Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஈழத்துக்கு ஒரு கடிதம்
சு. தளபதி


என் அன்பு ஈழத் தமிழனுக்கு, ஒரு தமிழகத் தமிழனின் கடிதம்.

சகோதரா,
யார் யாரோ யார் யாருக்கோ எழுதிய கடிதங்களால் என்னென்னவோ வரலாறுகள் மாறியதாகச் சொல்கிறார்கள். இன்னமும் என்னென்னவோ நடக்கப்போவதாகச் சொல்கிறார்கள். அதிலெல்லாம் எமக்கு நம்பிக்கை இல்லை. உண்மையில் இது கடிதமில்லை. கண்ணீர்.. வெறும் கண்ணீர் மட்டுமே.. உன் கண்ணீரைத் துடைக்க வேண்டிய கரங்களுக்குச் சொந்தக்காரர்களே கண்ணீர் விடுவதா என்று சிந்திக்கிறாயா? ஆம். உண்மைதான், அதை உரக்கச் சொல்லுவதில் எமக்கு எந்த தயக்கமும் வெட்கமும் இல்லை.

வழக்கமாய் துவங்குவது போல் நான் இங்கு நலமே, நீ அங்கு நலமா என்று கேட்கும் நிலையில் நானும் இல்லை நீயும் இல்லை. அதை விட முக்கியம், உனக்கு என்ன முகவரியிடுதென்பது, யாழ் நகரா, கிளி நொச்சியா, ஆனையிறவா... எந்த ஊரை இட.

நான் காதில் கேட்ட சேதிகள் நீ அங்கெல்லாம் இல்லை என்றே சொல்கின்றன. இதை எப்படி நான் அனுப்புவேன். எனக்குப் புரியவில்லை.ஊர்களைத் துறந்து நீ முல்லைத் தீவு காடுகளுக்குள் சென்று விட்டதாகச் சொன்னார்கள். காட்டுக்குள் கடிதப்போக்குவரத்துக்கு என்ன செய்வேன். உன்னைக்கொல்ல ஏழு நாடுகள் சேர்ந்து அணி வகுப்பதாகவும் அதில் இந்தியாவும் ஒன்று என்று கேள்விப்பட்ட அன்றே என் நாடித்துடிப்பு நின்றே போனது. எங்கள் கதியும் உன் போலத்தான் என்பது உறுதியானது அன்றுதான்.. சொந்த நாடே அந்நியமாகிப் போனது.

என் வரிப்பணத்தில் உனக்கெதிராய் ஆயுதமா.. என் கையே உன் கண்ணைக் குத்துவதா.. வங்காளத்தில் வெள்ளம் என்றாலும், கார்கிலில் போர் என்றாலும், குசராத்தில் பூகம்பம் என்றாலும், நிதி சேகரித்துக் கொடுப்பதில் தமிழன்தான் முதல் ஆளாய் நின்றான். அந்தத் தமிழனுக்கு துயரம் என்றால், உதவி வேண்டும் என்றால் தமிழனைத்தவிர ஒரு இந்தியனும் திரும்பிக் கூட பார்க்கவில்¬லையே. அவர்களும் உதவவில்லை, எங்களின் உதவிகளையும் அனுமதிக்கவில்லை.

எமக்காகவும் பேசுங்களேன் என்ற என் ஈழச் சொந்தமே, உன் துன்பம் நீ சொல்லாமலேயே எமக்குப் புரியும். எம்மைப் போலவே எல்லோருக்கும் புரியும். ஆனால் துடிப்பது என்னவோ எம் இரத்தம் மட்டும் தான். மற்றவர்களோ இதையும் ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிழற் கதாநாயகிகள் பட்ட துன்பங்களுக்காய் குடம்குடமாய் கண்ணீர் விட்டவர்கள் தம் நிச சொந்தங்கள் உன்னைக் கண்டுகொள்ளவே மாட்டேனென்கிறார்கள். மட்டைப்பந்தில் தோற்றதற்கு மனசெல்லாம் குமுறியவர்கள், உனக்காக ஒரு துரும்பைக்கூட அசைக்காமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள்.

தலைகளில் விழும் கொத்துக்குண்டுகளில் இருந்து தப்பித்து நீ ஊர்விட்டு ஊர் ஒடிக்கொண்டிருக்கையில், இவர்கள் தீபாவளி வெடி வெடித்துக்கொண்டிருக்கிறார்கள். நடிகர் மன்றங்களில் காட்டிய ஆர்வத்தில் கொஞ்சமாவது உன் நலத்தில் காட்ட இந்த தமிழினம் தயாராயில்லை. இடைத்தேர்தலில் காட்டிய வீரத்தை ஈழச்சிந்தனையில் காட்டுவதற்கு தயாராயில்லை. தமிழ்நாட்டில் தமிழ் பற்றி பேசினாலோ, தமிழனைப்பற்றி பேசினாலோ தீவிரவாதம் என்கிறார்கள். உலகிற்கு புதிதாய் ஒரு அடையாளப் பெயர் கிடைத்திருக்கிறது. தமிழ்த் தீவிரவாதிகளாம்.

மொத்தத்தில் தமிழகத்தில் யாரும் தமிழனாய் இல்லை. திரைப்படத்திலும், மது போதையிலும் சாதி மதச்சகதியிலும் அவன் கரைந்தே போய்விட்டான். நாங்களும் சும்மா இருக்கவில்லை. உன்னைக் காப்பாற்றச் சொல்லி எங்கள் நாட்டிடம் கேட்டோம். அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டினோம். அரசவைத்தீர்மானத்திலிருந்து அரவாணிகள் பட்டினிப் போர் வரை நடத்தினோம். அவர்களோ அசைந்து கூட கொடுக்கவில்லை. சாகும் வரை பட்டினிப் போராட்டம் இருப்பதாக மிரட்டினோம். அவர்களோ சாகும் வரை விட்டு விடுவார்கள் போலிருக்கிறது, சங்கரலிங்கனார் போல, திலீபனைப் போல.

சிலர் தாங்கள்தான் இந்தியாவுக்கே விடுதலை வாங்கிக் கொடுத்ததாய் சொன்னார்கள். வங்காளத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுத்ததாய் சொன்னார்கள். திபெத் விடுதலைக்கு உதவுவதாய் சொன்னார்கள். ஆனால் ஈழவிடுதலையைப் பற்றி பேசினாலே, அது தேசத்துரோகம் என்கிறார்கள். போரை நிறுத்தச் சொல்லுங்கள் என்றால் வேறு முக்கிய வேலை இருக்கிறது என்கிறார்கள். உன் உயிரை காப்பாற்றுங்கள் என்றால் ஊமையாய் இருக்கிறார்கள். எங்களையும் பேசாதே என்கிறார்கள். மீறிபேசினால் சிறை என்கிறார்கள். காந்தியை கொன்ற கூட்டம் நாடாளலாமாம். இந்திராவைக் கொன்றவர்கள் நாடாளலாமாம். அவர் மகனைக் கொன்றதாக சந்தேகப்படுவதால் நம் இனத்தில் யாருக்கும் மன்னிப்பே கிடையாதாம்.

முதலாளித்தத்துவத்தின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்றிய புரட்சிப்பூக்களின் வாரிசுகள் உன்னை மட்டும் கொலைகாரர்களோடு கூட்டுறவாய் இருக்கச்சொல்கிறார்கள். பேசித்தீர்க்கலாமாம். ஒன்று பட்ட இலங்கையின் இறையாண்மை கெட்டு விடுமாம். இன்னும் சிலர் மாவீரன் அலெக்சாண்டர் பற்றிப் பேசுவார்கள். ருசோபற்றிப் பேசுவார்கள். சுபாசு சந்திரபோசு பற்றிப் பேசுவார்கள்.....பேசுவார்கள்......பேசுவார்கள், அவ்வளவுதான். கூட்டணிக் கட்சி கோபித்தால் சில நேரம் மெதுவாய் பேசுவார்கள். ஒரே ஒரு கூட்டத்தை மட்டும் பாராட்டியே தீரவேண்டும். என்றோ செத்துப் போன ராமனுக்கு கோயில் கட்ட கரசேவை ஆட்கள் அனுப்பினார்கள். கடலுக்குள் கிடக்கும் ராமன் பாலத்தைக் காப்பாற்ற சேதுக்கால்வாயே வேண்டாம் என்கிறார்கள். உனக்காகவும் ஒன்றும் செய்ய முடியாது, செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் நேர்மையானவர்கள். உண்மையை ஒத்துக்கொண்டார்கள்.

சிலரோ கண்ணீர் வடிக்கிறார்கள், கவிதை எழுதுகிறார்கள், கண்டனத்தீர்மானம் போடுகிறார்கள், கடிதம் வரைகிறார்கள், பதவி விலகல் என்கிறார்கள். ஆனால் மறுநாளே மேலிடத்து பதிலில் திருப்தி என்கிறார்கள். உனக்காக உயிரை விடவும் தயார் என்கிறார்கள், நல்ல உயரத்தில் இருந்து கொண்டு. இவர்களிடம் உன்னைக் காப்பாற்றக் கதறிய என் ஒலங்கள் எல்லாம் காற்றில் கரைந்தே போயின. உன்னிடம் மட்டும்தான் கருணாக்கள் இருக்கிறார்களா என்ன? இங்கேயும் பாதிப்பேர் அப்படித்தான். சிலர் நம் எதிரி கையால் கேடயம் வாங்குகிறார்கள். சிலர் சிறந்த பத்திரிக்கையாளர் விருது வாங்குகிறார்கள். சிலர் புதிதாக தேசபக்தி ஒப்பாரி பாடுகிறார்கள். இறையாண்மைப் பாடல் இசைக்கிறார்கள். ஒருமைப்பாடு மந்திரம் ஓதுகிறார்கள். வழக்குப் போட்டே பேர் வாங்கியவர்கள் வாய்த்துடுக்காய் வாதிடுகிறார்கள்.

அதி மேதாவிகள் எல்லாம் உன் விஷயத்தில் அடி முட்டாள்களாய் நடந்து கொண்டார்கள். ஆம். உனக்கு என்றாலே எல்லாரும் ஒரே மாதிரியே நடந்து கொள்கிறார்கள். தாங்கமுடியாமல் ஏதோ பத்து பேர் கத்திக் கொண்டிருக்கிறோம், இவர்கள் செவிடர்கள் என்று தெரிந்தும். பிணத்தின் காதுகளில் சேராது என்று தெரிந்தும் இழவு வீட்டில் ஒப்பாரி பாடுவது போல்.

உன்னை உன் சொந்த மண்ணிலிருந்து விரட்டிக் கொல்லும் சிங்களவன் மட்டும் தான் உன் எதிரி என்று அப்பாவித்தனமாக நினைத்து விடாதே. உன் உண்மையான எதிரிகள் யார் தெரியுமா? உன்னைக் கொல்ல ஆயுதம் கொடுத்தவர்கள், ஆள் அனுப்பியவர்கள், ஆலோசனை அருளியவர்கள், உயிரைக் காப்பாற்ற உதவாதவர்கள், கண்டு கொள்ளாமல் விட்டவர்கள், அதை நியாயப்படுத்தியவர்கள்.. எல்லோரும்தான். பதினெட்டு மைலுக்கு அப்பால் இருப்பதால் உனக்கு மட்டும்தான் இந்தக் கதி என்று நினைத்து விடாதே. இங்கே உள்ளுர்த் தமிழனுக்கும் அதே நிலைமைதான்.

உன்னைப்போலவே எங்களுக்கும் இங்கு சோறு கிடையாது, கர்நாடகத்திலிருந்து அரிசி வாங்குகிறோம். தண்ணீர் கிடையாது, காவிரியும் முல்லைப் பெரியாரும், பாலாறும் மறுக்கப்படுகின்றன. தொழில் கிடையாது, எல்லாவற்றையும் பன்னாட்டு நிறுவனங்கள் எடுத்துக்கொண்டன. பாதுகாப்பு கிடையாது, மீன் பிடிக்கப் போகும் ஏழை மீனவர்களில் பாதிப்பேர்தான் கரை திரும்புகிறார்கள். வளம் கிடையாது, அவற்றையெல்லாம் அரசியல்வாதிகள் அள்ளிக்கொண்டார்கள். நிலமாவது சொந்தம் என்றால் அதுவும் கிடையாது, எங்கள் எல்லைகளில் பாதியை போராடித்தான் வாங்கினோம், கச்சத்தீவை நம் எதிரிக்கே தாரை வார்த்தார்கள். இங்கு எந்த உரிமைகளும் கிடையாது, ஆம். அடிமைகளுக்கு ஏது உரிமைகள். குறைந்த பட்சம் மரியாதை கூடக் கிடையாது, அதையெல்லாம் டில்லிக்காரர்கள் தருவதாகச் சொன்னதேயில்லை. உன்னைப்போலவே எங்களுக்கும் உயிர் ஒன்று மட்டும்தான் இருக்கிறது.

இங்கு தமிழுக்கு மட்டும் தான் புத்தாண்டு. தமிழனுக்கு இல்லை. தமிழுக்கு மட்டும் தான் செம்மொழிப் பதவி தமிழனுக்கு இல்லை. இவர்களையா நம்புகிறாய் என் ஈழ உறவே, இவர்கள் பாலத்தீனத்துக்காய் பரிந்து பேசுவார்கள், இசுரேலுடன் உறவு வைத்துக்கொள்வார்கள். கியூபா சென்று பிடலைச் சந்திப்பார்கள், அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் போடுவார்கள். தலாய்லாமாவைத் தட்டிக் கொடுப்பார்கள், சீனாவுடன் வெளியுறவைப் புதுப்பிப்பார்கள். பயங்கரவாத பாகிஸ்தான் என்பார்கள், லாகூருக்குப் பேருந்து விடுவார்கள். அகிம்சை நாடு என்பார்கள், அணு குண்டு வெடிப்பார்கள்.

நாங்கள் இவர்களிடம் எந்த நம்பிக்கையும் வைப்பதில்லை, நீயும் வைக்காதே. மீறி நம்பினால் அதுதான் மிகப்பெரிய மூட நம்பிக்கை. பெரியாரைப் போற்றாத, அம்பேத்காரை அவமானப்படுத்திய, சுபாசு சந்திர போசைக் கொண்டாடாத, கட்ட பொம்மனைக் காட்டிக் கொடுத்த நாடு இது. இதை நம்பாதே. ஆண்டவன் உட்பட யாரும் தேவையில்லை, நீயே போராடு. கண்டிப்பாய் நீ வெற்றியடைவாய். உனக்கு அதற்கான தகுதி இருக்கிறது, திறமை இருக்கிறது, உறுதி இருக்கிறது, வீரம் இருக்கிறது. உனக்கான விடுதலையை நீயே தேடிக்கொள். உன் சொந்த மண்ணில் நாளை நாங்களும் வந்து உன்னைச் சந்திக்கிறோம், முழு விடுதலை அடைந்தவர்களாய், எல்லா அடிமைத்தளைகளிலிருந்தும்.

- சு. தளபதி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com