Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
நிஜமும் நிழலும்

ஆல்பர்ட்


பரப்ரப்பான விடிகாலைப் பொழுதில் நிம்மதியான உறக்கம் கலைக்க மனமில்லாமல் வீடுகளுக்குள் நத்தையாய்ச் சுருண்டிருந்தனர். அதட்டல், அழுகுரல், தட்டுமுட்டுச் சாமான்களின் உருளும் சத்தம் என கீழ் வீட்டின் கலவரம் அதிகரிக்க மாடியிலிருந்த 26 வயதுப் பெண் சாந்தியை இறங்கி வரச் செய்தது.

அங்கே... போலீஸ்காரர்கள், வீட்டு உரிமையாளரின் பொருட்களைத் தெருவில் வீசி எறிந்து கொண்டிருந்தனர். காக்கிச் சட்டை ஒன்று கையிலிருந்த லத்தியால் வீட்டுக்காரி இந்துவை நினைத்த இடத்தில் குத்தி ஆக்ரோசமாக ஏதோ கேட்டுக் கொண்டிருக்க, இன்னொரு காக்கிச் சட்டை, தள்ளீட்டுவாங்க ஸ்டேசன்ல வச்சு கச்சேரி பண்ணிக்கலாம் என்று சொல்ல தரதரவென இந்துவை இழுத்துச் சென்று வெளியே இருந்த போலீஸ் வேனில் தள்ளினர்.

"கணவர் வெளியூர் போயிருக்கிறார், வந்ததும் அவரோட ஸ்டேசனுக்கு வர்றேன். குழந்தைகளை கவனிக்க யாருமில்லை" என்று சொல்லி இந்து தேம்பித்தேம்பி அழுகிறாள். இந்துவின் குழந்தைகள் இரண்டும் வேனுக்கு வெளியே நின்று கொண்டு கதறி அழுது கொண்டிருக்க, "வீட்டில் ஆண்கள் இல்லாதபோது எதுக்காக இப்படி கூட்டீட்டுப் போறீங்க?" சாந்திதான் கேட்டாள்.

"ம்...ஸ்டேசனுக்கு வா..வெளக்கமா, வெவரமா சொல்றேன்." காக்கிச் சட்டையின் பொறுப்பான பதிலுக்கு முன்பே வேன் சீறிப் பாய்ந்து புறப்பட்டுப்போனது. சிதறிக் கிடந்த சாமான்களை எடுத்துக் கொண்டு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்குள் போனாள், சாந்தி. அவசர அவசரமாக ஜன்னல்களில் தெரிந்த முகங்கள் மறைந்தது.

தீங்கு, வீட்டில் நடந்தாலும், வீதியில் நடந்தாலும் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ளும் பேர்வழி அல்ல சாந்தி. கண்ணில் கண்டுவிட்டால் சிலிர்த்தெழுகிற பொதுநலவாதியாக சாந்தி இருந்தாள். அதற்காக எங்கோ நடக்கிற அவலங்களுக்கு எல்லாம் ஆர்ப்பாட்டமாக கொடி பிடித்து கோசம் போடும் சமூக சேவையெல்லாம் செய்வதில்லை.

Rape victim ஒருமுறை கன்னாட் பிளேசில் பஸ் ஏறி வரும்போது தனக்கு முன் நின்றிருந்த பெண்ணின் கைப்பையை
பிளேடுபோட்டுக் கொண்டிருந்தவனை சட்டென்று கையை எட்டிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். மற்றவர்கள் பார்த்தும் பார்க்க'தது போல இருந்தாலும் சாந்தியால் அப்படி இருக்க முடிவதில்லை. பஸ்ஸை காவல் நிலையத்தில் நிறுத்தச் சொல்லி தான் கையும் களவுமாகப் பிடித்தவனை ஒப்படைத்து விட்டுத்தான் வந்தாள்.

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சாந்தி, டெல்லிக்கு வந்ததே ஒரு விபத்துதான். அலுவலகத்தில் இவள் செய்த வேலைகளை தாமே செய்ததாகச் சொல்லி எம்.டியிடம் பேர் வாங்கிக் கொண்டிருந்தான், சக ஊழியன் ஆறுமுகம். சில நந்தி வேலிகளைத் தாண்டித்தான் எம்.டி.யைப் பார்க்கவேண்டும். பொறுமையாக இருந்தாள். ஆனாலும் அவ்வப்போது சிறுசிறு குறைகளை பெரிதாக்கி மேனேஜரிடம் வத்தி வைப்பது, ஜி.எம்.மிடம் சிண்டு முடிவது என்று சில்லறை வேலைகளைச் செய்து ஒவ்வொருவரிடமும் ஒரு முகம் காட்டி வந்தான், ஆறுமுகம்.

ஒரு நாள், என்னைக் கவனிச்சுக்க இல்ல இங்க காலம் தள்ள முடியாது என்று சொல்லி சாந்தியின் கன்னத்தில் செல்ல தட்டு தட்டினான். அவ்வளவுதான், சாந்தி காளியாக மாறி அலுவலகம் என்று கூடப் பாராமல் செருப்பைக் கழற்றி பளார்பளார் என அறைந்து விட்டாள். அலுவலகமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனது.
வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தாள். வீட்டில் ஆறுதல் சொல்லாவிட்டாலும் அனலைக் கக்கினார்கள். பெற்றவர்களும் சரியில்லை; உடன் பிறந்தவர்களும் சரியில்லை; மன வலியோடு சென்னையில் இருக்கப் பிடிக்காமல் தலை நகர் தில்லியிலுள்ள தன் தோழி மூலம் ஒரு வேலையை வாங்கிக் கொண்டு வந்து விட்டாள். தில்லி வந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டது.

கயாலாவில் வி.வி.காலனியில் லால் அப்பார்ட்மெண்ட்டின் இரண்டாவது மாடியில் குடி வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகி இருந்தது. இன்று விடிந்தபோதுதான்......மேலே சொன்ன சம்பவங்கள். கயாலாவின் ஒதுக்குப் புறத்தில் அழுக்குப்படிந்திருந்த காவல் நிலையத்தில் சாந்தி நுழைந்தாள். பாராவில் இருந்த காவலரிடம், இன்ஸ்பெக்டரைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னாள். உள் பக்கம் கையைக் காட்டிப்போகச் சொல்லவே, தடுப்பு தடுப்பாக இருந்த அறைகளில் ஒன்றில் ஆர்.எஸ்.யாதவ், இன்ஸ்பெக்டர் லா & ஆடர் என்றிருந்த மேஜை முன் நின்றாள்.

வில்லன் சிரிப்புச் சிரித்துக் கொண்டு தொலைபேசியில் முரட்டுக் குரலில் யாதவ்பேசிக் கொண்டே சாந்தியை கண்களால் அளந்து கொண்டிருந்தான். பேசி முடித்துவிட்டு, புருவத்தை மட்டும் உயர்த்திக் கேள்விகேட்ட இன்ஸ்பெக்டரிடம், காலையில் நடந்த சம்பவத்தைச் சொல்லி, பெண் என்று கூடப் பாராமல் லத்தியால் அடித்து வேனில் ஏற்றி வந்தது மிகுந்த அநாகரீகம், எதற்காக இந்துவைக் குழந்தைகள் கதறக்கதற கூட்டி வந்தனர் ? என்று சாந்தி கேட்டாள்.

நீ யார் ? -கேட்டார் இன்ஸ்பெக்டர். சொன்னாள்.

"உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை.. போ....போ வந்துட்டா பெரிசா நியாயம் கேட்க.."

"சார்..இந்துவ எதுக்கு இங்க கொண்டுவந்து இருக்கீங்க ? விபரம் சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி அவங்கள கூட்டீட்டுப் போகலாம்னுதான் வந்துருக்கேன்"

"மரியாதையாச் சொன்னா போகமாட்டே.. ஐ.ஜி.மாதிரியில்ல வெறப்பா நின்னு கேக்குற..நா யாருன்னு நீ
தெரிஞ்சுக்க வேணாம்.."

"போலீஸ் தப்பா நடந்துகிட்டாங்கன்னு, மேலதிகாரி ஒங்ககிட்ட சொன்னா நியாயம் கிடைக்கும்னு வந்தேன். இங்க கெடைக்காது போல இருக்கு.."

"நீயும் அழகா சினிமா ஸ்டார் மாதிரி தான் இருக்கே..ஒங்கிட்ட நான் தப்புப் பண்ணலாம்னு பாக்குறேன்"

"ஸார்.. நீங்க வரம்பு மீறிப் பேசுறீங்க..உங்க மேலதிகாரி கவனத்துக்கு நா கொண்டுபோக வேண்டியிருக்கும்"

"என்னடி ஒரேதா பேசிக்கிட்டே போற..இன்னைக்கு ஒங் கொழுப்பை அடக்குறேன். ஏய்..யார் அங்க..டூ நாட் சிக்ஸ்.. இங்க வா... இந்தத் "...." ளுக்கு நேரம் சரியில்ல.. இவளெ என்னோட ஸ்பெசல் ரூம்ல வை.. நாங்கி கர் டி சாலி கோ.." ( இவ ஒடம்புல ஒரு துணி இல்லாம எடுத்துரு ) மிச்சத்தை நான் பாத்துக்கிறேன்." இன்ஸ்பெக்டர் உடையிலிருந்த காட்டு மிராண்டியின் கூக்குரல், காக்கிச் சட்டைகளைக் கொண்டு வந்து நிறுத்தியது.

அடுத்த சில நிமிடங்களில் அந்த அவலம் தவிற்க இயலாமல் அரங்கேறிப் போனது. சட்டத்தின் காவலர்கள் வெறிநாய்களாக மாறி சாந்தியைக் கடித்துக் குதறிப் போட்டனர். காவல் நிலையம் கற்பழிப்பு நிலையமாகவும், வேலியேபயிரை மேய்ந்த கொடுமையும் நடந்தேறிட எதுவுமே நடவாததுபோல் உரத்த மெளனத்தில் அந்தக் கட்டிடம் உறைந்திருந்தது. இது போன்ற செயல்கள் அடிக்கடி அங்கு நிகழ்ந்து அதற்கும் பழக்கமாகி இருக்கவேண்டும்.

முழங்கால்களுக்கு இடையில் தன் தலையை கவிழ்த்துக் கொண்டு, இரண்டு கைகளையும் போர்வையாக்கி, பிறந்த மேனியாக இருக்கும் உடம்பை மறைத்துக் கொண்டு சாந்தி குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.
கறைபடிந்த காக்கிகள் அகன்றதும், இந்து ஓடி வந்து "பாவிங்க இந்த சின்னப் பூவை கசக்கி நாசமாக்கீட்டீங்களே, உருப்புடுவீங்கள' ? " என்றவாறு தான் போட்டிருந்த பல்லுவை (துப்பட்டா துணி) சாந்தியை சுற்றிப் போர்த்திவிட்டாள்.

"பிளாட்பாரக் கடையில் திருடிய சென்னைப் பெண் கைது"- மறு நாள் பத்திரிக்கையில் சிறு செய்தி வெளியாகியிருந்தது.

- ஆல்பர்ட் ([email protected])



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com