Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureBook Review
குமரன் தாஸ் எழுதி, கருப்புப் பிரதிகள் வெளியிட்டுள்ள சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத்தீவு மக்களும் - என்ற நூலுக்கான முன்னுரை

ஆன்மீக வியாபாரத்துக்கும் வியாபார ஆன்மீகத்துக்குமிடையே.....
ஆதவன் தீட்சண்யா

1. ராமாயணத்தில் வரும் லங்காபுரி, இன்றைய மத்தியப்பிரதேசத்தின் தண்டகாரண்யப் பகுதியில் ஏரியொன்றினால் சூழப்பட்டுள்ள குன்றின் மீதமைந்த பரப்பாகும். அயோத்தி தொடங்கி இப்பகுதிவரையாக வாழ்ந்த மக்களிடையே வாய்மொழி மரபில் புழங்கி வந்த பழங்கதையொன்றை தன் மொழியையும் கற்பனையும் கலந்துகட்டி வால்மீகி ‘ராமாயணமாக’ உருவாக்கினார். இயற்கைப் பேரழிவுகள், போர், வணிகம் போன்ற காரணங்களை முன்னிட்டு விந்திய மலைகளைத் தாண்டி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி புலம் பெயர்ந்த மக்கள் கொண்டுவந்த கதைகளில் ஒன்றுதான் ராமாயணம். புலம்பெயர்ந்த மக்கள் அக்கதையை தங்களின் புதிய வாழிடம் சார்ந்ததாக மறுஉருவாக்கம் செய்துகொண்டார்கள்.

Kumaran doss book பிற்காலத்தில் அது இந்திய இதிகாசங்களில் ஒன்றாக கொண்டாடப்படுமென்றோ மதவாதத்தை விதைத்து இந்திய சமூகத்தை ரத்தத்தில் மூழ்கடிக்க விரும்புகிறவர்களின் கைப்பிள்ளையாக ராமன் மாற்றப்படுவான் என்றோ அப்போது வால்மீகி உட்பட யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது இந்தியா என்கிற கருத்தாக்கமே உருவாகியிருக்கவில்லை. பெரும் பிரளயம் உருவாகி உலகமே அழியும்போது ஒரு கப்பல் அல்லது தெப்பம் ஏறி தப்பிப்போகிற சிலரிடமிருந்து மீண்டும் உலகம் உருவானது என்பதான கதை உலகின் எல்லாக் கண்டங்களிலும்- எல்லா மொழியிலும்- எல்லா மதத்திலும் சொல்லப்படுவதைப் போல, இந்த ராமன் கதையும் வடக்கே மக்களிடம் புழக்கத்தில் இருந்திருக்கிறது.

கங்கை கொண்டான், கடாரம் வென்றான், கம்மர்கட் தின்றான் என்று நம்மால் புளகாங்கிதத்தோடு குறிப்பிடப்படும் தமிழ்ப் பேரரசர்கள் தமிழ்நாட்டின் தென்முனையிலுள்ள இலங்கைத்தீவை அடிமைப்படுத்திய காலத்தில் அதை நியாயப்படுத்தியும், அதற்கொரு தெய்வாம்சத்தை நிறுவியும் வடக்கின் ராமாயணம் தெற்கின் கதையாக உல்டா செய்யப்பட்டது. கதைக்களம் லங்காபுரியிலிருந்து இலங்கைக்கு இடம் பெயர்ந்தது இவ்வாறுதான் என்கின்றனர் ஆய்வாளர்கள். எப்படியாயிருப்பினும், கவிச்சக்கரவர்த்திகளும் போர்ச் சக்கரவர்த்திகளும் எங்கோ கிடந்த சனியனை இழுத்துவந்து இங்கே விட்டுவிட்டார்கள் என்பதே உண்மை.

10 ஆயிரம் செய்யுள்களைக் கொண்ட வால்மீகியின் மூலப்பிரதியானது பார்ப்பனீய இடைச்செருகல்களால் பிற்காலத்தில் 24 ஆயிரம் வரிகளாக வீக்கம் கொண்டது. ராமனுக்கு ஆஃப் டிரவுசர் மாட்டி ஆர்.எஸ்.எஸ் கேம்ப்பில் நிறுத்துமளவுக்கு அவன்மீது இந்துத்துவ சாயம் ஏற்றப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால சில்லுண்டி வேலைகளையும் கழித்துப் பார்த்தால் கற்பனைத்திறம் வாய்ந்த ஒரு பழங்கதை நமக்கு கிடைக்கிறது. பாடல் அமைப்பு, மொழி அடிப்படையில் வால்மீகியின் மூலப்பிரதி பிரித்தெடுக்கப்பட்டு அதில் குறிப்பிடப்படும் ராமாயணக் கதைக்களத்திற்கும் இலங்கைக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பது நிறுவப்பட்டுள்ளது.

2. இலங்கைக்கு மிக அருகாகவும் இலங்கையுடன் நீர்வழித் தொடர்பு கொண்டதுமான ஒரு மீன்பிடித்தீவு ‘ராமேஸ்வர’மாக மாறிய பின்புலங்களை குமரன்தாஸின் இக்கட்டுரைகள் பேசவில்லை. ஆனால் ராமன் வந்து வழிபட்ட சிவஸ்தலம் என்கிற புராண நம்பிக்கையின் மீது அஸ்திவாரம் கொண்டு தீவின் நடுவே 15 ஏக்கர் விஸ்தீரணத்தில் பரவியுள்ள இராமநாதசாமி கோவில் சார்ந்து ஒரு ஊராக மாறிவிட்ட ராமேஸ்வரத்தைப் பற்றியனவாக விரிகின்றன. (இப்போதும் இதுபோல இன்னும் சில புராண, இதிகாச நகரங்களை உருவாக்கும் திட்டம் சங்கபரிவாரிடம் உண்டு. இன்றைய பரூக்காபாத்தில்தான் முன்பு பீஷ்மர் பிறந்தார் என்றும் ஆகவே அதை பீஷ்மநகர் என்று பெயர் மாற்றுவது, சரஸ்வதி நதியை செயற்கைக்கோள் வழியே கண்டறிந்து அதை மீண்டும் உருவாக்குவது என்று அதன் பட்டியல் மிக நீளமானது. இந்தியாவின் கணக்குத் தணிக்கை அதிகாரியாயிருந்து பின் பா.ஜ.க. எம்.பியான யாரோ ஒரு திரிவேதியோ சதுர்வேதியோ, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, இதுதான் திரௌபதி குளித்த குளம் என்று ஒரு மொட்டைக்குளத்தை புனருத்தாரணம் செய்த கதையை ‘ஆர்கனைசரில்’ படித்திருக்கிறேன். )

மக்களின் ஞாபகங்களிலிருந்தும் அவர்களது அன்றாட வாழ்வியல் செயற்பாடுகளுக்குள் பொதிந்திருக்கும் தரவுகளைக் கொண்டும் ஒரு ஊரின் வரலாறு எழுதப்படுமானால் அது எத்தகையதாய் இருக்கும் என்பதற்கான கைச்சான்றாக இருக்கிறது இந்நூல். தலபுராணங்கள் என்ற கட்டுக்கதைகளில் ராமேஸ்வரம் தீவின் மீது கவிந்திருக்கும் தெய்வாம்சங்களை விலக்கி அந்த மண்ணுக்கேயுரிய மீன்கவிச்சியை முதன்முதலாக நுகரவைத்திருக்கிறார் குமரன்தாஸ்.

ராமேஸ்வரம் தீவின் நிலவியல், அதன் மக்கள் யாவர், அவர்களது வாழ்முறை என்ன, பூர்வகுடிகளாகிய மீனவர்களின் இன்றைய இருப்பின் நிலை குறித்தெல்லாம் நுணுக்கமாக பேசும் கட்டுரைகள், இத்தீவு குறித்து எங்கும் விவாதிக்கப்படாத கருத்துகள் பலவற்றை முதன்முதலாக துணிந்து பேசுவதாயுமிருக்கின்றன. பூர்வகுடிகளாகிய மீனவர்கள் உழைப்பை நம்பி வாழ்கிறவர்களாகவும், அதேவேளையில் அம்மண்ணை ஆக்ரமித்த வெளியாட்கள் (சமவெளி மனிதர்கள்- கடல்புரம் சாராதவர்கள்) வெகுமக்களை ஏமாற்றுகிறவர்களாகவும், மூடநம்பிக்கைகளை தக்கவைப்பவர்களாகவும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் இருக்கின்ற முரணை வாசிக்கும்போது ராமேஸ்வரம் தீவு ஒரு புதுவகை காலனீயத்தால் பங்கிடப்பட்டுவிட்டதைப் போலிருக்கிறது. இந்த தீவுக்கும் அது சார்ந்த மீன்பிடித் தொழிலுக்கும் யாதொரு தொடர்புமற்ற இந்த சமவெளி மனிதர்கள் தீவை ஆக்கிரமித்து அபகரித்துக் கொண்டுள்ள சூதினை விவரிக்கும்போது அதில் சாதியம் வகிக்கும் பங்கு நம்மை அச்சமடைய வைக்கிறது.

ஒரு கோவிலுக்குள் ஒரு சாதியின் இடமாக எது இருக்கிறதோ அதுவே ஊருக்குள் அச்சாதியின் இடத்தையும் அந்தஸ்தையும் தீர்மானிக்கிறது. அவ்வடிப்படையிலேயே கோவிலைச் சுற்றிய முதல்வட்டத்தில் பார்ப்பனர் தொடங்கி அடுத்தடுத்த வட்டத்தில் பிற சாதியினர் வசிப்பது என்ற தமிழக/ இந்திய ஊர்களின் நியமத்திற்கு ராமேஸ்வரமும் விதிவிலக்கானதல்ல என்பதை நிறுவுகிறார். இங்குள்ள ராமநாதசாமி கோயிலை மையமிட்டு சமூக, பொருளாதார அதிகாரப் பகிர்வுகள் நடைபெற்றிருப்பதை வரலாற்றுப்பூர்வமாக விவரிக்கிறார் குமரன்தாஸ்.

பார்ப்பனர்களிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் கேரள நம்பூதிரிகளை இந்த ராமநாதசாமிக் கோயிலின் குருக்களாக நியமிப்பதற்காக, அதுவரை பூசாரிகளாயிருந்த பண்டார சன்னிதிகள் என்ற வீரசைவர்கள் கோவிலுக்குள்ளிருந்து பூக்கட்டும் தொழிலுக்கு விரட்டியடிக்கப் பட்டனர். சேதுபதி மன்னர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து, மராட்டிய பார்ப்பனர்கள் அழைத்து வரப்பட்டு நம்பூதிரிகள் கைவிடப்பட்டனர். கருவறைக்குள் நுழைய அதிகாரம் பெற்ற ஒரே சாதியினர் இந்த மராட்டிய பார்ப்பனர் மட்டுமே. இக்கோயிலைப் பொறுத்தவரை தமிழ்ப்பார்ப்பனர் தீண்டத்தகாதவர். எனவே அவர்கள் மராட்டியப் பார்ப்பனர்களின் அல்லக்கைகளாக இருந்து பூசைக்கும் திவசங்களுக்குமான எடுபிடி வேலைகளை செய்து வருகின்றனர்.

சமூகத்தை மாசுபடுத்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல் கடலையும் மாசுபடுத்தி காசுபறிக்கும் உத்திகள் பலவற்றை உலவவிட்டுள்ள பார்ப்பனர்களைப் பின்தொடர்ந்து பலபட்டறை இடைநிலைச்சாதிகளும் செயல்படும் களமே இத்தீவு என்பதற்கான ஆதாரங்கள் வரிக்குவரி கிடைக்கின்றன. வருமானத்தையும் அதிகாரத்தையும் பகிர்ந்துகொள்வதற்காக, கோவிலுடன் தொடர்புடைய குருக்கள், பாராக்காரர் போன்ற வேலைகளைப் பெற்றிட பெருந்தொகை கையூட்டாக செலவிடப்படும் செய்தியை வாசிக்கும்போது இங்கு இறைப்பணி என்று ஒரு வெங்காயமும் இல்லை என்பது புரிகிறது. கோவில் மற்றும் சுற்றுலா சார்ந்த யாத்திரைப் பணியாளர்களாக தலித்துகள் எவரும் அனுமதிக்கப்படாத தீண்டாமைக் கொடுமையையும் நூலாசிரியர் கவனப்படுத்தியிருக்கிறார். யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலும் செய்து வாழலாம் என்கிற பசப்பான வார்த்தைகளின் போலித்தனம் மீண்டும் இங்கே அம்பலமாகிறது.

இத்தீவில் இருக்கும் பார்ப்பனர்கள் மற்றும் இடைநிலைச் சாதியினரின் வருமானமும் வாழ்வாதாரமும் கோவில் சார்ந்ததாகவே இருக்கும் நிலையில், ராவணனால் சிறையெடுக்கப்பட்ட சீதையை மீட்டுவரும் ராமனின் நடவடிக்கைகளோடு தொடர்புடைய ஏராளமான கட்டுக்கதைகள் மிகுந்த நம்பகத்தன்மை உள்ளதுபோல இங்கே புழக்கத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன. இங்கு கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் ராமனுடன் தொடர்புபடுத்தப்படுவதால் வடநாட்டிலிருந்து புனித யாத்திரை வரும் எளிய மக்கள் அப்பொருட்களை வெறும் பொருட்களாக மட்டுமே பாவித்து வாங்கிச் செல்வதில்லை. மாறாக, ராமன் என்கிற தெய்வத்தின் அம்சங்களாகவே போற்றுகின்றனர். எனவே தன் படையணிகளோடு இலங்கையைப் பார்த்து கையுயர்த்தும் ராமனின் புகைப்படத்தை விலைகொடுத்து வாங்கிச் செல்கிற ஒருவர், போர் இன்னும் முடியவில்லை என்ற ராமனின் செய்தியையும் சுமந்து செல்கிறார் மனதில்.

அச்சு இயந்திரம் வெகுஜன புழக்கத்திற்கு வந்த இந்த 100 ஆண்டுகளில் இந்த புகைப்படத்தின் கோடிக்கணக்கான பிரதிகளை- அதன் செய்தியோடு வாங்கிச் சென்றிருக்கிற எளிய வடஇந்தியர்கள்தான், ‘ராமர் பாலத்தை இடிக்க விடமாட்டோம்’ என்று சேதுக்கால்வாயைத் தடுக்கிற இந்துத்வாவின் பின்னே பலமான சக்தியாக அணிதிரள்கின்றனர் என்கிற நுண்ணரசியலைப் பேசுகிறார் குமரன்தாஸ்.

ஒரு புகைப்படம் சமூகத்தின் ஆழ்மனதில் உருவாக்கும் இந்த அபாயகரமான விளைவை உணரும்போதுதான், இன்றைக்கு ஆளும் வர்க்கத்தின் ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் செய்தி மற்றும் காட்சிரூபமான கருத்துகளின் பிடியிலிருந்த உழைப்பாளி மக்களை மீட்டெடுப்பதற்கான கருத்தியல் போராட்டம் எவ்வளவு வீச்சோடு நடத்தப்பட வேண்டும் என்பது உறைக்கும். காட்சி ஊடகம் சமூகத்தின் மீது தன் பிடியை இறுக்கிவரும் இந்நாளில், தொலைக்காட்சிகளில் வரும் புராணத்தொடர்களும், தேர்தல்கால பிரச்சாரப்படங்களும் ஆளும் வர்க்கத்தின் தற்காலிகத் தேவைகளை மட்டுமே நிறைவுசெய்யக்கூடியவை அல்ல. அவை மக்களை கருத்தியல்ரீதியாக தம்பக்கம் சாய்த்துக் கொள்வதில் தொடர் வெற்றியை ஈட்டிக்கொண்டுமிருக்கின்றன. ஆளும் வர்க்கத்துக்கு எதிரான கருத்தியல் போராட்டத்தை மேலெடுத்துச் செல்ல விரும்பும் எவரொருவரும், தமது மரபுவழிப்பட்ட பிரச்சாரக் கருவிகளை விடுத்து தமது தேவைகளை நிறைவேற்றும் புதிய நிலைகளை எய்த வேண்டியுள்ளது என்பதையும்கூட இந்த ‘புகைப்பட’ அரசியல் நமக்கு உணர்த்துகிறது. அல்லது ஒரு சாதாரண புகைப்படத்தையே உண்மை என்று நம்பிவிடக்கூடிய எளிய மக்களிடம் நாம் இதுவரை எதைக் காட்டிக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியாவது எழுகிறது.

4. இன்றைய இலங்கையையே ராமாயணக் களமாகக் கொண்டாலும் ஒரு தர்க்கம் இடிக்கிறது. ராமனும் அவனது குடும்ப உறுப்பினர்களாகிய சீதையும் இட்சுமணனும் தங்கியிருக்கிற பர்ணசாலை அமைந்திருக்கும் காட்டுப்பகுதிக்குள் இலங்கையிலிருந்து எல்லைதாண்டி முதலில் நுழைந்தவள் சூர்ப்பனகை. அவள் மூக்கறுபட்டதும் ரத்தம் சொட்டச் சொட்ட தன் சகோதர்களிடம் சொல்வதற்காக மீண்டும் இலங்கை போகிறாள். ராம லட்சுமணர்களிடம் சண்டைபோட அவளது சகோதரர்கள் 14 கிங்கரர்களை அனுப்புகிறார்கள். அவர்கள் கொல்லப்பட்டதையறிந்து சகோதரர்களே நேரடியாய் வருகிறார்கள். அவர்களும் கொல்லப்பட்ட பின்புதான் தன் மூத்த அண்ணன் ராவணனிடம் சென்று முறையிடுகிறாள். ராவணனும் கிளம்பி வந்து சீதையை சிறையெடுத்துப் போகிறான். சீதை இலங்கையிலே இருப்பதை ராமனின் பக்தனான அனுமன் நேரில் கண்டுவருகிறான் அசோகவனத்தில்.

ஆக, பர்ணசாலை இருந்த காட்டுக்கும் இலங்கைக்கும் ‘அத்தை வீட்டுக்கும் கட்டைப் புளியமரத்துக்கும்’ போய் வருவதைப்போல அடிக்கடி போகவர இருந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் எப்படி நினைத்த மாத்திரத்தில் அடிக்கடி போய்வர முடிந்தது எனக் கேட்டால் ‘புஷ்பக விமானத்தில்’ பறந்து வந்ததாக கதைவிடுகிறார்கள். ‘ஒரு கதையில் வில்லி, அவளது அண்ணன்களான வில்லன்கள், ஏவலர்களான கிங்கரர்கள், மெயின் வில்லன் ராவணன், ராமபக்தன் அனுமன் என்ற சாதாரணர்கள் எல்லாம் ஃபிளைட்ல பறக்கறப்ப, எல்லாம் வல்ல - கதாநாயகன் ராமன் மட்டும் ஏன் பாலம் கட்டித்தான் இலங்கைக்குப் போவேன்னு அணிலைக் கூட்டிக்கொண்டு மணல் அள்ளத் திரியணும்?’ என்று புதுகை பூபாளம் கலைக்குழுவினர் கேட்கிற அர்த்தம் பொதிந்த கேள்வியை இவ்விடத்தில் இணைத்துப் பார்க்க வேண்டும்.

சீதையை சிறையெடுக்க ராவணன் சகட வண்டியேறி (மட்டக்குதிரை அல்லது கழுதை பூட்டிய வண்டி) போனான் என்ற குறிப்பை வசதியாக பின்தள்ளிவிட்டு அவனை புஷ்பக விமானத்தில் ஏற்றிவிட்டார்கள் புரட்டர்கள். அணிலையும் குரங்குகளையும் சித்தாளாக வைத்துக்கொண்டு தானே கொத்தனாராக இருந்து இலங்கைக்கு பாலம் கட்டிய ராமன் திரும்பும்போது பாலத்தைப் பயன்படுத்தவில்லை. ராவணனின் புஷ்பக விமானத்தில் தான் திரும்புகிறான். வழியில் பரத்வாஜ முனிவரிடம் ஆசிபெறுகிறார்கள் ராமன் அண்ட் கோ. செல்லும் வழியில் நிழலும் நீரும் கனியும் கிடைப்பதாகுக என்று ஆசி கூறுகிறார் முனிவர். விமானத்தில் செல்கிறவர்களுக்கு நிழலும் கனியும் தரும் மரங்கள் ஆகாயத்தில் விளைந்திருக்குமா என்ற அறிவுப்பூர்வமான கேள்விகளை இவ்விடத்தில் எழுப்பினால், கதையில் அப்படியெல்லாம் வரும் என்பார்கள். சரி, கதைதானே இது, அப்புறம் ஏண்டா உண்மைபோல சித்தரித்து உயிரை வாங்குகிறீர்கள் என்றால் அது எங்கள் நம்பிக்கை என்பார்கள். இந்த நம்பிக்கைகளின் அத்தனை கெடுவிளைவுகளையும் தாங்கியழியும் இடமாக ராமேஸ்வரம் மாற்றப்பட்டுள்ளது.

போஜனாலயாக்களையும் இன்னபிற வணிகநிறுவனங்களையும் நடத்தி வருகிற மார்வாரிகளுக்கும், மடங்களின் தலைவர்களுக்கும், பூசை திவசமென்று தினமும் ஆயிரக்கணக்கில் தேற்றும் பார்ப்பனர்களுக்கும் யாத்திரைப் பணியாளர்களாகிய இடைநிலைச் சாதியினருக்கும், மக்களை ஏமாற்றிச் சுரண்ட ஆதம் பாலம் எனப்படும் அந்த மண்திட்டு ‘ராமர் பாலமாக’ நீடிக்கவேண்டிய தேவை இருக்கிறது. எனவே அவர்கள் சேதுகால்வாய் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்துத்வாவின் இயல்பான கூட்டாளிகளாக இருக்கின்றனர்.

எங்கோ உருவான ஒரு கதையை இங்கே நடந்த உண்மையென சொல்லிக் கொண்டு நடந்துவரும் ஆன்மீக வியாபாரமும், வியாபார ஆன்மீகமும் படுத்துவிடக்கூடாது என்ற குயுக்தியை அம்பலப்படுத்தி இந்த பாலம் குறித்த அறிவியல்பூர்வமான அல்லது ஆய்வுநோக்கிலான உண்மைகளை மக்களிடையே கொண்டு சென்றால் அவர்களது மதஉணர்வு புண்படும் என்று மதச்சார்பற்றவர்களும் அறிவுத்துறையினரும் காட்டும் சுணக்கத்தின் விளைவாக ராமாயணம் என்ற ஒரு கதை, இந்த நாட்டின் வரலாறாகவும், ராமன் ஒரு தேசிய வீரனாகவும் முன்னிறுத்தப்படும் அபாயம் உருவாகியுள்ளது. ராமன் அவதாரப்புருஷன் என்றால் அவனது கால்பட்டதால் புனிதமடைந்தவிட்ட இத்தீவின் ஒரு பகுதியான தனுஷ்கோடி ஏன் கடல்கோளுக்கு ஆளாகியது என்கிற கேள்வியைக்கூட நாம் எழுப்புவதில்லை.

இந்துத்துவக் கொட்டத்தை முறியடிப்பதில் ஆளுங்கட்சிகளுக்குள்ள ஊசலாட்டமான அணுகுமுறை காரணமாக இன்று ‘ராமர் பாலத்திற்கு சேதாரமில்லாத மாற்றுப்பாதை’ பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளதற்கும் இந்நூல் கண்டனத்தை பதிவு செய்கிறது. சேதுகால்வாய்த் திட்டத்தை எதிர்ப்பவர்களின் பின்னுள்ள வகுப்புவாத அரசியலை எதிர்க்கும் பொருட்டு திட்டத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு குமரன்தாஸ் சென்றாலும், திட்டத்தால் விளையும் சுற்றுச்சூழல் சார்ந்த சீர்கேடுகள் குறித்த கவலையையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்துகிறார். இவ்விமர்சனம், மீனவர் நலன் சார்ந்த நிலையிலிருந்தும் எழுகிறது.

சேதுகால்வாய்க்கு ஆதரவாகவோ எதிராகவோ பேசிக்கொண்டிருக்கும் யாரும் அத்தீவின் பூர்வகுடிகளாகிய மீனவர்களின் கருத்துகளை பொருட்படுத்தத் தயாரில்லாதது குறித்து கவலையை வெளிப்படுத்தும் நூலாசிரியர், இப்பகுதி மீனவர்களின் மேம்பாட்டிற்கான ஆக்கப்பூர்வமான பல யோசனைகளை முன்வைத்திருக்கிறார். கடல்சார் தொழிலாளர்களான மீனவர்களும், படகோட்டிகளும், சங்கு எடுப்பவர்களும் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகியிருப்பதை வெளிக்கொண்டு வந்ததன் மூலம், அவர்கள் மீதான தொழிற்சங்க இயக்கங்களின் முனைப்பான தலையீட்டையும் இந்நூல் கோருவதாயிருக்கிறது. மீன்பாடு இல்லாக் காலங்களில் சீவனத்துக்கு சிரமப்படும் மீனவர்கள் கடுமையான கந்துவட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதிலிருந்து அவர்களை மீட்பதற்கும் கண்ணியமானதொரு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் குமரன்தாஸ் முன்வைக்கும் திட்டங்கள் பயனளிக்கக்கூடும்.

காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் அதன் பிள்ளைகளாகிய பழங்குடிகள் அன்னியப்படுத்தப்படுவதைப் போல கடலின் பிள்ளைகள் அதனிடமிருந்து விலக்கப்படும் நிலை குறித்த விசாரணைகள் இந்நூலை முன்வைத்து நடத்தப்பட வேண்டும். கடல் சார்ந்து வாழ்வதன்றி வேறொன்றை கனவிலும் நினைக்கவியலாத மீனவர்களை அவர்களது பாரம்பரிய வாழ்முறை என்ற அளவில் மீன்பிடித் தொழிலிலேயே முங்கிக் கிடக்க விடுவதா அல்லது மாற்றுத் தொழில் பயிற்சி மூலமாக அதிலிருந்து விடுவிப்பதா என்கிற கேள்வியை அவர்களுக்கு வெளியே இருந்து எடுக்க முடியாது. ஆனால் இது குறித்த தீவிரமான விவாதம் மீனவச் சமூகத்திற்குள் நிகழ்வதற்கான வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது.

கடல் கறுப்பா சிவப்பா என்றுகூட அறியாதவர்கள் எங்கோ இருந்துகொண்டு எல்லைகளை வகுக்குறார்கள். ஆனால் இலங்கை, இந்திய மீனவர்கள் பரஸ்பரம் இருநாட்டு கடலெல்லைகளைத் தாண்டி மீன்பிடிப்பது இயல்பாக கொண்டிருந்திருக்கின்றனர். கடலுக்கு புறத்தே மாறிய அரசியல், கடலையும் மீனவர்களையும் சேர்த்தே பாதிப்படைய வைத்திருக்கிறது. கச்சத்தீவை மீட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கரையிலே நின்று முண்டா தட்டுகிறவர்கள் கடலைப் பகிர்ந்துகொண்ட மீனவர்களைத் துண்டாடிவிட்டார்கள் என்பதை உணர முடிகிறது.

1988ல் இந்திராகாந்தி பாலம் திறக்கப்பட்ட பிறகு கடலுக்கும் மீன்பிடி தொழிலுக்கும் எவ்விதத்திலும் தொடர்பற்ற சமவெளி மனிதர்கள் ராமேஸ்வரம் தீவுக்குள் நுழைந்து ஆக்கிரமிக்கும் போக்கு வேகமெடுத்தது என்பதை வாசிப்பினூடாக உணரமுடிகிறது. மட்டுமன்றி தென்மாவட்டங்களில் தலித்துகளான பள்ளர்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வந்த நிலையில் 1980களின் பிற்பகுதியில் ஜான்பாண்டியன், மரு.கிருஷ்ணசாமி போன்றவர்களின் தலைமையில் அவர்கள் எழுச்சி பெற்று திருப்பியடிக்கத் தொடங்கியதும், தாக்குபிடிக்க முடியாத மறவர் போன்ற இடைநிலை ஆதிக்கச்சாதியினர், பள்ளர்கள் இல்லாத பகுதியான ராமேஸ்வரம் தீவுக்கு தப்பியோடி வந்துவிட்டனர் என்ற மிக முக்கியமானதொரு மாற்றம் இதில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மணற்பாங்கான இந்நிலப்பகுதிக்குள் விவசாயம் நடைபெறுவதில்லையாதலால் வேளாண்குடிகளான பள்ளர்கள் அனேகமாக இத்தீவில் இல்லை என்பதும் நுணுகியப் பார்வையிலிருந்து கிடைக்கும் தகவல்தான்.

காரணம் என்னவாக இருந்தாலும், சமவெளி மனிதர்கள் இத்தீவின் கடல்சார் பூர்வகுடி மக்களை ஆதிக்கம் செய்கிறவர்களாக தங்களை வலுவடையச் செய்துகொண்டதும், மீன்பிடித்தொழிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுமாகிய கேடு நிகழ்ந்துவிட்டது. கிறிஸ்தவர்களான பரதவர்களை சுரண்டுவதும் அடக்குவதுமாகிய தங்களது இழிநோக்கங்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக இந்த வெளியாட்கள் இந்துத்துவ அமைப்புகளில் அணிதிரண்டிருப்பது தற்செயலானதல்ல. கோவிலை மையப்படுத்தி ராமேஸ்வரம் தீவு முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர இந்துத்துவ வெறியர்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள், அங்கு பிற ஜனநாயக இயக்கங்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதையும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பதையும் சற்றே பதற்றத்துடன் உள்வாங்க வேண்டியுள்ளது. அங்கிருக்கும் இஸ்லாமியர்கூட, தான் இஸ்லாமியர் என்று எளிதில் பிரித்தறிய முடியாதபடி அடையாளமழித்துக் கொண்டவராகவே இருப்பார் என்ற செய்தியை படிக்கும்போதுதான், அப்துல்கலாம் சங்கரமடத்துக்கு செல்வதின் சூட்சுமம் பிடிபடுகிறது.

இப்படி கடலைப்போலவே ஆழமும் விரிவும் கொண்டதாகி அலையலையான விவாதங்களைத் தூண்டும் தன்மையுடையதான இந்நூலுக்கு கடல்சார் வாழ்வின் நுட்பங்கள் அறிந்த வேறொருவர் முன்னுரை எழுதியிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும் என்றே கருதுகிறேன். எனவே இதை முன்னுரையாக பொருட்படுத்தாது, ஒரு வாசகனின் பகிர்வாக கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,
ஆதவன் தீட்சண்யா 12.12.08

(நூல் வெளியீடு: கருப்புப் பிரதிகள், பி-74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை - 5. பக்கங்கள்: 96. விலை ரூ.50)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

பதிப்பாளர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com