Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureInterview
நேர்காணல்

ஊடகங்களில் உயர்சாதி ஆதிக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகளும் தீர்வுகளும்
ஆதவன் தீட்சண்யா


நாகர்கோவிலில் த.மு.எ.ச. 05/07/2006 அன்று நடத்திய "இடஒதுக்கீடும், சமூக நீதியும்" எனும் கருத்தரங்கில் புதுவிசை ஆசிரியரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளருமான ஓசூரைச் சார்ந்த ஆதவன் தீட்சண்யா கருத்தாளராக பங்கேற்றார். நாம் அனலிக்காக சந்தித்தோம். வானத்தின் மூட்டில் நாற்காலிகளைப் போட்டு நாங்கள் அமர்ந்தோம். ஒளிவிடும் கண்களோடு பேச்சும் ஆரம்பமானது. இங்கே பதிவாகியிருப்பது ஊடகங்களில் உயர்சாதி ஆதிக்கம் அளவுக்கதிகமாய் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் மாற்றுச்சூழலுக்கான ஆதவன் தீட்சண்யாவின் கருத்துக்கள்.

Aadhavan Dheetchanya ஏதோவொரு கருத்துதான் உலகத்தை ஆண்டுக்கிட்டிருக்கு. அதை ஒப்புக்கொள்ளாத இன்னொரு கருத்து எதிர்த்து நிற்குது. உழைப்பு உற்பத்தி வினியோகம் எப்படி இருக்கணும்கிறதில் ஏற்படுகிற முரண்பாடுதான் இப்படி இருவகையான கருத்து மாறுபாடுகளாயிருக்கு. ஆயிரத்தெட்டு பெயர்களோடும் சின்னங்களோடும் கொடிகளோடும் இயங்குகிற எல்லா அமைப்புகளையும் சமூகத்தில் புழங்குகிற எல்லாக் கருத்துக்களையும் இந்த இருவேறு கருத்துக்குள்ளே அடக்கிவிட முடியும். கருத்துக்களோட தலைமையை ஒப்புக்கொண்டு நடக்கும் அணிசேர்க்கையின் பலம் அல்லது பலவீனம்தான் சமூகத்தோட இயங்குநிலையை தீர்மானிக்குது. எதிரெதிர் நலனை பிரதிபலிக்கிற இந்த கருத்துக்களோட பிரதிநிதியாகத் தான் ஏதோவொரு வகையில் ஒவ்வொரு தனிமனுசனும் இருக்கிறான். நடுநிலை, பொதுவானதுன்னு ஒரு துரும்பும் கிடையாது. நம்மோட பேச்சு செயல் சிந்தனை முறைமை எழுத்து எல்லாமே ஒரு கருத்துக்கு சார்பானதுதான்.

தான் ஏத்துக்கிட்ட கருத்துக்கு விசுவாசமா நடக்கிறதோட யாரும் திருப்தியடையறதில்லை. தன்னால முடிஞ்சமட்டிலும் அந்த கருத்தை மத்தவங்களிடம் பிரச்சாரம் செய்கிறவங்களாகவும் ஒவ்வொருத்தரும் இருக்கிறோம். தனிமனுசனாகவோ ஒரு குழுவாகவோ ஒரு இனமாகவோ வர்க்கமாகவோ பிரிந்தும் சேர்ந்தும் இந்த பிரச்சாரம் நடக்குது. இந்த பிரச்சாரத்திற்கான கருவிகளில் ஒன்றுதான் ஊடகங்கள். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இன்டர்நெட், சினிமா, மேடை, கலை இலக்கியம் என்று ஊடகங்களோட வகைமைகள்னு விரித்து சொல்லலாம். ஏதோவொரு கருத்துக்கு ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒப்புக்கொள்ள வைக்கிறதுதான் இவையெல்லாத்துக்கும் நோக்கம். இந்த ஊடகங்கள் மக்களோட தொடர்பு வச்சிருக்கிறதே ஒரு குறிப்பிட்ட பிரச்னையில தனக்கிருக்கிற கருத்தை ச மூகத்தோட பொதுக்கருத்தா மாற்றணும்கிறதுக்காகத் தான்.

"கடவுள் கூட தனது அன்றாட நிகழ்ச்சி நிரலை செய்தித்தாளைப் பார்த்தே தயாரித்துக் கொள்கிறார்" என்பார் பிரெஹ்ட். அந்தளவுக்கு சமூகத்தின்மீது செல்வாக்கு செலுத்தும் வல்லமையுள்ள ஊடகங்கள் இந்தியாவில் என்னவா இருக்கு? தொழில்நுட்பரீதியா மிகமிக நவீனமா வளர்ந்திருந்தாலும் உள்ளடக்கரீதியிலும் நோக்கத்திலும் இந்திய ஊடகங்கள் ஆகப்பழைய பஞ்சாங்க மூட்டைகளாகத்தான் இருக்கு. குறைந்தபட்சம் வளர்ச்சியடைந்த ஒரு முதலாளித்துவ கருவிக்குரிய குணத்தைக்கூட எட்டிப்பிடிக்கல. பின்னுக்கிழுக்கிற சாதிக்குள் ஒரு காலையும், தலைகீழ் பாய்ச்சல்ல ஓட நினைக்கிற முதலாளித்துவத்துக்குள் மறு காலையும் வச்சிக்கிட்டு குழம்பிக் கிடக்குது. சாதியத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் ஏற்றத்தாழ்வுதானே அடிப்படை? அதனால ஏற்றத்தாழ்வை காப்பாத்துற ரெண்டையும் ஒன்னுக்கொன்னு ஒத்தாசையா தண்டவாளம் மாதிரி பதிச்சு அதுமேல ஓட நினைக்குது.

வெள்ளையன் காலத்துல அயோத்திதாசரோட தமிழன், ரெட்டைமலை சீனிவாசனோட பறையன், தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தோட ஜஸ்டிஸ், பெரியார் வெளியிட்ட குடியரசு, அம்பேத்கரோட மூக்நாயக்- இதுவெல்லாம் சாதியழிப்பையும் சமூகநீதியையும் பேசினப்ப, ஆதிக்க சாதியாட்களோட பத்திரிகையெல்லாம் தேசம், விடுதலைன்னு பேசினது தற்செயலானதில்ல. ஆதிக்கம் செலுத்தவும் அதிகாரம் பண்ணவும் தொழில் நடத்தவும் வியாபாரம் செய்யவும் அவங்களுக்கு தேசமும் விடுதலையும் தேவையாயாயிருந்தது. நாங்க இருந்து நாட்டாமை பண்ணின இடத்துல இன்னொருத்தனாங்கிற கோபம்தான் அதுல பெரும்பாதி. இந்த கோபம் வெறுமனே அரசியல் அதிகாரத்துக்கான ஏக்கத்திலிருந்து மட்டுமே பிறக்கல. சமூகத்தை சாதியரீதியா ஒடுக்குற தொடர்ச்சி அறுபட்டுருமோங்கிற பயத்திலிருந்தும் வந்தது.

தேசம் தேசம்னு இந்த பத்திரிகைகள் போட்ட கூப்பாட்டு இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கிறதிலிருந்து வரல. மண்ணை அபகரித்து சொத்தாகவும் மக்களை ஒடுக்கி அடிமையாகவும் வச்சுக்கிற ஆதிக்க உணர்விலிருந்து வந்தது. அதனால தான் ஒரு பார்ப்பனன் ஆயுதம் தூக்கக்கூடாது - கொலை செய்யக்கூடாதுங்கிற சாஸ்திரத்துக்கு விரோதமா அப்போ புஷ்யமித்திர சுங்கன் பிருகத்ரதனைக் கொன்றான். பின்னாடி வாஞ்சிநாதன் என்கிற பார்ப்பன அரசு ஊழியன் துப்பாக்கி தூக்கினான். ஆகவே இந்திய சமூகத்துல சாதியாதிக்கத்தை நிலைநிறுத்த எதுவும் செய்யலாம்கிறதுக்கு வரலாற்றுரீதியா ஒரு தொடர்ச்சி இருக்கு. இவர்களது செயலை சாதியுணர்வே வழிநடத்தின உண்மையை மறைத்து நாட்டுக்கான போராட்டம் அல்லது தியாகம்னு வரலாற்றுல போற்றப்படறதுக்கு காரணம் அந்தந்த காலத்து ஊடகங்களோட வேலைதான். இந்த ஆதிக்கக்கண்ணி அறுபடாம பார்த்துக்கிற வேலை இப்போ ஊடகங்கங்களோட பொறுப்பிலிருக்கு.

எப்படி ஆண்டால் நடப்பிலிருக்கிற சாதிய பொருளாதார ஏற்றத்தாழ்வை தக்க வச்சுக்க முடியும்னு ஆட்சியாளர்கள் மேல் அழுத்தம் செலுத்தற சக்தியா இந்திய உடைமை வர்க்கத்தாரும் ஆதிக்க சாதியாரும் சேர்ந்து வளர்த்தெடுத்தது தான் இங்கிருக்குற ஊடகங்கள். குதிரைக்கு படாம் கட்டின மாதிரி அதோட கண்ணுக்கு குறிப்பிட்ட சாதி, கட்சி, தலைவருங்க மட்டும்தான் தெரிவாங்க. நடுநிலைன்னு பேசறதெல்லாம் அவங்களோட சாதி நலனுக்கும் கொள்ளைக்கும் எந்த ஆபத்தும் வராம இருக்கறவரைக்கும் தான். வந்துட்டா கொஞ்சங்கூட கூச்சமில்லாம எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு பூணூலோட நிக்கிறதுக்கு தயங்க மாட்டாங்க. பிற்பட்டோருக்கு உயர்கல்வியில 27 சதம் இடஒதுக்கீடு விஷயத்துல இது அப்பட்டமா வெளிப்பட்டது.

அரசாங்க அறிவிப்பு வந்ததுமே தேர்தல் காலத்துல எப்படி செய்யலாம்னு ஆரம்பிச்சாங்க. சாதாரண காலத்துல அறிவிச்சப்பவும் எதிர்த்தாங்க தானே? பிறகு, இடஒதுக்கீடு கோட்பாடு இந்திய சமூகத்தையே சாதிரீதியா பிளவுபடுத்திடும்னு பிரச்சாரம். இந்திய சமூகம் சாதியை கைவிட்டுட்டு சமத்துவ பூமியா இருக்கிற மாதிரியும் அதை இடஒதுக்கீடு வந்து கெடுக்கிற மாதிரியும் - தேசத்துக்கு ஆபத்துன்னு கூப்பாடு. என் டிடிவியும், சிஎன்என்-ஐபிஎன் சேனலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் மாதிரியான பத்திரிகைகளும், புதுசா எந்த இடஒதுக்கீடும் கூடாதுன்னும், நடப்பிலிருக்கிற எல்லா இடஒதுக்கீட்டையும் ரத்து செய்யனும்னும் 24 மணிநேரமும் ஒளிபரப்பு செய்ததுக்கு என்ன காரணம்? மாணவர்களும் மீடியாக்களும் இப்படி பேச ஆரம்பிச்சப்ப, அறுபதாண்டு காலமா நடப்பிலிருக்குற இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்துட்டதா அத்வானி பேசினதுக்கும் இடையே இருக்கிற கள்ளவுறவு எப்படியானது?

உள்நாட்டு தொழிலை அழிக்கிற தாராளமயத்துக்கு எதிரா வேலைநிறுத்தம் நடந்த நாள்ல கூட அதுல கலந்துக்காம தானுண்டு தன் தொழிலுண்டுன்னு இருந்த இன்போஷிஸ் நாராயணமூர்த்தி எதுக்கு வரிஞ்சி கட்டிக்கிட்டு எகிறுறார்? ஐஐடியில படிக்கிற பார்ப்பன மாணவர்கள் அவங்களுக்கு அடுத்ததா இருக்கிற சாதி மாணவர்கள் சிலபேரை சேத்துக்கிட்டு அங்கே இடஒதுக்கீட்டுக்கு எதிரா ரகளை பண்றப்போ, அதே வேலையை வெளியே இருக்குற பார்ப்பனர்களும் பண்றாங்க. ஊடகத்துல இருக்கிற பார்ப்பனர்கள் அதுக்கு அனுசரனையா ஒரு விவாதத்தையும் பிரச்சாரத்தையும் 24 மணி நேரமும் நடத்தறாங்க.

பெரிய நகரங்கள்ல அவங்க விரும்பற மாதிரி பேசக்கூடிய மாணவர்களை கும்பலா திரட்டி இடஒதுக்கீடு பற்றி விவாதங்கள நடத்தறப்ப, மாற்றுக்கருத்து தெரிவிச்சவங்ககிட்ட மைக்கை பறிச்சாங்க. ஒரு கூட்டத்துல சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜாவுக்கே இது நேர்ந்துச்சு. இடஒதுக்கீடுக்கு ஆதரவா நடந்த போராட்டங்கள முழுமையா இருட்டடிப்பு செய்தாங்க. தவிர்க்க முடியாம வெளியிடறப்ப கேவலமான முறையில சித்தரிக்கப்பட்டது. பீகார் மருத்துவர்கள் போராட்டத்தை முன்னாபாய் கலாட்டான்னு கிண்டல் பண்ணினாங்க. இடஒதுக்கீடு பிரச்னைல, குறைந்தபட்ச தொழில்தர்மத்தையும் கைவிட்டு, மீடியாங்கிற எல்லையையும் தாண்டி பிரச்னைல சம்பந்தப்பட்ட ஒருதரப்பாகவே மாறிவிட்டதுதான் இந்த ஓரவஞ்சனையான செயல்பாட்டுக்கு காரணம்னு அவுட்லுக் பத்திரிகையோட முதன்மையாசிரியர் பகிரங்கமா குற்றஞ்சாட்டினார்.

இடஒதுக்கீடு மட்டுமில்ல, நிகழ்ச்சி, செய்தி எதுவானாலும் அதில் எதை அல்லது யாரை முன்னிறுத்தறதுன்னும், இருட்டடிப்பு செய்யறதுன்னும் தெளிவான திட்டம் மீடியாவுல இருக்கு. மதிக்கத்தக்க தலைவர் கே.ஆர். நாராயணன் மறைவுச் செய்தியை போகிற போக்கில் காட்டுறதும், பிரமோத் மகாஜன் சுடப்பட்டதிலிருந்து சாகிற வரைக்கும் கண்ணீரும் கம்பலையுமா சொந்தவீட்டு இழவு மாதிரி காமிராவோட காத்துக் கிடந்ததும் தற்செயலானதில்ல. செய்தியறிக்கையோட முகப்புக் காட்சியில புஷ்சையும் பிளேரையும் உலகத் தலைவர்களாகவும், வாஜ்பாய் அத்வானி சோனியா மன்மோகன்சிங் வகையறாவை தேசியத் தலைவர்களாகவும் கருணாநிதி ஜெயலலிதா ராமதாசை மாநிலத் தலைவர்களாகவும் காட்டுறதுல எந்த அரசியலுமில்லையா? மக்களுக்கு காட்டத் தகுந்த ஒரு இடதுசாரி தலைவர்கூட இந்த உலகத்துல இல்லாமப் போயிட்டாங்களா என்ன?

பார்ப்பனர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரா பண்ணின ரகளையை வாயில நுரை தள்ள வர்ணித்த இந்த மீடியாக்கள் உழைப்பாளி மக்களோட எந்தப் போராட்டத்தையும் ஆதரிக்கிறதே கிடையாது. பொது அமைதிக்கு பங்கம்னு ஓயாம தலையங்கம் எழுதித் தள்ளுவாங்க. லட்சம்பேர் கலந்துக்கிட்ட ஒரு போராட்டத்தோட செய்திய, ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்னு சொல்றது மூலமா, செய்திய சொன்னது மாதிரியும் ஆச்சு, எண்ணிக்கைய இருட்டடிப்பு செய்த மாதிரியும் ஆச்சு. இந்த சொல்பிரயோகமெல்லாம் தெரிஞ்சே செய்யறதுதான். தாய்மண்ணை மீட்டெடுக்க போராடுற ஈராக் தேசபக்தர்களை தீவிரவாதிகள்னு சொல்ற அளவுக்கு இந்தியா மீடியாவோட மூளைக்குள்ள அமெரிக்க விசுவாசம் மண்டிக் கிடக்கு.

திராவிட பாரம்பரியங்கள் நடத்தற பத்திரிகை, சேனல் எல்லாமே பார்ப்பனர்களோட கட்டுப்பாட்டுலதான் இருக்கு. அல்லது பார்ப்பனீய சிந்தனைக்குள்ளேதான் இருக்கு. அதுவழியா வர்ற செய்தி, தொடர், கலை இலக்கியப் படைப்பு எல்லாமே பார்ப்பனியத்தோட இருப்பை கேள்விக்குட்படுத்தாம இருக்கிற மாதிரியான தணிக்கைக்கு உட்படுது. மூடநம்பிக்கை, பில்லி சூன்யம், ஆணாதிக்க சிந்தனை, சகமனுசன் மேல் அவநம்பிக்கை- இப்படியான உள்ளடக்கத்தோட தான் நிகழ்ச்சிங்க வருது. கட்சியமைக்கிறதுக்கும் ஆட்சிய பிடிக்கிறதுக்கும் பயன்பட்ட பெரியாரும் அண்ணாவும் இந்த திராவிடத் திருவாளர்களோட ஊடகங்கள்ல புகைப்படமாக்கூட தென்படுறதில்ல. அவங்க ரெண்டுபேரும் இருந்திருந்தா முதல்ல இவங்கள போட்டுத் தள்ளியிருப்பாங்க, இல்லன்னா இப்படியானவங்க தானா நம்மளோட சிஷ்யனுங்கன்னு நாண்டுக்கிட்டு செத்திருப்பாங்க.

பார்ப்பனியம்கிறது ஒதுக்கறதும் ஓதுங்கறதும் தான். இந்தப்போக்கு ஒரு சாதியில தொடங்கி எல்லாரையும் கவ்விக்கிட்டு வருது. தனிமனிதன் தொடங்கி நாடுகள் வரைக்கும் பரவிக்கிட்டிருக்கு. இதை தடுக்கறதுதான் இன்னிக்கு உழைப்பாளி மக்களுக்கு, சாதி மறுப்பாளர்களுக்கு, சமூகநீதி ஆர்வலர்களுக்கு பெரிய சவாலா இருக்கு.

ஊடகங்கள்ல கொள்கை முடிவெடுக்கிற அதிகாரம் பொருந்திய பொறுப்புகள்ல இருக்கிற பார்ப்பனர்கள் -கீழிருந்து வர்ற செய்தி முழுசையும் ஏத்துக்கிறதில்ல. அங்கே ஒரு தணிக்கை சாதிய கண்கொண்டு நடக்குது. சிறுநகரங்கள்ல - மாவட்டத் தலைநகர்ல இருக்கிற நிருபர்கள் வரைக்கும் (இவங்கள்ல பெரும்பாலானவங்களுக்கு ஜர்னலிசம்கிற வார்த்தைகூட தெரியாது) பத்திரிகையோட விளம்பர ஏஜெண்டாகத் தான் இருக்க முடியுது. அவங்களுக்கு தர்ற சம்பளம் ஒரு கௌவரமான வாழ்க்கையை நடத்த போதுமானதாயில்ல. செய்தியோட டிப்சும் தர்றவங்களுக்கு அனுசரணையா உள்ளூர் செய்தியா அனுப்பற போக்கு பரவிக்கிட்டிருக்கு. கூட்டத்துல பங்கேற்ற நிருபர்களுக்கு 500 ரூபாய் தாள் பொதித்த கவர் தருவது ரஜினிகாந்த் வழக்கம்னு ஞாநி ஒருமுறை சொன்னார். இப்படி கீழ் மட்டத்திலும் எளிய மக்களைப் பற்றிய செய்திகளை கைகழுவுறதுக்கு தோதான நிலை நீடிக்கிறப்ப, அதை சரி செய்யறதுக்கு நாம மல்லுக்கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதில்ல. 'அன்புள்ள ஆசிரியருக்கு' கடிதம் எழுதி எந்த அடிப்படை மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது. அப்படி சொல்லுகிற அம்பிகள் அந்த வேலையை நன்னா செஞ்சுண்டிருக்கட்டும். நமக்கு நிறைய வேலையிருக்கு.

ஊடகத்தளத்துல இப்போ உருவாகி வர்ற ஏகபோக மையங்களை சிதறடிக்கிறதோ அல்லது அதை ஜனநாயகப்படுத்தவோ எளிய மக்களால் முடியாது. அதுக்கான மூலதன அளவும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இந்த நிலைமைய உருவாக்கியிருக்கு. ஆனாலும் இன்னிக்கிருக்கிற தகவல் ஏகபோகத்துல வலுவா நாம் குறுக்கீடு செய்தாகனும். எதைப் பார்த்தும் மலைச்சு திகைச்சு நிற்க வேண்டியதில்ல. மக்களோட மெய்யான பிரச்னைகளை விவாதிக்கிற மேடையாக, தீர்வுக்கு அரசாங்கத்தையும் நிர்வாகத்தையும் நிர்ப்பந்திக்கிற ஆயுதமாக மாற்று ஊடகங்களை மக்கள் இயக்கங்கள் கண்டடையனும். இந்த மாற்று ஊடகத்தை ஒரு பத்திரிகையாகவோ தொலைக்காட்சி சேனலாகவோ யோசிக்க வேண்டியதில்ல. மக்களோட மனங்களை வென்றெடுக்க உயிரோட்டமான நேரடித் தொடர்பும் உரையாடலும் தான் உதவும்கிற நம்பிக்கை நமக்கு தேவைப்படுது. மீடியாக்கள் வழியா திணிக்கப்படற செய்திகளை சொந்த அரசியல் பண்பாட்டு நிலையிலிருந்து விமர்சனரீதியா பார்க்கிற கண்ணோட்டத்தை வளர்க்கிறது உடனடித் தேவையாயிருக்கு.

அனலிக்காய் சந்தித்தவர்கள்..........
வல்சகுமார், அரிகரசுதன், டீஜோ


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com