Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தமிழ்நாடு அல்ல - டாய்லட் (பீ) நாடு - சிங்கள எகத்தாளமும் நமது யோக்கியதையும்
தமிழ்நெஞ்சம்

இப்போதெல்லாம் ஈழத்தமிழ் பேரவலம் குறித்து ஆங்கிலத்தில் உள்ள செய்தி தளங்களையும்/ வலைப்பதிவுகளையும் அவற்றில் வரும் பின்னூட்டங்களையும் படிக்கும் போது ஒரு கவலைக்குரிய/ கசப்பான விஷயம் தெரியவருகிறது. அது என்னவெனில் இந்தப் பிரச்சினையை முன்னிட்டு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிராக தமிழர் அல்லாதவர்கள் முன் வைக்கும் கருத்துக்கள் பல தளங்களில் நிறைந்து காணப்படுவதாகும். இந்த வலைத்தளங்களில் எதிர் கருத்துக்களை முன் வைக்கும் தமிழர் அல்லாத நபர்கள் இந்திக்காரர்களாகவோ/ மற்ற வட இந்தியர்களாகவோ/ மற்ற தென்னிந்தியர்களாகவோ / சிங்களர்களாகவோ உள்ளனர். இவர்கள் வெளியிடும் பல கருத்துக்கள் சொந்த இனம் சார்ந்த வெறியின் பாற்பட்டது. சில கருத்துக்கள் தமிழர்கள் மேலுள்ள பொறாமையின் காரணமாக வெளிவருபவை. இன்னும் சில கருத்துக்கள் அறியாமையினால் வெளியிடப்படுபவை. இருந்தாலும் சில கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை.

Eelam boy இந்த வகையில் தமிழர்களை தூற்ற சிங்களர்கள் முன்வைக்கும் பல கருத்துக்களில் ஒன்று தான் 'டாய்லட் நாடு' (பீ நாடு) என்ற பதம். தமிழ்நாட்டை குறிப்பதற்கு சிங்கள இனவெறியர்களால் எகத்தாளமாக பயன்படுத்தப்படும் வார்த்தை இது. இலங்கை நாடு மிகவும் அழகான நிலப்பரப்பை கொண்ட தீவு. நிறைய நீர் வளமும் இயற்கை அழகும் உண்டு. தமிழ்நாடோ பெரும்பாலும் வரண்ட நிலப்பரப்பை கொண்ட பகுதி. நீர் வளமும் இயற்கை அழகும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆனால் அது பிரச்சினை அல்ல. சிங்களர்கள் அவர்களின் தீவில் சுற்றுப்புற தூய்மையை எவ்வாறு பராமரிக்கிறார்கள். நம் மாநிலத்தில் சுற்றுப்புற தூய்மையை நாம் எவ்வாறு பராமரிக்கிறோம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு முறை சிங்களப்பெண்மணி ஒருவர் தமிழகம் வந்தாராம். சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தபோது மனித மலத்தின் மீது தான் வைத்தாராம். மாநிலமெங்கும் சுற்றிப் பார்த்து இங்குள்ள சுகாதாரத்தை கண்டு இது தமிழ்நாடா அல்லது டாய்லட் நாடா என்று அதிர்ச்சி அடைந்தாராம்.

பொது இடத்தில் சிறுநீர்/ மலம் கழிப்பது தமிழகத்தில் எங்கும் காணப்படும் இழி செயலாகும். குறிப்பாக சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் வாழ்வதாக சொல்லப்படும் சேரிப்பகுதிகளில் எங்கும் இந்த அசிங்கம் தான். சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். சேரிகளும் உலகெங்கும் உண்டு. ஏன் பக்கத்தில் இருக்கும் கேரளத்தில் கூட சேரிகள் உண்டு. ஆனால் அங்கெல்லாம் பொது இடங்களில் சிறுநீர்/ மலம் கழித்து இந்த மாதிரி அசுத்தப்படுத்துவதில்லை. தமிழகத்தில் சேரி வாழ் மக்கள் தான் என்றில்லை மற்ற மக்களும் இந்த மாதிரி தான். சாலை என்பது நடப்பதற்கானது. அது இரு சக்கர, முச்சக்கர மற்றும் நாற்சக்கர வாகனங்கள் பயணம் செய்வதற்கானது. ஆனால் நம்மவர்களுக்கோ சாலைகளின் இரு மருங்கிலும் சிறுநீர்/ மலம் கழித்து அசிங்கம் செய்வதில் சுகமோ சுகம். அதிலும் சில பேர் புகை பிடித்துக்கொண்டே அசிங்கம் செய்கிறார்கள். அதிலே ஒரு சுகம். இந்த விஷயம் தமிழர்களின் பொது புத்தியில் ஏன் தான் உறைக்க மாட்டேன் என்கிறதோ?.

நான் ஒரு முறை நீண்ட தூர பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன் (சேலத்திலிருந்து சென்னைக்கு). என் பின்புறம் உள்ள இருக்கையில் ஒரு கேரள தம்பதியர் தங்கள் சிறு பெண் குழந்தையுடன் உட்கார்ந்திருந்தனர். அந்த பெண் குழந்தைக்கு சுமார் ஏழெட்டு வயது இருக்கலாம். வழியெங்கும் தன் பெற்றோருடன் பேசியபடி வந்தது. வழியில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தின் முன் பேருந்து நின்றது. அப்போது பலர் இறங்கி ஓரமாகப்போய் வெட்ட வெளியில் சிறுநீர் கழித்தனர். இதைப்பார்த்த அந்த குழந்தை இவர்கள் ஏன் வெட்ட வெளியில் இப்படி சிறுநீர் கழிக்கிறார்கள் என்று மலையாளத்தில் கேட்க அதற்கு அதன் தாய் பதில் சொல்ல பேச்சு வளர்ந்தது. பேச்சு வளர்ந்து கடைசியாக அந்த சிறு குழந்தை தமிழகத்தைப்பற்றி சற்று உரக்க அடித்த கமெண்ட் "நல்ல ராஜ்ஜியம்". இந்த வார்த்தைகளை கேட்ட அதன் தாய் வெலவெலத்து போனார்.

அவசரமாக தன் தலையை திருப்பி பேருந்தில் அக்கம் பக்கம் நோட்டம் விட்டார். பின் குனிந்து தன் குழந்தையிடம் அவர் சொன்ன வார்த்தைகள் "மோளே, குறச்சு பறயு ". நான் பல கேரள மாநில நண்பர்களிடம் தமிழகத்தின் பொது சுகாதாரம் மற்றும் தமிழர்களின் மலக்கலாச்சாரம் குறித்து இம்மாதிரியான விமர்சனங்களை கேட்டிருக்கிறேன். ஒருவர் கேரள தமிழக எல்லையில் உள்ள குமுளியில் வசிப்பவர். குமுளியில் உள்ள கேரளப்பகுதி தூய்மையாகவும் பச்சைப்பசேல் என்றும் இருக்குமாம். தமிழகப்பகுதியோ குப்பைக்கூளங்களுடன் நாறிக்கிடக்குமாம். கேரள மாநில மக்கள் தினமும் குளிப்பவர்கள். பொதுவாகவே அவர்களின் மாநிலத்தில் உள்ள பொது இடங்கள் மற்றும் சாலைகள் முடிந்த வரை தூய்மையாகவே இருக்கும். ஆனால் சில இடங்கள் மலம்/ சிறுநீர் ஆகியவற்றால் அசிங்கமாகியிருந்தால் அந்த இடங்களில் அண்டை மாநிலத்தைச்சேர்ந்த தமிழர்கள் குடியேறியிருக்கிறார்கள் என்று அர்த்தமாம். இது இன்னொரு கேரள நண்பர் சொன்னது.

மேற்படி விஷயத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் கூட தமிழகத்தின் மீது அதிருப்தியுடன் தான் இருக்கிறார்கள். மலேசிய தமிழர் ஒருவர் தமிழகத்தின் சுகாதார நிலை மோசமாக இருப்பதால் தன் பிள்ளைகளை அங்கு போக வேண்டாம் என்று தடுத்து விட்டதாக ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில் எழுதியிருந்தார். சிங்கப்பூர் மிகவும் தூய்மையான நாடு. அங்கு பொது இடங்கள்/ சாலைகள் ஆகியவற்றை அசிங்கம் செய்பவர்கள் தண்டப்பணம் கட்ட வேண்டும். அப்படிப்பட்ட சிங்கப்பூரிலேயே தமிழர்கள் நிறைய வாழும்' லிட்டில் இண்டியா' பகுதி கேவலமாகத்தான் இருக்குமாம். இலங்கையில் புத்த விகாரைகள் மிகவும் தூய்மையாக இருக்கும் ஆனால் இந்துக்கோவில்கள் அப்படி இல்லை. கேரளத்தில் ஒரு சிறு கோவிலைக்கூட தூய்மையாக வைத்திருக்கிறார்கள் ஆனால் தமிழகத்தில் அப்படி அல்ல. சும்மா சொல்லக்கூடாது. கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி தன்னுடைய ஆதிகாலத்து கலாச்சாரத்தை விடாமல் காப்பாற்றி வருகிறது. நொடி தோறும் சாலை ஓரத்தில் அரங்கேரும் இந்த கலாச்சாரத்தை நினைத்து தமிழ்/திராவிட பற்றாளர்கள் பெருமிதம் அடையலாம். சில பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தக்கலாச்சாரத்தால் காலரா போன்ற நோய்கள் பெருகி மக்கள் பலர் மண்டையை போட்டார்கள். இதற்கு பயந்து பலர் மாரியம்மனுக்கும் ஓங்காளியாயிக்கும் பொங்கல் வைத்தார்கள். இப்போது மேற்கத்திய மருத்துவத்தின் தாக்கத்தால் மாரியம்மனும் ஓங்காளியும் பட்டினி கிடக்கிறார்கள்.

தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் மக்களை காப்பாற்றுவதற்கு உள்ளன. போதாக்குறைக்கு நாள் தோறும் புதிய கட்சிகள் தமிழ் மக்களையும் தமிழ்/திராவிட பண்பாட்டையும் காப்பாற்றுவதற்கு அவதாரம் எடுத்த வண்ணம் உள்ளன. இதில் 'ஸ்டார்களின்' பங்கு மகத்தானது. சாதிக்கொரு கட்சி/சங்கம் இங்கே நிச்சயம் உண்டு. தலித் மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கவும் அவர்கள் வளர்ச்சிக்கும் ஓராயிரம் கட்சிகளும் அமைப்புக்களும் உள்ளன. இந்த அசிங்கமான பழக்கத்தை ஒழிப்பது தங்கள் கடமை. அது ஒட்டு மொத்த மக்கள் வளர்ச்சியின் ஒரு படி என்பதை இவர்கள் யாரும் ஏன் உணரவில்லை என்று தெரியவில்லை. மக்களும் சாதாரணமானவர்கள் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை வெட்ட வெளியில் காற்றோட்டமாக போவதை விட்டுவிட்டு நான்கு சுவர்களுக்குள் அடுப்பு போன்ற ஒன்றின் மீது எப்படி உட்கார முடியும். அதனால் தான் அரசியல்வாதிகளே கமிஷன் அடித்தது போக பெரிய மனது வைத்து கக்கூஸ் கட்டித்தந்தாலும் அதை கான்கிரீட் போட்டு மெத்தி வாடகைக்கு விட்டுவிடுகிறார்கள். இன்று ஒரு குடிசை வீட்டில் கூட தொலைக்காட்சி இருக்கிறது. ஆனால் இந்த சமாச்சாரம் குறித்து பலருக்கு எண்ணமே இல்லை.

இப்போது கர்னாடகத்தின் வாட்டாள் நாகராஜ் 'இந்த' விஷயத்தில் ஒரு புதிய போராட்டத்தை அறிவித்து கிளம்பியுள்ளார். பெங்களூரு நகரத்தின் தற்போதைய மக்கள் தொகை எழுபது லட்சத்துக்கும் மேல். ஆனால் கழிவறை வசதிகளோ மிகவும் குறைவு. புறநகர் பகுதியிலிருக்கும் பல சிற்றூர்களில் சாலையின் இரு மருங்கினை மக்கள் கழிவறையாக பயன்படுத்துகிறார்கள். இவற்றால் நகரத்தின் சுகாதாரமும் அழகும் கெடுகிறது. ஆகையினால் நகரெங்கும் பல ஆயிரம் புதிய கழிவறைகளை அரசாங்கம் கட்ட வேண்டும். இதனை வலியுறுத்தி விதான சவுதா, முதலமைச்சர் இல்லம், ஆளுனர் இல்லம், முக்கிய அரசு அலுவலகங்கள், எம்பிக்கள்/எம்எல்ஏக்கள் ஆகியோரின் வீடுகள் ஆகியவற்றின் முன்பு தானும் தன் ஆதரவாளர்களும் சிறுநீர் கழிக்கும் போராட்டத்தை வாட்டாள் அறிவித்துள்ளார். இவரல்லவோ உண்மையான இன உணர்வாளர். ஆனால் தமிழகத்தில்?. இந்த விஷயத்திலேயே இப்படியெனில் மற்ற விஷயங்களைக்குறித்து என்னவென்று சொல்வது. சிங்களர்கள் நம்மையும் நம் அரசியல்வாதிகளையும் கேவலமாக நினைத்தால் அதில் தவறு என்ன?

- தமிழ்நெஞ்சம் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com