Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
பயணம்

அபிரேகா



‘என்னடா..சலீம்..இன்னும் உன் கல்யாணத்துக்கு எத்தனை நாள் பாக்கியிருக்கு..??’ ஓடிக்கொண்டிருக்கும் பேரூந்தின் கடைசி இருக்கையில் இருந்துகொண்டு கேலி செய்தான் டேவிட்.

‘இதப்பாருடா ..டேவிட்..சும்மா வெறுப்பேத்தாதே.. நானே இன்னும் ரெண்டு மாசம் பாக்கியிருக்கேன்னு ஏங்கி தவிச்சிகிட்டிருக்கேன்..நீ வேற பொழுதன்னைக்கும் அதைபத்தியே கேட்டுகிட்டிருக்கே..சும்மா கம்முன்ன வாடா..’ சலீம் பொருமித் தள்ளினான்.

‘அய்..ஏண்டா இப்படி கல்யாணத்துக்கு கெடந்து அலையிறீங்க..’ டேவிட் சலீமை விடுவதாயில்லை..

‘உனக்கென்னடா..இருபது வயசிலயே கல்யாணம் பண்ணி ரெண்டு புள்ளைக்கு தகப்பனாகி அப்புறமா சௌதிக்கு சம்பாதிக்க வந்த. என்ன சொல்லு குடும்ப கஷ்டத்தால பதினேழு வயசிலேயே மொளைக்காத மீசையை பென்சிலால வரைஞ்சிகிட்டு இங்த வந்து சேர்ந்தேன்..உனக்கெல்லாம் என்ன பார்த்தா கேலியும் கிண்டலுமாத்தாண்டா இருக்கும். உங்க அப்பா ஒன்னை உன் கொழுப்ப அடக்கறதுக்கு இங்க அனுப்பி வச்சிருக்காங்க.. ஆனா எங்க அம்மா எங்க வீட்டுல தினம் உலை வைக்கனும்னு அனுப்பி இருக்காங்க இது தான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்.. பேசமா வாய மூடிகிட்டு உட்காரு எங்கிட்ட வாங்கி கட்டிக்காத..’

ஓடிக்கொண்டிருந்த பேரூந்து வழக்கம் போல அவர்கள் வேலை செய்யும் கன்ஸ்ட்ரக்ஷன் நடக்கும் இடத்தில் நிறுத்தப்பட்டது. தத்தம் அவரவர்கள் அவர்களது பணிக்கு சென்றார்கள்.

சலீம் மட்டும் எல்லாரும் இறங்கியும் அவன் மட்டும் பேரூந்துக்குள் உட்கார்ந்திருந்தான்.. ‘என்னடா புது மாப்ள..வேலைக்கு போற மாதிரி ஜடியா இல்லையா..’ - இது டேவிட்

‘டேவிட்..ப்ளீஸ்டா மச்சான் என்னை தொந்தரவு பன்னாதே.. நான் வர்றேன் நீ போய் வேலையப் பாரு..வர வர உன் டார்ச்சர் தாங்க முடியலடா..’

‘ஓகே.. நீ பஸ்ஸ்குள்ள உட்காந்து நல்லா கனவு கானுடா..முடிஞ்சா மன்மத ராசா ரேஞ்சிக்கு ஒரு டூயட்டும் பாடிடுங்க..’ சொல்லிக்கொண்டே கீழிறங்கினான் டேவிட்.

‘அப்பா சனியன் ஒழிஞ்சான்..’ சட்டை பாக்கெட்டிலிருந்து அம்மா அனுப்பி வைத்திருந்த பெண்ணினுடைய போட்டோவை மெல்ல வெளியே எடுத்தான்.. ரேஷ்மா..அழகாக சிரித்துகொண்டிருந்தாள்.

சலீம் இந்த வருடத்தோடு சௌதிக்கு வந்து ஏழு வருடம் முடிந்து விட்டது.. குடும்பத்தின் மூத்த பையன் என்பதால் எல்லாச்சுமையும் இவன் தலையில் விழுந்து விட்டது..சின்ன வயதிலேயே அப்பாவை இழந்து விட்டதால்..பள்ளி படிப்பைக்கூட எட்டாவதுக்கு மேல் எட்ட முடியவில்லை. சலீமின் மாமா தான் விசா இலவசமாக எடுத்துக்கொடுத்து சௌதிக்கு கொண்டு வந்தார்.

கம்பெனி வேலை முடிந்த பிறகும் வெளியில் போய் வேலை செய்து..தனது இரண்டு தங்கைகளை நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்துவிட்டான். இன்னும் இருப்பது ஒரு தங்கை..அவளுக்கும் பத்து பவுன் சேர்த்து போன மாதம் தான் ஊருக்கு போன தன் நண்பன் நாசரிடம் வீட்டுக்கு கொடுத்து அனுப்பினான்.

சென்ற மாதம் தான் அவனுடைய மாமா மகள் ரேஷ்மாவை நிச்சயம் பண்ணினார்கள்;.. ‘இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள கல்யாணம் வைக்கனும்.. கொஞ்சம் கஷ்டப்பட்டாவது பணம் சேருப்பா..’ அம்மா போன மாசம் போனில் பேசும் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

சலீம் தூங்குவது வெறும் ஆறு மணி நேரம் தான்.. எந்த வேலைக் கிடைத்தாலும் செய்வான்.. டாய்லட் கிளீன் செய்வதிலிருந்து துணி துவைப்பதிலிருந்து யார் கூப்பிட்டாலும் உடனே போய்விடுவான.. அவன் கபிலும் ரொம்ப நல்லவர் அவன் வெளியில் வேலை செய்வதை கண்டு கொள்வதில்லை.

சலீமுக்கு எப்போதுடா இன்னும் ரெண்டு மாசம் முடியம்..ஊருக்கு போவோம் என்ற ஆவல் நாளுக்கு நாள் பெருகி கொண்டேயிருந்தது மேட்டூர் அணையில் வெள்ளம் நிரம்பியது போல..

சௌதிக்கு வந்த இந்த ஏழு வருடத்தில் அவனுக்கு தெரிந்தது வெறும் கஷ்டம் மட்டுந்தான்.. மாடாய் உழைப்பான்.. ‘வாடா சலீம் ஒரு நாளைக்காவது போய் வெளியே சாப்பிடுவோம்னு’ அனுடைய நண்பர்கள் கூப்பிட்டால் கூட ‘எதுக்குடா அனாவசியமா பணத்ததை வீணடிக்கனும்..நம்ம கம்பெணியில தான் நல்ல சாப்பாடு போடுறாங்க..’ன்னு நழுவிடுவான்..அத்தனை சமத்து..சாதுரியமானவன்.

கல்யாணம் ஆசை எல்லோருக்கும் உண்டு தானே..அந்த ஆசை சலீமுக்கு கொஞ்சம் அதிகமாகவேயிருநத்து..ஏனென்றால் தன்னைவிட ஐந்து வயது குறைந்த தன் தங்கையெல்லாம் கல்யாணமாகி குழந்தை குட்டியென்று ஆன பிறகும் தான் மட்டும் இன்னும் ஜடமாய் இருப்பது அவனுக்கு வருத்தம் தான்..இருந்தாலும் அண்ணனென்ற கடமையை தான் செய்து விட்டதையெண்ணி இழந்த சுகங்களையெல்லாம் துச்சமாய் தூர விட்டவன் சலீம்.

என்னைக்கு ரேஷ்மாவை அவனுக்கு நிச்சயம் செய்தார்களோ..அன்றைக்கு தொடங்கியது அவனுக்கு சந்தோஷ கலை.. ‘அப்பாடா..இப்பத்தான் சலீம் முகத்துல சிரிப்பயையே பாக்கமுடியிது’ அவனுடைய மேனேஜர் கூட நேற்று சலீமை கிண்டலடித்தார். ‘இல்ல சார் நான் எப்பவும் போல தானிருக்கேன்..’ மழுப்பினான்.. இருந்தாலும் தன்னிடம் உள்ள மாறறத்தை அவனால் உணர முடிந்தது.

ஒவ்வொரு வெள்ளிக் கிழமை தம்மாம் செல்லும் போது பொண்ணுக்கு தேவையான எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக வாங்குவான்..நேத்து கூட பொண்ணுக்கு நீலக்கலர்னா ரொம்ப இஷ்டம்ன்னு தன் தங்கை போன வாரம் போனில் சொன்னது ஞாபகத்துக்கு வர ரெண்டு புடவை நீலக்கலரில் எடுத்தான். ‘என்ன சலீம்..முப்பது ரியாலுக்கு மேல புடவை எடுக்க மாட்ட இன்னைக்கு என்னடான்னா எழுபது ரியால்ல ரெண்டு புடவை கேட்கிற?’ சிங்கப்பூர் கடையில் கிணடலாய் கேட்டார்கள்.. ‘இல்லன்னே..புடிச்சிருந்தது எடுத்தேன்;..’ அப்போதும் தன் பொண்டாட்டிக்குத்தான் என்பதை காட்டிக்கொள்ளவில்லை சலீம்.

நெயில் பாலிசிலிருந்து தலைப் வரை தன் வருங்கால மனைவிக்கு எல்லாம் வாங்கி சேர்த்துவிட்டான். அடுத்த மாசம் சம்பளம் வாங்கி சோனா ஜூவல்லரியில் தான் பார்த்து வைத்திருந்த அந்த நெக்லஸ்ஸையும் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

சலீம் ஊருக்கு போக இன்னும் ஒரு வாரம் மீதமிருந்தது.

அபிரேகாவின் கவிதையென்றால் சலீமுக்கு உயிர். தனது கல்யாணத்திற்கு கவிதை வடிவில் அபிரேகா எழுதி தந்த கவிதையை திரும்ப திரும்ப படித்துக்கொண்டிருந்தான்.

“உன் போட்டோ புன்னகை
எக்ஸ் ரேயாய்
எனக்குள் பாய்ந்தது..”

இந்த வசீகரமான வரிகளை மனப்பாடம் செய்து வைத்தான்..ஏனென்றால் நாளைக்கு பெண் வீட்டிலிருந்து பெண்ணின் அப்பா கல்யாணம் குறித்து பேசுவதாக நேற்று தான் சலீமுக்கு செய்தி வந்ததது..தன் நண்பனின் செல் போன் நம்பரை கொடுத்திருந்தான்..நாளைக்கு போன் வரும் போது ரேஷ்மாவும் பேசக்கூடும் என்பதால் இந்த கவிதை வரிகளை அவளிடம் சொல்லிக்காட்டலாமே என்று மனப்பாடம் செய்து கொண்டே தூங்கிப்போனான்.

மறுநாள் காலை..

டிரிங்.. டிரிங்.. செல்போன் அலறியது. அவசர அவசரமாய அமுக்கினான்..

‘ஹலோ..சலீமா.நாங்க திருவாரூர்லேர்ந்து பேசுறோம். ரேஷ்மாவோட அத்தா நேத்து நைட் திடீர்ன்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க..மத்த செய்தியெல்லாம் நீ உன் அம்மாட்ட போன் பேசி விபரமா கேட்டுக்க..’ பெரிய இடியொன்றை தலையில் இறக்கி விட்டு செல்போன் துண்டிக்கப்பட்டது.

அவசர அவசரமாய் தன் பக்கத்து வீட்டுக்கு போன் செய்தான்.. ‘அம்மா..நான் கேள்வி பட்டேன்மா..மாமாவுக்கு என்னம்மா செஞ்சிது..’ சலீம் கலங்கிவிட்டான்..

‘எல்லாம் அவனுடைய நாட்டம்..சரி நீ மனசை தேத்திக்க..மாமா மௌத்தா போனதால ஒரு வருஷம் கழிச்சி தான் உன் கல்யாணத்தை வச்சிக்கலாமுன்னு சொல்லிட்டாங்க..அதனால நீ இப்ப ஊருக்கு வரவேணாம்.. அடுத்த வருஷம் வரலாம்..’ சலீமின் தாயார் சல்மா சர்வ சாதரணமாய் சலீமின் பயணத்திற்கும் கனவுகளுக்கும் தடை போட்டார்.

இதை கேட்டதும்..சலீமின் கனவு.. ஆசை எல்லாம் தற்காலிகமாய் தவிடுபொடியானது.. ‘என் வாழ்வில் சந்தோஷமே கெடையாதா..ஆண்டவனே..???’ தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டு உள்ளுர அழுதான்.

ஒரு மாதத்திற்கு பிறகு ஊரிலிருந்து ஒரு கடிதம் வருகிறது..

அன்புள்ள சலீமுக்கு அம்மா எழுதிக்கொண்டது. உன் கடைக்குட்டி தங்கைக்கு நேத்து ஒரு நல்ல வரண் வந்திருக்கு..இருபது பவுன் கேட்கிறாங்க..நானும் சம்மதம் சொல்லி இன்னும் ஒரு ஆறு மாசத்துல கல்யாணத்தை முடிச்சிடலாமுன்னு சொல்லிட்டேன்.. நீ உன்னோட கல்யாணத்துக்கு நிறைய ஜாமன் வாங்கி சேத்து வச்சிருக்கேன்னு உன் ப்ரண்ட் நாசர் சொன்னான்..அதையெல்லாம் உடனே கார்கோவுல அனுப்பி வை எப்படியும் ஒரு லட்சத்துக்கு மேல செலவாகும்.. நீ ஊருக்கு வர்றது ஒரு ஆறு மாசம் ஒரு வருஷம் தள்ளிப்போனாலும் பரவாயில்ல.ஆனா தங்கச்சியோட கல்யாணத்தை ஜாம் ஜாமுன்னு நடத்தனும் அதை மனசில் வச்சிக்க..எல்லாத்துக்கும் விபரமா உடனே தபால் போடு.
என்றும் அன்புடன்
உன் அம்மா.


கடிதத்தை படித்து முடித்த சலீமின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டது. ஏழு வருட தன்னுடைய வறண்ட வாழ்க்கையில் என்றைக்காவது ஒரு நாள் வசந்தம் வந்து விடாதான்னு காத்திருந்தவனுக்கு கடமையும்..கஷ்டமும் தான் இன்று வரைகிடைத்திருக்கிறது.

படித்த கடிதத்தை மடித்து வைக்க பீரோவை திறந்து போது.. போட்டோவில் ரேஷ்மா இவனுக்காக இன்னமும் சிரித்துக்கொண்டிருந்தாள்.

- அபிரேகா ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com