Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
பட்டாம்பூச்சிகளால் ஆசிர்வதிக்கப்பட்ட திரவம்

எழில் வரதன்

மூக்கு முட்ட குடிக்கலாம். மூச்சி நிக்க குடிக்கலாமா? இவனுங்க அளவு தெரியாம குடிச்சி சாகறதால அந்த தங்கத்திரவத்துக்கு கெட்ட பேரு, இப்ப ஒருத்தன் செத்தான்னு காலங்காத்தால போன் வருது, அவன் எப்ப செத்தான்னு சொன்னான், ஏன் செத்தான்னு சொன்னான், எப்ப அடக்கம் பண்ணுவாங்கன்னு சொன்னான், ஊர் சொன்னான், வழி சொன்னானா?

எதோ ஒரு கிராமம் என்பது மட்டும் தெரிகிறது, எப்படி போகவேண்டும், தொலைபேசியில் தூக்கக்கலக்கத்தில் அறிவுப்பூர்வமாக பேச முடியாது என்பது இப்பொழுதும் தெரிகிறது. நண்பன் செத்தான் என்று தெரிந்ததும் பதறத்தெரிந்த எனக்கு ஊருக்கு வழி கேட்கத் தெரியவில்லை. ஊர் பேரை அவனே சொன்னான். ஏதோ தின்பண்டத்தின் பேர் வருகிறார்ப்போல ஒரு ஊர். என்ன தின்பண்டம் என்பது தெரியவில்லை. இறந்தவனின் நண்பர்கள் ஒன்றிரண்டு பேரை தொலைபேசியில் பிடித்தேன். யாரும் அவன் ஊருக்குப் போனதாக ஒப்புக்கொள்ளவில்லை. சாவுக்கு வருவதாகவும் ஒப்புக்கொள்ளவில்லை. எல்லோருக்கும் மரணத்தைவிடவும் முக்கியமான வேலை இருக்கிறது.

ஒருத்தனுக்கு மட்டும் சுமாராக வழி தெரிந்தது. தருமபுரி போய் அங்கிருந்து ஒரு டவுன் பஸ் பிடித்து போகவேண்டும். எந்த டவுன் பஸ் என்று அவனுக்குத் தெரியவில்லை. இன்னொருத்தன் தொலைபேசி எண்ணை அவன் கொடுத்தான். அவன் கொஞ்சம் விலாவாரியாக சொன்னான். பஸ் நெம்பர் சொன்னான். எழுதிக்கொள்ள சொன்னான். டவுன் பஸ் நெம்பர் என்ன லாட்டாரி டிக்கட் நெம்பர் போல் பத்து பதினைந்து இலக்கங்களிலா இருக்கிறது? வெறும் இரண்டிலக்க எண்கள். இதை நினைவில் வைத்துக்கொள்ள முடியாதா? பாதியில் பஸ்சில் இருந்து இறங்கி ஒரு இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்றான். அதுதான் எனக்கு விசனமாக இருந்தது. இன்றைய பொழுதும் எனக்கு நல்லபடியாக காலையில் ஒரு அபாரமான செய்தியோடு புலர்ந்திருக்கிறது பாருங்கள்.

ஒருமுறை திருமணம் ஒன்றிற்காக ஒரு மகா குக்கிராமத்திற்கு போகவேண்டியதாய் போயிற்று, போகும்போது மாப்பிள்ளையோடு கார் வைத்துப் போயாயிற்று. கல்யாணம் முடிந்து திரும்பலாம் என்றால் பெருத்த ரோதனையாயிற்று. அரை கிலோமீட்டர் மண் சாலையில் நடந்து வந்தால் தேசிய நெடுஞ்சாலை பரபரப்பாக கறுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் ஓடுகிறது. நான் போக வேண்டிய நகரப் பேருந்தும் நான் வசிக்கும் நகரத்தின் பெயர் எழுதி கால் மணிக்கொருமுறை ஓடத்தான் செய்கிறது. நான் ஒற்றையாள் நின்று கை காட்டினால் நிறுத்தி ஏற்றிக் கொள்ள ஓட்டுனர் என் மாமனா மச்சானா?

அடுத்த முறை அதே ஊருக்கு அவன் குழந்தையைப் பார்க்க போயிருந்தேன், “இங்கே ரூட் பஸ் நிற்கும்” என்று பெயிண்ட்டில் விரல்கொண்டு எழுதப்பட்ட தகவல்பலகை அந்த தேசிய நெடுஞ்சாலையில் எழுதப்பட்டிருந்தது. அருகே நின்று கை காட்டினால் ரூட் பஸ் நிற்கிறது. அதிசயத்து போனேன் நான். காரணம் எளிமையானது. ஒரு முறை நிற்காமல் போன பேருந்து நடத்துனாரின் பையை காசோடு பிடிங்கிக் கொண்டு. பஸ்சை பங்சர் ஆக்கிவிட்டு ஓட்டுனரை உள்ளாடை கிழியும் வரை அடித்துவிட்டு இந்த இடத்தில் வாகனமேறும் பிரயாணிகள் நடத்திய ராத்திரி யுத்தத்தால் இந்த ஏற்பாடு. போலீஸ் வைத்து சந்தேகக் கேசில் யார் யாரையோ கைது செய்திருக்கிறார்கள். ஆனாலும் ராத்திரியானால் சாரியாக அரசுப் பேருந்தின் கண்ணாடிகள் மட்டுமே உடைவதால் நொந்து போன கலெக்டர் அவர்கள் வேறு வழியில்லாமல் போட்ட உத்தரவால் இங்கு ரூட் பஸ் நிற்கும்.

இதுபோன்று நம் அருமை நாட்டில் அநேகப்பல மகாகுக்கிராமங்கள் இருக்கின்றன. அப்படியொரு குக்கிராமத்திற்கு அடிக்கடி போகும் பாக்கியவானாகிவிடும் நான் மாலுமி சிந்துபாத் போல கை கொள்ளாத சரித்திர நினைவுகளோடு திரும்பி வருவேன். இதோ இன்றைக்கும் நான் கிளம்பிவிட்டேன், சரியாக பெயர்கூட தெரியாத கிராமம் நோக்கி. தருமபுரியிலிருந்து அந்த கிராமத்திற்கு பஸ் இருப்பதாகவும் அங்கிருந்து ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் ஏதோ பட்டி என்று முடியும் ஒரு கிராமத்தில் இறங்க வேண்டும் என்றும் அந்த கிராமத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் நான் போக வேண்டிய ஏதோ தின்பண்டத்தின் பேர்கொண்ட ஊர் இருப்பதாகவும் கிடைத்த தகவலைவைத்தே நான் கிளம்பிவிட்டேன்.

தருமபுரி ஒரு நகரமாக இருப்பதால் போவது மிக எளிது. வந்து சேர்ந்து விட்டேன். இப்பொழுது நான்போகும் ஊருக்கு வழி கேட்டாக வேண்டும். ஒன்று பேருந்து எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லை போக வேண்டிய ஊர் பெயராவது தெரிந்திருக்க வேண்டும். இரண்டுமே இல்லாமல் எதைச்சொல்லி வழி கேட்பது ஒரு ஊருக்கு? ஒரு மாக்கான்கூட செய்யாததைத்தான் நான் செய்தேன். தொலைபேசியில் ஒருத்தன் சொல்கிறான் டவுன்பஸ் எண்ணை. ஏதோ போன ஜன்மத்து நினைவுகளைக்கூட மறக்காத ஞாபகசக்தி உள்ளவன் போல அதை எழுதாமல் விட்டதனால் இப்படி ஆயிற்று. பேருந்து எண் முப்பத்தி ஐந்தா இல்லை முப்பத்தி இரண்டா தெரியவில்லை.

யாரிடம் கேட்டாலும் சிரிப்பார்கள். “என் நண்பணின் சாவுக்கு போகணும்! அது எந்த ஊர்” என்றால் யார் என்ன சொல்வார்கள்? யோசித்தபடியே ஒரு கடையில்போய் சிகரெட் ஒன்று வாங்கி பற்றவைத்து நன்றாக ஆழ்ந்து உள்ளுக்கிழுத்து பின் அவரிடமே முப்பத்திஐந்தாம் நெம்பர் பஸ் எந்த ஊருக்கு போகும் என்று கேட்டேன். அவர் இன்னொருவருக்கு பெரிய பாட்டில் கோகோ எடுத்து கொடுத்தபடியே “கோம்போரிக்கு” என்றார். இதில் பட்டி என்று வரவில்லையே... பட்டிக்கு இல்லையா போகணும்,

“அப்ப முப்பத்திரண்டாம் நெம்பர் பஸ் எந்த ஊருக்கு போகுது,” அவர் “கோயிலு}ருக்கு போகுது,” என்று சொல்லி மூக்கை வாயை ஒரு மாதிரியாக விடைத்துக்கொண்டு பெரிதாய் ஒரு தும்மல் போட்டார். கொஞ்சம் மழைக்காலத்து சாரல்போல என்மேலும் தூறல் விழத்தான் செய்தது என்றாலும் இவரிடம் நான்போகும் பஸ் எது என்று கேட்டுவிடும் ஆர்வத்தில் பொறுத்திருந்து கேட்டேன். அவர் ஒரு நீலக்கலர் துண்டில் மூக்கை விரல் விட்டு சுத்தம் செய்வதிலேயே சுவாரஸ்யமாக இருந்தார்.

“அந்த ரெண்டு பஸ்சும் எதாவது பட்டிங்கற ஊருக்கு போகுங்களா?”

“பட்டிங்கற ஊருக்கா...? நீங்க எந்த ஊருக்கு போகணும் அதைச் சொல்லுங்க,”

“தெரியலைங்ளே...”

“தெரியலையா?” கடைக்காரர் மூக்கை நோண்டுவதை நிறுத்திவிட்டு என்னை தினுசான பார்வை பார்த்தார். மீசைமேல் சளி படர்ந்திருந்தது. இவனிடம் பெரிய பாட்டில் கோகோகோலா வாங்கி சென்றவன் இதை பார்த்தால் குடிப்பானா மாட்டானா? நான் சிகரெட்டை கீழே போட்டுவிட்டு, “இல்ல தின்பண்டத்தில முடியிற கிராமம் ஏதாவது வருமா?”

கடைக்காரன் ஒற்றை வரியில் “தெரியாது” என்றான்.

“சேலம் போகிற வழின்னு சொன்னாங்க”

“தெரியலைங்க சார்...” என்று மும்முரமாய் வேறு ஆட்களுக்கு பிஸ்கட் பொட்டலமும் சிகரெட்டும் எடுத்து கொடுத்துக்கொண்டிருந்தான். அவன் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டான். என் கேள்விக்கு பதில் சொல்லக்கூடாது என்று முகத்தை திருப்பிக் கொண்டு நின்றானே. அதனால் நானும் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டேன். இவன் மீசைமேல் என்ன ஒட்டி இருக்கிறது என்று இவனிடம் சொல்லக்கூடாது. சொல்லாமல் நான் வேகமாக வேறு இடம் தேடினேன், நான் போகும் கிராமத்திற்கு வழி கேட்க.

“யோவ்... சிகரெட்டுக்கு காசு குடுத்துட்டு போய்யா...”

என்னைத்தான். நான்தானே ஊர் வழி கேட்கும் மும்முறத்தில் காசு கொடுக்காமல் புகைவிட்டு வந்தவன். வழிந்தபடி மறந்துட்டேங்க என்று பாக்கெட்டில் கைவிட்டு ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை அவனிடம் தந்து மீதி காசுக்காக நின்றேன்.

அவன் “என்னது...?” என்றான்.

நான் “சிகரெட்டுக்குக் காசு, ரெண்டு ரூபாய் போக மீதி காசு குடுங்க என்றேன்...”

அவன் என்னை முறைத்தான். இதிலென்ன தப்பு? இரண்டு ரூபாய் போக மீதிக் காசை இந்த தருமபுரி மாநகரத்தில கேட்டால் தப்பா? இப்படி மொறைக்கிறானே...

நான் குடுத்த காசை என்னிடமே திருப்பித்தந்து,. “சில்லரையா ரெண்டு ரூபாய் இருந்தா குடு” என்றான். நான் என்னிடம் இல்லை என்றேன். “அப்ப பரவாயில்ல! இந்தக் காசையும் நீயே எடுத்துட்டு போ” என்று என் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக அந்த காசை உள்ளங்கையில் திணித்தான். இவன் பைத்தியமா? மூணுரூபாய் சில்லரை மீதி இருக்காதா இவனிடம்? அவன் திருப்பித்தந்த காசில் தும்மிய சளி இருக்குமா என்று பார்த்தேன். அடக்கடவுளே... நான் தந்தது ஐந்து ரூபாய் நாணயமல்ல. வெறும் ஐம்பது காசு. ஏதோ ஞாபகத்தில் என்னென்னமோ செய்கிறேன். படபடப்பு கூடிப்போனவனாய் உள்ளே இருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை தெரியாம மாத்திக் குடுத்திட்டேன் இந்தாங்க என்று கொடுத்தால் அவன் வாங்க மாட்டேன் என்கிறான். “வேணாம் போய்யா... அட வேணாங்கறேன்ல... தெரியுது போ... இனிமே தனியாவராத... யாரையாவது தொணைக்கு கூட்டியா...”

என்னைப்பற்றி என்ன நினைக்கிறான் இவன். பைத்தியமென்றா...? ஏதாவது ஒரு காரணத்தால் இருதய படபடப்பு கூடிப்போனால் எனக்குத்தான் புகை பிடிக்க வேண்டுமே! இன்னொரு கடைக்காரனிடம் அதே ஐந்து ரூபாயை மறக்காமல் கொடுத்துவிட்டு சிகரெட் வாங்கி பற்றவைத்து புகையை அடர்த்தியாய் உள்ளுக்குள் இழுத்து நுரையீரலில் அடக்கினேன். படபடப்பு குறைகிறது. சிகரெட் நல்ல தோழன். இந்த கடைக்காரனிடம் விசாரிக்கலாம் என்றால் அந்தக்கடை அனுபவம் உதைக்கிறது. என்னதான் செய்ய? வீட்டுக்குத் திரும்பிப் போய்விடலாமா? பத்துவருடம் நெருக்கமாய் பழகியவன். அவன் சாவுக்குப் போகாமல் இருப்பது மனசுக்கு வேதனையாய் இருக்கும். எப்படியாவது போகத்தான் வேண்டும். இந்தக்கடைக்காரன் சொல்வானா? இவனுக்கு தெரியுமா?

கடைக்காரன் பார்க்க ஒரு தினுசாக மீசை வைத்து முரடன் போலத்தான் இருந்தான். ஒருவன் வந்தான். கடை முன் தொங்கிய வாழைப்பழம் ஒன்றைப் பிய்த்து தோலுரித்து வாயில் கடித்தபடி ஐம்பது ரூபாயை எடுத்து அந்த கடைக்காரனிடம் தந்தான். “சில்லரை இருந்தா குடுக்க வேண்டியது தானே... வந்த உடனே கொரங்கு மாதிரி பழத்தை உரிச்சி வாயில போட்டுகிட்டு ஐம்பது நீட்டினா சில்லரைக்கு எங்க போகட்டும்” என்று ஏகத்திற்கும் திட்டினான். பழம் தின்றவன் வாயில் பாதிப் பழமும் கையில் மீதிப் பழமுமாக வைத்துக்கொண்டு விழித்த விழியைப் பார்க்க பாவமாக இருந்தது. இவனிடம் ஊர் பேர் தெரியாமல் வழி கேட்டால் குரங்கென்பானோ கோட்டானென்பானோ என்று பயந்து நடையைக் கட்டினேன்.

“சார்... சார்... காசு வாங்காம போறிங்களே...” என்று குழைவாய் அவன் மூன்று ரூபாய் நீட்டியதும் நானும் தேங்சுங்க என்று சொல்லி வாங்கி பையில் போட்டுக்கொண்டேன். அந்தப் பக்கம் பழம் தின்றவனை குரங்கென்கிறான். இந்தப் பக்கம் மீதி காசு வாங்காமல் போகும் என்னை சார்னு மரியாதையாக் கூப்பிடறான். மனுச முகம் எத்தனை நிமிசத்துக்கு ஒரு முறை மாறும்.

முப்பத்தி ரெண்டாம் நெம்பர் பஸ் எங்காவது தென்படுகிறதா என்று பார்த்தேன். காணோம். யாராவது மாலையும் கையுமாக இருந்தால் அவர்களைக்கூட விசாரிக்கலாம். எந்த ஊர் சாவுக்கு போறிங்கன்னு. ஒருவேளை அவர்கள் நான் போகும் ஊருக்கு போகிறவர்களாக இருக்கக்கூடும். உள்ளே வேகமாக ஒரு பேருந்து நுழைகிறது. அது முப்பத்தி ஐந்தாம் நெம்பர் பஸ். ஐயா... இந்த கண்டக்டர விசாரிச்சா தெரிஞ்சிடும் இல்லே. அந்த கண்டக்டரை கேட்டேன்.

“இந்த பஸ் எங்கங்க போகுது.”

“நீங்க எங்க போகணும். அதைசொல்லுங்க சார்...” சலித்தபடி பேருந்து பின்னால் வருவதற்கு விசிலடித்துவிட்டு என் கேள்விக்கு பதில் சொல்லாமலே எங்கேயோ போயே போயிட்டார். பேருந்தில் திமுதிமுவென கூட்டம் ஏறி வழிந்து நின்றது. படியில் நின்ற இளைஞன் போன்றவனிடம் கேட்டேன்.

“இந்த பஸ் எங்க போகுது”

அவன் “கோம்போரி” என்றான். கோம்போரியா சோம்போரியா?

“பட்டின்ற எதாவது ஒரு ஊர்ல நிக்குமா இது...”

“எந்த பட்டி?”

“தெரியலையே...”

நல்லவேளையாக அந்த பையன் என்னை ஒரு மாதிரியாக பார்க்கவில்ல. இளைஞர்கள் இளைஞர்கள்தான்.

“இல்ல சார். கொமத்தம்பட்டி ரெட்டிப்பட்டி நார்த்தம்பட்டினு நெறைய பட்டியில நிக்கும் இந்த பஸ். நீங்க எந்த பட்டிய கேக்கறிங்க...” போச்சிடா இத்தனை பட்டி இருக்கா இங்க

“எதோ சாமி பேர் வரும்..”.

“சாமி செட்டிப்பட்டியா?”

“இல்ல... வேற “

*நாகரசன் பட்டியா?*

“வேற எங்கயும் இது நிக்காதே...”

“அங்க இருந்து எதோ ஒரு ஹள்ளிங்கற ஊருக்குப் போகணும்.”

“ஏதோ ஒரு ஹள்ளியா? ரெட்டி ஹள்ளியா?”

“இல்ல எதோ ஒரு தின்பண்டம் பேர் வரும்.”

“எதுக்காகப் போறிங்க...”

Drinking man “ஒரு சாவுக்கு...”

உள்ளே கடைசி சீட்டில உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் முகத்தை ஜன்னல் வலியாக நீட்டி... சேலம் வழியோதானே போகணும் என்றார். எனக்கு அது நன்றாகத் தெரியும். “ஆமாம்” என்றேன்.

“யாரோட சாவுக்கு. தீர்த்தராமனா?”

“ஆமாங்க... உங்களுக்குத் தெரியுமா பெரியவரே...”

“தெரியாத என்ன? தின்னஹள்ளி போலீஸ்காரன் பையன் தானே...?”

“ஆமாங்க. தின்னஹள்ளியதான் நான் ஏதோ தின்பண்டம்னு நெனைச்சிட்டேன்.”

“அதுக்கு கோம்பை பஸ்சில போகணும். அது இருபத்தி மூணாம் நெம்பர் பஸ். அங்க போயி வெங்கட்டம்பட்டியில எறங்கிங்க சரியா? அங்க வலது கை பக்கமா ஒரு பாதை போகும். ரெண்டு கிலோ மீட்டர் நடந்தா தின்னஹள்ளி வந்திடும். சரியா?”

“நன்றி பெரியவரே. ஊருக்குத் திரும்பிடலாம்ன்னு பாத்தேன். எதுமே தெரியாம என்னத்தை விசாரிச்சி எந்த ஊருக்குப் போறது சொல்லுங்க. நல்லவேளை சொன்னிங்க. வரேன் பெரியவரே.”

“சீக்கிரம் போங்க. இருபத்தி மூணு அங்க நிக்கும். அதைவிட்டுட்டா அதே பஸ் திரும்ப வந்தாத்தான். ரெண்டு மணிநேரம் ஆகும்.”

வேகவேகமாக அவர் கை காட்டிய திக்கில் பார்த்தால் இருபத்தி மூன்று புகை கக்கியபடி பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. மூச்சிரைக்க ஓடியும் அந்த பஸ்சை பிடிக்க முடியவில்லை. அது திரும்பி வரும்வரை பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழில்லை. இன்னொரு சிகரெட் பற்றவைத்து நுரையீரலை புகை கொண்டு நிரப்பினேன். இருபத்தி மூன்றாம் எண் பஸ் போய் திரும்பவந்தது. ஒலிம்பிக்கில் இந்த போட்டியை ஏன் சேர்க்கவில்லை என்று தெரியவில்லை. வேறு எந்த நாட்டுக்காரனும் டவுன் பஸ்சில் முதல் ஆளாக ஏறி சீட்டு போட்டு அப்பாடா என்றுமூச்சு விட்டபடி உட்கார்ந்து முதல் பரிசை வாங்குவான் என்று தோன்றவில்லை. எனக்கு இந்த விளையாட்டில் ஆர்வமில்லை என்பதுடன் நான் முற்றிலுமாக தோற்றுப்போய் பிக்பாக்கெட்டுகளுக்கு பர்சைப் பறிகொடுத்து பஸ்சில் போகமுடியாத பாரிதாபகரன் ஆவேன் என்பதால் விளையாட்டில் கலந்து கொள்வதில்லை. கடைசியாளாக படிக்கட்டின் ஏதாவது ஒரு லூசான ஸ்குருவை பிடித்தபடி போவதே, ஓடி பஸ் ஏறுவதிலும் சாலச்சிறந்ததென்று நினைப்பவன் நான்.

கூட்டம் பிதுங்கிக் கொண்டிருந்தது. கிராமத்து கருகமணிப் பெண்களின் கரகரவசவுகள் பேருந்தெங்கும் கும்மாளமடித்தது. மண்வாசனையும் வியர்வை வாசனையும் தொழுவத்து வாசனையுமாக இருக்கிறது பேருந்து இண்டிடுக்கெல்லாம். தேடிப்பார்த்தால் உள்ளே ஆடோ கோழியோ இருக்கும். இதில் தினத்திற்கும் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கொண்டிருக்கும் கண்டக்டர்கள் மகா பாக்கியவான்கள். புலுத்துப்போய் வேறு வாசனையறியாமல் வெறும் துவாரமாகியிருக்கும் நடத்துனாரின் மூக்கு. பழகியவர்களுக்கு சொர்க்கவாசல் என்பது இந்த டவுன் பஸ் வாசலாகத்தான் இருக்கும். பழகாதவர்களுக்கு நரகத்தின் வீச்சம் முன்மாதிரிக்காக வீசும்.

அந்த பெரியவர் சொன்ன அந்த தின்பண்ட ஊர் தின்னஹள்ளியை கையில் எழுதி வைத்து நடத்துனர் வந்ததும் சரியாக டிக்கெட் கேட்டு சரியாக சில்லரை கொடுத்து சரியாக நடந்து கொண்டேன். உள்ள வந்துடுங்க சார் படியில தொங்காதிங்க என்று நடத்துனாரின் கரிசனத்திற்கு பணிவதா வேண்டாமா? உள்ளே ஏதோ ஏக்கர் கணக்கில் இடம் இருப்பது போல் நடத்துனர்கள் உள்ளே வா என்கிறார்கள். உள்ளிருக்கும் புழுக்கத்தில் உள்ளாடை தீப்பிடிக்கக்கூடும்.

பத்துவருடப் பழக்கமுள்ள நண்பனின் மரணத்திற்கு ஒரு மாலை வாங்கிப் போகவேண்டும் என்று உறைத்தாலும் இந்த கூட்டத்தில் மாலை வாங்கிக் கொண்டு போய் நாரைத்தான் நண்பனின் உடல்மேல் போர்த்த வேண்டியிருக்கும். மனசை மாலையாக்கி உனக்கு நானிடுவேன் என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டால் நண்பனின் ஆத்மா சாந்தியடையும் என்று நம்புகிறேன்.

பக்கத்தில் இருந்த பெரியவாரின் வெண்தாடி அநியாயத்திற்கு என் மூக்கினுள் நுழையப் பார்க்கிறது. வேறு பக்கம் தலை திருப்ப முடியாது. திருப்பினால் தாடியை விட மோசமான அக்குள் ஒன்று மூக்கின் முன் கை தூக்கி நிற்கிறது. அதற்கு தாடியே பரவாயில்லை. பெண் ஒருத்தி பிள்ளையோடு நிற்கிறாள். யாரும் இருக்கை தரமாட்டேன் என்கிறார்கள். என் மேல் சாய்ந்தபடி வருகிறாள். அவளை சாயாதே என்று சொன்னால், தள்ளாடாமல் இருக்க மேலிருக்கும் கம்பியைப் பிடிக்கப்போய் வேறு விபரீதங்கள் நடக்கலாம். பிள்ளைக்குப் பால் கொடுத்தபடி இருந்தவள் அவசரத்தில் பஸ்பிடிக்க ஊக்குகளை போடாமல் வந்திருக்கலாம். கம்பியை கை தூக்கி பிடிப்பது இன்னும் அபாயகரமானது. என் ஒரு கால் எனக்கு முன்னிருக்கும் மூன்றாமவனின் கால் பக்கத்தில் இருக்கிறது. இன்னொரு கால் பின்னிருக்கும் இரண்டாமவனிடம் இருக்கிறது. ஒரு கை மேல் கம்பியையும் இன்னொரு கை சீட்டின் கம்பியையும் பிடித்தபடி நிற்கிறது. இதே அமைப்பில் வெறும் பேருந்தில் நிற்கச்சொன்னால் எப்படி இருக்கும் ஒரு மனிதனை பார்க்க. விபரீத மிருகம் ஒன்று தப்பாய் கை கால் முளைத்து நிற்பது போல் இருக்கும்.

பெரியவர் தாடி திரும்பத் திரும்ப மூக்கைப் பதம் பார்க்கிறது. அடுத்து தும்மல் வரப்போகிறது. தும்மல் வந்தால் துணிகொண்டு வாய் மூக்கெல்லாம் மூடி, சத்தம் குறைத்து, அடுத்தவர் மேல் தெறிக்காமல் தும்ம வேண்டும் என்ற நாகாரிகத்தை இங்கே என்னால் கடைபிடிக்க முடியுமா தெரியவில்லை. அப்படி செய்ய கைக்குட்டையை எடுக்க வேண்டும். பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் கைக்குட்டையை எடுக்கமுடியுமா தெரியவில்லை. ஒரு கையை எடுத்தால் பிள்ளை வைத்திருப்பவள் மேல் விழுவேன். இன்னொரு கையை எடுத்தால் இந்த தாடிப் பெரியவர் மேல் விழுவேன். எடுக்காமலே இருக்கலாம் என்றால் எல்லோர் மேலும் எச்சிலும் சளியுமான ஒரு கலவையை தெளித்து தும்மவேண்டியிருக்கும். தர்ம சங்கடமாய் இருக்கிறது. இத்தனை கஷ்டத்தை தரப்போகும் பெரியவரின் தாடியைப் பார்த்தேன். பத்துக்கு ஒரு கறுப்புமுடி விதம் கலவையான கறுப்பு வெள்ளை தாடி. சிரித்தால் வெற்றிலை மென்ற பற்கள் ஆரோக்கியமாக திடமாக இருக்கிறது.

“பெரியவரே கொஞ்சம் அந்த பக்கமா திரும்பி நில்லேன்.”

தைரியத்தை வரவைத்து சொன்னேன். அவர் சிரித்தார். அழகான சிரிப்பு தாடியினுள் தெரிகிறது. “தாடி முகத்துக்கு நேரா குத்துது பெரியவரே...” கெஞ்சினேன்.

“திரும்ப முடிஞ்சா திரும்பிடுவேனே தம்பி. கொஞ்சம் அசங்க முடியுமா இந்த கூட்டத்தில... இன்னம் பத்து நிமிசம் பொறுத்துக்கோ...” சிரிக்கிறார்.

பத்துநிமிசம் வரை தும்மல் பொறுக்குமா? பெரியவர் சிரிப்பதால் கொஞ்சம் தைர்யம் பெற்றவனாக “எதுக்கு பெரியவரே இத்தனை பெரிய தாடி. வேண்டுதலா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லே... இத்தனை நாள் தாடி மழிக்கிற காச சேத்து வச்சி ரெண்டு கறவை மாடு வாங்கியிருக்கேன். தெனம் ஆறு லிட்டர் பால் கறக்குது.”

குறும்புக்கார தாடியாக இருப்பார் போல இருக்கிறதே. “தெரிஞ்சிக்கத்தான் கேக்கறேன் பெரியவரே. சொல்லுங்க எதுக்கு இம்மாம்பெரிய தாடி”

“சொன்னா நம்பு தம்பி. நெசமாத்தான் சொல்லுறேன். ரெண்டு கறவை வாங்கினேன் மழிக்கிற காசை மிச்சம் பிடிச்சி. தாடிய வாரம் ஒருக்கா மழிச்சிருந்தா ஒரு சாக்கு முடிதான் மிச்சம் ஆயிருக்கும்”

எனக்கு வியப்பாய் இருந்தது. என் நண்பன் ஒருவன் நான் பிடிக்கும் சிகரெட் செலவு கணக்கைப் போட்டு காண்பித்தானே. தினம் பத்து சிகரெட் பிடித்தால் இருபது ரூபாய். மாசம் அறுநூரு ரூபாய். வருசம் ஏழாயிரத்தி இருநூரு ரூபாய். பதினைந்து வருசத்துக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய். இதுக்கு ஒரு அம்பாசிடர் கார் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கலாமுன்னு சொன்னானே. இந்தப் பெரியவர் சவரம் செய்வதை நிறுத்தினா கறவ மாடு வாங்கலாமுன்னு சொல்றாரே... இப்படி ஒரு கணக்கு இருக்கா?

நான் நினைத்துக் கொண்டேன். இரண்டு நாளைக்கு ஒரு பிளேடு ரெண்டு ரூபாய் என்றால் இருபது வருசமாக சவரம் செய்வதால் என்ன செலவாகியிருக்கும். அந்த சேவிங் க்ரீம். ஆப்டர் ஷேவ் லோசன் உட்பட என்று பஸ்சின் பிசுபிசுப்பில் கணக்கு சரியாக வரமாட்டேன் என்கிறது. ஆயிரக்கணக்கில் வரும் என்றுதான் தோன்றுகிறது.

“வெத்தளை பாக்கு நெறைய போடுவீங்க போல இருக்கே... அதை நிறுத்தியிருந்தா இன்னும் ஒரு கறவை சேத்து வாங்கியிருக்கலாமே பெரியவரே...”

பெரியவர் சிரித்தார் “தமாசா பேசறிங்க தம்பி. தாடி வச்சி மாட்ட வாங்கி பால்கறந்து விக்கிறது எதுக்காக... நல்லா சாப்டுட்டு வெத்தலையப் போட்டு குதப்பிக்கிட்டு ஊர்க்கதைய பேசிக்கிட்டே மரத்தடியில தாயம் வெளையாடவும் காத்தாட தூங்கவும் தானே... அந்த சந்தோசத்தையே நிறுத்திட்டு நான் எதுக்கு கறவை மாட்டை வாங்கணும். கறவை கறந்த பால வித்து என்ன செய்யச் சொல்லறிங்க. இன்னொரு கறவை இன்னொரு கறவைன்னு வாங்கிட்டே இருந்தா என்ன பிரயோஜனம்? எதுக்கு நான் மாட்டுக் காம்ப புடிச்சிச் தொங்கி பால் கறக்கணும். வெத்தலை போடத்தானே...” பெரியவர் மீண்டும் சிரித்தார்.

இந்த பெரியவர் ஜப்பானில் இருந்திருந்தால் ஜென் துறவியாக இருந்திருப்பாறோ...

“தம்பி என்ன வேலை பாக்கறிங்க...?”

“இன்சூரன்ஸ் கம்பெனியில வேலை பாக்கறேன்.”

“மாசமானா காசு வாங்கிட்டு செத்தா நெறைய காசு தருவாங்களே அந்த கம்பெனியா?”

விவரமான பெரிசுதான்.

“எவ்வளவு சம்பாதிக்கிறீங்க?”

“மாசம் ஒன்பதாயிரம் முன்ன பின்ன வரும்.”

“அந்த ஒன்பதாயிரத்தையும் இன்சூரன்சாவே கட்டச்சொன்னா கட்டுவீங்களா? செத்தபின்னாடி ஒரு கோடி தரேன்னு சொன்னா?”

“அதெப்படிங்க சாப்பாட்டுக்கு என்ன செய்யறது.”

“ஏதாவது கல்யாண மண்டபத்தில போயி சாப்பிட்டுக்கோ...”

பெரியவர் குதர்க்கம் பேசுகிறாரா?

“என்ன தம்பி அப்படிப் பாக்கறீங்க... தப்பா நெனைச்சிக்காதிங்க. எதைக் கொடுத்து எதை வாங்கணும்னு கணக்கு இருக்கு. தாடி மழிக்காம இருந்து கறவை வாங்கலாம். வெத்தலை போடற சொகத்தை விட்டுட்டு கறவை ஏன் வாங்ணும். அதுக்குத்தான் சொன்னேன்.”

அந்த பிள்ளை வைத்திருக்கும் பெண் மேலிருக்கும் கம்பியை கைதூக்கி பிடித்து நின்றதைப் பார்த்து விட்டேன். கடவுளே எந்த நேரத்தில அந்த விபரீதம் நடக்குமோ தெரியவில்லையே...

“சொல்லுங்க பெரியவரே”

ஒரு கையில் பிள்ளையை வைத்திருக்கிறாள் இன்னொரு கையை மேலே பிடித்திருக்கிறாள். ஏதும் நடந்தால்; என்ன செய்வாள். திரும்பி நின்று கொள்ளலாமா?

“ம்...சொல்லுங்க பெரியவரே! வெத்தலை போடற சொகத்தை விட்டுட்டு கறவை ஏன் வாங்கக்கூடாது...”

எப்படிப் பார்த்தாலும் ரவிக்கை என்பது பெண்களுக்கு பாதுகாப்பான உடையில்லை என்றுதான் தோன்றுகிறது. அதுவும் உள்ளாடை அணியாத கிராமத்துப் பெண்களுக்கு குறிப்பாக பேருந்தில் வரும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல. திரும்ப முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் கண்களையாவது மூடிக்கொள்ளலாமா?

“ம் சொல்லுங்க பெரியவரே... தாடி வெச்சிட்டு வெத்தலை...”

“என்னாச்சி தம்பி... சொல்லறத கேக்காம நீங்களே ஏதோ பேசி ஏதோ முழிக்கிறீங்க... அங்க என்ன இருக்கு... அட இதுவா... ஏம்மா கைய கொஞ்சம் கீழ இறக்கி இந்த சீட்டுக் கம்பிய புடிச்சிக்கோ...” இதான் பெரிசு. டக்குனு பிரச்சினைய கூச்சமில்லாம தீத்துபுடிச்சே. நாம வெக்கப்பட்டு கூச்சப்பட்டு கண்ண மூடி... கொஞ்சம் சமயோசிதம் வேணும் நமக்கும்.

“இப்ப கேப்பிங்க இல்ல. அந்தக் காலத்தில சட்டியில காசாவும் தங்கமாவும் போட்டுப் போட்டு சேத்து வச்சி செலவழிக்காம செத்து போவானுங்களே. காசக் காப்பாத்தறதா நெனைச்சி எக்குத்தப்பான எடத்தில அந்த காசுப்பானைய பொதைச்சும் வச்சிடுவானுங்க. அத்தனை கஷ்டப்பட்டு வாய வயித்தைக் கட்டி சொகத்தை இழந்து சேத்த காசும் நகையும் இவனுக்கு உதவுதா? சல்லிக்காசு உபயோகம் இல்லாம பூமியுல விட்டுட்டு செத்துப்போவான். அவன நாம என்ன சொல்வோம். பயித்தியம்னு தானே... அப்படித்தானே உங்க இன்சூரன்ஸ்...”

இவ்வளவு பேசினது நான் செய்யற தொழிலை நொட்டை சொல்லத்தானா? தாடி ஏன் வெச்சேன்னு கேட்டது தப்பா? நான் செய்யற தொழிலே தப்புன்னு சொல்லுதே கிழம்.

“கஷ்டமான கஷ்டத்தில காச சேத்தி நமக்கு ஒதவாம செத்தபின்னாடி வந்து என்ன பிரியோசனம் அந்த காசால. சொல்லுங்க...”

“இல்ல பெரியவரே திடீர்னு செத்தாதான் அது மாதிரி. உங்கள மாதிரி வயசாகிற வரையில இருந்தா காச கட்டினவங்களுக்கேத் தருவாங்க...”

“ஏன் அதுக்கு மேல சாகமாட்டான்னு முடிவு பண்ணிடறாங்களா? எனக்கு புடிக்கல தம்பி. மத்தபடி நீங்க உங்க ஒன்பதாயிரத்தையும் இன்சூரன்சா கட்டுங்க வேணாங்கல...”

இவரிடம் இன்னும் பேசுவதா வேண்டாமா? தொழிலை பழிக்கிறானே... காப்பீடு என்பது என்ன. அதன் லாபங்கள் என்னனு இந்த புழுக்கமான பேருந்தில் தாடிவச்சிட்டு அடாவடி பேசற கிழவனுக்கு சொல்லித்தான் ஆகணுமா?

“தப்பா நெனைச்சிக்காதிங்க தம்பி... எல்லாத்திலயும் ஒரு நல்லதும் இருக்கு ஒரு கெட்டதும் இருக்கு. அதனால எல்லாத்தையும் தள்ளி வச்சிடவும் முடியாது சேத்துக்கிடவும் முடியாது. லாப நட்டக்கணக்கில எது கொஞ்சம் அதிகமா நட்டத்தைவிட லாபம் காமிக்கிதோ அதை நாம சேத்ததுக்கிட வேண்டியதுதான்...” சிரிக்கிறார்.

இவ்வளவு பெரிய தத்துவத்தை இந்த வேர்வை நாற்றத்தில் நான் வேண்டி விரும்பிக் கேட்கவில்லையே. எவனாவது காதை திறந்து வைத்திருந்தால் போதும் தத்துவத்தை குடம்குடமாக ஊற்றிச் செல்கிறார்கள். வழக்கமாக கிருஷ்ண பரமாத்மா குதிரைவண்டியில் வந்து அர்ஜுனனுக்குத்தான் கீதை சொல்வார். இன்றைக்கு பாவம் கூட்டமான டவுன் பஸ்சில் ஏறி எனக்கு கீதை சொல்கிறார். வந்துட்டாரு தாடி வச்சிகிட்டு இங்கர்சால்...

“தம்பி அதான் சொன்னேனே... சும்மா பேச்சிக்கு சொன்னேன் தம்பி. மத்தபடி செத்தபின்னாடி காசு தர்ற உங்க திட்டம் நல்ல திட்டம்தான்...”

திரும்ப கடுப்பேத்தறான் கிழவன்.

“தம்பி எங்க போறிங்க...?”

“ம்... எங்கயோ... போறேன்...”

“ஐயா... தம்பி தப்பா பேசிட்டேன் மன்னிச்சிடுங்க. கோபப்படாதிங்க. நெத்தி நல்ல விசாலமா இருக்கே. ஞானம் அதிகமிருக்கும். யோசனை அதிகம் இருக்கும. தீர்க்கமான புத்தி இருக்கும். தப்பா எடுத்துக்க மாட்டிங்கன்னு பேசிட்டேன். “

“அப்ப எனக்கு ஞானமும், புத்தியும் இல்லேன்னு சொல்றீங்களா?”

“தம்பி இனி நான் பேசல... பேசறதெல்லாம் தப்பா எடுத்தா மனுசன் என்னத்துக்கு பேசணும். வயசில என்ன இருக்கு. கூட்டம் கொறைஞ்சதும் உங்க காலை காமிக்கிறிங்களா... தொட்டு கும்பிட்டுக்கறேன்.”

“என்ன பெரியவரே...?”

“நெசமாதான் தம்பி. மனசு நோக பேசறதுக்கு ஒருத்தன் ஊமையாப் பொறக்கலாம் தப்பில்ல. மனசு மாட்டுக் காம்பு மாதிரி மெதுவா இருக்கும். அதை கிள்ளிட்டா பால்வராது. ரத்தம்தான் வரும். புண்ணாக்கினா மாடு ஒதைக்கும். முடிஞ்ச வரையில நகம் படாமதான் பாத்துக்குவேன். இன்னக்கி நகம் பட்டுடுச்சி. ஒதைபடறதில தப்பில்ல. கூட்டம் கொறைஞ்சா காலைக் காட்டுங்க.”

“நான் ஒண்ணும் தப்பா நெனைக்கல பெரிசு...”

“தாடியப் பாத்து ஏதோ மனசில திட்டினிங்களே...”

“இல்லையே...”

“தம்பி மொகத்தில தெரியாத வேதனை, சந்தோசம், துக்கம் ஒன்ணு இருக்கா தம்பி. பாறை மாதிரி யாருக்கு மொகம் இருக்கும். பொணத்துக்குத் தானே... அந்த பொணத்தோட மொகத்தில எதையும் கண்டுக்க முடியாது... ஏன்னா அதுக்கு உணர்ச்சியும் இல்ல. எதுவும் நெனைக்கிறதும் இல்ல. உயிரோட இருக்கிறவனோட மொகம் பாறை.மாதிரி இருக்காதே... எதாவது மனசில இருக்கிறத காட்டுமே... உண்மையா பொய்யா?”

“உண்மைதான்.”

“பொறகு சொல்லுங்க தாடியப் பாத்து என்ன நெனைச்சிங்க?”

“அழகா இருக்குன்னு நெனைச்சேன்.”

“அழகா இருக்குன்னு நெனைச்சா மனசில ஒரு பரவசம் வந்து முகம் மலர்ந்திருக்குமே... பல் கடிச்சிட்டு நின்னிங்க.”

கெழுவன் முகத்தையே பாத்துகிட்டு நின்னிருக்கான். சாவடிக்கிறானே...

“திரும்ப பல் கடிக்கிறிங்களே... தம்பி உங்க காலை கூட்டம் கொறைஞ்சா காமிங்க...”

எனக்கு சிரிப்பு வந்தது. “கொஞ்சம் சும்மா வா பெரியவரே.. தொனதொனக்காதிங்க... கூட்டத்தில மனுசன் பிரயாணம் செய்யறதே பெரிய விசயம்.. இதல நீங்க வேற நொய் நொய்னு...”

“தம்பி இப்பதான் உண்மை பேசியிருக்கீங்க... எனக்கு இப்படி உண்மைய பேசறவங்களத்தான் பிடிக்கும். பொய்பேசி ஆகப்போறதென்ன. உண்மைய பேசணும். அப்பதான் மனசு, மொகம், வாழ்க்கை எல்லாம் ஜொலிக்கும். தம்பி சிரிக்கறிங்க. மத்தாப்பு மாதிரி இருக்கு. கல்யாணம் ஆகலையா?”

“ஆமா? சிரிப்ப வச்சி ஜோசியம் சொல்விங்களா? இந்த தொப்புளை வச்சி சொல்லற மாதிரி...”

“இதல என்ன சோசியம் இருக்கு. கல்யாணமானா இருளோன்னு சிரிக்க ஆரமபிச்சிடறாங்களே. நீங்க மத்தாப்பு மாதிரி இல்லையா சிரிக்கறிங்க. இப்ப சொல்லுங்க எந்த ஊருக்கு போறிங்க...”

“தின்னஹள்ளிக்கு”

“நான் அந்த ஊர்தான்... பஸ்சில ஏறி டிக்கெட் வாங்கறது புத்திசாலித்தனம் இல்ல தம்பி. சரியான ஊர் வந்தா மறக்காம எறங்கணும். அதான் புத்திசாலித்தனம்.”

தேவையில்லாத இடத்தில தேவையில்லா தத்துவத்தை எதுக்கு இந்த கிழம் உதிர்க்கிறது. நிமிடத்திற்கு நிமிடம் உணர்வுகள் ஏற்றமிறக்கமாய் மாறுகிறது இந்த கிழவனால். பேருந்து நின்றதும் கொஞ்சம் பேர் இறங்கியதால் கொஞ்சம் கால் வைக்க இடம் கிடைத்து காற்றும் வந்து ஆசுவாசமாக கசங்கிய சர்ட்டை சரிசெய்தபடி கிடைத்த சீட்டில் உட்கார்ந்து கிழவனைத் தேடினேன். கிழவன் பஸ்சிலிருந்து கீழே இறங்கி நின்றுகொண்டு என்னைப் பார்த்து கத்தினான். “தம்பி இதான் நீங்க எறங்கவேண்டிய எடம். எறங்குங்க.” இதற்குத்தான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கவேண்டும் என்று தத்துவம் சொன்னானா? இப்படித்தான் வாழ்க்கைக்கு தேவையான அவசியமான, சாதாரண வார்த்தைகளை நான் தத்துவம் என்று தப்பர்த்தம் செய்துகொண்டு குழம்பிக் கிடப்பது.

எங்களை இறக்கிவிட்டு பஸ் காற்றாய்ப் பறந்துவிட, மிஞ்சியது அங்கு நானும் அந்த கிழவனும் கொஞ்சம் ஆட்களும். புழுதிக்காற்றும் ஒரு பெரிய மலைப் பிரதேசமும்தான். வெய்யில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது இந்த மரம்மிகுந்த பிரதேசத்தில். காற்று எக்காளமிட்டு அடிக்கிறது. மண்டைக்குள் இருக்கும் மூளைக்கு கொஞ்சம் இதமான பதமான சீதோஷணமாகத்தான் பட்டது இங்கத்திய மிதவெப்பம். கிளையாகப் பிரிந்த மண்ரோட்டை காட்டி, இதான் தம்பி தின்னஹள்ளி போற பாதை என்று பெரியவர் காட்டினார். இரண்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். மற்றவர்கள் வேறு கிளைப்பாதையில் போக நானும் பெரியவரும் மட்டும் தின்னஹள்ளி மண் ரோட்டில் நடந்தோம்.

“தம்பி என்ன விசயமா வாரிங்க இந்த ஊருக்கு.”

“சாவுக்கு...”

“யாரு ராமசாமி வீட்டு பையன்தானே செத்துபோனது”

“தீர்த்தராமன்”

“அவனத்தான் சொல்லறேன். ரத்தம் கக்கி இல்லையா செத்தான். நல்ல பையன் தம்பி. குடிச்சி செத்துப் போயிட்டான்.”

இந்த பெரியவரை இப்பொழுதுதான் உற்றுப் பார்த்தேன். இவர் குடித்திருக்கிறாரா இல்லையா? ராமன் இந்த கிராமத்தை கதையாக சொன்னானே. இந்த கிராமத்தை ஒட்டி ஓடும் ஓடைக்கரை முழுதும் சாராயம் காய்ச்சுவதற்கான ஊறல் பானைகள்தான் இருக்குமாம். அநேகமாக பாதிக்குடும்பம் சாராயம் காய்ச்சும் குடும்பம்தானாம் இந்த கிராமத்தில். ராமனின் அப்பா போலீஸ். அவர் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனார். அவன் சித்தப்பா சாராயம் குடித்து இறந்துபோனார். மாமன் ஒருத்தன் சாராயத்தால் இறந்து போனான். இத்தனையும் பார்த்த இவன் சின்ன வயது முதலே சாராயத்தை ஜென்ம எதிரியாக பாவித்தவன். இன்றைக்கு அதே சாராயத்தால் இறந்து போனான்.

“தம்பி எங்க ஊர்லையே வெளியூர் போயி படிச்சவன் இவன் ஒருத்தன்தான் தம்பி. மத்த புள்ளைங்க வெளியூர் போறது சாராய டியூப்ப எடுத்துட்டு போய் வேவாரம் பாக்கத்தான். இவன்தான் அங்கபோய் படிச்சி வேலைக்கும் சேந்தான்.”

ஒரு கிராமமே சாராயத்தால் அழிவது குறித்து ராமனிடம் ஏகக் கோபம் இருந்திருக்கிறது. வருசம் ஆனாலும் ஊருக்கே போகாமல் இங்கேயே இருப்பான் அவன். அவன் அம்மா வந்து கண்ணீர் வடித்தால் தான் பண்டிகை இல்லாத நாளாகப் பார்த்து ஊருக்கு போவான். பண்டிகைக் காலங்களில் கிடா வெட்டி, ரத்த ஆறும் சாராய ஆறும் ஓடும். இவனுக்குப் பிடிக்காது.

“அவன் வீட்டுல மட்டும் நாலு முண்டச்சிங்க இருக்காங்க. எல்லாம் சிறு வயசில தாலி அறுத்தவங்க. அவ அம்மா. அவனோட சித்தி... அவனோட அக்கா... அவனோட பாட்டி... இப்ப பாரு அவனோட பொண்டாட்டியும் சேந்துட்டா...” பெரியவர் சிரித்தபடி சொன்னார். பெண்கள் முண்டச்சி ஆவதில் இவருக்கென்ன சந்தோசம்.

கல்யாணம் ஆகிறவரையில் குடிக்காமல் இருந்தான். நல்ல புத்திசாலி. வேலையில் நல்லநுட்பம். நல்ல சம்பளத்தில் இருந்தான். கல்யாணத்திற்குப் பிறகு அதிர்ஷ்டம் வந்து வசதி பெருகி, “நான் என்ன பட்டைச் சாராயமா குடிக்கிறேன். வெளிநாட்டுக்காரன் மாதிரி மிதமா தரமான சரக்குதானே அடிக்கிறேன். கொஞ்சமா சாப்பிட்டா நல்லதுதான்னு டாக்டரே சொல்லியிருக்கார்...” என்று சொல்லி என்றைக்கோ ஒரு நாள் குடிப்பது என்று ஆரம்பித்து பிறகு வாரம் ஒரு முறை, தினமொருமுறை, எப்பொழுதுமே குடிப்பதாக மாறிப்போனான். குடிப்பது அவன் மரபு வழியாக வரும் நோயா? கடைசியில் அவனை பிடித்துக்கொண்டதா?

“தம்பி ரொம்பநாளா அவன் டவுன்லதான் இருந்தான். ஏன் செத்தான் குடிச்சிட்டு. சீம சாராயம்கூட ஆளை கொன்னுப்புடுமா என்ன? அத சாப்ட்டா ஒண்ணும் ஆகாது. கொடல் வேகாதுன்னு சொன்னாங்களே... இங்க ஊறல் போட்டு காய்ச்சிற தண்ணிய ஒரு டம்ளர் சாராயத்துக்கு நாலு டம்ளர் தண்ணி கலந்து குடிச்சாலே குடிச்ச ரெண்டாம் நிமிசம் போதை உச்சியில போய் ஓய்...னு சத்தம் போடும். அப்படிப்பட்ட சாராயத்தை அவனோட அப்பன் தில்லா தண்ணிக் கலக்காம குடிச்சிட்டு வெரைப்பா நடப்பான். அவனோட பையன் சீம சாராயத்துக்கே செத்துட்டான்னு கேட்டா மனசு கஷ்டமா இருக்கு.”

நல்ல பிராண்ட் சரக்குதான் அடிப்பான் என்றாலும் கடைசிக் காலங்களில் அளவு வரம்பு மீறிப் போனது. பாட்டில் பாட்டிலாக குடித்தான். முப்பத்தி ஐந்தாம் வயதில் நெஞ்சுவலி என்று மருத்துவமனை போனவனை எச்சரித்தார்கள். இது வெறும் வலியல்ல ஹார்ட் அட்டாக் என்று. திரும்பவும் குடித்தான். ஒரேவருடத்தில் நெஞ்சடைத்து நல்ல பலமான அட்டாக் வந்து மயங்கி விழுந்து சாக பிழைக்க இருந்து காப்பாற்றப்பட்டான். குடித்தால் ஆள் குளோஸ் என்று சொல்லித்தான் அனுப்பினார்கள்.

மரணம் தரும் பயத்தையே மறக்கடிக்கும் சந்தோசம் அந்த போதைக்கு இருக்கிறது. கொஞ்சம் நாள்தான் சும்மாயிருந்தான். உடல் தேறியதும் திரும்பவும் குடித்து நுரைதள்ள அட்டாக் வந்து பெரிய மருத்துவமனையில் இருதயத்தின் நரம்பில் உறைந்து கிடக்கும் ரத்தத்தை அறுத்து எடுத்து சுத்தம் செய்து ஏகத்திற்கும் காசு பிடிங்கி பிச்சைக்காரனாக்கி பின் பிணத்தை தந்தனுப்பியிருக்கிறார்கள்.

“அவனோட பொண்டாட்டி தங்கம் மாதிரி பொண்ணு தம்பி. அதை நிர்க்கதியா விட்டுட்டு போயிட்டானே... ஒரு பையன் வேற... ரெண்டு வயசு தான் ஆகுது. அது எப்படி இனி பொழைப்பை ஓட்டுமோ தெரியல.”

பட்டாம்பூச்சிகள் பறக்கும் பூப்பூத்த செடிகள் அதிகமாய் இருந்தன வழி முழுதும். தென்னையும் மாந்தோப்புகளுமாக பரந்து கிடந்தது. ஓடையில் கொஞ்சமாக ஊற்றெடுத்து நீர் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது இன்னும். நல்ல செழுமையான பிரதேசம். விவசாயம் செய்வதை விட்டு ஏன் ஊரே சாராயம் காய்ச்சுகிறது. பெரியவரை கேட்டேன்.

“அதுவா தம்பி... இந்த ஊர்க்காரனுங்க விவசாயம் பாத்து ஒடம்பு அசதிய போக்கத்தான் மொத குடிச்சானுங்க. பிறகு போதை புடிச்சிபோயி நெறைய குடிச்சாங்க. பிறகு தலைசுத்தி விழும் வரையில குடிச்சாங்க... அப்புறம் எங்க விவசாயம். நெலத்தை வித்து குடிச்சாங்க... நெலம் இல்லாததால சாராய அடுப்பு எரிவிடற வேலைக்கு வந்து கஷ்டப்பட்டாங்க. தொழில் கத்துக்கிட்டு தானே சாராயம் காய்ச்ச ஆரம்பிச்சிட்டாங்க. இப்படித்தான் சாராயம் ஊருக்குள்ள மொதல்ல வந்திச்சி. இங்க இருக்கிற நெலமெல்லாம் வெளியூர்க்காரன் விவசாயம் பாக்கறான். எத்தனை பசேல்னு இருக்கு பார்.”

இந்த போதை மனிதர்களுக்கு என்னத்தைத் தருகிறது. வேதகாலம்தொட்டு சோமபானமும் சுராபானமும் விறுவிறுப்பாய் மனிதனால் விரும்பப்படுவதன் காரணம் என்ன? என்ன சொர்க்கம் இருக்கிறது அதில். கை, கால், நினைவு, புத்தி எதுவுமே தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் போவதைத்தவிர என்ன இருக்கிறது இதில்.

“எதுக்கு பெரியவரே தண்ணி அடிக்கணும்”

“அதுவா தம்பி... எனக்குத் தெரியாது தம்பி... எனக்கு இந்த எழவு தண்ணி எல்லாம் சுத்தமா பிடிக்காது தம்பி... இத்தனை வயசில நான் திடமா இருக்கிறதுக்கு காரணம் என்ன? தண்ணி வாசனை கூட பாக்காததுதான். நான் குடிச்சி ரத்தவாந்தி எடுத்து செத்தா என் மாடு கன்னுங்கள யாரு பாத்துக்குவா? பொண்டாட்டி புள்ளைங்களை ஏன் சொல்லலைன்னு கேக்கறையா. எனக்குத் தான் கல்யாணமே ஆகலையே... இப்படி மாடு கன்னுமேலயே இத்தனை பாசம் வச்சி குடிக்காம இருக்கனே... கட்டிகிட்டு புள்ளைங்கள பெத்துகிட்டு குடிச்சி நடுத்தெருவில அதுங்கல பிச்சை எடுக்கவிட்டு அம்போன்னு செத்துப் போற மகராசங்கள நான் என்னத்தை சொல்ல...”

தூரத்தில் பறை அடிக்கும் சத்தம் கேட்டது. நெருங்க நெருங்க சத்தம் அதிர அதிர கேட்டது. இன்னம் நெருங்க மரண வீட்டின் அனாதை ஓலங்கள் பெருங்குரலெடுத்து வந்தது. வீட்டை நெருங்கினேன். வீட்டு வாசலில் கட்டில்மேல் கிடத்தியிருந்தார்கள் அந்த பிணத்தை. இன்னைய தேதிக்கு இது பிணமா என் நண்பனா? ஒருத்தி வயிற்றிலும் தலையிலும் மறிமாறி அடித்துக்கொண்டு “அனாதியா விட்டுட்டு போயிட்டியே ராசா... நான் என்ன செய்வேன்... என் புள்ளைய வச்சிட்டு...” என்று தொண்டை கீச்சிட ஒப்பாரி வைக்கிறாளே... அது அவன் மனைவி.

புருசன் இழந்த பெண்களின் பிற்காலம் படு பயங்கரமானது. ஓநாய்களின் ஊரில் ஒண்டியாய் மாட்டிக்கொண்ட ஆட்டுக்குட்டிகள் அவர்கள். அடுத்து என்ன? அவர்களுக்கு இருக்கவே இருக்கிறது நடத்தை கெட்ட பட்டம் அல்லது இன்னொருத்தனுடன் ஓடுவது... அல்லது இன்னொருத்தனுடன் சட்டரீதியாய் இல்லாத ஒரு குடும்பத்துக்குள் வருவது அல்லது பிச்சை எடுப்பது அல்லது தற்கொலை செய்து கொல்வது...

இப்படி நான் சிந்திப்பது பெண்களுக்கு செய்யும் துரோகம்தான். ஆனால் நடப்பது இப்படித்தானே... வேறு விதமாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படலாம். ஆசை வேறு நடப்பது வேறு. சில பெண்கள் தைரியமாய் ஓநாய்களைக் கொன்று வேர்விட்டு புது விருட்சமாய் வளர்வது உண்மைதான். அது சில பெண்கள். பல பெண்கள் என்னவாகிறார்கள்? அவர்களின் வாழ்க்கை இப்படி இருக்கக்கூடாதா அப்படி இருக்கக்கூடாதா என்று நல்லவிதமாக யோசிக்கலாம். யோசனை செய்யலாம். ஆசைப்படுவது வேறு நிஜம் வேறு. இதோ ரத்தவாந்தியுடன் தன் பந்தத்தை முடித்துக்கொண்ட இவனின் மனைவி கதி என்ன? அவன் போனதை நினைத்துக்கூட அல்ல இனி அவள் எதிர்கொள்ளக்கூடும் சமூக ஓநாய் கூட்டம் நினைத்துத்தான் அவள் ஓலமிடுகிறாளோ என்னவோ?

ராமனே சொல்லியிருக்கிறானே... அவன் கிராமத்தது பெண்களின் சோகம் பற்றி... அவன் அப்பா இறந்த பிறகு அவனுக்கு எத்தனை அப்பாக்கள் மாறினார்கள் என்பது பற்றி அவனே சொல்லியிருக்கிறானே... இப்பொழுது இந்த ஓநாய் கூட்டத்தில் இவன் மனைவியை தவிக்கவிட்டு சென்றிருக்கிறானே... அவன் மனைவி இவன் காலை பிடித்து அழுவது உலகத்திலேயே மிக வேதனைப் படப்போகும் ஒரு பெண்ணின் நிர்வாணமான அழுகை. அந்த சோகம் இந்த பூமியை தீய்க்கும் அளவிற்கு வெப்பமுடையாதாக இருக்கும்.

இந்த பெண்னை இந்த ஓநாய் கூட்டத்திலிருந்து காப்பாற்ற ஏதும் வழி இருக்குமா தெரியவில்லை... ராமன் பாதித்தூரம் சரியான பாதையில் வந்தான். வழுக்கி இதே நரகத்தில் விழுந்து இறந்து போனான். அந்த பாதித் தூரம் சரியான பாதைக்கு அவன் படிப்பு காரணம். இங்கிருக்கும் குழந்தைகளையெல்லாம் சாராய அடுப்பிலிருந்து மீட்டுக்கொண்டு போனால் இந்த ஊரில் சாராயப்பானைககள் முற்றிலுமாக நொறுங்கி அழிந்துபோகும். எவர் மீட்டுப் போவார்கள் இந்த ஊர்க் குழந்தைகளை?

அந்த இளம் விதவை தன் மகனை கட்டிப்பிடித்து “இனி எப்படி ராசா வாழப்போறோம்... உன் அப்பன் அனாதயா விட்டுட்டு போயிட்டானே...” என்று ஒப்பாரி வைக்கும்போது கொட்டுச் சத்தம் வீர்யத்துடன் அவள் வேதனையோலத்தை வானெங்கும் வாரி இறைத்தது. அந்த கொட்டில் இறுக்கிக் கட்டப்பட்டு அதிர்ந்து கொண்டிருந்த இறந்துபோன மாட்டின் தோல் அதிர்ந்து சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. கொட்டடிப்பவர்கள் சுழன்று சுழன்று அடித்தார்கள். கால்கள் தரைபாவாமல் வானத்திற்கும் பூமிக்குமாய் குதித்தது. அவர்களின் தலை தாளத்திற்கு இசைந்து வாகாய் ஆடிக்கொண்டிருந்தது.

அடி... அடி... வேகமாய் சத்தமாய் அடி அந்த கொட்டை. இந்த கொட்டுச்சத்தத்தால் இனி மரணம் பயம்தான் எல்லோருக்கும். இந்த சோகம், இந்த பரிதாபம், இந்த அனாதை இளம்விதவை... இதோ நடுத்தெருவில் நிற்கும் பையன். இவர்களைப் பார்த்தால் இனி ஒருவன் குடிக்கக்கூடாது. அதற்காக சுழன்று அடி அந்த கொட்டை. கொட்டின் தோல் கிழியும் வரை அடி... எழும்புக்கூடாய் கிடக்கும் இந்த பிணத்திற்கு சொந்தக்காரன் முன் கட்டுமஸ்தான தேகம் கொண்டவன் என்பதை சொல்லி அடி. அவன் குடித்து இருதயம் வெடித்து ரத்தம் கக்கி இறந்து போனான் என்பதைச் சொல்லி அடி. குடும்பத்தைத் தீயில் வேகவிட்டு இறந்து போனான் என்பதை சொல்லி கை வலிக்க அடி. இந்த கிராமத்திற்கே கேட்கட்டும் அடி... குடிப்பவன் மனைவி ஒநாய்களிடம் சிக்கிக்கொள்வதை தெரிந்து கொள்ளட்டும் அடி... பிள்ளைகள் நான்காம் அப்பாக்களிம் அடிபடுவார்கள் என்பதை சொல்லி அடி... சந்ததி மெல்ல சுருங்கி இனம் பூண்டோடு அழிந்து மலடுகளாய் பெண்கள் புருசன் அற்றுப் போவார்கள் என்பதை சொல்லி அடி... இனி குடிக்காதே... குடிக்காதே என்று சொல்லி அடி... அடி... அடி...

கடவுளே... சுழன்றாடி கொட்டடிப்பவனின் கண்களைப் பார் கடவுளே... எந்த தேசத்தில் இருக்கின்றன அந்த கண்களின் பார்வைகள். சொர்க்கத்தை கண்டு மயங்கி அரைக்கிறக்கத்தில் மிதந்தபடி செருகிக்கிடக்கும் கண்கள் அடிக்கும் கொட்டின் சத்ததத்தில் மினுமினுக்கிறதே... கைகள் காற்றில் பறந்து பறந்து தாளத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறதே... பாதம் தூசுகிளப்பி வளைய வந்து ஆடுகிறதே... இவர்களை இந்த கொட்டடிப்பவர்களை இயக்கிக் கொண்டிருப்பதும் இதே ஊரில் காய்ச்சப்பட்ட சாராயம் தானா?

பிணம் வைத்திருக்கும் வீட்டிற்கு எதிரில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்து என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் முதியவர்கள்... செம்பில் அவர்கள் கூடிக் குடித்துக் கொண்டிருப்பது என்ன திரவம்? இறந்து போனவனுக்கு வெடி வெடித்துக் கொண்டிருக்கிறார்களே இளைஞர்கள்... அவர்கள் கால்களை தள்ளாட வைத்திருக்கிறதே அது என்ன திரவம்...

ஒரு துக்கம் இவர்களை சலனப்படுத்தவில்லையா? ஒரு குடும்பம் நடுவீதிக்கு வந்தது உறைக்கவில்லையா? மரணத்தைவிட பயமுறுத்தும் விசயம் என்ன இருக்கும் இந்த மக்களுக்கு? ஒருவன் எதனால் இறந்து போனானோ அதையே அருந்துகிறார்களே... அடக்கடவுளே... அந்த மரத்தடியில் கிழவர் கூட்டங்களுக்கு மத்தியில் தாடி வைத்து தலைதூக்கி செம்பில் இருந்த திரவத்தை கண்ணாடி போல் சிதறச் சிதற வாயில் ஊற்றிக் கொள்பவன் யார். பஸ்சில் வந்த அந்த தத்துவக் கிழவனா?

டேய் கிழவா... நான் குடிக்கமாட்டேன். என் மாடுகன்னு அனாதையாப் போயிடும்னு சொன்னாயே என்னடா ஆச்சி... என்னை பார்த்துவிட்டு கிழவனே கையசைத்து கூப்பிடுகிறான். கை அசைப்பதில் ஆகாயம் பூராவும் அசைந்து போதை காட்டியது கை. பக்கம் போனேன். வெறுப்பாய் பார்த்தேன். “நீ குடிப்பயா?”

“தம்பி இப்பவும் சொல்றேன். நான் குடிக்க மாட்டேன். எப்பவாவது சந்தோசம் துக்கத்துக்கு குடிக்கிறதுதான். அதுகூட இல்லனா எதுக்கு மனுசன் வாழணும். சந்தோசம் துக்கத்துக்கு மனுசன் குடிக்கலாம் தப்பில்லே... தெனத்துக்கும் ஒரு சந்தோசம், துக்கம் வரத்தானே செய்யுது மனுசனுக்கு.”

“இங்க செத்து கிடக்கிறவன் எதனால செத்தான் தெரியுமா?”

“சாராயம் குடிச்சா சாவாங்கன்றது பொய் தம்பி. நான் தெனம் குடிக்கிறேன். நான் செத்தேனா? நாப்பது வயசில அவன் சாகிறான். அது விதி. அதுக்கு சாராயத்துமேல பழிபோட்டா என்ன அர்த்தம். எனக்கு எழுபது வயசு ஆகிறது. நான் தெடமா இல்ல... காரணம் சின்னது. மனுசனுக்கு ஏகத்துக்கும் ஓய்வு தேவை. நான் சொல்லறது மனசுக்கு. மனசு ஓய்வெடுத்தாதான் இளமையா இருக்க முடியும். மனச ரொம்ப அலட்டிகிட்டா சின்ன வயசில இப்படித்தான் நெஞ்சு வெடிச்சி சாகணும். மனசு ஓய்வுக்குத்தான் சாராயம் குடிச்சி நினைவில்லாம இருக்கிறது.”

“இந்த ஊர்லயே பெரிய குடிகாரன் நான்தான். நான் உயிரோட இருக்கேன்... ஊர்லையே கொஞ்சமா குடிச்சவன் அவன்தான்... அவன் செத்துபோயிட்டான். எங்க தப்பு இருக்கு? யோசிச்சிப் பாரு. நீ இங்க வந்து மூணு சிகரெட் பத்த வச்சிட்டே... உனக்கு இருமலே வரல... சிகரெட்டே புடிக்காத அந்த கெழவி எப்படி இருமிட்டு இருக்கா பாரு... எங்க தப்பு இருக்கு யோசிச்சிப்பாரு...

“நீயும் கொஞ்சம் போடறியா தம்பி. சீமசரக்கை விட ஒசத்தி. ஓடத் தண்ணிக்குனு ஒரு குணம் இருக்கு. இந்த மண்ணுக்குன்னு ஒரு போதை இருக்கு. குடிச்சிப் பாரு தம்பி. பொண்ணுங்க அடுப்பெரியவிட்டு அதில காய்ச்சின சாராயம்... பொம்பளையே போதை. அவங்க காய்ச்சர சாராயம் எத்தனை போதையா இருக்கும்? நெனைச்சிப் பாரு. பாக்காத, குடி! தெரிஞ்சிக்குவே...”

“பொம்பளைங்க சாராயம் காய்ச்சுவாங்களா?”

“கேக்காத குடி...”

“போலீஸ் ரெய்டு வராதா?”

“வராது குடி...”

“அவன் செத்துட்டானே, பயமில்லையா உங்களுக்கு”

“பயமில்ல குடி...”

“ஊர்ல இத்தனை பேர் தாலி அறுத்துட்டு நிக்கறாங்களே... பொறுப்பில்லயா உங்களுக்கு?”

“இல்ல குடி...”

“உங்களுக்கு ஒரு பையன் இருந்து அவன் செத்திருந்தா குடிச்சிருப்பிங்களா நீங்க...”

“ஒண்ணா? ரெண்டு பசங்க செத்தாங்க. நானும் கல்யாணம் ஆனவன்தான். ரெண்டு பசங்களும் காலி. அதனால என்ன நீ குடி...”

“ஏந்தம்பி கேக்கறத நிறுத்திட்ட. கேளு. சொர்க்கம் உள்ள இருக்கு தம்பி. நரகம் வெளிய இருக்கு தம்பி. நாம உள்ள உள்ள உள்ள போய்கிட்டே இருக்கணும். வெளிய இப்படித்தான் அழுகை, பொணம், துக்கம்னு நெறைய நரகம். நாம உள்ள போயிடனும். அதுக்குத்தான் இப்படி ஊத்திக்கிடறது. இத ஊத்திக்கப்பாரு கேள்வியே கேக்க மாட்டே...”

கிழவன் சொன்ன ஓடைத்தண்ணி, பெண்கள் கைபட்டு என்ன போதையைத் தருகிறதோ என்ற ஆர்வம் என்னுள் கிளர்ந்தெழுந்தது. எத்தனை நாளைக்கு ஒயின் குடிப்பது. இந்த பட்டாம்பூச்சிகளால் ஆசிர்வதிக்கப்பட்ட மாயத்திரவம், பெண்கள் வார்த்தெடுத்தது, இதை நகரத்தில் எங்குபோய் தேட முடியும்? கிடைக்கும் இடத்தில் சொர்க்கம் பர்க்க வேண்டும். கிழவன் முகத்துக்கு நேராய் நீட்டிய செம்பை வாங்கி நாற்றத்தை அனுபவித்தபடி குடித்து... திரும்ப வாங்கிக் குடித்து. கிழவனைப் பார்த்தேன். நிஜமாகவே இவன் ஒரு ஜப்பான் ஜென் கிழவன் தானா... தாடியிலிருந்து போதை என் உச்சந்தலையில் ஏறுகிறதே...

பெண்கள் என் மூளையின் முகுளத்து இசை நரம்புகளை மெல்ல வருடிவிடுகிறார்களே... கொட்டடிப்பவர்கள் ரத்தத்தின் வெள்ளையணுக்களில் மாறிமாறிக் குதித்தது ரத்தத்தை நரம்புகளில் பீறிட்டோட செய்கிறார்களே... விதவைகள் என்பவர்கள் யார். புருசன் செத்தவர்களா... ஆணாகப் பிறந்த ஒவ்வொருவனும் செத்தேதான் ஆகவேண்டுமென்றால் பெண்ணாகப் பிறந்து ஒவ்வொருத்தியும் விதவையாவது தவிர்க்கமுடியாதல்லவா... இப்படியொரு இயற்கை நியதியை நான் புரிந்து கொள்ள பேருதவிசெய்த இந்த ஓடையில் கடைந்தெடுத்த அமிர்தத் திரவத்திற்கு நன்றி சொல்கிறேன்.

என் அம்மா எங்காவது எனக்காக பெண் பார்த்துக் கொண்டிருப்பாள். அவள் ஆசை நிறைவேறட்டும். நானும் மணந்து கொள்கிறேன். அம்மாவிற்கு நான் சீமைச்சாராயம் குடிப்பது தெரியாது. தெரிந்தால் வருத்தப்படுவாள். ஆனால் இந்த ஓடையில் வார்த்தெடுத்த தெய்வீக திரவம் அருந்துவது தெரிந்தால் சந்தோசப்படுவாள். சோமபானங்களும், சுராபானங்களும், சித்தர்களின் கஞ்சாக்களும் ஞானத்தின் பொருட்டு இந்த ஓடையில் வந்து தவமிருந்திருக்கிறது. அதிலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட திரவம் இது. உச்சந்தலையில் துளைபோட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது என் ஆன்மா... அம்மா சம்பிரதாயத்திற்காக பார்த்த பெண்ணை நானும் உடனிருந்து பார்க்கிறேன் உடம்பில்லாமல். உடம்பில்லாமல் போனதெப்படி. சொர்கம் வந்துவிட்டேனா? இறந்து போனேனா? ஏன் எங்களை சுற்றி இத்தனை கூட்டமிருக்கிறது. ஏன் எங்களைப் பார்த்தும் அழுகிறார்கள் அந்தப் பெண்கள். விசமா அமிர்தமா நான் குடித்தது.

பெண் பார்க்கப் போன இடத்தில் அம்மாவின் புடவை குத்துவிளக்கில் பற்றிக்கொள்ள... அபசகுனமாய் பதறுகிறாள். இந்த பெண் வேண்டாம் என்று சொல்கிறாள். நான் எந்த பெண்ணுமே வேண்டாம் என்கிறேன்...நான் இறந்து போய்விட்டேனா என்று ஒருவன் என் மூக்கின் மீது கை வைத்து பார்க்கிறானே... இது விசச்சாராயம்தானா? உச்சியில் ஓட்டைபோட்டுக்கொண்டு வெளியேறிய என் போதையாவி திரும்ப உள்திரும்புமா தெரியவில்லை. பிறகு ஏன் அம்மா பெண் பார்க்க வேண்டும். என் சவத்திற்குக் கட்டி வைக்கவா?

என் நன்பனை சுற்றி அழுத கூட்டம் எங்களை சுற்றியும் அழுகிறது. கொட்டடிப்பவன் கொட்டைக்கூட கழற்றாமல் கால்களை மட்டும் உதைத்து உதை நாட்டியமாடியபடி படுத்துக் கிடக்கிறான். இரண்டு கிலோமீட்டர் தோல்மேல் சுமந்து சென்று பஸ் பிடித்து மருத்துவமனை சேர்த்து என்னை எவர் இந்த ஊரில் காப்பாற்றப் போகிறார்கள்.

அம்மா எதற்காக இந்த நாற்பது வயது கடந்த அரைக்கிழவனுக்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கிறாய். நான் சொர்க்கலோகம் சென்று அங்கே ஒரு அரைக்கிழவியை கட்டிக்கொண்டு சோமபானம் அருந்தாமல் குடும்பம் நடத்துகிறேன். இல்லை உன் கடவுள் யாரிடமாவது சொல்லி ஆள் வைத்து என்னை மருத்துவமனை சேர்த்து காப்பாற்றச் சொல். இதோ இங்கே புலம்பிக் கொண்டிருக்கும் இந்த இளம் விதவையை மணந்து கொண்டு குடிக்காமல் குடும்பம் நடத்துகிறேன்.

என்னங்கடி செய்யறிங்க பொண்ணுங்களா... கொஞ்சம் மூளையின் முகுளத்து இசை நரம்பை மீட்டாமல் விடுங்களேன்... அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அவள் கடைசியாக என் பேச்சை கேட்டால் சந்தோசப்படுவாள்... இசைப்பதை கொஞ்சம் நிறுத்துங்களேன். அதோ அந்த தத்துவக் கிழவன் அநேகமாக இறந்து போயிருக்கிறான். அவன் ரத்தத்தில் எதையாவதது கலந்து அவனை காப்பாற்றுங்களேன். ஏய் போதைப் பெண்களே... அந்த கொட்டடிப்பவனின் கைக்கு கொஞ்சம் அசைவை கொடுங்களேன். அந்த இறந்துபோன ஜென் கிழவனுக்காக அவன் கொட்டடிக்கட்டும். கிழவன் சந்தோசப்படுவான். அவன் இறந்துதானே போனான். என் மூளைக்குள் வருடி என்னை சிலிர்ப்பேற்றாதீர்கள். எனக்காக எதையும் இசைக்காதீர்கள். எனக்காக எதையும் பாடாதீர்கள். எனக்கான பாடலை நானே பாடிக் கொள்கிறேன். இசைப்பதை நிறுத்துங்களேன். என் பாடலை நான் இன்னும் பாட ஆரம்பிக்கவேயில்லையே... நானே என் பாடலை பாடிக்கொள்கிறேன்.

என் நுரையீரல் சுத்தம் செய்யும் மந்திரப் பெண்ணுக்கு நன்றி. என் இதயத்தை துடிக்க வைத்த அமிர்தம் கடைந்த பெண்ணுக்கு நன்றி. என் ரத்தத்தை சுத்தம் செய்த விதவைப் பெண்ணுக்கு நன்றி. நான் எழுந்ததும் என் பாடலைத்தான் பாடப்போகிறேன். என் மூளைக்குள் வருடாதீர்கள் திரவம் காய்ச்சிய போதைப் பெண்களே... என் பாடலை நானே பாடிக் கொள்கிறேன்.

- எழில் வரதன்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com