Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
தீபாவளியும் ஆர்.எம்.கே.வியும்

கிருஷ்ணகுமார்


64,000 ரூ வேட்டு வைத்த கதை ஒன்று சொல்வேன். மெகா தங்க வேட்டை கேள்வி "ரிவர்ஸிபள் சாரி தெரியுமா?". பதில் தெரிந்தால் மேற்கொண்டு படியுங்கள். இல்லை வழக்கம் போல் சொக்கப்பானை கொளுத்துங்கள்!

தீபாவளி வந்தாலும் வந்தது! இந்தப் பாழாப் போன நரகாசுரன்.! இந்தப் பாழாப்போன இராவணன்! எவன் போனால் எனக்கென்ன? ராமர் கொன்று வைத்தாலும் வைத்தார், கிருஷ்ணர் கொன்று தீர்த்தாலும் தீர்த்தார், என் கண்ணீரில் நீர் வடிய வெடி மருந்துப் புகை உள்ளே வருது!

கிருமி நாசினியாம்! கம்பி மத்தாப்பு, மற்றும் சாட்டை கொளுத்தும் போது அம்மா கூறுவார்கள்! அப்படி தானே புகை வரும்! கண்ணீர் கரையவேண்டாம் கண்மணி! சிவகாசியில் அதை எப்படிச் செய்வார்களோ தெரியவில்லை! ஆனால் கந்தகமும், மெக்னீசியமும் சேர்ந்து புகை எப்படி கக்குமோ இந்த ஏழைக்குத் தெரியவில்லை ( ஏதோ ஏழைக்குத் தெரிந்த எள்ளு உருண்டை! என்ற பழமொழி வேறு ஞாபகத்திற்கு வந்து தொலைகிறது!).

ஆனால் சரி அம்மா! என்று சொல்லிவிட்டு கண்களைத் துடைத்து விட்டு, சாட்டையை மெழுகுவர்த்தியில் பற்ற வைத்தேன்!

ஆகா எப்படி எரிகிறது! கலர் கலராக!

கலர் என்றவுடன் ஜோதிகா ஞாபகம் வருகின்றது!

ஜோதிகா என்றவுடன் அருட்பெருஞ்ஜோதி என்று வள்ளலார் போன்று எழுதிவிடமாட்டேன்! நாமெல்லாம் அந்த "ரேஞ்சுக்கு வரல்ல அண்ணா!". ஜோதிகா என்றவுடன் ஆர்.எம்.கேவி. பட்டு ஞாபகம் வருகின்றது!

அடடா! டபிள் சைட் ரிவெர்ஸிபல் சாரியாமே!

டபிள் டபிளா சைட் அடித்தவனெல்லாம் அடக்க ஒடுக்கமாய் மனைவி பின்னால் நின்று வாய் பிளந்தேன்!

அப்படி என்றால் என்னம்மா?

அதற்கப்புறம் வந்து ஒரு பத்து நிமிடம் அதைப் பற்றி பட்டு நூல் விலாவாரியாக என்னைப் பிய்த்து எடுத்துவிட்டு, கடைசியாக 64,000 வாங்கத் துப்பிருக்குமா? கடைசிப் பட்டு எங்கப்பா தலை தீபாவளிக்கென்று எடுத்தது என்று தலையில் நங்கென்று விழுந்தது!

சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்! பெண்கள் என்றாலே எழுதும் ஆண்கள் வர்க்கமே இப்படி தான் எழுதும் என்று எண்ணம் அலைமோத தீபாவளி எண்ணெய் வழிய 'கலர்’ பார்க்க விரைந்தேன்! வெளியே! எங்களுக்கு அதான் தீபாவளி! அப்பறம் 'தலைவன்' படம் முதல் ஷோ பார்க்கும் தெம்பே தனி தான்!

தீபாவளி அன்று எவ்வளவு கஷ்டப்பட்டு மிதக்கும் எண்ணெயில் பகோடா, ஓட்டு பகோடா, முறுக்கு, மிக்சர், அப்பம், பணியாரம் என்று ஆக்கி பெரு வயிறு படைத்த உட்கார்ந்து ஈ மொய்க்கும் தொந்திக் கனவான்களுக்கு, எங்கள் வீட்டுப் பெண்மணிகள் 'ஆக்கி' விருந்து படைத்திருக்கிறார்கள்?.

அவர்களுக்கு காலை 6.45 முதல் 8.00 மணி வரை கட்ட ஒரு ஆர்.எம்.கே.வி பட்டு புடவை வேண்டாமா?. தளைய, தளைய அந்தப் புடவையில் வர வீடுகள் பிரகாசமாக, அவள் பின்னாலே குழந்தை, குட்டிகள் பவனி வர ஆனந்தம் அதில் தானே இருக்கின்றது? இப்படி வாய் பிளப்பதாலே தான் 64,000 ரூ இதற்கு முன்னால் சாதாரணம் என்று தோன்றுகின்றது.

ஒவ்வொரு நடுத்தர, மேட்டுத்தரக் குடும்பங்களெல்லாம் ஜோதிகாவில் ஐக்யமாக போன தீபாவளி, அதற்கும் முன்னாள் வந்த தீபாவளியெல்லாம் பட்டுப் புடவைகளாக மாறி வீட்டு பீரோவில் அடுக்கடுக்கானப் பட்டுக்கள் தான். கொக்கி போட்டு பீரோவில் கை வைத்தாலும் திருடன் முதலில் விக்கித்துப் போவது இப்பட்டுக்களைப் பார்த்து தான்! 4 புடவைகள் எடுத்தாலும் 2 லட்சம் தேறுமே! அப்படியும் பழைய பட்டு பழைய பட்டு தான்! புதியது தீபாவளிக்கி வாங்கினால் தான் ஆண்களுக்குத் தெரியும் தீபாவலி!

ஆகா! வளி! வலி! கவிஞர் வாலி தோற்றுவிடுவார்!

வெளியே வெயிலோ 104 டிகிரி மண்டை காயுது! சட்டையோ வியர்வை கசியுது! பேருந்தில் ஏறி கூட்டத்துடன் நின்று உரசிப் போனாலும் கசகசக்கும் வேளியிலும் அருகே பட்டுப் புடவை கட்டிக் கொண்டு நின்று வியர்வையும் பொருத்துக் கொள்ளும் சகிப்பு மனப்பான்மையினால் தான், ஆர்.எம்.கே.வி. பட்டுப் புடவைகளாக விற்கின்றார்கள்.

பெரும் பணக்காரர்களைப் பார்த்து அனைவரும் தங்களைச் சூடு போட்டுக் கொள்ளும் வைபவமாக போவதால் (அதான் சேட்டு தீபாவளிங்க!), பட்டு இல்லையென்றால் சின்னாளம்பட்டு! ஆரணி பட்டு! தர்மாவரம் என்று ஏகத்திற்கும் புவியியல் புள்ளி விவரங்கள் விவரம் தெரிந்த வட்டாரங்களில் சுற்றி வரும்!

இப்போதெல்லாம் சூர்யா ஜோதிகா மாதிரி அனைத்து விளம்பரங்களுக்கும் வருவதால், பட்டுப் புடவை போன்று பட்டு வேட்டி கட்டுபவர்களும் எங்கு போனாலும் பட்டு வேட்டி சட்டை தான்! திருமணத்திற்குப் போனால் வைத்துக் கொடுப்பது பட்டு வேட்டி தான்!

தலை தீபாவளிக்கு "ஹி! ஹி! மாப்பிள்ளை இந்தாங்க!’ என்று தன் போனஸைக் கரைத்து பட்டு வேட்டியை மடித்துக் கொடுக்க வேண்டும்.

ஆபிஸில் அடுத்த நாள் கேட்பார்கள் "எப்படி இருந்தது தீபாவளி?"

வெள்ளிக் கிழமை போனஸ் வாங்கிய சந்தோஷம் ஆர்.எம்.கே.வியில் முடங்கியது என்று சொல்லவும் வேண்டுமோ?

நல்லா இருந்தது! தி நகர் போனேன். அப்பப்பா என்ன கூட்டம்! அலை மோதும் கூட்டத்தில் என் மனைவி மக்களைச் சுமந்து சென்று 64,000 ரூபாய்க்குப் பட்டுப் புடவை வாங்கினேன். அடுத்த நாள் தீபாவளியன்று 5.55 காலை குளித்துக் கொண்டு, அதை என் மனைவி கட்டினாள். 8 மணிக்கு அதை மடித்து பீரோவில் வைத்து விட்டு அவள் தன் பாணியில் சாதாரணப் புடவையை கட்டிக் கொண்டு இட்லிப் பாத்திரம் தேய்க்கும் வேலையில் மூழ்கினாள். அடுத்த தீபாவளி வரும் வரையில் அந்தப் பட்டுப் புடவை ஜம்மென்று பீரோவில் தூங்கும்.

ஹீம்!

உமெக்கேன் கோபம்? எங்கள் உடை மீது? வேண்டுமென்றால் பட்டுக் கோமணம் கட்டிக் கொள்ளேன் என்று அனைவரும் கேட்பதால், அடியேனும் பட்டு வேட்டி வாங்கச் சென்றேன். என்னை அலட்சியமாகக் கடையில் பார்த்தான் ஆர்.எம்கே.வி காரன். அந்த இடத்தில் மட்டும் வெறிச்சோடியிருந்தது. ஒரு சிரிப்பு, கலகலப்பு இல்லை! மோட்டு வளையத்தைப் பார்த்து ஒருவன் நின்று கொண்டிருந்தான். போனது "என்ன வேண்டும்?" என்றான்.

"வேட்டி ...."

என்ன விலையில் வேண்டும்?

பட்டு வேண்டும்!

800, 900, 12000, 1500 தூக்கி போட்டான். அனைத்தும் ஒன்றாக இருப்பதாய் இம்மரமண்டைக்குப் பட்டது. (என்னைத் தான்!)

1200 ஐ தூக்கி உள்ளே போட்டேன்.

அப்பாவிற்கு வாங்கணும்! வயதாகிவிட்டது! பாலியெஸ்டர் போதும்!

விலை! வாங்கினேன்! முடிந்தது!

பில் அங்கே! கை காண்பித்தான்!

கட்டினேன்! வெளியேறினேன்!

வேலை முடிந்தது.

வெளியே வந்தேன்.

"என்னம்மா பார்த்து முடிவு பண்ணினியா?"

"சரியில்லைங்க! நல்லியில் புதுசா ஒரு டிசைன் வந்திருக்காம்! ஏதோ டிவியில் காண்பிக்கிறானென்று இங்கே வந்து பார்த்தேன்! பிடிக்கலை! வாங்கலை! வாங்க நல்லி போகலாம்!"

"அடப்பாவி 6.00 மணிக்கு வந்து இப்போது 8.00 நல்லிக்குப் போய் அப்புறம் குமரனுக்குப் போய் விட்டு, ஆட்டோ பிடித்து போக மணி 11 ஆகிடுமே!"

"வீட்டிலே என்ன வெட்டி முறிக்கிறீர்கள்? குழந்தையைத் தூக்குங்கள்!"

முனகிக்கொண்டே அப்பாவிகள் நடக்கலாயினர்.

நடந்தாலும் கடைசியில் நல்லி பிடிக்காமல் அடுத்த நாள் ஆர்.எம்.கே.விற்கே திரும்ப வருவோமென்று எங்களுக்கு மட்டும் தெரியும்!

கடைசியில் கோ ஆப் டெக்ஸிலில் பெட்ஷீட் துண்டு வாங்கினாலும் வாங்குவோம்! அவை மட்டும் பீரோவில் தூங்காது!

நன்கு உடுத்திப் பயன்படுத்துவோமே! வாழ்க்கை பட்டுவில் இல்லையே! அது தான் பீரோவில் ஏறி விட்டதே!

பாச்சை உருண்டை செலவு வேறு எனக்கு! ஒன்றிற்கு 64 பைசா ஆகும்! குமரனில் வாங்கியிருந்தால் இலவசமாகக் கிடைத்திருக்கும்!

தீபாவளி இனிதே முடிந்து அடுத்த நாள் ஆபிஸிற்கு என் சைக்கிளைத் துடைத்து தட்டி ஏறிப் போனேன்!

- கிருஷ்ணகுமார்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com