Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
கைகாட்டி(2)
மு.குருமூர்த்தி


அரசு உயர்நிலைப்பள்ளியில் இப்போதெல்லாம் காலைக்கூட்டம் சரியான நேரத்தில் தொடங்கிவிடுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் ஓட்டமும் நடையுமாக பள்ளியை எட்டிப்பிடித்து விடுகிறார்கள். ஒவ்வொரு திங்கட்கிழமையும் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. ஒரு ராணுவஅதிகாரியைப்போல் தலைமை ஆசிரியரே மாணவர்களை ஒழுங்குபடுத்துகிறார். அன்றைய செய்திகளை மாணவர்கள் வாசிப்பதும், திருக்குறள் கூறுவதும், அதை உடனுக்குடன் தமிழாசிரியர் திருத்தம் செய்வதும், தெருவில்போகும் கிராமவாசிகளுக்கு வேடிக்கை. போகும்போது ஏதேதோ சொல்லிக்கொண்டு போகிறார்கள். தாமதமாக வரும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரின் கண்களில் இருந்து தப்பமுடியாது. மாணவர்கள் தனியாக நிற்கவேண்டும். உள்ளே நுழைவதற்கு முன்னால் காரணம் சொல்லிவிட்டுப் போகவேண்டும். கசங்கிய உடையும், கலைந்த தலையும், தூக்கம் நிறைந்த கண்களும் இப்போதெல்லாம் ஆசிரியர்களிடம் இல்லை. ஆசிரியைகளின் இறுக்கிப் போடப்பட்ட கொண்டையும், இழுத்து மூடப்பட்ட முதுகும் அவர்களுக்கு ஒரு மரியாதையான தோற்றத்தை அளித்தன. உடற்கல்வி ஆசிரியரின் கழுத்தில் புத்தம் புதிய கறுப்புக் கயிற்றில் விசில் தொங்குவதையும் வெள்ளை உடையில் அவர் சுற்றிச் சுற்றி வருவதையும் அந்தவழியாகப் போகிறவர்கள் அர்த்தத்துடன் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.

Head Master முந்தைய தலைமை ஆசிரியர் கைத்தாங்கலாக நடமாடிக் கொண்டிருந்தார். பள்ளிக்கூடமும் கைத்தாங்கலாகத்தான் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் மாலையும் கழுத்துமாக பழையவரை வேனில் ஏற்றி வீட்டிற்கு கொண்டுவிட வேண்டிவந்தது. அதுவும் அவருடைய உயிர் பிரிந்தபிறகுதான் நடந்தது. நாற்காலியில் இருந்தவாறே அவர் சரிந்து விழுந்ததும் நான் மட்டும்தான் அதனுடன் வீடுவரை போய்விட்டு வந்தேன்.

புதிதாக வந்திருக்கும் தலைமைஆசிரியரும் தெற்கே இருந்து வந்தவர்தான். போனவருடம் போராட்டத்தின்போது திருச்சி மத்திய சிறையில் மாலைக்கூட்டங்களில் அவருடைய பேச்சை நான் கேட்டிருக்கிறேன். அறிமுகமில்லை. வாட்டசாட்டமான உடல்வாகும் திண்ணென்ற உரையும் எங்கள் மாவட்ட ஆசிரிய தோழர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரை ஒரு தலைமை ஆசிரியராக சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பழைய நினைவுகளைப்பற்றி கூறியபோது அன்புடன் என்கைகளைப் பற்றிக்கொண்டார்.

வெறும் நூற்று எண்பது மாணவர்களுக்கான உயர்நிலைப்பள்ளி அது. வெகு அருகாமையில் இருந்த அடுத்த ஊருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி கிடைத்தவுடன் கவுரவத்தை நிலைநாட்டுவதற்காக அதிகாரிகளை நெருக்கி விதிமுறைகளை ஒடித்து பெற்ற பள்ளிக்கூடம் அது. முன்முற்றத்தில் இருந்த வேப்பமரங்களை நம்பியே சிலவகுப்புகளும், அக்கம் பக்கத்து வீட்டு ஆடுகளும் இருந்தன. புதிய தலைமை ஆசிரியர் வந்தவுடன் அத்தனை ஆடுகளும் விற்கப்பட்டு விட்டன. பக்கத்து டவுனில் இருந்து மஞ்சள் நிற பஸ் காலை எட்டு மணிக்கே ஊருக்குள் வந்து டைகட்டிய மாணவர்களை அள்ளித் திணித்துக் கொண்டு போய்விடும். பள்ளி வளர்ச்சிக் கூட்டத்திற்கு ஆர்ப்பாட்டமாக வரும் பெரும் தலைகளின் வீட்டுப் பிள்ளைகள் ஒய்யாரமாக அதில் சாய்ந்துகொண்டு போவதை பார்க்கலாம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக தார்ச்சாலையை ஒட்டிய காலனியின் கீழத்தெரு, நடுத்தெரு, மேலத்தெரு பிள்ளைகள் நூற்றி இருபதுபேரும் கைகாட்டி வழியான சுற்றுப்பாதையில் நடந்துதான் பள்ளிக்கு வந்து போவார்கள். சிவன்கோயில் தெருவில் புகுந்து நடந்தால் சீக்கிரம் பள்ளிக்கு வந்து விடலாம். குறுக்குப்பாதை வழியாக அவர்கள் ஏன் நடந்துவரக்கக்கூடாது என்பதற்கான காரணத்தையெல்லாம் நாம் ஆராய்ந்து பார்த்து ஆகவேண்டியது ஒன்றுமில்லை.

புதிய தலைமை ஆசிரியரின் வாசம் பள்ளியில்தான். மதியம் அவருக்கு மிலிட்டரி சாப்பாடு வேண்டும். பக்கத்து டவுனில் இருந்து வாட்ச்மேன் சைக்கிளில் வாங்கிவருவார். மாணவர்கள் எல்லோரும் சத்துணவு சாப்பிட்டபிறகுதான் தலைமை ஆசிரியர் சாப்பிட உட்காருவார். மீதமுள்ள சாப்பாட்டை பட்டினி கிடந்தால்கூட வாட்ச்மேன் சாப்பிட மாட்டார். அதற்காகவே உள்ள சில மாணவர்களை வாட்ச்மேனுக்குத் தெரியும். கேரியர் கழுவும் வேலை அவர்களுடையது. காலை உணவு என்னுடைய தயவால் அவருக்கு கிடைத்துவிடும். வீட்டில்இருந்து போகும்போதே ஓட்டலில் அவருக்கு டிபன் கட்டிக் கொண்டு போய்விடுவேன். மாலையில் சிறப்பு வகுப்புகளைமுடித்துவிட்டு என்னுடன் டவுனுக்கு வருவது வாடிக்கை. அங்கு அவருக்கு பார்த்துப் பேச வேண்டியவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். காலனி நடுத்தெரு வார்டு உறுப்பினர் அனா ருனா அவருக்காக துணிக்கடை வாசலில் காத்து நிற்பார். அனா ருனாவின் வெஸ்பாவில் ஏறிக்கொண்டு எங்கெங்கோ போவார்கள்.

அனா ருனாவின் வெள்ளைஉடையும், படிய வாரிய தலையும், தோளில் சிகப்புத் துண்டும், கக்கத்தில் இடுக்கிய தோல்பையும், உறுதியான குரலும் பள்ளி வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பல பெரிய தலைகளை மிரள வைக்கும். கூலிப் பிரச்சினைகள் அவர் இல்லாமல் பேசித் தீர்க்கப்படுவது இல்லை. தாலுகா ஆபீஸ்முன்னால் மறியல் நடக்கிறபோதெல்லாம் அனா ருனா முன்வரிசையில் நிற்பார்.

காலைக்கூட்டங்களில் நிற்கமுடியாமல் மாணவர்கள் மயங்கி விழுவது எங்கள் பள்ளியில் பழகிப்போன ஒன்று. அதுவும் பள்ளிக்கூட வேலை நேரத்தை முன்னால் நகர்த்தியபிறகு இந்த எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. படுகளத்தில் பூசாரி விழுவதுபோல மாணவர்கள் சரிவதும் பக்கத்தில் நிற்பவன் தாங்கிப்பிடிப்பதும் ஊமைச்செய்திகள். விடிவதற்கு முன்னால் அரைஇருட்டில் கூலிக்கு மிதிபாகற்காய் பறிப்பதற்காகவோ, கனகாம்பரப்பூ பறிப்பதற்காகவோ குடும்பத்தோடு போய்விட்டு அவசரக் கோலத்தில் பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவர்களுக்கு சாப்பாடு என்பது மதியத்திற்குத்தான். இதிலும் சிலமாணவர்கள் தகப்பனோடு மார்க்கெட்வரைபோக வேண்டியிருக்கும். மத்தியானம் வழங்கப்படும் சத்துணவை மாணவர்கள் பலர் விரல்களால் அளைந்துவிட்டு பக்கத்துக் குளத்தில் கொட்டி மீன்கள் சாப்பிடுவதை பார்த்து சந்தோஷப்படுவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். புதிய தலைமை ஆசிரியர் தினசரி ஒரு கூடை காய்கறிக்கும், ஒரு கரண்டி நல்லெண்ணைக்கும் ஏற்பாடு செய்தார். இப்போதெல்லாம் தட்டுகளில் எண்ணெய்ப் பசையும் உணவில் வாசனையும் இருக்கிறது. கொடிமரத்தின் கீழ் தலைமை ஆசிரியர் வைத்த கூடையில் மாணவர்கள் கையில் கிடைத்த ஒன்றோ இரண்டோ காய்கறிகளை போடுவதும் நிறைந்த கூடையை சத்துணவு அமைப்பாளர் தூக்கிச் செல்வதையும் இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது.


சில நாட்களில் தலைமை ஆசிரியர் மாலை நேரங்களில் காலனி வீடுகளை நோக்கி நடக்க ஆரம்பித்துவிடுவார். நீண்ட நாட்களாக காணாமற் போயிருந்த சில மாணவர்களை அடுத்தநாள் பள்ளியில் பார்க்கலாம். காலனி வீடுகளில் இருந்து இப்போதெல்லாம் கல்யாணம், காதுகுத்து, சடங்கு என்று பத்திரிக்கைகள் வருவதையும், தலைமைஆசிரியரின் எதிரில் அவர்கள் அடங்கி ஒடுங்கி அமர்ந்து பேசுவதையும், மத்தியான சாப்பாட்டிற்கு தலைமை ஆசிரியர் சென்று வருவதையும் பார்க்க முடிகிறது. பத்தாம் வகுப்பிற்கு தலைமை ஆசிரியர்தான் ஆங்கிலப்பாடம் எடுக்கிறார். தாங்கள் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதைப் பார்த்து கடைசிபெஞ்சு பையன்கள் கேலி செய்வதாக நேற்று மாணவிகள் என்னிடம் புகார் கூற, நான் தலையிட்டு கண்டிக்க வேண்டியதாயிற்று.

அன்று மாலை பள்ளிவிடும் வேளையில் கல்வி அதிகாரியின் ஜீப் வந்தது. வணங்கி வரவேற்ற தலைமைஆசிரியரை தலையை அசைத்து அதிகாரிஅங்கீகாரம் செய்தார். சற்றுநேரம் கழித்து நான் தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்றபோது தலைமை ஆசிரியர் நின்று கொண்டிருக்க அதிகாரி நோட்டுப் புத்தகங்களை புரட்டிக்கொண்டே ஏதோ கூறிக் கொண்டிருந்தார். நீங்கள் என்று சொல்லவேண்டிய இடத்திலெல்லாம் நீ என்று அதிகாரி கூறிக் கொண்டிருப்பது என்காதில் விழுந்தது. நான் உடனே வெளியே வந்துவிட்டேன். ஆசிரியர் அறையில் அதிகாரியின் டிரைவர் சாரையும், பியூன் சாரையும் உடற்கல்வி ஆசிரியர் உபசரித்துக் கொண்டிருந்தார். மாணவர்கள் எல்லோரும் கலைந்து போனபிறகுதான் தலைமை ஆசிரியரும், அதிகாரியும் வெளியே வந்தனர். அதிகாரியைச் சுற்றி ஆசிரியர் கூட்டம். எல்லோரும் கைகூப்பி வணங்கினார்கள். அதிகாரி தலையசைத்து ஆமோதித்து ஜீப்பில் ஏறிக்கொண்டார். ஜீப் ஸ்டார்ட் ஆகாததால் டிரைவர்சார் உடற்கல்வி ஆசிரியரை ஒரு பார்வை பார்த்தார். ஆசிரியர் கூட்டம் அடக்கத்துடன் ஜீப்பைத் தள்ளவும் ஜீப் உயிர்பெற்று நகர்ந்தது.

ஒரு வாரத்திற்குள் அந்த செய்தி வந்து விட்டது. தலைமை ஆசிரியருக்கு மாறுதல். ஏதோ ஒரு ஊர். எனக்கு அதில் ஆர்வமில்லை. ஆசிரியர் அறையில் உற்சாகம். உடற்கல்வி ஆசிரியர் அங்கிருந்தவர்களுக்கு டீயும் வடையும் வாங்கிக் கொடுத்தார். இரண்டு நாட்களில் பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்துவிட்டு தலைமை ஆசிரியர் புறப்பட்டுவிட்டார். அன்று மாலை பள்ளிவிட்டபின் ஆசிரியர்கள் பார்ட்டி கொடுத்தனர். பழைய செய்தித்தாளை கிழித்து மைசூர்பாகையும் காரபூந்தியையும் பரப்பி வைத்தார்கள். பக்கத்துகடை டீயை தலைமை ஆசிரியர் அன்றுதான் முதன்முதலாக ருசி பார்த்தார். வழக்கமான வரவேற்புரை பாராட்டுரை எல்லாம் நடந்து தலைமை ஆசிரியர் சுருக்கமாக நன்றிகூறினார்.

ஆசிரியர்கள் கலைந்து சென்றபிறகு நானும் தலைமை ஆசிரியரும் ரோட்டில் இறங்கி நடந்தோம். தோளில் ஒரே ஒரு பை. முகத்தில் மலர்ச்சி. அடுத்த ஊருக்கும் இதே பைதான் என்றார். தொலைவில் கைகாட்டி தெரிந்தது.


மு.குருமூர்த்தி, ([email protected])
101, காவேரிநகர் மேற்கு, தஞ்சாவூர் – 613005


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com