Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureInterview
நேர்காணல்

தமிழன் என்று சொல்வது வெட்டிப் பெருமை: ஆதவன் தீட்சண்யா
நேர்காணல்: மினர்வா & நந்தன்


Aadhavan Dheetchanya தன்னுடைய எழுத்து, இயக்கம் எல்லாம் மக்களுக்காகவே’ என்று இயங்கும் தமிழ் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் ஆதவன் தீட்சண்யா. புறத்திருந்து, பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம், தந்துகி எனும் மூன்று கவிதை நூல்களையும், எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள் எனும் சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். கட்டுரையாக எழுத வேண்டிய ஒரு செய்தியை சிறுகதையாக எழுதுவதும், ஒரு நாவலுக்கான கருப்பொருளை ஒரு கவிதையில் பொருத்திச் செல்வதும், எழுத்தில் புதுப்புது வடிவங்களை பழகுவதும் ஆதவனுக்குக் கைவந்த கலை. ‘புதுவிசை’ இதழின் ஆசிரியராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் செயல்படுகிறார்.

ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் அதை உக்கிரமான மொழியில் எதிர்கொள்ளும் ஆதவன், எழுதுவதோடு தன்னுடைய வேலை முடிந்தது என்றில்லாமல், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் என மாநிலம் முழுவதும் பிரயாணம் செய்தபடி இருக்கிறார். ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்தவரை, BEFI அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம்

ஒரு படைப்பாளி தனது படைப்பில் என்ன சொல்கிறாரோ, அதற்கு நேர்மையாக வாழ முடிகிறதா? அதற்கான சூழல் இங்கு இருக்கிறதா?

எதை எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்தது அது. ஒருவரது மனக்கிளர்ச்சிகள், அனுபவங்கள் தான் எழுத்தாகிறது. இந்த அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாக கிடைப்பதற்கு காரணமாக இந்தியச் சமூகத்தில் சாதியும் பாலினமுமே இருக்கிறது. எனவே எழுதும்போது அவர் தனக்கான அடையாளங்களை நிராகரித்துவிட்டு எழுதுகிறாரா அல்லது புது அடையாளங்களை உருவாக்கிக் கொண்டு எழுதுகிறாரா, பிறப்பின் அடிப்படையில் தன்மீது சுமத்தப்பட்டிருக்கிற அடையாளங்கள் பற்றி அவருக்கு என்ன மதிப்பீடு இருக்கிறது என்பதெல்லாம் படைப்புக்குள் வந்துவிடுகிறது. அதை அவரால் மறைக்க முடியாது. அதனால் ‘தான்’ என்று எழுதும்போது, அவர் தன்னை மட்டும் குறிப்பிடுகிறாரா, அல்லது தான் சார்ந்த சமூகப் பிரிவையும் குறிக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவை முன்னிறுத்தி ‘தான்’ என்று எழுதுகிற எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். சாகும்வரை தனிநபராகிய தன்னை மட்டுமே முன்னிறுத்தி எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். சொந்த அடையாளங்களைக் கொண்டாடுவது அல்லது மறைப்பது/துறப்பது என்ற எதிரெதிர் நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாழ்வதற்கு விதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் கலை இலக்கியவாதி மட்டும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

இரண்டு விஷயங்களை இந்த இடத்தில் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். சமீபத்திய தீராநதி இதழில் நாகார்ஜூனனின் நேர்காணல் வெளியாகியிருந்தது. அதில் அவர் ‘என் அம்மா ஜெயகாந்தன் எழுத்தை விரும்பி படிப்பவர், என் தாத்தா வள்ளலாரை கரைத்துக் குடித்தவர், என் மாமா இன்னின்னாரோடு தொடர்புடையவர்’ என்பதாகவெல்லாம் குறிப்பிட்டிருந்தார். அவரது வாசிப்பு, சிந்தனை, எழுத்து முயற்சிகளுக்கு ஒரு பாரம்பரிய வேர் இருப்பதை நிறுவியிருந்தார். ஒருவகையில் கருவிலே திருவுடையோனாக காட்டிக்கொள்ளும் முயற்சியும் இயல்பாக வந்துவிடுகிறது. அதாவது நாகார்ஜூனன் தன் அம்மா, தாத்தா, மாமாவின் தோள் மீது ஏறி நின்று பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் இப்பேர்ப்பட்ட பரம்பரையாக்கும் என்கிற கித்தாப்பு அவரையறியாமலே வெளிப்படுகிறது.

அதே இதழில், ஜீவசுந்தரி எழுதி பரிசல் வெளியீடாக வந்திருக்கும் மூவலூர் ராமாமிர்தத்தின் வாழ்க்கை வரலாறு நூலுக்கான விமர்சனமும் வெளியாகியிருக்கிறது. தன் காலத்தின் கலகக்காரராக வாழ்ந்த அவரது வாழ்க்கை இன்றைக்கும் பெரும் படிப்பினைகளைத் தரும் விதத்தில் ஜீவசுந்தரி எழுதியிருக்கிறார். ஆனால், ‘தமது முன்னோர்கள் தேவதாசிகளாக இருந்தனர், தங்களது குலப்பெருமை கொண்டாடத்தக்கதாக இல்லை’ என்பதால், வெளியான புத்தகப்பிரதிகள் மொத்தத்தையும் ராமாமிர்தம் அம்மையாரின் தற்போதைய வம்சாவளியினர் வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இப்போ விற்பனைக்கு கிடைப்பது அவர்களால் திருத்தித் தரப்பட்ட பதிப்புதான். அவலமான தங்களது முன்னோரின் வாழ்க்கை இந்த சமூகத்தோடு பகிர்ந்து கொள்ளத்தக்கதல்ல என்கிற ஒரு அவமானவுணர்வு அவர்களை இந்த முடிவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

இதில் அவர்களின் தனிப்பட்ட அவமானம் எதுவுமில்லை. இந்த சமூகம் அவமானப்பட வேண்டிய விஷயம் அது. புத்தகத்தை மொத்தமாக விலைகொடுத்து வாங்கியதன் மூலம் இந்தத் தலைமுறை தன்னுடைய வேர்களை மறைத்துக் கொள்ள விரும்புகிறது. அதேசமயம் நாகார்ஜுனன் தன்னுடைய வேர்களின் பிரபல்யத்தை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். அதை அகங்காரமாக அல்ல, வெகு இயல்பாக சொல்கிறார். அவர் பேசுவதிலிருந்து நாங்கள் கல்வி கற்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார். அவர் சொல்லாமல் விட்ட விஷயம், என் அம்மாவும், தாத்தாவும் கல்வி கற்ற அதேநேரத்தில் யாரெல்லாம் கல்வி கற்கவில்லை என்பதைத் தான். இவர்களுக்கு கல்வி கிடைக்கக் காரணமாயிருந்த அதே சாதிதான் மற்றவர்களுக்கு கல்வி கிடைக்காமல் போவதற்கும் காரணமாய் இருந்திருக்கிறது. மூவலூர் ராமாமிருதத்தின் வாழ்க்கை உள்ளது உள்ளபடியே புத்தகமாக வெளிவருவதை அவரது இன்றைய தலைமுறை அவமானமாக கருதுவதற்கும், அவர்களுடைய முன்னோர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் சாதிதான் காரணமாக இருந்திருக்கிறது.

நாகார்ஜுனன் உலக அரசியல் விஷயங்கள் குறித்துப் பேசினாலும் அவர் சாதியின் தோள்மீது நின்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் ‘தான்’ என்றும், தன் அனுபவம் என்றும் பேசியது தன்னுடைய சாதி கொடுத்த அறிவைத்தான். நாகார்ஜூனன் தான் எழுதியதற்கு நேர்மையாக இருக்கிறார் என்றால் இந்த இடத்தில் எது நேர்மை என்ற கேள்வி வருகிறது. அதேபோல் ராமாமிருதம் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு வெளிவருவதைக் கூட மறைக்க விரும்புவதால் அவரது சந்ததியினரின் செயல் நேர்மையற்றதாகி விடாது.

பொதுவாகவே தலித் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் வலியும் வேதனையும் கழிவிரக்கமுமே நிரம்பியிருப்பதாக சொல்லப்படுவதுண்டு. இதிலிருந்து மாறுபட்டு மிகுந்த கோபத்தோடு தனித்து ஒலிக்கிற குரல் உங்களுடையது. மற்றவர்கள் வலியை மட்டுமே கூறும்போது, வலிப்பதற்கான காரணத்தைக் கூறுவது உங்களது எழுத்து. பிற தலித் எழுத்தாளர்களில் இருந்து நீங்கள் வேறுபட ஆரம்பித்தது எப்போது?

தலித் இலக்கியம் என்று ஒன்று தனியாக தோன்றுவதற்குக் காரணமே, ‘இதுவரை நீ எழுதிய எந்த இலக்கியத்திலும் என்னைப் பற்றி எதுவும் எழுதவில்லை’ என்பதுதானே. இதில் அனைவருமே கோபத்தோடு தான் எதிர்ப்புக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். ‘என்னுடைய சேரிக்கு நீ வந்தது கிடையாது, உன் தெருவுக்குள் என்னை நுழையவிட்டதில்லை. நான் உன் தொழுவத்தில், உன் பண்ணையில் வேலை செய்த நேரம் போக என்னுடைய வாழ்க்கை என்ன, என்னுடைய கஷ்டங்கள் என்ன, என்னுடைய கொண்டாட்டங்கள், நம்பிக்கைகள் என்னென்ன என்று எதுவும் உனக்குத் தெரியாது. அப்படியிருக்கும்போது என்னைப் பற்றி நீ எழுதுவதாகச் சொல்வது வெறும் பம்மாத்து. அதில் எந்த நேர்மையும் கிடையாது. உனக்குத் தெரிந்ததை நீ எழுதிக்கொள். என் வாழ்க்கையை நான் எழுதிக் கொள்கிறேன்’ என்ற மீறலில் தான் தலித் இலக்கியமே வருகிறது.

தலித் எழுத்துக்கள் எல்லாமே இப்படியிப்படித்தான் இருக்கும் என்று பொத்தாம்பொதுவாக வகைப்படுத்திவிட முடியாது. நிலவும் சமூக அமைப்பு எல்லா மட்டத்திலும் ஏற்றத்தாழ்வை கடைபிடிக்கிறது. சகமனிதனை ஒருபோதும் சமமாய் பார்க்க அனுமதிக்காத அதன் அடிப்படை சாதியத்திற்குள் புதைந்து கிடக்கிறது. சமத்துவமின்மையை நியாயப்படுத்துவதாக சாதியடுக்கு அமைந்திருக்கிறது. இதை அம்பேத்கர் பன்மப் படிநிலை அடுக்கு என்கிறார்.

இந்த அடுக்கு குலையாமல் நீடிக்க ஒடுக்குமுறை கையாளப்படுகிறது. ஒரு தளத்திலோ ஒரு முனையிலோ இல்லாமல் ஒடுக்குமுறைங்கறது அரசியல், பண்பாடு, பொருளாதாரம், கலை, இலக்கியம்னு வாழ்க்கையோட எல்லா மட்டத்திலும் நிலவுது. நுட்பமாகவும் வெளிப்படையாகவும் பல்வேறு வடிவங்களில் நிலவுகிற சாதியடுக்குமுறையைப் புரிந்துகொள்வது, அதிலிருந்து விடுபடுறதுக்கு எத்தனிப்பது, அதை கலைஇலக்கியப் படைப்பாக மாற்றி சமூகத்தின் மனசாட்சியோடு உரையாட வைப்பது- இதுதான் இப்ப தலித் படைப்பாளிகளோட முன்னுரிமைக் களம். இதுபற்றி ஒருவருக்கு என்ன புரிதல் இருக்கிறதோ அதைப் பொறுத்து அவரோட படைப்புகள் வரும். அதுவுமில்லாம, ஒருத்தர் என்னவாக இருக்கிறாரோ அதுவாகத்தானே வெளிப்பட முடியும்?

போன தலைமுறைவரைக்கும் இந்த வாழ்க்கையை சகித்துக் கொண்டுதானே வாழ்ந்தது? தங்களைத் துன்புறுத்தவும் அவமதிக்கவும் அவனுக்கு சலுகை இருக்கிறது என்றுதானே நினைத்திருந்தது? ஆனால் எல்லாக் கொடுமைகளையும் ஏத்துக்கிட்டதா அதுக்கு அர்த்தமில்ல. தனக்கு வலிப்பதை வெளியே சொல்வதற்கே இன்னொருத்தர்கிட்ட அனுமதி வாங்க வேண்டியிருந்த ஒரு சூழ்நிலையில் தன்னோட வலியை வெளியே சொல்வதே ஒரு மீறல்தானே? என்னை யார் அடித்தது, அதற்கு யார் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது, என்னை அடித்தால் நானும் திருப்பி அடிப்பேன் என்பதெல்லாம் அதற்கு அடுத்த குரல்தான்.

‘யார் என் முகத்தின் மீது சிறுநீர் கழித்தது, யார் நான் வாழ்வதற்கான நிலத்தைப் பறித்தது, யார் நான் இறந்த பின்னரும் என் சுடுகாட்டை மறித்தது, யார் என் வீட்டுப் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியது’ என எல்லாமே தெரிந்திருக்கும் தான். ஆனால் அதை எழுதுவதற்கு அக எழுச்சி மட்டும் போதாது, புறச்சூழ்நிலையும் சாதகமாக இருக்க வேண்டும். அதற்கு என் அகச்சூழலை புறச்சூழலோடு பொருத்திக் கொள்ள வேண்டும் அல்லது என் புறச்சூழலை அக எழுச்சியோடு இணைத்துக் கொள்ள வேண்டும். இடையறாத ஒரு processல் தான் இது நடைபெறும்.

உதாரணத்துக்கு திண்ணியம் கொடுமை. ‘எப்பேர்ப்பட்ட மாண்பும் நாகரீகமும் நிறைந்த சமூகமாயிருக்கிறது இது’ங்கிறதை வெட்டவெளிச்சமாய் அம்பலப்படுத்திய கொடுமை அது. இப்படிப்பட்ட கொடுமைகளை நிகழ்த்துறது மூலமா தன்னோட கீழ்மைகளை இந்த சமூகம் வெளிப்படுத்திக்கிட்டே இருக்கு. எனவே ‘எனக்கு இந்தக் கொடுமைகள் நடைபெறுகிறது’ என்பதை வெளியே சொல்வதும் புலம்புவதும் எனக்கு அவமானம் கிடையாது. அது இந்த சமூகத்திற்கான அவமானம்.

‘மலத்தைத் தின்கிற நாயும் பன்றியும்கூட ஒருநாளும் தன்னோட மலத்தைத் தின்னாது. ஆனால் திண்ணியத்தில் ஒரு தலித் வாயில் மலத்தை திணிச்சிட்டீங்களே’ என்று புலம்பி ஒருத்தர் கதையோ கவிதையோ எழுதினால் அது வெறும் புலம்பல் அல்ல. இந்த சமூகத்தின் மீது வாசிக்கப்படும் குற்றப்பத்திரிகை. இதனால் இந்த வகைமை எழுத்துக்களும் தேவைதான்.

அதேநேரத்தில் இப்ப திண்ணியம் வழக்கில் தீர்ப்பு வந்திருக்கு. ஆயிரத்தெட்டு வியாக்கியானங்கள் சொல்லப்பட்டாலும் தீர்ப்போட சாரம் சாதிவெறியர்களுக்கு சாதகமானதுதான். அப்ப, இனிமேல் யார் வேண்டுமானாலும் எவன் வாயிலும் எதை வேண்டுமானாலும் திணிக்கலாமா? அப்போதும் கோர்ட் இதேமாதிரி தீர்ப்பு வழங்குமா? ஒருத்தன் வாயில மலத்தைத் திணிச்சதை உங்களால சகஜமா எடுத்துக்க முடியும்னா, ஊறுகாய் மாதிரி கொஞ்சூண்டு மலத்தையும் உங்க சாப்பாட்டுத் தட்டுல வச்சிக்குவீங்களா? என்று கேட்கிற எழுத்தும் தேவை.

அப்படி எழுதுவதற்கு உங்களுக்கு இந்த சமூகத்தின்மீது எந்த பிரமைகளும் இருக்கக்கூடாது. ‘நான் தலைமுறை தலைமுறையாக அடிவாங்கிக் கொண்டிருக்கிறேன். இதற்கு பார்ப்பனீய ஆதிக்கமும், சாதீய அடுக்குமுறையும் தான் காரணம்’ என்பது போன்ற வரலாற்று, அரசியல் காரணங்களைப் பயிலும்போது பிரமைகளை உதிர்த்துவிட்டு வாழ்வின் மூர்க்கத்தை எதிர்கொள்கிற - அதை அப்படியே எழுத்தில் முன்வைக்கிற ஒருவராக எவரொருவரும் வெளிப்படக்கூடும்.

இடதுசாரி இயக்கத்தோடு எனக்குக் கிடைத்த தொடர்புகள், போராட்ட அனுபவம் ஆகியவற்றிலிருந்து உருவான விமர்சனப்பார்வையும் புரிதலும் எனது எழுத்துக்களை வேறொரு வகைமையாக மாற்றியிருக்கலாம். எப்படியாயினும் எனக்கு முன்பு சாதியடுக்குமுறைக்கு எதிராக இயங்கிய - எழுதிய எல்லோரது தோள்மீதும் ஏறி நிற்பதால். நான் ஒருவேளை உங்களுக்கு உயரமாகத் தெரியலாம்.

பார்ப்பன எதிர்ப்பை உங்கள் படைப்புகளில் உக்கிரமாக வெளிப்படுத்தி வருகிறீர்கள். நீங்கள் சார்ந்துள்ள இயக்கங்களில், சக எழுத்தாளர்கள் வட்டாரத்தில் நீங்கள் எப்படி பார்க்கப்படுகிறீர்கள்?

இங்கு உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் எல்லோருமே பார்ப்பனரல்லாதார்தான். (அதையும் வடிகட்டிப் பார்த்தால் தலித்கள்தான்.) தலைமுறை தலைமுறையாக இயற்கையோடு இயைந்தும் மல்லுக்கட்டியும் பெற்ற பாரம்பர்ய அறிவைக் கொண்டு நிகழ்த்தப்படுகிற அவர்களது உழைப்பினாலேதான் சமூகத்தின் தேவைகள் முழுவதும் நிறைவேற்றப்படுகிறது. உடலுக்கு வெளியே மூளையை வைத்தால் எவ்வளவு விகாரமா இருக்குமோ அந்தளவுக்கு விகாரமானதுதான் உடலுழைப்பையும் மூளையுழைப்பையும் பிரிக்கிறதும்கூட. பார்ப்பனர்கள் மொத்த சமூகத்தையும் இப்படி விகாரப்படுத்திவிட்டார்கள்.

உடலுழைப்பை அறிவிலிருந்து பிரித்ததோடு உடலுழைப்பு அனைத்தையும் தீட்டுக்குரியதாகவும் அறிவித்தார்கள். விவசாயம் செய்த பார்ப்பன அண்ணன் தம்பி இருவரும் கொடுத்த காணிக்கையை- சாஸ்திரவிரோதமாய் சம்பாதித்தப் பணம் என்று கூறி கும்பகோணம் சங்கர மடத்துக்காரர் (சிருங்கேரி மடத்தோட கிளை. கும்கோணத்தைத் தவிர அதற்கு தமிழ்நாட்டில் வேறெங்கும் கிளைகள் கிடையாது. காஞ்சி மடம் லிஸ்டிலியே கிடையாது) ஏற்க மறுத்த விவகாரத்தை காந்தியே அம்பலப்படுத்தி கண்டித்தது உங்களுக்குத் தெரியும்.

விளைகிற தானியம் தவசமெல்லாம் புனிதம், அதை விளைவிக்கிற விவசாயமும் விவசாயியும் தீட்டுன்னா அதை எப்படி ஏத்துக்க முடியும்? அப்பதான், புனிதம்னு நீ கொண்டாடுகிற உன் அறிவும் உன் தொழிலும் உன் வயிற்றை மட்டுமே வளர்க்கிறதுக்கு உதவுற குப்பை... எங்ககிட்ட இருக்கிற அறிவுதான் இந்த உலகத்தையே வாழவைக்கிறதுன்னு பிரகடனம் செய்ய வேண்டியிருக்கு. அவங்களோட மந்திரத்துல மாங்காய்கூட வராதுங்கிறது எல்லாருக்கும் தெரிந்த உண்மை.

பார்ப்பனர்களோட பிழைப்புக்கூடமாய் இருக்கிற கோயிலைக் கட்டினதும், அதுக்குள் இருக்கிற சாமி சிலைகளை செதுக்கினதும், பூசைக்கான தேங்காய் பழங்களை விளைவிக்கிறதும், அவர்கள் கையிலே பிடித்தாட்டுகிற மணியை செய்வதும்கூட பார்ப்பரல்லாதார்தான். இந்த சமூகத்தோட அடிப்படைச் செயல்பாடாய் இருக்கிற உழவும் தொழிலும் இவர்களால்தான் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. கரத்தாலும் கருத்தாலும் உழைப்பவர்கள் இவர்கள்தான். எனவே உழைக்கும் மக்களோட இயக்கம்கிறது இவங்களுக்கானது தான்.

நான் கல்வி கற்க ஆசைப்படும்போது, ‘நீ படிக்கப் போய்விட்டால் எனக்கு அடிமை வேலை செய்வது யார், என் பிணத்தை யார் தூக்குவது, என் துணியை யார் துவைப்பது, என் கழிவறையை யார் சுத்தம் செய்வது’ என்று அவர்கள் கேட்கிறார்கள். இதையெல்லாம் நான் ஏன் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்டால் அவர்கள் சாதி என்கிற விஷயத்தை தான் மறுபடியும் பேசுகிறார்கள். இந்தக் கேள்வியின் ஆதாரமூலமாக பார்ப்பனர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களை எதிர்த்துப் பேச வேண்டிய சூழலையும் அவர்கள் தான் உருவாக்குகிறார்கள்.

என்னைப் பார்த்து ஒருவன் உனக்கு அறிவில்லை என்று சொன்னால் அதற்கு உடனடியாக நான் பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நான் யோசித்துக்கொண்டிருக்க முடியாது. நான் ஒடுக்கப்படுகிறேன் என்று கருதும்போது என்னை ஒடுக்குபவனைப் பார்த்து நான் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. அந்தக் கேள்வி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிரான கேள்வியாக இருப்பதற்கு நான் எந்தவிதத்திலும் பொறுப்பாளியல்ல. நான் கேள்வி எழுப்புவதை சகித்துக்கொள்ள முடியாமலும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாததாலும் என்மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது என்ற வகையில் இடதுசாரி இயக்கம் என் பாடுகளுக்கு செவிமடுக்கும், எனக்காகப் போராடும், போராட வேண்டும் என்று கருதுகிறேன்.

தமிழ்நாட்டில், இந்தியாவில் இடதுசாரி இயக்கங்கள்தான் ஒடுக்கப்பட்டவர்களைப் பார்த்து நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்கள் என்று முதலில் புரியவைத்தன. தலித் அமைப்புகள் என்று தனியாக உருவாவதற்கு முன்பிருந்தே இடதுசாரி இயக்கங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றி வருகின்றன. அடிப்படை பாட்டாளி வர்க்கமாக இருக்கிற தலித்துகளுக்காக போராடுவதைத் தவிர அவற்றுக்கு வேறு வழியுமில்லை.

நிலவும் அசமத்துவமான சமூக அமைப்பை மாற்றியமைக்கப் போராடுவதுதான் இடதுசாரி மனோபாவம் என்றால் மற்றெவரைக் காட்டிலும் இந்த சமூகத்தை உடனடியாய் மாற்றியமைக்க வேண்டிய தேவை தலித்துகளுக்குத்தான் இருக்கிறது. அதனால்தான் அம்பேத்கரை இந்தியாவின் மிகச்சிறந்த இடதுசாரித் தலைவராக நான் கருதுகிறேன். அவர் உருவாக்கித் தந்திருக்கும் சாதி ஒழிப்பிற்கான பாதையில் இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே மக்களைத் திரட்ட முடியும் என்று நம்புகிறேன்.

இப்படி இருக்கும்போது பார்ப்பனர்களுக்கு எதிராக நான் எழுதுவதை இயக்கம் எப்படி தவறாக எடுத்துக்கொள்ளும்? இதைத்தான் எழுத வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் யாரும் என்னிடம் கூறுவது கிடையாது. படைப்பு என்பது தனிநபர் செயல்பாடு. இடதுசாரித் தோழர் ஒருவர் ஓட்டல் வைத்திருந்தால், அவர் தினமும் ‘சாம்பார் நல்லா இருக்குதா’ என்று கட்சி அலுவலகத்தில் போய்க் கேட்டுவிட்டு தொழில் நடத்துவதில்லை. அதேபோல் நானும் என்னுடைய கவிதையை யாரிடமும் கொண்டு போய் கருத்துக் கேட்டுவிட்டு வெளியிடுவதில்லை.

இயக்கத்தைப் பற்றி தெரியாதவர்களும் அதற்குள்ளிருந்து இயங்காதவர்களும் அவர்களாகவே அனுமானத்தில் எதையாவது சொல்வது இங்கொன்றும் புதுசல்ல. கட்சி அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு எழுத்தாளனையும் ஒரு கமிஸார் கண்காணித்துக் கொண்டிருப்பதாய் குற்றம்சாட்டுவதெல்லாம் ரசமான கற்பனைதான். எழுத்து என்பது தனியொருவனின் அனுபவம், அவன் மீதான வன்முறைகள், அவனுக்குக் கிடைக்கிற சுதந்திரம் சார்ந்த விஷயம். இதில் எந்த இயக்கமும் தலையிடுவதில்லை. இந்த சுதந்திரமும், இயக்கம் மானசீகமாய்த் தருகிற தைரியமும்தான் என் எழுத்தின் காத்திரத்திற்குக் காரணமாக இருக்கிறது.

ஆரியத்துக்கு மாற்றாக திராவிட இயக்கங்கள் தமிழக வரலாற்றை உயர்வாக முன்வைக்கின்றன. ஆனால் தமிழ் மன்னர்களின் வாழ்க்கையை, தமிழ் வரலாற்றை உங்களது படைப்புகள் பகடி செய்கின்றன. ஆரிய வரலாற்றுக்கு மாற்றாக தமிழக வரலாறு முன்னிறுத்தப்படுவதை நீங்கள் ஆதரிக்கவில்லையா?

ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று ஆயிரம் சான்றுகளை நிறுவிய பிறகும், சங் பரிவாரத்தினர் ‘இல்லையில்லை, ஆரியர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். என்.எஸ்.ராஜாராம் போன்ற போலி ஆய்வாளர்களோட சப்பைக்கட்டும் இதற்கு உண்டு. அவர் மித் ஆஃப் ஆரியன் இன்வேஷன் என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். இன்னும் இவரைப்போலவே பல டகால்டிகளும் உண்டு. எனவே ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று சொல்வதற்கு உங்களுக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு தேவைப்படுகிறது. அதாவது உண்மையான வரலாற்றை தேடி அயறிவது என்பதுதான் அது.

ஐதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிற ஒரு ஆய்வமைப்பு, இந்திய உயர்சாதி ஆண்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் டி.என்.ஏ மூலக்கூறுகளில் ஒற்றுமை இருக்கிறதாக அறிவிச்சிருக்கு. ஆனால் இப்படியான ஒற்றுமை பெரும்பாலான உயர்சாதிப் பெண்களுக்கில்லை. புதுதில்லி அறிவியல் இயக்கத் தலைவர் பிரபிர் புர்கயஸ்தா இதுபற்றி மார்க்சிஸ்ட் கட்சியோட பத்திரிகையான பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆரியர்கள் குறைந்த அளவிலான பெண்களுடன்தான் இங்கு வந்தார்கள், அவர்கள் இந்தியப் பரப்பிலிருந்த பூர்வக்குடிப் பெண்களை பலவந்தமாய் சிறைபிடித்துக் கொண்டார்கள் என்றும் அதனாலேயே பிற்காலத்தில் ஆரியர்கள் தங்கள் வீட்டுப் பெண்கள் உட்பட எல்லாப் பெண்களையும் தீட்டுக்குரியவர்களாகவே அறிவித்தார்கள் என்றும் ஏற்கனவே வெளியான ஆய்வுகளுக்கு வலு சேர்ப்பதாய் இருக்கிறது இந்த டிஎன்ஏ ஆய்வு.

திராவிடர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்றுதான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வந்த காலம்தான் வேறுபடுகிறது. இவர்கள் ஆரியர்களுக்கு முன்பே வந்தவர்கள். திராவிடர்களை தமிழர்களின் மூதாதைகளாகக் கொள்ள முடியமா என்கிற ரீதியில் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. அம்பேத்கரும் இந்த மண்ணின் பூர்வகுடிகளாக நாகர்களைத் தான் குறிப்பிடுகிறார்.

உலகம் முழுவதுமே சமூகக் காரணங்களால் மக்கள் இடம்பெயர்வது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆரியர்களும் அப்படித்தான் ஒரு நெடும்பயணத்தின் வழியாக இங்கு வருகிறார்கள். இங்கிருக்கிற பூர்வகுடிகளை அவர்களது தோற்றத்தைக் கொண்டு கருப்பர்கள், சப்பை மூக்கர்கள், ஆண்குறி வழிபாட்டாளர்கள்னு இழித்தொதுக்குகிற வேலை அப்போதே தொடங்கிருச்சு. பூர்வ குடிகளிடமிருந்து தங்களை தனித்துக் காட்டிக்கொள்ளவும் தங்களது இனத்தூய்மையைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஆர்யவர்த்தம் மாதிரியான தனித்த குடியிருப்புகளை உருவாக்குறாங்க. பூர்வகுடிகளோடு புழங்குவது தீட்டுக்குரியதா அறிவிக்கப்படுது. முதன்முதலில் இந்தியாவை ஒரு மூடுண்ட சமூகமாக மாற்றியவர்கள் ஆரியர்கள்தான் என்ற முத்துமோகனின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மை.

‘ஒதுக்குவதும் ஒதுங்குவதும்’ என்கிற பார்ப்பனியத்தின் ஆணிவேர் ஆரியத்திற்குள் பதுங்கி இருக்கிறது. ஆனாலும் இனக்கலப்பு தவிர்க்க முடியாததாகிறது. வருணம் வருகிறது. இப்போது வருணத்தூய்மை என்கிற ஒரு புதுவகை மூடாக்கு அறிமுகமாகிறது. வருணக்கலப்பையும் தடுக்க முடியாதபோது சாதி வருகிறது. சாதிக்கலப்பைத் தடுக்க தீண்டாமை வருகிறது. இப்படி தொடர்ந்து சமூகத்தை இணக்கம் காண முடியாத கூறுகளாக பிளக்கிற ஏற்பாடுகளுக்குப் பின்னே ஆரிய மனநிலைதான் இயங்குது.

இந்த வருணத்தையும் சாதியையும் தமிழ் மண்ணுக்கு கூட்டி வந்து கட்டிக் காப்பாற்றும் வேலையில் தமிழ் மன்னர்களும் ஈடுபட்டிருந்தார்கள் என்ற உண்மையை நாம் எப்படி நிராகரிக்க முடியும்? வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்ன மன்னர்கள் யாரையாவது தமிழ் மரபிலிருந்து நீங்கள் காட்ட முடியுமா? வருண அமைப்பை ஒப்புக்கொண்டவர்களை என்னுடைய மன்னன் என்று நான் ஏன் கொண்டாட வேண்டும்? வடக்கேயிருந்து பார்ப்பனர்களை அழைத்துவந்து வளமான பகுதிகளில் குடியமர்த்தி வைத்தவர்கள் தமிழ்மன்னர்கள்தானே? அந்த பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுத்தானே தலித்துகளை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தார்கள்? சாதியைத் தாங்கிப் பிடிக்கிற, பெண்களை இரண்டாம்பட்சமாக போகப்பொருளாக நடத்துகிற ஒரு மன்னனை அவன் தமிழன் என்பதாலேயே நான் ஏன் தாங்கிப் பிடிக்க வேண்டும்?

தமிழன் என்ற பொது அடையாளத்தோடு ஒன்றுபடுவது, பேசுவதற்கு உவப்பானதாக இருக்கலாம். தமிழன் என்ற பொது அடையாளத்தை வைத்துக்கொண்டு சாலையில் ஒரு தலித் சுதந்திரமாக நடந்துவிடவோ, மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடவோ, மற்ற சாதிகளில் திருமணம் செய்து கொள்ளவோ முடியுமா? ஹரியானாவில் கொல்கிறார்கள். ஆந்திராவில் சுண்டூரில் கொல்கிறார்கள். பீகாரில் தலித்துகளைக் கொல்ல தனிப்படையே இருக்குது. கயர்லாஞ்சியில் நடந்த கொடுமை நாடறியும். இதிலிருந்து தமிழ்நாடு எந்தவிதத்தில் மாறுபட்டிருக்கு? தமிழன் எந்தளவிற்கு சாதி வித்தியாசம் பாராமல் தீண்டாமையை கைக்கொள்ளாமல் சமத்துவம் பாராட்டுகிறவனாய் இருக்கிறான்? இந்த நாட்டில் எங்கேயிருந்தாலும் எங்கள் உயிரும் உடைமையும் மசுருக்கு சமானமாகக்கூட மதிக்கப்படலேன்னா தமிழன் அல்லது இந்தியன் என்கிற வெட்டிப் பெருமையை நானெதெற்கு சுமந்து திரியவேண்டும்?

தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்கள்ல தீண்டாமை கடைபிடிக்கப்படுது. ஒரு அரசியல் விருப்புறுதியோட அரசாங்கம் செயல்பட்டா இதையெல்லாம் முடிவுக்கு கொண்டுவர முடியும். ஒரு தலித்தைக் கூட்டிப் போய் உன் வீட்டில் விருந்து வை அல்லது ஒரு தலித் வீட்டுக்குப் போய் நீ சாப்பிடுன்னு ஒரு அரசாங்கம் உத்தரவு போட வேண்டியதில்லை. ஆனால் பொது இடத்தில் நடமாடவும், சைக்கிளேறிப் போகவும், செருப்பு போட்டுக் கொள்ளவும், தோள்ல துண்டு போட்டுக் கொள்ளவும்கூட ஒரு தலித்தை அனுமதிக்கமாட்டேன்னு அட்டூழியம் பண்ணுகிற சாதி வெறியன்களை சுளுக்கெடுக்கிறது அரசாங்கத்தோட வேலைதானே? ஆனால், அரசு நிர்வாகத்துல இருக்கிற அதிகாரிகள், காவல்துறையினர், நீதிபதிகள் என்று இவங்களெல்லாம் சாதியைக்கூட தாண்டாதவங்களா இருக்கிறப்ப ஒரு தலித்தின் உயிர் எந்த நேரத்திலும் பறிபோகக் கூடியதாயிருக்கிறது.

நடப்பிலிருக்கிற வன்கொடுமைத் தடுப்புச்சட்டங்களை அமல்படுத்துகிற பொறுப்பு சாதிவெறியர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அந்த சட்டங்களைக் குற்றுயிராக்கி குடலறுத்து கிடத்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆந்திராவிலோ, பீகாரிலோ எங்கே பிறந்திருந்தாலும் தலித்தாக இருப்பதால்தான் கொடுமைக்கும் அவமானத்துக்கும் ஆளாகிறேன் எனும்போது, மொழியினால் எனக்கு என்ன நன்மை கிடைக்கிறது? குறிப்பிட்ட பூகோள எல்லைக்குள் பிறப்பதால் என்னை சுதந்திரமான மனிதனாக இந்த சமூகம் ஒப்புக்கொள்ளுமா? நான் குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவன், குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்தவன், குறிப்பிட்ட மொழியைப் பேசக்கூடியவன் என்பதால் எனக்கு எந்த சமூக அந்தஸ்தும் கிடைப்பதில்லையே.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மொழி, உணவு, உடை, மதம், நம்பிக்கைகள் என எல்லாமே வேறுபடுகிறது. எனக்கு கீழே இன்னொரு சாதி என்ற உணர்வு மட்டும்தான் எல்லோரையும் ஒன்றுபடுத்துகிறது. இந்த வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியா என்றால், இந்தியன் என்கிற தேசியக் கோட்பாட்டையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழன் என்கிற பொது அடையாளத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழன் என்கிற பொது அடையாளத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? தமிழன் என்கிற பொது அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி மற்ற அடையாளங்களைத் துறப்பதில் எனக்கு எந்த மனத்தடையும் கிடையாது. ஏனெனில் எனக்கு ‘தீண்டத்தகாத சாதி’ என்ற அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதைத் துறப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. ‘நீங்களும் அதே மாதிரி துறக்கத் தயாராக இருக்கிறீர்களா’ என்பதுதான் எனது கேள்வி. உங்களுக்கு ‘தமிழன்’ என்ற அடையாளத்தைத் தவிர தொடத்தக்க ஜாதி, ஆண் போன்ற மீதி அடையாளங்கள் தான் முக்கியமாக இருக்கின்றன. அதிகாரமிக்க உனது அடையாளங்களை நீ துறக்கத் தயாராக இருந்தால், தமிழன் என்கிற பொதுக்குடையின் கீழ் ஒன்றுபடுவதற்கு எனக்கு எந்த மனத்தடையும் இல்லை.

சாதி உணர்வோடு இருந்ததால் தமிழ் மன்னர்களின் வரலாற்றை நிராகரிப்பதாகக் கூறுகிறீர்கள். நால்வருணத்தை முன்னிறுத்துவது தான் கம்பராமாயணம். பெரியார் அதை எரித்தபோது, கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா ஊர்தோறும் அதை எடுத்துச் சென்று அதற்கு ஆதரவாகப் பேசினார். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

60 வகையான ராமாயணம் இருக்கிறது. வால்மீகி ராமாயணம்தான் ஆதி. வால்மீகியும்கூட அப்பகுதி மக்களிடம் வாய்மொழியாக புழக்கத்திலிருந்த ஒரு கதையை தன் மொழியில் எழுதியிருக்கக்கூடும். பத்தாயிரம் பாடல்களைக் கொண்ட வால்மீகி ராமாயணம் பின் வந்தவர்களின் இடைச்செருகல்களால் உப்பி வீங்கி இன்று 24 ஆயிரம் பாடல்களைக் கொண்டதாக இருக்கிறது. கம்பரும் தன் பங்குக்கு கொஞ்சம் அரைத்து ஊற்றியிருக்கிறார்.

இவர்களெல்லாம் சேர்ந்துதான் வடக்கே அயோத்தியைச் சுற்றி நடந்ததாகக் கூறப்படும் ஒரு கதையை நகர்த்தியும் புஷ்பக விமானத்தில் ஏற்றியும் தென்னாட்டுக்குக் கூட்டிவந்தார்கள். போதாக்குறைக்கு கடலிலும் நீந்தவிட்டு கரையேறத் தோதாக பாலமும் கட்ட வைத்தார்கள். வேலைவெட்டி இல்லாத பண்டிதர்களும் புலவர்களும் கம்பராமாயணத்தின் எல்லாக் கதாபாத்திரங்களையும் தெருத்தெருவாய் இழுத்துவந்து பட்டிமன்றங்கள் நடத்தி நாறடித்து ராமாயணம் ஏதோ நம்மூர் கதை என்பதைப் போலவே மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

இன்னொரு பக்கம் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் சொல்வதைப்போல, ராமன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று வாதாடப் புகுந்தவர்கள் ராவணனை திராவிடன் என்றும் ஆரியத்தை எதிர்த்த உண்மையான மாவீரன் என்றும் கொண்டாடத் தொடங்கிய அபத்தமும் இங்கு நிகழ்ந்தது. ராமன் கற்பனை என்றால் ராவணனும் கற்பனைதான் என்கிற குறைந்தபட்சப் புரிதலையும் கைவிட்டிருந்தனர்.

இன்னும், கம்பராமாயண வரிகளைப் பிழிந்து, சோறு - குழம்பு - சொர்க்கம் - நரகம் - சோசலிசம் - சூயஸ் கால்வாய் எல்லாவற்றையும் கொண்டு வருகிறதொரு ஏற்பாட்டில், பூதக்கண்ணாடி வைத்தலையும் கூட்டமொன்றும் இருக்கிறது. ராமாயணம் முன்வைக்கிற சமூகவியல் கருத்துக்களை உள்வாங்காமல் கம்பனின் மொழி ஆளுமைக்காகவும், கற்பனைக்காகவும் ராமாயணத்துக்குள் புகுந்த ஜீவா கடைசியில் கம்பனை விட்டுவிட்டு ராமனைப் பற்றிக் கொண்டாரென்ற குற்றச்சாட்டு உண்டு. 13வது ஆழ்வார் என்ற கேலிக்கும்கூட ஆளாகினார். ராமாயணத்தை எரித்ததற்காக பெரியாரோடு ஜீவாவுக்கு எந்தளவுக்கு முரண்பாடு இருந்ததோ அந்தளவுக்கு இவ்விசயத்தில் ஜீவா மீது எனக்கிருக்கிறது.

எழுத்தாளர்கள் சாதிய மனோபாவத்தோடு இயங்குவதாக குட்டி ரேவதி சமீபத்தில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். நீங்கள் இந்த கருத்தோடு எந்தளவிற்கு உடன்படுகிறீர்கள்?

நமக்கு சாதியைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை. ஆனால் நாம் அதை மறைக்கப் பார்க்கிறோம். பெரிய பெரிய விசயங்களாகப் பேசி நமக்குள் இருக்கும் சின்னத்தனங்களை மறைத்துக்கொண்டு தப்பியோடும் எத்தனிப்பிலேயே முனைப்பு காட்டுகிறோம். குட்டிரேவதி அதை வெளிப்படையாக எழுதியிருந்தார். ‘தமிழன்’ என்கிற பொது அடையாளத்தோடு எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று சொல்லப்படுவதைப் போல், பெண் விடுதலை குறித்துப் பேசும்போது, அனைத்துப் பெண்களும் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்து கூறப்படுகிறது.

எல்லாப் பெண்களும் ஒரே பிரச்சனைகளைத் தான் சந்திக்கிறார்களா, ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கு உள்ள பிரச்சனைகளும், தலித் பெண்ணுக்கு உள்ள பிரச்சனைகளும் ஒன்றா என்ற கேள்வி இந்த இடத்தில் வருகிறது. சில பொதுத்தன்மைகள் இருக்கலாம். மற்றபடி ஒப்பிட முடியாத வித்தியாசங்கள் நிறைய உண்டு.

Aadhavan Dheetchanya கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், நகரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள் இருப்பதில்லை. கிராமத்தில் ஒரு பெண்ணை அவளது கணவன் அடிப்பானானால் அவளால் திருப்பி அடிக்க முடிகிற அளவுக்கு மனரீதியாக காத்திரமாகத்தான் இருக்கிறாள். அப்படி திருப்பியடிக்க முடியாவிட்டால் அவனை நிலைகுலைய வைக்கிற அளவுக்கு அவளால் கடுமையாக ஏச முடிகிறது. கிராமப்புற வாழ்க்கையில் ஆணின் உழைப்பையும் அவனது வருமானத்தையும் மட்டுமே சார்ந்திராமல் பெண் அடிப்படையிலேயே தன் சுயஉழைப்பில் வாழ்கிறவளாகவும் இருக்கிறாள். இன்னும் சொல்வதானால் அவளது உழைப்பை நம்பியே முழு குடும்பமும் வாழ்கிற நிலைமையும்கூட உண்டு. எனவே அவள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் உடையவளாயிருப்பதும் இயல்பானதுதான்.

படித்த நடுத்தர வர்க்கத்து ஆண் இன்று தன்னை வெகு நாகரீகமாக காட்டிக் கொள்வதற்கு அதிகம் மெனக்கெடுகிறான். ஒரு கண்ணியவான் போன்ற தோற்றத்தில் தனது கொடுக்குகளையும் கோரைப்பற்களையும் மறைத்துக்கொள்ள விரும்புகிறான். அதனால் அவனால் பெண்ணை அடிக்கவோ, நேரடியாக ஆதிக்கம் செலுத்தவோ முடியவில்லை. என்ன சார் படிச்சவங்களா இருக்கீங்க, இப்படி இன்டீசன்ட்டா நடந்துக்கிறீங்களேன்னு தன்னை யாரும் சொல்லிவிடக் கூடாதுங்கறதுல கவனமா இருக்கிறான்.

ஆனால் அதுக்காக ஆண் என்கிற அகங்காரத்தையோ பெண் தனக்குக் கீழ் என்கிற இளக்காரத்தையோ கைவிடவும் அவன் தயாராயில்லை. எனவே பெண்ணை அடிமைப்படுத்தவும், தான் அவளை விட மேல் என்று உணர்த்துவதற்கும் மொழியின் துணையோடு பல நுட்பமான வழிமுறைகளைக் கையாள்கிறான். அந்த நுட்பங்களை புரிந்துகொண்டு அதை மொழிரீதியாகவே பெண்கள் எதிர்கொள்கிறார்கள். ஊமைக்குத்து விட்டு உள்காயம் ஏற்படுத்துகிற ஒரு தாக்குதல் முறையை பெண்கள் மொழிக்குள்ளிருந்து கண்டெடுத்திருக்கிறார்கள். ஆண்களின் நுட்பமான பின்னல்களுக்குள் சென்று பெண்கள் பேசுகிறார்கள் என்றுதான் கருதுகிறேன். ஆனாலும் இவர்கள் எழுதும் பிரச்சனை உலகம் முழுக்க உள்ள பெண்களின் பிரச்சனை அல்ல என்று சொல்லத் தோன்றுகிறது.

யோனி என்கிற வார்த்தையை எழுதிவிட்டால் அது ஏதோ பெரிய புரட்சி என்று இங்கு மதிப்பிடப்படுகிறது. இது நகரம் சார்ந்த நடுத்தரவர்க்க மனோநிலை. அவளுடைய படிப்பும், நாசூக்கும் யோனி என்கிற வார்த்தையை தன் சகமனிதர்களுடனான உரையாடலில் பேசுவதற்கு அவளுக்கு பெரிய மனத்தடையை உருவாக்கியுள்ளது. அதனால் அந்த ஒரு வார்த்தை ஒரு பெரிய கலகக்குரலாக நமக்குத் தெரிகிறது. ஆனால் கிராமத்திலோ நகரத்திலோ ஒரு அடித்தட்டு பெண் ஒரு நாளைக்கு நூறுமுறை அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறாள். இதற்காக ‘நானும் கலகக்காரி’ என்று அவள் தோள் தட்டிக் கொள்வதில்லை. ‘இதையெல்லாம் சாராம்சப்படுத்தித்தான், பெண் விடுதலை, பாலின சமத்துவம் என்பவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று குட்டி ரேவதி சொல்வதாக நான் புரிந்து கொள்கிறேன். பெண் விடுதலை என்ற குடையின் கீழ் ஒரு பார்ப்பனப் பெண்ணை ஒரு தலித் பெண் உரசிக் கொண்டு நிற்க முடியமா என்ற அவரது கேள்வி இன்னும் யாராலும் எதிர்கொள்ளப்படாமல்தான் இருக்கிறது.

பெண்ணடிமைத்தனம், சாதி அடக்குமுறைகளைத் தக்க வைப்பதில் நமது சமூக, குடும்ப அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?

நம் சமூக அமைப்பில் நாம் என்னவாக வளர்க்கப்படுகிறோம்? ‘இந்தியன் என்ற உணர்வோடு’ என்றால் அது மிகவும் செயற்கையானது. வேறு ஏதாவது நாட்டுக்குச் சென்றால் ஒருவேளை இந்தியன் என்ற உணர்வு நமக்கு வரலாம். அதுவும் தங்கியுள்ள அந்த நாட்டை சேர்ந்தவர் அல்ல என்பதால் இந்தியன் என்று சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது தேவையை ஒட்டி உருவானது.

ஆனால் பிறப்பிலிருந்தே குறிப்பிட்ட சாதியின் நம்பிக்கைகளுக்கும், வளமைக்கும் ஏற்றவாறு தான் வளர்க்கப்படுகிறோம். இதிலும் பெண் கூடுதல் கவனத்தோடு வளர்க்கப்படுகிறாள். ஒவ்வொரு கணமும் சாதியாக வளர்க்கப்பட்டு சாதியாகத் தான் வாழ்கிறோம். முதலில் நான் இந்தியன் பிறகு தமிழன் என்பதெல்லாம் மிகமிக அயோக்கியத்தனமான வார்த்தைகள்.

நான் சைவம், நான் அசைவம் என்று உணவில் வேறுபடுவதில் தொடங்கி உடை, உணர்வுகள் அனைத்தையும் சாதிதான் தீர்மானிக்கிறது. நல்ல குடும்பம் என்கிற நம் வரையறையே அப்படித்தானே இருக்கிறது. ‘அப்பா, அம்மாவிற்கு பிடித்த பையனாக, அல்லது அவர்கள் சொல்கிறவனை திருமணம் செய்துகொண்டு குனிந்த தலை நிமிராத பெண்கள் இருந்தால் அது நல்ல குடும்பம். ஆச்சாரம் கெடாத குடும்பம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.’ அதாவது பல்கலைக்கழகம் எப்படி ஒரு மோசமான தயாரிப்பை வெளியே அனுப்புகிறதோ அப்படித்தான் குடும்பமும் அனுப்புகிறது.

சாதியை வலுவாக, மிக நுட்பமாக பாதுகாக்கக்கூடிய இடம்தான் குடும்பம். என் பையன் அமெரிக்கா போனாலும் இங்க வந்து நான் பார்க்கிற பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவான் என்று உறுதியாக சொல்ல முடிவது சாதியால் தானே? உண்பது, வாழ்வது, உணர்வது தொடங்கி நான் இன்று உண்டதை நாளை ஒருவன் அள்ளுவான் என்பது வரைக்கும் சாதிதானே தீர்மானிக்கிறது? ‘இறந்தபிறகு எரிப்பதா, புதைப்பதா? எந்த சாதிக்காரன் குழிவெட்டுவது?’ என்பதையும் அதே சாதிதான் தீர்மானிக்கிறது.

‘நான் ஒடுக்குகிற சாதியில் பிறந்திருக்கிறேன், நான் பெண்ணை ஒடுக்குகிற ஆணாக இருக்கிறேன். இதுகுறித்து நான் குற்றவுணர்ச்சி கொள்கிறேன்’ என்பது மாதிரியான எந்த எழுத்தும் இதுவரை வரவில்லை. சுஜாதா ‘சிவாஜி’ திரைப்படத்தில், ‘அங்கவை, சங்கவை இருவரும் கறுப்பு’ என்று எழுதுகிறார். அவர் பார்த்த பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள். எனவே கறுப்பாக இருப்பவர்களை அவரால் எளிதாக அவமானப்படுத்த முடிகிறது.

இதைச் சொல்கிற அதிகாரத்தை சுஜாதாவிற்கு அவரது ஜாதிதானே தந்தது? எங்கள் ஜாதிப்பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள் என்று அவர் சொன்னால் அதுவும் ஜாதித்திமிர் தானே? அவர் பார்வையில் பெண்கள் வெறும் தோல் சம்பந்தப்பட்டவர்கள் என்றுதானே அர்த்தம்? இந்த பார்ப்பனக் கிழடின் வக்கிரத்தை, துவேஷத்தை எதிர்த்துப் பேச எந்த வெள்ளைத்தோலிகளும்/தோழிகளும் முன்வராமல் இருப்பதற்கும் சாதிதானே காரணமாயிருக்கிறது? அவர்களுக்கும் சாதியைவிட்டால் வேறு எதுவும் தெரியாது.

திப்புசுல்தான் மலபார் கவர்னருக்கு எழுதிய கடிதம் ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். “உங்கள் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் மேலாடை அணியாமல் இருக்கிறார்கள் என்று படித்தேன். அதற்குக் காரணம் வறுமையா, வேறு ஏதாவதா? வறுமை எனில் அதைக் களைய வேண்டியது உங்கள் பொறுப்பு. மத நம்பிக்கை தான் காரணம் எனில் அந்த நம்பிக்கையின் வேர் பாதிக்காமல் பக்குவமாக எடுத்துச் சொல்லி ஆடை அணிய வைக்க வேண்டும்.”

மேலாடை அணியும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது நாடார், பறையர் போன்ற தாழ்த்தப்பட்ட பெண்களுக்குத் தான். ஒருவேளை தங்கள் மதப்பெண்களைப் போல இவர்களும் குப்பாயம் அணிய வேண்டும் என்றுகூட திப்புசுல்தான் விரும்பியிருக்கலாம். அது எல்லாமே இரண்டாம்பட்சம். ஆனால் இங்குள்ளவர்கள் வேறு ஒருவன் சுட்டிக்காட்டியும் திருந்தாதவர்களாய்த் தானே இருந்திருக்கிறார்கள் என்பதே முக்கியம்.

நூறு வருடங்களுக்கு முன்பு நாடார் பெண்ணுக்கு மேலாடை அணியும் உரிமை தேவைப்பட்டது. இன்றைக்கு அவளுக்கு வேறு உரிமைகள் தேவைப்படுகின்றன. கேரளாவில் ஈ.கே.நாயனார் முதல்வராயிருந்தபோது, நிதியை கிராமங்களுக்கு ஒதுக்கி அந்தந்த கிராம மக்களே தங்கள் தேவைகளை முடிவுசெய்து நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. மாநில அளவிலான இந்த திட்டத்துக்கு வழிகாட்டியவர் தோழர் இ.எம்.எஸ். ஒரு கிராமத்தில் ஆண்கள் அனைவரும் கூடிப்பேசி தெருவிளக்குகள் அமைத்தார்கள். அன்றிரவே அந்தக் கிராமத்து பெண்கள் அந்த விளக்குகளை உடைத்தெறிந்தார்கள்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரவில் வெளிச்சம் அதிகம் இருந்தால் பெண்களால் தங்களின் இயற்கைத் தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியாதென்பதால்தான் தெருவிளக்குகளை உடைத்துவிட்டதாக தெரிவித்தார்கள். இதைத் தெரிந்து கொண்ட இ.எம்.எஸ். அந்தக் கிராம சபைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘உங்கள் கிராமத்தில் முதலில் கட்டப்பட வேண்டியது கழிப்பிடம்தான். சபையில் ஆண்கள் மட்டுமே எல்லா முடிவுகளையும் எடுப்பதால் நம்மால் பெண்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் ஆண்களின் சபையாக சமூகத்தை வைத்திருக்கிறோம். எனவே அடுத்தக் கூட்டத்தில் இருந்து பெண்களையும் கலந்து பேசுங்கள். அவளால் தான் அவளது தேவைகளைப் பேச முடியும்’ என்று எழுதினார்.

குடும்பத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் கணவன் தான் முடிவெடுக்கிறான். பெண்ணுக்குப் பங்கில்லாத அந்த முடிவை குடும்பத்தின் முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தப் பெண்களின் நிலையைப்போல் தான் தலித்துகளின் நிலையும். இந்தியச் சமூகத்தில் இதுவரை முடிவெடுக்கும் இடத்தில் தலித்துகள் இருந்ததில்லை. அதிகாரத்திலும் அவர்கள் இல்லை. அப்படியானால் ஆதிக்க சக்திகள் எடுக்கும் முடிவுகள் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதாகத் தானே இருக்கும்? நம் சமூகம் சாதியால் மட்டுமே பின்னப்பட்டிருக்கிறது என்பதைத் தான் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

தோள்சீலைப் போராட்டம் பற்றிப் பேசுவதால் இந்தக் கேள்வி. அந்த மாதிரி ஒடுக்கப்பட்ட ஒரு பெண்ணை சிறுமைப்படுத்தி சுந்தரராமசாமி எழுதிய ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சிறுகதை பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்த சிறுகதைக்கு எதிராக நீங்கள் கடுமையான எதிர்வினை ஆற்றினீர்கள். ஆனால் இப்போதும் அந்த சிறுகதையை நியாயப்படுத்தும் வேலைகளை அவர்கள் செய்து வருகிறார்களே?

அவர்கள் மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பது ஒரு மூடநம்பிக்கைதான். அவர்களைத் தொடர்ந்து எதிர்ப்பதற்கு நமக்கு நேரமில்லாததாலும், வேறு வேலைகள் இருப்பதாலும் நாம் போய்விட்டோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்தக் கதையை நியாயப்படுத்தும் வேலையை செய்துகொண்டே இருக்கிறார்கள். கதையை ஆதரித்து வந்த கடிதங்கள், கட்டுரைகளைத் தொகுத்து சமீபத்தில் ஒரு புத்தகமாகப் போட்டிருக்கிறார்களாம். ஏ.பி.வள்ளிநாயகம் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்து கொடிக்கால் ஷேக் அப்துல்லா காலச்சுவடு பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், ‘பிள்ளை கெடுத்தாள் விளை மிகச்சரியான கதை’ என்று வள்ளிநாயகத்திற்கு ஒரு கருத்து இருந்ததாக ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார்.

செத்துப்போன ஒருவரின் படைப்பை செத்துப்போன ஒருத்தர் ஆதரித்ததாக உயிருடன் இருக்கிற ஒருவரை வைத்து எழுத வைத்துள்ளார்கள். ‘சுந்தரராமசாமி மிக நல்லவர், எந்த ஒரு காலத்திலும் சொற்குற்றமோ, பொருட்குற்றமோ செய்யாதவர்’ என்று நிறுவ வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கிறது. ‘சுந்தரராமசாமியின் எழுத்துக்கள் தேவ வார்த்தைகள். அதை குறை காணும் தகுதி மனிதப்பிறவிகளுக்கு கிடையாது. நம் புலன்களுக்கு அது எட்டாது. இது உடன் இருந்தவர்களுக்குத் தெரியும், அவரை உற்றுப் பார்த்தவர்களுக்குப் புரியும். ஆதவன் போன்றவர்களுக்கு அது தெரியாது’ என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அந்த முயற்சிகளின் மூலம் தான் அவர் தவறு செய்தார் என்பதை நாம் மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

படித்தவர்களிடம் சாதிய உணர்வு இருக்கிறதா, அதை அவர்கள் எப்படி வெளிப்படுத்துகிறார்கள்?

இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் ‘இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா’ என்றும், பெண்விடுதலை குறித்து பேச்சு வரும்போது, இப்பல்லாம் எந்தப் பொம்பிளை கஷ்டப்படறா ஆம்பிளைங்க தான் கஷ்டப்படறாங்க என்றும் சொல்லும் ஒரு மேம்போக்கான போக்கு தென்படுகிறது. வெகுஜனப் பத்திரிகைகள் இந்தக் கேவலத்தை தொடர்ந்து செய்துவருகின்றன.

‘நானெல்லாம் ரொம்ப சோஷியல் சார், சாதியெல்லாம் பார்க்கிறதில்லை’ என்று சொல்பவர்களுக்கும் சாதியைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை. பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் அவனால் எந்த இடத்திலும் சாதியை கைவிடமுடியவில்லை. பொது இடங்களில் அதை வெளிப்படையாக கொண்டாட முடியவில்லை அவ்வளவுதான். ‘நான் உயர்ந்தவன். நீ என் அருகில் உட்காரவோ, என் எதிரே நிற்கவோ கூடாது’ என்று பேச வைத்தது தான் தீண்டாமை. அந்தத் தீண்டாமையை வெளிப்படையாக கடைப்பிடிக்க முடியவில்லையே தவிர சாதியை எந்த இடத்திலும் யாரும் கைவிடவில்லை.

‘சாதி என்பது ஒருவன் திருமணம் செய்து கொள்வதற்கான எல்லை’ என்று முத்துமோகன் குறிப்பிடுவார். தன் அல்லது தன் குடும்பத்தாரின் திருமணத்தை இந்த சாதிய எல்லையைக் கடந்து செய்யாதவரைக்கும் அவன் சாதியைக் கடந்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. சொந்த சாதிக்குள்ளேயே மறுபடியும் மறுபடியும் திருமணம் செய்து கொள்வதால் சொந்த சாதியைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். அதில் ஒரு செங்கல் கூட விழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

சாதியைக் கைவிடாமலேயே நாள் முழுவதும் வெளியே சமதர்மவாதியாக உலவுவதற்கான எல்லா வாய்ப்புகளும் நமக்கு இப்போது இருக்கிறது. பள்ளியில் எல்லா சாதி மாணவர்களும் அருகருகே அமர்ந்திருப்பதாலேயே சாதியை இழந்துவிட்டதாக சொல்ல முடியாது. ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பதாலோ, ஒரே மேசையில் சாப்பிடுவதாலோ ஒருவர் சாதியைக் கைவிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. தீண்டாமையை வெளிப்படையாக கடைப்பிடிக்கப்பட முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு தான் இதுவும் நடக்கிறது.

சொந்த சாதி ஆளாகவே வீட்டிலிருந்து கிளம்பி, சொந்த சாதி ஆளாகவே வேலைசெய்து, சொந்த சாதி ஆளாகவே கொண்டு சென்ற உணவை உண்டு, கையில் இருக்கும் பாட்டிலில் தண்ணீர் குடித்து சொந்த சாதி ஆளாகவே மாலையில் வீடு திரும்பி விடலாம். கண்டம் விட்டு கண்டம் சென்றவன் மட்டுமல்ல, கோள் விட்டு கோள் செல்பவனும் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, அதே சாதியைச் சேர்ந்த, படித்த, அழகான, சிவந்த நிறமும், நீண்ட கூந்தலும் உடைய பெண்ணைத் தானே திருமணம் செய்து கொள்கிறான்?

தீண்டாமையைப் பழைய வடிவங்களில் பார்க்க முடியவில்லையே தவிர அதை முழுமையாக அவன் கைவிட்டுவிடவில்லை. ‘உயிரே போனாலும் நான் கடையில் சாப்பிடுவதில்லை’ என்பார்கள் சிலர். ‘கடையில் சாப்பிடுவேன் ஆனா நான்-வெஜ் சாப்பிடுறதில்லை’ என்பார்கள் சிலர். இதெல்லாம் என்ன? ஆட்டுகறி கேட்டால் மாட்டுக்கறியைக் கொடுத்து தன்னுடைய சாதிப் புனிதத்தை கெடுத்து விடுவார்கள் என்ற பயம்தானே? இப்படி மிக நுட்பமாக பல உத்திகளை வகுத்து தன்னுடைய சாதிப்புனிதத்தை காப்பாற்றும் பணி தொடரத்தான் செய்கிறது.

வெண்டைக்காயில் எத்தனை விதையிருக்கிறது என்றோ, எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக் கால் என்றோ ஆய்வு செய்து ஆய்வாளர் பட்டம் பெறுகிற படிப்பாளிகளும் அறிவாளிகளும் இன்றும் அம்பேத்கர் குறித்து ஆய்வு செய்ய முன்வருவதில்லை. அவர் ஒரு பொருளாதார ஆய்வறிஞர். அவரது முதல் ஆய்வே பொருளாதாரம் பற்றியதுதான். பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்துவதற்காக சமஸ்கிருதத்தைப் பயின்று பல மூலநுல்களை வாசித்தவர். இந்தியாவிலிருக்கும் எல்லா மதங்களின் கோட்பாடுகளையும் நுணுகிக் கற்றவர். பௌத்தத்தில் கரை கண்டவர். பத்திரிகையாளர். மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி.

அவரது கட்டுரைகளில் ஒரு பத்தியில் குறிப்பிடும் மேற்கோள்களையும் அடிக்குறிப்புகளையும் புரிந்துகொள்ள நீங்கள் இன்னும் பத்து நூல்களைப் படிக்க வேண்யிருக்கும். ஆனாலும் அவரது பன்முகப்படட ஆளுமையையும் மேதமையையும் அறிவுலகத்திற்கு வழங்கிய கொடைகளையும் தொட்டுப்பார்க்கவும் அருவருப்பு கொண்டுள்ளனர். அவரது ஆய்வுமுறைமைகளைத் தொடர்ந்து சென்று ஒரு புதிய சிந்தனைப்பள்ளியை வளர்த்தெடுக்காமல் போனதற்குக் காரணம் இந்திய படிப்பாளிகளும் ஆய்வாளர்களும் கடைபிடிக்கிற தீண்டாமை தானே? இதேகதி தான் புலேவுக்கும் அயோத்திதாசருக்கும் நேர்ந்திருக்கிறது. அவர்களை முன்வைத்து நடந்த ஆய்வுகளெல்லாம் தலித்கள் மேற்கொண்டதுதானேயன்றி தலித்தல்லாதவர்களால் அல்ல.

நீங்கள் தொடர்ந்து பெரியாரை முன்னிறுத்தி எழுதுகிறீர்கள். சாதி ஒழிப்பில் அவரின் பங்களிப்பு மிக முக்கியம் என்பது தான் காரணமா அல்லது அவர் கொண்டாடப்பட வேண்டிய மிக முக்கியமான ஆளுமை என்று நீங்கள் கருதுகிறீர்களா?

இட ஒதுக்கீடு, நாத்திகம் போன்றவற்றுக்காக பெரியாரைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள், அவரை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். பெரியார் கடவுளை மறுத்ததால் மட்டும் தான் ஆதிக்க சாதிக்காரர்கள் அவரை விமர்சிக்கிறார்களா என்றால் இல்லை. அவர்களிலும் கடவுள் மறுப்பாளர்கள் இருக்கிறார்கள். ‘இந்திய சமூகம் சமத்துவமின்மையின் மீது கட்டப்பட்டிருக்கிறது’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். அதே அலைவரிசையில் தான் பெரியாரும் செயல்பட்டார். அதுதான் ஆதிக்க சாதியினரின் விமர்சனத்திற்குக் காரணம்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள், இயக்கங்கள் எல்லாமே ஒடுக்கப்பட்டவர்களிடம் மட்டும்தான் பேசின. ஆனால் ஒடுக்குகிறவர்களிடமே தாக்குதல் நடத்தியவர் பெரியார் ஒருவர்தான். கஷ்டப்படுபவனை பார்த்து நீ கஷ்டப்படுகிறாய் என்பதும், அதை அவன் ஏற்றுக்கொள்வதும் மிக இயல்பானது. ஆனால் ஒடுக்குகிறவனைப் பார்த்து, ‘நீ அவனை ஒடுக்குகிறாய்’ என்று சொல்லும் தைரியம் பெரியாருக்கு மட்டும்தான் இருந்தது.

ஒடுக்குமுறைகளின் அடிப்படைகளைக் கண்டறிந்து அதை நீக்குவது தான் மார்க்சிய தத்துவம். இந்தியாவில் ஒடுக்குமுறையின் அடிப்படையாக சாதியம் இருக்கிறது. அந்த அடிப்படைகளின் மீது கைவைக்கிற நிகழ்வாக பெரியாரின் பேச்சும் செயல்பாடும் இருந்தது. சாதி ஒழிப்பு என்பதிலும், வருணாசிரம எதிர்ப்பு என்பதிலும் பெரியார் அம்பேத்கரோடு ஒன்றுபட்டார். இந்த விஷயங்கள் தான் அவர்களுக்குள் தொடர்பு ஏற்படக் காரணமாக இருந்தது.

பெரியாரை ஆதரிப்பதற்கும், அவரை முன்னோடியாக நிறுத்துவதற்கும் பல்வேறு காரணங்களை சொல்லலாம். அதில் சிலவற்றையாவது வாசிப்பின் வழியாகத் தெரிந்து கொண்டதால் அவரை முழுவதுமாக ஆதரித்துப் பேசுகிறேன். அதனால் அவரை நான் என் முன்னோடியாகவும் கருதுகிறேன். பெரியார் மீது சில இடங்களில் இடதுசாரிகளுக்கு விமர்சனம் உண்டு. அதற்காக அவர்கள் பெரியாரை எந்த இடத்திலும் நிராகரிக்கவேயில்லை.

வகுப்புவாதப் பிரச்சனைகள் தலைதூக்கும்போது நாம் போராட்டங்களை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கட்டம் வரைக்கும் பெரியார் நடத்தியிருக்கிறார். அதன் தொடர்ச்சியைத்தான் நாம் மேற்கொண்டாக வேண்டும். கேரளாவில் நாராயணகுருவை உள்வாங்கிக் கொண்டு இடதுசாரிகள் செயல்படுவதுபோல் தமிழ்நாட்டிலும் பெரியாரை உள்வாங்கிக் கொண்டு செயல்படலாம்.

பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றும், பெரியார் ஒரு பிள்ளையார் சிலையை உடைக்கப்போய் தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள் வந்துவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்களே, உண்மையா?

பிள்ளையார் சிலையை பெரியார் உடைத்ததை அந்தக் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, சிலையை பெரியார் உடைத்ததற்கான சமூகக் காரணத்தைத்தான் விளக்கவேண்டுமே தவிர பெரியாரை அல்ல. மூடநம்பிக்கை கரைபுரண்டோடி, மொத்த சமூகத்தையும் அடித்துப் புரட்டுகிறபோது, அதைத் தடுத்த நிறுத்த, கைக்கு கிடைத்ததையெல்லாம் பயன்படுத்துகிற பதற்றம் பெரியாருக்கிருந்தது.

மக்களிடம் மூடநம்பிக்கை எந்த மட்டத்தில் இருக்கிறதோ அந்த மட்டத்தில் போய் பெரியார் அதை மறுத்துக் காட்டினார். ‘கடவுளுக்கு எல்லாவற்றையும் காப்பாற்றும் சக்தி இருக்கிறதென்றால், நான் கடவுளை உடைக்கிறேன், முடிந்தால் அவர் அவரையாவது காப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று சொல்லும் விதமாகத் தான் பிள்ளையார் சிலையை உடைத்தார். ‘என்னை கடவுள் படைத்தார், அவர் தான் என் தலையெழுத்தை எழுதி என்னைக் காப்பாற்றுகிறார்’ என்ற மக்களின் நம்பிக்கையை உடைப்பதற்காகத் தான் அவர் அதைச் செய்தார்.

எந்த ஒரு தத்துவமும் மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் கடவுள் என்கிற தத்துவம் மட்டும் மக்களை பயமுறுத்தி மூடனாக மாற்றுகிறது. எனவே அதிலிருந்து மக்களை மீட்பதற்கு தன்னாலான வழிகளை அவர் செய்தார். அதை வறட்டு நாத்திகவாதம் என்று ஒதுக்கிவிட முடியாது. தெருவுக்குத்தெரு பிள்ளையார் வைத்தவர்கள் யார்? ஏற்கனவே பிள்ளையாரை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள்தானே? பெரியார் செயல்பாட்டில் கடுப்பாகிப் போய் எந்த நாத்திகனும் ஆத்திகனாகிவிடவில்லையே? பெரியாரே சொல்வதுபோல், வேறெவரும் இந்தக் காரியங்களை செய்வதற்கு முன்வராததால்தானே அவர் செய்ய வேண்டியதாயிருந்தது?

பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றே வைத்துக்கொள்வோம். அதை நிராகரித்துவிட்டு விஞ்ஞானப்பூர்வமான நாத்திகத்தை மக்களிடம் பரப்புவதை யார் தடுத்தார்கள்? ஒவ்வொரு அரசாங்க அலுவலகமும் இந்துமதத்தினருக்கு மட்டுமேயானது மாதிரி பூசை, புனஸ்காரங்கள் அங்கே நடக்கிறது. இந்துக்கடவுள்களின் விக்கிரகங்களும் சிலைகளும் இல்லாத அலுவலகமே கிடையாது. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நடக்கிறது. அங்கிருக்கிற தொழிற்சங்கங்கள் உணர்வுமட்டம் தாழ்ந்துபோய் இதிலெல்லாம் பங்கெடுப்பதாய் மாறிவரும் கொடுமை நடக்கிறது. மத உணர்வுகள் பாதிக்கப்படும்னு சொல்லி எந்த இடத்திலும் நாம் நாத்திகம் பேசுவதில்லை, பகுத்தறிவு பற்றியும் பேசுவதில்லை, விஞ்ஞானக் கண்ணோட்டத்தை வலியுறுத்துவதில்லை. இப்போது யோசித்துப் பாருங்கள், பெரியார் செய்தளவுக்கு நாம் ஏதாவது செய்திருக்கிறோமா என்று?

சமூக நீதிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளை நீங்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். நீதித்துறையின் இந்தப் போக்கிற்கு என்ன காரணம்?

நம்முடைய நீதித்துறை என்பது மக்களுக்கு நீதி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. ஆங்கிலேயர்கள் இங்கு வியாபாரம் செய்யும்போது அதை எதிர்ப்பவர்களை அடக்குவதற்காகத்தான் இந்திய நீதித்துறை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு நீதிமன்றங்கள் வேறுமாதிரியாக செயல்பட ஆரம்பித்தன. மக்கள் இந்த ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இழக்கும்போது நீதிமன்றம் திடீரென்று சுறுசுறுப்படைந்து மக்களுக்காக பேசுவதுபோல் செயல்படும். மக்கள் செயலற்றுப் போய் அரசு அவர்களை அடக்கும்போது நீதிமன்றம் அரசோடு தன்னை இணைத்துக் கொள்ளும்.

அரசு சார்பில் வேலைக்கு ஆட்களை எடுப்பதில்லை. கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை கொடுக்கப்படுவது இல்லை. அரசு வேலைக்கு சமூக பாதுகாப்பு இல்லை. ஆனால் அதற்கு ஆதரவாக நீதிமன்றம் செயல்படுகிறது. அரசு ஊழியர்கள் இறந்துபோனால் அவர்களது வாரிசுக்கு வேலை தரவேண்டியதில்லை என்று ஒரு வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. பலமுறை எச்சரித்தும் மனைவியின் நடத்தையில் மாற்றமில்லை என்பதற்காக அவளைக் கொன்றுவிட்ட கணவனை நிரபராதி என்று தீர்ப்பளிக்கிறது ஒரு நீதிமன்றம்.

நீதிமன்றங்கள் குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கவில்லை. தனிநபரைச் சார்ந்து தான் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. நீதி வழங்கும் இடத்தில் இருப்பவர் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராகவோ, ஆணாகவோ பெண்ணாகவோ, ஒரு மதத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கிறார். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் ஏதோ ஒரு பிரிவில் வருகிறார். உலக விஷயங்களில் அவருக்குத் தனித்த கருத்து இருக்கிறது. அந்த கருத்துக்களுக்கு ஆதரவாக சட்டப்புத்தகத்தில் இருப்பவற்றை சொல்வதற்குத்தான் அவர் முயற்சி செய்கிறார்.

நம்முடைய சமத்துவமற்ற சமூகத்தை கட்டிக்காப்பாற்றும் வேலையைத் தான் எல்லா அரசு அலுவலகங்களும் செய்து வருகின்றன. அதே வேலையைத்தான் சட்டப்புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு நீதிபதிகளும் செய்கிறார்கள். வளமான நிலங்களை ஆக்கிரமித்து பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுவது பற்றியோ, விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சனைகள் பற்றியோ அவர்கள் வாயே திறப்பதில்லை. எய்ட்ஸ் சாவுகள் பற்றியும் ஹெல்மட் பற்றியும் குதிக்கிறவர்கள் தினமும் பட்டினியால் சாகிறவர்களைப் பற்றியோ சாதி வெறியர்களால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டு இறக்கிற தலித் பெண்களைப் பற்றியோ சுண்டுவிரலைக்கூட அசைப்பதில்லை.

நெய்வேலி லிக்னைட் நிறுவனம் ஆரம்பித்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னமும் நஷ்ட ஈடு கிடைக்கவில்லை. பத்திரிகைச் செய்தியைப் பார்த்து அதையே ஆதாரமாகக் கொண்டு பல வழக்குகளை தானே முன்வந்து நடத்துகிற நீதிமன்றங்கள் இம்மாதிரியான பிரச்னைகளில் வழக்கு தொடுத்தாலும் தீர்ப்புகளை வேறுமாதிரியாகத் தருகின்றன. உலகமயமாக்கல் நடவடிக்கை முழுவதையும் கொள்கைப் பிரச்னை என்று சொல்லி தலையிட மறுக்கிறது நீதித்துறை. ஆனால் இடஒதுக்கீடு, ஆதம் பாலம் மாதிரியான விவகாரங்கள் வந்துவிட்டால் தேவையில்லாமல் நீளநீளமாக பேசத் தொடங்குகிறது.

இதற்கெல்லாம் நீதிமன்றத்தின் ஒற்றைச்சாதி அமைப்பு முறை தான் காரணம். அந்த ஒற்றைச்சாதி அமைப்பும் அவர்களின் வளர்ப்பு முறையும் அதன் வழியாக அவர்கள் உலகைப் பார்ப்பதற்கு கிடைக்கும் கண்ணோட்டமும் தான் இதற்கெல்லாம் காரணம். இது நம் சமூகத்தின் சமத்துவமற்ற நிலையைப் பாதுகாக்கத் தான் பயன்படுகிறது. சட்டத்துக்கு எல்லோரும் கட்டுப்பட்டவர்கள் என்று சொல்கிறோம். அந்த சட்டம் நீதிபதிக்கு கட்டுப்பட்டது. நீதிபதி அவரது சாதிக்கும், வளர்ப்பு முறைக்கும் கட்டுப்பட்டவராயிருக்கிறார்.

சாதியொழிப்பு, உலகமயமாக்க எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைக்களுக்கான போராட்ட வடிவங்களில் காணப்படும் போதாமையை நீங்கள் உங்கள் படைப்புகளில் சுட்டிக்காட்டி வருகிறீர்கள். போராட்ட வடிவங்களில் என்ன மாறுதல்களை எதிர்பார்க்கிறீர்கள்?

மறியல், தர்ணா, உண்ணாவிரதம் போன்ற எல்லாப் போராட்டங்களுமே அடிமைப்பட்டிருந்த நாட்டில் சுதந்திரத்தை மீட்டெடுக்க கண்டறியப்பட்ட வழிகள். சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகளாகியும் அந்த போராட்ட வடிவங்களை நாம் இன்னமும் மாற்றிகொள்ளவில்லை. புதிய சூழலை உள்வாங்கிக் கொண்டு ஏட்டளவில் இருக்கக்கூடிய சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு புதிய போராட்டங்களை நடத்தவேண்டும். நம்மிடையே போர்க்குணம் இல்லாததால்தான் போராட்ட வடிவங்கள் மழுங்கியிருப்பதாகக் கூட கொள்ளலாம்.

சுதந்திரத்திற்கு முன்பு நான்குபேர் ஒரு இடத்தில் நோக்கமின்றி கூடுவதும்கூட தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தடையை எதிர்த்து பொதுமக்கள் ஒரு இடத்தில் கூடுவது புரட்சி என்று கருதப்பட்டது. இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் அனைத்திற்கும் காவல்துறை அனுமதி அளிக்கிறது. அவர்களின் அனுமதியோடு நடத்தப்படுவது எந்தவகை போராட்டம்?

அன்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சேவை செய்யும் அரசு அலுவலகத்தை மறியல் செய்தோம். இன்று நம் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு அலுவலகத்தை மறிக்கிறோம். மறியல் தொடங்கியவுடனேயே காவல்துறை மறியல் செய்பவர்களைக் கைது செய்து பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கிறது. மறியல் என்பது காவல்துறைக்கும் மறியல் நடத்துபவர்களுக்குமான பிரச்சனையாக மாறிவிடுகிறது.

அன்றைக்கு உண்ணாவிரதம் என்று தன்னைத்தானே வருத்திக்கொண்ட போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டபோது பிரிட்டிஷ்காரர்களே பயந்தார்கள். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. ஒரு லட்சம் விவசாயிகள் பட்டினியால் தற்கொலை செய்து கொண்டதாக ‘சாய்நாத் அறிக்கை’ சொல்கிறது. ஒரு லட்சம் விவசாயிகளின் மரணத்தைப் பார்த்தும் மனமிரங்காத அரசும், அதிகாரிகளுமா, ஒருவேளை பட்டினிப் போராட்டத்தைப் பார்த்து மனமிரங்கப் போகிறார்கள்? அந்தளவிற்கு நேர்மையானவர்களையும் இரக்கவான்களையுமா நாம் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறோம்? இன்றைக்கு இருக்கிற ஆட்சியாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிற போராட்ட வடிவங்களை நாம் கண்டெடுக்க வேண்டும்.

மேலும் நம் போராட்டங்கள் முழுவதும் ஆண்களை முன்னிறுத்தியே இருக்கின்றது. பெண்களைப் பற்றி யோசிக்காமலேயே எல்லா முடிவுகளையும் எடுத்து வருகிறோம். காந்தி ஏற்றுக்கொண்ட அரை நிர்வாண முடிவை ஏன் கஸ்தூரிபாயால் எடுக்க முடியவில்லை? காந்திக்குள் இருக்கிற ஆண்தான் அந்த முடிவை நோக்கி அவரை நகர்த்தியிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். இயக்கங்களில் இருக்கிற பெண்களை கலந்தாலோசிக்க வேண்டும்.

பொது வேலை நிறுத்தம் என்று சொல்கிறோம். ஆனால் இதில் விவசாயிகள் எப்படி இதில் கலந்து கொள்ள முடியும்? அந்தந்த வேலைகளுக்கு ஏற்ப போராட்ட வடிவங்களும் நம்மிடம் இல்லை. எல்லாவற்றையும் மாற்ற வேண்டிய நேரமிது. சில நூதன வடிவங்கள் உடனடி கவனத்தைப் பெறுகின்றன. ஆனால் அதன் செயல்பாட்டெல்லை குறுகியது. தேசிய பிரச்னைகளில் குறுக்கிடக்கூடிய வெகுமக்களை ஈர்த்துக்கொள்ளக்கூடிய வடிவங்களை கண்டடைய வேண்டும்.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக ரகளை பண்ணுகிறவனும் சமத்துவம்கிறான். நேற்று கட்சி ஆரம்பித்த சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று பெயர் வைத்திருக்கிறார். வரவேற்கனும். ஆனால் சமத்துவம் என்றால் யாருக்கும் யாருக்கும் சமத்துவம்? அந்த சமத்துவத்தைக் கொண்டு வர உங்களிடம் என்ன செயல்திட்டம் இருக்கிறது? இல்லையென்றால் எதுக்கு இந்த வார்த்தை ஜாலம் என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

போராட்ட முடிவுகளைக் கூட ஆண்களே எடுப்பதாகப் பேசினீர்கள். சமூகம் சார்ந்த விஷயங்களில் பெண்களின் பங்கு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

அவர்கள் படிப்பு, வேலை என்று வெளியில் வரத் தொடங்கிவிட்டார்கள். சமூக நிகழ்வுகளில் அவர்கள் அதிகம் பங்கு பெறுவது இன்னும் நடைபெறவில்லை. 123 ஒப்பந்தம் மாதிரியான பிரச்சினை தொடர்பான கருத்தரங்குகளில் ஆண்கள் அதிகம் கலந்து கொள்கிறார்கள். அந்த ஆண் வீட்டுக்குப் போகும்போது இந்த ஒப்பந்தம் குறித்து என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே தெரியும் என்ற அகங்காரத்தில் செல்கிறான். அதனால் அவன் தன் மனைவியை இரண்டாம் பட்சமாகக் கருதுகிறான்.

ஆண்களின் தகவல் அறிவை நாம் அதிகரிப்பது அவனுடைய அதிகாரத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்து விடுகிறது. ஆண்களின் சபையாக சமூகத்தை மாற்றிக் கொண்டிருப்பதை அனுமதிக்கக் கூடாது. தலித்துகளுக்கு என்று கட்சி உருவாக்கப்பட்டு எங்களது ஓட்டுகளை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்ற நிலை வந்தபோது, மற்ற கட்சியினர் தலித் பிரச்சினைகளைப் பேச முன்வந்தார்கள். அதுபோல பெண்களுக்கென்று தனிக்கட்சி வரும்போது பிற கட்சிகளும் பெண்களின் பிரச்சனைகள் குறித்து பேச முன்வருவார்கள்.

ஒரு நாவலுக்கான விஷயத்தை ஒரு கவிதையாக எழுதுகிறீர்கள். மற்றவர்கள் கட்டுரையாக எழுதிக் கொண்டிருக்கும் உலகமயமாக்கல், சதாம் கொலை போன்ற சமகாலப் பிரச்சினைகளை, செய்திகளை நீங்கள் சிறுகதையாக எழுதுகிறீர்கள். ஒன்றை எழுத ஆரம்பிக்கும்போது, இது கதைக்கானது, இது கவிதைக்கானது என்பதை எப்படி தீர்மானிக்கிறீர்கள்?

இப்படித்தான் எழுதவேண்டும் என்று எதையும் திட்டமிட்டு எழுதுவதில்லை. நாம் பார்க்கிற, நமக்குள் தோன்றுகிற விஷயங்கள் ஒரு கட்டத்தில் எழுத்தாக வெளிவருகிறது. அது எந்த வடிவத்தில் வரவேண்டும் என்பதை அதுதான் தீர்மானிப்பதாக நான் நினைக்கிறேன். நான் எந்த மாதிரியான எழுத்தாளன், என்னுடைய பாடுபொருள் என்ன, கதைமாந்தர்கள் யார் என்று ஏற்கனவே ஒரு தீர்மானம் இருக்கிறது. அந்த நோக்கத்திற்கு இசைவாகத்தான் நமது மனம் இயங்கிக் கொண்டிருக்கும். முடிவற்ற அந்த இயக்கத்தின் ஒரு கட்டமாகத்தான் எழுதத் தொடங்குகிறோம்.

சமகால பிரச்சனைகளை கதைக்குள் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டீர்கள். சங்க இலக்கியத்தை வைத்துக்கொண்டு அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறைகள், இயற்கை, அரசு அமைப்பு, ஆண் பெண் உறவு என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். அவற்றைப் படிக்கும்போது, ‘இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 2007ம் வருடத்தை பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவார்களே, இதை நாம் பதிவு செய்திருக்கிறோமா’ என்ற கேள்வி எனக்குள் வருகிறது.

வாழும் காலத்தை என்னவாக எதிர்கொண்டோம் என்ற கேள்வி மிக முக்கியமானது. சதாம் உசேன் கொல்லப்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான பதிலை நான் நம் சந்ததியினருக்கு சொல்லிச் செல்ல வேண்டியிருக்கிறது. சதாம் உசேன் கொலை குறித்து இங்கு என்ன பதிவு இருக்கிறது? அஞ்சலிக் கவிதை, ‘வருந்துகிறோம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை போன்றவற்றை எழுதுவதில் எனக்கிருந்த அலுப்புதான் என்னை சதாம் உசேன் குறித்து சிறுகதை எழுதத் தூண்டியது.

அதேபோல் தான் உலகமயமாக்கலும். உலகமயமாக்கல் ஏதோ நேற்று தோன்றிய ஒரு விஷயமல்ல. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பதே உலகமயமாக்கல்தானே. தமிழ்நாட்டில் ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்படுவது முந்தைய உலகமயமாக்கலின் அடையாளம் தானே. உலகம் தனக்குள் பரிவர்த்தனைகளை நிகழ்த்திக் கொண்டு ஒரு சமூகமாய் இணங்கி வாழ கடந்த காலத்தில் செய்த இப்படியான முயற்சிகளுக்கு மாறானது இப்போது நாம் பேசுகிற உலகமயம்.

நான் வாழும் காலத்தில் இந்த உலகமயமாக்கலின் ஒரு புதிய வடிவத்தைப் பார்க்கிறேன். இரண்டாவது பத்தாண்டு சீர்த்திருத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அது சீர்திருத்தமா, சீரழிவா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அது சீர்திருத்தம் கிடையாது என்று எனக்குத் தெரிகிறது. மூன்றாம் உலகநாடுகளின் வளங்களை கொள்ளையடிக்க அந்தந்த நாட்டு அரசாங்கங்களையே உறிஞ்சுகுழல்களாகப் பயன்படுத்தும் இந்த ஏற்பாடு வெறும் அணா பைசா விசயம் அல்ல என்பது புரிகிறது. ஆனால் இந்தக் கொடுமையை தனிநபராக எதிர்க்கும் வல்லமை எனக்குக் கிடையாது. எனவே எனக்குத் தெரிந்த எழுத்தின் வழியாக என்னுடைய எதிர்ப்பை நான் பதிவு செய்யகிறேன்.

எழுத்தைத்தவிர இடதுசாரி இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள், மேடைப்பேச்சு என்று பல தளங்களில் இயங்கி வருகிறீர்கள். சாதியத்துக்கு எதிரான உங்களது செயல்பாட்டுக்கு எழுத்து மட்டுமே போதாது என்று கருதுகிறீர்களா?

தனது துயரங்களைப் புரிந்துகொள்கிற ஒரு சமூகச்சூழலை உருவாக்குவதும் ஒடுக்கப்பட்டவர் சார்பாக எழுதுகிறவர்களின் வேலையாகிறது. எனவே எழுதிக் கிழித்ததோடு என் வேலை முடிந்துவிட்டது என்று நான் தூங்கப் போய்விட முடியாது. என் எழுத்துக்களோடு மக்கள் சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளோடு ஊடாட்டம் கொள்ள வேண்டியிருக்கிறது. எழுத்து எப்படி தனிநபர் செயல்பாடோ அதைப்போன்றது தான் பேச்சும். பேச்சு என்பது அர்த்தமுள்ளதாய் இருக்க வேண்டியிருக்கிறது. எனவே சொற்பொழிவாக அல்லாமல் உரையாடலாகத் தான் அமைத்துக்கொள்கிறேன். சமூகத்தை மொன்னையாகப் பார்ப்பதிலிருந்து விலகுகிற, அதன்மீது கேள்விகளை எழுப்புகிற, பிரச்சனைகளை எப்படி அணுக வேண்டும் என்ற விமர்சனப்பார்வையை உருவாக்குவது தான் இந்த உரையாடலின் நோக்கம்.

ஆரம்பத்தில் கவியரங்க மேடைகளில் கவிதை வாசித்திருக்கிறீர்கள். கவியரங்கக் கவிதைகள் மிகவும் எளிமையானவை. தற்போதைய உங்களது கவிதைகள் சற்று சிக்கலான மொழிநடையில் அமைந்திருக்கின்றன. அடுத்தகட்டமாக இசைப்பாடல்களும் எழுதுகிறீர்கள். அவை மிக எளிய நடையில் இருக்கின்றன. மூன்றையும் எப்படி பார்க்கிறீர்கள்?

கவியரங்கத்தில் வாசிப்பது தான் கவிதை என்ற காலகட்டத்தில் நானும் கவியரங்கக் கவிதைகள் வாசித்திருக்கிறேன். பின்னர் அதில் நிறைய கேள்விகள் வந்தது. உலகின் மிகப்பெரிய தத்துவங்கள் கூட ஒருமுறை தான் சொல்லப்படுகின்றன. கவியரங்கக் கவிதைகள் அதையும் மீறியதா, எதற்காக இரண்டிரண்டு தடவை வாசிக்கவேண்டும் என்ற கேள்வி வந்தது. பார்வையாளர்களின் கைத்தட்டலுக்காக கவிதையை நிறுத்தி நிறுத்திப் படிப்பது, குரலில் ஏற்றஇறக்க மாற்றங்களைக் காண்பிப்பது போன்றவை சலிப்பைத் தந்தது.

ஒரு கவியரங்கக் கவிதையை பத்துநாட்களுக்குப் பின்னர் படித்தால் அதன் தேவையை அது இழந்திருக்கும். ஒரு பத்திரிகை செய்தி அளவுக்குத்தான் அதன் ஆயுளும் இருக்கும். எதிரில் அமர்ந்திருப்பவர்கள் வாசகர்களோ, இலக்கியவாதிகளோ அல்ல. கேட்பதற்காக வந்திருப்பார்கள். அவர்களுக்காகப் படிக்கும்போது அர்த்தமற்ற வார்த்தைகளின் தொகுப்பாகக்கூட கவிதைகள் அமைந்திருக்கும்.

பாடல் என்று வரும்போது அதைக் கேட்பவர்கள் இலக்கியவாதிகள் அல்ல, வெகுஜன மக்கள். அவர்களுக்கு என்னுடைய கருத்தை சொல்வதற்காக என்னுடைய மொழி நடையை தளர்த்திக் கொள்கிறேனே தவிர கருத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. பாடல் என்பது ஒரு கருத்தை சொல்வதற்கான திட்டமிட்ட வேலை. கவிதை என்பது அப்படியல்ல. வேறுவேறு அனுபவங்களை எழுத வரும்போது முன்னில் இருந்து இறுக்கமான செறிவான மொழி கிடைத்தது. தொடர்ந்த வாசிப்பும் எழுத்துப்பயிற்சியும் உள்ளவர்களுக்கு இது வாய்க்கக்கூடியதுதான்.

எழுத்தாளர்களில் சிலர் எழுதுவதையே பெரிய புரட்சி என்றும், ‘நான் உங்களுக்காக எழுதுகிறேன், உங்களுக்காக நான் என்னையே தியாகம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் என்னைப்பற்றி இந்த சமூகத்திற்கு எந்த அக்கறையும் இல்லை. குடிப்பதற்குக் கூட காசில்லை. வேறுநாட்டில் எழுத்தாளர்களை எப்படியெல்லாம் மதிக்கிறார்கள். தமிழ்நாட்டில் தான் இந்த நிலைமை’ என்றும் தொடர்ந்து புலம்பி வருகிறார்களே?

புலம்புபவர்கள் தங்கள் எழுத்தையே இலக்கியச் சேவையாக கருதினால் நான் ஒன்றும் செய்ய முடியாது. இந்த சமூகத்தில் எந்த ஒரு விஷயம் என்னை சுலபமாக கடந்து செல்ல அனுமதிக்கவில்லையோ அதைத்தான் அந்த இடத்தில் நின்று எதிர்கொண்டு ஒரு எழுத்தாளனாக நான் எழுதுகிறேன்.

தெருவில் ஒரு சண்டை நடக்கிறது. அந்தப் பக்கமாக செல்லும் ஒருவர் அதை விலக்கி விட்டு விட்டு செல்கிறார். அதை அவர் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதில்லை. அதே வேலையை ஒரு எழுத்தாளன் செய்தால் அதை அவன் எழுத வேறு செய்கிறான். அதற்காக எழுத்தாளனை கொண்டாட வேண்டும் என்றும் அவன் நினைத்தால் அது அவனுடைய தவறு தான். தங்களுக்கு ஏற்படும் மனக்கிளர்ச்சியை, அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காகத் தான் எல்லோரும் எழுதுகிறார்கள். அப்படி எழுதுவதை எழுத்தாளன் தியாகம் என்று நினைத்தால், அதைப் படிக்கிற நானும் தியாகி தான் என்று வாசகர்களும் சொல்லலாமே. எழுதுவது என்பது தியாகம் சம்பந்தப்பட்ட விஷயமே கிடையாது.

சமூகத்தோடு தொடர்ந்து இணைவதும், முரண்படுவதுமாகத் தான் நாம் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதை நாம் எழுத்து வழியாகத் தெரிவிக்கிறோம். மற்றவர்கள் ஏதோ ஒரு மீடியம் வழியாகத் தெரிவிக்கிறார்கள். தன்னைப் பற்றிய பெருமையிலோ, கழிவிரக்கத்திலோ தம்பட்டம் அடிக்கும் செயல்தான் இது.

ஒரு புத்தகத்தையோ, நாடகத்தையோ படிக்கும் அல்லது பார்க்கும் வாசகனோ, நேயரோ அதனால் பாதிப்பு அடைந்தால் அவனது மனதில் சிறு கீறலோ, அசைவோ ஏற்பட்டால் அவன் வேண்டுமானால் எழுதியவனைப் பாராட்டலாம். அதை விடுத்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதற்காக, ஷீல்டு வாங்கி ஜோல்னாப் பையில் வைத்துக்கொண்டு அலைவது தேவையற்ற விஷயம். சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டுத்தான் உலகம் விடிகிறது என்று சொல்வதோ, தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அபத்தமான காரியம்.

வேதம் படிப்பதற்கு குறிப்பிட்ட சாதியில் பிறக்கவேண்டும் என்பதைப் போலவே இலக்கியம் படைப்பதற்கு தனி ஆளுமை வேண்டும், அறிவு வேண்டும், தேஜஸ் வேண்டும், இன்னும் என்னென்னமோ வேண்டும் என்று கூறுகிறார்கள். இதன்மூலம் எழுத்தாளர்களைப் புனிதப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. இதனால் எழுத்தாளனை இந்த சமூகம் கொண்டாடுவதற்குப் பதிலாக தன் எழுத்தின்மீது அதீத நம்பிக்கை கொண்டு எழுத்தாளன் தன்னைத் தானே கொண்டாடிக் கொண்டிருக்கிறான்.

கலைஞனைக் கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று சொன்னால் உழவனையோ, தொழிலாளியையோ கொண்டாடாத சமூகம் மட்டும் உருப்பட்டு விடுமா? நீ எழுதும் கவிதைகளைத் தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கும் எந்த அவசியமும் இந்த சமூகத்துக்குக் கிடையாது. இந்த சமூகத்தைப் பதிவு செய்கிறவனாக, உன் கருத்தைத் தெரிவிப்பவனாக இருக்கும் பட்சத்தில் உனக்கான அளவில் இந்த சமூகம் உன்னை கொண்டாடத் தான் செய்கிறது. உனக்கு குடிப்பதற்குக் காசில்லை என்பதெல்லாம் இந்த சமூகத்தின் பிரச்சனையும் கிடையாது.

Aadhavan Dheetchanya இவர்களைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

எழுத்தாளர்கள் அரசியலுக்கு வரும்போது, இலக்கியவாதியாக யாரையெல்லாம் விமர்சித்தார்களோ, அவர்களையெல்லாம் அரசியல்வாதியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களே?

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதுபற்றி எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் பார்வையற்றவர்களின் விழியாக, குரலற்றவனின் குரலாக என்னுடைய எழுத்து ஒலிக்கும் என்று இலக்கியவாதியாக இருக்கும்போது இவர்கள் தங்கள் படைப்புக்கு பல பீடிகைகளை வைத்திருந்தார்கள். அதற்கு இசைவான அரசியலை தேர்ந்தெடுக்கிறார்களா என்பதுதான் எனது கேள்வி. பதவி, அதிகாரம் என்ற இரண்டு வழிகளில் பொருளாதார ஆதாயத்தை தேடிக் கொள்கிறார்கள். இதைத்தான் எல்லா அரசியல்வாதிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை அடைவதற்கு கூடுதல் தகுதியாக எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளையும் கட்டுரைகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இலக்கியவாதியாக இருப்பது என்பது ஒரு எதிர்க்குரல் தான். ஆனால் அதன் மூலம் வாசகனுக்கு அறிவுரைகள் கூறிவிட்டு எழுத்தாளன் மட்டும் மறுபடியும் ஆதாயத்தையும், பணத்தையும், சொகுசு வாழ்க்கையையும் தேடிப் போகிறார்கள். இதே எழுத்தாளர்கள் இடதுசாரி அமைப்பிலுள்ள எழுத்தாளர்களை கேவலமாகப் பேசிய காலங்கள் உண்டு. அவர்களால் இடதுசாரி இயக்கங்களில் செயல்படுவது தான் சிரமமான வேலையாக இருக்குமே தவிர கழிசடை அரசியல் செய்வதில் வெட்கம் எதுவுமில்லை. இதை யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதால் தான் நவீன இலக்கியம் குறித்தும் அடிக்கடி கருத்து தெரிவிக்கிறார்கள்.

சிற்றிதழ்கள் விசிட்டிங் கார்டு போல் பயன்படுத்தப்படுவதாக சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் கூறியிருந்தார். இந்த விமர்சனத்தை சிற்றிதழ் ஆசிரியரான நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

இலக்கிய பீடம் என்று ஒருவரை முடிவு செய்வது, அவர்கள் சொல்வதுதான் சிற்றிதழ், அவர்கள் சொல்பவர்கள் தான் படைப்பாளி என்று முடிவு செய்வது இதெல்லாமே அபத்தமான விஷயங்கள். இந்தியாடுடேயின் சிற்றிதழ் குறித்த பேட்டியில் மனுஷ்யபுத்திரன், சிற்றிதழ்களை விசிட்டிங் கார்டு போல் பயன்படுத்துவதாக குறிப்பிட்டிருந்ததை நானும் படித்தேன். சிற்றிதழை விசிட்டிங் கார்டு போல் பயன்படுத்தும் வேலையை அவர்தான் சரியாகச் செய்தார்.

நக்சல்பாரி பத்திரிகைகளின் மூலமாக மனுஷ்யபுத்திரன் அறிமுகமானார். காலச்சுவடு தீவிரமான சிற்றிதழாக இயங்கிக் கொண்டிருந்தபோது அங்கு சென்றார். அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு செந்திலோடு உயிர்மைக்குப் போனார். அந்த சிற்றிதழைத் தவிர அவருக்கு வேறு என்ன அடையாளம் இருக்கிறது? உயிர்மை என்கிற விசிட்டிங் கார்டை சரியான நபர்களிடம் காட்டி அதன்மூலம் ஆதாயம் பெற்று அதை தக்கவைத்துக் கொண்டது ஒரு தனிவகை சாமர்த்தியம்தான்.

வரக்கூடிய பத்திரிகைகள் தரமாக இல்லை என்று வருத்தப்பட்டால் அது வேறு விஷயம். அதை எப்படி சரியாக வெளியிட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லித்தரலாம். முன்னோடி என்பவர் செய்யவேண்டிய வேலை அதுதானே. அதைவிட்டு விட்டு எல்லோரும் பத்திரிகை ஆரம்பித்து விட்டார்கள் என்று சொல்லி வருத்தப்படுவது, ‘எல்லோரும் படிக்க வந்துட்டாங்க, வேலைக்கு வந்துட்டாங்க’ என்று பதறக்கூடிய ஆதிக்கசாதி மனநிலைதானே. அந்த மனோபாவம் மனுஷ்யபுத்திரனுக்கு எதற்கு?

தங்களின் படைப்புகளை தாங்களே பாராட்டிக் கொள்வது, அதை ஆதரித்துப் பேசுவதற்காகவே ஒரு குழுவை ஏற்படுத்திக் கொள்வது, தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வது – இவையெல்லாம் தமிழ்ச்சூழலில் அதிகரித்து வருகிறதே?

படைப்பு மனோபாவம், சொல்லாட்சி என்று விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கவிதை எழுதிவிட்டு அதை யாரும் பாராட்டாத பட்சத்தில் தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதற்காக கூடுகின்ற கூட்டம்தான் இது. ஒரு இலக்கிய முகாம் நடந்து முடிந்தவுடன் அங்கு நடந்த அடிதடியைப் பற்றி கிசுகிசு வருவது தவறாமல் நடக்கிறது. இந்த விவாதங்களுக்கு மையப்புள்ளியே தங்களைத் தாண்டி வெளியே ஒரு உலகம் இருக்கிறது என்பதை அறியாமல் இருப்பதுதான்.

ஆனால் இடதுசாரி படைப்பாளிகளுக்கோ, பெண்ணிய படைப்பாளிகளுக்கோ, தலித் படைப்பாளிகளுக்கோ எழுதியதைப் பற்றியே பேசுவது, அதையே சிலாகிப்பது மட்டுமே வேலை அல்ல. எந்த சமத்துவத்தை கனவு காண்கிறார்களோ அதற்கான மக்கள் இயக்கங்களில் பங்கெடுப்பது, அந்தப் பாதையில் செல்வது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். களத்திற்கு போக வேண்டியிருப்பவர்களால் தன் கவிதையை உட்கார்ந்து சிலாகித்துக் கொண்டிருக்க முடியாது.

எழுதுவதைத் தவிர எனக்கு வேறு வேலையில்லை என்பதும் எழுத்தின் மூலமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதும் முட்டாள்தனம். அதையாவது பொறுத்துக் கொள்ளலாம். தான் எழுதுவதைத் தவிர வேறு வேலை செய்யாமல் இருப்பதற்காக போலியான தத்துவங்களை அவர்கள் உருவாக்க முயல்வதைத் தான் சகிக்க முடியவில்லை.

படைப்புகளைப் பற்றி தொடர்ந்து நடைபெறும் விவாதங்களில் வாசகனுக்கு இடம் உண்டா? ஒரு புத்தகம் 1200 பிரதிகள் அச்சிடப்பட்டால் அதைப் பற்றி 1200 பேர் பேசலாம். ஆனால் தமிழ்ச் சமூகம் ஏழு கோடி மக்களை கொண்டது. இந்த இலக்கியம் குறித்து தெரியாமலே பெரும்பகுதி சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களோடு எப்படிப் பொருந்துவது என்று தான் யோசிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு நான் மேதாவி, அறிவுஜீவி என்று தனியாக உட்கார்ந்து விட்டால் எந்த மாற்றமும் நடக்காது.

தலித் இலக்கியத்தை தலித்கள் தான் எழுத வேண்டும் என்ற கருத்தும், அதற்கு எதிராக ‘அவர்கள் மேல் அக்கறை கொண்ட யார் வேண்டுமானாலும் எழுதலாம்’ என்ற கருத்தும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதில் உங்களது நிலைப்பாடு என்ன?

தீண்டாமையின் கொடுமையை அனுபவிக்காதவர்களால் தீண்டாமை குறித்து எழுத முடியாது. ஒரு பெண்ணின் துயரங்களை எப்படி ஆணால் உணர முடியாதோ, அதேபோல் ஒரு தீண்டத்தகாதவனின் பிரச்சனைகளை தீண்டத்தக்க சாதியை சேர்ந்தவனால் ஒருபோதும் உணர முடியாது. சமீபத்தில் ஒரு பத்திரிகையில் கோபிச்செட்டிபாளையத்தின் முன்னாள் நகராட்சித் தலைவர் லட்சுமண ஐயரின் பேட்டி வெளியானது. இந்தியாவில் கையால் மலம் அள்ளும் முறையை முதன்முதலில் கோபி நகராட்சியில் ஒழித்தவர் இவர்தான்.

அந்த முறையை ஒழித்ததற்கான காரணம் குறித்து கேட்டபோது, சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றபோது அங்கே நாங்கள் கையால் மலம் அள்ள வேண்டியிருந்தது. அந்த ஒன்று போதாதா இதை ஒழிப்பதற்கு என்று குறிப்பிட்டிருந்தார். அப்படியானால் உன்னை அள்ள வைத்தால் தான், இந்த வேலை எவ்வளவு துயரமானது, அவமானகரமானது என்று புரிகிறது. அந்த அவமானங்களை சந்திக்காத ஒருவனால் அது குறித்து எப்படி எழுத முடியும். மற்றவர்கள் எழுதுவதை சாதி ஒழிப்பு எழுத்து, தலித் ஆதரவு எழுத்து என்றுதான் பார்க்க முடியும்.

வேடிக்கை பார்த்து எழுதுவது என்பது வேறு. அனுபவித்து எழுதுவது என்பது வேறு. அதாவது பாவனைக்கும் உண்மைக்குமான இடைவெளி அதில் இருக்கும்.

(ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் அடுத்தடுத்த விவாதத்திற்கு இட்டுச் செல்வதாய் இருந்ததால், நேர்காணலை எங்கே முடிப்பது என்ற கேள்விக்கான பதில் சற்று எட்டியே இருந்தது. மேலும் சில கேள்விகளுடன் வேறொரு பொழுதில் நேர்காணலைத் தொடரலாம் என்ற எண்ணத்துடன் இத்துடன் நிறுத்திக் கொண்டோம்)

- ஆதவன் தீட்சண்யா ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com