 |
கட்டுரை
பாலைவாசி ஆதவன் தீட்சண்யா
அல்லியும் ஆம்பலும்
குவளையும் தவளையும் இனியெங்கே
கம்மாயும் குளங்களும் தான்
காய்ந்துத் தூரேறிக் கிடக்கிறதே
தோட்டமும் கொல்லையும்
மனையடியாய் மாறியதில்
காம்பவுண்டானது பச்சை உயிர்வேலி
படர்ந்து நிறைக்க கொழுகொம்பின்றி
வதங்கிச் சொடுங்குது கோவைக்கொடி
தொட்டிச்செடி போல்
சுரைக்கொடி படர்வதில்லை கான்கிரீட் சுவர்களில்
குறுக்கு நெடுக்காய் ஓட
கொட்டாய்க்கூரையே கும்மாளம் அதற்கு
ஒளவைப்பாட்டி நெல்குத்தும் நிலவில்
ஆர்ம்ஸ்ட்ராங்கின் பூட்ஸ் அழுக்கு
முத்தெடுக்க மூழ்கினால்
லெமுரியப்படிவுகள் விண்கல உதிரிகள்
பாலித்தீன் விழுங்கிச்செத்த நீர்ராசிகள்
மீன்பிடிச்சண்டை / கடற்கொள்ளையில் மாண்டோர்
கபாலங்கள் தட்டுப்படுகின்றன
இங்கே மூச்சு முட்டுகிறது
போபால் எங்கோ இருக்க
துளசி மணந்தக் காடுகளில்
பார்த்தீனியம்
எதன் பேராலோ சகித்துக்காள்கிறாய்
இதையெல்லாம் நீயும்
எனக்குத்தான் ஏலவில்லை
ஒப்பிட்டு வர்ணிக்க ஓரழகும் மிஞ்சாத
இந்தப் பொட்டல் நகர் நின்று
பொத்தாம்பொதுவாய் உன்னை
அழகென்று சொல்ல.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|