Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureBook Review
புத்தக விமர்சனம்

“கட்டுரை இலக்கியங்களின் புனைவுப் பரவசம்: அ.முத்துலிங்கத்தின் ‘அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற கட்டுரைத்தொகுதி வழியான தேடல்”
ப.யூட் பிறின்சன்


(இக் கட்டுரையானது எனது தமிழ்ச் சிறப்புக்கலைமாணித் தேர்வின் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்வதற்காக என்னால் மேற்கொள்ளப்பட்ட “கட்டுரை இலக்கியங்களின் புனைவுப் பரவசம்: அ.முத்துலிங்கத்தின் ‘அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற கட்டுரைத் தொகுதி வழியான தேடல்” என்ற கட்டுரையின் இறுதி இயலாக அமைந்த மதிப்பீடாகும்.)

முத்துலிங்கம் என்ற மனிதனின் புகலிடத்தேடல், முத்துலிங்கம் என்கின்ற படைப்பாளியின் அனுபவ உலகின் எல்லையைப் பெருமளவு விரித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய அனுபவங்களை தாய்மொழிப் படைப்பினூடாக வாசக மனம் பெறவிளைந்துள்ளது. சிறகடிக்கும் அனுபவங்களும் அனுபவப்பகிர்வும் கைகோர்த்து அழைத்துச்செல்லும் பொறுமையும் முத்துலிங்கத்தை ஒருமுழுமையான படைப்பாளி ஆக்கி விட்டிருப்பதனைக் காணமுடிகின்றது.

இவரின் படைப்புக்கள் மற்றும் அவற்றின் மூலமான படைப்பாளுமையினை நோக்குகின்ற பொழுது அவற்றின் மூலமாக இவரது இலக்கிய ஆவல் எமக்கு வெளிப்படுகின்றது. எந்த ஒரு விடயத்தையும் எடுத்து சுவையாக மாற்றும் கைவன்மை பெற்றவராக இவரை அடையாளப்படுத்துவது இவரின் படைப்பாற்றலாகும். தன் கண்ணுக்குத் தெரியும் ஒவ்வொரு வித எண்ணங்களையும் மனதை வருடும் வடிவமாக இவர் உருவாக்கிக் காட்டிவிடுகின்றார். இவர் படைப்புக்கள் கட்டுரையாக, கவிதையாக, சிறுகதையாக, மொழிபெயர்ப்பாக, நேர்காணலாக என எந்த வடிவம் சார்ந்து இருப்பினும் அவற்றின் மூலமாக இவரது சொல் ஆட்சிமுறை மற்றும் மொழிப் பிரயோகங்கள் எம்மனதைக் குழைத்துவிடுகின்றன.

இவரது கட்டுரைகளைப் பற்றிய அறிமுகத்தினையும் அவற்றின் மூலமான வெளிப்பாடுகளையும் நோக்குகின்ற பொழுது அங்கே மனம் நிறைந்த வார்த்தைப் பிரயோகங்களுடன் கூடிய தொடர்புகளை எமக்குள் தெளித்து விடுவதனைக் காண்கின்றோம். புனைவுகளை விட பாசாங்குகளற்று நேரடியாக இவை நம்மோடு உறவாடுகின்றன. புனைவுகளில் இல்லாத ஒன்று கட்டுரையாளர் நம்முடனே இருப்பதைப் போன்ற உறவு இங்கே ஏற்படுகின்றது.

‘அங்கே இப்ப என்ன நேரம்’ புலம்பெயர் தேசத்தின் குரலாக ஒலிக்கும் இந்த வார்த்தைகள் காதில் ரீங்காரமிடுகின்றன. இவரது நகைச்சுவையின் ஊற்றுக்கண்கள் வாழ்க்கையிலிருந்து திளைத்தவை. அதற்காக இந்தப் புத்தகம் ஏதோ சிரிக்க வைக்கின்ற நகைச்சுவை நூல் என எண்ணிவிட முடியாது. முத்துலிங்கத்தின் வாழ்க்கை அனுபவங்கள், அவர் சந்தித்த மனிதர்கள், எடுத்த பேட்டிகள், அனுபவக்கதைகள், வாசித்த புத்தகங்கள் பற்றிய விமர்சனங்கள் சிந்தனைக்கு வீசும் பொறிகள் என்று அவரையே உரித்துக் கொண்டு வந்திருப்பதையும் காணமுடிகின்றது.

இவரின் கட்டுரைகளினூடாக இழையோடும் லாவகமான எளிமை நிறைந்த மொழியமைப்பு, எடுத்துரைப்புமுறை என்பன சுலபமாக கைவரப்பெற்றதாக இருக்காது. வாசகனின் ஈர்ப்புக்காக வருந்திப் பெற்றதும் அன்று. பல்வேறு நாடுகளில் கலாச்சாரத்தில் மக்களோடு வாழ்ந்த வாழ்வும் உறவும் ஏற்படுத்தும் தாக்கத்தால் விளைந்த மொழி என்பதனை உணரமுடிகின்றது. இவரது உலகம் நிலத்தினும் பெரிது நீரினும் ஆழமானது. அது அவர் உள்ளம் சாந்ததாக எமக்கு வெளிப்படுகின்றது.

சிறகடிக்கும் அனுபவங்களும் அபூர்வப் பகிர்வும் கைசேர்ந்து செல்லும் பொறுமையும் முத்துலிங்கத்தை ஒரு முழுமையான படைப்பாளியாக இனங்காண உதவியாக உள்ளது. இவரின் எழுத்துக்கள் வாழ்வின் வியப்பும் நெகிழ்ச்சியும் கொண்ட தருணங்களை நேர்த்தியான காட்சிகளாக மாற்றி விடுகின்றது. இதன்மூலம் உண்மைக்கும் புனைவிற்கும் இடையேயுள்ள மங்கலான கோட்டை தகர்த்து புதிய வெளிகளில் எம்மை பிரயாணம் செய்யவைத்து விடுகின்றார்.

முத்துலிங்கத்தின் இந்த வகையான கட்டுரைப் போக்கை தமிழில் அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் ஆகியோரிடமும் காணமுடிகின்றது. கி.ராஜநாராயணனின் படைப்புகள் இவற்றுடன் ஒப்புநோக்கப்படுவதற்குக் காரணம் மனிதர்களின் பன்மைத் தன்மையினை தனது படைப்புக்களினூடாகப் பதிவுசெய்வதுடன் அதனை ஆற்றல் மிக்க கலையாகப் படைத்திருப்பதாகும். பொருட்படுத்தப்படாத மனிதர்களின் வழியாக பொதுமக்களுக்கு நல்வெளிச்சத்தைக் காட்டுகின்றார். பொதுமக்களால் அந்நியமாக்கப்பட்ட மனிதர்களை இவர் வெளிப்படுத்திக் காட்டுகின்றார். கரிசல் நிலத்தோடு உறவுகொண்ட மாந்தர்களை எழுத்தில் மீட்டெடுக்கின்ற பொழுதுகளில் கலைநயம் மிக்க படைப்பினை இவர் உண்டாக்குவதை காணமுடிகின்றது.

இவர் எழுதும் எழுத்துக்கள் கிராமங்களைப் பற்றியதாக, கிராமங்களுக்கு வரும் மனிதர்களைப் பற்றியதாக காணப்படுகின்றன. இவர் எழுத்துக்களில் கிராமத்து மனிதர்கள், அவர்களின் உணவு முறைகள், பாலியல் நடவடிக்கைகள், பழமொழிகள், பாலியல் கதைகள், விளையாட்டுக்கள் என அனைத்தையும் தன் எழுத்துக்களினூடாக காட்டுகின்றதை அவதானிக்கமுடிகின்றது. ‘கோபல்லபுர கிராமமக்கள்’ என்ற இவரது நாவல் இதற்கு சிறப்பான எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது. இப்படி எல்லாம் கிராம மனிதர்கள் இருக்கின்றார்களா என ஆச்சரியம்படும் அளவிற்கு இவரின் எழுத்துக்களை ரசிக்கமுடிகின்றது. இலக்கியத்தில் கிராமப்புற வாழ்வையும் மொழியையும் அதன் தன்மை மாறாமல் ஓரளவு பதிவு செய்பவராக இவர் காணப்படுகின்றார்.

இவரைப்போல் அடுத்தவர் ஐ.தியாகராஜன் என இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் ஆவார். இலக்கியம் என்பது தங்களுடைய சாதாரண வாழ்க்கையில் சாதாரண நிகழ்ச்சிகளின் சில தருணங்களில் எப்படி சராசரி மனிதர்கள் தங்களை அறியாமலே காவியநாயகர்களுக்கு சமமானவர்களாக உணர்ந்து நிற்கிறார்கள் என்பதை எமக்கு உணர்த்துவதற்காக எழுதும் படைப்பாளியாக அசோகமித்திரன் காணப்படுகின்றார். பல மனிதர்களைப் பற்றியும், பல்வேறு தருணங்களில் பல கட்டுரைகளைப் படைத்திருக்கின்றார்.

இவரின் எழுத்துக்களை முதலில் பார்த்தவுடன் விளங்கிக் கொள்ள இயலாது விடுகின்றது. மீண்டும் ஒருமுறை அதனை வாசிக்கும்போதே அதன் வெளிப்படுத்தல்கள் எமக்குப் புரிகின்றது. மத்தியதர வர்க்கத்தினைச் சார்ந்த பிரதி நிதியாகவும் மத்தியதரவர்க்கத்தின் அனுமானங்களை அதன் பலங்கள், பலவீனங்களோடும் படைப்பிலக்கியத்தில் இவர் வெளிப்படுத்தி உள்ளார். புனைகதைகளில் மாத்திரமல்லாது அசோகமித்திரன் சிறந்த அனுபவங்களைக் கொண்டு எழுதிய கட்டுரைகளும் அலாதியானவை. இவை ‘அசோகமித்திரன் கட்டுரைகள்’ என்ற பெயரில் இரண்டு பெரியதொகுதிகளாக கிழக்கு பதிப்பகத்தின் பதிப்புக்களாக வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் முத்துலிங்கத்திற்கு உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்ற அனுபவங்கள் வாய்த்தமையால் இவரது கட்டுரைகள் இன்னும் பலபுதிய அனுபவங்களை சேகரமாக்குகிறது. இவ்வாறு இவ் உலகமெல்லாம் சுற்றித் திரிந்த பொழுதிலும் அவருக்குள்ளிருந்த தமிழ்மனம் அதன் ஆயிசங்களோடு இயங்கும் தன்மையினை காணமுடிகின்றது.

இவரது படைப்புலகம் அதிலும் சிறப்பாக துலங்கும் கட்டுரைகள் மூலம் இவரது மனநிலையினையும் இலக்கிய பரீச்சயத்தினையும் நாம் தெளிவாக காண்கின்றோம். தான் வியக்கும் இடங்களில் எம்மையும் வியக்க வைத்து விடுகின்றார். உணர்ந்து பின்னால் நினைத்து மகிழும் வேளைகளில் நாமும் மகிழ்கின்றோம். இவரது சொற்கள் சாதரணமாக இருப்பினும் அசாதாரணமான நிகழ்வுகளைக் கூட அலட்டிக் கொள்ளாமல், சீண்டிவிடாமல் போகிறபோக்கில் சொல்லி எம்மை அதிரவைப்பனவாகக் காணப்படுகின்றன.

இவரின் படைப்புக்கள் சுவாரஸியம் மிகுந்தவையாக உள்ளன. இதற்கு இவை இரண்டு நிலைகளில் வெளிப்படுவதைக் காணமுடிகின்றன. முதலாவது அது பண்பாட்டுடன் இணைந்து காணப்படுவதாகும். ஒரு பண்பாட்டின் உணர்ச்சிகரமான பாடுபொருள், பொறுப்புக்கள், இடக்கரடக்கல்கள், ஆகியவற்றை அறிந்திருக்கும் ஒருவராலே பண்பாட்டின் ரசனையை ரசிக்க முடியும். தன் தளத்தில் இந்த விமர்சனத்தை முத்துலிங்கம் படரவிட்டிருப்பதனாலே இவரின் எல்லா எழுத்துக்களையும் நாம் புன்முறுவலுடன் பார்க்க முனைகின்றோம். அடுத்த காரணம் இவரது நடையழகாகும். வெளி உலகையும், அகஉலகையும் சார்ந்து பார்ப்பதும் அவற்றை துல்லியமாகச் சொல்லிவிடமுயல்வதுமே ஆகும். இவரின் படைப்புக்கள் இவ்வாறான நடையழகைக் கொண்டிருப்பதுடன் அவற்றின் மொழியில் சித்திரங்களையும் அமைத்துத் தருகின்றன.

இவ்வாறாக முத்துலிங்கத்தின் படைப்புக்கள், அவரது படைப்பு சார்ந்த உலகம் என்பன பெறும் மதிப்பீடுகளை தமிழ் இலக்கியப் பயில்பரப்பில் வைத்து நோக்குவதன் மூலம் அவரின் தனித்தன்மையை அறிய முடிகின்றது. இவற்றின் மூலமாக சமகால இலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள உன்னதமான ஒரு கொடை என இவரையும் இவர் படைப்புக்களையும் சிறப்பாக இனங்கண்டு கொள்ள முடிவதுடன் முத்துலிங்கத்தை நீக்கிவிட்டு தமிழ் இலக்கியப் பரப்பினை நோக்கமுடியாது என்ற அளவிற்கு இவரின் தேவை உணர்த்தப்படுவதும் இங்கு நோக்கப்பட்டிருக்கின்றது.

- ப.யூட் பிறின்சன் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

பதிப்பாளர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com