பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்திருந்த முழுவழுக்கை தலைமை ஆசிரியர் குனிந்த தலை நிமிராமல் குருப்பெயர்ச்சி பலன்கள் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் தான் எனக்கு ஞானம் வந்தது.

எனக்கு இன்னும் தலைவழுக்கை விழவில்லை என்பதால் அந்த மிரட்டலில் நான் உண்மையாகவே பயந்து போனேன். அதிகாரிகளை நம்பி பிரயோஜனம் இல்லை என்பது தெளிவானது. போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் கைகாட்டி பள்ளிக்கூடத்தில் முக்கால்வாசி மாணவர்கள் தேர்ச்சி பெறுவது என்பது நடக்காத காரியம். தூங்கும் போதுகூட அதிகாரி என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தார். இலக்கை எப்படி அடைவது என்பதை நான் யோசிக்காமல் இருக்க முடியுமா? யோசிக்கவும் வேண்டும். செயல்படவும் வேண்டும் இல்லையா? முதல்காரியமாக மாலை நேர பயிற்சி வகுப்புகளை தீவிரமாக்கினேன்.

ஆசிரிய நண்பர்களை அழைத்து டீயும் வடையும் வாங்கிக்கொடுத்து ஆலோசனை கேட்டேன். பொங்கல் விடுமுறைக்குப் பிறகு பத்தாம் வகுப்பு மாணவர்கள் பெற்றோருடன் வந்து தலைமை ஆசிரியரை சந்திக்கச் செய்யவேண்டும் என்று எம்.ஆர்.கூறினார். மாணவர்கள் வீட்டில் கவனமாக படிப்பதற்கு உரிய சூழ்நிலையை செய்து தருமாறு பெற்றோரிடம் சொல்ல வேண்டும். பெற்றோருக்கு நெருக்கடி கொடுத்தால் மாணவர்கள் படிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று அறிவியல் ஆசிரியை ஆலோசனை கூறினார். தான் முன்பு வேலைசெய்து வந்த பள்ளிக் கூடத்திலும் இதேமாதிரி செய்து நல்ல ரிசல்ட் வந்ததாக தமிழாசிரியரும் முன்மொழிந்தார். உடற்கல்வி ஆசிரியரும் அதையே வழிமொழிந்தார்.

ஆசிரியர்களுடைய முடிவு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சொல்லப்பட்டது. பெற்றோரை அழைத்து வராத மாணவர்களை தேர்வுக்கு அனுப்பமாட்டேன் என்றும் மிரட்டி வைத்தேன்.

தாயும் தகப்பனும் பிள்ளைகளின்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் பேசிப்பார்த்தால் தான் தெரியும். பெற்றோர்களின் நம்பிக்கை பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதில் தொடங்கி கல்யாணத்தில் கரைந்துபோகிறது. ஆசை ஆசையாய் வைத்த பெயர்களை பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டில் பார்க்கும்போது மலைப்பாக இருக்கும். இந்த பெற்றோர்களுக்குத் தான் எத்தனை ஆசைகள்! இந்த நைந்துபோன வருகைப் பதிவேடுகளைக் கடந்து எத்தனை காமராஜ்கள், ஜீவாக்கள், தமிழரசிகள், அரசன்கள், புபேஷ்குப்தாக்கள், அறிவுச் செல்வன்கள், செல்விகள், ஸ்டாலின்கள், ஏங்கல்ஸ்கள், கலையரசிகள், காந்திகள், பாரதிகள் சமுதாயத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள் தெரியுமா? இந்தப் பெயர்களுக்கேற்றபடி சமுதாயம் மாறிப் போயிருந்தால் அது ஏன் நம்முடைய கண்களுக்குத் தெரியாமல் போயிற்று?

பெற்றோரைக் கூட்டிவராமல் போனால் தேர்விற்கு அனுப்பமாட்டார்கள் என்று மாணவர்கள் மிரண்டு போயிருந்தனர். எழுபத்தைந்து சதவீதம் ரிசல்ட் என்ற உத்தரவில் நான் மிரண்டு போயிருந்தேன்.

சொல்லி வைத்தாற்போல் பெண்பிள்ளைகள் அப்பாக்களை அழைத்து வந்தார்கள். பையன்கள் அவர்களுடைய அம்மாக்களுடன் வந்தார்கள். புகார் கூறும் அம்மாவை அவன் முறைப்பது வேடிக்கையான காட்சி. வெளியில் வா பார்த்துக் கொள்கிறேன் என்பது போலிருக்கும் அந்தப்பார்வை. அப்பாக்கள் குறை கூறும்போது பெண் பிள்ளைகள் இயல்பாக அழுதுவிடுவார்கள். பெண்ணின் படிப்பை நிறுத்தி விடுவதற்கு ஏதாவது ஒரு காரணம் போதும் இல்லையா?

மாணவர்களின் குறும்பு, வறுமை, செல்வச்செழிப்பு, குடும்பநிலவரம் இவையனைத்தும் இந்த சந்திப்புகளில் வெளிப்படுவது சுவாரசியமான ஒன்று. பெற்றோர்களிடம் நட்புணர்வுடன் பேசஆரம்பித்தால் ஆசிரியர்களைப் பற்றிய விமரிசனங்கள் உண்டாகும். இதைத் தவிர்ப்பதற்காகத்தான் நகரத்துப் பள்ளிகளில் பெற்றோரை வாய்திறக்கவிடாமல் நிற்கவைத்தேதிட்டி அனுப்பிவிடுகிறார்கள் போலும்! சில சமயங்களில் விமரிசனங்கள் ஆசிரியர்களுக்கு தலை குனிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். பிறரைத் தூக்கிவிடுவதற்காக தலைகுனிவதில் தவறில்லையல்லவா?

கனகவல்லி தாயில்லாப்பெண். தாய்மாமனை அழைத்துவந்தாள். அவளுடைய தகப்பன் திருப்பூரில் வேலை தேடிப்போயிருக்கிறான். அவள் ஆங்கிலத்தில் வீக்.

மதிவாணனுடைய அம்மா களையெடுத்துக் கொண்டிருந்தாள். முதலாளியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு என்னை வந்து பார்த்தாள். அவனுக்கும் ஆங்கிலம் தான் கண்டம்.

பிரியாவுக்காக அவளுடைய அப்பா வந்தார். அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் உள்ளூர் காண்ட்ராக்டர் அவர். ஆர்ப்பாட்டமாக இரண்டுசக்கர வண்டியில் வந்திறங்கினார். பிரியா மெட்ரிக்குலேஷன் பள்ளியிலிருந்து அரசாங்கப் பள்ளிக்குத் தாவியவள். அவளுக்கு தமிழில் நிறைய பிழைகள்.

அப்பாவும் அம்மாவும் வெளியூர் போயிருப்பதாகவும் எப்போது வருவார்கள் என்று தெரியாது என்பதால் தன்னைவிட இளைத்துப்போன அண்ணணை அழைத்து வந்தவன் சண்முகவேலு.

பாண்டியன் விபரமானவன். ஏதோ காரணம் கூறி தம்பியை அழைத்துவந்து உடற்கல்வி ஆசிரியரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டான்.

வசந்தியின் அப்பாவுக்கு செங்கல் அறுக்கும் தொழில். ஆற்றுக்கு அக்கரையில் படுகையில் வீடு. குடமுருட்டி ஆற்றில் இறங்கிக் கடந்துதான் தினமும் பள்ளிக்கு வரவேண்டும். அவளுக்கு ஆங்கிலத்தை மனப்பாடம் செய்யவராது. மனப்பாடம் செய்யாமல் இந்தக்காலத்து பரீட்சைகளில் பாஸ் செய்ய முடியுமா என்ன? வசந்தியின் தங்கை எட்டாம் வகுப்பில். இடுப்புக்கு மேலாக ஆற்றில் நீர்போகும் நாட்களில் அப்பாவின் தலையில் புத்தகமூட்டை. இரண்டு கைகளிலும் இரண்டு பெண்களை பற்றிக்கொண்டு ஆற்றைக் கடப்பது வாடிக்கை. நெடிய உரமேறிய சரீரம் குலுங்கக் குலுங்க தன்னுடைய வேதனைகளை அவர் சொன்னபோது எனக்கு வாயடைத்துப் போனது. தன்னுடைய பெண்ணை ஒரு நர்ஸ் வேலையிலாவது சேர்த்துவிட அவருக்கு ஆசை. வசந்தி தலைகுனிந்து அழுதாள்.

மல்லிகா ஒரு பரிதாபம். அப்பா ஓடிப்போய்விட்டதால் அம்மா வேறுஒருவனுடன். அந்த வேறுஒருவனுக்கு மல்லிகாவின் படிப்பை நிறுத்துவதில் ஆர்வம். இரண்டு மாதங்களுக்கு முன்பாக மல்லிகாவின் சர்டிபிகேட்டை கொடுக்குமாறும் வேறு பள்ளியில் சேர்க்கப் போவதாகவும் மாற்று அப்பன் வந்து விண்ணப்பம் கொடுத்து விட்டுப் போனான். அடுத்தநாள் உண்மைத்தாய் வந்து மல்லிகா தொடர்ந்து படிக்கட்டும் என்று முறையிட்டாள். இப்போது மல்லிகா ஆங்கிலத்திலும் கணக்கிலும் வீக். உண்மைத்தாய் என்னிடம் அழுதுவிட்டுப் போனாள்.

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வாடிக்கையான இரண்டு தேர்வுகள். மாணவர்களின் தேர்ச்சியை மதிப்பீடு செய்துகொள்ள நல்ல சந்தர்ப்பம். நாங்களும் மதிப்பீடு செய்தோம். எங்கள் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. வரும் தேர்வில் தொண்ணூறு சதவீதத்திற்கு தேர்ச்சி எதிர்பார்க்கலாம். மனநிறைவோடு அடையாள அட்டை கொடுத்து மாணவர்களை பக்கத்து நகரத்து பள்ளியில் தேர்வெழுத வாழ்த்தி அனுப்பி வைத்தேன்.

ஆண்டு இறுதி நெருங்கிக் கொண்டிருந்தது. தேர்வுப்பணிக்காக பத்துநாட்கள் நான் பள்ளிக்கு வரவில்லை. தொலைவில் உள்ள பள்ளியில் தேர்வுப்பணி. பள்ளிக்குத் திரும்பிய போதுதான் வந்தது அந்த அதிர்ச்சி செய்தி.

அக்கரையில் இருந்து பள்ளிக்கு வந்துபோன பத்தாம் வகுப்பு மாணவி வசந்தி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், தேர்விற்கு படிப்பதில் கவனம் செலுத்தாமல் பக்கத்துவீட்டில் டிவி பார்க்கப் போனதால் அப்பா திட்டியதாகவும் ஆங்கிலத் தேர்விற்கு முதல் நாள்இரவு இந்த சம்பவம் நடந்ததாகவும் எம்.ஆர்.விபரம் சொன்னார்.

ஒரு நெடிய சரீரம் தலையில் புத்தக மூட்டையுடனும் இரண்டு கைகளிலும் தன் இரு பெண்களை பற்றிக்கொண்டு குடமுருட்டி ஆற்றை இடுப்பளவு நீரில் கடக்கும் காட்சி என் மனத்திரையில் உறைந்து போனது. அன்று மதியம் நான் சாப்பாட்டு பொட்டலத்தை திறக்கவேயில்லை.

தேர்வுமுடிவுகள் வந்தபிறகு தலைமை ஆசிரியர் கூட்டம் நடைபெறப் போவது நிச்சயம். கூட்டத்தில் நான் தலைநிமிர்ந்து பதில் சொல்லப் போவதும் நிச்சயம்.

அந்த பாவப்பட்ட செங்கல் தொழிலாளியிடம் தலைநிமிர்ந்து ஆறுதல் சொல்வது நிச்சயமா?

- மு.குருமூர்த்தி, ([email protected])
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்,
101, காவேரிநகர் மேற்கு, தஞ்சாவூர் - 613005


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com