Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

கடவுளின் கண்கள்
ஆதவன் தீட்சண்யா


Satellite கடவுளின் கண்களென அந்தரத்தில் சுழலும்
செயற்கைக்கோளுக்கு கீழே
நிற குண மாறுபாடுகளற்ற
இரு சரிநிகர் புள்ளிகள் நாம்

நிலவொளியின் குளுமை கூட்டி
நேற்றிரவு அருந்திய
பானத்தின் வாடையையும்
துல்லியமாய் படமெடுக்கும் அதன்கீழ்
எதுவொன்றையும் மறைக்க முடியாதவர்களாயுமாகி
பதற்றமாய் அலுவலகம் கிளம்பும்
நம்மைப் பின்தொடரும் கடவுளுக்கு
தயாரித்தளிக்கிறோம் புதிய கண்களை

யாரோ புதைத்த கண்ணிவெடிகள்
செவ்வாய் கிரகத்துப் பனிப்பொழிவு
மகாசமுத்திரங்களில்
மையங்கொண்டெழும் புயற்சின்னங்கள்
ஜீவநதிகளில் உயிர்குடிக்கும் நீர்ச்சுழிகளென
கடவுளின் புதிய கண்களுக்கு
எதுவும் தப்பாதபோது
எம்மாத்திரம் நாமென்று
கணினியின் எலிப்பொறி மீதேறி
உள்ளங்கைக்குள் கிராமமாய் சுருங்கிச் சுழலும்
ஹைடெக் உலகின் பிரஜைகளாகிறோம்

என்னம்மாவின் பாதத்து பித்தவெடிபோல
பூமியின்மீது விரிசலோடிக்கிடக்கும்
தேசங்களின் எல்லைக்கோடுகளை அழித்து
கிராபிக்ஸ் நுட்பங்களால்
வலைதளங்களில் உலவவிடுகிறோம்
புதிய வரைபடங்களை

பணிமுடிந்த பின்னிரவில்
கழுத்துப்பட்டையை நெகிழ்த்தி தளர்த்தியபடி
உனக்கும் எனக்கும்
கோக்கும் பீட்ஸாவும்
தட்டுப்பாடின்றி கிடைக்கும் நிம்மதியில்
கண்மூடி மெல்லச்சாவதை
இமெயில் எஸ்எம்எஸ் வழியாக
யாவருக்கும் அறிவிக்கிறோம்

எல்லாக் குற்றங்களையும் கண்காணிக்கும்
கடவுளின் கண் பார்த்திருக்க
உன்னையும் என்னையும் புதைக்கின்றனர்
அவரவர் சாதி சுடுகாட்டில்.

- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.